• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 216,726 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

இளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ!

சீனப் புரட்சியின் பின்னணியில் ஒரு பிற்போக்கான குடும்பத்தை சேர்ந்த டாவொசிங் எனும் பெண் புரட்சியில் பங்கெடுக்கும் உணர்வுப்பூர்வமான புதினத்தை ‘இளமையின் கீதம்’ என்ற பெயரில் யாங் மோ எழுதினார். இப்புதினத்தைப் பற்றி ஏற்கெனவே புதிய கலச்சாரத்தில் ஒரு அறிமுகக் கட்டுரை வந்திருக்கிறது. இப்புதினம் சீனாவில் திரைப்படமாக எடுக்கபட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் பகிர்வே இப்பதிவு. இந்தப் படத்திற்கு யாங்மோ கச்சிதமான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். புதினத்தின் மையக்கருத்தை சிதைக்காமல் டாவொசிங்கின் பாத்திரத்தை திரையில் உயிருடன் உலவ விட்டிருக்கிறார்கள். வடிவம் உள்ளடக்கம் என அனைத்திலும் சிறப்பானதொரு திரைப்படம்.

கதை:

மிகப் பிற்போக்கான சீனக் குடும்பத்தை சேர்ந்தவர் டாவொசிங் எனும் பெண். அவள் அம்மா சீன கோமிங்டாங் கட்சியில் போலிசாக பணிபுரியும் ஒருவருக்கு அவளை மணமுடிக்க முயற்சி செய்கிறார். அந்தத் திருமணத்தில் இருந்து தப்பிக்கும் டாவோசிங் தன் உறவினரைத் தேடி வேறு ஊருக்கு வருகிறாள். உறவினர் அந்த ஊரை விட்டே சென்று விட்ட நேரத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள். அவளை அந்த ஊரைச் சேர்ந்த யுயுவாங் காப்பாற்றுகிறான். அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன்.

யுயுவாங்கிற்கும், டாவொசிங்கிற்கும் காதல் மலர்கிறது. யுவாங் படிப்பதற்கு நகரம் செல்ல டாவொசிங் அந்த ஊரிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறாள்.

அந்த காலகட்டத்தில் ஜப்பான் சீனா மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கிறது. அடிமையாக வாழ விருப்பமில்லாத டாவோ ‘சீனா எதிர்த்துப் போரிட வேண்டும், ஜப்பானை வீழ்த்த வேண்டும்’ என்று நினைக்கிறாள். அதைத் தன் மாணவர்களுக்கு பாடமாகவும் நடத்துகிறாள். ஆனால் ‘அரசியலை எல்லாம் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று தலைமையாசிரியரிடமிருந்து கணடனம் வர கோபமாக வேலையை விட்டு விட்டு, நகரத்தை நோக்கி செல்கிறாள். வழியில் சீன கம்யூனிஸ்ட் தோழர்கள் ‘ஜப்பானை எதிர்த்துப் போரிட வேண்டும். நாட்டிற்கு புரட்சி வேண்டும்’ என்று முழக்கமிடுவதைக் கண்டு மகிழ்கிறாள். நகரத்திற்கு செல்லும் டாவோ யுயுவாங்கைச் சந்தித்து அவனுடன் ஒன்றாக வாழ்கிறாள்.

ஒரு நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் மத்தியில் சீன நாட்டின் அடிமைத்தனத்தைப் பற்றி கொந்தளிப்பான பேச்சு வருகின்றது. அந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான தோழர் லுஷூவை டாவொசிங் சந்திக்கிறாள். லுஷூ மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் அமெரிக்க அடிவருடி சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு டாவொசிங் மகிழ்ச்சி கொள்கிறாள். தானும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள். லுஷூ அவளை மார்க்ஸியம் பயிலச் சொல்கிறார்.

