• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

இது ‘கின்லே’, என்னமோ ஈஸியா கேக்குற! -கவிதை

விரிந்து கிடக்கும்

தண்டவாள உதடுகளுக்கிடையே

ரயில் பெட்டிகள் பேசிக் கொள்ளும் மொழியின்

அர்த்தம் தேடி அழைந்தது மனது.

 

திசுக்களால் ஆன

பாராளுமன்ற வாதிகளின்  இதழ்களில் இருந்து

வெளிவரும் பட்ஜெட் உரையை விட

இரும்பு இதழ்களிலிருந்து பெறப்படும்

ரயில் பயணத்தின் ஓசைகள்

மனதுக்கு இதமானவை.

கூடவே ரயிலில்

பயணம் செய்தவர்களின் குரல்கள்

கொஞ்சம் கொஞ்சமாய்த் திசைதிருப்பியது

என்னை.

 

கொடுத்த காசுக்கு இடம்பிடிக்கத் தெரியாது

குத்துக்காலிட்டு வழியில் கிடந்த பெரியவர்

தயங்கித் தயங்கி

இருக்கையிலிருந்தவரிடம் இறைஞ்சினா.

 

“கொஞ்சம் குடிக்க தண்ணி தாங்க”

இரட்டுற மொழிதலில் பதில்வந்தது….

 

“இது பாட்டில் தண்ணிய்யா”

 

உள்ளுறை உவமம் அறியாப் பெரியவர்

“பாட்டில் தண்ணியா பரவாயில்லை

கொடுங்க”

என ஆவலாய்க் கை நீட்ட

 

“பனிரெண்டு ரூபாய் கொடுத்து வாங்கின

பாட்டில் தண்ணிய்யா

என்னமோ ஈசியா கேக்குற!”

 

ஈரப்பசையற்ற வார்த்தைகள் எதிர்பாய

பீறிட்டு வந்த பெரியவரின் தாகம்

தன்மானத்தோடு தொண்டைக் குழியிலேயே

தற்கொலையானது.

 

தண்ணீரால் ஒரு மனிதனின் இதயத்தை

இரும்பாக்க முடியும் என்ற நசவாதத்தைக்

கண்ட எனக்கு

சில இரும்பு இதயங்களை

அவலம் தாங்காது அலறும் பெட்டியின்

அர்த்தம் புரிந்தது அப்போது.

-துரை.சண்முகம்

நன்றி புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2001

தொடர்புடைய பதிவுகள்:

தண்ணீர் திருடர்கள்!

மழையைப் பார்ப்பது போன்றதல்ல மழையில் நனைந்து கிடப்பது!

பிள்ளை வளர்ப்பு: ஒரு குடும்ப வன்முறை

 “பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா. அவர் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர். அவரது மனைவியும் ஒரு அரசு ஊழியர்.

 இப்படிப்பட்ட பின்னணியில் இருப்பவர்கள் ஒரே செல்ல மகனை சாதாரண லெவலுக்கு வளர்க்க விரும்புவார்களா? பையனுக்கு காலையில் கராத்தே வகுப்பு, பிறகு கான்வென்ட் பள்ளிக்கூடம். மாலை ஸ்பெசல் டியூசன், பிறகு கம்யூட்டர் கிளாஸ் இப்படி 24 மணிநேரமும் பையனை கடிகார முன்னாய் நகர்த்திக் கொண்டிருப்பவர் அந்த அரசு ஊழியர். ஒரு நாள் மாலை நேரம் பையன் தெருவில் இறங்கி விளையாடப் போய்விட்டான்.

பையனைத் தேடிப்பார்த்த தந்தைக்கு தலைக்கேறியது கோபம். “வீட்லதான் விளையாட கம்யூட்டர் கேம்ஸ் வாங்கித் தந்துருக்கேன்ல. டியூசன் போய்விட்டு வந்து அதுல விளையாடறது. காச கொட்டி சேர்த்துவிட்டா கம்யூட்டர் கிளாஸ் போகாம, கண்ட கண்ட பசங்களோட சேர்ந்துகிட்டு தட்டான் புடிக்கவா போற? போடா கிளாசுக்கு” என்று அவர் கைய ஓங்கி அதட்டியதுதான் தாமதம் இறுகிய முகத்துடன் வீடு திரும்பிய பையன் ஓங்கி ஒரு அறைவிட்டான் அப்பாவை. அதுவும் வாசல்படியிலேயே பதிலுக்கு விளாசித் தள்ளிவிட்டாலும் அந்த அதிர்ச்சியிலிர்ந்து அவரால் இன்னும் மீள முடியவில்லை. இது சேருவார் தோஷமா இல்லை செய்வினையா என்று குழம்பித் தவித்தார்.

ஆம்! உண்மையில் இது செய்வினைதான் அதாவது ”உன்னைப்பார் உலகத்தை பார்க்காதே.போட்டி போட்டு முன்னேறு” என்று முதலாளித்துவ வாழ்க்கை முறையின் ஒரு வித செய்வினைதான் என்பதை கொஞ்சம் குழந்தைகள் வளர்ப்பு சமாச்சாரத்தின் உள்ளேபோய் பார்த்தால் ஒத்துக்கொள்ளத் தோன்றும்.

 உலகத்தை நெருங்கி, நெருங்கி – அது என்ன? இது என்ன? ஏன் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன, இயங்குகின்றன என்று – அறியத்துடிக்கும் ஆர்வம் ததும்பும் பிள்ளைப் பருவத்திற்கும், ஒண்ணாந் தேதி சம்பளத்தையும் ஒவ்வொரு நுகர்பொருளும் வாங்குவதற்குவொரு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் மட்டும் மனதில் வைத்துக் கொண்டு  “அந்த உலகத்தை அறியத் துடிக்கும்” அரசு ஊழியர்க்கும் உள்ள இயல்பான முரண்பாட்டின் விளைவே மேற்சொன்ன சம்பவம்.

கொம்பு சீவுவனையே குத்திப்பதம் பார்த்துவிடும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காளையைப்போல போட்டி உலகின் கட்டுக் காளையைப்போல போட்டி உலகின் அவஸ்தை தாங்காமல் குழந்தை வடிவத்தில் இருக்கும் மனிதன். முதலாளிய வாழ்க்கை முறையின் செய்வினைக்குப் பதிலை அப்பாவின் முகத்தில் திருப்பித்தரும் அதியமும் சில நேரங்களில் நடக்கத் தான் செய்யும்.

ஒரு ஈடுக்கு எத்தனைக் குஞ்சு பொறிக்கும், அதற்கு என்ன தீவனத்தை போடலாம் என்ற முதலாளியின் கணக்கைப்போல போட்டி மயமான இந்த உலகில் தமது பிள்ளைகள் போணியாக வேண்டுமென்றால் கம்யூட்டர், கேம்ஸ், கராத்தே, வாய்ப்பாட்டு, கருவி இசை என்று எல்லாத் துறைகளிலும் ஒண்ணாம் நம்பரா இருந்தால்தான் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது உயர் நடுத்தர வர்க்கத்தின் கருத்து.

இப்படி குழந்தைகளுக்கு வகை வகையான தீவனம் போட வசதி இல்லாவிட்டாலும் அவரவர் நிலைமைக்கு ஏற்றவாறு பிள்ளைகளை அடைகாக்க முயற்ச்சிக்கும் பண்பாடு கோழி செல்லைப் போல பெற்றோர்களின் மனதில் அரித்துக் கொண்டிருக்கிறது.

கோழி வியாபாரிக்காவது ஒரு ஈடுபொய்த்து விட்டாலும் அடுத்த ஈடுவரைக்கும் காத்திருக்கும் பொறுமையு நிதானமும் இருக்கிறது. இப்படி குறி வைத்து வளர்க்கும் பெற்றோர்களுக்கோ தன்னுடைய குஞ்சுகள் ஒரே ஈடில் கோழிகளாக சிறகடிக்க வேண்டும் என்ற அவசரமும் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் பிள்ளைகள் மேல் ஆத்திரமும் வருகிறது.

ஆனால் குழந்தைகள் உலகமோ இதற்கு நேர்மாறானது. இந்த உலகத்தை உற்று பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற தேவையிலிருந்து அவர்கள் பார்வை தொடங்கவில்லை. இந்த உலகில் என்ன இருக்கிறது என்ற தேடலிலிருந்து அவர்கள் பார்க்கத் தொடங்குகின்றார்கள்.

 

முடியவில்லாத மலைத் தொடர்கள், ஓய்வில்லாத அலைகளின் ஓட்டகம், இலைகளின் பின்னணியை ஆராயத் தொடங்குகிறது அவர்கள் மனம். மேகத்திற்குள் மறைந்த  நிலவு வெளிவரும் சோற்றையும் தட்டிவிட்டுவிட்டு நிலவை ஆராய்கிறது பிள்ளைமனம். இப்படி இயற்கையை மட்டுமல்ல மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், அவற்றின் இயக்கம். சிலர் கையில் அவைகள் இருப்பதும், பலரிடம் இல்லாததும், கட்டிடங்கள் பக்கத்திலேயே குடிசைகள் இருப்பதும் ஏன்,ஏன் என்ற கேள்விகள் பிள்ளைப்பருவத்தின் ஆர்வத்தை அள்ளி வருகின்றன.

