• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

ஐஐடி மாணவர்களின் தொடர் தற்கொலைகள்

உயர்கல்வி தனியார்மயமாக்கலின் விளைவும், கடோட்கர் குழு அறிக்கையும் !

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார் மயத்தின் கோரமுகம்!!தொடர்ச்சியாக​ கடந்த​ சில​ மாதங்களில் ஐஐடிக்களில், குறிப்பாக​ பார்ப்பன​ மேலாண்மை தலைவிரித்தாடும் ஐஐடி கான்பூரிலும் சென்னையிலும் நடக்கும் மாணவர் தற்கொலைகள், செய்தி ஊடகங்களையும், பொதுமக்களையும், ஏன் விட்டேத்தியான இந்த​ அரசையும் கூட மாணவர் தற்கொலைக்கான​ காரணங்களை நோக்கி சற்று தலை திருப்ப​​ வைத்துள்ளது. 2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதும், அதன்பின் இதுகுறித்து நடந்த​ போராட்டங்களும், விவாதங்களும் அனைத்து முதலாளித்துவ​ ஊடகங்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இரண்டாமாண்டின் இறுதியில் முடிக்கப்படவேண்டிய​ பிராஜெக்ட்டை அடுத்த​ ஆறு மாதங்களுக்கு நீட்டித்ததால் ஏற்பட்ட​ மன​ உளைச்சலே இந்த​ தற்கொலைக்கு காரணமாக​ ஊடகங்களால் பேசப்பட்டது.  கடந்த​ ஒருவருடத்தில் இதே காரணத்தால் 2010 மே மாதம் சந்தீபும், 2011 பிப்ரவரியில் அனூப் வலப்பாரியாவும் தற்கொலை செய்தபோதும், நிதின் குமாரின் தற்கொலைக்கு மட்டும் இவ்வளவு ஊடகக் கவனஈர்ப்பு கிடைத்தது யதேச்சையாக​ நடந்துவிடவில்லை. ஏழை மாணவனான சந்தீபின் தற்கொலையை  காவல்துறையின் உதவியுடன் ஒரு பத்தி செய்தியாக​ மறைத்தது போல், DRDO இயக்குனரின் மகனான​ நிதினின் தற்கொலையை மூடிமறைக்க​ ஐஐடி நிர்வாகத்தால் முடியவில்லை.

2008-ல் சிஃபி வெளியிட்ட​ செய்தியில் 2005-2008 ஆம் ஆண்டிற்குள் ‘கல்விசார் நிர்பந்தத்தால்’ ஐஐடி கான்பூரில் மட்டுமே ஏழு தற்கொலைகள் நடந்ததாகக் கூறுகிறது.  2008-ல்  நடந்த​ ரித்திகா தோய​ சாட்டர்ஜி என்ற எம்டெக் மாணவியின் தற்கொலையின் போதே ஐஐடி நிர்வாகத்தின் ரகசியத் தன்மை வாய்ந்த​ மாணவர் தர​ மதிப்பீட்டு முறை (grading system) மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பின் (grievance forum) கேவலமான​ நிலை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.

கல்விசார் நிர்பந்தங்களினால் நடக்கும் தற்கொலைகளுக்கு இணையாக ஐஐடிக்களில் நடக்கும் சாதிய​ ஒடுக்குமுறையாலும் ஏழை தலித் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.  பிப்ரவரி 2011-ல் நடந்த​ ஐஐடி ரூர்க்கி மாணவன் மனீஷ் குமாரின் தற்கொலை இதற்கு மிக​ சமீபத்திய​ உதாரணம். ஐஐடி நிர்வாகம் மாணவர்களின் உணர்ச்சிவயப்படும் தன்மையும் மன​ அழுத்தமுமே தற்கொலைக்கான​ காரணமாகக் கூறுகிறது.  ஐஐடி சென்னையின் மாணவர்களுக்கான​ நிர்வாக​ முதல்வர் (Dean of Students) கோவர்த்தன், தற்கொலை செய்த​ நிதினைப்பற்றிக் கூறும்போது, அவர் பள்ளிப்பருவத்திலிருந்தே மன அழுத்ததால் பாதிக்கப்பட்டவர் என​ சேறடித்தார்.

இதற்கு முன்னும் 2010-ல் ஐஐடி கான்பூரில் ஸ்நேஹல் என்ற​ பிடெக் மாணவி தற்கொலை முயற்சி செய்ததற்கு அம்மாணவியின் மனநிலையை காரணங்காட்டினார் அதன் பதிவாளர் கஷேல்கர்.  டெக்கான் குரோனிக்கிளில் வந்த​ நிதின் குமாரின் தற்கொலை செய்திக்கு பின்னூட்டமிட்டிருந்த​ நிதின் குப்தா என்பவன் இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், ஒரு நடைபாதைப் பயணி மேல்  கார் ஏற்றிச் சென்றால் அதெப்படி டிரைவரின் குற்றமாகாதோ அது போலவே நிதின் குமாரின் தற்கொலைக்கும் ஐஐடி நிர்வாகம் பொறுப்பல்ல​ என்கிறான். இதற்கு டார்வினின் “தக்கன பிழைத்து வாழ்தலை” (survival of the fittest) உதாரணம் காட்டுகிறான்.

இன்னொரு பக்கம் ஐஐடி நிர்வாகமோ மாணவர்களை குஷிப்படுத்தி தற்கொலை எண்ணத்தைப் போக்க​ ஒரு தலைமை மகிழ்ச்சி அதிகாரியை (Chief Happiness Officer!?!?!?) முழுநேரமாக​ நியமித்துள்ளது. இச்சூழலில், கடந்த​ ஐந்து வருடங்களில் மட்டும் ஐஐடிகளில் நடந்த​ மொத்த​ மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை 15-ஐத் தாண்டும் போது, இதன் பின்னணியை தனிநபர் பிரச்சினையாகவன்றி சமூகப்பொருளாதார​ நோக்கில் ஆராய​ வேண்டியுள்ளது.

தற்கொலைக்கு தூண்டும் சமூகப் பொருளாதாரக் காரணிகள்

காட்ஸ் (GATT) மற்றும் டப்ளியூடிஓ (WTO)-ன் பரிந்துரைப்படி, உயர்கல்வியை பண்டமயமாக்கும் முகமாகவும் உலகசந்தையின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்யவும், இந்திய​ அரசு உயர்கல்வியில் உட்கட்டுமான​ சீர்த்திருத்தங்களை கொண்டுவருகிறது. இச்சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தி சோதனை செய்வதன் முதற்கட்டமாக​,   ஐஐடிக்களை அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) கல்வி நிறுவன​ மாதிரிகளாகவும் அதேநேரம் NIT, ISER, பல்கலைக்கழகங்கள் போன்ற​ உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் வட்டார​ அளவில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாகவும் ஆக்கும் பொருட்டு, கடந்த​ பத்தாண்டுகளில் மனிதவள​ மேம்பாட்டுத்துறையின் கீழியங்கும் 15 ஐஐடிகளிலும், நிதிசார்  (financial autonomy) தன்னாட்சியை பகுதியளவிலும், கல்விசார் தன்னாட்சியை (academic autonomy) முழுவதுமாகவும் அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

நிதிசார் தன்னாட்சியென்பது மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்தல், மாணவர்களுக்கான விடுதி, ​ உணவகங்கள் மற்றும் அங்காடிகளின் நிர்வாகம், உட்கட்டுமானம், பிற​ நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்ளும் நன்கொடை போன்றவற்றில் அரசின் தலையீடின்றி நிர்வாகக் குழுமத்தின் (Board of governance) நேரடியாட்சிக்குட்பட்டிருப்பது போன்றவற்றைக் கூறலாம்.  ஆனால் ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் காப்பீடு, மாணவர்களுக்கான​ கல்வி உதவித் தொகை, உட்கட்டுமானத்திற்கான​ நிதி ஒதுக்கீடு, நிறுவன உபரிநிதியை முதலீடு செய்வது போன்றவற்றில் மைய அரசின் பங்களிப்பு மற்றும் தலையீடு, முதன்மை தணிக்கை ஆய்வாளரின் தணிக்கைக்கு உட்பட்ட​ நிறுவன​ வரவுசெலவுகள் போன்றவை நிதிசார் ஆட்சியின் ஒருபகுதியை இன்னும் மைய​ அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

கல்விசார் தன்னாட்சியென்பது, பாடத் திட்டங்களை வடிவமைப்பது, புதிய​ பாடப்பிரிவுகளை அறிகமுகப்படுத்துவது, மாணவர் சேர்க்கைக்கான​ தகுதிகளை நிர்ணயிப்பது, ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்விற்கான​ தகுதிகளை தீர்மானிப்பது போன்றவற்றில் அரசின் தலையீட்டை முழுவதுமாக​ நீக்கி, முழுக்க​ முழுக்க​ நிர்வாகக் குழுமத்தின் நேரடி ஆட்சிக்கு ஒப்படைப்பதாகும்.  இக்குழுமத்தின் உறுப்பினர்களாக​ இருந்து ஆட்சிசெய்வது, கல்வியாளர்களான ஐஐடிக்களின் ​ மூத்த​ பேராசிரியர்களே.  இந்த தன்னாட்சி அமைப்பு கல்விசார் புலத்தில் பேராசிரியர்களுக்கு வரைமுறையற்ற​ அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இதனால் ஒரு மாணவனின் எதிர்காலம் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் ஆய்வு வழிகாட்டியாக​ (project guide) இருக்கும் குறிப்பிட்ட பேராசிரியரை மட்டுமே சார்ந்துள்ளது.  அதுபோல​ ஐஐடிக்களை பொறுத்தவரை பாடத்திட்டம் பற்றிய​ மையப்படுத்தப்பட்ட​ விதிமுறைகளில்லை.  உதாரணமாக​ பல​ துறைகளிலும் கடைசி செமஸ்டரில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேட்டையும் (thesis) வாய்மொழித்தேர்வையும் (viva voce) பொறுத்தே மாணவனுக்கு கிரேடு (grade) வழங்கப்படுகிறது. ஆனால் ஒருசில​ துறைகளில் ஒரு எம்டெக் மாணவன் ஆய்வு முடிவுகளை ஏதாவது ஆய்விதழில் (journal) வெளியிட்டாலன்றி  அம்மாணவனுக்கு வாய்மொழித்தேர்வு நடத்தமாட்டார்கள். வாய்மொழித்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே எஸ் (S) அல்லது ஏ (A) கிரேடு வழங்கப்படும். மற்ற​ மாணவர்களுக்கு பி (B), சி (C) கிரேடுகள் வழங்கப்பட்டு பட்டமளிக்கப்படும்.

ஒரு மாணவன் எடுக்கும் உயர்ந்த​ கிரேடைப் பொறுத்தே கார்ப்பரேட் நிறுவனங்கள் அவனுக்கு வேலை வாய்ப்பளிக்கின்றது.  இந்த​ மாதிரி துறை சார்ந்த​ மையப்படுத்தப்படாத விதிமுறைகளினால், ஒரு மாணவனை குறிப்பிட்ட​ ஆய்வுவழிகாட்டி அறிவு சுரண்டல் செய்யும் போது அதை புரிந்து கொள்வதற்கோ, புரிந்தாலும் அச்சுரண்டலை எதிர்த்து அம்மாணவன் கேள்வி கேட்கவோ முடியாத​ சூழலே இங்கு நிலவுகிறது.  இதையெல்லாம் தாண்டி ஒரு மாணவன் தனது பாடம் சார்ந்த​ காரணங்களுக்காகவோ அன்றி மாணவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் விடுதி அல்லது நிறுவனம் சார்ந்த​ பிரச்சனைகளுக்காகவோ​ நிர்வாகத்திடம் முறையீடு செய்தால் அவனது ஆய்வுவழிகாட்டியாலே மிரட்டப்படுவான்.  இது அவனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் கிரேடில் கைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

ஐஐடி போன்ற​ உயர்கல்வி நிறுவனங்கள் இன்னும் பார்ப்பனர்களின் கோட்டையாக​ உள்ள நிலையில், ஆசிரியர் நியமனத்தில் நிகழும் பார்ப்பன​ மேலாண்மை காரணமாக,​ மெரிட்டிலோ, இட​ஒதுக்கீட்டிலோ படிக்க​ வரும் பார்ப்பனரல்லாத​ மாணவனின் கிரேடைத் தீர்மானிப்பதில் அவனது சாதியும் முக்கிய​ பங்களிக்கிறது. (டாக்டர் உதய் சந்த் என்பவர் மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலடிப்படையில் உயர்கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் மைய அரசால் எஸ்டி எஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ள​ 22.5% இடஒதுக்கீட்டில் இதுநாள்வரை வெறும் 5.03% மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக​ மானியக்குழு வலியுறுத்தும் எஸ்டி எஸ்சிக்கான பிரதிநிதித்துவம் எந்த​ ஐஐடி நிர்வாகத்திலும் வழங்கப்படவில்லை.) இதனால் ஒரு மாணவன் தான் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக​ தனது பேராசிரியர்களையோ நிர்வாகத்தையோ அணுகுவது குதிரைக் கொம்பாகிறது.

பொதுவாக​ ஐஐடியில் நுழைவதே கௌரவமாகவும் அதற்குமேல் வேலைக்கான உத்தரவாதமாகவும் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் பார்க்கப்படுகிறது.  இந்த​ பொதுப்புத்தி, பட்டப்படிப்பு முடித்ததும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை உத்தரவாதத்தைப் பற்றியும் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை பற்றியும் கனவுகளை மாணவனுக்குள் உருவாக்கிறது. ஐஐடி மாணவர்களில் 80%ற்கும் மேலானோர் வங்கிக்கடனை நம்பி படிக்கும் நடுத்தர​ வர்க்கத்தினர்.  பட்டப்படிப்பை முடித்ததும் இக்கடனை திருப்பி செலுத்த​ வேண்டிய​ நிர்பந்தமும் அம்மாணவனுடைய​ உடனடி வேலைத் தேவைக்கு காரணமாகிறது. ஒரு மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் தாமதம் ஏற்படும் போதும் அல்லது குறைந்த​ கிரேடுகளுடன் பட்டம் பெறும்போதும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை பற்றிய​ அவனது ஆகாயக்கோட்டை தகர்கிறது. வங்கிக்கடனின் சுமைவேறு அழுத்துகிறது.