மார்க்ஸியத்தை படிக்க ஆரம்பிக்கிறாள் டாவோ. மார்ச் எட்டாம் தேதி நடக்கும் மகளிர் தினக்  கூட்டத்தின் போது போலிசு கலகம் விளைவித்து கம்யூனிஸ்டுகளைக் கைது செய்ய முயல்கிறது. கைதிலிருந்து முக்கிய கம்யூனிஸ்டுகள் தப்பித்தாலும். டயூ மாட்டிக் கொள்கிறான். மாட்டியவன் போலிசின் ஆட்காட்டியாகி விடுகிறான்.

லுஷு தலைமறைவாக இருக்கும் போது டாவொவை சந்தித்து ஒரு பொட்டலத்தைக் கொடுக்கிறார். அதை மறைத்து வைக்குமாறும், ஒரு வேளை மூன்று வாரங்களில் தான் வரவில்லை என்றாள் அதை எரித்து விடுமாறும் சொல்லுகிறார்.

டாவொசிங்கின் இந்த கம்யூனிச நட்பு யுயுவாங்கிற்கு பிடிக்கவில்லை. ஆனால் டாவொசிங் ‘வீட்டில் சுயநலமாய் வாழ்வதை விட நாட்டிற்காகப் போராட வேண்டும்’ என்கிறாள். கருத்து வேறுபாடு முற்றி இருவரும் பிரிகிறார்கள். மறுபுறம் லூஷு கைது செய்யப்படுகிறார்.

சிறையில் லுஷு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். மறுபுறம் அனைத்து தோழர்களும் தலைமறைவாகி விட, என்ன செய்வதென்று தெரியாத அவள் தோழர் லுஷூ கொடுத்த பொட்டலத்தைப் பிரிக்கிறாள். அதில் சிவப்பு வண்ணத்தில் எழுதிய முழக்கங்கள் இருக்கின்றன. இரவோடு இரவாக வீதி வீதியாகப் போய் அதை ஒட்டிவிட்டு வருகிறாள். அந்த நகரம் முழுவதும் பரபரப்படைகிறது. போலிசார் உஷார்ப்படுத்தப் படுகிறார்கள். விளைவு டாவோ போலிசு கண்காணிப்பில் வருகிறாள். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று முதலில் வீட்டைவிட்டு வந்தாளோ அவரே அவளைக் கண்காணிக்கும் போலிசு படையின் தலைவர்.

அங்கிருந்து தந்திரமாகத் தப்பி வேறு ஒரு கிராமத்திற்கு போய் அங்கே ஆசிரியராக அமர்கிறாள். அங்கு பழைய தோழர்களைச் சந்திக்கிறாள். அந்த கிராமத்தில் நடக்கும் கூலி விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுத்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்துகிறார்கள்.

அங்கிருந்து பெய்ஜிங் போகிறாள். ஆனால் பெய்ஜிங்கில் போலிசாரால் கைது செய்யப்படுகிறாள். சிறையில் முன்னர் சந்தித்த தோழர் சிங் எனும் பெண்மணியை மீண்டும் சந்திக்கிறாள். இருவரும் ஒரே சிறையில் அவதிப்படுகிறார்கள். கொடுமைகள், சித்திரவதைகள் எதற்கும் சிங் அஞ்சாததைக் கண்டு ஆச்சரியமடைகிறாள். அப்பொழுது சிங் ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதையைச் சொல்கிறாள். அந்தத் தோழர் கைது செய்யப்பட்டு சிறைக்கு வருகிறார். ஆனால் சிறையில் வழக்கம் போல் காலை எழுந்து உடற்பயிற்சி செய்கிறார்; மற்றவர்களுக்கு கம்யூனிசம் கற்றுக் கொடுக்கிறார்; காவலர்களுடன் நட்பாகப் பழகுகிறார்; மகிழ்ச்சியாக சிறை வேலைகளைச் செய்கிறார்.

அவருக்குத் தூக்குத்தண்டனை உறுதியாகிறது; ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றமுமில்லை. அதே உற்சாகத்துடன் தினமும் சிறையில் கழிக்கிறார். தண்டனை நாள் அன்று அனைவருக்கும் கைகுலுக்கி விடைபெற்று மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு வீரனைப் போல மகிழ்ச்சியாகச் செல்கிறார்.