தனித்தனியாக காணக் கிடக்கும் இந்த காட்சிகள் குறித்த புரிதலை ஒருங்கிணைந்த முறையில் பெறுவதுதான் குழந்தைகளின் முதல் தேவை. ஆனால் அனைத்தையும் அழித்து தான்மட்டும் வாழத்துடிக்கும் முதலாளித்துவமோ பல சிறு தொழில்களை அழித்தால்தான் பெரிய பன்னாட்டுக் கம்பெனி வாழ முடியும் என்ற தனது பொருளாதார கொள்கையையே, குடும்பத்தின் இலக்கணமாகக் கொண்டுவந்து “ உன்னைப்பார் உலகைப் பார்க்காதே” “போட்டி போட்டு முன்னேறு! சகமனிதர்கள் மீதான போட்டியில் வெற்றி பெறு. அதுவே உனது வாழ்க்கை லட்சியம். கனவு” என குட்டி இளவரசர்களுக்கு முடிசூட்டி விடுகிறது.

உயிர்களின் தோற்றத்தையும், பரிணாமத்தையும் இடையறாது ஆராய்ந்து உழைப்பைச் செலுத்தி டார்வின் பரிணாமக் கொள்கை, தனிமனித முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சி அல்ல.

ஆனால் (முதலாளித்துவம்) சுயநலமனம் கொண்ட குடும்பங்களோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று கண்டுபிடித்துவிட்டால் குடும்பம் நடத்த முடியுமா? எங்களுக்கு டார்வினைப் போல ஆராய்ச்சி மனம் படைத்த ஒரு மனிதன் தேவையில்லை. கோடீஸ்வரன் முத்திரையைச் சரியாகப் பயன்படுத்தி கட்டங்கட்டமாகத் தாவி வெற்றி பெறும் ஒரு குரங்கு போதும் என்கின்றனர். அதாவது சமுதாயத்தை ஒண்ணாம் நம்பராக்கும் அறிவு தேவையில்லை. இந்த சமுதாயத்தில் நான் ஒண்ணாம் நம்பராகும் வழியைச் சொல் என்கிறது நடுத்தர வர்க்கம்.

குழந்தைகளின் ஆர்வத்தைத் தட்டி எழுப்புவது, அவர்கள் மனம் விரும்பிய விளையாட்டை பழக அனுமதிப்பது, முக்கியமாக சமுதாய உறுப்பினர்களான சக மனிதர்களுடன் கூடி இயங்க விடுவது என்ற கருத்தெல்லாம் இல்லாமல், 2500 மைல்களுக்கு அப்பால் குறி வைத்து ஏவக்கூடிய ஒரு ஏவுகனையைப் போல பெற்றோர்கள் அந்தஸ்தான வாழ்க்கைதரக் கூடிய ஒரு கனவுப் பிரதேசத்துக்கு பிள்ளைகளை ஏவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நடக்கிறது.

இதனால்தான் பிள்ளைகள் கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றை நோக்கில் பயன்படுத்தும்போது “இது உருப்படறதுக்கு வழியா!” என்று அலறித் துடிக்கிறார்கள். இது குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தனத்தைப் பறித்தெடுக்கும் பலாத்தார நடவடிக்கையாக மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும். கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்த்தால் குழந்தைகளாய் இருக்கும் மனிதர்களிடம் முதலாளித்துவத்திற்கு தேவையான வளர்ப்பும், சுரண்டலும் ஆரம்பமாகி விட்டது என்ற அபாயம் புரியும்.

”சரக்கு உற்பத்தியின் போட்டா போட்டியில் கல்வி,பண்பாடு, மனிதர்களையும் கூட முதலாளித்துவம் ஒரு சரக்காக மாற்றி விடுகிறது” என்று கார்ல் மார்க்ஸ் இந்த அபாயத்தைக் கோடிட்டுக் காண்பித்தார். இரண்டு வழிகளில் இந்த அபாயத்தை முதலாளித்துவம் அரங்கேற்றி வருகிறது. ஒன்று சாதாரண உழைக்கும் மக்களின் கைகளிலிருந்து கைத்தொழில் சிறு தொழில்களைப் பிடுங்கி எறித்துவிட்டு அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் பிள்ளைப் பருவக் கனவுகளை அழித்து அவர்களையும் தனது சுரண்டலுக்கு குழந்தைப் பணியாளர்களாய் மாற்றிவிடுகிறது.

ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் உணவு விடுதிகளில் மேசை துடைக்கும் சிறுவனின் உள்ளத்திலிருந்து அவனுக்கு விருப்பமான படைப்புணர்ச்சியை பிள்ளைப் பருவத்திலேயே துடைத்தெறிந்து விடுகிறது முதலாளித்துத்துவச் சமுதாயம் இன்னொருபுறம் மேட்டிக்குடி, நடுத்தர வர்க்க குழந்தைகளிடம் இந்தா பிடி சாப்ட்வேர், மேல்படி ஜாவா, ஈகாம் இப்பொழுதே, நல்ல எதிர் காலத்துக்கான திறமையை வளர்த்துக் கொள் என்று அவர்களுடைய பிள்ளைப் பருவத்தையும் தங்கள் சுரண்டலுக்கான அச்சாரமாக மாற்றிக் கொள்கிறது. இதை கோட்பாடாகக் கேட்பதற்கு மிகையாகத் தோன்றலாம். குடும்பங்களின் நடைமுறையைக் கவனித்தால் பெற்றோர்கள் தமது

பிள்ளைகளை ஒரு நல்ல ‘பொசிசனுக்கு’க் கொண்டுவர அவர்களை வளரும் சரக்காக வளர்த்தெடுக்கும் முறைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

பிள்ளைகளிடம் குழந்தைத்தனம் பறிக்கப்படுகிறது. கல்விச் சுமை ஏற்றப்படுகிறது, குழந்தை  உழைப்பு தடுக்கப்பட வேண்டும் என்று கண்டிக்கும் அறிவாளிகள் கூட இவற்றுக்குக் காரணமான முதலாளித்துவச் சுரண்டல் சமூக அமைப்பைத் தூக்கியெறியந்தாலொழிய இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை ஊருக்குச் சொல்வதில்லை. குழந்தைப் பருவத்தின் தேடல்களைத் தொலைத்துவிட்டு குழந்தையும் சேர்ந்து உழைத்தால் தான் குடும்பத்தில் சோறாக்க முடியும் என்ற சமூக நிலைமையைப் பாதுகாக்கும் அரசை எதிர்த்துப் போராடாமல் ஒரு வேளைச் சோற்றுக்கு வயிற்றுப் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு தீச்குச்சி அடுக்கப் போகும் பெண்களிடம் போய் உங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள் குழந்தைகளை குழந்தைகளாய் வாழ விடுங்கள் என்று அறிவொளி இயக்கம் நடத்துகிறார்கள் இந்த அறிவாளிகள்.

மாற்றாக மக்கள் சீனத்திலும், சோசலிச சோவியத் ரசியாவிலும் தனியுடைமைச் சுரண்டலை ஒழித்துக் கட்டியதன் மூலம் பிள்ளைகளுடைய கல்வி வளர்ப்பு அனைத்தையும் அரசின் கடமையென உறுதி செய்யப்பட்டதுடன் பிள்ளைகளின் தனிப்பட்ட திறமைகள் இந்தச் சமுதாயத்தையே முன்னேற்றிக் காட்டின. சகமனிதர்களைத் தோற்கடித்து அவனை அழித்தாவது தான் முன்னேற வேண்டும் என்ற முதலாளித்துவ வளர்ப்பு முறையினால் தனது இச்சைக்கு எதிராக இருக்கும் பெற்றோரைக் கூடத் தீர்த்துவிடும் குழந்தைகளை முதலாளித்துவம் உருவாக்குகிறது.

ஆனால் நாட்டு மக்களின் நலனுக்காக இட்லரை எதிர்த்த போரில் ரசியச் சிறுவர்கள் தன்னிகரில்லாமல் உதவிய ‘த இவான்’ நாவலில் பார்க்க முடிகிறது. இப்படி சமூக நோக்கில் குழந்தை வளர்க்கப்பட  வேண்டும் என்று சொன்னால் “எங்கள் பிள்ளைகளை எங்கள் விருப்பப்படி வளர்க்கும் உரிமைகூட எங்களுக்குக் கிடையாதா? என்று அறிக்கையில் பெற்றோர்களைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இப்படிப் பேசுகிறது.

“குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான். ஒப்புக்கொள்கிறோம்…. உங்களுடைய கல்வி இருக்கிறதே, அதுமட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே?….. கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்…”

 “குடும்பம், கல்வி என்றும், பெற்றோருகும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவெறுக்கத் தக்கனவாகி வருகின்றன. ஏனெனில் நவீனத் தொழில்துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.”

இப்பொழுது இந்தக் கட்டுரைகயின் துவக்கத்தில் சொன்ன சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். தனது குழந்தைப் பருவத்தைச் சுரண்டுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஆளாக்கிய அப்பாவின் கன்னத்திலேயே அறைந்து விட்டான் அந்தச் சிறுவன். சமுதாயத்தையே இந்த சுரண்டல் நிலைமைக்கு ஆளாக்கிய அப்பனான முதலாளித்துவத்தின் கன்னத்தில் நீங்கள் அறையப் போவது எப்போது?

-துரை. சண்முகம்

நன்றி : புதிய கலாச்சாரம் மே,2001

தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்றுகுறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் – ஸ்டாலின்.

டிச 21, தோழர் ஸ்டாலினின் 132 வது பிறந்த நாள்.

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்.

ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே மார்க்ஸ்,

உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை,
அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் – ஸ்டாலின்.

ஏகாதிபத்திய மிருகங்களும், முதலாளித்துவக் கிருமிகளும் ஊடுறுவ முடியாத  கம்யூனிசத்தின் இரும்புக் கோட்டை

முதலாளித்துவ அறிவு ஜீவிகளுக்கு அரக்கன்,
உலகப் பாட்டாளி வர்க்கத்துக்குக் ‘காவல்தெய்வம்’

………………..