இந்த​ கல்விமுறை மாணவனுக்கு சமூகம் சார்ந்த​ எந்த​ புரிதலையும் உருவாக்கிக் கொடுக்காமல் இருப்பதும், சமூக​ யதார்த்தங்களிலிருந்து அன்னியப்பட்ட​ நடுத்தர​ வர்க்கப் பின்னணியும், அம்மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்படும் போது அதை தனக்கு மட்டுமே உரிய​ பிரச்சனையாகப்பார்ப்பதும், அவனது சமூகப்பொருளாதார​ நிலைமைகளுமே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது.

ஆய்வுமாணவர்களின் பரிதாபநிலை

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார் மயத்தின் கோரமுகம்!!இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் நிலையே இப்படியென்றால் ஆய்வுமாணவர்களின் நிலை மிகப் பரிதாபத்துக்குரியதாக​ இருக்கிறது.  ஐஐடியில் பொறியியல் துறைகளில் முனைவர் பட்டம் மேற்கொள்ள​ ஐஐடி நுழைவுத் தேர்வு மற்றும் நேரடித் தேர்விலும், அடிப்படை அறிவியல் துறைகளில் சேர​ நெட் (NET), கேட் (GATE) போன்ற​ தேர்வுகளில் தகுதியடைந்திருப்பதுடன் ஐஐடித் தேர்வுகளிலும் வெற்றி பெறவேண்டும்.  இந்தியாவில் உயர்கல்வித் துறையில் இருக்கும் பலஅடுக்கான​ கல்விமுறையும், மையப்படுத்தப்படாத​ பாடத் திட்டங்களும் காரணமாக​ முதுநிலை பட்டம் பெற்ற​ மாணவன் மேலும் இரண்டு முதல் மூன்று வருடங்கள் தீவிரமாகப் பயிற்சியெடுத்தால் மட்டுமே இத்தேர்வுகளில் தகுதியடைந்து ஐஐடிக்குள் நுழையமுடியும்.

தனது வயதையொத்த​ நண்பர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் கை நிறைய​ சம்பாதிக்கும் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பாலுள்ள  அதீத​ ஈடுபாடும் தன் சுதந்திர சிந்தனைகளுக்கு ​ஆய்வுலகு ஏற்படுத்திக் கொடுக்கப்போகும் வாய்ப்புக​ளையும் பற்றியுள்ள ஏராளமான​ கற்பனைகளினாலே பொதுவாக​ மாணவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் இந்திய​ தத்துவ​ மரபில் காலங்காலமாக​ ஆதிக்கம் செலுத்திவரும் அதீதக் கருத்துமுதல்வாதத்தின் (இதற்கு மிகச் சிறிய​ உதாரணமாக​ நம்ம​ கணிதமேதை ராமானுஜத்திற்கு கணித சூத்திரங்களெல்லாம் சொந்த​ புத்தியிலிருந்தன்றி திருவுடைநாயகியம்மாளின் திருவருளால் வந்ததைக் கூறலாம்) தொடர்ச்சியாக​ பார்ப்பனர்கள் கேள்விக்கே இடமற்ற வகையில் உயர்கல்வியில் முக்கிய​ இடத்தைக் கைப்பற்றினர்.​  காலனிய​ காலத்திலிருந்து சாதி சமூகமுறையின் அடிப்படையான​ கருத்துநிலைச் சட்டத்தை உடைத்தெறிவதற்கான விருப்பமில்லாமலேயே அவர்க​ளுடன் முதலாளித்துவம் சமரசம் செய்த காரணத்தால்,  இந்திய அறிவுத்துறையில் இன்று வரை மந்தமும் தேக்கமும் நிலவிவருகிறது.

பி.சி ராய் 1902-ல் எழுதிய ‘இந்து வேதியியலின் வரலாறு’ என்ற நூலில் “இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணி சாதி சமூக முறையின் கோட்டைக் கொத்தளங்களும், அவை தொழில்நுட்ப வல்லுநர், கைவினைஞர் உள்ளிட்ட உடல் உழைப்பாளிகளின் சமூக மதிப்பை மிக மோசமான வகையில் கீழிறக்கியதுமுமே” என்கிறார். இதை நூறு சதவீதம் நிரூபிப்பது போலவே ஐஐடிக்களின் இன்றைய​ கல்வி மற்றும் ஆய்வுமுறை உள்ளது.

உதாரணமாக​ ஐஐடி சென்னையைப் பொறுத்தவரை இங்கு நிலவிவரும் ஐயர் – ஐயங்கார் மேலதிக்கத்தின் பிரதிபலிப்பாக​, கோட்பாட்டு (theoretical) மற்றும் கணிப்பிய (computational)​ ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், சோதனைவழி (experimental) மற்றும் தொழிற்நுட்ப​ (technological)  ஆய்வுகளுக்கு கொடுக்காமல் ‘மூளை உழைப்பை உடல் உழைப்பிலிருந்து பிரித்து’ அதை கேவலப்படுத்தும் போக்கு இருக்கிறது.  ஒரு சில​ துறைகளில் சோதனை வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இறக்குமதி செய்யப்பட்ட​ பல​ கோடி ரூபாய் மதிப்பிலான​ சோதனைக்கருவிகளையும், வணிக நோக்கம் மட்டுமே கொண்ட​ பன்னாட்டு பதிப்பகங்களையும்  மட்டுமே நம்பியுள்ளதால், மாணவர்கள் தங்கள் சொந்த​  மூளையை உபயோகித்து ஒரு விளக்குமாறு செய்யும் தொழில் நுட்பத்தைக்கூட​ உருவாக்க​ முடியாத​ ஒட்டுண்ணிச் சூழல் தான் இந்திய​ தொழில்நுட்பத்துறையில் நிலவுகிறது.

ஆனால் உலகளாவிய​ ரீதியில் அடிப்படை அறிவியலும் தொழில்நுட்பமும் ஒத்தியங்கும் ஆய்வு முறையே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியக் கூறாக​ இருக்கும் போது, இந்த​ சாதிய சமூக அமைப்பின் வெற்றி, இந்திய​ அறிவியலின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய​ முட்டுக்கட்டையாக​ இன்றளவும் இருந்து வருகிறது. இது ஒரு ஆய்வுமாணவனின் அறிவுத் தேடலுக்கான​ தாகத்தை முளையிலே கிள்ளிவிடுவதோடு, அம்மாணவனது கருத்தை வறளச்செய்து (brain drain) ஆய்வில் எப்போதும் பெருவளர்ச்சியற்றதொரு மந்தநிலையை உருவாக்குகிறது.

சராசரியாக​ இருபத்தைந்தாவது வயதில் முனைவர் பட்ட​ ஆய்வில் நுழையும் ஆய்வுமாணவர், தன் வாழ்க்கையின் மிக​ நல்ல​ நாட்களான​ ஐந்திலிருந்து ஏழு வருடங்களை ஆய்வுவழிகாட்டியான​ பேராசிரியருக்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்து விடுகின்றார். பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக​ நித்தம் போராடி,  சமூகரீதியான​ உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி (introvert), குடும்பத்தினரால் ‘சம்பாதிக்கத் துப்பில்லாதவன்’ என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர​ வருமானமில்லாததால் திருமணம் என்ற​ கனவே கானல் நீராகி,  எதிர்காலம் பற்றிய​ எந்த​ நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும்  உள்ளாகி, செயல் வீரியமிழந்த​ நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.

இதற்கிடையில் வழிகாட்டிக்கு செய்யும் சேவையில் ஏதேனும் குறையேற்பட்டாலோ  ஆய்வில் பெரிய முன்னேற்றமில்லாமலிருந்தாலோ, ஆய்வின் எந்த​ கட்டத்தில் வேண்டுமென்றாலும் அம்மாணவரை எவ்வித​ நட்டஈடுமின்றி, கேட்பாரும் கேள்வியுமற்ற​ கையறு நிலையில் வெளியேற்ற​ இவ்வமைப்பு வழிவகை செய்துள்ளது. இந்நிரந்திரமற்ற​ தன்மை, ஆய்வு மாணவர்களுக்கு தற்கொலையெண்ணத்தைக்கூட​ உருவாக்குவதில்லை! இப்படி இந்திய​ உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, பேராசிரியர்கள் சுரண்டுபவர்களாகவும்,மாணவர்கள் அறிவுத்தளத்திலும்பொருளாதார​ரீதியாகவும்கலாச்சாரத்தளத்திலும் ஒட்டச்சுரண்டப்படுபவர்களாகவும் எதிரெதிர் திசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஐஐடிக்களின் நிலைமை இப்படியிருக்க​, இவ்வமைப்பை அம்பலப்படுத்தி, நிதின் குமார் உட்பட​ ஐஐடி சென்னையில் நடந்த​ அனைத்து தற்கொலைகளுக்கும் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டுமென்றும், தற்கொலைகளுக்கு காரணமான​ டீன் மற்றும் ஆய்வுவழிகாட்டி ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கவேண்டுமென்றும் கோரிக்கைகளுடன் மாணவர்களை ஒருங்கிணைந்து போராட​ வலியுறுத்தி புரட்சிகர​ மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.  ஐஐடி மாணவர்கள் ஓரணியில் திரண்டு இதற்கெதிராகப் போராடவில்லையென்றால் தற்கொலைகள் வரும் காலங்களிலும் தொடரத்தான் செய்யும்.

இந்நிலையில் ஐஐடிக்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு அவற்றை தனியார் மயமாக்கப் பரிந்துரைக்கும் கடோட்கர் குழு அறிக்கையை அமுல்படுத்தப்போவதாக​ மனிதவள​ மேம்பாட்டுத்துறை கடந்த​ மாதம் அனைத்து செய்திதாள்களிலும் செய்தி வெளியிட்டு, அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்திலும் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ரிலையன்ஸின் கடல்சார் ஆய்வு நிறுவனத்துடன் கூட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை நியாயப்படுத்திப் பேசும் போது, ‘இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் உட்பட​ எந்த​ அரசுசார் கல்விநிறுவனங்களும் உலகத்தரம் வாய்ந்ததாக​ இல்லை. உயர்கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பு ஒன்றே இந்திய​ உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்தும்’ என்றார்.  இதற்கு பதிலளித்த​ மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், ‘கடோட்கர் குழுப் பரிந்துரைகளை அமுல்படுத்தினாலே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த முடியும்’ என்றார்.  உடனே அனைத்து செய்தி நாளேடுகளும் ஐஐடியின் தரத்தைச் சொல்லி மத்திய​ அமைச்சரவையே இரண்டுபட்டு குடுமிப்பிடி சண்டைபோடுகிறது என்றெல்லாம் பரபரப்பு செய்தி வெளியிட்டது.

ஆனால் மைய அமைச்சரவையும் நாளேடுகளும் அரங்கேற்றிய​ இந்த​ நாடகத்தில் மைய​ இழை ஒன்றுள்ளது. இவர்களின் கூற்றுகளை கூர்ந்து கவனிக்கும் எவருக்கும் அது புரியும். அதாவது, அரசு-தனியார் கூட்டில் மட்டுமே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த​ முடியும் என்றும் இதற்கு கடோட்கர் குழு பரிந்துரைக்கும் ஐஐடி தனியார்மயமாக்கலே ஒரேவழி என்பதை மக்களை ஏற்க​ வைப்பதே இந்நாடகத்தின் நோக்கம்.

‘அரசு-தனியார் கூட்டு’ என்ற​ வண்ணத்தாளில் பொதியப்பட்டுள்ள​ இந்த​ நஞ்சின் உண்மையான​ தன்மை நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக் கிடக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய​ உயர்கல்வித் துறையை லட்டு மாதிரி அப்படி அலேக்காக​ தூக்கி கொடுப்பதே!. இதனை முழுமையாக​ உணர்ந்தும் எந்த​ ஐஐடி பேராசிரியர்களும் இதற்கெதிராக​ வாயைத் திறக்காமல் இருப்பதன் ரகசியம் தங்களுக்கும் ‘பிராஜக்ட்’ என்ற​ பேரில் சில​ எச்சில் எலும்புகள் வீசப்படும், மாணவர்களின் உழைப்பை   ஒட்டச் சுரண்டி ரிப்போட் எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்ற​ நப்பாசை தான்.

இன்றைக்கு உயர்கல்வித்துறை தனியார்மயமாக்கலின் முதல் பலிகடாக்களாக​ மாணவர்கள் இருந்தாலும் அது தன் ஆக்டொபஸ் கரங்களால் பேராசிரியர்களையும் அழுத்தி திணறடிக்கும் காலம் வெகு தூரமில்லை.  இலவசக் கல்வியை அமல்படுத்து, தனியார் கொள்ளையை தடுத்து நிறுத்து, என்ற கோரிக்கையின் கீழ் மாணவர்கள் அணிதிரண்டு போராடாத வரை ஐஐடி மட்டுமல்ல ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் விமோச்சனமில்லை.

ஆனால் சாதாரண அரசு கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வு ஐஐடி போன்ற உயர்கல்வி மாணவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உணரும் வரை, உணர்ந்து போராடாத வரை விடிவில்லை. அந்த விடியலுக்கான விதையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விதைத்துள்ளது. அறுவடைக்கான ஆதரவை மாணவர்கள் தரவேண்டும்.

