சன்னல்
தூரல்
மிகப் பாதுகாப்பான சன்னல்
குளிருக்கு இதமாய் சிகரெட்
நடேசன் தெரு முக்கிலிருக்கும்
நடைபாதை வாசிகள்
இந்நேரம்
எந்தப் பக்கம் ஓடியிருப்பார்கள்
அடுப்புகளை அணையவிட்டு
கொண்டைக் காலளவு
முழங்காலளவு
எத்தனை வீடுகள்
உறக்கமிழக்கும்
கால் நரம்புகள் விடைக்க
அழுத்திப் போகின்ற
டிரைசைக்கிள்காரருக்கு
இன்று கூடுதலாய் ஒரு கிளாஸ்
தேவைப்படலாம்
ஒதுங்க வாய்ப்பற்ற
பாரவண்டி மாடுகளின்
கழுத்துப் புண்ணும்,சாட்டையும்
உறுத்துகிறது என்னை
டீக்கடைகளில் நின்று நின்று
கையேந்துகிற பெண்ணை
விரட்டுகிற குரல்கள்…
நனைந்து நாறும்
குப்பை மேட்டிற்குள்
காகிதம் தேடும்
கோணிப்பை சிறுமி….
எல்லாவற்றையும் ஏற்கும்படி
உறுத்தலற்றதாகிவிட்டது
வாழ்க்கை
பாதுகாப்பான சன்னல்
சிகரெட் தீர்ந்துவிட்டது
தூங்கப் போகுமுன் தோன்றுகிறது
மழையைப் பார்ப்பது
போன்றதல்ல
மழையில் நனைந்து கிடப்பது
-ராசன்
நன்றி புதிய கலாச்சாரம் மார்ச் 2009
Filed under: உழைக்கும் மக்கள், கவிதைகள் | Tagged: உழைக்கும் வர்க்கம், கவிதை, குழந்தைகள், சன்னல், சேரிகள், நடைபாதை, நடைபாதை வாசிகள், பாதுகாப்பான வாழ்க்கை, புதிய கலாச்சாரம், போராட்டம், மழை, வாழ்க்கை | Leave a comment »