அவர் தோழர் சிங்கின் கணவர். அவரைப் பார்த்து வியப்படைந்த அனைத்துத் தோழர்களுக்கு சொல்லுவது ஒன்றேதான், ‘நான் மற்றவர்கள் மாதிரி வாழ்க்கையை வெட்டியாக வாழவில்லை, ஒரு கம்யூனிஸ்டாக அனைவருக்கும் பயனுள்ள வாழ்க்கையை நான் வாழ்கிறேன். சிறை, சமவெளி எங்கும் கம்யூனிஸ்டின் வாழ்க்கை மக்களுடன் உறவாடுவது தான்; அதை நான் செய்கிறேன், எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை’ என்கிறார். அந்தத் தோழரின் கதையை கேட்டு டாவோ உற்சாகம் அடைகிறாள். தன் சிறைப் பொழுதுகளையும் உபயோகமாகக் கழிக்கிறாள்.

மீண்டும்  பீஜிங் வருகிறாள். அங்கு சிவப்பு ராணுவமும், சீன கொமிண்டாங் அரசும் ஒருங்கிணைந்து முன்னனி ராணுவப்படையை ஜப்பானுக்கு எதிராக கட்டுகிறது. இறுதியில் இவ்வளவு போராட்டங்களுக்கு பின், சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகிறாள். வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுதான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் டவோசிங்.

டாவொசிங் கட்சி உறுப்பினர் உறுதிமொழியேற்க, சர்வதேசிய கீதம் முழங்குகிறது. டாவோசிங் போராட்டங்களில் பங்கெடுக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

இளமையின் கீதம் – நூல் விமரிசனம்

 எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சில்வர் பாத்திர வியாபாரியும், 27 வயது மட்டுமே நிரம்பிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இளம் தோழர் செந்தில் கடந்த அக்_26 அன்று ரவுடியாக வளர்ந்து வர விரும்பும் இளம் கிரிமினல் கும்பலால் (வயது 17,18,19,) கொல்லப்பட்டார் .

அக்டோபர்_26, அன்று கார்த்திக், நாகேந்திரன் என்ற இளம் கிரிமினல்கள் இருவரும் மது அருந்திவிட்டு தோழர் செந்தில் வசித்து வரும் குறுகலான தெருவில் இரு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக போவது, சாகசம் செய்வது என பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தார்கள். உடனே தோழரும், வேறு சிலரும் கண்டித்தும், எச்சரித்தும் அனுப்பி உள்ளனர். தோழரின் எச்சரிக்கையை தங்களுக்கு விடப்பட்ட சவாலாக கருதிய அந்த‌ கும்பல். அன்று இரவே தங்கள் கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு தோழரை கொல்ல வந்துள்ளனர். அன்று இரவு 10.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த தோழரை கிரிமினல் கும்பல் வயிற்றில் கத்தியால் குத்தி சாய்த்து ஒடிவிட்டனர்

குத்துப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த தோழரை மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் முன் உயிர் அடங்கி விட்டது. பின்பு உடலைப் பிரேதப் பரிச்சோதனை முடித்து அக்டோபர் 27ம் தேதி அன்று மதியம் பெறப்பட்டு, யா.ஒத்தக்கடையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்களும், சில்வர் பட்டறைத் தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு சுடுகாடு வரை ஊர்வலமாக விண்ணதிர முழக்கமிட்டனர்.

தோழரைக் கொன்ற குற்றவாளிகளில் இருவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.  மற்றவர்களை சாட்சியங்கள் இல்லை என பூசி மெழுகி வருகிறது. மறுநாள் பிற குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராடினார்கள். இந்த படுகொலையினால் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யா.ஒத்தக்கடையில் அமைந்துள்ள யானை மலையை சிற்ப நகரம் உருவாக்கப் போகிறோம் என்று கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு திட்டம் போடப்பட்டது.  இத்திட்டத்தை எதிர்த்து “யானை மலை பல்லாயிரம் கோடி மதிப்புடைய கிரானைட் கற்களால் ஆனது”,   “அதை கொள்ளையடிப்பதற்கான சதி தான் சிற்ப நகரம்” என்றும் , ” இத்திட்டம் எவ்வாறு மக்கள் விரோதமானது” என்றும் அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு மக்களிடையே இயக்கம் எடுத்தது. அந்த இயக்கத்தில் பு.ஜ.தொ.முவின் சரியான அரசியல் நிலைப்பாடும், செயல்பாடு கண்டு ஈர்க்கப்பட்டு அமைப்போடு அறிமுகமாகி நெருக்கமானார் தோழர் செந்தில்.

