• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,149 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மாநிலக்கல்லூரி மாணவர்கள் 32பேர் விடுதலை! பு.மா.இ.மு தலைமையில் போராடிய பெற்றோர்கள்-மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு வெற்றி!

தமிழக அரசே!

 • அடிப்படை வசதிகள் கேட்டு போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெறு!

 • பொய் வழக்கு போட்ட D-1 காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடு!

 • கல்லூரிக்குள் போலீசை அத்துமீறி நிறுத்தி

         சிறைச்சாலையாக மாற்றாதே!

அனைத்து கல்லூரி மாணவ நண்பர்களே!

 • அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல்

           அரசு கல்லூரிகளை சீர்குலைக்கும்

            தனியார்மய கல்வி கொள்ளையை முறியடிப்போம்!

 • பெற்றோர்கள்-ஆசிரியர்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம்!

 • கழிவரை,குடிநீர்,கேண்டீன்,நூலகம், மாணவர் தேர்தல்,கலாச்சார விழாக்கள் போன்ற அடிப்படை வசதிகளை வென்றெடுப்போம்!

தொடர்புடைய பதிவுகள்:

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?- 25.8.12 கருத்தரங்கம் – அனைவரும் வாருங்கள்!

லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி ஒய்ஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

அரசு பள்ளிகளில் கண்கானிப்பு கேமரா: மாணவர்களா? குற்றவாளிகளா?

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?- 25.8.12 கருத்தரங்கம் – அனைவரும் வாருங்கள்!


திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

கருத்தரங்கம்

நாள் : 25.8.2012

இடம் : சனிக்கிழமை மாலை 5 மணி

பொது வர்த்தகர் சங்கம்

திருவொற்றியூர்

*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர் ம.சி.சுதேஷ் குமார்

மாநில இணைச் செயலர், பு.ஜ.தொ.மு

உரைவீச்சு:

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

தோழர் பா.விஜயகுமார்
மாநில பொருளாளர், பு.ஜ.தொ.மு

மக்களைக் கொல்லும் மறுகாலனியாக்கத்தை மாய்ப்போம்!

தோழர் காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க

**************************************

தொடர்புக்கு :

தோழர் அ.முகுந்தன், 110, 2ம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம்,  63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை – 24.

தொ.பே:  94448 34519

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி

திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டங்கள்,ஆவடி – அம்பத்தூர் பகுதி

*************************

தொடர்புடைய பதிவுகள்:

மாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

ஏழை ‘இந்து’ மாணவருக்காக பணக்கார ‘இந்து கல்வி வள்ளல்களி’டம் போராடலாமே?

ழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை மறைமலை நகரில் மூன்று நாள் உண்ணா விரதப் ‘போராட்டத்தை’ ‘வெற்றிகரமாக’ நடத்தியிருக்கிறார். இந்தக் கோரிக்கையின் உட்பொருள் என்ன?

” மத அடிப்படையில் கல்வி வழங்கக் கூடாது என்று அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களில் ஜாதி இருப்பது போல், முஸ்லீம் மற்றும் கிறித்தவ மதங்களில் ஜாதியில்லை. ஆனால், அந்த மதங்களுக்குள்ளும் ஜாதியை உருவாக்கி, இந்து மாணவர்களின் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து சிறுபான்மையினருக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். ‘ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’ என்று இந்துக்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு, சிறுபான்மையிர் ஓட்டுக்களைப் பெற, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு இது போன்ற சலுகைகளை உருவாக்கி வழங்கி வருகிறது”. குமுதம் ரிப்போர்ட்டரில் பொன். ராதாகிருஷ்ணன் அளித்திருக்கும் விளக்கம் இது.

பொன்-ராதாகிருஷ்ணன்

 

இந்துக்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடும், மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு உதவித் தொகைகளும் ஏற்கனவே வழங்கப்படும் நிலையில் காவிக் கும்பல் கோரும் ஏழை இந்து  மாணவர்கள் யார்? வெளிப்படையாக பார்ப்பன – ‘மேல்’ சாதி மாணவர்கள் என்று கேட்க வேண்டியதுதானே? அதன்படி இந்துக்கள் என்றால் பார்ப்பன – மேல்சாதியினர் மட்டும்தான் என்றாகிறது.

அடுத்து முசுலீம்கள், கிறித்தவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குரிய சலுகை கிடையாது என்பதால் உண்மையில் அம்மதங்களில் இருக்கும் பல்வேறு பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இது காவிக் கும்பலுக்கு பொறுக்கவில்லை. சிறுபான்மை இன மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக் கூடாது என்று கோருவதை இப்படி ஏழை இந்து மாணவர்களுக்கு உதவி வழங்கு என்று கோல்மால் பாசிச அரசியல் மொழியில் கேட்கிறார்கள் இந்து மதவெறியர்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை மருகள் தாலி அறுக்க வேண்டும் என்ற கொலைவெறிதான் காவிக் கும்பலின் ஒரிஜினல் வெறி.

தமிழகத்தின் அரசியல் அநாதையாக ஓரம் கட்டப்பட்டிருக்கும் பா.ஜ.க ஏதாவது செய்து செல்ஃப் எடுக்க முடியுமா என்று போராடுகிறது. கடைசியில் சென்னையில் மூன்று நாள் கூத்துக்கு அனுமதியில்லை என்று மறைமலை நகரில் டேரா போட்டு, ஊடகங்களுக்கு ஃபோட்டோ கொடுத்து இந்த காமடி ஷோ முடிந்திருக்கிறது.

போகட்டும். ஏழை இந்து மாணவர்களுக்கு உதவச் சொல்லி தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிகளை நடத்தும் இந்து கல்வி வள்ளல்களை கேட்டால் மேட்டரை சடுதியில் முடிக்கலாமே? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்காக ஏன் அலைய வேண்டும்? தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகளின் பெரும்பான்மை முதலாளிகள் இந்துக்கள்தானே? அந்த இந்துக்கள் பேர்பாதி கல்லூரி சீட்டுக்களை கட்டணமின்றி இந்து மாணவர்களுக்கு வழங்குமாறு செய்ய வேண்டியதுதானே?

குறைந்தபட்சம் நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்துக்கல்லூரியிலாவது இந்த கோரிக்கையை நிறைவேற்ற பொன் ராதாகிருஷ்ணன் முயலலாமே? முயன்றால் இந்து மதவெறியர்களை ஒழிக்கும் வேலையினை இந்து கல்வி  முதலாளிகளே பார்த்துக் கொள்வார்கள்!