எதிரிகளிடம் வெறுப்பையும் மக்களிடம் பெருமிதத்தையும்
ஒரே நேரத்தில் தோற்றுவித்த ஒரு பெயர் உண்டென்றால்

அந்தப் பெயர் – ஸ்டாலின்.

………………..

பாட்டாளி வர்க்கத் தலைவர்களிலேயே அதிகம் தூற்றப்படுபவர் அவர்தான்.

அவரை வெல்ல முயற்சி செய்தார்கள்,
முடியாதால் கொல்ல முயற்சி செய்தார்கள்.

பேனைப் பெருமாளாக்கி அவரைத் தூற்றினார்கள்.

பொய்களை ஆதாரமாகக் கொண்டே அவருக்கு எதிராக
ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்கள்.

பிறகு அந்த நூல்களின் எண்ணிக்கையை ஆதாரமாகக் கொண்டே
அந்தப் பொய்களையெல்லாம் உண்மை என்று சாதித்தார்கள்.

அவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும்,
எதிரிகளின் வெறி இன்னும் அடங்கவில்லை.

………………..

வரலாற்றில் கொடிய மக்கள் விரோதிகளுக்கும்
வில்லன்களுக்கும் கூட சலுகை வழங்கி

அவர்களுடைய தவறுகளை அனுதாபத்துடன் பரிசீலிக்கும்
அறிவுஜீவிகளின் மூளைகள்,

ஸ்டாலின் என்ற சொல்லைக் கேட்டவுடன் மட்டும்
முறுக்கிக் கொண்டு வெறுப்பைக் கக்குகின்றன.

நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டியைப் போல அவரைச் சித்தரிக்கின்றன.

………………..

மார்க்சியம் லெனினியம் மா சே துங் சிந்தனை அனைத்தையும் மெச்சுவதாகக் கூறிக்கொண்டே

கட்சிக்குள் வர மறுக்கும் அறிவாளிகள்,

தங்களை நசுக்கிப் பிழியும் எந்திரமாகக் கட்சியைக் கருதுபவர்கள்,

கட்டுப்பாடுக்கு அஞ்சுபவர்கள், ஜனநாயகம் என்ற பெயரில்

சாதாரண தொழிலாளிகளின் உத்தரவுக்கெல்லாம் நாம் கட்டுப்படவேண்டியிருக்குமே என்று அஞ்சுபவர்கள் –

இவர்கள் யாருக்கும் ஸ்டாலினைப் பிடிப்பதில்லை.

………………..

கம்யூனிஸ்டு முன்முயற்சி, கம்யூனிஸ்டு வேலைத்திறன், கம்யூனிஸ்டு கட்டுப்பாடு, கம்யூனிஸ்டு ஒழுக்கம், கம்யூனிஸ்டு தியாகம்

என்ற சொற்களுக்கான இலக்கணத்தையெல்லாம்

அவருடைய தலைமையின் கீழ்தான்

இலட்சக்கணக்கான ரசிய போல்ஷ்விக்குகள் உருவாக்கிக் காட்டினார்கள்.

………………..

அவருடைய தலைமையின் கீழ் சோசலிசத்தை
கட்டியெழுப்புவதற்காகக் குனிந்த ரசியா,

நிமிர்ந்தபோது இட்லரின் குண்டுகளை நெஞ்சில் வாங்கிக்கொண்டது.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இரண்டு நூற்றாண்டுகள்
நடந்து எட்டிய முன்னேற்றத்தை,

இருபதே ஆண்டுகளில் பறந்து எட்டியது.

200 இலட்சம் ரசிய மக்களை இட்லரின் போர்வெறிக்குப் பலி கொடுத்து

உலக மக்களையே பாசிசத்திலிருந்து காப்பாற்றியது.

………………..

மனிதகுலத்தின் ஒப்புயர்வற்ற இந்த வரலாற்றுப் பெருமைகள் அனைத்துக்கும்

உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டும்

இன்று நெஞ்சு நிமிர்த்தி உரிமை கொண்டாட முடிகிறதென்றால்,

அந்த கவுரவத்தை நமக்கு வழங்கியவர் தோழர் ஸ்டாலின்.

………………..

வரலாற்றில் மனித குலம் கண்டிராத உழைப்பு,

ஞானியர்களின் சிந்தனைக்கும் எட்டியிருக்க முடியாத அறம்,

கவிஞர்கள் கற்பனையாலும் தீண்ட முடியாத தியாகம்

இவையனைத்தையும் நம் கண்முன்னே நிதர்சனமாக்கியது சோசலிச ரசியா.

அந்த சோசலிச ரசியாவின் புதல்வனும் தந்தையும் – தோழர் ஸ்டாலின்.

அதனால்தான் அவர் கம்யூனிசத்தின் குறியீடு.

அதனால்தான் அவர் ஏகாதிபத்தியத்தின் குறியிலக்கு.

………………..

கம்யூனிசத்தை அது பிறந்த மண்ணிலேயே புதைத்து விட்டதாக களி வெறி கொண்டு பிதற்றிய முதலாளித்துவம்,

இதோ மரணப் படுக்கையில் கிடக்கிறது.

அதன் மலமும் மூத்திரமும் பரப்பும் வீச்சத்தால்
மனித சமூகமே மூச்சுத் திணறுகிறது.

இருப்பினும் சாக மறுக்கும் முதலாளித்துவம், நம்மைக் கொல்கிறது.

பட்டினிச்சாவுகள், தற்கொலைகள், கொலைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள், நரவேட்டைகள்

அனைத்தும் ஒரே காரணம் – முதலாளித்துவம்.

மரணப்படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவம்,

தன்னுடைய மரணத்தைத் தள்ளிப்போடுவதற்காகவே

மனிதகுலத்தை நசிவுக்கும் அழிவுக்கும் தள்ளும் முதலாளித்துவம்!

………………..

முதலாளித்துவம் வென்று விட்டதாகவும்,
கம்யூனிசத்தைக் கொன்றுவிட்டதாகவும்

செய்யப்பட்ட பிரகடனங்கள் பொய் என்று

நாம் நடைமுறையில் நிரூபிக்கும் வரை,

அதாவது முதலாளித்துவத்தை அதற்குரிய சவக்குழிக்குள் இறக்கி
உப்பை அள்ளிப் போடும் வரை,

கம்யூனிசம் செத்துவிட்டதாக

அதன் வாயிலிருந்து ஒரு முனகலாவது கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.

………………..

கம்யூனிசம் வெல்லும்வரை முதலாளித்துவம் கொல்லும்.

முதலாளித்துவக் லாபவெறியின் கோரதாண்டவத்தை,

பாசிசம் உலகமக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை,

கம்யூனிசத்தின் வெற்றியின் மூலம்தான் முறியடித்தார் தோழர் ஸ்டாலின்.

பாசிசம் தோற்றதனால் கம்யூனிசம் பிழைத்துவிடவில்லை.

மாறாக, கம்யூனிசம் வென்றதனால்தான் பாசிசம் தோற்றது.

அந்தக் கம்யூனிச வெற்றியின் சின்னம் தோழர் ஸ்டாலின்.

………………..

முதலாளித்துவத்தைக் கொன்று புதைத்த மண்ணில்,

தோழர் ஸ்டாலினின் புகழை ஒரு மலர்ச்செடியாய் நாம் நடுவோம்.

அதற்கு முன், அவர் நினைவு தரும் உத்வேகத்தால்

முதலாளித்துவத்தைக் கொன்று புதைப்போம்!

-மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

“ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின்”

கோடான கோடி உழைக்கும் மக்கள்
உவப்போடு உச்சரித்து உச்சரித்து
உழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்!

முதலாளிவர்க்கமோ!
அந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல,
“அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது.
‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே
சுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது.

ஆம்! ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல!
அது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு!

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக
போராடினார் என்ற ஒரே  காரணத்திற்காக!

எத்தனை அவதூறுகளை
முதலாளித்துவம் பரப்பியது
தோழர் ஸ்டாலினைப் பற்றி!
முதலாளித்துவத்தின் ஆவிகளாக
எத்தனை கூலி எழுத்தாளர்களின் கட்டுக்கதைகள்
தோழர் ஸ்டாலினைச் சுற்றி!

பாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழும் போதெல்லாம்-
முதலாளித்துவ ஆசிபெற்ற அறிவுஜீவிகள்,
மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகள்,
கம்யூனிச திரிபுவாதிகள்
கதறுகிறார்கள்;
“அய்யோ மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்
மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்!”

ஆம்!
மூட்டைப்பூச்சிகளால் எப்படி
சூரியனை ரசிக்க முடியும்?
முதலாளித்துவத்தால் எப்படி
ஸ்டாலினை சகிக்க முடியும்!

‘தோழர் ஸ்டாலின்
நமது வர்க்கத்துக்காக பேசியவர்
நமது வர்க்கத்துக்காக போராடியவர்
முக்கியமாக –
நமது வர்க்கத்தை நமக்கு உணர்த்துபவர்
அந்த அவசியத்தோடு
அரசியல் தேவையோடு
நாம் ஒவ்வொருவரும்
தோழர் ஸ்டாலினிடமிருந்து
பெற வேண்டிய வர்க்க உணர்வை
சுருக்கமாக…….
வர்க்கப்போராட்டத்திற்கு நெருக்கமாக
உங்களையும் இணைக்கிறது
இந்த ஸ்டாலின் சகாப்தம்!

வெளியீடு

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

விலை

ரூ 75

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 – 2841 2367

தொடர்புடைய பதிவுகள்:

உயிரைக் கொடுப்பதல்ல, வாழ்க்கையை கொடுப்பதே புரட்சி! – தோழர் துரை.சண்முகம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குரோம்பேட்டை-யில் நடந்த நவம்பர் புரட்சிதின விழாவில் தோழர் துரை.சண்முகம் ஆற்றிய உரை இது.