_______________________________________________________

– ஆலங்கட்டி

முதல் பதிவு: வினவு

ஐ.ஐ.டி மாணவி தற்கொலை: புமாஇமு போராட்டம்! பத்திரிக்கை செய்தி!

சென்னை ஐ.ஐ.டியில் மாணவி நெருகு மானசா தற்கொலை! இது தனியார்மயக் கல்வி கொள்கையின் கோர விளைவே!

 

 

 

ஐ.ஐ.டி மாணவி தற்கொலை: புமாஇமு போராட்டம்! பத்திரிக்கை செய்தி!

தொடர்புடைய பதிவுகள்:

சென்னை ஐ.ஐ.டியில் மாணவி நெருகு மானசா தற்கொலை! இது தனியார்மயக் கல்வி கொள்கையின் கோர விளைவே!

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

ஐ.ஐ.டி மாணவி தற்கொலை: புமாஇமு போராட்டம்!

மாணவி தற்கொலை எதிரொலி: ஐ.ஐ.டி.யில் முற்றுகை போராட்டம்

 
மாணவி தற்கொலை எதிரொலி: ஐ.ஐ.டி.யில் முற்றுகை போராட்டம்

 
சென்னை கிண்டியில் சர்தார் வல்லபாய் படேல் சாலையில் ‘ஐ.ஐ.டி.’ உள்ளது. அங்கு படித்த மாணவி மெருகு மானஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள மாணவியர் விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இங்கு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை தடுக்க வலியுறுத்தியும், ஐ.ஐ.டி. இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்யவேண்டும் என வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியினர் இன்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்துக்கு இந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் மருது தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜேஸ்வரி, மணிகண்டன், கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது ஐ.ஐ.டி. இயக்குனரை நேரில் சந்தித்து மனு கொடுக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முயன்றனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. 

அதைத் தொடர்ந்து 2 நிர்வாகிகள் இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

 
செய்தி: மாலைமலர்
 

சென்னை ஐ.ஐ.டியில் மாணவி நெருகு மானசா தற்கொலை! இது தனியார்மயக் கல்வி கொள்கையின் கோர விளைவே!

மத்திய,மாநில அரசுகளே!

ஐ.ஐ.டி மாணவர்களின் தொடர் தற்கொலைகளை மூடி மறைத்து வரும் இயக்குனர் பாஸ்கர், ராமமூர்த்தியையும் உண்மையை கண்டறிய முயன்ற பத்திரிக்கையாளரை தாக்கிய பேராசிரியர் பிரகாஷ்,எம்.மய்யாவையும் கைது செய்!

ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கு!

ஐ.ஐ.டி மாணவர்களே!

அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டுவோம்!

தொடரும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த ஐ.ஐ.டியில் திணிக்கப்பட்டு வரும் தனியார்மயக் கல்வி கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!

******************************

தொடர்புடைய பதிவுகள்:

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?

முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன ‘மேல்’ சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தே மாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 6

சுதந்திரப்போராட்டக்காலத்தில்தேசபக்தர்களுக்கும், தூக்குக்கயிற்றில்தொங்கியதியாகிகளுக்கும்உயிர்கொடுத்தமந்திரச்சொல்வந்தேமாதரம்‘. தன்னிகரில்லாபாரதத்தாயின்மீதுபக்தியையும், அன்பையும்தூண்டிஎழுச்சியைத்தோற்றுவிக்கும்வந்தேமாதரதேசியகீதத்தைகிறித்தவர்களும், முசுலீம்களும்பாடமறுக்கிறார்களேஏன்?”

ஆர்.எஸ்.எஸ்.இன்நீண்டகாலஅவதூறுகளில்இதுவும்ஒன்று.

டந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாகப் பாடும் நடைமுறையை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். வந்தே மாதரத்தைப் பாட மறுக்கும் சிறுபான்மையினரைத் தேசத்துரோகிகள் என்று பெரும்பான்மை மக்கள் எளிதில் ஏற்கும் வண்ணம் பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். ஆகையால் வந்தே மாதரத்தையும் நாட்டுப் பற்றையும் இணைத்து இந்து மதவெறியாளர்கள் போட்டிருக்கும் இந்தப் பொய் முடிச்சை நாம் அவிழ்க்க வேண்டும்.

நாட்டுப்பற்றுஜெபத்திலா, சிறையிலா?

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர்களின் பெருமை, அவர்கள் ஒவ்வொரு நாளும் வந்தே மாதரத்தை உச்சசாடனம் செய்தார்களா என்பதில் இல்லை; தடியடி, சிறை, தூக்கு இன்னபிற கொடுமைகளை ஏற்றுக்கொண்டு தளராமல் போராடியதில்தான் இருக்கின்றது அவர்களது பெருமை. அதைத்தான் நாட்டுப்பற்று எனக்கூற முடியும். அதேசமயம் வெள்ளையர்கள் இருக்கும்வரை ‘ஷாகா’ சென்று கபடி விளையாடிய ஸ்வயம் சேவகக் குஞ்சுகள், ஒவ்வொரு நாளும் ‘வந்தே மாதரம்’ ‘பாரத் மாதாகி ஜெய்’ இரண்டையும் ஜெபம் செய்தார்களே ஒழிய, சுதந்திரப் போராட்டத்திற்காகத் தமது சுட்டு விரலைக்கூட அசைக்கவில்லை. சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

பாரதமாதா கிடக்கட்டும், பாரதம் என்று இன்று அறியப்படும் இந்தியாவே உருவாயிராத காலம்தான் 19ஆம் நூற்றாண்டு. பல்வேறு வழிமுறைகளில் ஆட்சியதிகாரத்தை வெள்ளையர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த காலம் அது. அதனால் அதிகாரமிழந்தவர்கள் அவர்களை எதிர்ப்பதும், அதிகாரம் பெற்றவர்கள் ஆதரிப்பதும் இடத்திற்கிடம் மாறுபட்டது. உதாரணத்திற்கு மராத்திய சிவாஜிக்குப் பின், பேஷ்வாக்களின் ஆட்சியில் தக்காணம் முழுவதையும் பார்ப்பன ‘மேல்’சாதி நிலப்பிரபுக்களும், வியாபாரிகளும் ஆண்டு அனுபவித்தனர். ஆங்கிலேயரின் வரவு பேஷ்வா ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. தமது சமூக மேலாண்மை பறி போனதைக் கண்ட மராத்திய சித்பவனப் பார்ப்பனர்கள், வெள்ளையர்களை எதிர்க்கத் துவங்கிய சூழ்நிலை இதுதான். திலகர், கோகலே, சாவர்க்கர் போன்ற சித்பவனப் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களாக உருவான விதமும் அப்படித்தான்.

ஆங்கிலப்பிதாவிடம்வங்கமாதாகாதல்!

மராத்திய நிலைமை இப்படியிருக்க வங்கத்தின் நிலைமை நேரெதிராக இருந்தது. மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முசுலீம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் – பார்ப்பன ‘மேல்’சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். இந்தச் சூழ்நிலையை வைத்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பார்ப்பனர் ‘ஆனந்தமடம்’ என்ற நாவலை எழுதினர். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்ற தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.

”நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய்விட்டது; சமூகம் போய்விட்டது; மானம் போய்விட்டது; குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க் கொண்டிருக்கிறது…” இது ‘ஆனந்த மடம்’ நாவலில் வரும் ஒரு உரையாடல். இதில் யாருடைய மதம் – சமூகம் – மானம் – குலம் – பிராணன் போய்விட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன ‘மேல்’ சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தே மாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!

காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கரியமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன ‘மேல்’சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனிய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்தன.

பஜனைநாட்டுப்பற்றுஎங்கேயுமில்லை!

இந்த இடத்தில் வாசகர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரிட்டன், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஏகாதிபதியங்களின் ஆதிக்கத்தின் கீழ் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்திருக்கின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் விடுதலையும் அடைந்திருக்கின்றன. அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் கிறித்தவம், இசுலாம், பவுத்தம் என்ற பலவிதமான மதநம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். லிபியாவின் ஓமர் முக்தா தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த இசுலாமிய மதப்பற்று கொண்டவர்; துருக்கியின் கமால் பாட்சாவோ மதச்சார்பற்றவர்.

சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானும், அடிமைப்பட்ட சீனாவும் பவுத்தமத நம்பிக்கை கொண்ட நாடுகள்தான். அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் மதமும், அடிமைப்படுத்தப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மதமும் கிறித்தவம்தான்.

அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் மக்கள் தம்நாட்டைத் தாய்நாடென்றோ தந்தையர் நாடென்றோதான் அழைத்தார்கள். ஆனால், யாரும் கன்னி  மேரியைப் போலவோ, ஏசுவைப் போலவோ, புத்தரைப் போலவோ ஒரு படம் வரைந்து வைத்து குடம், சாம்பிராணி காட்டி, இந்தப் படத்துக்கு பஜனை பாடுபவன்தான் உண்மையான நாட்டுப்பற்று கொண்டவன் என்று கூறவில்லை. ஒரு மதத்தினர் மட்டுமே வாழும் நாடுகளில் கூட  நடக்காத இந்தப் பித்தலாட்டம், பல மதத்தினர் வாழும் இந்தியாவில் நடந்தது.

ரவிவர்மாவின்லட்சுமி காங்கிரசின்பாரதமாதா

கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா. இப்படி ‘மாதா’க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசிவரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலைக் கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையத் செய்யாதா?

இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கை காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது. உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது இந்துமத வெறியர்களின் குரூரமான விருப்பம். பாட மறுக்கும்போது தேசவிரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது அவர்களது பாசிச நோக்கம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு.

பாரதமாதாவைவிற்பவர்கள்யார்?

ஒரு நாடு என்பது அங்கு வாழும் மக்களை மட்டும்தான் குறிக்கும். நாட்டுப்பற்று என்பது அம்மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை மட்டும் குறிக்கும். மக்களையும், அவர்கள் நலனையும் பற்றிக் கவலைப்படாத இந்து மதவெறியர்கள்தான் நாட்டை தெய்வம், படம், பூசை என்று சடங்கு முறையாக்கும் ”தேசபக்தி”க்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். ஆகையால் நாட்டை தெய்வமாக்குவதை அதுவும் பார்ப்பனத் தெய்வமாக மாற்றுவதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

ஆகாசவாணியின் விடிகாலை ஒலிபரப்பில் கீறல் விழுந்த ரிக்கார்டாக ஒலித்துவந்த வந்தே மாதரத்தை, பிரேக் டான்சின் வலிப்புக்கேற்ப பாப்பிசை ‘வண்ட்டே மாட்றம்’ ஆக சோனி நிறுவனம் உலகெங்கும் வெளியிட்டிருக்கிறது. இன்னொருபுறம் மேல்நிலை வல்லரசுகளுக்காக நாட்டையே காட்டிக் கொடுத்து விற்கும் தரகனாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இப்படி அரசியலிலும் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் ”பாரத மாதா”வை விற்பவர்கள் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல!

____________________________________________________________

____________________________________________________________

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

வந்தே ஏமாத்துறோம் – ஒரு தேச பக்தி பாடலா?

வந்தே ஏமாத்துறோம் – ஒரு தேச பக்தி பாடலா?

வந்தே ஏமாத்துறோம் – ஒரு தேச பக்தி பாடலா?

“எனக்கு அவன் கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சுண்ணே.”

“விளக்கமா சொல்லு”

“அண்ணே.. அவனுக்கு நான் பத்தாயிரம் பணம் கொடுத்திருந்தனா.. அதை அவன்கிட்ட திருப்பிக் கேட்டப்போ அவன் ஒரு செக் கொடுத்திருந்தான்னே.. அது பேங்கில திரும்பி வந்துடுச்சு.. என்னன்னு கேட்டு பணத்த வாங்கித்தாங்க!”

“நீ எப்போ அவனுக்கு..பணம் கொடுத்தே?”

“அவன் பொண்டாட்டி ஓடிப்போவதுக்கு முன்னாடி?”

“என்னது அவன் பொண்டாட்டி ஓடிப்போயிட்டாளா? யார் கூட? அந்த நெட்டையா ஒருத்தன் ஊடகீட வந்துகிட்டு இருந்தானே அவனோடயா? ஏம்பா ஏன் என்கிட்டே சொல்லல இத?”

“அண்ணே! விசயம் அது இல்லண்ணே! செக்கப் பத்திக் கேளுங்க!”

“கொஞ்சம் சும்மா இருப்பா நீ! எவ்வளாவு நாளாப்பா அவன்கூட ஒன் பொண்டாட்டி பழக்கம்? எங்க ஓடிப் போனாங்க?”

********

இந்த மாதிரி உரையாடலை காமெடி என சினிமாவில் ரசித்திருப்பீர்கள்.. நிஜத்திலும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது இந்தியாவில் காங்கிரசு, பிஜேபி எனும் ஆளும் வர்க்கக்கட்சியின் வடிவில்.

வந்தே ஏமாத்தறோம் பஜனையின் பிண்ணனி:

நாட்டின் சுரங்கங்கள், விமான ஓடுதளங்கள், நிலையங்கள், ஆறு, நிலத்தடி நீர் என ஒன்றும் பாக்கி இல்லாமல் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்தாயிற்று.. சுயசார்புக்கொள்கையைஅணுசக்தித்துறையில் கைகழுவி அமெரிக்காவிடம் சரணாகதி ஆன விசயம் மக்களிடம் அம்பலமாகி நிற்கும் வேளையில் ‘வந்தேமாதரம் பஜனை’யைக் கையில் எடுத்துள்ளனர் இரு கயவாளிகளும்.