**********

முதல் பதிவு: வினவு செய்திகள்

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

பொதுக்கூட்டங்கள்
தெருமுனைக்கூட்டங்கள்
கலை நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார வர்க்கம் போல் பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளிகள்.  ஒரு நிமிடத் தாமதத்திற்குக் கூட அதை வேலை நீக்கத்திற்கான குற்றமாக்குவது, இயந்திரங்களின் வேகத்தைக் காட்டி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிவது, இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க தவறினால் சம்பள வெட்டு, கழிப்பறைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அற்பக்காரணங்களுக்கும் அசிங்கமாய் திட்டி அவமானப்படுத்துவது என அடுக்கடுக்கான அடக்குமுறைகள். பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்ற பெயரில் குண்டர்களையும் போலீசையும் வைத்து தொழிலாளர்களைத் தாக்க முற்பட்ட போது தொழிலாளிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத்திய போராட்டத்தில் தான் அந்த அதிகாரி பலியானான்.  வன்முறைக்கு வித்திட்டது ஆலை நிர்வாகம், தொழிலாளிகளல்ல.

நாட்டில் 90 சதம் பேர் தொழிலாளிகள், உழைப்பாளிகள்.  அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேச்சுவார்த்தை என அமைதியான வழிகளில் தான் போராடுகிறார்கள்.ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான முதலாளிகள் தான் அதிகார வர்க்கம், போலீசின் துணையோடு ஒடுக்கின்றனர்.  மிக மிக அரிதாகத் தான் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  எங்கோ, எப்போதோ ஒரு அதிகாரி பலியானால் ஊளையிடும் ஓட்டுக்கட்சிகளும், ஒப்பாரி வைக்கும் ஊடங்கங்களும் முதலாளிகள் நடத்தும் படுகொலைகள், வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை.

தனியார்மயத்தின் பெயரால் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளிகளின் வன்முறை மிகப்பெருமளவில் அதிகரித்துவருகிறாது.  நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் கிடைத்த எட்டு மணிநேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை ஒழித்துவிட்டு முதலாளிகள் தங்கள் விருப்பப்படி 12 மணி, 14 மணி, 16 மணி என உழைப்பை உறிஞ்சுகிறார்களே இது வன்முறையில்லையா?  எட்டு மணி நேரம் என்ற சட்டத்தை முதலாளிகள் அமுல்படுத்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம்.  வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முதலாளிகளின் லாப வெறியால் உருவாக்கப்படும் கொடுமை.  இது சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில்லையா?

240 நாட்கள் ஓராண்டில் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை எந்த முதலாளியும் மதிப்பதில்லை.  பத்தாண்டு, இருபதாண்டு பணியாற்றியவர்களைக் கூட திடீரெனத் தூக்கியெறிந்து குடும்பங்களை வீதியில் நிறுத்துகின்றனர் முதலாளிகள்.  பயிற்சியாளர்கள் (ட்ரெய்னி) தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) என்ற பெயரில் சம்பளமே இல்லாமல் அல்லது அற்பச் சம்பளத்தில் இளவயது ஆற்றலை உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து விடுகின்றனர்.  இந்த மோசடியும், துரோகமும் வன்முறையில்லையா?  தமிழகத்தின் பெருந்தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளிகளில் முக்கால்வாசிப்பேர் ஒப்பந்த தொழிலாளிகள்  பெரும்பாலான் ஒப்பந்தத் தொழிலாளிகளை முதலாளிகள் கணக்கில் காட்டுவதேயில்லை.  சென்னையைச் சுற்றி ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், இருங்காட்டுகோட்டை, மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நோக்கியா, ஹூண்டாய், சிமென்ஸ், செயிண்ட் கோபெய்ன் என பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.  அன்றாடம் நடக்கும் ஏராளமான விபத்துகளிலும் ‘மர்ம’மான முறையிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.  இவ்வளவு பெரிய தொழில்பகுதியில் தீவிர, அவசர சிகிச்சைக்க்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை.  அண்மையில் ஹவாசின் என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய 7 பேர் சாலை விபத்தில் இறந்தனர்.  இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அடையாளம் தெரியாதவர்கள் என்றே பதிவு செய்யப்பட்டனர்.  புகழ்பெற்ற டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் கை நசுங்கிய தொழிலாளிக்கு பஞ்சை வைத்துக் கட்டி பேருந்து செலவுக்கு ரூ. 25/- கொடுத்து அனுப்பி விட்டது நிர்வாகம்.  முதலாளிகளின் கொடிய மனதுக்கு சிறு எடுத்துக்காட்டு இது.  ‘சுமங்கலித் திட்டம்’ எனும் பெயரில் கிராமப்புறத்தில் ஏழை இளம்பெண்களைத் திரட்டி கொட்டடிகளில் அடைத்து வரைமுறையின்றி வேலை வாங்குவது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என சொல்லொணாக் கொடுமைகளை கோவை திருப்பூர் பஞ்சாலை முதலாளிகள் நடத்துகின்றனர்.   முதலாளிகள் நடத்தும் வரம்பற்ற வன்முறைகளைப் பற்றி ஊடகங்களோ, ஓட்டுக்கட்சிகளோ பேசுவதில்லை.

கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி, சாலை வசதி என அரசு வழங்கவேண்டிய சேவைகள் அனைத்தையும் தனியார்மயத்தின் பெயரில் முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.  மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்வி வரை ஆக்கிரமித்து ‘தரமான கல்வி’  என்ற போர்வையில் விதவிதமான வழிகளில் – கல்விக் கட்டணம், சிறப்பு வகுப்பு, செருப்பு, சீருடை பேனா, பென்சில், பேருந்து என பெற்றோர்களைக் கசக்கிப் பிழிகின்றனர். எந்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர்.  அரியானா மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் இருநூறு ரூபாய் பணம் கட்டவில்லை என்பதால், இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு சிகிச்சையை நிறுத்தியதால் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்துவிட்டது.    அரசு மருத்துவமனையே இப்படியென்றால் தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.  அப்பல்லோ போன்ற கார்ப்பரேட், தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் முன்பணம் கட்டாவிட்டால் தொட்டுக்கூட பார்க்கமாட்டார்கள்.  இவையெல்லாம் அரசின் துணையோடு முதலாளிகள் நடத்தும் வன்முறையில்லையா?

