• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 216,726 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

தனியார்பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த ஏழை மாணவர்கள் மீது நவீனத் தீண்டாமை அரங்கேற்றம்!இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்(RTE) சாயம் வெளுத்தது!

கடந்த ஜூலை.18-ந்தேதி ‘தி இந்து’ ஆங்கில பத்திரிக்கையில் வெளியான செய்தி, இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள பார்ப்பனீய சாதிக் கட்டுமானத்தின்  அருவறுக்கத்தக்க விசயமான தீண்டாமை புதிய வடிவத்தில் அரங்கேற்றப்பட்டு இருப்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

இதுதான் அந்த செய்தி;

’’ கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் உள்ள ஆக்ஸ்போர்டு என்னும்  ஒரு தனியார் பள்ளியில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25% இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்த ஏழை மாணவ – மாணவிகளை தனிமைப்படுத்தி இழிவுபடுத்தும் நோக்கில் அவர்களது தலைமுடியை வெட்டியுள்ளனர்.

மேலும், தலைமுடி வெட்டப்பட்ட இந்தக் குழந்தைகளது பெயரை வருகைப் பதிவேட்டில்  பதிவு செய்யவதில்லை.  அசெம்பிளியில் (காலை வணக்க நிகழ்ச்சியில்)  தனியாக பிரித்து நிற்க வைப்பது, வகுப்பறைக்குள் நுழையும் முன் டிபன் பாக்சைத் திறந்து சோதிப்பது, வகுப்பறையில் கடைசி வரிசையில் ஓரமாக உட்கார வைப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக ’தனியார்பள்ளிக் கல்வியின் சிறப்பம்சம் என்று இவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ளும்’   மாணவர்களுக்கான வீட்டுப்பாடப் பயிற்சியைக்கூட கொடுக்காமல் இருப்பது என்று கடந்த இரண்டு மாதங்களாக ஏழை மாணவர்களை ஒதுக்கி வைத்து தீண்டத் தகாதவர்களாகவே நடத்தி வந்துள்ளது ஆக்ஸ்போர்டு தனியார்பள்ளி.’’

தனியார்மயக் கல்வி உருவாக்கி இருக்கும் இந்த நவீனத்  தீண்டாமையினால், புறக்கணிக்கப்பட்ட  மாணவர்களின் பெற்றோர்கள் கோபம் கொண்டு நியாயம் கேட்டப்போது எந்த பதிலும் சொல்லாமல் இந்த ஏழைப் பெற்றோர்களையும் திமிர்த்தனமாக புறக்கணித்துள்ளது பள்ளி நிர்வாகம். இந்த ஒரு  பள்ளி நிர்வாகம் மட்டுமல்ல, கர்நாடக மாநில தனியார்பள்ளி முதலாளிகளின் சங்கமும் இதே திமித்தனத்தோடுதான் ஏழை மாணவர்களின் மீதான இந்த நவீனத் தீண்டாமையை நியாயப்படுத்தியுள்ளது.  கர்நாடகத்தின் கல்வித்துறை செயலாளரான குமார் நாயக் “இலவசக் கல்வி உரிமை சட்டப்படி, 25% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை வேறுபடுத்திப் பார்ப்பது குற்றமாகும் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுப்போம்”என கூறியுள்ளார். இவர்களுடைய விசாரணை நாடகம் எல்லாம் சூட்கேசை சுருட்டுவதில்தான் (லஞ்சம் பெறுவதில்)  போய் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமே.ஆனால் இப்படி பட்டவர்த்தனமாகத் தீண்டாமையை அரங்கேற்றுவதற்கான திமிர் தனியார்பள்ளிகளுக்கு எங்கிருந்து வந்ததுள்ளது, என்பதை இந்நாட்டின் ஆகப்பெரும்பான்மை உழைக்கும் மக்களான  ஏழைப் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்  மிகமுக்கியமான விசயம்.

அது புரிந்துகொள்ளமுடியாத புதிர் ஒன்றுமில்ல,மிக சுருக்கமாகச் சொன்னால்   இந்த அரசிடமிருத்துதான். இந்நாட்டில் புற்றீசல்போலப் பெருகி இருக்கும் தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம், கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டங்கள் என இவர்களின் பகற்கொள்ளையை சட்டபூர்வமாக்குவதற்காக அரசு ஒரு பெயரளவுக்குப் போடும் சட்டங்களைக்கூட  மலம் துடைக்கும்  காகிதங்களைப்போல தூக்கியெறிந்து தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வருகின்றன தனியார்பள்ளிகள். அரசால் இதை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்யமுடியாது என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகின்றது.

