• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

விடுதலைப் போரின் வீர மரபு உங்களுக்கு தெரியுமா?

காலனிய எதிர்ப்பு விடுதலைப் போர் என்றாலே காந்தி, நேரு, காங்கிரசு என்று ஆரம்பப் பள்ளி முதல் அனைத்து வகை கல்வி நிறுவனங்களாலும் கூறப்படும் பொய்யான வரலாறே இங்கே உண்மையென நம்பப்படுகிறது. ஆயினும் வரலாற்றின் வீரஞ்செறிந்த அந்த பக்கங்கள் இதை மறுக்கின்றன. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்து மறைந்த்து போயிருக்கும் அந்த வரலாற்று மாந்தர்களையும், காலகட்டத்தையும் புதிய கலாச்சாரத்தின் இந்த சிறப்பிதழ் மீட்டு கொண்டு வருகிறது.

ஊழலும், காரியவாதமும், நம்பிக்கையின்மையும் கோலேச்சும் இந்தச் சூழலில் இந்த வரலாற்றை நினைவு கூர்வது என்பது மீண்டும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போரை நாம் நடத்த வேண்டிய கடமையை கற்றுத் தேர்வதோடு அதில் பங்கேற்பதும் ஆகும். புத்தகக் கண்காட்சியை  முன்னிட்டு கீழைக்காற்றின் வெளியீடாக வரும் இந்த கட்டுரைகளை இங்கே அறிமுகம் செய்கிறோம்.

– வினவு

_______________________________________________________

விடுதலைப் போரின் வீர மரபு

1800 – 1801 இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர், 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.

சத்தியாக்கிரகம் எனும் போராட்ட வடிவத்தை தென் ஆப்பிரிக்காவில் காந்தி அறிமுகப்படுத்தியதற்கும், ‘வந்தே மாதரம்…’ என்ற இந்து தேசியப்பாடல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் கூட இது நூற்றாண்டுதான். தேதிகள் பொருந்தி வருவதனால் தியாகமும் துரோகமும் ஒன்றாகி விடுவதில்லை. எனினும் நம் விடுதலைப் போராட்டத்தின் ஒளிவீசும் மரபுகள் அனைத்தையும் இந்து தேசியவாத, அகிம்சாவாத ஜோதிக்குள் அமிழ்த்துகின்றன ஆளும்வர்க்கங்கள். நம் விடுதலைப் போராட்ட மரபு, காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் திசையறிந்த ஒரு மக்கள்திரள் இயக்கமாக உருப்பெற்றதைப் போன்றதொரு தோற்றத்தை அதிகாரபூர்வ வரலாறு நம் சிந்தனையில் பதித்து வைத்திருக்கிறது.

பெருமிதம் கொள்ளத்தக்க விடுதலைப் போராட்டத்தின் வீர மரபை நம் வரலாற்றுப் பிரக்ஞையிலிருந்தே துடைத்தொழிப்பதற்கான இந்தச் சதி மிகவும் தந்திரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. வன்முறைக்குப் பதிலாக அகிம்சை என்ற வாதத்திற்குள் காந்திகாங்கிரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் துரோகமும் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ஒரு தபால் தலை வெளியீடு மற்றும் அரசு விழாவின் மூலம் கட்டபொம்மன் முதல் பகத்சிங் வரையிலான போராளிகள் அனைவரும் துக்கடாக்களாக நிறுவனமயமாக்கப்படுகிறார்கள்.

இந்த வரலாற்றுப் புரட்டிற்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. 1857 எழுச்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்கிறது வரலாறு. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக திப்பு நடத்திய போர்களும் இந்துஸ்தானத்திலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட திப்பு மேற்கொண்ட முயற்சிகளும் விடுதலைப் போராட்டத்தின் துவக்கப்புள்ளியாகக் கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணிறந்த முன்னணியாளர்கள் இணைந்து தீபகற்பக் கூட்டணி என்றொரு கூட்டணியை அமைத்திருந்ததையும், அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு முன்னணி மகாராட்டிரத்தின் தென்பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஊடுருவிச் சென்றதையும், பல்லாயிரம் விவசாயிகளின் பங்கேற்புடன் நடந்த அந்த மக்கள் போர் 1799 முதல் 1806 வேலூர் புரட்சி வரை தொடர்ந்ததையும் அதிகாரபூர்வ வரலாறு பதிவு செய்வதில்லை. இந்த மாபெரும் மக்கள் போரை முதல் சுதந்திரப் போராகவும் அங்கீகரிப்பதில்லை. தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களைப் புறக்கணிப்பது என்ற இந்து தேசியவாதக் கண்ணோட்டமே இந்த இருட்டடிப்புக்குக் காரணம். இந்த உண்மையைக் கூறுவது, 1857 சுதந்திரப் போரின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.

