அய்.ஏ.எஸ்.சும், ஐ.பி.எஸ்.சும்
அதிகார வர்க்கமும் , அமைச்சர்களும்
பயணப்பட்டு,
அவமானப்பட்ட கல்லூரிச் சாலையே!
இனி நீ பெருமைப்படலாம்
கல்வி தனியார்மயத்திற்கெதிராக போராடிய
பு.மா.இ.மு. தோழர்களின்
போராட்டப் பாதங்களை முத்தமிட்டதால்!
தமிழகமே! தலை நிமிரலாம்
ஜெயாவின் போலிஸ் வெறியை
நடுரோட்டில் நடுங்காமல் சந்தித்த
பு.மா.இ.மு. வின் போர்க்குணத்தால்,
அடிக்கும்போதும், இழுக்கும்போதும்
துடிக்கும் உதடுகள் பொழிந்த முழக்கம்
தமிழக வானில்.. தனியார்மயத்திற்கெதிராக
திரும்பத் திரும்ப எதிரொலிக்கும்..
முற்றுகை சட்டவிரோதமாம்
தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு
தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க
வீணாய் பிறந்த விஜய்
எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது
எங்கே போனது உனது சட்டம் – ஒழுங்கு!
பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்கவும் முடியாமல்,
மருத்துவமனையே அல்லோகலப்பட்டு
அற்பன் வருகைக்கு முறம் பிடித்து
திறம் காட்டிய போலீசே,
பொதுமக்கள் நலனுக்காக போராடிய
மாணவர்கள் மீது கைவைக்க
உனக்கேதும் சட்டம் பேச யோக்கியதை உண்டா?
சமூகத்தின் பொதுச்சொத்தான கல்வியை
சுயநல வெறியோடு சேதப்படுத்தி சில்லரை பார்க்கும்
தனியார் பள்ளிகளை தட்டி வைக்க துப்பில்லை,
அனைவருக்கும் இலவசக்கல்வியை அரசே வழங்கிட
போராடியோர் மீது
பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாய் பொய்வழக்கு!
அரசு அங்கீகாரமே இன்றி
அனுமதிக்கப்பட்ட கட்டணத்தையும் தாண்டி
கொள்ளையடிக்கும் சட்டவிரோத தனியார் கல்வி கொள்ளையர்களுடன்
கூடிக்கொண்டு
சமூகவிரோதிக்களுக்கெதிராய் போராடுவோர் மீது
சட்டவிரோதமாகக் கூடியதாக தாக்குதல்!
தனியார் மயத்தின் கூலிப்படையே,
களமாடிய எம் பெண்களின்
இடுப்பிலிருக்கும் கைக்குழந்தைகள் கூட
உன் உடுப்பிலிருக்கும் கைக்கூலித்தனத்தை
வெறுப்புடன் பார்த்ததும்,
வீறிட்டழுது கண்டனம் செய்ததும்
நீ… போட்டுக் கொள்ளும் பொய்வழக்குக்கு
போதுமான சட்டவிரோதங்கள்தான்… இதையும் சேர்த்துக் கொள்!
பேச விடாமல் வாயைப் பொத்தி…
எழுத விடாமல் கையை முறுக்கி…
நடக்க விடாமல் பாடை தூக்கி…
வாழ விடாமல் உழைக்கும் வர்க்கமடக்கி…
கல்வியின் மீது தனியார்மயத்தின் தாக்குதல்,
திணிப்பு எப்படியோ!
அப்படி தோழர்களை வேனில் திணித்த காட்சியின் வழியே..
வெளிச்சம் போட்டுக் காட்டியது ஜெ அரசு
தனியார்மயத் திணிப்பை.
மக்களுக்காக எம் தோழர்கள் வாங்கிய அடிகள்
மறுகாலனியத்தை தகர்க்க
தமிழக அரசியல் வானில் காத்திருக்கும் இடிகள்!
மறுகாலனியாக்க மாமி ஜெயாவின்
தனியார்மய மிருக வெறிக்கு
ஒரு போதும் அடங்காது எம் தலைமுறையின் உரிமைக்குரல்
ஜெயா அரசு யார் பக்கம்…
போலீசும் அதிகார வர்க்கமும் யார் பக்கம்…
போராடும் பு.மா.இ.மு. யார் பக்கம்!
மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
கொளுத்தியெடுக்கும் கொடிய கோடையின் நடுவே
இடியுடன் மழையாய் இறங்கிய தோழர்களே..
போய் வாருங்கள்…
பத்மா சேஷாத்ரி பள்ளியை விட
புழல் சிறை ஒன்றும் அவ்வளவு மோசமானதில்லை
நிறைய கற்றுக் கொண்டு திரும்ப வாருங்கள்,
நிச்சயம் இறுதியில்
நீங்களே வெல்வீர் தோழர்களே!
_______________________________________________________
– துரை. சண்முகம்
முதல் பதிவு: வினவு
தொடர்புடைய பதிவுகள்:
தனியார் பள்ளிக் கொள்ளையர்களின் கைக்கூலி பாசிச ஜெயா அரசை முறியடிப்போம்!
பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு
- டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!
- பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!
- சிவப்புச் சட்டை!
Filed under: கல்வி தனியார்மய ஒழிப்பு | Tagged: அரசியல், கல்வி, கல்வி தனியார்மயம், கல்வியில் தனியார்மயம், கவிதை, சாலை மறியல், சினிமா, சிறை, சென்னை போராட்டம், டிபிஐ, திருச்சி ஈ.வே.ரா கல்லூரி, தோழர் துரை.சண்முகம், தோழர்கள், நிகழ்வுகள், பச்சையப்பன் கல்லூரி, பள்ளி கல்வித்துறை இயக்குநரகம், பள்ளிக் கல்வித்துறை, போராட்டம், போலிஸ் தாக்குதல், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், முற்றுகை, முற்றுகைப் போராட்டம், லத்திசார்ஜ், DPI | Leave a comment »