• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,416 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

திருச்சியில் போராட்டத்திற்காக மாணவர்களை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் கடத்தவில்லை- தினத்தந்தி வெளியிட்ட மறுப்புசெய்தி!

தினத்தந்தியில் ஜூலை 27 வந்த உண்மைக்கு புறம்பான செய்தி:

மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேர் கைது

திருச்சி, ஜுலை.27-

பள்ளி மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட செய்ததாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேனில் கடத்தல்

திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, இந்த அமைப்பின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் கிளர்ச்சியாளன் நிர்வாகிகள் நந்தகுமார், வசந்த் உள்பட 7 பேர் நேற்று காலை பாலக்கரை பீமநகர் பகுதிக்கு ஒரு வேனில் வந்தனர்.

அப்போது அவர்கள் அங்கு பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளிடம் நாங்கள் உங்களை வேனில் அழைத்து கொண்டு பள்ளி விடுகிறோம் என்று கூறினார். இதை நம்பிய சுமார் 35 மாணவ-மாணவிகள் வேனில் ஏறினர்.

பின்னர் இந்த அமைப்பினர் சி.இ.அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று அந்த பகுதியில் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் சிலரையும் உங்களை வழக்கமாக ஏற்றி செல்லும் வேன் இன்று வராது என்று கூறி அவர்களையும் பள்ளியில் விடுவதாக சொல்லி ஏற்றினர். பின்னர் 70 மாணவ -மாணவிகளுடன் அந்த வேன் புறப்பட்டு சென்றது. வேன் பள்ளிக்கு செல்லாமல் வேறு வழியாக சென்றதால், பள்ளி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேனில் இருந்த மாணவிகள் கதறி அழுதனர்.

கடத்தல் புகார்

இந்த தகவல் இரு பள்ளி நிர்வாகிகளுக்கும், பெற்றோருக்கும் தெரியவந்தது. பெற்றோர் தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு ஓடி வந்தனர். திருச்சியில் வேனில் பள்ளி மாணவ-மாணவிகள் கடத்தப்பட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரு பள்ளிகளிலும் பெற்றோர் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சென்ற வேன் மரக்கடை அருகே உள்ள திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அடைந்தது. அங்கு பள்ளி மாணவ-மாணவிகளை கூட்டமாக வைத்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மாவட்ட செயலாளர் கிளர்ச்சியாளன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. “சமச்சீர் கல்வியை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மாணவ-மாணவிகளை தேடி அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து, முன்அனுமதியின்றி பள்ளி மாணவ-மாணவிகளை வேனில் கடத்தி வந்து ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஏன் எங்கள் பிள்ளைகளை வைத்து போராட்டம் நடத்துகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் 70 பள்ளி மாணவ-மாணவிகள் போலீசார் மீட்டு, அந்தந்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

9 பேர் கைது

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேனில் மாணவ-மாணவிகளை கடத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

போலீசின் பொய்க் கதையை வெளியிட்ட தினத்தந்தி அலுவலகத்தை புமாஇமுவினர் முற்றுகை:

“மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேர் கைது” என்று தினத்தந்தி நாளிதழ் விரிவாக ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதையே மற்ற ஊடகங்கள் சிறு செய்தியாக, குழந்தைகளின் புகைப்படங்களோடு வெளியிட்டிருந்தன.

கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பு.மா.இ.முவினர் மாணவர்களை திரட்டி பாசிச ஜெயா அரசாங்கத்தைக் கண்டித்தும், சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்கக் கோரியும் போராடி வருகின்றனர். இதில் சில இடங்களில் பெற்றோர்களும் கூட கலந்து கொண்டிருக்கின்றனர். இப்படி மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொள்வதனாலேயே போலீசு எந்தப் போராட்டத்தையும் விரும்பியபடி தடை செய்ய முடியவில்லை. மாணவர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் முன்னிலும் பெரிதாக வெடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.

ஆனாலும் இனி போராட்டங்கள் எங்கும் நடக்கக் கூடாது என்று பாசிச ஜெயா தனது ரவுடி போலீசுக்கு உத்திரவிட்டுள்ளார். அதன்படியே போலீசு உருவாக்கிய இந்த பொய்ச் செய்தியை தினத்தந்தி வெளியிட்டிருக்கின்றது. மேலும் திருச்சி பு.மா.இ.முவினரை கைது செய்வதற்கென்றே உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆய்வாளர் உதவியுடன் பொய் மனு அளித்திருக்கின்றனர். அதற்காகவே ஒரு பெண் தோழரை உள்ளிட்டு எட்டு பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எப்படியும் இந்தப் போராட்டத்தை சிதைக்க வேண்டுமென்பது காவல்துறையின் நோக்கமென்பதால் இந்த பொய்ச்செய்தியை உருவாக்குவது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல.