அமைப்பில் இணைந்த பின் அவர் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு அமைப்பு, அரசியல் வேலையும், அது புதிய ஜனநாயகம் பத்திரிகையை மக்களிடம் அறிமுகபடுத்துவதிலாகட்டும், நிதி வசூலாகட்டும், சுவரொட்டிகள் ஒட்டுவதிலாகட்டும், அனைத்திலும் அவர் இல்லாமல் நடந்ததில்லை என்கிற அளவிற்கு தோழர் உற்சாகத்தோடும், முனைப்போடும், முன்னணியாகவும் செயல்ப்பட்டார்.

சம‌ச்சீர் கல்வியை அமுல்படுத்தக் கோரி நடந்த போராட்டங்களில் தனி ஆளாக நின்று மக்களிடையே பிரசுரம் வினியோகிப்பது, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களிடம் இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கியும் பேசி அப்போராட்டங்களுக்கு ஆதரவை திரட்டினார். அரசு பள்ளி மாணவர்களை திரட்டி போராட முயற்சி எடுத்தார்.

ஒரு முறை வியாபார விசயமாக வெளியூர் சென்று திரும்பும் போது, சாலையில் விபத்தில் சிக்கி அடிப்பட்டு கிடந்தவரை பார்த்தவுடன், தான் வந்த பேருந்தை நிறுத்தி இறங்கி கொண்டு ஆம்புலன்ஸை வரச் செய்து விபத்துக்குள்ளானவரை மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பி பின் தான் வீடு வந்து சேர்ந்தார். முகம் தெரியாத நபர்களை கூட நேசிக்கும் பண்பாளர்.

ஒரு விசயம் தவறு என்று கருதினால் அதற்கு எதிராக விடாப்பிடியாக போராடக் கூடியவர், அதில் நண்பர்கள் என்றாலும் சமரசம் செய்துக் கொள்ளாத நேர்மையாளர். ஒரு முறை தனியார் பள்ளியின் வேனை தோழரின் நண்பர் ஒருவர் மது அருந்திவிட்டு மாணவர்களை வீட்டிற்கு விட டிரிப் அடிக்க போனார், அதை கண்டித்து, “மது அடித்து விட்டு டிரிப் அடிக்க கூடாது பல குழந்தைகள் உன்னை நம்பி வருகிறது” என்று வேனை எடுக்கவிடவில்லை. பள்ளி நிர்வாகத்திடமும் போராடி வேனை எடுக்கவிடவில்லை, பின்பு வேறு ஒரு ஒட்டுநரை வைத்து வேன் எடுக்கப்பட்டது.தோழரின் நடவடிக்கையை பார்த்த பொதுமக்களில் பலரும் பாராட்டினர்.

அதே போல மற்றொரு நண்பர் ஒரு பெண்னை காதலித்து ஏமாற்றி விட்டார். இதை பொறுத்துக்கொள்ள முடியமால் அந்த நபருக்கு எதிராக காவல்துறை வரை சென்று போராடினார்.

தோழர் அமைப்பில் இணைந்த பிறகு சாதி சங்கத்தினர் ஒரு நிகழ்ச்சியில் தனது புகைப்படத்தை பேனரில் போட்டதற்கு எதிராக சாதி சங்கத்தினரை அம்பலப்படுத்தி, சண்டையிட்டு தனது புகைப்படத்தை பேப்பர் வைத்து அவர்களை வைத்தே ஒட்டி மறைக்க‌ வைத்தார்.