புரட்சி குறித்தும், அதனை நடத்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசிய  தோழரின் உரை நமக்கு ஒரு உத்தேவகத்தையும், பொறுப்புணர்ச்சியையும் தருகிறது என்றால் அது மிகையில்லை.

இதோ அந்த எழுச்சிமிகு உரையினை கேட்க  இங்கே கிளிக் செய்யவும்

வாருங்கள் நண்பர்களே! பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்!

ஆவடி பிராட்வே.. ஆர்.எஸ்.ஒய்.எஃப். அவர் வே..

ஆவடி பேருந்து நிலையம், ஜெயலலிதா சசிகலா முகமூடியணிந்த இருவர் திடீரென ஒரு பேருந்தில் ஏறி பயணிகளிடம் பேருந்து கட்டண உயர்வு, பால், மின்சாரம் விலைவாசி உயர்வை தெனாவெட்டாக அறிவிக்கிறார்கள். திகைப்பிலும், வெறுப்பிலும் மக்கள் பார்த்திருக்க, மக்களின் உணர்ச்சிக்கு முகம் கொடுப்பது போல பத்து பதினைந்து சிவப்புச் சட்டைகள் பேருந்தில் ஏறி முழக்கமிடுகிறார்கள். “”அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு பதிலடி கொடுப்போம், புலம்பினால் மட்டும் போதாது! போர்க்குணத்துடன் போராடுவோம்…” என அறிவிப்பு வெளியிட்டு ஜெயா சசி குமபலின் தோலுக்கு உரைக்கும்படி முதலில் வார்த்தைகளால் பந்தாடுகிறார்கள். அடுத்து ஆவேசத்துடன் கைகள் நீள்கிறது. காத்து கிடந்த மக்களோ தன் பங்குக்கு நாலு சாத்து சாத்துகிறார்கள்.. பாவம் ஜெயலலிதா வேடத்தில் நடித்ததினாலேயே தோல் மரத்ததோ என்னவோ.. தாமதமாக வலி உணர்ந்து முகமூடியை களைகிறார்கள் தோழர்கள்.. “”என்னுயிர் தோழி.. கேளடி சேதி.. இதுதானோ பெங்களூரு நீதிபதி தோழி” என ஜோடியாக ஏ.சி. காரிலேயே ஓசி பயணம் செய்யும் ஜெயாசசியை பஸ்ஸில் ஏற்றி மக்களோடு சேர்ந்து தீர்ப்பு வழங்கினார்கள் தோழர்கள். கட்டண உயர்வால் கொதித்துப் போயிருக்கும் மக்களிடம் சிக்கினால் ஜெயாசசிக்கு என்ன நடக்கும் என்பதை திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க. தோழர்கள் நிகழ்த்திக் காண்பித்தனர். சென்னையிலோ, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் “”ரூட்டே” தனி.

பஸ்சுக்கு பஸ்சு மக்கள் விரோத ஜெயாசசியை ஏற்றி மக்கள் கையாலேயே பஞ்சராக்கிப் போட்டார்கள். எதிர்க்க முடியாத மலையல்ல ஜெயலலிதா என நிகழ்த்திக் காண்பிப்பது மட்டுமல்ல. கட்டண உயர்வுக்கு எதிராக கண்டனம் புலம்பும் மக்களிடம் “”அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பேயாட்சிக்கு எதிராக வெறும் பேசி மட்டும் போதாது, பாசிச ஜெயாவின் திமிராட்சிக்கு நாம் பணிய வேண்டியதில்லை. மக்களை வாட்டி வதைக்கும் இந்தக் கட்டண உயர்வை நாம் மதிக்கவும் தேவையில்லை. ஆகவே உழைக்கும் மக்களே! இந்த அநியாய பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பயணச்சீட்டு வாங்காமல் நாம் பயணிப்போம்! யாரும் டிக்கட் எடுக்காதீர்கள். டிக்கெட் விலை அநியாயம்! அதை ஏற்பதும் அநியாயம்! கட்டணக் கொள்ளைக்கு காசு தர முடியாது! பாசிச ஜெயாவின் திமிரடிக்கு நாம் பணியவும் முடியாது. மக்களே! டிக்கட் எடுக்காதீர்கள்” என ஓடும் பேருந்தில் மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டே பு.மா.இ.மு. தோழர்கள் வந்தனர். பெருவாரி மக்கள் பு.மா.இ.மு. அறிவிப்பை உச்சி மோந்து “”இவ திமிருக்கு இதுதாங்க சரி” என்று கோயம்பேடு வரை டிக்கட் எடுக்காமலேயே வந்து இறங்கினர். நடத்துனருக்கோ வேலை மிச்சமானது. ஓட்டுனரோ உற்சாகத்துடன் கியரை மாற்றி ஜெயாவின் உத்தரவைக் காலில் போட்டு மிதித்து பஸ்சை இயக்கினார்.

இப்படி பு.மா.இ.மு. தோழர்கள் ஒரு நாள் முழுக்க சென்னையில் ஆவடி, கோயம்பேடு, என்.எஸ்.கே. நகர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, பாரிமுனை என மாறி மாறி பேருந்து ஏறி ( ஜெயா சசி வேடமிட்ட லக்கேஜ்களையும் சேர்த்துக் கொண்டுதான்) மக்களிடம் நாள் முழுக்க கட்டண உயர்வுக்கு எதிராகப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டே போயினர். பு.மா.இ.மு. ரூட் பாஸ் வாங்கிவிட்ட மக்களிடம் இன்னிக்கு ஜெயலலிதா சீட்டு செல்லாது என்று வர்க்க உணர்வுடன் புரிந்து கொண்ட பெரும்பாலான நடத்துநர்கள் தோழர்களின் அரசியலுக்கும் சேர்த்து ரைட் கொடுத்துக் கொண்டே வந்தார்கள். ஓட்டுனர்களோ பஸ்ஸில் சிக்கிய ஜெயாசசி கும்பல் டயரில் சிக்காதா? என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே பஸ்சை நகர்த்தினர். அண்ணா சாலையில் இறங்கிய பெண் பயணி ஒருவர் “”தோழர்களே! உங்களால் நான் இன்னிக்கு டிக்கெட்டே எடுக்கவில்லை என்று போதி மரத்தில் ஞானம் பெற்றதைப் போல பு.மா.இ.மு. தோழர்களை பூரிப்புடன் பார்த்து விடைபெற்றார். பஸ்சுக்காக காத்திருந்து மட்டுமே பழகிப்போன மக்கள் இப்படி ஒரு உத்தரவுக்காக காத்துக் கிடந்தது போல செயல்படுத்தியதைப் பார்க்கும்போது, புரட்சிக்காகக் காத்திருக்கும் மக்களிடம் பு.மா.இ.மு. வைக்கும் நம்பிக்கை வீண் போகாது என்பதை உணர்த்துவதாக இருந்தது.

போராட்டப் பயணம் இப்படியே இனிமையாகவே போய்விடுமா என்ன? எதிர்பார்த்தது போலவே ஒரு பேருந்தில் பிரச்சாரம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தேனாம்பேட்டைவந்ததும் அந்தப் பேருந்தின் நடத்துனர், இப்படியே ஒரு சீட்டும் கிழிக்காமல் போனால் தன் சீட்டு கிழிந்து விடுமோ என்ற பயத்தில் பேருந்தை தேனாம்பேட்டை போலீசு ஸ்டேசன் பக்கம் நிறுத்தி தோழர்களை ஜாடையாக தள்ளிவிட முயன்றார். ஆர்வத்துடன் அந்த போலீசோ சிவப்புச் சட்டைகள் தோழர்களின் பிரச்சார வார்த்தைகள், மக்களின் அடங்காத ஆர்வம் இவைகளைக் கண்ணுற்று இந்தத் தலைவலி நமக்குத் தேவையா என்பது போல, “”யோவ், இவங்கள ஸ்டேசன்ல எறக்க முடியாதுய்யா.. பேசாம டெப்போவுல போயி எறக்கிடு..” என்று வேகத்துடன் நழுவப் பார்த்தது. நடத்துனரோ லா அண்டு ஆர்டர் பிரச்சனையாகும் சார், என்று போலீசைப் போல பேச போலிசோ வேறு வழியின்றி நடத்துனரைப் போல டிக்கெட்டை எண்ண ஆரம்பித்தார். தோழர்களோ அஞ்சவில்லை. சட்டப்படி என்ன செய்ய முடியுமோ செய்ங்க என்றனர். “”நான் கைதெல்லாம் பண்ணலப்பா, பேசாம கலைஞ்சு போயிடுங்க, செய்றதுதான் செய்றீங்க எதாவது பர்மிசன் வாங்கிட்டு செய்ங்கப்பா” என்று ஸ்டேசன் எஸ்.ஐ. உலகம் புரியாமல் உளறிக் கொட்டினான். சற்றும் தாமதிக்காத இளம் தோழர்கள், “”ஜெயலலிதா எங்ககிட்ட பர்மிசன் வாங்கிகிட்டா விலை ஏத்தினுச்சு, நாங்க அடுத்த பஸ்சுல ஏறி பிரச்சாரத்த தொடருவோம். கலைய மாட்டோம்” என்று விருட்டென்று வரக்கூடிய பேருந்தில் ஏறப் போனார்கள். ஒரு இரண்டு பேருந்து வரைக்கும் தோழர்களை ஏற விடாமல் தேனாம்பேட்டை போலீசு கபடி விளையாடிப் பார்த்தது. மூன்றாவது பேருந்தில் தோழர்களின் பிரச்சாரம் கம்பீரமாய் கால்பதிக்க ஆளை விட்டால் போதுமென்று தேனாம்பேட்டை காக்கி ஒதுங்கிக் கொண்டது. பிறகென்ன..கேட்டுக் கொண்டே இருக்க… நான் என்ன கதையா சொல்ல வந்தேன். வாருங்கள் நண்பர்களே! பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்.