தேசபக்தி என்பது வெறும் பஜனைப்பாட்டு அல்ல. அது கோடானுகோடி உழைக்கும் இந்திய மக்களின் நலனுக்காக சிந்திப்பதாகும். இவர்களின் நலனை அன்னியனிடம் அடகு வைத்த விசயம் அம்பலமாகும்போது அதிலிருந்து மக்களை திசை திருப்பும் உத்தியாகவே இவர்கள் செய்து வரும் வாதம் உள்ளது. (செக்கு திரும்பி வந்த விசயத்தை விட்டு விட்டு பொண்டாட்டி ஓடிப்போனது பற்றிப் பேச ஆரம்பிக்கும் காமெடியை நினைவுகொள்க).

இவர்கள் இப்படி வந்தே மாதரம் பற்றிய சர்ச்சையை நடத்திக்கொண்டிருக்கையிலேயே ஓசையில்லாமல் கோக்கோகோலா கம்பெனிக்காரனுக்கு ‘நற்சான்றிதழ்’ தரும் மாமா வேலையை அமெரிக்க அடிமை மன்மோகன்சிங்கின் கூலிப்படை செய்து விட்டது.

இதே தாசானுதாசன், கொஞ்ச நாளுக்கு முந்தி, ‘ராவின் அரசில் இருந்த அமெரிக்க உளவாளி யார்?” என்பதை முன்னாள் ஜஸ்வந்த் சிங்கிடம் லாவணி பாடிக்கொண்டிருந்தார். அமெரிக்க உளவாளியே பிரதமராக இருப்பதும், அவர், உளவாளி பற்றிப் பேசுவதும்தான் காலக்கொடுமை.

மருத்துவம், கல்வி, குடிநீர் எல்லாமே தேசத்து மக்களுக்குக் கிடைக்கவிடாமல் தனியார்மயமாக்கப்பட்டு அம்மக்களின் நலன்கள் காவு கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த மாமாக்கள் (காங்கிரசு, பாஜக) ‘தேசபக்தி’ பற்றிப் பினாத்துகிறார்களே? அன்னிய நிறுவனமான சோனி, பத்தாண்டுகளுக்கு முன் ‘வண்ட்ட்ட்ட்டேஏ மாத்த்தரம்’ என்று மலச்சிக்கல் வந்தவன் முக்குகிற மாதிரி ஏ ஆர் ரகுமானை வைத்துப் பாடச்சொல்லி காசு சம்பாதித்ததே! அப்போது அன்னியக்கம்பெனி எப்படி எங்களோட ‘தேசபக்தி’ வியாபாரத்துல தலையிடலாம்னு குறைந்தபட்சம் ‘தேசிய முதலாளிகள்’ மாதிரியாவது கண்டித்தார்களா இந்த இந்துவியாதிகள் என்றால் அதெல்லாம் இல்லை.
சரி.. இவர்கள் சொல்லிவரும் வந்தே மாதரத்தின் லட்சணத்தைத்தான் பார்த்து விடுவோமே!

வந்தே ஏமாத்துறோம்! எப்படி?
“மொகலாயர் ஆட்சிக்குப் பிறகு வங்காளத்தை ஆண்ட முசுலீம் நவாபுகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் பார்ப்பன மேல்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை இழந்து தவித்தனர். எனவே நவாபுகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர்.

இந்தச் சூழ்நிலையை வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் ‘ஆனந்த மடம்’ எனும் புதினத்தை எழுதினார். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, சரஸ்வதி, லட்சுமி என்று தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.

“நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது..” இது ‘ஆனந்தமடம்’ நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில் யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும்.

அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!

காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கர்யமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன மேல்சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனீய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தன.

கோவில்களில் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி “இதுதான் லட்சுமி,சரஸ்வதி,பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவி வர்மா. இப்படியே ‘மாதா’க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசி வரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலை கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையச் செய்யாதா?

பிற மதத்தினரை விடுங்கள், மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட எந்த ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும்.

மத வெறி அரசியலும், மாற்று அரசியலும்:

இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கைக் காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது.

இப்போது பிஜேபி அர்ஜூன் சிங்கை நெளிய வைக்கவும் தனது இந்துவியாதி அரசியல் ஆயுதத்தை கூர்மைப் படுத்தவும் இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஏகாதிபத்திய அடிமைகளான பிஜேபியும், காங்கிரசும் நாட்டின் மூல வளங்களையும், நாட்டின் இறையாண்மையையும் டாலர் தேவதையின் முன் சமர்ப்பித்து விடுவதில் போட்டாபோட்டி போடுகின்றன. போராடும் உழைக்கும் இந்திய மக்கள் மீது , ஹூண்டாய் காரனின் எச்சில் காசுக்காக அடக்குமுறையையும், உரிமைப்போர் நடத்தும் மக்கள் மீது தாமிரபரணியில் கோக் கொடுக்கும் எலும்புத்துண்டுக்காக அரசு எந்திரத்தை ஏவி விடுவதிலும் இந்த இரண்டு கூட்டுக்களவாணிகளும் கள்ள மவுனமே சாதித்தன.

இது இன்று நேற்றல்ல. நூறாண்டுகளாக நடந்து வரும் துரோக வரலாறுதான். மக்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராய் எப்போதெல்லாம் போராடினரோ அப்போதெல்லாம், காங்கிரசு மக்களை அன்னியனுக்குக் காட்டிக்கொடுத்தே வந்துள்ளது. (புன்னபுரா, சவுரிசவுரா, தெலங்கானா உழவர் எழுச்சிகள், பகத்சிங்கின் புரட்சிப்படை ஆகியவற்றுக்கு எதிராக இருந்தமை).

பாஜகவின் மூல வேரான இந்துமகாசபையும் ஆர் எஸ் எஸ் ம், மற்ற இந்துவியாதிகளும் இதே மாமா வேலையைத்தான்(விளக்கு பிடித்தல்) 1947க்கு முன்னரும், பின்னரும் செய்தனர் (வெள்ளையனே வெளியேறு, தல்வார் புரட்சி ஆகியவற்றிற்கெதிராக வேலை செய்தமை). இன்றும் தொடர்கின்றனர்.

ஒட்டுண்ணிகளை அழிக்கும் வீரிய மருந்து – உழைக்கும் வர்க்கம்:

வந்தே மாதரம் பாடி நம்மை ஏமாற்றும் அரசியல் ஒட்டுண்ணிகளும், அவர்களின் எச்சில் பொறுக்கி அல்லக்கைகளும் நம்மைப் பார்த்து ‘வந்தே ஏமாத்துறோம்’ எனச்சொல்வது கேட்கிறது.

இந்த தேசத்தின் நலன்களையோ, தேசத்தின் செல்வங்களையோ, உழைப்பாளர்களையோ மதிக்காமல், அவற்றுக்கெல்லாம் எதிரானவர்களாய் நடந்து கொண்டு, வெறுமனே ‘வந்தே மாதரம்’ போன்ற பஜனைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு ‘போலி தேசப்பற்று’ பேசி அதற்கென ‘நாய்ச்சண்டை இடுவது’ எவ்வாறு சாத்தியமாகின்றது?

மக்களிடம் நாம் உண்மையான அரசியலை – அதாவது ஏகாதிபத்தியத்தை, அதற்கு நக்கிப்பிழைக்கும் காங்கிரசு, பாஜக கூட்டத்தை – பற்றி பேசத்தொடங்க வேண்டும். அவர்களின், இந்த அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.

பிளாக்ஸ்பாட்டுகளில் நுழைந்து அங்குள்ள பல போலி தேசிய கூமுட்டைகளை உடைக்க வேண்டும்.

கற்பக விநாயகம்

முதல் பதிவு: அசுரன்

தொடர்புடைய பதிவுகள்

வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

உயிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட  விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இயற்கை விஞ்ஞானம் அன்று கண்டிருந்த முன்னேற்றங்களின் துணை கொண்டு ‘உயிர்’ என்பதற்கு எங்கெலஸ் அளித்த அற்புதமான பொருள்முதல்வாத விளக்கம் இது.

“புரதப் பொருட்களின் இருத்தலின் பாங்கே உயிர்…. இரசாயன ரீதியாகப் புரதப் பொருள்களைத் தயாரிப்பது என்பது எப்போதாவது வெற்றி பெறுமெனில் அப்போது அவை உயிரின் இயல் நிகழ்ச்சியை நிச்சயமாகவே வெளிப்படுத்தும்…”
“.. மனது – பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆத்மா என்பதையும் வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகின பொருளற்ற இயற்கைக்கு முரணான கருத்து மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும்.”

“புரதப் பண்டங்களின் ஆக்கம் அறியப்பட்டவுடன் உயிருள்ள புரதத்தைத் தயாரிக்கும் வேலையில் இரசாயனவியல் இறங்கும். மிகச் சாதகமான சூழ்நிலைகளில் எதை இயற்கை ஒரு சில வான்கோள்களில் செய்து முடிக்கப் பத்து இலட்சக் கணக்கான ஆண்டுகள் பிடித்தனவோ, அதைப் பொழுது விடிவதற்குள் இரசாயனவியல் சாதிக்க வேண்டும் எனக் கோருவது ஒரு மந்திரவித்தையைக் கோருவதற்கு ஒப்பாகும்.”

1886 இல் எதனை மந்திர வித்தை என்று எங்கலெஸ் குறிப்பிட்டாரோ, அந்த மந்திர வித்தையைச் சாதிக்கும் திசையில் இரசாயனவியல் இன்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

000

சிந்தடிகா செல்

சிந்தடிகா – Synthetica  . அமெரிக்காவின் கிரேக் வென்டர் என்ற விஞ்ஞானி தனது சோதனைக் கூடத்தில் மே, 20, 2010 ஆன்று உருவாக்கியிருக்கும் புதியதொரு நுண்ணுயிரின் பெயர். செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர் என்ற பொருள்படும் வகையில் சூட்டப்பட்ட பெயர். சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா.

ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக்  குறியீடுகளுக்குரிய  (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா.

சிந்தடிகா என்பது இயற்கை தனது இயக்கத்தின் போக்கில் தானே படைத்த புதியதொரு உயிரல்ல;  ஏற்கெனவே இருக்கின்ற ஒரு உயிரின் மரபணுவை பிரதி எடுத்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆட்டினைப் போன்ற நகலும் அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அல்லது தக்காளியைப் போன்றதும் அல்ல. இயற்கை படைத்த கூட்டுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் செயற்கை என்று இதைச் சொல்லலாம்.

வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. இந்த முந்திரிப்பருப்பு முந்திரியின் மரபணுவிலிருந்து நேரிடையாகப் படைக்கப்பட்டதல்ல. அந்த மரபணுவின் வேதியியல் மூலக்கூறுகளை சோதனைச்சாலையில் ஒன்றிணைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது.  அந்த அளவில் இது உயிரற்ற சடப்பொருளிலிருந்து உருவாக்கப்பட்ட உயிர்.

மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டிரியாவின் குரோமோசோம் அமைப்பை கணினியின் உதவியுடன் பகுத்தாராய்ந்து, அவற்றின் மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) சுமார் 10 இலட்சம் வேதியியற் குறியீடுகள் கொண்ட மொழிக்கு மொழிபெயர்த்தனர் கிரேக் வென்டர் குழுவினர். பின்னர் அந்த வேதியியற் குறியீடுகளின் அடிப்படையில் வேதிப் பொருட்களை ஒன்றிணைத்து செயற்கையான மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) உருவாக்கினர். பின்னர் மைகோபிளாஸ்மா காப்ரிகோலம் என்ற பாக்டிரியாவிலிருந்து அதன் மரபணுத்தொகுப்பை ‘சுரண்டி’ எடுத்துவிட்டு, எஞ்சியிருந்த கூட்டுக்குள் (செல்) தாங்கள் உருவாக்கிய செயற்கையான மரபணுத் தொகுப்பில் சில மாற்றங்களும் செய்து  உட்செலுத்தினர். இந்தப் புதிய கூட்டிற்குள் குடியேற்றப்பட்ட மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டீரியாவின் வேதியியற் பொருட்கள் கூட்டில் பொருந்தி, ஒரு புதிய உயிராக இயங்கத்தொடங்கின.

செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்;  அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத்தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்.

உடல் வேறு, உயிர் வேறு என்று கருதுகின்ற புராணங்களில் கூறப்படும் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்ற புனைகதையை, நடைமுறையில் சாதித்துக் காட்டியிருக்கிறது இன்றைய அறிவியல். ராமசாமியின் உடலுக்குள் கோயிந்சாமியை நுழைத்து, இனி கோயிந்சாமியாகவே நடந்து கொள்ளவேண்டும் என்று ராமசாமியின் உடலுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதனை எளிமைப்படுத்திக் கூறலாம். ஆனால் செல் (உடல்) என்பது வெறும் கூடு அல்ல, மரபணு (டி.என்.ஏ) என்பதே உயிரும் அல்ல. இவற்றின் இயங்கியல் ரீதியான சேர்க்கையும், அவ்வாறு சேர்ந்திருத்தலின் பாங்குமே உயிர்.

தனக்கு வேண்டிய ஆற்றலை இயற்கையிலிருந்து தானே கிரகித்துக் கொள்வதையும், தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொள்வதையும் உயிரின் இலக்கணமாகக் கூறுகிறது அறிவியல். தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொண்டு பல்கிப் பெருகியதன் மூலம் இந்த இலக்கண வரையறையையும் நிறைவு செய்திருக்கிறது சிந்தடிகா.

