சுதந்திரமான நீதித்துறை? ஊழலற்றநீதிபதிகள்?
நீதிமறுக்கப்பட்டமக்கள்…
உயர்நீதிமன்ற150வதுஆண்டுவிழாயாருக்காக!
அன்பார்ந்த வழக்குரைஞர்களே, பொதுமக்களே!
சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு கொண்டாட்டமானது, செப்.8, 2012 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாபெரும் விழாவாக நடத்தப்படவுள்ளது. குடியரசுத் தலைவர், தமிழக முதலமைச்சர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர் சங்கத் தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளார்கள். கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் இரயில்வே துறை, பொதுப்பணித்துறை, அஞ்சல் துறை, காவல் துறை என பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட துறைகளின் 150வது ஆண்டு நிறைவை விழாவாக அரசு கொண்டாடி வருகின்றது. இது போன்றே 1862ல் பிரிட்டிஷ் ராணியின் உத்திரவின் பேரில் சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய நகரங்களில் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்றங்களின் 150வது ஆண்டு நிறைவு விழா மூன்று உயர்நிதிமன்றங்களிலும் “மிகப் பெரிய அளவில்“ கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடு அடிமைப் பட்டுக்கிடக்கும்பொழுது விடுதலைக்காகக் போராடியவர்களை கழுவில் ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தின் பெருமையை பிரம்மாண்டமான இந்தோ-சர்சானிக் முறையிலான கட்டிடத்தால் மட்டும் அளவிடுவது இழிவானது.
மாறாக எவ்வாறு சுதந்திரமாக, எவ்வித மனச் சாய்வுமின்றி, அனைவரையும் சமமாக பாவித்து நீதிப்பரிபாலனை செய்வதில்தான் நீதித்துறையின் பெருமையை அளவிட முடியும். துவக்கத்தில் விடுதலைப் போராட்டத்தை நசுக்க ஆங்கிலேயனுக்கு பயன்பட்ட சென்னை உயர்நீதிமன்றம் காலபோக்கிலும் அரசு நிர்வாக ஆட்சியாளர்கள் சார்புடைய ஒன்றாகவே உள்ளது.
அதனால்தான் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டாலும், நிலக்கரி, கிரானைட் என இயற்கை வளங்கள் கொள்ளை- யடிக்கப்பட்டாலும், ஆட்கொல்லி அனுஉலைகளை நிறுவி பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவைசெய்து, அதை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்தாலும் மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதாக சொல்லிக்கொள்ளும் நீதிமன்றம் பல நேரங்களில் வேடிக்கைப் பார்ப்பதும், சில நேரங்களில் அந்த உரிமைப் பறிப்பில் தனது பங்களிப்பைச் செலுத்துவதும்தான் தொடர்கிறது. பணம் படைத்தவர்கள் நீதிமன்றத்தையும், நீதிமன்றத் தீர்ப்புக்களையும் தங்களுக்கு சாதகமாக வளைத்து, இழுத்தடித்து அதன் மூலம் தான் கொள்ளையடிதத்தைப் பாதுகாத்து வருகின்றனர். ஒருவேளை இவர்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும், நீதி மன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தாலும் அதை அவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு அலுங்காமல் குலுங்காமல் அமைச்சரை அழைத்துச் செல்வதைப்போல அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் இருக்கை போட்டு உட்கார வைக்கப்படுகிறான். ஜேபிஆர் போன்ற கல்விக் கொள்ளையர்களுக்கு இடைக்கால பிணையை பதறித்துடித்து வழங்குகிறது நீதிமன்றம். ஆனால் சாதாரண மக்களை அடித்து இழுத்து விலங்கிட்டு வருவதும், அவர்களுக்கு எளிதில் பினை கிடைக்காமல் அல்லல்படும் நிலைமையே தொடர்கிறது. சங்கராச்சாரியார் போன்ற பார்ப்பன கிரிமினல் சாமியார்களுக்கு கொல்லைக்குப் போவதற்குக்கூட வாழை இலை விரிக்கிறது சட்டத்தின் ஆட்சி. மேலும் இந்த போக்கிரி சாமியார் நீதிபதிக்கு பணம் கொடுத்து நீதியை வாங்க முயன்றதும் சந்தி சிரித்தது. நீதிமன்றத்தை மயிரளவுகூட மதிக்காத வாய்தா ராணி ஜெயலலிதா தனது ஊழல் வழக்கைப் பதினைந்து ஆண்டுகளாக இழுத்தடித்து தற்போது சட்டப்படியான “டார்ச்சர்” மூலமாகவே அரசு வழக்குரைஞர் ஆச்சாரியாவை பதறி ஓட வைத்திருக்கிறார்.
