• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 220,436 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

கனவு தேசம்!! (கனாக் காணும் காலங்கள்)

பு மா இ மு மாணவர்கள் வரையும் ஓவியங்களை வலைப்பூவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாரம் ஒரு கருத்துப்படம் இந்த வலைப்பூவில் வெளியிடப்பபடும். இந்த கருத்துப்படங்கள் நிகழ்கால அரசியல், உழைக்கும் மக்களின் எதார்த்த வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்கும்.


அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சேர்க்கப்பட்ட 300 மாணவர்களின் கதி என்ன?

அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி, எப்படி 300 மாணவர்களை சேர்த்துக்கொண்டது என்று உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் 300 மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது (ஹிந்து, 13/12/2009).

ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி நடத்துவதற்கான அனுமதியை மனித வளமேம்பாட்டு அமைச்சகத்திலோ அல்லது பல்கலைக்கழக மானிய குழுவிலோ பெறவில்லை. அதுமட்டுமில்லாமல், இக்கல்லூரி எந்த பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டவில்லை. ஆனாலும், ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சென்ற வருடம் 150 மாணவர்களையும், இந்த வருடம் 150 மாணவர்களையும் சேர்த்துக்கொண்டது. இந்த மருத்துவக்கல்லூரி, தனியார் எம் ஜி ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது என்று சொல்லி மாணவர்கள் சேர்க்கையை செய்துள்ளது.

இதனால், உச்சநீதிமன்றம் 300 மாணவர்களை விடுவிக்கும் கடிதத்தை கொடுக்குமாறு கல்லூரியை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனாலும், இன்று வரை கல்லூரி வலைத்தளத்தில் ” இந்திய மருத்துவ கவுன்சில்”, “பல்கலைக்கழக மானிய குழு” ஆகியவற்றின் அனுமதி பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது (http://www.acsmch.ac.in/profile.html).

——————————————————
ஏன், அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஏன், 300 மாணவர்களை விடுவிக்கும் கடிதத்தை கொடுக்கும் நாடகம்?

எது, ஏ. சி. சண்முகத்தை கைது செய்வதை தடுக்கிறது? அப்போ, கல்வி கட்டணக்கொள்ளை அரக்கன்கள் என்ன செய்தாலும் நடவடிக்கை இல்லையோ? இது தான் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதின் அர்த்தமோ?
——————————————-

இக்கல்லூரி பண்ணிய கூத்துகள்:

சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெறும் விழாவில் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா 25/09/2008 அன்று தொடங்கி வைத்தார்.

எப்படி அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாத மருத்துவக்கல்லூரியை மாநில ஆளுநர் தொடங்கி வைக்கிறார்?

சென்னை ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாத ஒரு கல்வி நிறுவனம் தான் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சினிமா இய‌க்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஞ்ஞானி வி.கே.சரஸ்வத் ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நவம்பர் 14ஆ‌ம் தே‌தி கெளரவ முனைவ‌ர் பட்டம் வழங்கியது.

அது மட்டுமில்லாமல், விஜய், சந்திராயன் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா ஆகியோருக்கு 6/12/2008 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.

இவை எல்லாம் பகட்டு நாடகம் தானே? இல்லை இது தான் தனியார் கல்வியின் தரமோ?

இவர்கள் எல்லாம் யார் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்களோ?

—————————————————————–
கல்விக்கட்டனக் கொள்ளைக்கு அரசே துணை என்பதை இந்த சம்பவத்தைவிட வேறு என்ன வேண்டும்?

மாணவர்களே!

தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை!

அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!

இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!

கும்பகோணமும் வேதாரண்யமும்…. (கவிதை)

விடைபெறும் போது
அம்மா இட்டு அனுப்பும்
முத்தங்களை தவிர,
வலிக்கத்தான் செய்கிறது
நீங்கள் ஏற்றிடும்
எல்லா சுமைகளும்.

எந்த சுமையை நான்
குறிப்பாய் கூறுவது,
என் முதுகில் கட்டிய
புத்தகச்சுமை முதல்,
அப்பா தலையில் கட்டும்
ஆண்டுக் கட்டணம் வரை
நெடிதாய்  நீள்கிறது
உங்கள் சுமைகளின் பட்டியல்

எங்கள் வீட்டு
மாதச் சம்பளம் முழுவதும்
உங்கள் மடியில் கொட்டினாலும்,
வருடம் தொடங்கிவிட்டால்
வழிப்பறி திருடர்களைப்போல்
நன்கொடை என்று
நச்சரிப்புகள் வேறு.

கேட்காமல் நுழைந்திடும்
என் குட்டி நாயினை போல்,
ஜன்னலுக்குள் காற்று
எப்பொழுதும் நுழைந்தால்
எவ்வளவு சுகமாய் இருக்கும்.
அப்படியா உள்ளது – உங்கள்
அடுக்குமாடி வகுப்பறைகள்,
காற்றே கஷ்டப்பட்டு
நுழைந்திடும் ஜன்னல்களில்,
மூச்சுகாற்று வாங்கவே
சிறப்பு கட்டணம்
செலுத்த வேண்டும் போல் உள்ளது.