தனியார்பள்ளி முதலாளிகள் (இவர்களில் பலர் மத்திய – மாநில முன்னால், இன்னால் அமைச்சர்களாகவும், முன்னால் ஆசிரியர்களாகவும், கல்வித்துறை அதிகாரிகளாகவும் உள்ளனர்.)  கல்வித்துறை அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை அனைவருக்கும் லஞ்சம் கொடுத்தும், அவர்களுடைய பலவீனங்களை தெரிந்து கொண்டும் வலைத்துப்போடுகிறார்கள். வலைந்துகொடுக்க மறுக்கும் அதிகாரிகளை தங்கள் அதிகார பலத்தை வைத்து மிரட்டுகிறார்கள், இட மாறுதல் செய்து பந்தாடுகிறார்கள். தங்களை எதிர்த்து வழக்கு விசாரணை என்று யாராவது (அது அரசாக இருந்தாலும்)  நீதிமன்றம் சென்றாலும் ’நீதீமான்களை’ அவர்களின் ’மாண்புக்கேற்றவாறு’ கவனித்து எப்பொழுதும் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பை வாங்குகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியில் தனியார் கடைவிரித்து கொள்ளையடிக்க அனுமதிப்பது அரசின் சட்டப்பூர்வ கொள்கையாகவே இருப்பதால் அரசியலமைப்புச் சட்டம் முதல் கல்வி தொடர்பான அனைத்துச் சட்டங்களும் தனியார்பள்ளிகளுக்கு சாதகமாகவே  உள்ளன. பி.ஏ.பய் பவுண்டேசன் வழக்கில் அரசியலைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான சுதந்திரத்திற்கான உரிமையில் 19-1(g) பிரிவின்படி ஒரு தொழில் நிறுவனம் தொடங்கி நடத்துவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. இதன்படி யார் ஒருவரும் கல்வி நிறுவனத்தையும் தொடங்கி நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். தனியார்கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் சட்டங்களுக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

கொள்ளைலாபம் அடிப்பதொன்றையே நோக்கமாகக் கொண்ட தனியார் பள்ளி முதலாளிகளிடம் அனைவருக்கும் பொதுவான கல்விச் சேவையை எப்படி எதிர்பார்க்க முடியும். ’தரமான பயிற்சி, ஆங்கிலவழிக் கல்வி’ என்று சொன்னாலே இதை நம்பி லட்சக்கணக்கில்  பணத்தைக் கொட்டும் பணக்காரன் அல்லது பணக்காரனாக காட்டிக்கொள்பவன் வீட்டுப் பிள்ளைகளையும், ’எதுவும் தேராத கேஸ்’ என்று இவர்களால் ஏளனமாகப் பார்த்து ஒதுக்கப்பட்ட  ஏழைகள் வீட்டுப் பிள்ளைகளையும் எப்படி சமமாக நடத்துவார்கள். இதனால்தான் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த ஏழை மாணவர்களை  ’ஓசி கிராக்கிகள்’ எனப்பட்டம் கட்டி கேள்வி கேட்பாரின்றி நவீனத் தீண்டாமையை அரங்கேற்றியுள்ளனர்.

பார்ப்பனீயத்தின் சூழ்ச்சியால் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட இந்நாட்டின் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் ’கல்வி வாசனையை’க்கூட  நுகரக்கூடாது, காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று, படித்தால் நாக்கை வெட்டு எனறது பார்ப்பனீய மனுநீதி. வில் வித்தையில் (கல்வியில்) அரசப் பரம்பரையைச் சார்ந்த அர்ச்சுனனை விஞ்சிய ’சூத்திர’ ஏகலைவனிடம் கட்டை விரலைக் கேட்ட அந்த பார்ப்பனக் கொழுப்பு இன்றும் நிலவுகிறது – ஆனால் வேறு வடிவத்தில்.காசு உள்ளவனுக்கே கல்வி எனும் உலக வங்கியின் புதிய பார்ப்பனீய மனுநீதியாக,தனியார்மயக் கல்விக் கொள்கையாக. ஆம், அது கல்வி என்று தனியார்பள்ளி வாசலை மிதிக்கும் ஏழை மாணவர்களின்  காதில் பீசைக்( கட்டணத்தை) காய்ச்சி ஊற்றி விரட்டுகிறது. அதையும் தாண்டி 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்தால் தலைமுடியை வெட்டி சிதைக்கிறது

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி –  ஒரு மோசடி!

