• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

 

 

பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை‘ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த “காண்டீன் கான்டிராக்ட்‘ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை‘ என்று வாலை ஆட்டியது.

இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் சுதேசித் தொழிலின் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர‘ இந்தியா. அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்.

இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரானவ.உ.சிதம்பரம்.

ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.

“வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை‘ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி.

சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி.

1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி‘ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ‘ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன.

தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.

ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.

சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ‘வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது’ என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.

திருநெல்வேலியே திகுதிகுவென்று தீப்பற்றி எரிகிறது

கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.

வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.

கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர்.

”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை‘ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி.

மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்தனர். வியாபாரிகள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.

நிலைமை எல்லை மீறியது. நிர்வாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த வியூகம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரிட்டிஷ் அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.

வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி.

அன்றைய காங்கிரஸ் கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச்10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான்.

உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர விசுவாசியான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டுகிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார்.

சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார்.

பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது.

எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடியிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வேலைநிறுத்தம் முடிந்து நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று ”வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை” விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக்கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது.

மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.

சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி, நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை. எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை.

சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார்.

அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்”என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி.

காந்திய ஏமாற்றிய ரூ.5000

காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள்.

கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.

சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “ஆம்”என்று அவர் சொன்னவுடன், “முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி.

அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு.

இந்த வழக்கை எதிர்கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.

வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம்

1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது.

19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்‘ என்று பெரியாரை பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)

பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில், “இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்” என்று பேசுகிறார்.

1928 இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார். சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார்.“தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்.

சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று ஜெயிலரிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை.

திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார்.

1939 இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி.

பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரஸ் “கவுரவிக்க‘ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது.

1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி:

“கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.

இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார்.

அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது.“நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி.

எந்த எதிரிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது `சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.

-வே. மதிமாறன்

நன்றி: புதிய கலாச்சாரம் 2006

விடுதலைப் போரின் வீர மரபு உங்களுக்கு தெரியுமா?

காலனிய எதிர்ப்பு விடுதலைப் போர் என்றாலே காந்தி, நேரு, காங்கிரசு என்று ஆரம்பப் பள்ளி முதல் அனைத்து வகை கல்வி நிறுவனங்களாலும் கூறப்படும் பொய்யான வரலாறே இங்கே உண்மையென நம்பப்படுகிறது. ஆயினும் வரலாற்றின் வீரஞ்செறிந்த அந்த பக்கங்கள் இதை மறுக்கின்றன. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்து மறைந்த்து போயிருக்கும் அந்த வரலாற்று மாந்தர்களையும், காலகட்டத்தையும் புதிய கலாச்சாரத்தின் இந்த சிறப்பிதழ் மீட்டு கொண்டு வருகிறது.

ஊழலும், காரியவாதமும், நம்பிக்கையின்மையும் கோலேச்சும் இந்தச் சூழலில் இந்த வரலாற்றை நினைவு கூர்வது என்பது மீண்டும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போரை நாம் நடத்த வேண்டிய கடமையை கற்றுத் தேர்வதோடு அதில் பங்கேற்பதும் ஆகும். புத்தகக் கண்காட்சியை  முன்னிட்டு கீழைக்காற்றின் வெளியீடாக வரும் இந்த கட்டுரைகளை இங்கே அறிமுகம் செய்கிறோம்.

– வினவு

_______________________________________________________

விடுதலைப் போரின் வீர மரபு

1800 – 1801 இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர், 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.

சத்தியாக்கிரகம் எனும் போராட்ட வடிவத்தை தென் ஆப்பிரிக்காவில் காந்தி அறிமுகப்படுத்தியதற்கும், ‘வந்தே மாதரம்…’ என்ற இந்து தேசியப்பாடல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் கூட இது நூற்றாண்டுதான். தேதிகள் பொருந்தி வருவதனால் தியாகமும் துரோகமும் ஒன்றாகி விடுவதில்லை. எனினும் நம் விடுதலைப் போராட்டத்தின் ஒளிவீசும் மரபுகள் அனைத்தையும் இந்து தேசியவாத, அகிம்சாவாத ஜோதிக்குள் அமிழ்த்துகின்றன ஆளும்வர்க்கங்கள். நம் விடுதலைப் போராட்ட மரபு, காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் திசையறிந்த ஒரு மக்கள்திரள் இயக்கமாக உருப்பெற்றதைப் போன்றதொரு தோற்றத்தை அதிகாரபூர்வ வரலாறு நம் சிந்தனையில் பதித்து வைத்திருக்கிறது.

பெருமிதம் கொள்ளத்தக்க விடுதலைப் போராட்டத்தின் வீர மரபை நம் வரலாற்றுப் பிரக்ஞையிலிருந்தே துடைத்தொழிப்பதற்கான இந்தச் சதி மிகவும் தந்திரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. வன்முறைக்குப் பதிலாக அகிம்சை என்ற வாதத்திற்குள் காந்திகாங்கிரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் துரோகமும் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ஒரு தபால் தலை வெளியீடு மற்றும் அரசு விழாவின் மூலம் கட்டபொம்மன் முதல் பகத்சிங் வரையிலான போராளிகள் அனைவரும் துக்கடாக்களாக நிறுவனமயமாக்கப்படுகிறார்கள்.

இந்த வரலாற்றுப் புரட்டிற்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. 1857 எழுச்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்கிறது வரலாறு. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக திப்பு நடத்திய போர்களும் இந்துஸ்தானத்திலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட திப்பு மேற்கொண்ட முயற்சிகளும் விடுதலைப் போராட்டத்தின் துவக்கப்புள்ளியாகக் கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணிறந்த முன்னணியாளர்கள் இணைந்து தீபகற்பக் கூட்டணி என்றொரு கூட்டணியை அமைத்திருந்ததையும், அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு முன்னணி மகாராட்டிரத்தின் தென்பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஊடுருவிச் சென்றதையும், பல்லாயிரம் விவசாயிகளின் பங்கேற்புடன் நடந்த அந்த மக்கள் போர் 1799 முதல் 1806 வேலூர் புரட்சி வரை தொடர்ந்ததையும் அதிகாரபூர்வ வரலாறு பதிவு செய்வதில்லை. இந்த மாபெரும் மக்கள் போரை முதல் சுதந்திரப் போராகவும் அங்கீகரிப்பதில்லை. தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களைப் புறக்கணிப்பது என்ற இந்து தேசியவாதக் கண்ணோட்டமே இந்த இருட்டடிப்புக்குக் காரணம். இந்த உண்மையைக் கூறுவது, 1857 சுதந்திரப் போரின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.

இந்தச் சிறப்பிதழில் தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அதன் நாயகர்களின் வழியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எனினும் இது பத்திரிக்கை எனும் வடிவ வரம்புக்குட்பட்ட ஒரு பறவைப் பார்வை மட்டுமே. திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.

துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர.

______________________________________________

நன்றி: புதிய கலாச்சாரம் – தலையங்கம் – நவம்பர் 2006

முதல் பதிவு: வினவு

 

வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!

********************************

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி !

கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!