குரோமோசோம் என்பது மரபணுக்களால் அனது; மரபணுக்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களால் ஆனவை; டி.என்.ஏ, ஆர்.என்.ஏ க்கள் பரதத்தினாலும், புரதங்கள் அமினோ ஆசிட்டுகளாலும் ஆனவை. அமினோ ஆசிட்டுகள் வேதிப் பொருட்களால் ஆனவை என்பது ஏற்கெனவே அறியப்பட்ட அறிவியல் உண்மை. கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், இயற்கை தன் போக்கில் உருவாக்கியவை அல்லது இறைவனால் படைக்கப்பட்டவை என்று நம்பப்படும் பல்லாயிரம் கோடி உயிரினங்களுக்கு அப்பால், மனிதன் தன் சொந்தக் கையால் உருவாக்கி, “இது நான் உருவாக்கியது” என்று அந்த உயிரிலேயே கையெழுத்தும் இட்டு வைத்திருக்கும் ஒரு புதிய உயிரினம் இது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற வகையிலான ‘போலச்செய்தலில்’ தொடங்கிய மனிதன், பறவையைக் கண்டான் பறவையைப் படைத்தான் என்பதை நோக்கியும், இதுவரை இல்லாதொரு புதிய பறவையையும் படைப்பான் என்பதை நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் அடி.

இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பமும், அவற்றின் கணக்கிடும் வேகமும் பன்மடங்கு வளர்ந்திருப்பதனால்தான், பல இலட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இயற்கை உருவாக்கியிருக்கும் இந்த நுண்ணுயிரின் கட்டமைப்பை, ஒரு பத்து ஆண்டுகளில் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

உயிரைச் செய்றகையாக உருவாக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. ஒரேகானில் உள்ள  ரீட் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியரும், முற்றிலும் இரசாயனப் பொருட்களிலிருந்தே செயற்கை உயிரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் புரோட்டோ லைஃப் என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் பெடோ, “கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். உயிர் என்பது மிகவும் வலிமையானது. நாம் நினைப்பதைச் செய்யும்படி ஒரு உயிரைப் படைக்கமுடியுமானால், எல்லாவிதமான நல்ல காரியங்களையசும் செய்யலாம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பட்சத்தில் ‘கடவுளின் வேலையை’ நாம் மேற்கொள்வதில் தவறில்லை” என்கிறார்.

கிரேக் வென்டரின் ஆய்வுக்கூடம், வேதிப்பொருட்களைக் கொண்டு தாங்கள் செயற்கையாக உருவாக்கிய மரபணுத்தொகுப்பினைக் குடியேற்ற, ஏற்கெனவே உள்ள இன்னொரு பாக்டீரியாவின் கூட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். மார்க் பெடோவின் ஆய்வுக் குழுவோ, மரபணுக்களைக் குடியேற்றும் கூடுகளை செயற்கையான முறையில் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களிலிருந்தே உயிரை உருவாக்குவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

000

விஞ்ஞானி கிரெய்க் வென்டர்

2500 ஆண்டுகளுக்கு முன்னால் கடவுள் கோட்பாட்டை முன்வைத்த பார்ப்பனிய தத்துவஞான மரபினர், உலகாயதவாதிகளை (பொருள்முதல்வாதிகளை) பார்த்து, “ஜடப்பொருளிலிருந்து, அந்த ஜடப்பொருட்களின் குணங்களைப் பெற்றிராத புதிய குணங்ளைக் கொண்ட  உயிர்ப்பொருள் என்பது எவ்வாறு உருவாக முடியும்?” கேள்வி எழுப்பினர். “ஜடப்பொருளான அரிசி புளிக்க வைக்கப்படும்போது போதை எனும் புதிய குணம் கொண்ட மதுவாக மாறுவதைப் போல பஞ்சபூதங்களின் சேர்க்கையில்தான் உயிர் உருவாகிறது” என்று அன்றிருந்த அறிவின் வளர்ச்சிக்கு ஒப்ப கருத்துமுதல்வாதிகளுக்குப் பதிலடி கொடுத்தனர் பொருள்முதல்வாதிகளாகிய சாருவாகர்கள்.

25 நூற்றாண்டுகளில் அறிவியல் வெகுதூரம் வளர்ந்து விட்டது. எனினும் இன்றும் கூட பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டு, நேரம் தவறாமல் மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கும் பாதிரிகளும், முல்லாக்களும், சங்கராச்சாரிகளும்  படுக்கையை விட்டு எழுந்திருக்காத நிலையிலும் கூட, “என்னதான் இருந்தாலும் மனிதனால் ஒரு எறும்பைப் படைக்க முடியுமா? இறைவன் பெரியவன்” என்று கூறி போலித் தன்னடகத்துடன் ஏளனப் புன்னகை சிந்துகிறார்கள்.

எனினும், செயற்கை உயிரியல் (synthetic biology) என்றொரு ஆய்வுத்துறையே உருவாகிவிட்ட இன்றைய நிலையிலும் சிந்தடிகா உருவாக்கப்பட்ட பிறகும்,  விஞ்ஞானிகள் யாரும் ஆணவம் கொண்டு திரியவில்லை. புதியதைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான் பழையதை ஆய்வு செய்வதும் கற்றுக்கொள்வதும் அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் செயற்கை உயிரைப் படைக்க முனைந்திருக்கும் விஞ்ஞானிகள்தான் இயற்கை படைத்திருக்கும் உயிர்களை ஆய்வு செய்வதிலும் அளப்பரிய ஆர்வம் காட்டுகிறார்கள். 400 கோடி ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம வளர்ச்சியின் போக்கில் இயற்கை படைத்திருக்கும் உயிர்களையும், நுண்ணுயிர் செல்களையும் அவை பெற்றிருக்கும் ஆற்றலையும் வியப்புடன் விவரிக்கிறார்கள்.

“நம் விரலை உள்ளே விட்டால் அந்தக் கணமே தசையும், நகமும், எலும்பும் கரைந்து காணாமல் போய்விடும் அளவிற்கான திராவகங்களிலும் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிர்கள், மனிதர்களைக் கொல்வதற்குத் தேவைப்படுகின்ற அணுக்கதிர் வீச்சைக் காட்டிலும் 1500 மடங்கு அதிகமான கதிர்வீச்சினால் தாக்கிச் சிதறடிக்கப்பட்ட பின்னரும், தன்னைத்தானே தைத்துக் கொண்டு உடனே தன்னை மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் ஆற்றல் பெற்ற நுண்ணுயிர்கள், மனிதனும் விலங்குகளும் உறைந்தோ, உருகியோ, சிதறியோ, மூச்சுத் திணறியோ அழிந்து விடக்கூடிய  சூழல்களில் சர்வ சாதாரணமாக உயிர்வாழும் நுண்ணுயிர்கள் இயற்கையில் இருக்கின்றன. இயற்கையின் பல்லுயிர்ச் சூழல் குறித்து இதுவரை நாம் அறிந்திருப்பது ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை. நாம் படைக்கவிருக்கும் செயற்கை உயிரிகள் என்னவிதமான பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் பெற்ற கோடிக்கணக்கான உயிரிகள் இயற்கையில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

“இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை… இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலைவாழ்கிறோம்.. இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது” என்றார் எங்கெல்ஸ்.

மதவாத அறிவிலிகளின் போலித் தன்னடக்கத்திற்கும் அறிவியலாளர்களின் தன்னடக்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். “தன்னுடைய படைப்பைப் புரிந்து கொள்ளுவதற்கும், அதனை சிறப்பாக கையாள்வதற்குமான பரிசாக தேவன் மனிதனுக்கு அறிவை வழங்கியிருக்கிறான் என்பதற்கு இது (சிந்தடிகா) இன்னொரு நிரூபணம்” என்று மிகவும் அற்பத்தனமான முறையில் கடவுளை முட்டுக் கொடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார் இத்தாலிய கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் அஞ்சலோ பாக்னசோ.

“தன்னைக் கடவுளாகக் கருதிக் கொள்வதும் கடவுளுக்கே உரிய படைப்பாற்றலை ஏந்திச் சுழற்றுவதும் மனிதனை காட்டுமிராண்டித்தனத்தில் தள்ளிவிடும். படைப்பவன் ஒருவன் மட்டுமே – அவன்தான் இறைவன் என்பதை விஞ்ஞானிகள் ஒருக்காலும் மறந்து விடக்கூடாது” என்றார் மோகேவெரோ என்றொரு பாதிரி. காட்டுமிராண்டித் தனத்தைப் பற்றிப் பேசும் யோக்கியதை கத்தோலிக்கத் திருச்சபைக்கு உண்டா என்பது ஒருபுறம் இருக்க, சிந்தடிகா குறித்த செய்தி வெள்வந்தவுடனே, ‘அழித்தல்’ தொழிலில் ஈடுபட்ட சங்கராச்சாரியும் கூட ‘ஆக்கல்’ தொழிலை பிரம்மனிடமிருந்து மனிதன் அபகரித்துக் கொண்டிருப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டிருக்கிறார்.

செயற்கை உயிரின் ஆக்கத்தின் மூலம், கடவுள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை அறிவியல் மேலும் அடைத்து விட்டது. எனினும், கடவுள் கல்லறைக்குச் செல்ல மறுக்கிறார். காரணம், எந்த முதலாளித்துவம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மூலதனமிடுகிறதோ, அதே முதலாளித்துவம் அறிவியலை தனது இலாப நோக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துவதன் மூலம், கடவுள் இன்னமும் உயிரோடிருக்க துணை செய்கிறது.

தனது கொள்ளை இலாப நோக்கத்துக்காக இயற்கை முதல் மனிதர்கள் வரையில் எதையும், யாரையும் அழிக்கத் தயங்காத முதலாளி வர்க்கம் அறிவியலின் துணை கொண்டு நடத்தியிருக்கும் அழிவு வேலைகளைக் காட்டி, படைப்புப் பணியை கடவுளிடமிருந்து மனிதன் பறித்துக் கொண்டால் நேரக்கூடிய விபரீதங்களைக் காட்டி நம்மை மிரட்டுகிறார்கள் மதவாதிகள். திருச்சபை கூறுவது போல அறிவியல் மனிதனிடம் சிக்கியிருக்கவில்லை. தம்மளவில் மனிதத்தன்மையை அகற்றியவர்களும், மனிதகுலத்திடமிருந்தும் அதனை அகற்ற விரும்புகிறவர்களுமான உலக முதலாளி வர்க்கத்திடம் சிக்கியிருக்கிறது அறிவியல்.

அணு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், மரபணு மாற்ற விதைகள், புவி சூடேறுதல் மற்றும் இயற்கைப் பேரழிவுகளைத் தோற்றுவித்துள்ள உலக முதலாளி வர்க்கம், அறிவியலால் அகற்றப்பட்ட கடவுளை மீண்டும் அரியணையில் அமர்த்துகின்றது. மதவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிறது.  இதன் விளைவாக, அறிவியலின் சாதனைகள் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தருவதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றன. சிந்தடிகா – இதற்கு விலக்கல்ல.

000

புதிய நுண்ணுயிரை வடிவமைத்து உருவாக்குவதைச் சாத்தியமாக்கியிருக்கும் இந்த முன்னேற்றத்தின் பயனாக, தொற்று நோய்கள் மற்றும் ஆட்கொல்லி நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற அழிக்க முடியாத கழிவுகளைக்கூட தின்று செரிக்கும் திறன் கொண்ட நுண்ணுயிர்கள், கரியமிலவாயுவை உறிஞ்சும் நுண்ணுயிர்கள், உயிரி எரிபொருளை (பயோ ஃப்யூவல்) உருவாக்கித்தரும் நுண்ணுயிர்கள் போன்ற பலவற்றையும் உருவாக்கலாம்.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், வெவ்வேறு விதமான பணிகளைச் செய்யக் கூடிய சுமார் 2000 உயிரி உறுப்புகளின் டி.என்.ஏ குறியீடுகளைத் (BioBrick parts)  பட்டியலிட்டுத் தொகுத்து வைத்திருக்கிறது. போல்ட், நட்டுகள், சக்கரங்கள், புல்லிகள், கியர்களை இணைத்து ஒரு எந்திரத்தை உருவாக்குவதைப் போல, இந்த உயிரி உறுப்புகளை வேண்டியவாறு இணைத்து ஒரு உயிரி எந்திரத்தை உருவாக்குவதென்பதே அங்கு நடைபெறும் ஆய்வின் நோக்கம்.  சிலிக்கான் தொழில் நுட்பத்துக்கு மாற்றாக, நுண்ணுயிர்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

உயிரித் தொழில்நுட்பம் வழங்கும் நேர்மறைப் பயன்கள் கற்பனைக்கெட்டாதவை. எனினும், இந்த அறிவியலும் தொழில்நுட்பமும் யாருடைய ஏகபோகத்தின் கீழ் இருக்கின்றன என்பதுதான் அறிவியல் வளர்ச்சி செல்லும் திசையையும் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான சாத்தியத்தையும் தீர்மானிக்கின்றன. பெரும் பொருட்செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அமெரிக்க இராணுவத்தின் ஆராய்ச்சித் துறைகளோதான் கட்டுப்படுத்துகின்றன. உலகச் சந்தையின் மீது வர்த்தக ரீதியான ஏகபோக ஆதிக்கம் அல்லது இராணுவ மேலாதிக்கம் என்பவையே பெரும்பாலான ஆய்வுகளின் நோக்கத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்.

தற்போது சிந்தடிகாவை உருவாக்கியிருக்கும் கிரேக் வென்டரின் தனியார் ஆய்வு நிறுவனம், எக்சான் மொபில் என்ற அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சூழலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி அதனை ஹைட்ரோ கார்பன்களாக மாற்றவல்ல கடற்பாசிகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின்படி நடைபெறும் ஆய்வு. எண்ணெய் வளங்கள் வற்றி வரும் சூழலில், கரும்பு, சோளம், ஜட்ரோபா போன்றவற்றிலிருந்தெல்லாம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஹைட்ரோ கார்பனிலிருந்து பெட்ரோலும் டீசலும் தயாரித்து எண்ணெய் விற்பனையில் உலக ஏகபோகத்தை அடைவதே எக்சான் மொபில் நிறுவனத்தின் நோக்கம்.