துரை. சண்முகம்.

தொடர்புடைய பதிவுகள்:

‘தோழர், தயவு செய்து உங்க சிவப்புச் சட்டையை எனக்குக் கொடுத்துட்டுப் போங்க!’

பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!


பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!


அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!


சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!

ஓ ! நக்சல்பரி …

 

 

 

ஓ !  நக்சல்பரி …

எங்கள் காடுகள் பூத்தாய்
காற்றினில் சிலிர்த்தாய்
வயல்வெளி வியர்த்தாய்
மலைகளில் வீசினாய்
நதிகளில் கலந்தாய்
எங்கள் மண்ணின் உவப்பே நக்சல்பரி !

 

 
எங்கள் கைகளில் சிவந்தாய்
கண்களில் வழிந்தாய்
உதிரம் பெருகினாய்
இதயம் நிறைந்தாய் நக்சல்பரி !

 
எங்கும் எதிலும்
பொங்கும் பொலிவே நக்சல்பரி !
ஓ ! நக்சல்பரி…

 

 

– துரை.சண்முகம்

‘தோழர், தயவு செய்து உங்க சிவப்புச் சட்டையை எனக்குக் கொடுத்துட்டுப் போங்க!’

சிவப்புச் சட்டை

சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கச் சொல்லி
உச்சநீதிமன்றம் உத்திரவிட்டபிறகும்,
கோர்ட்டு தீர்ப்பு என் கொண்டை ஊசிக்கு சமம்,
என இறுமாந்திருந்த ஜெயலலிதாவின் தலையில்
இடியென இறங்கியது
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்
போராட்டம்!

பார்ப்பன பாசிச ஜெ! அரசே
உடனே பாட புத்தகங்களை வழங்கு!
தனியார் பள்ளி முதலாளிகளின்
கட்டணக் கொள்ளையை ஒழித்துக் கட்டுவோம்!
கட்டாய இலவசக் கல்வி உரிமைக்குப் போராடுவோம்!

மின்னல் கீற்றுக்களாய் வெடித்துக்
கிளம்பிய முழக்கங்களால்,
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பு.மா.இ.மு. மூட்டியத் தீ
போயசு தரப்பையை போட்டு பொசுக்கியது!

கல்விக்குத் தெய்வம் சரஸ்வதியாய் இருந்திருந்தால்
இந்நேரம் கல்லாவில் பங்குகொடுத்து அவளையும்
சசிகலாவைப் போல் தோழியாக்கி துணைக்குச்
சேர்த்திருப்பார் ஜெ!

தடுமாறும் மாணவர், பெற்றோரை தடுத்தாட்கொண்டு
போராட புதுத்தெம்பளித்து, இன்றைய தேதியில்
'கல்விக்குத் தெய்வமாய்'
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
காட்சியளிப்பதால், சும்மா விடுவாரா அம்மா!

அம்மாவுக்குப் பிடித்தது இரண்டே இரண்டுதான்,
ஒன்று  அம்மா எழுந்து பேசினால்
எல்லோரும் பெஞ்சைத் தட்ட வேண்டும்;
அம்மாவை எதிர்த்துப் பேசினால்
அவர் நெஞ்சைத் 'தட்ட' வேண்டும்!

அம்முவுக்கு அடங்குமோ பு.மா.இ.மு!
அடங்காமல் போராடியதால்
அடித்து உதைத்து கைது, சிறை..

புழல் சிறைக்கு அனுப்பியவர்கள் போக
பதிமூன்று பேர் இருபத்தியோரு வயதுக்கும் கீழே உள்ள
இளங் 'குற்றவாளிகள்' என்று சைதை
கிளைச்சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

வழிநடத்திச் சென்ற ஒரு தோழரைத் தவிர
மற்ற மாணவர்களுக்கு சிறை புதிது.
ஏற்கனவே அங்கு குற்றம் சாட்டப்பட்டு சிறையிருக்கும்
இளம் கைதிகள் புதியவர்களை அடிப்பார்கள்,
அதட்டுவார்கள், வேலை வாங்குவார்கள்...
என்ற எண்ணத்தில்  புதியவர்கள்
அச்சமுற்ற விழிகளுடன் அடியெடுத்து வைத்தனர்.

சிறை ஒன்றும் உலகை விட்டு தனியே இல்லை
சமூகத்திலுள்ள சகல பிரச்சினைகளும்
சிறையிலும் உண்டு!
சிறைபடுத்தலோடு முடிவதில்லை... சிறைக்குள்ளும்
தொடர்கிறது போராட்டம்... என புதியவர்களுக்கு
புரியவைத்து நிமிரவைத்தார் வழிநடத்திய தோழர்.

'என்ன எல்லாம் சமச்சீரா...
சரி, சரி எல்லாரும் சட்டைய கழட்டு!
அங்க மச்ச அடையாளம் காட்டு'
என ஆணையிட்டார் ஜெயிலர்.

'நாங்க ஒண்ணும் கிரிமினல் அல்ல, அரசியல் கைதிகள்
சட்டையை கழட்டமாட்டோம் என
பதிலளித்தனர் மாணவர்கள்.

ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால்
வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும்
சரத்குமார் வாழும் நாட்டில்,
ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத
மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து
வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த
விசாரணைக் கைதிகள்.

'ஏய் என்ன... விட்டா எங்கிட்டயே எதுத்து பேசுற?
சட்டப்படி சட்டைய கழட்டி மச்சம் பாக்கணுன்டா?'

'சார்! வாடா போடான்னு பேசாதீங்க... நாங்க
நக்சல்பாரிங்க... மரியாதை கொடுத்துப் பேசுங்க...
நீங்க என்ன செஞ்சாலும் சட்டையை
நாங்க கழட்ட மாட்டோம்.
வேணும்னா கைல, முகத்துல பாத்துக்குங்க...'

சட்டத்தை கழட்டுவோமே தவிர,
சட்டையைக் கழட்ட மாட்டோம்
என்று தீரத்துடன் அவர்கள் கருத்துரைக்க,

'எலே சின்னப்பயகன்னு பேசுனா, என்ன
மிரட்டுறிகளா? பெறவு தனித்தனியா செல்லுல
போட்டுர்வேன் ஆமாம்' என்று பொரிந்து தள்ளியபடி
அவர்களின் கைகளைப் பிடித்து
ஜெயிலர் மச்சம் தேடினார்.

வருகிற போகிறவனின் பையைத் தடவி மிச்சம் பார்த்தே
பழக்கப்பட்ட ஜெயிலர், மச்சம் தேடியது பார்த்த
மற்ற கைதிகளுக்கு ஆச்சரியத்திலும், ஆச்சர்யம்.

'என்னலே, மச்சம் நிறம் மாறிக் கெடக்கு!
இது மச்சமாலே?
பேனா மையால புள்ளி வச்சிகிட்டு ஏமாத்துறீக...
இதெல்லாம் நல்லா இல்ல ஆமாம்...'
வெறுப்பேறிய ஜெயிலரின் கோபப்பார்வையை
 'சார்! இது அதிர்ஷ்ட மச்சம் அப்படித்தானிருக்கும்'
என அலட்சியமாக மறுத்து ஒதுக்கினர் மாணவர்கள்.
'என்னமோ போய்த் தொலைவே! சரி எழுதணும்,
நீ என்ன சாதி?'

'சார்! நாங்க சாதி சொல்ல மாட்டோம்,
சாதி பாக்க மாட்டோம் இது எங்க கொள்கை!'

'லே! உன் கொள்கைய நீ வச்சுக்க, ரெக்கார்ட்ல
எழுதணும்ல... என்ன சாதில?'

'கம்யூனிஸ்டுன்னு எழுதுங்க..
அடிச்சாலும் சொல்லமாட்டோம்!'

என்ன முயற்சித்தும் சாதியை எழுதமுடியாமல்,
முகவரி கேட்பதன் மூலமாக தெரு, ஏரியாவை வைத்து
சாதியை மோப்பம் பிடிக்க முயற்சித்தார் ஜெயிலர்.

'எலே ஏட்டிக்கு போட்டியாவே போறீக... என்ன பத்தி
தெரியாது. உரிச்சி உப்பு தடவிடுவேன் ஆமாம்!' என
மிரட்டியும் மாணவர்கள் மசியவில்லை.

பொங்கி வந்த கோபத்தை அங்கிருந்த
தண்ணீரைக் குடித்து தணித்துக் கொண்ட ஜெயிலர்,
'உங்களப் போல நானும் சிறு வயசுல... கம்யூனிஸ்டு
அது இதுன்னு வெறப்பா திரிஞ்சவன்தான்... படிச்சு
முன்னேற வழிய பாக்கணும்ல. இப்படியே கட்சி
கிட்சின்னு திரியக்கூடாது...'

லத்திசார்ஜ் பலிக்காதபோது
புத்திசார்ஜை கையிலெடுக்கும்
போலீசின் தந்திரம் வெளிப்பட்டது ஜெயிலரிடம்.

'நாங்க பகத்சிங்கைப் போல நாட்டுக்காக இறுதிவரை
போராடுவோம்!' மாணவர்கள் மறுத்துரைக்க...

'எப்பா.. என்ன ஆளவிட்டா போதுண்டா சாமி...' என
மேற்கொண்டு பேசாமல் அறைக்குள்
அடைத்தார் அவர்களை.

நிமிர்ந்து பார்த்தாலே பொளந்து கட்டும் ஜெயிலர் இந்த
மாணவர்களிடம் இவ்வளவு பொறுமையாக
நடந்துக் கொள்வது மற்ற விசாரணைக் கைதிகளுக்கு
புரியாத புதிராகவும், மாணவர்கள்
மேல் ஈடுபாட்டையும் கொடுத்தது.