யார் எப்போது உதவி கேட்டாலும் செய்வது, அவசர தேவைக்கு இரத்ததானம் செய்வது, இரத்த கொடையாளர்களை ஏற்பாடு செய்து தருவது என மனிதாபிமான இதயத்தொடும்  இருந்தார்.

தனது வியாபாரத்தில் எப்போதும் நேர்மையையும், மக்களின் மீது அக்கறையும் கொண்டிருந்தார். டிமாண்ட் அதிகம் உள்ள சரக்குகளுக்கு கூட எப்பொதும் வைக்கும் லாபத்திலேயே விற்பனை செய்வார், கூடுதலாக லாபம் வைக்க மாட்டார், கேட்டால் இதனால் பாதிக்கப்படப் போவது மக்கள் தானே என்று ஈரம் சொட்ட பேசுவார்.

டீ கடைகளில் பிளாஸ்டிக் கப்பிற்கு பதில் பேப்பர் கப்பை பயன்படுத்த தொடர்ந்து வலியுறித்தி சுற்று சூழலை நேசித்தார்.

காவ‌ல்துறையினரையும், அதிகாரவ‌ர்க்க‌ங்களையும் எதிர்க்கொள்வதில்  துணிச்ச‌லும், போர்க் குணமும் கொண்ட‌வ‌ர். ஒரு முறை உய‌ர்நீதிம‌ன்ற சுவ‌ரில் அமைப்பு சுவ‌ரொட்டியை ஒட்ட சென்றபோது இங்கே சுவ‌ரொட்டி ஒட்ட‌ கூடாது என காவ‌ல்துறையின‌ர் எச்ச‌ரித்த‌ன‌ர். நீதிப‌திக‌ளை பாராட்டி சுவ‌ரொட்டி ஏன் இங்கே ஒட்ட‌ப்ப‌ட்டுள்ளது என காவ‌ல‌ரை கேள்வி கேட்டு திணறடித்தார். பின் நாங்க‌ள் மக்களுக்கு க‌ருத்துக்க‌ளை பிர‌ச்சார‌ம் செய்ய‌தான் சுவ‌ரொட்டி ஒட்டுகிறோம் ஆகையால் இங்கே தான் ஒட்டுவோம் என்று போராடி சுவ‌ரொட்டியை அங்கேயே ஒட்டி விட்டுவ‌ந்தார்.

தோழர் அமைப்பிற்க்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தனது பழைய   வர்க்க பண்புகளை துச்சமாக தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்க பண்புகளுக்கு வெகுவிரைவில் தன்னை போர்க்குணமாகவும், எளிமையாகவும் மாற்றிக் கொண்டார். தோழர் எந்த இடத்திற்கு போனாலும் அங்கே யாராவது அவருக்கு அறிமுகமானவர் இருப்பார்கள், அந்த அளவிற்கு மிகவும் சரளமாக பழகக் கூடியவர். எந்த ஒரு சூழலிலும் ஒரு விசயத்தை முடியாது என்று கைவிடமாட்டார்.

சோர்வுற்றிருக்கும் தோழர்களையும் உற்சாகப்படுத்தி அமைப்பு வேலைகளுக்கு அழைத்து செல்வார். வியாபார‌ விச‌ய‌மாக‌ செல்கிற‌ ஊர்க‌ளில் கூட‌ புர‌ட்சிக‌ர‌ அர‌சிய‌லை பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடிய‌வ‌ர். விரைவில் மிக‌ச்சிற‌ந்த‌, த‌குதிவாய்ந்த‌ தோழ‌ராக‌ வளர்வார் என்று அமைப்பின் முழு நம்பிக்கையை பெற்றிருந்தார்.