போலி மருந்து தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள், பத்து மடங்கு, இருபது மடங்கு லாபம் வைத்து மருந்து விற்பனையில் கொள்ளையடிக்க்கும் கொலை பாதகத்தைச் செய்பவர்கள் யார்?  தொழிலாளிகளா, முதலாளிகளா?  மாசுப்பட்ட குடிநீரால் சென்னையில் காலரா நோய்க்கு 30 பேர் பலியாகிவிட்டனர்.  அசுத்தமான குடிநீரில் அன்றாடம் வாந்தி பேதிக்கு இரையாகும் மக்கள் ஏராளம்.  ஆனால் கொக்கோ கோலா, பெப்சி, டாடா, உள்ளூர் மாபியாக்கள் அனைவரும் நீர்வளத்தை உறிஞ்சி விற்று பல்லாயிரம் கோடிகளை சுருட்டுகின்றனர்.  தண்ணீர் சமூகத்தின் பொதுச்சொத்து, அதை முதலாளிகள் கைப்பற்றி உரிமை கொண்டாடுவது வன்முறையில்லையா?  கட்டுப்படியாகாமல் கடன்பட்டு இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்?  விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அநியாய விலைக்கு விற்று, அடிமாட்டு விலைக்கு விளைச்சலை அபகரித்த முதலாளிகள் தானே!  இது வன்முறையில்லையா?

பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பது, கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குவது, பொருள்களைப் பதுக்கி விலையேற்றுவது, கலப்படம் செய்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொதுச்சொத்துக்கள், கனிவளங்கள், கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இப்படி அனைத்துக் கிரிமினல் குற்றங்களையும் செய்வது யார் தொழிலாளியா?  முதலாளியா? இக்குற்றங்கள் வன்முறையில்லையா?  பயங்கரவாதவில்லையா?  சாராயம் காய்ச்சும் ரெளடி மீது பாயும் குண்டர் சட்டம் ஒரு குற்றத்தைக் கூட விட்டு வைக்காமல் செய்யும் முதலாளிகள் மீது பாய்வதில்லை.  காரணம் இக்குற்றங்கள் தனியார்மயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் துணையோடு நடத்தப்படுவதால் தான்!

உழைப்பைச் சுரண்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பண்பாட்டுத்துறையிலும் தங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் முதலாளிகள்.  விற்பனையை அதிகரிக்கவும், சந்தையை விரிவுப்படுத்தவும் பெரு விளம்பர யுத்தத்தை நடத்தி மொத்த சமூகத்திலும் நுகர்வு வெறியை, பாலூணர்வைத் தூண்டுகின்றனர்.  எல்லாவற்றையும் அனுபவிப்பது, எந்த வழியிலும் பணம் சேர்ப்பது, சுயநலம், ஆடம்பரமோகம் என்ற சித்தாந்தத்தைப் பரப்புவதன் மூலம் ஒழுக்கக் கேட்டையே புதிய சமூக ஒழுங்காக மாற்றுகின்றனர்.  இதன் விளைவு தான் நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ரெளடித்தனம் ஆகியவை.  சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவரக்காரணம் முதலாளிகளின் லாபவெறித்தானே!  இது வன்முறை இல்லையா?

முதலாளிகளின் அனைத்தும் தழுவிய இந்த வன்முறையை, பயங்கரவாதத்தை ஓட்டுக் கட்சிகளோ ஊடகங்களோ அம்பலப்படுத்துவதில்லை.  ஏனெனில் இவர்கள் தனியார்மயத்தின் பங்காளிகளாகிவிட்டனர்.  ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பது, அதற்குப் போட்டி போடுவதே அவர்களின் ஜனநாயகம்.  உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை அம்பலப்படுத்த்வதால் தான் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் யார் வன்முறையாளர்கள்?  எது வன்முறை?

சூழ்ச்சி, வஞ்சகம், பித்தலாட்டம், மோசடி, லாபம் இவைதான் முதலாளிகளின் சிந்தனை. வரைமுறையின்றி இயற்கை வளங்கைச் சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழலை அழித்து பூமியின் இருத்தலுக்கே எதிராக இருப்பவர்கள் முதலாளிகள்.

உழைப்பாளி மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறோம்.  வன்முறையை நாம் சிந்திப்பதேயில்லை.  அதனால் தான் அணு உலை வேண்டாம் என்கிறோம்.  ஆபத்து எனத் தெரிந்தும் தங்கள் சுயநலத்திற்கு அணு உலை வேண்டும் என்கின்றனர் முதலாளிகள்.

உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா?  மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

முதலாளித்துவ சுரண்டல், பயங்கரவாத ஒடுக்குமுறை இவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ், பா.ஜ.க. பிற ஓட்டுக் கட்சிகள் அமுல்படுத்தும் தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டவேண்டும்.  இதற்கு மார்க்சிய – லெனினிய மாவோ சிந்த்னை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தலைமையில்  அணிதிரள்வது ஒன்றே வழி!

 • நாடு மீண்டும் காலனியாவதைத்
  தடுத்து நிறுத்துவோம்!
 • முதலாளித்துவ பயங்கரவாதத்தை
  அடித்து வீழ்த்துவோம்!
 • போலி ஜனநாயக தேர்தல் பாதையைத்
  தூக்கியெறிவோம்!
 • நக்சல்பாரி புரட்சிப் பாதையில்
  ஒன்றிணைவோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு:

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 24
பேச : 94448 34519

தொடர்புடைய பதிவுகள்:

கனவு காண சொன்னாரு.. கலாம் சொன்னாரு…!

குடிக்க கஞ்சி கூட இல்லாத நம் நாட்டில் அப்துல் கலாம் என்ற கோமாளி தினந்தோறும் ‘இளைஞர்களே!.. கனவு கானுங்க… கனவு கானுங்க…’ என கூவிக்கொண்டும், 123 அணுசக்தி ஒப்பந்தம் முதல் கூடங்குளம் வரை இந்த மக்கள் விரோத அரசின் ஊதுகுழலாக நின்று ஆதரித்து பேசிவருவதையும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டில் சென்னை கிளை புமாஇமு தோழர்கள் அம்பலப்படுத்தி பாடிய பாடல் இதோ:

தொடர்புடைய பதிவுகள்:

அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…!

கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?

பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

 

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

அய்.ஏ.எஸ்.சும், ஐ.பி.எஸ்.சும்
அதிகார வர்க்கமும் , அமைச்சர்களும்
பயணப்பட்டு,
அவமானப்பட்ட கல்லூரிச் சாலையே!

இனி நீ பெருமைப்படலாம்
கல்வி தனியார்மயத்திற்கெதிராக போராடிய
பு.மா.இ.மு. தோழர்களின்
போராட்டப் பாதங்களை முத்தமிட்டதால்!

தமிழகமே! தலை நிமிரலாம்
ஜெயாவின் போலிஸ் வெறியை
நடுரோட்டில் நடுங்காமல் சந்தித்த
பு.மா.இ.மு. வின் போர்க்குணத்தால்,
அடிக்கும்போதும், இழுக்கும்போதும்
துடிக்கும் உதடுகள் பொழிந்த முழக்கம்
தமிழக வானில்.. தனியார்மயத்திற்கெதிராக
திரும்பத் திரும்ப எதிரொலிக்கும்..

முற்றுகை சட்டவிரோதமாம்
தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு
தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க
வீணாய் பிறந்த விஜய்
எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது
எங்கே போனது உனது சட்டம் – ஒழுங்கு!

பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்கவும் முடியாமல்,
மருத்துவமனையே அல்லோகலப்பட்டு
அற்பன் வருகைக்கு முறம் பிடித்து
திறம் காட்டிய போலீசே,
பொதுமக்கள் நலனுக்காக போராடிய
மாணவர்கள் மீது கைவைக்க
உனக்கேதும் சட்டம் பேச யோக்கியதை உண்டா?

சமூகத்தின் பொதுச்சொத்தான கல்வியை
சுயநல வெறியோடு சேதப்படுத்தி சில்லரை பார்க்கும்
தனியார் பள்ளிகளை தட்டி வைக்க துப்பில்லை,
அனைவருக்கும் இலவசக்கல்வியை அரசே வழங்கிட
போராடியோர் மீது
பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாய் பொய்வழக்கு!

அரசு அங்கீகாரமே இன்றி
அனுமதிக்கப்பட்ட கட்டணத்தையும் தாண்டி
கொள்ளையடிக்கும் சட்டவிரோத தனியார் கல்வி கொள்ளையர்களுடன்
கூடிக்கொண்டு
சமூகவிரோதிக்களுக்கெதிராய் போராடுவோர் மீது
சட்டவிரோதமாகக் கூடியதாக தாக்குதல்!

தனியார் மயத்தின் கூலிப்படையே,
களமாடிய எம் பெண்களின்
இடுப்பிலிருக்கும் கைக்குழந்தைகள் கூட
உன் உடுப்பிலிருக்கும் கைக்கூலித்தனத்தை
வெறுப்புடன் பார்த்ததும்,
வீறிட்டழுது கண்டனம் செய்ததும்
நீ… போட்டுக் கொள்ளும் பொய்வழக்குக்கு
போதுமான சட்டவிரோதங்கள்தான்… இதையும் சேர்த்துக் கொள்!

பேச விடாமல் வாயைப் பொத்தி…
எழுத விடாமல் கையை முறுக்கி…
நடக்க விடாமல் பாடை தூக்கி…
வாழ விடாமல் உழைக்கும் வர்க்கமடக்கி…
கல்வியின் மீது தனியார்மயத்தின் தாக்குதல்,
திணிப்பு எப்படியோ!
அப்படி தோழர்களை வேனில் திணித்த காட்சியின் வழியே..
வெளிச்சம் போட்டுக் காட்டியது ஜெ அரசு
தனியார்மயத் திணிப்பை.
மக்களுக்காக எம் தோழர்கள் வாங்கிய அடிகள்
மறுகாலனியத்தை தகர்க்க
தமிழக அரசியல் வானில் காத்திருக்கும் இடிகள்!

மறுகாலனியாக்க மாமி ஜெயாவின்
தனியார்மய மிருக வெறிக்கு
ஒரு போதும் அடங்காது எம் தலைமுறையின் உரிமைக்குரல்

ஜெயா அரசு யார் பக்கம்…
போலீசும் அதிகார வர்க்கமும் யார் பக்கம்…
போராடும் பு.மா.இ.மு. யார் பக்கம்!
மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
கொளுத்தியெடுக்கும் கொடிய கோடையின் நடுவே
இடியுடன் மழையாய் இறங்கிய தோழர்களே..
போய் வாருங்கள்…
பத்மா சேஷாத்ரி பள்ளியை விட
புழல் சிறை ஒன்றும் அவ்வளவு மோசமானதில்லை
நிறைய கற்றுக் கொண்டு திரும்ப வாருங்கள்,
நிச்சயம் இறுதியில்
நீங்களே வெல்வீர் தோழர்களே!

_______________________________________________________

– துரை. சண்முகம்  

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

தனியார் பள்ளிக் கொள்ளையர்களின் கைக்கூலி பாசிச ஜெயா அரசை முறியடிப்போம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்!

ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை. மன்மோகன் சிங் அரசு ‘கோல் இந்தியா‘ என்ற பொதுத்துறை நிறுவனத்துக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமாக்கியிருக்கிறது. இந்த பகற்கொள்ளையைத்தான் ‘நிலக்கரி ஊழல்‘ என்று ஊடகங்கள் அழைக்கின்றன. மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் இந்த ஊழல் குறித்த செய்தி இடம் பெற்றிருப்பதை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு (மார்ச் 22, 2012) அம்பலப்படுத்தியது.

2004 முதல் 2009 வரையிலான காலத்தில் நடந்திருக்கும் இக்கொள்ளையில் ஜிண்டால், டாடா, அனில் அகர்வால், ஆதித்ய பிர்லா, எஸ்ஸார், அதானி, ஆர்செலார்மிட்டல், ஜெய்ஸ்வால், அபிஜித் குழுமம், எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் லிமிடெட், பூஷன் பவர் அன்ட் ஸ்டீல் லிமிடெட் போன்ற பன்னாட்டுதரகு முதலாளிகளுக்கு நாட்டின் பொதுச்சொத்தை அறுத்து கறிவிருந்து வைத்திருக்கிறார் மன்மோகன் சிங். இந்த அயோக்கியத்தனத்தை நியாயம் போல் காட்டுவதற்காகவே, பாதி நிலக்கரி வயல்கள் மத்திய  மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு தாரை வார்க்கப்பட்டுள்ள நிலக்கரி வயல்களில் புதைந்திருக்கும் மொத்த நிலக்கரியின் அளவு 3316.9 கோடி டன்கள். இதைக் கொண்டு நாளொன்றுக்கு 1,50,000 மெகாவாட் வீதம் (இதுதான் இந்தியாவின் தற்போதைய மின்சார உற்பத்தி) அடுத்த 50 ஆண்டுகளுக்கு அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவற்றில் 1700 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட வயல்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், 1616.9 கோடி டன் இருப்பு கொண்ட வயல்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தரப்பட்டிருக்கின்றன.