'சார்! இது சாப்பாடா? வாய்ல வைக்க முடியல.
நல்ல சோறா கொடுங்க. சாய்ங்காலத்துல டீ வேணும்.
படிக்க புத்தகம் வேணும்...' என்று அடுத்தடுத்து
தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து
வாதாட ஆரம்பித்தார்கள் மாணவர்கள்.

எதுவும் கேட்டாலே, 'உரிச்சு உப்பு தடவிடுவேன்...'
என மிரட்டும் ஜெயிலர்...
'தம்பிகளா... இங்க இவ்வளவுதான் வசதி.
கலாட்டா பண்ணாதீங்க...' என இறங்கு முகத்தில்
பேச ஆரம்பித்தார்.

'அப்படின்னா எங்களயும் எங்க தோழர்களோட
புழல் சிறையிலேயே
சேத்துப் போடுங்க. அதுவரை உண்ணாநிலைப்
போராட்டம்தான்' என மாணவர்கள் திடமாக
முடிவெடுத்து அமர்ந்துவிட்டனர்.

'சட்டத்துல இடமில்லை புரிஞ்சுக்குங்க.
உங்களுக்காக மேலிடத்துல பேசறேன்.
சாப்பிடுங்க...' என்று ஜெயிலர்
எவ்வளவு சமாதானம் பேசியும் ஏற்காமல் மாணவர்கள்
தன்நிலையில் உறுதியாய் இருந்தனர்.

அங்குமிங்கும் ஜெயிலரின் தொலைபேசி பறந்தது.

இறுதியில், 'எலே! நாளைக்கு புழல் போறீகளே,
போய் சாப்டுங்களே...' என்றார்.
அமைப்பு வழி தகவல் சரிதான் என்று
அறிந்த பின்னே மாணவர்கள்
உண்ணாநிலையை முடித்து சாப்பிடச் சென்றனர்.

இரவெல்லாம்... சாதி எதிர்ப்பு, சமூக நடப்பு பற்றி
அவர்கள் பாடிய அமைப்புப் பாடல்கள்
அறையைத் தாண்டியும் ஒலிக்க பக்கத்து அறைகளில்
அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளுக்கு
ஓரிரு நாள் பழக்கத்தில் இவர்களோடு நாமும் இல்லையே
என்ற ஏக்கம் இவர்களாக நாமும் இல்லையே
என விரிவடைந்தது.

இவர்களைப் பிரியப் போகிறோமே
 என்ற அவசரத்தில் பலரும் தங்களுடைய வாழ்நிலை,
வழக்கு சூழ்நிலை, மீண்டும் தங்களோடு
தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் என
இரவு நெடுநேரம் மாணவர்களிடம் உறவாடினர்.

பழகப்பழக விசாரணைக் கைதிகளாக இருக்கும்
இளைஞர்களின் ஆழ்மனதில் கிடக்கும் அழகிய
மனித உணர்ச்சிகளை மாணவர்களும் பயின்றனர்.

விடிந்தது. எல்லா சிறை விதிமுறைகளும் முடிந்து
மாணவர்கள் புழல் சிறைக்குப் புறப்படத் தயாராயிருந்த
தருணத்தில் விடைபெறப்போகும் ஏக்கத்துடன்
பார்த்துக் கொண்டிருந்த விசாரணைக் கைதிகளில்
இளைஞர் ஒருவர் 'தோழர், தயவு செய்து உங்க
சிவப்புச் சட்டையை எனக்குக் கொடுத்துட்டுப் போங்க!'

'இது ஏங்க..?' வியப்புடன் கேட்டார் மாணவத் தோழர்.

'இல்ல, அதோடபவர் என்ன, பாதுகாப்பு என்னன்னு
எனக்கு தெரிஞ்சு போச்சு. தயவு செய்து கொடுத்துட்டுப்
போங்க தோழர்...'

இப்போது சட்டையைக் கழட்ட
தோழர் தயங்கவில்லை...

—- – துரை.சண்முகம்

நன்றி: புதிய கலாச்சாரம் நவம்பர் 2011

“அதோ அது அங்கிருந்துதான் வருகிறது….”

அடையாளம்

ஒரே பக்கத்தை காட்டி நிற்கின்றன.எல்லோரது கைகளும்

கடந்துபோக அஞ்சி

வெறிநாய் பின்வாங்கும் அந்தப் பாதையில்

குதறப்பட்டுக் கிடக்கும் ஒருபெண்ணின் கைகள்

குறிப்பாக அடையாளம் காட்டுகிறது

“அதோ அவர்கள் அந்தப்பக்கம்தான்…..”

பட்டப்பகலில்

பணப்பையில் பிடுங்க வந்தவனிடமிருந்து தப்பித்து ஓடி

பஸ்ஸாண்டு ரவுடிகளிடம்

பாதுகாப்பாக ஒளிந்துகொண்ட

அப்பாவி ஒருவரின் கைகள் அடையாளம் காட்டுகின்றன.

“அதோ அந்தப்பக்கம்தான்…..”

தறிகெட்டு ஓடிவரும் பன்றியின் கால்கள்

பூக்கடை, பழக்கடைகளைத்

தள்ளிவிடாமல் சென்றபிறகும்

விரட்டிவசைபாடும் சாலையோர வியாபாரிகள்

நிதானமாக வந்து எட்டி உதைக்கும்

கால்களைப் பார்த்து வாயடையத்து

ஆத்திரத்துடன் அடையாளம் காட்டுகிறார்கள்,

“அதோ அது அங்கிருந்துதான் வருகிறது….”

வயலுக்குள் புகுந்து

நாசம் செய்வதைத் தடுக்க

ஒரு வைக்கோல் பொம்மையை நம்பும் விவசாயி

தனது கோரிக்கை ஊர்வலத்தில் புகுந்து

நாசம் செய்வதைப் பார்த்து

குலைநடுங்கச் செல்கிறார்,

“அதோ அதுகள் ஓடுப்போனது அங்கேதான்….”

மலக்கிருமிகளுக்குள்ளும்

வாழ்வதற்கான போராட்டம் நடக்கிறது – என்பதை

ஆராய்ச்சியின் முடிவில்

அறிந்து கொண்ட மாணவன்,

தனது போராட்டத்திற்குள் தொற்றி

“போதும் முடித்துக்கொள்!

போதும் முடித்துக்கொள்!” என்ற

புழுத்த அடிமைகளைப் பார்த்து

ஆச்சிரியத்துடன் அடையாளம் காட்டுகின்றான்

“அதோ அவைகள் அந்தப் பக்கம்தான்……”

உயிரியல் பூங்காவில் இருந்து தப்பித்த

மிருகத்தின் தடையங்களைச் சொல்வதில்

கருத்து வேறுபாடு இருந்தாலும்

பாதிக்கப்பட்ட மக்கள்

அனைவரது கைகளும் மாறுபாடில்லாமல்

ஒரேபக்கத்தை அடையாளம் காட்டுகின்றன

“அதோ, அந்தப்பக்கம்தான்

காவல் நிலையம்”

-துரை.சண்முகம்.

நன்றி: புதிய கலாச்சாரம் 2002

தொடர்புடைய பதிவுகள்

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

• “தேர்தல் பாதை திருடர் பாதை” –
என்றவுடன்,
அப்படியானால் ஓட்டுப்போடும் நானுமா?
என உள்ளர்த்தம் புரிந்து கொண்டு
கோபப்படும் நண்பா,

உள்ளபடியே சொல்!

“இனி எவன் வந்தாலும்
ஏறுன விலைவாசி இறங்கப் போவதில்லை,
எல்லா பயலும் திருடனுங்க” என
எல்லாமும் நீயே சொல்லிவிட்டு,
சரி… எவனுக்காவது ஓட்டுப்போடுவோம்
என நீ கிளம்பிப்போவது யோக்கியமா?

• கட்டை விரலில் வேப்பெண்ணை தடவினால்
கை சூப்பும் பழக்கம்
அத்தோடு நின்றுவிடும்,
இது என்ன கெட்ட பழக்கமோ?
எத்தனை முறை உன் முகத்தில்
கரி பூசினாலும்
மத்தவனுக்கும் ஒரு வாய்ப்பளிப்போம்
என மாறி, மாறி ஓட்டுப் போடுவது
மனநோயன்றி வேறென்ன?

• கண்டதையும் மிதிக்கக் கூடாது,
கால்தேயக் கூடாதென
செருப்பு போடுவதற்கும்
ஒரு காரணமிருக்கிறது,

கண்டவனும் உன்னை மிதித்தும் கூட
கால் கடுக்கப் போய்
இன்னும் நீ ஓட்டுப் போடுவதில்
என்ன நியாயமிருக்கிறது!

• ஓட்டுப் போடுவது
மிகப்பெரிய ஜனநாயகக் கடமையெனும்
அப்துல்கலாமின் பிரச்சாரம் கேட்டு
அவர் குடியிருக்கும் தெரு நாயே தலைசுற்றி ஓடும்போது..
அதில் ஒன்றிப் போக
நீ என்ன மூளையில்லாத முண்டமா?

ஓட்டுரிமைதான்
மிகப்பெரிய உரிமையென
உனக்கு கிர்ரு… ஏற்றும் சூர்யாவுக்கு
அடுத்த படத்துக்கு … முதலாளியிடமிருந்து
பல கோடியில் ‘அட்வான்ஸ் ரெடி’.

ஓட்டுப் போட்டு ஓட்டுப் போட்டு
உழைப்புக் கேற்ற கூலி கேட்டு
உன் உரிமைக்காக போராடும் பொழுது
ஆறடி அதிவிரைவுப் படையோடு
உனக்கு பல ரவுண்டு தடியடி!

