மதுரவாயல் கொலை வழக்கில் இரு அப்பாவி இளைஞர்களையும், இரு பு.மா.இ.மு தோழர்களையும் கடத்தி வைத்திருந்த போலீசிடம் பகுதி மக்களும் பு.மா.இ.மு தோழர்களும் விடுவிக்கக்கோரிய போது அவர்களை குற்றவாளிகள் என்று கூறியது போலீசு. அப்பாவிகளான அவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையிலடைக்கும் போலீசின் முயற்சியை எதிர்த்து நின்ற தோழர்கள் மீது போலீசு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் ஐந்து தோழர்கள் மிகக்கடுமையான தாக்குதலுக்குள்ளாயினர். அடித்து தாக்கியதுடன் 64 பேர் மீது பொய் வழக்குகளையும் போட்டு சிறையில் தள்ளியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவதற்கும் மறுத்து வருகின்றனர். பாசிச ஜெயாவின் இந்த போலீசு ஆட்சியை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இரு தோழர்களையும் கைது செய்து மிரட்டி, அவர்ளுடைய பெற்றோர்களை வரவழைத்து நக்சல் பீதியூட்டியுள்ளது.
தமிழகத்தில் நடக்கும் இந்த போலீசு ஆட்சியை கண்டித்து பு.மா.இ.மு கடந் 3- ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஒரே நேரத்தில் காங்கிரசுக்கும் பு.மா.இ.முவிற்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததால் ஆர்ப்பாட்டம் மறுநாள் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.மா.இ.மு ஆர்ப்பாட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பதற்காகவே போலீசு வேண்டுமென்று காங்கிரசுக்கு அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் கொடுத்திருந்தது. ஆனால் தோழர்கள் உறுதியாக நடத்துவோம் என்று போராடிய பிறகே மறுநாள் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் செ.சரவணன் தலைமை தாங்கினார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தை சேந்த தோழர் சுரேசும், பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் த. கணேசனும் கண்டன உரையாற்றினர்.
சரவணன் பேசும் போது, போலீசு கும்பலின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை விளக்கினார். மதுரவாயல் பகுதியில் போலீசுக்கும் சமூக விரோதிகளுக்குமிடையில் இருக்கும் கள்ளக்கூட்டும், அந்த கள்ளக்கூட்டணிக்கு பு.மா.இ.மு தடையாக இருந்து வருவதும் தான் இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம். எங்களுக்கு இது போன்ற அடக்குமுறைகள் ஒன்றும் புதியதல்ல. உழைக்கும் மக்களின் துணையோடு இதையும் எதிர்கொள்வோம் போலீசு அராஜகத்தை முறியடிப்போம் என்று கூறி தலைமை உரையை முடித்தார்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் தோழர் சுரேஷ் பேசும் போது, புரட்சிகர அமைப்புகள் இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்வது சகஜமானது தான். புரட்சிகர அமைப்புகளை ஒடுக்கி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் இந்த வழக்குகள் அனைத்தும் புனையப்பட்டுள்ளன. நீங்கள் இதை எதிர்கொள்ளுங்கள் ம.உ.பா.மை உங்களுக்கு துணையாக இருக்கும்.
காவல்துறை மட்டுமல்ல நீதித்துறையும் கூட காவல்துறையை போலவே செயல்படுகிறது. போலீசு சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. எனவே போலீசை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, எதிர்கொள்வோம் என்று கூறி முடித்தார்.
இறுதியாக பேசிய கணேசன், போலீசு என்பது எப்படி கிரிமினல் கும்பலாக இருக்கிறது என்பதையும், இந்த போலீசு ரவுடிகள் நம்மை மட்டுமல்ல போராடக்கூடிய அனைத்து தரப்பு மக்களையும் தான் தாக்கி வருகிறார்கள் என்பதையும். இத்தகைய மக்கள் விரோத போலீசு அமைப்பையே ஒழித்துக்கட்டுவது தான் இதற்கு தீர்வு என்றும் கூறினார். அத்துடன் கைது செய்யப்பட்ட தோழர்களை உழைக்கும் மக்களின் உதவியோடு வெளியில் கொண்டு வருவோம் என்று கூறி முடித்தார்.
பிறகு போலீசு குண்டர்களுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ,இளைஞர்கள், பெற்றோர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். பேருந்துகளில் பயணித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்தவாறே சென்றனர். பு.மா.இ.மு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் போலீசு கும்பலுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது.
______________________________
முதல் பதிவு: வினவு
போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!
தொடர்புடைய பதிவுகள்:
பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!
நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!
போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!
Filed under: போராட்ட செய்திகள் | Tagged: கட்டபஞ்சாயத்து, கண்டன ஆர்ப்பாட்டம், காக்கிசட்டை ரவுடிகள், கொலைவெறி, சுவரொட்டி, செய்திகள், நக்கீரன் வார இதழ், பத்திரிக்கை செய்தி, பாசிச ஜெயா, புதிய ஜனநாயகம், புமாஇமு தோழர்கள், பொய் வழக்கு, போலீசு, போலீசு அராஜகம், போலீசு ஆட்சி, போஸ்டர், மதுரவாயல், முற்றுகை | Leave a comment »