உலகச்சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.14,000. பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் மூலம் மானிய விலையில் விற்கப்படுவதால் இந்தியச் சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை மேற்கூறிய காலகட்டத்தில் ரூ.2000 முதல் ரூ. 2500 வரை இருந்துள்ளது. மன்மோகன் அரசோ கருப்புத் தங்கமான இந்த நிலக்கரி இருப்பை, டன் ஐம்பதுக்கும் நூறுக்கும் தள்ளிவிட்டிருக்கிறது.

மார்ச் 2011 நிலவரப்படி நிலக்கரியின் இந்தியச் சந்தை விலையை வைத்துக் கணக்கிட்டால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10.67 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை.

தனியார் முதலாளிகள் பெற்றுள்ள 1700 கோடி டன் நிலக்கரி இருப்பின் மதிப்பு 42 இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் என்று சி.பி.ஐ அதிகாரிகள் மதிப்பிடுவதாக கூறுகிறது இந்தியா டுடே (9.12.2011). இதன் மதிப்பு 51 இலட்சம் கோடி ரூபாய் என்பது பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

கொள்ளை போன தொகை எவ்வளவு என்பது குறித்த மதிப்பீட்டில் வேறுபாடு இருந்தாலும், இது அலைக்கற்றை ஊழலைப் போல அனுமானமாகக் கூறப்படும் இழப்பல்ல. நிலக்கரியின் சந்தை விலையில்,  ஒரு டன் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு கோல் இந்தியா நிறுவனம் செய்யும் செலவைக் கழித்து, குறைந்தபட்சமாக கணக்கிட்டுத்தான் இந்தத் தொகையைக் கூறுவதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது. நிலக்கரி வயல்களை ஏலத்திற்கு விட்டிருந்தால் 10.67 இலட்சம் கோடி ரூபாய் இழப்பை அரசு தவிர்த்திருக்க முடியும் என்கிறது அறிக்கை.

இச்செய்தி வெளிவந்தவுடனேயே பிரதமர் அலுவலகம் கீழ்த்தரமான கிரிமினல் வேலையில் இறங்கியது. சி.ஏ.ஜி. பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டு, தனது கருத்தை சி.ஏ.ஜி. மாற்றிக் கொண்டுவிட்டதாகப்  பிரச்சாரம் செய்தது பிரதமர் அலுவலகம்.

அடுத்த நாளே முழுக் கடிதமும் ஊடகங்களில் வெளியானது. ஏல முறை கடைப்பிடிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள 10.67 இலட்சம் கோடி  இழப்பை, அரசுக்கு ஏற்பட்ட ‘நட்டம்’ என்று அழைப்பதா அல்லது, ‘மனமறியாமல் தரப்பட்ட ஆதாயம்’ என்று அழைப்பதா (Loss or Unintended Benefit) என்ற முடிவுக்கு அவர்கள் வரவில்லை என்பதுதான் சி.ஏ.ஜி. யின் கடிதம் தெரிவித்த கருத்து.

கடிதத்தை வெட்டி ஒட்டி இப்படியொரு கீழ்த்தரமான கிரிமினல் வேலையில் ஈடுபட்ட மன்மோகன் அரசு, ஒருபுறம் குற்றத்தை மறுத்துக்கொண்டே இன்னொருபுறம் 2006-2009 ஆண்டில்  நிலக்கரிச் சுரங்க உரிமம் வழங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை விசாரிக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனத்தைக் (சி.பி.ஐ) கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார், 2006-இல் நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்புச் செயலராக இருந்து, 15 நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்தவர். எனவே இவரை சி.பி.ஐ. விசாரிக்குமா, நிலக்கரித் துறை அமைச்சரான பிரதமரை விசாரிக்குமா என்ற விடைதெரியாத கேள்விகள் எழுந்துள்ளன.

சி.பி.ஐஇன் விசாரணை வலையத்தில் நிலக்கரி வயல்கள் நிறைந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர், ம.பி. ஆகிய மூன்று மாநிலங்களின் பா.ஜ.க. அமைச்சர்கள், நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், மத்திய அமைச்சகங்கள் ஆகியோரும் வருகிறார்கள்.  வலையை முடிந்தவரை அகலமாக விரித்துத் தனது அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிறது காங்கிரசு அரசு. இன்னொருபுறம், மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 16 நிலக்கரி வயல்களை ஒதுக்கப் போவதாகக் கூறி, மாநிலக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுக்கு ஆசையும் காட்டி விலைபேசவும் முயற்சிக்கிறது. இந்தத் தீவட்டிக் கொள்ளையில் முக்கியமான இந்தியத் தரகு முதலாளிகள் அனைவருக்கும் பங்கு இருப்பதால், எல்லோருமே முடிந்தவரை அடக்கி வாசிக்கிறார்கள்.

கணக்குத் தணிக்கையாளர் தனது அறிக்கையை இறுதியாக்கி மே 11ஆம் தேதியன்றே குடியரசுத் தலைவரிடம் தந்துவிட்டார். நிதியமைச்சகம் இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவேண்டும் என்பது மரபாம். குடியரசுத்தலைவர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. எனவே, இந்த மெகா ஊழல் அறிக்கை 50 நாட்களாக ராஷ்டிரபதி பவனில் உறங்குகிறது.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

சி.ஏ.ஜி. மதிப்பீட்டின்படி அலைக்கற்றை கொள்ளையைப் போல 6 மடங்கு பெரியது இந்த நிலக்கரிக் கொள்ளை. அலைக்கற்றைகளை ஏலம் விட்டு, அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு அதனை வழங்காமல், பிள்ளையார் கோயில் சுண்டலைப்போல ‘முதலில் வருவோர்க்கு முதலில்‘ என்று வழங்கிவிட்டார் என்பதுதான் ராசா மீதான குற்றச்சாட்டு. அலைக்கற்றை சுண்டலுக்கு கார்ப்பரேட் முதலாளிகள் வரிசையில் நிற்கவாவது வேண்டியிருந்தது. நிலக்கரி வயல்களைப் பெறுவதற்கு அந்த சிரமமும் இல்லை. அமைச்சர்கள்,அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை (Screening committee) நியமித்து, அந்தக் குழுவின் மூலம் டாடா, பிர்லா, மித்தல், ஜின்டால் போன்ற ‘தகுதியான‘ தரகு முதலாளிகளைத் ‘தெரிவு‘ செய்து, அவர்களுக்கெல்லாம் நிலக்கரி வயல்களை விநியோகித்துவிட்டார் மன்மோகன் சிங்.

“மலிவான கட்டணத்தில் கைபேசி சேவையை மக்களுக்குத் தரவேண்டும் என்பதற்காகத்தான் அலைக்கற்றையை ஏலம் விடாமல் குறைந்த விலைக்கு கொடுத்தோம்” என்பது ராசாவின் வாதம். “மின்சாரம், இரும்பு, சிமெண்டு போன்றவற்றை மக்களுக்கு மலிவாக தருவதற்காகத்தான் நிலக்கரி வயல்களை முதலாளிகளுக்கு சலுகை விலையில் கொடுத்தோம்” என்கிறது மன்மோகன் அரசு.

ராசாவின் வாதத்திலாவது சிறிதளவேனும் உண்மை இருக்கிறது. மன்மோகன் சிங்கின் வாதம் கடைந்தெடுத்த பொய். தொலைபேசிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு டிராய் என்ற ஒழுங்குமுறை ஆணையம் பெயரளவிலாவது இருக்கிறது. சிமெண்டுக்கும் இரும்புக்கும் விலை நிர்ணயம் செய்பவர்கள் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும்தான்.

அதேபோல, தனியார் முதலாளிகளின் கொள்ளை இலாபத்தை உத்திரவாதம் செய்யும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு, மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்துவதற்குத்தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன. ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 18 ரூபாய் வரை விலை வைத்து மாநில மின்வாரியங்களைத் திவாலாக்கும் ‘மெர்ச்சென்ட் பவர் கார்ப்பரேசன்கள்’ எனும் தனியார் முதலாளிகளுக்கும் நிலக்கரி வயல்களை வாரி வழங்கியிருக்கிறார் மன்மோகன்.

பல லெட்டர் பேட் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் தரப்பட்டது என்பதும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் தமது பங்குகளை விற்றே பல்லாயிரம் கோடி இலாபம் பார்த்து விட்டனர் என்பதும் அலைக்கற்றை ஊழலின் குற்றச்சாட்டுகள். நிலக்கரி வயல்களையும் பல லெட்டர் பேட் நிறுவனங்களுக்குப் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார் மன்மோகன். தமது உற்பத்தி இலக்கை பன்மடங்கு உயர்த்திக் காட்டி, நிலக்கரி வயல்களை வளைத்துப் போட்டிருக்கின்றன பல நிறுவனங்கள்.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

ம.பி. மாநிலத்திலுள்ள பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 25 கோடி டன் நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று ரூ.4000 கோடி இலாபமடைந்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் நிலக்கரித் தேவை 50 இலட்சம் டன்; ஆனால் இந்நிறுவனத்துக்கு 96.3 கோடி டன் நிலக்கரி இருப்புள்ள சுரங்கங்கள் தரப்பட்டுள்ளன. ஒரிசாவின் நவபாரத் நிறுவனம் 1,050 மெகாவாட் அனல்மின் நிலையத்திற்கென வாங்கிய நிலக்கரிச் சுரங்கத்தை எஸ்ஸார் குழுமத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு விற்று இலாபம் சம்பாதித்துள்ளது.  இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

வயல்களைப் பெற்ற 90% நிறுவனங்கள் (Coal Block Allottees)  ஒரு கிராம் நிலக்கரியைக் கூட எடுக்கவில்லை. நிலக்கரி விலை உயரும்போது நல்ல விலைக்கு விற்பதற்காக ரியல் எஸ்டேட்டுகளைப் போல போட்டு வைத்திருக்கிறார்கள். வேறு சிலர், சுரங்கம் தோண்டும் நிறுவனங்களுக்கு (Mine Developer cum Operator) வயல்களை ஏலம் விட்டு, ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டியிருக்கிறார்கள். இவை அனைத்தும் மன்மோகன் அரசுக்குத் தெரிந்தேதான் நடந்திருக்கின்றன.

அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு, தன் கையை மீறி நடந்து விட்ட தவறு, கூட்டணி நிர்ப்பந்தம் என்றெல்லாம் சொல்லி ராசாவையும் தி.மு.க.வையும் காவு கொடுத்து விட்டு தந்திரமாகத் தப்பித்துக் கொண்டார் மன்மோகன் சிங். அதற்கு ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் துணை நின்றன. நிலக்கரிக் கொள்ளைக் குற்றத்திலிருந்து மன்மோகன் அப்படி நழுவ முடியாது.

தனியார்மயதாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதும், முன்னாள் நிலக்கரித்துறை செயலரான சாரி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நிலக்கரி வயல்களைத் தனியாருக்கு விற்பதென்றால், ஒரு சுயேச்சையான குழுவின் கீழ் ஏலத்தின் மூலம்தான் விற்கப்படவேண்டும் என்று மே 1996-இல் கூறியது. அன்றைய மத்திய அமைச்சரவைக் குழு இதனை ஏற்று, சட்டத் திருத்தமாக கொண்டுவர சிபாரிசு செய்தது. ஆனால், அடுத்து வந்த பா.ஜ.க. ஆட்சி சட்டத்தை திருத்தவில்லை.

2004-இல் “அமைச்சர் சிபு சோரனிடம் ஏலமுறைதான் சரியானது என்று கூறினேன். அவர் பொருட்படுத்தவில்லை. பிறகு பிரதமரிடம் சொன்னேன் அவரும் கண்டு கொள்ளவில்லை” என்கிறார் அன்றைய நிலக்கரித்துறை செயலர் பாரிக். (எகனாமிக் டைம்ஸ், ஜூன், 13, 2012)  விண்ணப்பங்கள் குவியத் தொடங்கவே, ‘28 ஜூன் 2004 வரை வந்த விண்ணப்பங்களுக்குத்தான் நிலக்கரி வயல்கள் தரப்படும் என்று திடீரென்று அறிவித்தது மன்மோகன் அரசு. அலைக்கற்றை விவகாரத்தில் ராசா வெளியிட்ட அறிவிப்பைப் போன்றதுதான் இதுவும்.

2005-இல் ‘இனிமேல் ஏலம்தான்’ என்று அறிவித்தது மன்மோகன் கையில் இருந்த நிலக்கரி அமைச்சகம்.  இதற்கேற்ப 1973-இல் இயற்றப்பட்ட சுரங்கங்களைத் தேசியமயமாக்கும் சட்டத்தை விரைவிலேயே திருத்தி விடுவோம் என்றும் கூறியது. ஆனால், சட்டம் திருத்தப்படவில்லை. நிலக்கரி வயல்கள் தனியார்மயமாக்கம் தொடர்ந்தது.

ஏப்ரல் 2005-இல் இரும்பு மற்றும் நிலக்கரிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (எதிர்க்கட்சியினரும் அடங்கியது) “சுரங்கங்களை ஒதுக்குவதற்கான முறை வகுக்கப்படும் வரை தனியார்மயத்தை நிறுத்த”க் கோரியது. ஜனவரி 2006-இல் முதலீட்டுக் கமிசன்  ‘ஏலமுறையில் மட்டுமே நிலக்கரி வயல்கள் தரப்படவேண்டும்’ என்று வலியுறுத்தியது. 2006-இல் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் எழுப்பின.

“சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் சட்டம் (1957)  ஐத் திருத்தி, தனியார்மயமாக்கப்படும் நிலக்கரி வயல்களில் பழங்குடி மக்களுக்கும் பங்கு தரப்போகிறோம்.  இச்சட்டத்திருத்தம் நிறைவேறும் வரை தனியாருக்கு நிலக்கரி வயல்களைத் தரமாட்டோம்” என்று 2006-இல் நாடாளுமன்றத்தில் மன்மோகன் அரசு அறிவித்தது. 2010 வரை சட்டத்திருத்தம் நிறைவேறவில்லை.

2006-2009 காலத்தில்தான் அதிகபட்சமான நிலக்கரி வயல்களை முதலாளிகளுக்குத் தாரை வார்த்திருக்கிறார் மன்மோகன் சிங். 2006-09 காலத்தில் நடந்திருக்கும் இந்தக் கொள்ளையின் மதிப்பு 51 இலட்சம் கோடி என்று கூறும் பா.ஜ.க. எம்.பி. ஹன்ஸ்ராஜ் ஆஹிர், இந்தக் கொள்ளையை நிறுத்தக் கோரி 2008 முதல் பிரதமருக்கு பத்து கடிதங்கள் எழுதியதாகவும், ‘வரப்பெற்றோம்‘ என்பது மட்டும்தான் பத்து முறையும் தனக்கு கிடைத்த பதில் என்றும் கூறுகிறார்.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

“அலைக்கற்றை உரிமங்களுக்கான விலையைக் குறைத்து நிர்ணயித்தார்” என்பதுதான் ஆ.ராசாவின் மீது கூறப்படும் குற்றச்சாட்டு. கரித் திருடன் மன்மோகன் சிங் கும்பலோ, ‘ஏலத்தின் மூலம்தான் விற்பனை செய்யவேண்டும்’ என்பதைக் கொள்கை அளவில் ஏற்பது போல நயவஞ்சகமாக நடித்துக்கொண்டே, 1700 கோடி டன் கருப்புத் தங்கத்தை ஐம்பதுக்கும் நூறுக்கும் தரகுமுதலாளிகளின் தனிச் சொத்தாக்கியிருக்கிறது.

ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம், எரிவாயு, நிலக்கரி என ஊழல்கள் அளவில் ஒன்றையொன்று விஞ்சிச் செல்கின்றன. கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளின் தனிச்சொத்தாக மாற்றும் தனியார்மயக் கொள்கைதான் இந்த ஊழல்கள் அனைத்துக்கும் அடிப்படை.

தனியார்மயம்தான் முதற்பெரும் ஊழல். ஊழலற்ற தனியார்மயம் இல்லை. தனியார்மயத்தை அமல்படுத்துபவன் எவனும் உத்தமன் இல்லை. இருக்கவும் முடியாது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ளும்போதுதான், கரித் திருடன் மன்மோகன் சிங்கைத் தண்டிக்க முடியும். தனியார்மயக் கொள்ளையைத் தடுக்கவும் முடியும்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

அரசு பள்ளிகளில் கண்கானிப்பு கேமரா: மாணவர்களா? குற்றவாளிகளா?

இதுவரை தனியார் பள்ளிகளில் மட்டுமே கண்கானிப்புக் கேமரா பொருத்தப்பட்டு மாணவர்களை கண்கானிப்பது என்ற பெயரில் டார்ச்சர் செய்வது, தண்டனை கொடுப்பது என்பது இருந்து வந்தது. தற்போது திருவான்மியூர் அரசு பள்ளியில் கண்கானிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாணவர்கள் கண்கானிக்க தொடங்கிவிட்டனர். இது குறித்த தி இந்து பத்திரிக்கையில் வந்த செய்தி இதோ: Big Brother or benign eye? CCTV debate rages on

எதுக்கு கேமரா என்று கேட்டால்   ‘குற்றத்தை தடுக்கிறோம்’ என்ற வழக்கமான பல்லவியை பாடத்தொடங்கி விடுகின்றனர். மனிதனை பண்படுத்துவது தான் கல்வி. அந்த கல்வியை மாணவனுக்கு அளிக்கவேண்டிய கல்வி நிலையங்கள் எப்படி குற்றம் நடக்கும் இடமாக மாறமுடியும்?

 மேலும் ஹிந்து பத்திரிக்கை செய்தியில் ஒரு ஆசிரியர் கூறியிருப்பது போல தவறு செய்யும் மாணவனை கேமரா எப்படி தடுக்கும்? அம்மாணவனின் பெற்றோரை வரவழைத்து அவர்கள் மகன் செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க நிரூபிக்கும் சாட்சியாகத்தான் பயன்படுத்த முடியும்.

 வீட்டுவாடகைக்கு குடியிருப்போர்கள் அனைவரையும் ‘தகவல் திரட்டுவது’ என்ற பெயரில் குற்றவாளிகள் போல சித்தரிக்க காவல்துறை முற்பட்டதைப் போல மாணவ்ர்கள் என்றாலே தவறு செய்பவர்கள் என சித்தரிக்கவே இந்த கண்கானிப்பு கேமரா. இதுவரை தனியார் கல்வி முதலாளிகள் தங்கள் தரமான கல்விக்கு’ உதாரணமாக காட்டிய கேமராவை அதே வழியில் பயன்படுத்தி மாணவர் சமூகத்தை குற்றாவாளி கூண்டில் ஏற்றும் அரசின் முயற்சியை தொடக்கத்திலேயே கிள்ளி எறிய போகிறோமா? இல்லை குற்றவாளி கூண்டில் நிற்கப்போகிறோமா? என்பது தான் மாணவர்களாகிய நமது முன் உள்ள கேள்வி.

தொடர்புடைய பதிவுகள்

மாட்டுத்தாவணி-கோயம்பேடு….! தோழர் துரை.சண்முகம்

தன் வயிற்றில் பிள்ளைகளைக் சுமந்த மாதிரி

தாய்ச்சுமையொடு பக்குவமாக

மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து

தேசிய நெடுஞ்சாலையை

பிடித்தது பேருந்து.

இயங்குவது எந்திரம் மட்டுமா?

அதனொரு பாகமாய்

ஓட்டுநரின் கையும், காலும்

தசையும், நரம்பும் அசையும்.

வேகமெடுக்கும் சக்கரத்தின் சுழற்சியொடு

வெகுதூரம் சரிபார்த்து

விழிகள் சுழன்று இசையும்.

அவியும் எஞ்சின் சூடும்

இரையும் அரசுப் பேருந்தின் ஒலியினூடே

பேருந்தின் ஒரு தகடின் ஓசையும் வேறுபட்டால்

உடனே அறியும் ஓட்டுநரின் செவிப்புலம்

கும்மிருட்டில்

விரியும் அவர் பார்வை நரம்புகள் மேல்

பத்திரமாய் நம் பயணங்கள்.

எத்தனை பேர் அறிவோம்

அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும் தருணங்கள்.

….

போரும் நள்ளிரவில்… எதிரே தனியார் பேருந்துகளின்

தகிக்கும் விளக்கொளிகள்

இரவையும் பகலாக்கும்.

அதை.. தனியே எதிர்கொண்டு

வேகம் குறையாமல்

லாவகமாய் கைடு வாங்கி

தாய்மடி தூங்காத குழந்தையையும்

தனது ஸ்டியரிங்க் இடவலது தாலாட்டில் உறங்க வைத்து,

துடிக்கும் கண்களுக்குள்

டீசலொடு ஒட்டுநரின் தூக்கமு

எரிந்து விசையாகி எஞ்சின் துடிதுடிக்கும்.

….

அண்ணா சமாதி விளக்கு போல

ஏதோ வெளிச்சம் காட்டும்

முன்விளக்கைப் பற்றிக் கொண்டு

பாதை விரியும் தூரம் முழுக்க

தன் கண் விளக்கால் கடந்து க்டந்து

பயணிகளாஇச் சுமந்து செல்லும்

ஓட்டுநரின் விழி இருக்கை.

….

கொட்டாம்பட்டி தாண்டும் போதோ

கொட்டும் மழை…

பேருந்து நிர்வாகம் போல் இயங்காத வைப்பர்

தினந்தந்தி நாளிதழோ, தான் போடும் புகையிலையோ

பேருந்து கண்ணாடிக்கும் போட்டு

விழி மறைக்கும் மழை விலக்குவார்.

எதிர்ப்படும் மின்னலை கருவிழி துடைத்து

திருச்சி தாண்டி

ஒரு தேநீர் குவளைக்குள்

…..

இரவைக் கலக்கி ஓட்டுநரின் கையில்

பயணிகள் அனுபத்த தூக்கம்

தோலுரிந்து கிடக்கும்.

….

இருள் அப்பிக் கிடக்கும் சாலைகள்…

எதிர்ப்படும் தடைகள், குண்டு குழிகள்

பராமரிப்பில்லாத பேருந்தின் தொல்லைகள்

அத்தனைக்கும் முனகும் குரல்களை

வலிகளாய் தான் வாங்கி….

எரிபொருள் சிக்கனமாய் வண்டியை ஓட்டி

….

தன் இரத்தம் தாராளமாய் விடிய விடிய

கண்களில் கொப்பளித்து

அத்தனை பயணிகளையும்

பத்திரமாய் கோயம்பேட்டில் இறங்கி விட

வானம் வெளுத்து வரும்

ஓட்டுநரின் கண்களோ செக்கச் சிவந்திருக்கும்.

….

தனியார்மயதால் தறிகெட்டு ஓட்டி

நாட்டையே விபத்துக்குள்ளாக்கும்

மன்மோகனையும், ப.சிதம்பரத்தையும்

‘மினிஸ்டர்’ என் மரியாதையாகப் பேசும் வாய்கள்

…..

பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல்

“ஊம். வந்துட்டேன்,

ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.

–         துரை.சண்முகம்

நன்றி புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012

தொடர்புடைய பதிவுகள்:

இளந்தமிழகத்தின் எழுச்சியே வருக…வருக…! துரை.சண்முகம்

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி ஒய்ஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவன் ரஞ்சன் நீச்சல் பயிற்சி என்ற பெயரில் படுகொலை!

 • லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி Y.G.பார்த்தசாரதியையை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

 • தரமான கல்வி-நீச்சல்,குதிரை ஏற்றம் என பணத்தையும், பிள்ளைகளின் உயிரையும் பறிக்கும் தனியார்மய கல்விகொள்கைக்கு சாவு மணி அடிப்போம்!

 • சமச்சீர் பாடத்திட்டம்-தனியார் பளிகளில் 25% இடஒதுக்கீடு போன்ற சீர்திருந்தங்களை கூட அனுமதிக்காமல் ஏழைகள் படிக்கக் கூடாதென்று புதிய (பார்ப்பன )மனுநீதியை நிறுவத்துடிக்கும் பத்மாசேஷாத்திரி பள்ளிகளை அரசுடமையாக்கும் வரை போராடுவோம்!

******************************************************

தொடர்புடைய பதிவுகள்:

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்