• கல்வி உனக்கு உரிமையில்லை…
வேலை உனக்கு உரிமையில்லை…
விவசாயிக்கு விலைநிர்ணய உரிமையில்லை…
நெசவாளிக்கு கைத்தறி நூல் உரிமையில்லை…
தொழிலாளர்க்கோ சம்பளவிகிதம், பணிப்பாதுகாப்பு,
தொழிற்சங்க உரிமையில்லை…

வாழ்வுரிமை இல்லாத வாக்குரிமை எதற்கு?

• உனது “ஓட்டுரிமையை’ கரைசேர்க்க
அரசாங்கம் இரண்டு வாகனம் வைத்திருக்கிறது.
சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டு செத்துப்போனால்
உனக்கு நூற்றி எட்டு ஆம்புலன்சு
சினங்கொண்டு உரிமைக்காக போராடினால்
உனக்கு நூறு வண்டி போலீசு…
சரியாகச் சொன்னால் உனது சின்னம் ஆம்புலன்சு!

நூறா?  நூற்றி எட்டா?
வாழ்வுரிமையா… ஓட்டுரிமையா?
மானத்தோடு பொங்கியெழுவதா…
இல்லை ஒரு ரூபாய் அரிசியிலேயே தங்கி விடுவதா?
இந்தத் தேர்தலில்
உன்னைத் தெரிவு செய்ய வேண்டிய ஓட்டு இது!

• “எங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டும்…
எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும்…
எங்கள் ஊருக்கு மருத்துவமனை வேண்டும்…’’
இப்படி உரிமையாய் நீ கேட்டதனைத்தையும் கொடுக்காமல்
ஓசியிலே மிக்சி,கிரைண்டர் என்றால் உள்ளர்த்தம் என்ன?

பிச்சையாய் எதையாவது வாங்கிக் கொண்டு
ஓட்டுப் போடு!
உரிமையெனக் கேட்பவனை உள்ளே போடு!
இந்தத் தேர்தல் ஜனநாயகத்தால் உனக்கு ஆவதென்ன?

நம் தேவைகளைப் புறக்கணிக்கும்
இந்தத் தேர்தலையே புறக்கணி…
இதைத் தெரிந்து கொள்ளாமல்
கிரைண்டர்.. பிரிட்ஜ் என இண்டு இடுக்கில் புகுந்து கொண்டு வாழும்
என்ன ஜந்து நீ?…

• தட்டைக் காட்டி
போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும்
ஓட்டைக் காட்டி
தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும்
வாழ்வு ஒன்றுதான்!

நீயாக எதையும் கேட்க முடியாது…
“அம்மா அந்த பிரிட்ஜில் இருக்கும்
கெட்டித்தயிரை எடுத்துப் போடுங்கள்!’’ என்று
பிச்சைக்காரன் உரிமையுடன் கேட்கவா முடியும்?

தருவதை அனுபவித்து
நிறைவுறும் திருவோட்டை
பிச்சைக்காரன் கூட ரசிப்பதில்லை…
நீயோ, அதை சிந்தனையாய் ருசிக்கிறாய்…
உண்மையில் பெறுவதாக நினைத்துக் கொண்டு
அனைத்தையும் இழப்பவன் நீ…

விவசாய நிலங்களை எடுத்து
முதலாளிகளுக்கு போட்டுவிட்டு
ஒரு ரூபாய் அரிசியை வாங்கிக் கொள்ளும் முட்டாள்
உன்னைப் போல் உலகில் உண்டா?

பன்னாட்டு கம்பெனிகளிடம்
உன் சிறு தொழில் உரிமைகளை இழந்துவிட்டு
அவன் வண்ணத் தொலைக்காட்சியை வாங்குவதற்கு
வரிசையில் நிற்கும் உயிரினம் உண்டா?

குடிநீரும், இயற்கை வளங்களும்
குடிமக்களின் உழைப்பும்
தனியார்மயத்துக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு
ஐய்! மடி கணிணி கிடைக்கப்போகிறதென்று
ஓட்டுப்போட்டு ஏமாறும்
உன்னைப் போல் ஒரு நாயுண்டா? புழு உண்டா?

ஏழைகளுக்கு நல்லது செய்வதாகச் சொல்லி
அம்பானிக்கும், டாடாவுக்கும் நாட்டை
அள்ளிக் கொடுக்கும் ஏற்பாடுதான் இந்த தேர்தல்…
இதற்கு ஆள்பிடிக்கும் களவாணிகள்தான் ஓட்டுக்கட்சிகள்…
நரிகளின் ஊளையை நம்பாதே…
பின்பு கிட்னியும் போய்விட்டதே என்று வெம்பாதே!

ஈழத் தமிழரை போட்டுத் தள்ளிய காங்கிரசும்
இங்கிருக்கும் தமிழரை டாஸ்மாக்கில் ஊற்றித் தள்ளும் கலைஞரும் கூட்டணி…
“குடிகாரன்’ என விஜயகாந்தை “கொஞ்சிய’ அம்மாவும்
நீதான் ஊற்றி கொடுத்தாயா என ஆசைப்பட்ட விஜயகாந்தும் கூட்டணி…

திருடர்களுக்குள் கூச்சமில்லாமல் கூட்டணி
தேர்தலுக்கு முதல்போட்டு திரைமறைவில் காத்திருக்கிறான்
டாடா… பிர்லா… அம்பானி…

ஓட்டுப்போடும் உழைக்கும் வர்க்கமே! நீ மட்டும்
நெசவாளி, விவசாயி, மாணவன், மீனவன் எனத் தனித்.. தனி…
எதிரிகளின் கூட்டணியை அலசி ஆராய்ந்து
எவன் ஜெயிப்பான் என்பதா… நம் பணி
எதிரிகளுக்கெதிராக உழைக்கும் வர்க்கத்தை ஒரே கூட்டணியாய்
எழுந்து போராட வைப்பதுதான் அறிவு இனி…

என்ன இருந்தாலும்
ஓட்டுப்போடாவிட்டால் என்ன ஆகும்?
நம்மை யார்தான் ஆள்வது? என்ற
அடிமைத்தனத்தின் அதிர்ச்சி வினா தேவையில்லை,

நீ ஓட்டுப்போடாவிட்டால்… ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை,
தேர்தல் ஜனநாயகம் தீர்ந்து போனதனால்,
கருணாநிதி சொத்தை நாட்டுக்கு எழுதிவைத்து விட்டு
திருவாரூர் திண்ணையில் போய் படுத்துக் கொள்ளப் போவதில்லை…
ஜெயலலிதா முடியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு
தெருவில் அலையப் போவதில்லை…
கேப்டன் சுய நினைவுக்கு வரப் போவதுமில்லை…

மாறாக, நாட்டை ஆள்வது
ஐ.ஏ.எஸ்., போலீசு, இராணுவம் போன்ற அதிகாரவர்க்கமும்
ஆளும் வர்க்கமும் என்ற உண்மை தெரிய வரும்.
நீ ஓட்டே போடாவிட்டாலும்
எப்பொழுதும் போல் முதலாளிகள் நாட்டைச் சுரண்டும்
உண்மை தெரிந்துவிடும்.

மன்மோகன்சிங் பழையபடி
உலகவங்கி வேலைக்குப் போய்விடுவார்,
சோனியா இத்தாலிக்குப் போய்
பத்துப்பாத்திரமா தேய்க்கப் போகிறார்?
சுவிஸ் வங்கியில் கிடக்கும் சிறுவாட்டுக் காசில்
சிக்கனமாய் குடும்பம் நடத்துவார்.
ராகுல்காந்தி இந்தியாகேட்டில் பானிபூரியா விக்கப் போகிறார்,
பழையபடி டாடா, வேதாந்தாவோடு சேர்ந்து தேசத்தையே விற்கப் போகிறார்…

மோடி என்ன இராமன் கோயில் வாசலிலே
குரங்கை வைத்து பிச்சை எடுக்கப் போகிறாரா?
அத்வானிதான் அனுமார் வேசம்போட்டு
தெருத்தெருவாய் கையை நீட்டப் போகிறாரா?
வழக்கம்போல முதலாளிகளின் பங்குச் சந்தையில்
இராமஜெயம் கல்லா கட்டும்…

ஆதலால், நீ ஓட்டுப் போடாததால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை..
இந்த நாட்டில்,
எய்ட்ஸ் வந்து செத்தவரை விட
எலக்ஷன் வந்து செத்தவரே அதிகம்…

தொடர்ந்து ஓட்டுப்போடுவது உடல்நலத்திற்குக் கேடு…
சந்தேகம் இருந்தால்
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு உள்ள சத்தும்போய்
தேசமே மருத்துவமனையில் நிரம்பி வழிவதைப் பாரு…

என்ன இருந்தாலும்,
போட்டுப் போட்டு பழகிடுச்சு
என்னால் போடாமல் இருக்க முடியாது…
கையில் இருக்கிற ஓட்டை எங்காவது போட்டே ஆகவேண்டும்…
என்று தவிக்கிறாயா?
நல்லது நண்பா,
உன் பொன்னான வாக்கை
யாருக்கும் போட்டு வீணாக்காதே…
நாட்பட்டு போன அந்த நஞ்சை
பாம்பு, பல்லி, பன்றிகள் வாய்வைக்க முடியாத
கண்காணாமல் ஊருக்கு வெளியே உள்ள
ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில் கொண்டு போடு…

இழிவாய் இருப்பது
போராடுவதை விட எளிதாய் இருக்கலாம்…
ஆனால், மனித உணர்வுக்கு சரியாய் இருக்குமா?