ஆயிரம் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் வழக்கில் பத்து ஆண்டுகள் நீண்ட நெடிய ஊடகம் மற்றும் சர்வதேச அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள் உதவியோடு போராடிய பின்தான் வெறும் மூன்று வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தண்டனைகூட தெகல்காவின் நிருபர் கொலையாளிகளிடம் ரகசியமாக அவர்களுக்கே தெரியாமல் பெற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தால்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் இதுபோல் டெல்லியில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்களை படுகொலை செய்த காங்கிரஸ் ரவுடிகளுக்கோ, மும்பையில் நூற்றுக்கணக்கில் முஸ்லீம்களைப் படுகொலை செய்ய இந்துமத வெறியர்களுக்கோ நீதிமன்றத்தால் தன்டனை வழங்கமுடியவில்லை. வருவாய் மற்றும் காவல்துறை வெறியர்களால் வன்முறை வெறியாட்டம் மற்றும் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆட்பட்ட வாச்சாத்தி பழங்குடி மக்கள் குற்வாளிகளை கூண்டில் நிறுத்தவே நெடிய நீதிமன்ற போரட்டங்களை நடத்தவேண்டியிருந்தது. இதில் பல வருடங்கள் கழித்து தண்டனை பெற்ற குற்றவாளிகள் பலருக்கும் தண்டனையை நிறுத்தி வைத்து தீர்ப்பளித்திருக்கிறது இந்த மாண்புமிகு உயர்நீதிமன்றம்.
மேற்கூறிய கொடுங்குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளை தண்டிக்கத் தவறுவதன் மூலம் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு தன் மேலான நம்பிக்கையை இழந்து வருகின்றது நீதித்துறை. இதுபோல அரசாங்கம், ஆட்சியாளர்களை எதிர்த்து மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படுவதுமில்லை. அதனால்தான் பிப்.19 2009 அன்று நீதிமன்றத்தின் மீதே காவல்துறை தாக்குதலை நடத்தியபோதும், நீதிபதிகளே தாக்கப்பட்டபோதும் அதற்கு எதிராக நீதியை வழங்க இயலாமல் அரசாங்கத்திற்கு அடங்கிப் போய் நீதித்துறைச் சுதந்திரத்தை காவுகொடுத்ததை உலகுக்கு அறிவித்திருக்கின்றது. ஆங்கிலேயன் நாட்டை விட்டு சென்றபின்பும் அவனது மொழியை கடைபிடிக்கும் அடிமைத் தன்மையில் ஊன்றி நிற்கின்றது. இப்படிப்பட்ட உயர்நீதிமன்றத்திற்கு தான் இம்மாபெரும் விழாவாம்!
பிப்.19, 2009 – இது 150 ஆண்டு கால சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் ஓர் கருப்பு நாள். நீதித்துறையின் சுதந்திரத்தை காவல்துறை கேள்விக்குள்ளாக்கிய நாள். நீதி வழங்கும் செங்கோலை போலீசின் லத்தி அடித்து முறித்த நாள். நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என அனைவரும் ஓட ஓட விரட்டப்பட்டு, அடித்து காயப்படுத்தப்பட்டு அதற்கான நீதி கிடைக்கப் பெறாமல் உள்ள நிலையில் இம்மாபெரும் விழா நடைபெறுகின்றது. கேவலம் இரண்டு போலீசு அதிகாரிகளை கூட தண்டிக்க இயலாமல் போய் உள்ள நீதித்துறையின் மாண்பினை நாம் எவ்வாறு போற்ற இயலும்!
ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை எதிர்த்து நாம் அன்று தொடர்ந்து போராடினோம். அதனுடைய எதிர்விளைவே கருணாநிதி – காங்கிரசின் பிப்.19 தாக்குதல். ஈழப் போரின் இந்திய வழிநடத்துனர் அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி. இன்று அவர் தான் இவ்விழாவின் முதன்மை விருந்தினர். இதை விட நமக்கு ஓர் அவமானம் உண்டா!
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வா.உ..சிதம்பரம் போன்ற தலைவர்களை தேசத் துரோக குற்றச்சாட்டில் சிறையில் தள்ளிய அன்றைய சென்னை நீதிமன்றத்திற்கும் போராடும் கூடங்குளம் மக்களின் உரிமையை ஒடுக்க அரசின் 144 தடை உத்தரவை நியாயப்படுத்தும் இன்றைய நீதிமன்றத்திற்கும் பெரிய வேறுபாடில்லை என்ற காரணத்தினால் வேண்டுமானால் அவர்கள் 150வது ஆண்டு விழாவை அவர்கள் கொண்டாடட்டும். அந்த கொண்டாட்டத்தில் பிப்.19 வழக்குரைஞர்கள் மீதான போலீஸ் தாக்குதல் வழக்கில் வழக்குரைஞர்களுக்கு எதிராக ஆஜராண கே.கே.வேணுகோபால், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பதவிக்கு இரண்டரை-இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு, அந்த மானங்கெட்ட ஒப்பந்த்த்தை நிறைவேற்ற நீதிமன்றத்தை அனுகிய டி.செல்வம் போன்ற எட்டப்பர்கள் மேடையை அங்கரிக்கட்டும்.
பெரும்பாண்மையான மக்களுக்கோ, வழக்குரைஞர்களுக்கோ தேவை மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், அவர்களை பாதுகாக்கும் அரசாங்கம், அவர்களின் பங்காளிகான அரசியல் கட்சிகள், அவர்களுக்கு காவடி தூக்கும் காவல் துறை மற்றும் ஊழல் நீதிபதிகள் ஆகியோருக்கு எதிராக ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம்தான். இன்று நடைமுறையில் இருக்கும் கிரிமினல் சட்டங்கள் நீதி நடைமுறையை நிலைநாட்டுவதில் தோல்வியடைந்திருக்கின்றன. அவைகளை புணரமைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற உச்சநீதிகள் வி.ஆர்.கே மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 50 ஆண்டுகள் 100 ஆண்டுகள் 150 ஆண்டுகள் என்ற கால அளவின் பெருமையையோ, கட்டிடங்களின் பெருமையையோ கொண்டாடுவதைப் புறக்கணித்து, மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவது தான் நீதியைப் பெறுபதற்கான ஒரே வழி. நீதிக்காகப் போராட, மக்கள் உரிமைக்காக போராட ஓர் அணியில் திரள்வோம்.
–மனிதஉரிமைப்பாதுகாப்புமையம் – தமிழ்நாடு
சென்னைக்கிளை
தொடர்புக்கு – மில்ட்டன், தொலைபேசி– 98428 12062
தொடர்புடைய பதிவுகள்:
கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!
உண்மை உண்மை ஒன்றே உண்மை லத்திக் கம்பு ஒன்றே உண்மை!
Filed under: நீதித்துறை | Tagged: ஆச்சாரியா, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், கிரானைட் கொள்ளையன், கிரிமினல் சட்டங்கள், சுதந்திரமான நீதித்துறை, ஜெயலலிதா, தமிழக மீனவர்கள், நீதிபதிகள், பிப்.19 தாக்குதல், பிரனாப் முகர்ஜி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், போலீசு தடியடி, மக்கள் உரிமை, மனிதஉரிமைப்பாதுகாப்புமையம், வழக்குரைஞர்கள், வாய்தா ராணி |
நான் ஒரு பதிவு எழுதலாம் என இருந்தேன். இந்தப் பதிவு எனது எண்ணங்கள் பலவற்றை பிரதிபலித்துள்ளது. இருந்தாலும் வேறு ஒரு கோணத்தில் இது பற்றி எழுதவிருக்கிறேன்.
மிகச் சிறந்த பதிவு. ம.உ.பா.மையத்துக்கு வாழ்த்துகள்!