த‌ன‌து குடும்ப‌த்தையும் கூட‌ அர‌சிய‌ல்ப‌டுத்தினார், காத‌ல் ம‌னைவி க‌லைவாணியையும் அமைப்பு , அர‌சிய‌லை ஏற்க‌ச் செய்து வேலைக‌ளில் ஈடுப‌ட‌ச்  செய்தார். அமைப்பு போராட்ட‌ங்க‌ளுக்கு, கூட்ட‌ங்க‌ளுக்கு குடும்ப‌த்தோடு ப‌ங்கேற்று ம‌ற்ற தோழ‌ர்க‌ளுக்கு எல்லாம் முன் உதார‌ணமாக‌ திக‌ழ்ந்தார். தோழ‌ருக்கு 3 வயதேயான ஒரு குழந்தையும், பிறந்த‌ ஏழு நாள்க‌ளே ஆன ஒரு குழ‌ந்தையும், என‌ இர‌ண்டு ஆண் குழ‌ந்தைக‌ள் உள்ளன‌.

தோழ‌ர் கொல்ல‌ப்படுவதற்கு சற்று முன் கூட‌ அத்வானியின் ர‌த‌ யாத்திரையை அம்பலப‌டுத்தி அச்ச‌டிக்க‌ப்ப‌ட்ட‌ சுவ‌ரொட்டிகளை மறுநாள் அதிகாலை ஒட்டுவ‌த‌ற்கு தேவையான‌ ப‌சையை க‌ரைத்தும், சுரொட்டிக‌ளை த‌யாராக‌ வைத்து விட்டும் சென்றார். இறுதியில் அவ‌ர் க‌ரைத்த‌ ப‌சையிலேயே அவ‌ரின் அஞ்ச‌லி சுவ‌ரொட்டி ஒட்ட‌ப்ப‌டும் துய‌ர‌ம் தோழ‌ர்க‌ளின் நெஞ்சை பிழிந்த‌து.

” துரோகிக‌ளின் ம‌ர‌ண‌ம் இற‌கை விட‌ இலேசானது, ம‌க்க‌ளின் ந‌லன்க‌ளுக்காக வாழ்ந்த‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ணம் மலையை விட‌ க‌ன‌மான‌து”
என்றார் மாவோ. அதேபோல‌ ந‌ம்மை எல்லாம் யானை ம‌லையை விட‌ க‌ன‌மான‌ துய‌ர‌த்தில் ஆழ்த்தி விட்ட‌து தோழ‌ரின் ம‌ர‌ணம்.

தோழ‌ரின்  உயிரைப் ப‌றித்த‌து நான்கு இள‌ம் கிரிமின‌ல்க‌ள் என்றாலும், அவ‌ர்க‌ள் ஒரு க‌ருவி ம‌ட்டுமே. க‌ருவி த‌யாரான‌ இட‌ம் இந்த‌ செல்ல‌ரித்த‌ சமூக‌ம் தான். வாழ்க்கையைப் ப‌ற்றி எந்த‌ ம‌திப்பிடுக‌ளும் இல்லாம‌ல், எப்ப‌டி வேண்டுமானாலும் வாழ‌லாம் என்ற க‌ண்ணேட்ட‌மும், ர‌வுடியிச‌த்தை கொண்டாடுகிற சினிமாக்க‌ள், ம‌னித‌ பண்புக‌ளை இழ‌க்க‌ச் செய்யும் சாராய வியாபார‌மும் தான் க‌ருவி த‌யாராகும் க‌ளம்.

இந்த‌ கொலைக்க‌ளங்க‌ளை ஒழிக்காத‌ வ‌ரை நாம் இன்னும் இத்த‌கைய‌ இழ‌ப்புக‌ளை ச‌ந்திக்க‌ வேண்டியிருக்கும் என்ற எச்ச‌ரிக்கையோடும், இந்த‌ அழுகி நாறும் ச‌மூக‌த்தை வெட்டி வீசும் வ‌ரை தோழ‌ர் செந்திலின் புர‌ட்சிக‌ர‌ உணர்வையும், போர்க்குணத்தையும், இல‌ட்சிய‌க்க‌ன‌வுக‌ளையும், நற்ப‌ண்புக‌ளையும் நெஞ்சில் ஏந்தி போராட‌ உறுதியேற்போம்.

____________________________________________________________

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மதுரை

முதல் பதிவு: வினவு