உன் கண்ணுக்கு முன்னே
இந்த போலி ஜனநாயக அரசமைப்புக்கெதிராக
போராடும் மக்களிடம் போய்..
என்னையும் உழைக்கும் வர்க்கமாய் இணைத்துக் கொள்கிறேன்…
என்று நீ வாக்களிப்பதே அழகினும் அழகானது.

___________________________________________________

-துரை. சண்முகம்
__________________

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவு:

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

 

 

பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!

பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!
எந்தக் கவிதை நாம் பாட?
கண்ணில் தெரியும் பூக்களையா!
காலில் குத்தும் முட்களையா?
எந்த மரபை நாம் தேட?

 

மாமல்லபுரத்துச் சிற்பங்கள்
தரையில் நிழல்விழா தஞ்சைக் கோவில் அற்புதங்கள்
சூளகிரி இசைத் தூண்கள்…. புடைப்புச் சிற்பங்கள்
இப்படி மூளியாய் கிடக்கும் சிலைகளுக்கும்
முன்கதை ஒன்று இருக்கிறது.
ஆனால் கூலியாய் நிலம் பெயர்ந்து
பெங்களூரிலும், கல் குவாரியிலும்
பிய்த்து எறியப்படும் உழைக்கும் மக்களின்
கல்லாய்ச் சமைந்த வாழ்க்கையை
எழுப்புவதற்கான இலக்கியம் எங்கே?
குண்டு குண்டாய் இருக்கும்
கொழுப்பேறிய இலக்கியமெல்லாம்
சுரண்டுபவனின் நக அழுக்கை அல்லவா
விண்டு வைத்து விருந்து படைக்கிறது
கண்டதுண்டா! நீங்கள் கண்டதுண்டா!
நக்சல்பாரிகளின் துண்டறிக்கைகள் அல்லவா
நமது உழைக்கும் மக்களின் குரலை
உயர்த்திப் பிடிக்கிறது
காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அல்லவா
மறுக்கப்பட்ட நம் இலக்கியம் இருக்கிறது!
தருமபுரிக்கு
ஆருயிர் நீட்டிக்கும்
அரும்சுவை நெல்லிக்கனியை
அதியமான் அவ்வையாருக்கு கொடுத்ததா பெருமை?
மக்களின் அரசியல் வாழ்வு நீடிக்க
தம் ஆருயிரையே கொடுத்த
எங்கள் அப்பு, பாலன் தந்த
நக்சல்பாரி பாதையல்லவா பெருமை!
தருமபுரி கரும்புக்கு
சருக்கரை விழுக்காடு அதிகமாம்!
இருக்காதா பின்னே,
கணுக்கணுவாய்
இனிய பாட்டாளி வர்க்கக் கனவுகளை
வேர் இறக்கிய
நக்சல்பாரிகள் மண்ணில்
நட்ட பயிராயிற்றே!
அரசாங்கம் அழகாய் கதைவிடுகிறது
ஈரமற்ற மண்…
சாரமற்ற கலிச்சோறு…
வேலையற்ற மக்கள்…
பின்தங்கிய மாவட்டமாதலால்…
பின்தங்கிய மனநிலையினால்
மக்கள் நக்சல்பாரிகள் ஆகிவிடுகிறார்களாம்!
மடையர்களா!
வேலை இல்லாதவனா புரட்சியாளன்
வெட்டி வேலை செய்பவன் போலீஸ்காரன்.
பின்தங்கிய மனநிலையா புரட்சி?
முன்னேறிய உணர்ச்சி அல்லவா புரட்சி!
முன்னேறிய அறிவு அல்லவா புரட்சி!
முன்னேறிய உழைப்பு அல்லவா நக்சல்பாரி!
கதை முடிக்கப் பார்ப்போரே!
அது முடியாது
நாங்கள் பகத்சிங்கின் தொடர்ச்சி.
சில குழந்தைகளுக்கு
பொம்மைகள் போதும்
அழுகையை நிறுத்திக் கொள்ள
சில குழந்தைகளுக்கோ
அம்மா வேண்டும்!
கிலு கிலுப்பைகளோடு அடங்கிவிடும்
சில குழந்தைகள்.
சில குழந்தைகளுக்கோ தாயின் குரல் வேண்டும்!
வயிறு நிறைந்தால்
தூங்கிவிடும் சில பிள்ளைகள்.
சில பிள்ளைகளுக்கோ அது முடியாது
அடுத்து கதை÷வண்டும்.
அவர்களுக்குச் சொல்லுங்கள்
இந்தக் கதையை…
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏழõம் ஆண்டு
செப்டம்பர் இருபத்தி எட்டாம் நாள்
ஒரு பஞ்சாப் தாயின் பிரசவ வலி
புதிய இந்தியாவையே ஈன்றெடுத்தது.
கருவறையை விடவும் இருண்டு கிடக்கும்
நாட்டின் நிலைமையை
கர்ப்ப வெப்பத்திலேயே கண்டுணர்ந்து,
தன் மேனியில் வழிவது
தாயின் இரத்தம் மட்டுமல்ல
தாய்நாட்டின் இரத்தம் என்பதை
பார்த்து, பார்த்து
அடிமைத்தனத்தின் பனிக்குடம் உடைத்து
தொப்புள் கொடியின் தாமதம் அறுத்து
பிறப்பின் கலகம்
அங்கே பகத்சிங் என்று பெயரெடுத்தது.
அடிமை இந்தியாவின் தாலாட்டில்
அடங்க மறுத்து, அழுது சிவந்து
அவன் கையும் காலும்
எல்லோர் முகத்திலும் எட்டி உதைத்தது.
வெறும் வயிற்றுப் பசிக்காக
வளர்ந்தவனாய் இருந்திருந்தால்
அம்மா… அப்பா என்று மட்டும்
அழைத்திருப்பான்.
வர்க்கப் பசியோடு வளர்ந்த பகத்சிங்
அ… ம்…. மா, அ… ப்… பா… நாடு என
விரிந்த பொருளில்
பேசத் தொடங்கினான்.
பன்னிரெண்டாம் அகவையில்
பள்ளிக்கூடத்திலிருந்து
யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்
துள்ளியெழுந்து
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தை
பார்க்கப் போனான்.
அங்கே வெள்ளையன் குதறிய
இந்தியப் பிணங்களை
தன் கண்களில் விதைத்தான்.
கருகிய இரத்தம் இதயத்தில் உறைய
தன் காலத்தை வெறுத்தான்.
சிவந்து கிடக்கும் இந்தியக் கனவையும்
சிதறிக் கிடக்கும் இந்தியப் புரட்சியையும்
ஒன்று சேர்க்கும் உறுதியுடன்
கையில் அள்ளிய களத்தின் மண்ணை
தன் (சட்டைப்) பையில் திணித்தான்!
மண்ணைத் தின்று வளர்ந்தவர்களே!
உங்களில் எத்தனை பேருக்கு
இந்த மண்ணைப் பற்றிய அக்கறை உண்டு?
ணூ வெறும் வீட்டுப் பாடம் போதுமா?
பகத்சிங் போல நாட்டுப்பாடம் படித்தாலே
நல்ல புத்தி வந்து சேரும்.
இல்லையேல்
ஜாலியனாவது… பாக்காவது
அமெரிக்காவின்
கூலி என் பாக்கியம் என்று
சட்டைப் பையில் மட்டுமல்ல
சதைக்குள்ளும் அந்நிய நரகலின்
ஆணவம் ஊரும்.
பகத்சிங்கும் தான் படித்தார்!
“”புரட்சி ஒன்றே என் விருப்பப் பாடம்
நாட்டுப்பற்றே உயர்நிலைக் கல்வி
கம்யூனிசமே உயிரியல் படிப்பு”
என்ற விடுதலைக் கல்வியின் வீரியத்தை
விளக்கிச் சொல்லுங்கள் பிள்ளைகளிடம்.
சுயநலம் என்ற தோல் வியாதி
உங்கள் பரம்பரைக்கே தொற்றாது.
“இளமைக்கேற்றவேலை வாய்ப்பு
இந்தியப் புரட்சியில் இருக்குது
அந்நியன் ஆதிக்கம் ஒழிப்பதிலேயே
நம் அனைவர் நலனும் பிறக்குது”
என்று பகத்சிங் சொன்ன கருத்துக்களோடு
பழக விடுங்கள் பிள்ளைகளை.
முதலாளித்துவம் எனும் கெட்ட பழக்கம்
உங்கள் வாரிசுகளுக்கே வராது.
எனக்கு மட்டுமே வாழ்வேன் என்று
இதயத்தை இழுத்து நடக்கும்
“வாதம்’ அவர்களுக்கு வராது!
போராடத் தூண்டும் பகத்சிங் வாழ்வு!
பொறாமைப்பட வைக்கும் அவன் சாவு!
கரைக்கப்பட்ட பகத்சிங் சாம்பலால்
உணர்ச்சி பெற்ற சட்லெஜ் நதி இன்றோ…
சகலரையும் சந்தேகத்துடனே பார்க்கிறது.
எதுவுமே செய்ய முன்வராத
இவர்களை நம்பியா செத்தோம்
அச்சத்தில் தியாகிகள் கனவு உறைகிறது!
இவர்களை நம்பியா இருக்கிறோம்
பீதியில் இயற்கை நடுங்கித் தவிக்கிறது!
சும்மா பகத்சிங் பற்றி பேசாதே!
அவன் பேசவிரும்பியதைப் பேசு
சும்மா தியாகிகள் இரத்தத்தில் ஒளியாதே!
அவர்கள் தெரிவு செய்த பாதைக்கு
வேலை செய்ய வெளியே வா!
அழைக்கிறது புரட்சி நதி!

 

(29.9.2006 அன்று தருமபுரி பெண்ணாகரத்தில் நடைபெற்ற பகத்சிங் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் – கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)

-துரை சண்முகம்

நன்றி: புதிய கலாச்சாரம்