இந்த கடைந்தெடுத்த பொய்யை பெரியதாக வெளியிட்டிருக்கும் தினத்தந்தி, பு.மா.இ.மு மாணவர்கள் சென்னை பள்ளிக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட செய்தியை ஒரு குறுந்துணுக்கு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அம்மா புகழ் பாடும் பஜனை கூட்டத்தில் நான்தான் முன்னணி என்று காட்டுவது தினத்தந்தியின் நோக்கம்.

இந்தச் செய்தி வந்த உடனேயே பு.மா.இ.மு தோழர்கள் சென்னை தினத்தந்தி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தினத்தந்தி செய்தி ஆசிரியரை சந்தித்து தங்களது மறுப்பை வெளியிடுமாறும் கோரினர். தினத்தந்தி ஆசிரியர் அவ்வாறே நாளை வெளியிடுவதாக கூறியதும் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பினர்.

இதனை தொடர்ந்து

தினந்தந்தியில் இன்று (ஜூலை28) வெளிவந்துள்ள மறுப்பு செய்தி:


திருச்சியில்
மாணவர்களை போராட்டத்திற்காக கடத்திச் செல்லவில்லை
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அறிவிப்பு

சென்னை, ஜுலை.28-

சமச்சீர்கல்வி பாடப்புத்தகங்களை உடனே மாணவர்களுக்கு வழங்கக்கோரி திருச்சியில் நாங்கள் போராட்டம நடத்த மாணவர்களை கடத்தி செல்லவில்லை என்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் த.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போராட்டம்

மாணவர்களுக்கு உடனடியாக சமச்சீர்கல்வி பாடப்புத்தகங்களை வழங்கக்கோரி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. ஆனால் அந்த போராட்டத்திற்கு பெற்றோருக்கு தெரியாமல் மாணவர்களை கடத்திச் சென்று போராட்டத்தில் ஈடுபடுத்தினோம் என்று திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் பத்திரிகைக்கு தவறான தகவலை கொடுத்துள்ளார். மாணவர்களை யாரும் கடத்தவில்லை.

நேர்மையான அமைப்பாக எங்கள் அமைப்பு உள்ளது. எங்கள் மீது அவதூறுபரப்பும் நோக்கத்தில் அவர் தவறான தகவலை கொடுத்துள்ளார்.

உண்மைநிலை

திருச்சி பீமநகரில் உள்ள ஒரு பள்ளியிலும், வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியிலும் பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தியதால் அது ஏதோ திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை எனவும், கதறி அழுத மாணவர்களை போலீசார் தனிப்படை அமைத்து விரைந்து வந்து மீட்டு சாகசம் புரிந்ததைப்போலவும் அப்பட்டமான பொய்யை பரப்பி உள்ளார்.

இந்த சம்பவத்தில் தங்கள் குழந்தைகள் கடத்தப்பட்டதாக போலீஸ் கொடுத்த தவறான தகவல் காரணமாக அச்சமடைந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உண்மை நிலையை அறிந்தனர்.

பின்னர் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னிணியின் செயல்பாடு குறித்து போலீஸ் ஏன் அவதூறாக பேசினார்கள் என்று கேள்வி எழுப்பியும் அவர்கள் எங்கள் குழந்தைகளை கடத்தி செல்லவில்லை என்று கூறியுள்ளனர். எங்களின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்க தயார் என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர். பள்ளியின் தலைமை ஆசிரியரை மிரட்டி காவல் துறையே இந்த பொய்ப் புகாரை பெற்றுள்ளது. பெற்றோர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை.

விடுதலை செய்ய வேண்டும்

மேலும் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும்.

போலீசாரின் இந்த அவதூறுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சியில் சமச்சீர் கல்விக்காக போராடிய புமாஇமு தோழர்கள் மீது பொய் வழக்கு! அதன் விவரமும் பத்திரிக்கைக்கு எமது மறுப்பு செய்தியும்!

நேற்று காலை 26.07.2011 காலை 10 மணியளவில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு  வழங்கக்கோரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பாக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. ஆனால் அங்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தினோம் என்ற முகாந்திரத்தில் எங்கள் அமைப்பின் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் மக்கள் மத்தியில் நேர்மையான அமைப்பு என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் எங்கள் மீது தவறான கருத்தை உருவாக்கும் எண்ணத்க்டோடு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடும்படி பத்திரிக்கைக்கு தவறான தகவல் கொடுத்துள்ளார்.

