தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்க கோரி ஜூன் 28 அன்று டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட புமாஇமு தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல் நடத்தி 250 பேர் மேற்பட்டவர்கள் கைது செய்தது.அதில் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 74 க்கும் மேற்பட்ட தோழர்களை ரிமெண்டு செய்து சிறையில் அடைத்தது போலீசு. கடந்த ஒரு வாரமாக சிறையிலிருந்த தோழர்கள் நேற்று ஜாமீனில் விடுதலையாகி வெளி வந்தனர். அந்த தோழர்களை வரவேற்கும் விதமாக தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதை இதோ…
*******************
இளந்தமிழகத்தின்
எழுச்சியே வருக…வருக…
தற்காலிகச் சிறையிலிருந்து
தோழர்கள் விடுதலை!
தமிழகத்தை
தனியார்மயச் சிறையிலிருந்து விடுவிக்க
பு.மா.இ.மு. வே நீதான் தலை!
அடைமழையில் நனைந்தாலும்
அல்லி நிறம் மாறாது,
கொடுவெயில் கொளுத்தினாலும்
கொன்றை மணம் போகாது
அடக்குமுறை எத்தனை அழுத்தினாலும்
பு.மா.இ.மு. அடங்காது!
இலக்காம்கல்வி உரிமையினை
அடையும் வரை,
இந்த இளமை எதற்கும் மயங்காது!
அரசியல் உரம் சேர்த்த தோழர்களே,
உங்கள் திறம் வியந்து
தமிழகமே உங்களை என்றும் மறவாது!
குடும்பத்தின் பாரத்தை
தலைப்பிள்ளையே தாங்காமல்
நழுவுகின்ற காலத்தில்,
சமூகத்தின் பாரத்தை
சளைக்காமல் தாங்கித் தகர்க்க
தானே முன்வந்த
வர்க்கத்தின் வாரிசுகளே,
கல்வி உரிமை பெறும் பிள்ளைகளின்
நா பழக நாளை,
நீங்களே முதலெழுத்தும், உயிரெழுத்தும்.
பலநாள் ஊதியமிழந்து
சிலநாள் வகுப்பறையிழந்து
நேசமுள்ள குடும்ப உறவுகளின்
முரண் சுவை கலைந்து,
அரைவயிறு உணவில் சேமித்த உடல்வழுவை
முறையற்ற போலீசோடு முட்டியதில் இழந்து,
அனைத்திற்கும் மேலாக அன்றாடம்
பஸ்சிலும், ரயிலிலும் பிரச்சாரத்தால்
பரிவுடன் பார்க்கும் மக்களின்
விழித்துணை இழந்து,
பாசமுள்ள தோழமையின் வேலைமுறை
கூட்டுணர்வின் சுகமிழந்து
சிறைப்பட்டு மீண்டு வரும் சிம்புட் பறவைகளே…
வானத்து நிலவிலும் விண்மீன்களிலும்
உங்களை வரவேற்கும் வசீகரிப்பு!
சட்டத்தின் வெளிக்குத்தும்
போலீசின் உள்குத்தும்
புண்பட்ட உங்கள் உடலுக்கு
மறுகாலனியத்தை பொடியாக்கி
மருந்து செய்ய வேண்டியுள்ளதால்
தோழர்களே…
தமிழகத்தின் முழுக்கரத்தையும்
பலமாக திரட்டுவதற்கு
மீண்டும் மீண்டும்
வேலை… வேலை… வேலைதான்
உங்களை வேண்டி வரவேற்கும் பூரிப்பு!
-துரை. சண்முகம்.
தொடர்புடைய பதிவுகள்:
பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!
Filed under: கவிதைகள் | Tagged: அரசியல், கல்வி, கல்வி தனியார்மயம், கல்வியில் தனியார்மயம், கவிதை, சாலை மறியல், சிறை, சென்னை போராட்டம், டிபிஐ, திருச்சி ஈ.வே.ரா கல்லூரி, தோழர் துரை.சண்முகம், தோழர்கள், நிகழ்வுகள், பச்சையப்பன் கல்லூரி, பள்ளி கல்வித்துறை இயக்குநரகம், பள்ளிக் கல்வித்துறை, பு.மா.இ.மு, புமாஇமு தோழர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, போராட்டம், போலிஸ் தாக்குதல், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், முற்றுகை, முற்றுகைப் போராட்டம், லத்திசார்ஜ், DPI | 1 Comment »