சென்னை டாக்டர் அம்பேத்கார்
சட்டக்கல்லூரியின் முதல்வர் நியமனம் செல்லாது-
ஐகோர்ட்டு உத்தரவு!
சென்னை, பிப்.24-
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வராக பாலாஜி நாயுடுவை நியமித்த அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
எந்த அடிப்படையில் பதவி?
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முதல்வராக ஆர்.பாலாஜி நாயுடு கடந்த 17.6.11 அன்று நியமிக்கப்பட்டார். இதற்கான அரசாணையை தமிழக சட்டத்துறை 17.6.11 அன்று வெளியிட்டது.
கல்வித் தகுதியில் குறைபாடுள்ள அவரை அரசு சட்டக் கல்லூரி முதல்வராக நியமித்தது எப்படி என்றும் அவர் எதனடிப்படையில் முதல்வராக தொடர்கிறார்? என்றும் கேட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் டி.கணேசன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
முதுகலை பட்டம்
இந்த வழக்கை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பாலாஜி நாயுடு 17.1.85 அன்று, சட்டக் கல்வி அல்லாத சமூகவியல் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 22.1.85 அன்று தமிழக அரசு தற்காலிக விதிகளை கொண்டு வந்தது. அதன்படி, சட்டப்படிப்பு அல்லாத பிற பாடங்களை நடத்தும் உதவி பேராசிரியர்களும், சட்டக் கல்வியில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் எம்.எல். முதுகலை பட்டம் பெற்று இருக்கவேண்டும். அதோடு வக்கீலாகவும் பதிவு செய்திருக்க வேண்டும்.
சட்ட திருத்தம்
அதன்பிறகு மதுரை சட்டக் கல்லூரியில் மாலை நேர கல்லூரியில் இளநிலை சட்டப்படிப்பையும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்பையும் பாலாஜி நாயுடு படித்தார். இந்தநிலையில் மற்றொரு சட்டத் திருத்தத்தை 12.3.10 அன்று தமிழக அரசு கொண்டு வந்தது.
அதன்படி, சட்டம் அல்லாத பிற பாடங்களை நடத்தும் பேராசிரியர்களையும் சட்டக் கல்லூரியில் முதல்வராக நியமிக்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனவே பணிமூப்பு அடிப்படையில் பாலாஜி நாயுடு நியமிக்கப்பட்டார்.
யு.ஜி.சி. விதிகள்
இந்த வழக்கில் பாலாஜியின் கல்வித்தகுதி பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தொலைத்தூர கல்வி மூலம் எம்.எல். பட்டம் படித்த அவரை யு.ஜி.சி. விதிகளின்படி முதல்வராக நியமிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு பாலாஜி நாயுடு பதிலளித்தார். சட்டப்படிப்புகளை பல ஆண்டுகள் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்களை அங்கு முதல்வராக நியமிக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி நியமிக்கப்பட்டதாகவும், அதில் விதிமுறைகள் மீறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பார் கவுன்சில் விதிகள்
கல்லூரி முதல்வராக நியமிக்கப்படக்கூடியவர் முதுகலை பட்டத்துடன், பிஎச்.டி. (டாக்டர் பட்டம்) பெற்று இருக்க வேண்டும் என்று யு.ஜி.சி.யில் விதி-2010 கூறுகிறது. அதன்படிதான், எந்த ஒரு சட்டக் கல்லூரியிலும் முதல்வர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலும் விதிகளை வகுத்துள்ளது.
இந்த விதிகளின்படி பார்த்தால், முறையான கல்வித்திட்டத்தின் கீழ் முதுநிலை சட்டம் மற்றும், பிஎச்.டி. தகுதியும் பெற்றவரைத்தான் சட்டக் கல்லூரியில் முதல்வராக நியமிக்க முடியும். அஞ்சல் வழிக் கல்வி மூலம் எம்.எல். பட்டம் பெற்றவர்களை முதல்வராக நியமிக்க முடியாது.
அரசாணை ரத்து
ஆனால் பாலாஜி நாயுடு அஞ்சல் வழிக்கல்வி மூலம் எம்.எல். பட்டம் பெற்றவர். பிஎச்.டி. கல்வித் தகுதியைப் அவர் பெறவில்லை. எனவே சட்டக்கல்லூரி முதல்வராக அவரை பணி நியமனம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Filed under: சட்டக் கல்லூரி | Tagged: அரசியல், உயர் நீதிமன்றம், கல்வி, கல்வித்தகுதி, சட்டக் கல்லூரி, சமூகம், தமிழ்நாடு, தீர்ப்பு, நிகழ்வுகள், நீதிமன்றம், புமாஇமு, மாணவர்கள், மாநில அமைப்பாளர், முதல்வர் | Leave a comment »