இது குறித்து பு.மா.இ.மு திருச்சி மாவட்ட நிர்வாகக்குழுவின் அவசரக்கூட்டம் நேற்று மாலை 4 மணியளாவில் கூட்டப்பட்டு இப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதில் திருச்சி பீம நகரில் உள்ள ஒரு பள்ளியிலும் வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியிலும் பெற்றோர்களுக்கு அறிவிக்காமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தியதால் அது ஏதோ திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை எனவும், கதறி அழுத  மாணவர்களை  போலீசார் தனிப்படை அமைத்து விரைந்து மீட்டு சாகசம் புரிந்ததைப் போலவும், அப்பட்டமான ஒரு பொய்யை திருச்சி காந்திமார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளார் பரப்பிஉள்ளார்.

போலீசின் இந்த அவதூறையே சிலப்பத்திரிக்கைகள் வெளியிட்டு உள்ளது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. சமச்சீர்கல்விக்காக ஆர்ப்பாட்டம், அரங்கக்கூட்டம், கொடும்பாவி எரிப்பு, கைது, சிறையில் உண்ணாவிரதம், பள்ளிக்கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் என்று தொடர் நடவடிக்கைகளில் நாங்கள் இந்த அரசின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக சிறிதும் சமரசமின்றி போராடி வருகின்றோம் என்பதை பத்திரிக்கை  துறையினராகிய நீங்கள்  நன்கு அறிவீர்கள். எனவே எங்கள் மீது அவதூறு பரப்புவதன் மூலம் மக்கள் மத்தியிலிருந்து எங்களை தனிமைப்படுத்தும் நோக்கில் போலீசு அளித்த பொய்ச்செய்தியை வெளியிடவேண்டாம் எனக்கோருகின்றோம்.

கல்லூரி படிக்கும் மாணவர்களே நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் பயந்துகொண்டு முகத்தில் துணியைக்கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தி வருவது நாம் அறிந்த ஒன்று. மாநிலம் தழுவிய அளாவில் சமச்சீர் கல்விக்காக பள்ளி-கல்லூரி மாணவர்கள் போராடிக்கொண்டு இருக்கும்  இந்த கொந்தளிப்பான சூழலில், ஒரு பள்ளியில் தன்னுடைய மாணவர் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் மாணாவர்களை பெற்றோர்களின் அனுமதிபெற்ற பின்னர்தான் ஒரு மாணவர் அமைப்பு போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல என்று கருதுகிறோம்.

இச்சம்பவத்தில் தங்கள் குழந்தைகள் கடத்தப்பட்டதாக போலீசு கொடுத்த தவறான தகவல் காரணமாக அச்சமடைந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உண்மை நிலையினை அறிந்து பின்னர் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் செயல்பாடு குறித்து ஏன் போலீசு அவதூறாக பேசியது என்று வினா எழுப்பியும், பு.மா.இ.மு-வினர் குழந்தைகளை கடத்திச்செல்லவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் போலீசின் தூண்டுதலின் பேரில் இந்த அவதூறையே சில பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டு உள்ளன.
பு.மா.இ.முவின் நியாயமான செயல்பாடுகள் குறித்து நாங்கள் பத்திரிக்கையாளார்கள் முன்பு விளக்கமளிக்கத் தயார் என்று பெற்றோர்களும் கூறியுள்ளனர். எனவேதான் போலீசில் எந்தப்புகாரையும் நாங்கள் அளிக்கவில்லை, பள்ளியின் தலைமை ஆசிரியரை மிரட்டி, காவல்துறையே இப்பொய் புகாரை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் புகாரின் பேரில்தான் வழக்கு போட்டுள்ளனர். இதில் பெற்றோர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்பது உறுதி ஆகிறது. ஆக எங்கள் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை எங்கள் அமைப்பின் முன்நின்று நடத்த தயாராக உள்ளோம். அந்தசந்திப்பின் போது, சம்பந்தப்பட்ட இரு பள்ளிகளில் உள்ள எங்கள் பிரதிநிதிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பதில் அளிக்க உள்ளனர்.

அந்தசந்திப்பின் போது, சம்பந்தப்பட்ட இரு பள்ளிகளில் உள்ள எங்கள் பிரதிநிதிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பதில் அளிக்க உள்ளனர்.
எங்கள் அமைப்பின் மீது அவதூறு பரப்பி பொய்வழக்கு போட்ட காந்திமார்க்கெட் காவல் துறையினர் மீது சட்டரீதியான நடவடிக்கை  எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும் பொய் வழக்கில் கைது செய்யப்ப்ட்ட தோழர்களை விதுதலை செய்யக்கோரியும், போலீசின் இந்த அவதூறுக்கு எதிராகவும் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆகவே போலீசின் அவதூறுக்கு மறுப்பு செய்தியை வெளியிடுமாறு பு.மா.இ.மு வின் மாநில அமைப்புக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

இப்படிக்கு
த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி