மார்க்சியத்தின் பெயரில் தியாகு போன்ற தமிழினவாதிகள் தொடர்ந்து கூறி வரும் ஒரு அவதூறு பிரச்சாரம் ”சோவியத் யூனியனின் ஒரு கட்சி ஆட்சிமுறை” என இருந்தது தவறு, அதுவும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று என்பது. மறுபுறம் சோசலிச எதிர்ப்பாளர்களான முதலாளித்துவ அறிவிஜீவிகளோ ”சோவியத் யூனியனில் ஒரு கட்சி ஆட்சிமுறை என்பது சோசலிசத்தின் அடக்குமுறைக்கு ஒரு உதாரணம் என பிரச்சாரம் செய்கின்றனர்.
ஆனால் ”சோசலிச சமூகத்தில் அரசு என்பது ”பாட்டாளி வர்க்க சர்வாதிகார” அரசாகத்தான் இருக்க முடியும் என்பது எப்படி மார்க்சிய அறிவியலோ, அதுபோல பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசில் ”ஒரு கட்சி ஆட்சிமுறை” தான் நீடிக்க முடியும் என்பதும் மார்க்சிய அறிவியல்.” என்பதை, தோழர் ஸ்டாலின் அவர்கள் அமெரிக்க தூதுக்குழுவிற்கு அளித்த பேட்டியில் நிறுவுகிறார்.
**************************************
தூதுக்குழு பிரதிநிதி:
சோவியத் யூனியனில் ஒரு கட்சியானது சட்டப்பூர்வ ஏகபோகத்தை அனுபவிப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?
தோழர் ஸ்டாலின்:
குலாக்குகள்,நேப்மென்கள், வீழ்ச்சிபெற்ற பழைய சுரண்டும் வர்க்கங்களின் எச்சங்கள் ஆகிய, மக்கள் தொகையின் இன்னொரு பிரிவைப் பொறுத்தமட்டிலும், அவர்கள் தேர்தல் உரிமைகளை இழந்திருப்பது போலவே, சொந்த அரசியல் அமைப்புக்களை வைத்துக் கொள்வதற்கான உரிமையையும் இழந்துள்ளனர். பூர்ஷீவாக்களிடமிருந்து பாட்டாளி வர்க்கமானது தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள், இரயில்வேக்கள், நிலங்கள் மற்றும் சுரங்கங்கள்ளை மட்டும் கைப்பற்றவில்லை; அரசியல் அமைப்புக்கள் வைத்துக் கொள்ளும் உரிமையையும் அவர்களிடமிருந்து பறித்துக் கொண்ட்து. ஏனெனில், பூர்ஷீவாக்களின் ஆட்சி மீட்கப்படுவதை பாட்டளி வர்க்கம் விரும்பவில்லை. சோவியத் யூனியனின் பாட்டாளிவர்க்கம், பூர்ஷீவாக்களிடமிருந்தும் நிலப்பிரபுகளிடமிருந்தும், தொழிற்சாலைகள், ஆலைகள், நிலம், இரயில்வேக்கள், வங்கிகள் மற்றும் சுரங்கங்களை பறித்துக் கொண்டுள்ளது பற்றி தூதுக்குழு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பது தெளிவு.
எனினும், பாட்டளி வர்க்கமானது இத்துடன் நின்று கொள்ளாமல் பூர்ஷீவாக்களை, அரசியல் உரிமைகளையும் இழக்குமாறு செய்த்து குறித்து தூதுக்குழு வியப்புறுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அது முற்றிலும் தர்க்க ரீதியானதல்ல, அல்லது இன்னும் சரியாகச் சொல்வதாயின் , அது முற்றிலும் தர்க்கத்திற்குப் புறம்பானது என்றே எனக்குப் படுகிறது. பூர்ஷீவாக்களிடம் பாட்டளி வர்க்கம் ஏன் பெருந்தன்மை காட்ட வேண்டும்?
மேற்கில் அதிகாரத்திலுள்ள பூர்ஷீவாக்கள் தொழிலாளி வர்க்கத்திடம் சிறிதளவு பெருந்தன்மையாவது காட்டுகின்றனரா? உண்மையான புரட்சிகர உழைக்கும் வர்க்க கட்சிகளை தலைமறைவாகும்படி செய்யவில்லையா? சோவியத் யூனியனின் பாட்டாளிவர்க்கம் மட்டும் தனது வர்க்க எதிரியிடம் ஏன் பெருந்தன்மை காட்டவேண்டும்? தர்க்கத்துடன் ஒருவர் பேச வேண்டும் என்று கருதுகிறேன். பூர்ஷீவாக்களுக்கு அரசியல் உரிமைகள் மீண்டும் தரப்பட வேண்டும் என்று கருதுவோர், மேலும் சென்று, பூர்ஷீவாக்களுக்கு தொழிற்சாலைகள்,ஆலைகள், இரயில்வேக்கள் மற்றும் வங்கிகளை மீட்டுத் தருவது குறித்தும், தர்க்கரீதியாக பிரச்சினை எழுப்புவர்.
தூதுக்குழு பிரதிநிதி:
கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே அபிப்பிராயம் எவ்வாறு சட்டரீதியாக வெளிப்பாடு கொள்கிறது என்பதையே நாங்கள் குறிப்பிடுகின்றோம். பெருந்திரளான உழைக்கும் வர்க்க அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றில் இவ்வெவ்வேறு அபிப்பிராயங்களும் வெளிப்படக் கூடும்.
தோழர் ஸ்டாலின்:
தற்போது, சோவியத் யூனியனில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே அபிப்பிராய மோதல் ஏதும் உண்டா? சந்தேகமின்றி இருக்கவே செய்கிறது. இலட்சக்கணக்கான தொழிலாளரும் விவசாயிகளும் எல்லா நடைமுறை பிரச்சனைகள் மற்றும் எல்லா விளக்கங்கள் குறித்தும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்பது சாத்தியமற்றதாகும். அது ஒருபோதும் நிகழாது. முதலில், பொருளாதார நிலைபாடு குறித்தும், பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான அபிப்பிராயங்கள் குறித்தும், தொழிலாளருக்கும் விவசாயிகளுக்குமிடையே பெரிய வேறுபாடு உண்டு. இரண்டாவதாக, பயிற்சியில் வேறுபாடு, வயது மற்றும் மனோபாவத்தில் வேறுபாடு, நெடுநாளையத் தொழிலாளருக்கும் அண்மைக்காலத்தே கிராமப்புறத்திலிருந்து வந்து சேர்ந்துள்ள தொழிலாளருக்குமிடையேயான வேறுபாடு, தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே சில அபிப்பிராய வேறுபாடு போன்றன உண்டு. இவையெல்லாம், தொழிலாளரிடையேயும் உழைக்கும் திரளான விவசாயிகளிடையேயும் அபிப்பிராய மோதலுக்கு இட்டுச் சென்று, தொழிற்சங்கங்கள், கூட்டுறவுகள், சோவியத்துகளுக்கான தேர்தல்கள் போன்றவை தொடர்பான கூட்டங்களில் சட்டரீதியான வெளிப்பாடு பெறும்.
ஆனால், இப்போது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் நிலைமைகளின் கீழ் இருக்கும் அபிப்பிராய மோதலுக்கும், அக்டோபர் புரட்சிக்கு முன்பாக இருந்த அபிப்பிராய மோதலுக்குமிடையே ஒரு தீவிர வேறுபாடு உண்டு. கடந்தகாலத்தில், தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடயேயான அபிப்பிராய மோதலானது, பெரியதும், நிலப்பிரபுகள், ஜாராட்சி, பூர்ஷீவாக்கள் ஆகியோரை தூக்கி எறிவது மற்றும் பூர்ஷீவா சமூக அமைப்பை நொறுக்குவது குறித்த பிரச்சினைகளில் குவிந்திருந்த்து. இப்போது, பாட்டாளிவர்க்க சர்வாதிகார நிலைமைகளின் கீழாக, அபிப்பிராய மோதலானது சோவியத் அதிகாரத்தை தூக்கி எறிவது மற்றும் சோவியத் அமைப்பை நொறுக்கித் தள்ளுவது என்னும் பிரச்சனைகள் குறித்ததாக அல்லாமல், சோவியத் அமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் அவற்றின் செயற்பாட்டை மேம்படுத்துவது குறித்ததாக உள்ளது. ஒரு தீவிர வேறுபாடு இங்குள்ளது.
நிலவுகின்ற அமைப்பை புரட்சிகர வழியில் உடைத்து நொறுக்குவது குறித்த, கடந்த காலத்தின் அபிப்பிராய மோதலானது, தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளிடையே, ஏராளமான எதிரெதிர் கட்சிகள் தோன்றுதலுக்கான தளமமைத்துக் கொடுத்தது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அக்கட்சிகள், போல்ஷ்விக் கட்சி, மென்ஷ்விக் கட்சி, சோசலிசப் புரட்சிகர கட்சி.
இன்னொருபுறம், இப்போது, பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், நிலவுகின்ற சோவியது அமைப்பை உடைத்து நொறுக்குவதற்கான அல்லாமல் அதனை மேம்படுத்தி ஒன்று திரட்டுவதற்காக நிலவும் அபிப்பிராய மோதலானது, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே ஏராளமான கட்சிகள் தோன்ற தளம் அமைத்துத் தருவதில்லை. என்பதைப் புரிந்து கொள்வதில் சிரம்மே ஏற்படாது.

ஆகவேதான், கம்யூனிஸ்ட் கட்சியான ஒரே கட்சி மட்டுமே, சட்டபூர்வமான கட்சி என்னும் ஏகபோகத்தை அனுபவிப்பதானது, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே ஆட்சேபணையைக் கிளப்பாததுடன் , அவசியமானதாகவும் விருப்பத்துக்குரியதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
நாட்டில் எங்களது கட்சி மட்டுமே சட்டபூர்வமான கட்சி என்னும் நிலையானது செயற்கையானதும் வேண்டுமென்றே உண்டாக்கப்பட்ட்துமான ஒன்றல்ல. அத்தகைய நிலையை நிர்வாக சூழ்ச்சித் திறங்கள் போன்றவற்றால் செயற்கையாக உருவாக்கிட இயலாது. எங்கள் கட்சியின் நிலை வாழ்விலிருந்து வளர்ந்ததாகும்; சோசலிச –புரட்சிகர கட்சி மற்றும் மென்ஸ்விக் கட்சிகளது அப்பட்டமான திவாலான நிலைமயினாலும் எங்கள் நாட்டில் நிலவுகின்ற நிலைமைகளால் அவை அக்கட்ட்த்திருந்து வெளியேறியதாலு வரலாற்று ரீதியில் வளர்ந்ததாகும்.
கடந்த காலத்தில் சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் என்னவாக இருந்தன? பாட்டாளி வர்க்கத்திடையே பூர்ஷீவாக்களின் செல்வாக்கான சாதன்ங்களாக அவை இருந்தன. அக்டோபர் 1917-க்கு முன்பாக அக்கட்சிகளை எது வாழ்வைத்து, நீடிக்க வைத்திருந்தது? பூர்ஷீவா வர்க்கத்தின் இருப்பு; இறுதிப் பகுப்பாய்வில் , பூர்ஷீவா ஆட்சியின் இருப்பு. பூர்ஷீவாக்கள் தூக்கி எறியப்பட்டபோது, அக்கட்சிகளின் இருப்பிற்கான நியாயமும் மறைந்து போக வேண்டியது தான் என்பது தெளிவாகவில்லையா?
1917-க்கு பிறகு அக்கட்சிகளின் நிலை என்ன? முதலாளித்துவத்தை மீட்பதையும் பாட்டாளிவர்க்க ஆட்சியை தூக்கி எறிவதையும் வற்புறுத்துகின்ற கட்சிகளாயின. அவை தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே எல்லா நியாயங்களையும் செல்வாக்கையும் இழந்திட வேண்டியவைதான் என்பது தெளிவாகவில்லையா?
கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஸ்விக் கட்சிகளுக்கும் இடையே உழைக்கும் வர்க்கத்தினரிடமான செல்வாக்கிற்கான மோதல் இன்று நேற்றுத் தொடங்கியதன்று. 1905- க்கு முன்பே பெருந்திரளான புரட்சிகர இயக்கத்தின் முதல் அறிகுறிகள் வெளிப்பட உடனேயே அது தொடங்கியது. 1903 லிருந்து அக்டோபர் 1917 வரையிலான காலகட்டமானது, எங்களது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயேயான கடுமையான அபிப்பிராய மோதலும், உழைக்கும் வர்க்கத்தினரிடம் செல்வாக்கு பெறுவதற்காக போச்ஷிவிக்குகளுக்கும், மென்ஸ்விக்குகள் மற்றும் சோசலிச – புரட்சிகரயாளர்களுக்குமிடையே போராட்டமும் கொண்ட்தாகும்.
அக்கால கட்டத்தில் சோவியத் யூனியனின் தொழிலாளர் வர்க்கம் மூன்று புரட்சிகளை கடந்து வந்தது. அப்புரட்சிகளின் புடக்குவையில் அது இக்கட்சிகளை பரிசோதித்துப் பார்த்தது. பாட்டாளி வர்க்க புரட்சிக்கான இலட்சியத்திற்கு அவற்றின் தகுதியைப் பரிசீலித்தது, அவற்றின் புரட்சிகர குணநலனை பரிசோதித்தறிந்தது.
1917 இன் அக்டோபர் நாட்களுக்கு சற்று முன்னதாக, ஒட்டுமொத்தமான கடந்தகால புரட்சிகர போராட்ட வரலாறு தொடுத்திருந்த போது , தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு கட்சிகளை வரலாறு, தராசில் நிறுத்தி பார்த்த போது, இறுதியில், ருஷ்யாவின் தொழிலாளார் வர்க்கமானது, தனது உறுதியான தேர்வினைச்
செய்து, கம்யூனிஸ்ட் கட்சியை ஒரேயொரு பாட்டாளிவர்க்க கட்சியாக ஏற்றுக் கொண்டது.
தொழிலாளர் வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெடுத்ததை எவ்வாறு நாம் விளக்குவது? உதாரணமாக, பெட்ரோகிராட் சோவியத்தின் போல்ஷ்விக்குகள் ஏபரல் 1917-இல் மிகச் சிறுபான்மையினராக இருந்தது. உண்மையல்லவா? அப்போது, சோசலிச – புரட்சியாளர்களும் மென்ஸ்விக்குகளும் சோவியத்துக்களில் அதிகப்படியான பெரும்பான்மை பெற்றிருந்தனர் என்பது உண்மையல்லவா? அக்டோபர் நாட்களுக்குச் சற்று முன்னதாக, பூர்ஷீவாக்களுடன் அணி சேர்ந்திருந்த சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஸ்விக் கட்சிகளின் கரங்களில், அரசாங்கத்தின் மொத்த இயக்கமும் நிர்பந்தப்படுத்தலின் எல்லா வழிமுறைகளும் இருந்தன என்பது உண்மையல்லவா?
கம்யூனிஸ்ட் கட்சியானது போர்நிறுத்தத்தையும் உடனடியான ஜனநாயக அமைதியையும் வலியுறுத்த சோசலிச புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும் ”வெற்றி பெறும்வரை போர்” என்பதை, ஏகாதிபத்திய யுத்தத்தின் தொடர்ச்சியை வற்புறுத்தினர் என்பதுதான் விளக்கம்.
கம்யூனிஸ்ட் கட்சியானது, கெரன்ஸ்கி அரசாங்கத்தை தூக்கி எறிவதையும் பூர்ஷிவா ஆட்சியைத் தூக்கி எறிவதையும் தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள் மற்றும் இரயில்வேக்களை தேசியமயப்படுத்தலையும் ஆதரித்து நிற்க, மென்ஷ்விக் மற்றும் சோசலிச புரட்சிகர கட்சிகளோ, கெரன்ஸ்கி அரசாங்கத்திற்கு ஆதரவாகப் போராடி தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள் மற்றும் இரயில்வேக்களின் மீது பூர்ஷீவாக்களின் உரிமைக்காகப் பரிந்து பேசியது என்பதுதான் விளக்கம்.
கம்யூனிஸ்ட் கட்சியானது, விவசாயிகளின் நலன்களின் பொருட்டாக நிலப்பிரபுக்களின் நிலங்களை உடனடியாக கைப்பற்றுவதை ஆதரித்திட, சோசலிச-புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் அரசியல் நிர்ணயசபை கூட்டப்படும்வரை ஒத்திப்போட்டன-அரசியல் நிர்ணயசபை கூட்டுவதையும் காலவரையின்றி ஒத்தி வைத்தனர் என்பதுதான் விளக்கம்.
எனவே, தொழிலாளரும் விவசாயிகளும், இறுதியில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெத்தது வியப்பிளிக்கக் கூடியுதா?
எனவே, சோசலிச-புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் அதலபாதாளத்திற்கு சென்றன என்பது வியப்பளிக்கக் கூடியதா?
இப்படியாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏக்போகம் கிடைத்தது; எனவேதான் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தது.
அக்டோபர் 1917க்குப் பிந்தையதான உள்நாட்டுப் போர் மிகுந்த அடுத்த காலகட்டமானது, மென்ஷ்விக் மற்றும் சோசலிச-புரட்சிகர கட்சிகளது இறுதி நாசத்தையும், போல்ஷ்விக் கட்சியின் இறுதி வெற்றியையும் கொண்ட கால கட்டமாகும். அக்காலகட்ட்த்தில், மென்ஷ்விக்குகளும் சோசலிச-புரட்சியாளர்களும் தாங்களே கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர். அக்டோபர் புரட்சியின்போது நாசமுற்று மூழ்கிப்போன, மென்ஷ்விக் மற்றும் சோசலிச-புரட்சிகர கட்சிகளின் துண்டு துக்காணிகள், எதிர்ப்புரட்சிகர குலாக் கிளச்சிகளுடன் இணைந்து கொள்ளத் தொடங்கி, கோல்சக்குகள் மற்றும் டெனிகின்களுடன் அணி சேர்ந்து கொண்டு, நேச அணியின் சேவையில் நுழைந்து, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் பார்வையில் முற்றிலிமாக நாணயம் இழந்தனர்.
பூர்ஷீவா புரட்சியாளர்களிலிருந்து பூர்ஷீவா எதிர்ப்புரட்சியாளர்களாக மாறிவிட்ட சோசலிச-புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும் புதிய சோவியத் ருஷ்யாவின் குரல்வளையை நெரிக்கும் நேச அணியின் முயறிசிகளுக்கு உதவ, போல்ஷ்விக் கட்சியோ, ஆற்றலும் புரட்சிகரமிக்கவர்களை அணிதிரட்டி, தொழிலாளரையும் விவசாயிகளையும், மேலும் மேலும், சோசலிச தாயகத்திற்காகப் போராடவும், நேச அணியை (Entente) எதிர்த்துப் போராடவும், எழுச்சி கொள்ளச் செய்த்து.
அக்காலகட்டத்தில் கம்யூனிஷஸ்டுகளின் வெற்றியானது சோசலிச-புரட்சியாளர்களையும் மென்ஷ்விக்குகளையும் முற்றிலும் இயல்பான வகையில் அப்பட்டமான தோல்விக்கு இட்டுச்செல்லக் கூடியதாகவே இருந்தது; உண்மையில் இட்டும் சென்றது. இவையனைத்தும் நிகழ்ந்த பின்னும், கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளது ஒரேயொரு கட்சியானது வியப்பளிக்க கூடியதா என்ன?
அவ்வாறே, கம்யினிஸ்ட் கட்சியே நாட்டின் ஒரேயொரு சட்டபூர்வ கட்சி என்னும் ஏகபோகம் உண்டானது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகார நிலைமைகள் கொண்ட தற்போதைய காலத்தில், தொழிலாளர் விவசாயிகளிடையேயான அபிப்பிராய மோதல் குறித்து குறிப்பிடுகிறீர்கள். அபிப்பிராய மோதல் இருக்கும், இருகிறது என ஏற்கனவே நான் கூறியிருகிறேன்; அது இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. ஆனால், தற்போதைய நிலைமைகளில் தொழிலாளரிடையேயான அபிப்ராய மோதலானது, சோவியத் அமைப்பைத் தூக்கி எறிவது என்னும் அடிப்படைப் பிரச்சனை குறித்ததாக அல்லாமல் சோவியத்துகளை மேலும் முன்னேற்றுவது, சோவியத் உறுப்புக்கள் புரிந்துள்ள தவறுகளை நிவர்த்தி செய்வது, மற்றும் அதன் வழியாக, சோவியத் ஆட்சியை திடப்படுத்துவது என்னும் நடைமுறைப் பிரச்சனைகளைக் குறித்ததாகும். இத்தகைய அபிப்பிராய மோதலானது கம்யூனிஸ்ட் கட்சியினை வலுப்படுத்தவும் முழு நிறைவாக்கவும் மட்டுமே செய்யும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. இத்தகைய அபிப்பிராய மோதலானது, தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் விவசாயிகளிடையே இதர கட்சிகளின் உருவாக்கத்திற்கு தளமொன்று வழங்காது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
– முதலாவது அமெரிக்க தொழிலாளர் தூதுக்குழுவுக்கு
தோழர் ஸ்டாலின் அளித்த பேட்டியிலிருந்து
தொடர்புடைய பதிவுகள்:
வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!
மாபெரும் சதி
நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்
Filed under: சோசலிசம் | Tagged: அரசியல், கம்யூனிசம், சோவியத், சோவியத் யூனியன், நிகழ்வுகள், பாட்டாளி வர்க்க அரசு, பாட்டாளி வர்க்கம், போல்ஸ்விக்குகள், மார்க்சியம், மென்ஷ்விக்குகள், லெனின், ஸ்டாலின் | Leave a comment »