மத்திய அரசின் இலவசக் கல்வி உரிமைச் சட்டம் 25% சதவீத ஏழை மாணவர்களை தனியார்பள்ளிகளில் சேர்க்கலாம் என்கிறது. இது ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என பத்திரிக்கைத் தொலைக்காட்சிகள் ஊதிப்பெருக்கின. மெத்தப்படித்த மேதாவிகளும், முதலாளித்துவ கைக்கூலி எழுத்தாளர்களும்  ’சுதந்திர இந்தியாவின்’ 65 ஆண்டுகால கனவு நிறைவேறிவிட்டது, அதை நாம்தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று பைத்தியக்காரர்களைப் போல பிதற்றுகிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு இது தொடர்பான ஒரு வழக்கின் போது இச்சட்டத்தில் உள்ள ஓட்டைகள் பற்றி மத்திய அரசை கேள்விகள் மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்துவிட்டார் என்று ’சட்டத்தின் மீதான , கல்வியின் மீதான அவருடைய அக்கறையை’ப் பற்றி (சட்டத்தை தவறு என்று சொல்லவில்லை, இது ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்று கண்டிக்கவில்லை. தனியார்மயக் கல்விக்கு சாதகமாகவே பேசியுள்ளார்)  சட்டத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதனை ஆகா ஓகோ என்று பேசி புலங்காகிதம் அடைந்து அவருக்கு மணிமகுடம் சூட்டுகிறார்கள். பல தனியார் கல்லூரிகளை நடத்தி பகற்கொள்ளையடித்து பல தலைமுறைகளை அழிக்கத் துடிக்கும் எஸ்.ஆர்.எம் பச்சைமுத்துவின் புதியதலைமுறை வாரஇதழ் நாங்கள் இச்சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பற்றி அப்பொழுதே (சட்டம் இயற்றும் போதே) சொன்னோம் ’சந்துருவை விஞ்சிய நீதிமான் நாங்கள்’ என்று மார்தட்டி எழுதுகிறது. இப்படியெல்லாம் பலவாறு பேசிமக்களை ஏமாற்றி வந்தார்களே அந்த இலவசக்கல்வி உரிமைச் சட்டத்தின் யோக்கியதை என்ன?

மத்திய அரசின் இலவசக் கல்வி     உரிமைச் சட்டத்தின்படி ( பெயரில் தான் இலவசக் கல்வி)    தனியார்பள்ளிகளில் சேரும் 25% இட ஒதுக்கீட்டு ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே கட்டும். தான் வாங்குவதுதான் கட்டணம் என்கின்றன தனியார்பள்ளிகள். இந்த சதவீத எண்ணிக்கையைக் கூட்டும் பட்சத்தில் அரசுப் பள்ளியில் சேர வேண்டிய மாணவர்கள் தனியார்பள்ளியை நோக்கிச் சென்று கொண்டே இருப்பார்கள். இதன் மூலம் தனியார்பள்ளிகளின் லாபத்திற்கு அரசால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆக, இது ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்கும் நோக்கம் கொண்டதல்ல, கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ள தனியார்மயக் கல்வியை நோக்கி பெற்றோர்களை நெட்டித்தள்ளும் நயவஞ்சக நடவடிக்கையே.