அதே போல, நுண்ணுயிர்களின் மரபணுக்களை செயற்கையாக திருத்தி அமைத்து, அவற்றிலிருந்து ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆய்விலும் நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு மருந்துக் கம்பெனியுடன் இணைந்து கிரேக் வென்டரின் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இரத்தப் புற்றுநோய்க்கான மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய நிறுவனங்களை, காப்புரிமையைக் காட்டி தடுத்து நிறுத்தி, அம்மருந்துகளின் விலையை நூறு மடங்கிற்கு மேல் விலை உயர்த்தி விற்று வரும் நிறுவனம்தான் நோவார்ட்டிஸ்.

எக்சான் மொபில் நிறுவனமோ, புஷ் கும்பலுக்கு மிகவும் நெருக்கமானது; இராக் ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் இருந்தது. இத்தகைய நிறுவனங்கள் மேற்கூறிய கண்டுபிடிப்புகளை எப்படிப் பயன்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.

மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி, உணவு தானிய வணிகத்தில் உலக ஏகபோகத்தை நிறுவிக் கொள்ளத் துடிக்கும் மான்சான்டோ முதலான பன்னாட்டு உணவுக் கழகங்களும் (Agri business corporations)  உயிரி தொழில்நுட்ப ஆய்வுகளில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. இந்தியா முதலிய நாடுகளில் அரசுகள், ஆய்வுக் கூடங்கள்,  பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ளின் துணையுடன் தமது ஆய்வுகளின் சோதனைக் களமாக ஏழைநாடுகளின் விவசாயத்தை மாற்றுகின்றன. மான்சான்டோவின் பி.டி விதைகள் இந்திய விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் ஏவியிருக்கும் அழிவு நம் கண் முன் தெரிகின்ற சான்று.
ஆனால் இந்த அழிவைக்கூட “சொல்லி அழக்கூடாது, சொல்லாமல்தான் அழவேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக அறிவியல் ஆதாரம் இல்லாமல் பேசுவது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம்” என்று கூறும் சட்டமுன்வரைவை நிறைவேற்றுவதற்காக தயார் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு.

செயற்கை கடற்பாசி இயற்கையான உயிர்ச்சூழலுக்குள் ஏவப்பட்டால் ஏற்படும் விளைவுகள் – பின் விளைவுகள் என்ன, அவை ஏவப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்பதைக் கூட எப்படித் தெரிந்து கொள்வது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண பெரும் ஆராய்ச்சி தேவையில்லை. யூனியன் கார்பைடு நடத்திய போபால் படுகொலையும் தற்போது அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடாவின் கடற்பரப்பு முழுவதும் பரவி கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் கொன்று கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெயும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும் உண்மைகள். செயற்கை உயிரிகளால் ஏற்படும் ஆபத்துகளை இவ்வாறு பளிச்சென்று நிரூபிக்கக் கூட முடியாது என்பதால், இத்தகைய ஆய்வுகளையே தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர் சூழலியலாளர்கள்.

விபத்துகள் மட்டுமல்ல. நுண்ணுயிர்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாத பேரழிவு ஆயுதங்களாகவும் ஏவ முடியும்.  இராக்கில் குறைந்த கதிர் வீச்சு கொண்ட அணு ஆயுதங்களையும், வியத்நாமிலும் கொரியாவிலம் ரசாயன ஆயுதங்களையும், இராக்கில் விசவாயுக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கும் அமெரிக்கா உயிரி ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடும். அவ்வகையில் இக்கண்டுபிடிப்புகள் அனைத்தையுமே அழிவு வேலையின் ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தும்.

இப்பிரச்சினைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியையும், உலகமயமாக்கலையும் தொடர்ந்து உலக நாடுகளின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடைமை (TRIPS), புதிய கண்டுபிடிப்புகளின் மீது மட்டுமின்றி, தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் மரபணுக்கள் மீதும் கூட காப்புரிமை கோரும் அதிகாரத்தை உலக முதலாளித்துவத்திற்கு வழங்கியிருக்கிறது. வேம்பு மீது அமெரிக்க நிறுவனம் காப்புரிமை பெற்றதும், அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளும் நாம் அறிந்ததுதான். தாவரங்களை மட்டுமல்ல, மனிதனின் மரபணுக்களுக்கும் கூட காப்புரிமை பெற்று, அவற்றைத் தனிச்சொத்துடைமையாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது உலக முதலாளித்துவம்.

புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்

புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிராட் (39) என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. கருப்பையிலும் தனக்குப் புற்றுநோய் வர அபாயம் உள்ளதா என்பதை மரபணுச் சோதனை மூலம் தெரிந்து கொள்ள எண்ணிய அந்தப் பெண், மிரியாட் என்ற சோதனைக் கூடத்தை அணுகினார். புற்றுநோயை உருவாக்கும் மரபணு அந்தப் பெண்ணின் உடலில் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. வேறோரு சோதனைக்கூடத்தில் மீண்டும் மரபணுச் சோதனை செய்து பார்த்து இதனை உறுதி செய்து கொள்ள கிராட் விரும்பினார். ஆனால் மரபு வழியில் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் இரு மரபணுக்களை முதன்முதலாகக் கண்டுபிடித்த மிரியாட் சோதனைக்கூடம், அவ்விரு மரபணுக்களுக்கு அறிவு சார் சொத்துடைமையை பதிவு செய்து வைத்திருந்தது. மிரியாட்டில் இந்த சோதனைக்கான கட்டணம் 1.5 இலட்சம் ரூபாய். இதைவிட மிக மலிவான கட்டணத்தில் இச்சோதனையைச் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும், அமெரிக்காவின் வேறெந்த சோதனைக்கூடத்திலும் இந்தச் சோதனையைச் செய்வதற்குத் மிரியாட் தடை பெற்றிருந்தது.

கிராட்டின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமெரிக்க சிவில் உரிமை யூனியன் “உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலையிலும் கூட மனிதனின் மரபணுக்கள் எனப்படுபவை இயற்கையின் அங்கங்களே. இவை புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல” என்று வாதிட்டன. மார்ச் 2010 இல் அமெரிக்காவின் ஒரு மாவட்ட நீதிமன்றம் கிராட் நிறுவனத்தின் இந்தக் காப்புரிமையை ரத்து செய்திருக்கிறது.

மிரியாட் போன்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும் சுமார் 40,000 மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பெற்று வைத்திருக்கின்றன. இந்த தீர்ப்பை ரத்து செய்தால் மட்டுமே தங்களது ஆராய்ச்சியின் ‘பயனை’ ‘அறுவடை’ செய்ய இயலும் என்பதால் இத்தொழில் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பை முறியடிக்க முயலும் என்பதில் ஐயமில்லை. சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறும் முயற்சி, மேற்கூறிய வழக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக உதவும் என்றும் சில விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

மனித மரபணுத் தொகுப்பு தொடர்பான ஆய்வில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானியும், மனித மரபணுவின் மீது காப்புரிமை பெறும் முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவருமான மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் சல்ஸ்டன் காழ்க்கண்டவாறு எச்சிரித்திருக்கிறார்: “சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறுவதற்காக கிரேக் வென்டர் கொடுத்துள்ள விண்ணப்பம், சிந்தடிகாவுக்கு மட்டும் காப்புரிமை கோரவில்லை. உயிரி தொழில்நுட்பம் தொடர்பான பல வகையான ஆய்வு முறைகளுக்கும் சேர்த்து காப்புரிமை கோருகிறது. இது நிராகரிக்கப்படவில்லையென்றால், உலகெங்கும் நடைபெறும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி முழுவதுமே கிரேக் வென்டர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியே மொத்தமாக முடக்கப்பட்டுவிடும்”

சிந்தடிகாவை உருவாக்கிய கிரேக் வென்டர் எனும் விஞ்ஞானியே உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் எதிரியாக மாறி நிற்பதை இப்போது காண்கின்றோம்.
இப்போது அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டு நிறுத்துவது ஆண்டவனல்ல, அறிவு சார் சொத்துடைமை என்ற உலக முதலாளித்துவத்தின் கோட்பாடு. அறிவியலை அடக்கி ஆள்வது திருச்சபை அல்ல, முதலாளித்துவ உடைமை உறவை நிலைநாட்டுகின்ற ஏகாதிபத்தியம் அல்லது உலக வர்த்தகக் கழகம்.

உயிரின் வேதியல் மூலத்தை க் கண்டறிந்து, அதனை மாற்றியமைத்து, இதுவரை இல்லாத புதியதொரு உயிரை உருவாக்கவும் தலைப்பட்டுவிட்டது இயற்கை விஞ்ஞானம். உடைமை உறவின் சமூகப் பொருளாதார மூலத்தை மார்க்சியம் கண்டறிந்து சொல்லிய பின்னரும், அதனைப் புரிந்து கொள்ள இயலாத அறியாமையில் சமூகத்தை அமிழ்த்தியிருக்கும் ஏகாதிபத்தியம், உற்பத்தி சாதனங்களை மட்டுமன்றி உயிரணுவையும் தனிச்சொத்துடைமையாக்கும் திசையில் சமூகத்தை இழுத்துச் செல்கிறது.

இயற்கையின் 400 கோடி ஆண்டுக்கால ‘வரலாறு’, பொருள்முதல்வாத நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.
மனிதனின் சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும் புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது – புரட்சி.  இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிபு.

____________________________________________

– மருதையன்,

நன்றி: புதிய கலாச்சாரம், ஜூலை – 2010

____________________________________________

தொடர்புடைய பதிவுகள்

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

ஐஐடி மாணவர்களின் தொடர் தற்கொலைகள்

உயர்கல்வி தனியார்மயமாக்கலின் விளைவும், கடோட்கர் குழு அறிக்கையும் !

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார் மயத்தின் கோரமுகம்!!தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களில் ஐஐடிக்களில், குறிப்பாக பார்ப்பன மேலாண்மை தலைவிரித்தாடும் ஐஐடி கான்பூரிலும் சென்னையிலும் நடக்கும் மாணவர் தற்கொலைகள், செய்தி ஊடகங்களையும், பொதுமக்களையும், ஏன் விட்டேத்தியான இந்த அரசையும் கூட மாணவர் தற்கொலைக்கான காரணங்களை நோக்கி சற்று தலை திருப்ப வைத்துள்ளது. 2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதும், அதன்பின் இதுகுறித்து நடந்த போராட்டங்களும், விவாதங்களும் அனைத்து முதலாளித்துவ ஊடகங்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இரண்டாமாண்டின் இறுதியில் முடிக்கப்படவேண்டிய பிராஜெக்ட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த தற்கொலைக்கு காரணமாக ஊடகங்களால் பேசப்பட்டது.  கடந்த ஒருவருடத்தில் இதே காரணத்தால் 2010 மே மாதம் சந்தீபும், 2011 பிப்ரவரியில் அனூப் வலப்பாரியாவும் தற்கொலை செய்தபோதும், நிதின் குமாரின் தற்கொலைக்கு மட்டும் இவ்வளவு ஊடகக் கவனஈர்ப்பு கிடைத்தது யதேச்சையாக நடந்துவிடவில்லை. ஏழை மாணவனான சந்தீபின் தற்கொலையை  காவல்துறையின் உதவியுடன் ஒரு பத்தி செய்தியாக மறைத்தது போல், DRDO இயக்குனரின் மகனான நிதினின் தற்கொலையை மூடிமறைக்க ஐஐடி நிர்வாகத்தால் முடியவில்லை.

2008-ல் சிஃபி வெளியிட்ட செய்தியில் 2005-2008 ஆம் ஆண்டிற்குள் ‘கல்விசார் நிர்பந்தத்தால்’ ஐஐடி கான்பூரில் மட்டுமே ஏழு தற்கொலைகள் நடந்ததாகக் கூறுகிறது.  2008-ல்  நடந்த ரித்திகா தோய சாட்டர்ஜி என்ற எம்டெக் மாணவியின் தற்கொலையின் போதே ஐஐடி நிர்வாகத்தின் ரகசியத் தன்மை வாய்ந்த மாணவர் தர மதிப்பீட்டு முறை (grading system) மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பின் (grievance forum) கேவலமான நிலை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.

கல்விசார் நிர்பந்தங்களினால் நடக்கும் தற்கொலைகளுக்கு இணையாக ஐஐடிக்களில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறையாலும் ஏழை தலித் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.  பிப்ரவரி 2011-ல் நடந்த ஐஐடி ரூர்க்கி மாணவன் மனீஷ் குமாரின் தற்கொலை இதற்கு மிக சமீபத்திய உதாரணம். ஐஐடி நிர்வாகம் மாணவர்களின் உணர்ச்சிவயப்படும் தன்மையும் மன அழுத்தமுமே தற்கொலைக்கான காரணமாகக் கூறுகிறது.  ஐஐடி சென்னையின் மாணவர்களுக்கான நிர்வாக முதல்வர் (Dean of Students) கோவர்த்தன், தற்கொலை செய்த நிதினைப்பற்றிக் கூறும்போது, அவர் பள்ளிப்பருவத்திலிருந்தே மன அழுத்ததால் பாதிக்கப்பட்டவர் என சேறடித்தார்.