உங்கள்
வீட்டு கழிப்பறைக்கு
ஒதுக்கிய இடத்தைவிட,
நீங்கள்- எங்களுக்கு
விளையாட தந்த
மைதானத்தின் அளவு
நிச்சயம் சிறியது !
இதில்,
‘வீடியோ கேம்ஸ்’
விளையாடுவதே மிகவும் சிரமம்,
பிறகெப்படி முடியும்
ஆசிரியர் கற்பித்தபடி
ஓடி விளையாட?

பிராய்லர் கோழிகளை
ஏற்றிச் செல்லும்
வாகனங்களில் கூட
கொஞ்சம் ‘பிரைவசி’ இருக்கும்,
எங்களை ஏற்றிச் செல்லும்
உங்களது வாகனங்களில்
ஊசி நுழைந்திடவும்
இடைவெளிகள் இல்லை.
இதில்
பதினெட்டுபட்டிக்கு
ஒரு நாட்டாமை போல,
எல்லோரையும் ஏற்றி இறக்க
குப்பை தொட்டிகளாய்
ஓரிரு வாகனங்கள்.

பயணிக்கும் வழியெல்லாம்
எங்கள் ரத்தம் கேட்டு துரத்தும்
உங்களின் லாப வெறி…,

கேட்டால்  எப்படி
கொடுக்காமல் இருப்பது?
இறுதியாக நாங்கள் – உங்களிடமே
இறக்கி வைத்துவிட்டோம்.
கனவையும், உயிரையும் சேர்த்து.

கல்வி வள்ளலாய்
வாழும் நீங்கள்
காவு வாங்கியதை மறைத்துவிட்டு
விபத்து என்றே
விளம்பரம் செய்யுங்கள்.

ம்….
எங்கள் முகத்தருகே
மொய்க்கும் ஈக்கள் கூட
சத்தம் செய்கிறது.
உங்களின்
கல்விக் கொள்ளையை அறிந்த
காலம் மட்டும் ஏனோ?
மௌனித்து நிற்கிறது.

முகிலன்

குறிப்பு : வேதாரண்யம் அருகே ஒரு ஆசிரியர் உட்பட 9 பேர் வேனில் சென்ற போது குளத்தில் விழுந்து பலி. அம்மாணவர்களின் நினைவாக…

நன்றி: வினவு


மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்! காக்கிச்சட்டைகளின் ரவுடித்தனத்தை முறியடிப்போம்!

டிசம்பர் – 21 பாட்டாளிவர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் 130 – வது பிறந்தநாள் விழா – புமாஇமு மதுரவாயலில் மக்களிடையே கொண்டாட்டம்

SDF திலீப்குமார் கும்பலின் ஈவ் டீசிங் வெறியாட்டம்! திருச்சி சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி! கல்விச் சூழலை சீர்குலைக்கும் பொறுக்கி கும்பலுக்கு பாடம் புகட்ட அணிதிரள்வோம்!

சமத்துவமில்லாத சமச்சீர் கல்வி – ஒரு ஏமாற்று! சமத்துவமுள்ள கட்டாய – இலவச – அறிவியல்பூர்வமான தாய்மொழிக் கல்வியே ஒரே மாற்று!

கூரையே இல்லாத பள்ளிகளில் கூட சமச்சீர் கல்வி கிடைக்கும் – மு க-வின் சாதனைகள் தொடர்கிறது …

அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சமின்றி ஒரே விதமான தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டு வருவதாக மு. க கூறியுள்ளார். அதாவது, கோடிஸ்வர வீட்டு பிள்ளைக்கும், கூலி வேலை செய்பவரின் பிள்ளைக்கும் ஒரே தரத்திலான கல்வி கிடைக்கும்.

இந்த திட்டம் 1 ரூபா அரிசியை விட மிகப்பெரிய சாதனையாக மக்களுக்கு உதவும் என்று ஆலமரத்து ஆண்டி கணித்துள்ளார்.

சமச்சீர் கல்வி கிடைக்கும் பள்ளிகளின் கட்டங்களை கீழே பார்க்கலாம்…

வேலம்மாள் மெட்ரிக் பள்ளி – சென்னை

பத்மா சேஷாத்ரி பாலா பவன் பள்ளி – சென்னை

இந்த பள்ளிகளில் மட்டுமல்ல கீழ்க்கண்ட பள்ளிக் கட்டிடங்களிலும் ஒரே தரத்திலான சமச்சீர் கல்வி கிடைக்கும். நம்புங்கள்…

ஆதிதிராவிட மற்றும் பழங்குடி இன நல நடுநிலைப்பள்ளி, மேல்ஒட்டிவாக்கம், காஞ்சிபுரம் (தினமலர், 29/07/09)

மு க – வின் சாதனையை என்னவென்று சொல்வது?