இந்தச் சிறப்பிதழில் தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அதன் நாயகர்களின் வழியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எனினும் இது பத்திரிக்கை எனும் வடிவ வரம்புக்குட்பட்ட ஒரு பறவைப் பார்வை மட்டுமே. திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.

துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர.

______________________________________________

நன்றி: புதிய கலாச்சாரம் – தலையங்கம் – நவம்பர் 2006

முதல் பதிவு: வினவு

 

வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!

********************************

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி !

கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!

பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்)

இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான ஒதுக்கீடுகள்’ எனச் சில்லறைச் சீர்திருத்த ஒப்பந்தங்களும், காந்தியை பின்பற்றிச் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. ஆனால் புரட்சியாளர்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம் சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது. அது மட்டுமின்றி பெசாவரில் மக்களைச் சுட மறுத்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கூர்க்காப் படையினர் எந்த பலாத்காரத்திலும் இறங்கவில்லை. அவர்கள் காந்தி கூறிய அகிம்சைத் தத்துவத்தைத்தான் கடைப்பிடித்தனர். அவர்களுடைய விடுதலைக்கு இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை. காந்தி இதுபற்றிய கோரிக்கை கூட எழுப்பவில்லை.

பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு காந்தி வெளிநாட்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். “பகத்சிங் மீதும் இதரர் மீதும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுமா?” என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு “என்னை இக்கேள்வி கேட்காதிருப்பதே மேல். இதற்குமேல் நான் ஒன்றும் கூறமுடியாது” எனக் கூறிய காந்தி அந்த ஒப்பந்தம் போடப்பட்ட முறையைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார். “முதலாவதாக, வைசிராயின் விசேசப் பொறுமையும், அளத்தற்கரிய உழைப்பும், சிறந்த குணமும் இன்றி இவ்வொப்பந்தம் முடிந்திருக்க மாட்டாதென நான் கூறவிரும்புகிறேன்… இதுபோன்ற ஒப்பந்தத்தைப் பற்றிய வரையில் வெற்றியடைந்த கட்சி எதுவெனக் கூறவும் முடியாது; கூறுவதும் சிறந்ததன்று. ஏதாவது வெற்றி இருக்குமாயின் அது இருவரையும் சார்ந்ததே. காங்கிரசு ஒருபோதும் வெற்றியை நினைத்ததில்லை.” ஆம்; பிரிட்டிஷ் நலனோடு சாராத வெற்றியை இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லைதான்!

காந்தி இர்வின் காகித ஒப்பந்தங்களின் சரத்துக்களைக் கண்ட பஞ்சாப் மக்களும், ஏனைய இந்திய மக்களும் கொதிப்படைந்திருந்தனர். கராச்சியில் காங்கிரசு மாநாடு கூடும் அதேநாளில் பகத்சிங் லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். ஆத்திரமுற்ற மக்கள் திரளிடமிருந்து காந்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். “பலர் அதன் தவறான அம்சங்களைக் கண்டித்தனர். மேலும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கொண்டு காந்தியை அச்சுறுத்தினர்” என இர்வினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை விசயத்தில் காந்தியாரின் பங்கை மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். “மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக் கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” என இர்வின் குறிப்பிட்டுள்ளார் arl of Birhenhead P.305)

 மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அதன்மேல் சவாரி செய்து கொண்டிருந்த காந்தியை அதே மக்கள் பலாத்காரமாக நசுக்கி எறியும் அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்றால் காந்தி எத்தகைய துரோகியாக இருந்திருக்க வேண்டும். 1922 ஒத்துழையாமை இயக்கம், 1931 காந்தி இர்வின் ஒப்பந்தம் இதன் ­மூலம் செய்த துரோகத்தைக் காட்டிலும், பின் நாட்களில் காந்தி செய்த துரோகம் என்றென்றும் ஏகாதிபத்திய அடிமை நாடாய் இந்தியா இருப்பதற்குப் பலமான கால்கோளாய் அமைந்து விட்டன.

– காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு என்ற நூலின் ஒரு பகுதி

காந்தியும் காங்கிரசும் நூலின் மொத்த பகுதியையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

வெளியீடு

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15