இதற்கு முன்னும் 2010-ல் ஐஐடி கான்பூரில் ஸ்நேஹல் என்ற பிடெக் மாணவி தற்கொலை முயற்சி செய்ததற்கு அம்மாணவியின் மனநிலையை காரணங்காட்டினார் அதன் பதிவாளர் கஷேல்கர்.  டெக்கான் குரோனிக்கிளில் வந்த நிதின் குமாரின் தற்கொலை செய்திக்கு பின்னூட்டமிட்டிருந்த நிதின் குப்தா என்பவன் இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், ஒரு நடைபாதைப் பயணி மேல்  கார் ஏற்றிச் சென்றால் அதெப்படி டிரைவரின் குற்றமாகாதோ அது போலவே நிதின் குமாரின் தற்கொலைக்கும் ஐஐடி நிர்வாகம் பொறுப்பல்ல என்கிறான். இதற்கு டார்வினின் “தக்கன பிழைத்து வாழ்தலை” (survival of the fittest) உதாரணம் காட்டுகிறான்.

இன்னொரு பக்கம் ஐஐடி நிர்வாகமோ மாணவர்களை குஷிப்படுத்தி தற்கொலை எண்ணத்தைப் போக்க ஒரு தலைமை மகிழ்ச்சி அதிகாரியை (Chief Happiness Officer!?!?!?) முழுநேரமாக நியமித்துள்ளது. இச்சூழலில், கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் ஐஐடிகளில் நடந்த மொத்த மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை 15-ஐத் தாண்டும் போது, இதன் பின்னணியை தனிநபர் பிரச்சினையாகவன்றி சமூகப்பொருளாதார நோக்கில் ஆராய வேண்டியுள்ளது.

தற்கொலைக்கு தூண்டும் சமூகப் பொருளாதாரக் காரணிகள்

காட்ஸ் (GATT) மற்றும் டப்ளியூடிஓ (WTO)-ன் பரிந்துரைப்படி, உயர்கல்வியை பண்டமயமாக்கும் முகமாகவும் உலகசந்தையின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்யவும், இந்திய அரசு உயர்கல்வியில் உட்கட்டுமான சீர்த்திருத்தங்களை கொண்டுவருகிறது. இச்சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தி சோதனை செய்வதன் முதற்கட்டமாக,   ஐஐடிக்களை அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) கல்வி நிறுவன மாதிரிகளாகவும் அதேநேரம் NIT, ISER, பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் வட்டார அளவில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாகவும் ஆக்கும் பொருட்டு, கடந்த பத்தாண்டுகளில் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழியங்கும் 15 ஐஐடிகளிலும், நிதிசார்  (financial autonomy) தன்னாட்சியை பகுதியளவிலும், கல்விசார் தன்னாட்சியை (academic autonomy) முழுவதுமாகவும் அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

நிதிசார் தன்னாட்சியென்பது மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்தல், மாணவர்களுக்கான விடுதி, உணவகங்கள் மற்றும் அங்காடிகளின் நிர்வாகம், உட்கட்டுமானம், பிற நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்ளும் நன்கொடை போன்றவற்றில் அரசின் தலையீடின்றி நிர்வாகக் குழுமத்தின் (Board of governance) நேரடியாட்சிக்குட்பட்டிருப்பது போன்றவற்றைக் கூறலாம்.  ஆனால் ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் காப்பீடு, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, உட்கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீடு, நிறுவன உபரிநிதியை முதலீடு செய்வது போன்றவற்றில் மைய அரசின் பங்களிப்பு மற்றும் தலையீடு, முதன்மை தணிக்கை ஆய்வாளரின் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவன வரவுசெலவுகள் போன்றவை நிதிசார் ஆட்சியின் ஒருபகுதியை இன்னும் மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

கல்விசார் தன்னாட்சியென்பது, பாடத் திட்டங்களை வடிவமைப்பது, புதிய பாடப்பிரிவுகளை அறிகமுகப்படுத்துவது, மாணவர் சேர்க்கைக்கான தகுதிகளை நிர்ணயிப்பது, ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்விற்கான தகுதிகளை தீர்மானிப்பது போன்றவற்றில் அரசின் தலையீட்டை முழுவதுமாக நீக்கி, முழுக்க முழுக்க நிர்வாகக் குழுமத்தின் நேரடி ஆட்சிக்கு ஒப்படைப்பதாகும்.  இக்குழுமத்தின் உறுப்பினர்களாக இருந்து ஆட்சிசெய்வது, கல்வியாளர்களான ஐஐடிக்களின் மூத்த பேராசிரியர்களே.  இந்த தன்னாட்சி அமைப்பு கல்விசார் புலத்தில் பேராசிரியர்களுக்கு வரைமுறையற்ற அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இதனால் ஒரு மாணவனின் எதிர்காலம் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் ஆய்வு வழிகாட்டியாக (project guide) இருக்கும் குறிப்பிட்ட பேராசிரியரை மட்டுமே சார்ந்துள்ளது.  அதுபோல ஐஐடிக்களை பொறுத்தவரை பாடத்திட்டம் பற்றிய மையப்படுத்தப்பட்ட விதிமுறைகளில்லை.  உதாரணமாக பல துறைகளிலும் கடைசி செமஸ்டரில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேட்டையும் (thesis) வாய்மொழித்தேர்வையும் (viva voce) பொறுத்தே மாணவனுக்கு கிரேடு (grade) வழங்கப்படுகிறது. ஆனால் ஒருசில துறைகளில் ஒரு எம்டெக் மாணவன் ஆய்வு முடிவுகளை ஏதாவது ஆய்விதழில் (journal) வெளியிட்டாலன்றி  அம்மாணவனுக்கு வாய்மொழித்தேர்வு நடத்தமாட்டார்கள். வாய்மொழித்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே எஸ் (S) அல்லது ஏ (A) கிரேடு வழங்கப்படும். மற்ற மாணவர்களுக்கு பி (B), சி (C) கிரேடுகள் வழங்கப்பட்டு பட்டமளிக்கப்படும்.

ஒரு மாணவன் எடுக்கும் உயர்ந்த கிரேடைப் பொறுத்தே கார்ப்பரேட் நிறுவனங்கள் அவனுக்கு வேலை வாய்ப்பளிக்கின்றது.  இந்த மாதிரி துறை சார்ந்த மையப்படுத்தப்படாத விதிமுறைகளினால், ஒரு மாணவனை குறிப்பிட்ட ஆய்வுவழிகாட்டி அறிவு சுரண்டல் செய்யும் போது அதை புரிந்து கொள்வதற்கோ, புரிந்தாலும் அச்சுரண்டலை எதிர்த்து அம்மாணவன் கேள்வி கேட்கவோ முடியாத சூழலே இங்கு நிலவுகிறது.  இதையெல்லாம் தாண்டி ஒரு மாணவன் தனது பாடம் சார்ந்த காரணங்களுக்காகவோ அன்றி மாணவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் விடுதி அல்லது நிறுவனம் சார்ந்த பிரச்சனைகளுக்காகவோ நிர்வாகத்திடம் முறையீடு செய்தால் அவனது ஆய்வுவழிகாட்டியாலே மிரட்டப்படுவான்.  இது அவனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் கிரேடில் கைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இன்னும் பார்ப்பனர்களின் கோட்டையாக உள்ள நிலையில், ஆசிரியர் நியமனத்தில் நிகழும் பார்ப்பன மேலாண்மை காரணமாக, மெரிட்டிலோ, இடஒதுக்கீட்டிலோ படிக்க வரும் பார்ப்பனரல்லாத மாணவனின் கிரேடைத் தீர்மானிப்பதில் அவனது சாதியும் முக்கிய பங்களிக்கிறது. (டாக்டர் உதய் சந்த் என்பவர் மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலடிப்படையில் உயர்கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் மைய அரசால் எஸ்டி எஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ள 22.5% இடஒதுக்கீட்டில் இதுநாள்வரை வெறும் 5.03% மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக மானியக்குழு வலியுறுத்தும் எஸ்டி எஸ்சிக்கான பிரதிநிதித்துவம் எந்த ஐஐடி நிர்வாகத்திலும் வழங்கப்படவில்லை.) இதனால் ஒரு மாணவன் தான் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக தனது பேராசிரியர்களையோ நிர்வாகத்தையோ அணுகுவது குதிரைக் கொம்பாகிறது.

பொதுவாக ஐஐடியில் நுழைவதே கௌரவமாகவும் அதற்குமேல் வேலைக்கான உத்தரவாதமாகவும் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் பார்க்கப்படுகிறது.  இந்த பொதுப்புத்தி, பட்டப்படிப்பு முடித்ததும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை உத்தரவாதத்தைப் பற்றியும் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை பற்றியும் கனவுகளை மாணவனுக்குள் உருவாக்கிறது. ஐஐடி மாணவர்களில் 80%ற்கும் மேலானோர் வங்கிக்கடனை நம்பி படிக்கும் நடுத்தர வர்க்கத்தினர்.  பட்டப்படிப்பை முடித்ததும் இக்கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்தமும் அம்மாணவனுடைய உடனடி வேலைத் தேவைக்கு காரணமாகிறது. ஒரு மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் தாமதம் ஏற்படும் போதும் அல்லது குறைந்த கிரேடுகளுடன் பட்டம் பெறும்போதும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை பற்றிய அவனது ஆகாயக்கோட்டை தகர்கிறது. வங்கிக்கடனின் சுமைவேறு அழுத்துகிறது.

இந்த கல்விமுறை மாணவனுக்கு சமூகம் சார்ந்த எந்த புரிதலையும் உருவாக்கிக் கொடுக்காமல் இருப்பதும், சமூக யதார்த்தங்களிலிருந்து அன்னியப்பட்ட நடுத்தர வர்க்கப் பின்னணியும், அம்மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்படும் போது அதை தனக்கு மட்டுமே உரிய பிரச்சனையாகப்பார்ப்பதும், அவனது சமூகப்பொருளாதார நிலைமைகளுமே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது.

ஆய்வுமாணவர்களின் பரிதாபநிலை

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார் மயத்தின் கோரமுகம்!!இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் நிலையே இப்படியென்றால் ஆய்வுமாணவர்களின் நிலை மிகப் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.  ஐஐடியில் பொறியியல் துறைகளில் முனைவர் பட்டம் மேற்கொள்ள ஐஐடி நுழைவுத் தேர்வு மற்றும் நேரடித் தேர்விலும், அடிப்படை அறிவியல் துறைகளில் சேர நெட் (NET), கேட் (GATE) போன்ற தேர்வுகளில் தகுதியடைந்திருப்பதுடன் ஐஐடித் தேர்வுகளிலும் வெற்றி பெறவேண்டும்.  இந்தியாவில் உயர்கல்வித் துறையில் இருக்கும் பலஅடுக்கான கல்விமுறையும், மையப்படுத்தப்படாத பாடத் திட்டங்களும் காரணமாக முதுநிலை பட்டம் பெற்ற மாணவன் மேலும் இரண்டு முதல் மூன்று வருடங்கள் தீவிரமாகப் பயிற்சியெடுத்தால் மட்டுமே இத்தேர்வுகளில் தகுதியடைந்து ஐஐடிக்குள் நுழையமுடியும்.

தனது வயதையொத்த நண்பர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் கை நிறைய சம்பாதிக்கும் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பாலுள்ள  அதீத ஈடுபாடும் தன் சுதந்திர சிந்தனைகளுக்கு ஆய்வுலகு ஏற்படுத்திக் கொடுக்கப்போகும் வாய்ப்புகளையும் பற்றியுள்ள ஏராளமான கற்பனைகளினாலே பொதுவாக மாணவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் இந்திய தத்துவ மரபில் காலங்காலமாக ஆதிக்கம் செலுத்திவரும் அதீதக் கருத்துமுதல்வாதத்தின் (இதற்கு மிகச் சிறிய உதாரணமாக நம்ம கணிதமேதை ராமானுஜத்திற்கு கணித சூத்திரங்களெல்லாம் சொந்த புத்தியிலிருந்தன்றி திருவுடைநாயகியம்மாளின் திருவருளால் வந்ததைக் கூறலாம்) தொடர்ச்சியாக பார்ப்பனர்கள் கேள்விக்கே இடமற்ற வகையில் உயர்கல்வியில் முக்கிய இடத்தைக் கைப்பற்றினர்.  காலனிய காலத்திலிருந்து சாதி சமூகமுறையின் அடிப்படையான கருத்துநிலைச் சட்டத்தை உடைத்தெறிவதற்கான விருப்பமில்லாமலேயே அவர்களுடன் முதலாளித்துவம் சமரசம் செய்த காரணத்தால்,  இந்திய அறிவுத்துறையில் இன்று வரை மந்தமும் தேக்கமும் நிலவிவருகிறது.

பி.சி ராய் 1902-ல் எழுதிய ‘இந்து வேதியியலின் வரலாறு’ என்ற நூலில் “இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணி சாதி சமூக முறையின் கோட்டைக் கொத்தளங்களும், அவை தொழில்நுட்ப வல்லுநர், கைவினைஞர் உள்ளிட்ட உடல் உழைப்பாளிகளின் சமூக மதிப்பை மிக மோசமான வகையில் கீழிறக்கியதுமுமே” என்கிறார். இதை நூறு சதவீதம் நிரூபிப்பது போலவே ஐஐடிக்களின் இன்றைய கல்வி மற்றும் ஆய்வுமுறை உள்ளது.

உதாரணமாக ஐஐடி சென்னையைப் பொறுத்தவரை இங்கு நிலவிவரும் ஐயர் – ஐயங்கார் மேலதிக்கத்தின் பிரதிபலிப்பாக, கோட்பாட்டு (theoretical) மற்றும் கணிப்பிய (computational) ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், சோதனைவழி (experimental) மற்றும் தொழிற்நுட்ப (technological)  ஆய்வுகளுக்கு கொடுக்காமல் ‘மூளை உழைப்பை உடல் உழைப்பிலிருந்து பிரித்து’ அதை கேவலப்படுத்தும் போக்கு இருக்கிறது.  ஒரு சில துறைகளில் சோதனை வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சோதனைக்கருவிகளையும், வணிக நோக்கம் மட்டுமே கொண்ட பன்னாட்டு பதிப்பகங்களையும்  மட்டுமே நம்பியுள்ளதால், மாணவர்கள் தங்கள் சொந்த  மூளையை உபயோகித்து ஒரு விளக்குமாறு செய்யும் தொழில் நுட்பத்தைக்கூட உருவாக்க முடியாத ஒட்டுண்ணிச் சூழல் தான் இந்திய தொழில்நுட்பத்துறையில் நிலவுகிறது.