மாணவர்களே!
ஒட்டு பொறுக்கிகளின் திட்டங்கள் மாணவர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் ஆக்கிகொண்டிருகின்றன. உங்களின் அடுத்த நடவடிக்கை என்ன?

என் செல்லம் எப்ப திரும்ப வருவான்?

பட்டனத்துக்கு
படிக்க போயிருக்கான்
என் மகன்!

படிப்பின் வாசமே
அறிந்திடாத
இந்த பாவிக்குப்
பிறந்த
ஒரே மகன்
படிக்கத்தான்
போயிருக்கான்
பட்டினத்துக்கு!

வெயிலோ மழையோ
தடையின்றி நுழையும்
ஓட்டை குடிசைகள்!

பசுமையைப் பார்த்து
பல வருடங்களான
வயல்வெளிகள்!

எலக்சன் வரும்போது
மட்டுமே
தாரை பார்த்திட்ட சாலைகள்!

கிழிசல்களின்
கணக்கை
சட்டென்று
கூறமுடியாத
நைந்துபோன சட்டைகள்!

இதுதான்
என் கிராமம்
என்னோட வாழ்க்கை!

ஏழ்மையும்
வறுமையும்
கூடப் பிறந்ததென
இதையெல்லாம்
புறந்தள்ளி
இயல்பாய்
காலந்தள்ளியாச்சு!

இது
என்னோடே
போகட்டும்!
என்
மவனாவது
பள்ளிக்கூடம்
போவட்டும்!

கிழிஞ்ச டவுசரோட
உடைஞ்ச சிலேட்டு
தட்டோட
சத்துணவு உருண்டைக்கும்
மத்தியான சோத்துக்கும்
அரசாங்கத்து
அரை கிளாசுக்கு
அனுப்ப
புடிக்கலை எனக்கு!

கழுத்துப்பட்டயோட
புதுசட்டைய
போட்டுட்டு
பட்டணத்து
புள்ளக மாதிரி
எம்புள்ளயும்
போவனும்
பள்ளிக்கூடத்துக்கு!

தஸ் புஸ்சுன்னு
பேசாட்டியும்
ஏ..பி..சி..ன்னாவது
என் மவன்
பேசிப் பார்க்கனும்!

அதுக்கு
எம்புட்டு
ஆனாதான்
என்ன?

உழைச்சது
என்னக்கிதான்
மிஞ்சியிருக்கு?
கழனிய
வித்தாவது
கடனை அடைச்சிக்கிடலாம்!

அந்த
நெனப்புலதான்
அனுப்புனேன்
எம்புள்ளய
அந்த
தனியாரு
பள்ளிக்கூடத்துக்கு!

வருச பீசுன்னுதான்
முதல்ல சொன்னான்
பின்னே
மாசம் முன்னூறு
கொடுக்கனுமுன்னான்
உன் வூட்டுக்கே வரும்
பள்ளிக்கூடத்து வேனுக்கும்
தனியே காசு
கட்டனுமின்னான்!

கணக்குத் தவறாம
காச எண்ணிவைச்சேன்- என்
ஆச மவன்
இங்கிலீசு
படிக்கனுமுன்னு!

என்றைக்கும் போல
அன்னிக்கும்
போயிட்டு வர்றேன்னு
சொல்லிட்டுதான்
போனான்
எம்புள்ள!

பொத்தி பொத்தி
வளர்த் புள்ளய
பொதி மூட்டை போல
கூட்டிகிட்டு
போனாங்களாம்
பள்ளிக்கூட வேனுல…

முக்கு திரும்பயில
வேனு ஆத்தோட
முங்கிப் போச்சாம்!

இத்தன நாள்
தூங்கி
கிடந்தவெனெல்லாம்
விழிப்பு வந்து
வசனம் பேசுறான்.
அறிவிப்பு செய்யுறான்.

விதியை மீறின
பள்ளிவாகனங்கள்
முடக்கப்படும்
அனுமதி பெறாத
பள்ளிகள் மூடப்படும்
தனியாருங்கிற
பேருல
பகற்கொள்ளை
நடக்குதுன்னு…

நானும்
நாலு நாளா
காத்துக்கிடக்கேன்

எப்பவும் போல
ஸ்கூலுக்கு
போயிட்டு வர்றேன் டாடி-ன்னு
வாய் நிறைய
சொல்லிட்டு
போன
என் செல்லம்
எப்ப
திரும்ப வருவான்?

-இளங்கதிர்.

வேதாரண்யம் அருகே பள்ளி வாகனம் குளத்தில் கவிழுந்து ஆசிரியை உட்பட 9 குழந்தைகள் பலி! இது விபத்தல்ல – தனியார் கல்விக் கொள்ளையின் கோரக் கொலை!