இலவசக்கல்வி உரிமைச் சட்டம் என்பது தனியார்மயக்கல்வியை ஊக்குவிக்கவே செய்யும் என்கிற போது, இதை ஏன் தனியார் பள்ளிகள் எதிர்க்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இதுதான் அதற்கான சுருக்கமான பதில் “ இச்சட்டத்தின்படி சேரும் மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்தும். இதன் மூலம் தனியார்பள்ளிகளுக்கு லாப உத்தரவாதம் உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் கூடுதலான மாணவர்களை அரசுப்பள்ளியில் இருந்து பெயர்த்தெடுத்து தனியார்பள்ளிகளுக்கு அரசே அனுப்பிவைத்து தனியார்கல்விக்கொள்ளையர்களை வாழ வைத்துக்கொண்டே இருக்கும் என்பதெல்லாம் தனியாருக்கு சாதகமாக இருந்தாலும், இலவசக்கல்வி உரிமை என்ற இத்திட்டத்தின்படி தங்களுக்கு சிறிய பாதிப்புக்கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்ச உணர்வு ஒருபுறம், மறுபுறம் நம்நாட்டில் ஊறிப்போயுள்ள பார்ப்பனீய ஆதிக்கசாதி மனோபாவம் குடிமக்கள் அனைவரையும் சம்மாகப் பார்ப்பதில்லை. அதுதான் இன்று தனியார்பள்ளி முதலாளிகளின் மனோபாவமும்.

தனியார்பள்ளியில் ஆயிரம் ஆயிரமாக பணம் கொடுத்து படிக்கும் வசதிபடைத்தவர்கள் பிள்ளைகளோடு ஏழைப்பிள்ளைகளை எப்படி சேர்த்து வைப்பது, தரத்தை எதிர்பார்த்து பணம் கட்டியவனுக்கும் பணம் கட்டாத ஏழை மாணவனுக்கும் எப்படி ஒரே கல்வி கொடுப்பது என்று பார்ப்பனீயத் திமிரோடு துக்ளக் வாரப்பத்திரிக்கையில் சீறுகிறான் மொட்டத்தலையன் ’சோ’. இப்படி இவன் சொன்னதைத்தான் கர்நாடகத்தில் தனியார்பள்ளி நடைமுறைப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் புற்றீசல் போல பெருகி இருக்கும் தனியார்கல்வி நிறுவனங்கள் இந்த நவீனத் தீண்டாமையை அரங்கேற்ற தக்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தனியார்பள்ளிகள் விரித்த மோகவலையில் விழுந்து தரமானக்கல்வி, ஆங்கிலவழிப் பயிற்சி, டாக்டர், இன்ஞ்சினியர் கனவுகளில் மிதந்துகொண்டிருக்கும் நடுத்தரவர்க்கப் பிரிவினர் இதனைக் இச்செய்தியைக் கண்டும் காணாமல் செல்கின்றனர். மேற்கண்ட வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டுவரும், இந்த இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தை வராது வந்த மாமனியைப் போல் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழைக்கும் மக்களுக்கு கிடைக்கப்போவது தனியார்பள்ளிகளில் இலவசமாக தரமானக் கல்வியல்ல, மேலும் மேலும் ஆழப்பட்டு வரும் பார்ப்பனீய ஆதிக்கசாதி மனோபாவத்தால் நவீனத் தீண்டாமையும்,தனியார்மயக் கல்விக் கொள்கையின் விளைவால் தற்குறியாக்கப்படுவதும்தான். அனைவரும் தரமானக் கல்வியை இலவசமாகப் பெறவேண்டுமானால் தனியார்மயக் கல்வியை ஒழித்துக் கட்டவேண்டும். அரசுக் கல்வியை நிலைநாட்ட வேண்டும்.இதை சீர்திருத்தத்தின் மூலமாக சாதிக்க முடியாது. ஒரு சமூக மாற்றமான புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமாகத்தான் சாதிக்கமுடியும். இதற்கான களத்தை அமைத்து வருகிறது பு.மா.இ.மு வாருங்கள்…….கரம் சேருங்கள்! தனியார்பள்ளியில் 25%  இடஒதுக்கீடு  என்பது  வரப்பிரசாதம் அல்ல! தனியார்மயக்கல்வியை  ஊக்கப்படுத்தும்  மற்றும் ’ஓசிகிராக்கிகள்’ எனப்பட்டம் கட்டி தீண்டாமையை அரங்கேற்றுவதற்கான சூழ்ச்சியே என்பதை உணர்ந்திடுவோம்! உழைக்கும் மக்களுக்கு கல்வியை மறுக்கும் புதிய மனுநீதியான தனியார்மயக் கல்விக் கொள்கைக்கு கொள்ளிவைப்போம்!

 

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!