ஆனால் உலகளாவிய ரீதியில் அடிப்படை அறிவியலும் தொழில்நுட்பமும் ஒத்தியங்கும் ஆய்வு முறையே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியக் கூறாக இருக்கும் போது, இந்த சாதிய சமூக அமைப்பின் வெற்றி, இந்திய அறிவியலின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இன்றளவும் இருந்து வருகிறது. இது ஒரு ஆய்வுமாணவனின் அறிவுத் தேடலுக்கான தாகத்தை முளையிலே கிள்ளிவிடுவதோடு, அம்மாணவனது கருத்தை வறளச்செய்து (brain drain) ஆய்வில் எப்போதும் பெருவளர்ச்சியற்றதொரு மந்தநிலையை உருவாக்குகிறது.

சராசரியாக இருபத்தைந்தாவது வயதில் முனைவர் பட்ட ஆய்வில் நுழையும் ஆய்வுமாணவர், தன் வாழ்க்கையின் மிக நல்ல நாட்களான ஐந்திலிருந்து ஏழு வருடங்களை ஆய்வுவழிகாட்டியான பேராசிரியருக்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்து விடுகின்றார். பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக நித்தம் போராடி,  சமூகரீதியான உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி (introvert), குடும்பத்தினரால் ‘சம்பாதிக்கத் துப்பில்லாதவன்’ என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர வருமானமில்லாததால் திருமணம் என்ற கனவே கானல் நீராகி,  எதிர்காலம் பற்றிய எந்த நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும்  உள்ளாகி, செயல் வீரியமிழந்த நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.

இதற்கிடையில் வழிகாட்டிக்கு செய்யும் சேவையில் ஏதேனும் குறையேற்பட்டாலோ  ஆய்வில் பெரிய முன்னேற்றமில்லாமலிருந்தாலோ, ஆய்வின் எந்த கட்டத்தில் வேண்டுமென்றாலும் அம்மாணவரை எவ்வித நட்டஈடுமின்றி, கேட்பாரும் கேள்வியுமற்ற கையறு நிலையில் வெளியேற்ற இவ்வமைப்பு வழிவகை செய்துள்ளது. இந்நிரந்திரமற்ற தன்மை, ஆய்வு மாணவர்களுக்கு தற்கொலையெண்ணத்தைக்கூட உருவாக்குவதில்லை! இப்படி இந்திய உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, பேராசிரியர்கள் சுரண்டுபவர்களாகவும்,மாணவர்கள் அறிவுத்தளத்திலும்பொருளாதாரரீதியாகவும்கலாச்சாரத்தளத்திலும் ஒட்டச்சுரண்டப்படுபவர்களாகவும் எதிரெதிர் திசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஐஐடிக்களின் நிலைமை இப்படியிருக்க, இவ்வமைப்பை அம்பலப்படுத்தி, நிதின் குமார் உட்பட ஐஐடி சென்னையில் நடந்த அனைத்து தற்கொலைகளுக்கும் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டுமென்றும், தற்கொலைகளுக்கு காரணமான டீன் மற்றும் ஆய்வுவழிகாட்டி ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கவேண்டுமென்றும் கோரிக்கைகளுடன் மாணவர்களை ஒருங்கிணைந்து போராட வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.  ஐஐடி மாணவர்கள் ஓரணியில் திரண்டு இதற்கெதிராகப் போராடவில்லையென்றால் தற்கொலைகள் வரும் காலங்களிலும் தொடரத்தான் செய்யும்.

இந்நிலையில் ஐஐடிக்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு அவற்றை தனியார் மயமாக்கப் பரிந்துரைக்கும் கடோட்கர் குழு அறிக்கையை அமுல்படுத்தப்போவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை கடந்த மாதம் அனைத்து செய்திதாள்களிலும் செய்தி வெளியிட்டு, அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்திலும் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ரிலையன்ஸின் கடல்சார் ஆய்வு நிறுவனத்துடன் கூட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை நியாயப்படுத்திப் பேசும் போது, ‘இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் உட்பட எந்த அரசுசார் கல்விநிறுவனங்களும் உலகத்தரம் வாய்ந்ததாக இல்லை. உயர்கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பு ஒன்றே இந்திய உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்தும்’ என்றார்.  இதற்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், ‘கடோட்கர் குழுப் பரிந்துரைகளை அமுல்படுத்தினாலே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த முடியும்’ என்றார்.  உடனே அனைத்து செய்தி நாளேடுகளும் ஐஐடியின் தரத்தைச் சொல்லி மத்திய அமைச்சரவையே இரண்டுபட்டு குடுமிப்பிடி சண்டைபோடுகிறது என்றெல்லாம் பரபரப்பு செய்தி வெளியிட்டது.

ஆனால் மைய அமைச்சரவையும் நாளேடுகளும் அரங்கேற்றிய இந்த நாடகத்தில் மைய இழை ஒன்றுள்ளது. இவர்களின் கூற்றுகளை கூர்ந்து கவனிக்கும் எவருக்கும் அது புரியும். அதாவது, அரசு-தனியார் கூட்டில் மட்டுமே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த முடியும் என்றும் இதற்கு கடோட்கர் குழு பரிந்துரைக்கும் ஐஐடி தனியார்மயமாக்கலே ஒரேவழி என்பதை மக்களை ஏற்க வைப்பதே இந்நாடகத்தின் நோக்கம்.

‘அரசு-தனியார் கூட்டு’ என்ற வண்ணத்தாளில் பொதியப்பட்டுள்ள இந்த நஞ்சின் உண்மையான தன்மை நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக் கிடக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய உயர்கல்வித் துறையை லட்டு மாதிரி அப்படி அலேக்காக தூக்கி கொடுப்பதே!. இதனை முழுமையாக உணர்ந்தும் எந்த ஐஐடி பேராசிரியர்களும் இதற்கெதிராக வாயைத் திறக்காமல் இருப்பதன் ரகசியம் தங்களுக்கும் ‘பிராஜக்ட்’ என்ற பேரில் சில எச்சில் எலும்புகள் வீசப்படும், மாணவர்களின் உழைப்பை   ஒட்டச் சுரண்டி ரிப்போட் எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்ற நப்பாசை தான்.

இன்றைக்கு உயர்கல்வித்துறை தனியார்மயமாக்கலின் முதல் பலிகடாக்களாக மாணவர்கள் இருந்தாலும் அது தன் ஆக்டொபஸ் கரங்களால் பேராசிரியர்களையும் அழுத்தி திணறடிக்கும் காலம் வெகு தூரமில்லை.  இலவசக் கல்வியை அமல்படுத்து, தனியார் கொள்ளையை தடுத்து நிறுத்து, என்ற கோரிக்கையின் கீழ் மாணவர்கள் அணிதிரண்டு போராடாத வரை ஐஐடி மட்டுமல்ல ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் விமோச்சனமில்லை.

ஆனால் சாதாரண அரசு கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வு ஐஐடி போன்ற உயர்கல்வி மாணவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உணரும் வரை, உணர்ந்து போராடாத வரை விடிவில்லை. அந்த விடியலுக்கான விதையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விதைத்துள்ளது. அறுவடைக்கான ஆதரவை மாணவர்கள் தரவேண்டும்.

_______________________________________________________

– ஆலங்கட்டி

முதல் பதிவு: வினவு

முன்பு காந்தி வந்தார் இன்று அன்னா ஹசாரே வந்தார் இந்த மானிடர் திருந்தப் பிறந்தார்! – RSS அம்பி ஜெயமோகனின் புலம்பல்!

டிச 23 தினமணியில் ஜெயமோகன்

‘அண்ணா ஹசாரே – மனசாட்சி பதில் சொல்லட்டும்’ என்ற கட்டுரை’ எழுதி’ உள்ளார்.

அதில்,

அன்னா ஹசாரே, ஒரு வரலாற்று நம்பிக்கை அவர், காந்திய முறையினை கடைப்பிடிப்பவர் அவர், தலித்துகளுக்கு அதிகார பகிர்வு அளித்தவர் அவர் (1987-ல் ராலேகான் சித்திக்கு போய் பார்த்தபோது), எளிமையின் சிகரம் அவர், ஏழை சமூகசேவகர் அவர்….. அவர், அவர், அவர் என நீளும் ஜெயமோகன் புலம்பலில் இடையிடையே குடிப்பவர்களை சவுக்கால் அடிப்பது என்ற முடிவுக்கு மரத்தடி பஞ்சாயத்து சரி என அன்னா முயன்றிருக்கக்கூடும், சரத் பவாரை ஒரு முறைதான் அடித்தார்களா? என கேட்டதற்கு அன்னா ஒரு அரிய சிந்தனையாளர் அல்லாதது காரணமாக இருக்கக்கூடும், ராலேகான் சித்தியில் தேர்தல் நடத்தவேணாம் என அன்னா நினைத்தமைக்கு பெரும்நிர்மாணப்பணிகள்’ ராலேகான் சித்தியில் நடைபெற்றுவருவது காரணமாக இருக்கக்கூடும் ….என அன்னா டவுசர் கிழியப்போவதாக பதறுகிறார்.

அன்னாவை எதிர்க்கும் தரப்பினர் நேர்மையில்லாதவர்கள், காந்தியே இன்று நேரில் வந்தாலும் குறை சொல்பவர்கள் என்றும், இன்னொரு சாராரான எங்களை(ஜெயமோகனை) போன்ற நம்பிக்கைவாதிகளுக்கு அன்னா ’தேவ தூதனாக’ காட்சி தருகிறார் என்கிறார்.

இறுதியில் இந்தியாவின் எதிர்காலமே இனி அன்னா ஹசாரே தான்.  அவரை விமர்சனம் செய்வது என்பது, இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கேள்விகளில் ஒன்று. நம் மனசாட்சியுடன் ’அந்தரங்கமாக’ நம்மால் பேச முடிந்தால்தான், இதற்கான பதிலை நாம் சொல்ல முடியும் என முடித்து உள்ளார்.

ஜெயமோகன் அவர்களே,

ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளித்துவம்தான், மிகப்பெரிய ஊழல்பேர்வழிகளே முதலாளிகள்தான். சட்டப்பூர்வமாகவே இத்தகைய முதலாளிகளுக்கு நாட்டை கொள்ளை அடிக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ’ஊழல் எதிர்ப்பு’ என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு முழு சுதந்திரம் கொடுக்க கிளம்பியுள்ளார் அன்னா ஹசாரே.

இது குறித்த அன்னாவின் மீதான விரிவான விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் மொக்கையாக ஜாக்கி வைத்து அன்னாவை தூக்க கண்டிப்பாக உங்களால் மட்டுமே முடியும்.

ராலேகான் சித்தியில் தலித்துகளுக்கு அதிகார பகிர்வு குறித்து பேசும் நீங்கள் அங்கு தலித்துகளுக்கு நிலப்பகிர்வு குறித்து பேச மறுப்பது ஏன்? நிலம் சொந்தமாக இருக்கும் தலித்துகளுக்கே உங்கள் ராமராஜியத்தில் கயர்லாஞ்சி தான் முடிவாக இருக்கும் போது நிலம் இல்லாத ராலேகான் சித்தி தலித்துகளின் அதிகாரம் என்னவாக இருக்க முடியும்?

2011-ல் ராலேகான் சித்திக்கு எமது தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் சென்று அந்த ‘புரட்சிக்’ கிராமத்தின் புரட்டு உண்மைகள் அம்பலமாக்கிய பின்பும் 87-ல் நான் சென்றேன், வியந்தேன் என சல்லி அடிப்பது ஏனோ?

காந்தியே வந்தாலும் குறை சொல்வார்கள் என இனி எழுதாதீர்கள்.  காந்தி மீண்டும் வந்தால் இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தாமல் விடமாட்டார்கள் பகத்சிங்கின் வாரிசுகள் என்று வேண்டுமானால் எழுதுங்கள்.

இறுதியாக, உங்க கட்டுரையில் ஒரு நல்ல விசயம் இருக்குமாயின் அது ”அன்னா ஹசாரே கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலின் ஆதரவோடு வரும் கைக்கூலி” என்ற உண்மையினை வெட்டவெளிச்சமாக சொன்னது தான். ”

 தொடர்புடைய பதிவுகள்:

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

 அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

பாகிஸ்தானில் இந்துக்களுக்காக பரிதாபப்படும் தினமணி, இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படும்போது எங்கே போனது?

 – தினமணியில் ’ஏணிந்த பயம்’ என்ற தலையங்கதிலிருந்து

பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுவது குறித்து தினமணியின் மனிதாபிமான’த்தை நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில் இந்தியாவில் தினந்தோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் போது இதே தினமணி போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள் எங்கே போனார்கள்?

அப்படி என்றால் பறையர்களும், பள்ளர்களும் இந்துக்கள்’ இல்லையா?

இந்த மனிதாபிமானி தினமணி தாழ்த்தப்பட்டவர்களின் வாயில் மலத்தை திணித்தபோதும், உரிமைக்காக போராடிய அவர்களின் கழுத்தை அறுத்தபோதும் என்ன செய்து கொண்டு இருந்தது. ஒரு வேளை சங்கராச்சாரிக்கு எதாவது புடுங்கி கொண்டு இருந்தார்களோ என்னமோ?

பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தும் பாடல் இதோ…

அரிசன் என்று பேரு வைக்க யாரடா நாயே