• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 217,205 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!”

கூடங்குளம்…வேண்டுவது அனுதாப அலையல்ல..

அடக்குமுறைக்கெதிரான போராட்டம்!

நிராயுதபாணியாய் மக்கள்,
நிரம்பிய ஆயுதம் தரித்து போலீசு படை,
கைக்குழந்தையோடு போராடுபவர்கள்
வன்முறையைத் தூண்டுபவர்களாம்!

கைத்தடியும் துப்பாக்கிகளோடும் சூழ்ந்தவர்கள்
அமைதியை நிலைநாட்ட அவதரித்தவர்களாம்?!

மூலதனமும், பேரழிவும் உயிர்வாழ
சட்டத்தைக் காட்டி கலைந்து போகச் சொல்லும்
உத்திரவு ஆளும் வர்க்கத்துக்கு உண்டெனில்,

எங்கள் இயற்கையும், சந்ததியும் உயிர்வாழ
அணு உலையைத் திரும்பிப் போகச் சொல்லும்
உரிமை மக்களுக்கும் உண்டுதானே!

ஜனநாயக நெறிப்படி எதிர்ப்பைக் காட்ட
கடலோரம் சுடுமணலில் கலந்தனர் மக்கள்.
ஒரு நாள் வெயில் தாங்கி
உழைத்து பழக்கமில்லாத அதிகார வர்க்கமே,
உனக்கும் ‘ஜனநாயகத்’ தெம்பிருந்தால்
உன் ‘கொள்கைக்காக’ சுடுமணலில்
நீயும் அமர்ந்து கொள்ளடா எதிரில்
ஏன் ஜனநாயகம் தாங்காமல் அலறுகிறாய்
எங்கள் இருப்பைப் பார்த்து!

கடலோரம்… மண்ணை பிளந்து
கூடங்குளத்தை தன்னில் பார்க்கும்
எங்கள் மழலையரின் தாய்மண் உணர்ச்சிக்கு
நேர் நிற்க முடியுமா?
கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!

அலைகளின் முழக்கில்
இரண்டறக் கலந்த அணுஉலை எதிர்ப்பில்…
மெகா போனை வைத்துக் கொண்டு
மெகா சீரியல் ஓட்டிய அதிகாரி குரல்கள்
அடிபட்டுப் போயின…
போராட்டத்தின் அலை பொங்கி வரும்போது
செத்த மீனுக்குள்ள மரியாதை கூட
மொத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் க்கு கிடையாதென்பதை
கடல் புறம் காட்டி நின்றது.

உளவுப்படை, இழவுப் படை எதுவாயினும்
கடலுக்குப் போகாமலேயே மணற்பரப்பில்
போலீசை கருவாடாய் காயவைத்தனர் மக்கள்.

ஜனநாயக அவஸ்தைகளை தாங்கிக்கொள்ளும்
சகிப்புத்தன்மை மக்களுக்கிருக்கலாம்,
ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும்
அது ஒரு போதும் இல்லையென…
மீண்டும் உறுதி செய்தது போலீசு…
நிராயுதபாணியாய் நின்ற மக்கள்மீது
தடியடி, தாக்குதல், கண்ணீர்புகை, துப்பாக்கிச் சூடு!

முற்றுகைப் போராட்டம் சட்டவிரோதமென
அறிவித்த அரசு… இப்போது ஆயுதங்களுடன்
கன்னியாகுமரி தொடங்கி… கடலோரப் பகுதிகள்
இடிந்தகரை வரை முற்றுகை.

சம்மணம் போட்டு அமர்வது கூட
சட்டவிரோதமென,
இடிந்தகரை உண்ணாநிலை போராட்ட
பந்தலையும் ஆக்கிரமித்து
சொந்த நாட்டு மக்கள் மீது
அரசுப்படையின் அட்டூழியங்கள்

தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்களை
தடை செய்து,
இடிந்தகரையை முள்ளிவாய்க்காலாக்கும்
பாசிச காட்டாட்சி!

இத்தனைக்கும் மத்தியில்..
போராடும் மக்கள் நம்மிடம் வேண்டுவது
அனுதாப அலையல்ல…
உண்மைகளை கண்டுணரும் நேர்மை!

அணு உலைக்கெதிரான போராட்டத்தின் வழியே
கதிரியக்க பயங்கரத்தை மட்டுமல்ல,
உழைக்கும் மக்களுக்கு உதவாத
இந்த போலி ஜனநாயக அமைப்பையும்
இதில் புழுத்து திரியும்
அரசியல் பயங்கரங்களையும்
நமக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் கூடங்குளம் மக்கள்.

பயங்கரவாதிகள் பலரகம்… பலவிதம்…

ரத்தக் களறியில் மக்கள்.
‘ரத்தத்தின் ரத்தமான’ தா.பாண்டியனோ
தாக்குதல் நடத்திய கைக்கு
தங்கக் காப்பாய் அறிக்கை;

“பொறுமையாகவும், நிதானமாகவும்
பிரச்சினைகளை கையாண்டு
சுமூகமாக தீர்க்க வேண்டும்…”

போராடி… துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட
மீனவர் அந்தோணியின்
போஸ்ட்மார்டம் அறிக்கைக்கு
கட்டாயம் தா.பா. ‘டெக்னிக்’ உதவும்.

அடித்தவனுக்கே போய் ஆறுதலும்
தேறுதலும் சொல்லும்
இப்படியொரு பயங்கரவாதியை
எங்காவது பார்த்ததுண்டா?

இன்னொருபடி முன்னேறி…
மார்க்சிஸ்டு ஜி.ராமகிருஷ்ணனோ
“மக்கள் போராட்டத்தை கைவிட்டு
சுமூகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்”
என ஜெயாவின் ஆவியாகி ஜீவிக்கிறார்.
சொந்தநாட்டு மக்களையும்,
சொன்ன பேச்சை கேட்காத கட்சிக்காரனையும்
நந்திகிராமிலும், கேரளாவிலும்
வேட்டையாடுவதில்
ஜெயலலிதாவுக்கே ராஜகுரு
சி.பி.எம். பயங்கரவாதிகள் என்பதை
கூடங்குளமும் குறித்துக் கொள்கிறது.

போராட்டக் களத்தில்
அப்பாவி மக்களை விட்டுவிட்டு
தலைவர்கள் தப்பியோடிவிட்டதாய்
ஊடக பயங்கரவாதிகள் ஊளை!
பாவம்! தவிக்கும் மக்களை
சன்.டி.வி. கலாநிதிமாறன் போய்
காப்பாற்றி வரவேண்டியதுதானே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில்
தப்பியோடும் பயங்கரவாதிகள்
வாழ்வுரிமைக்குப் போராடுபவர்கள் மீது
வன்மம் கொப்பளிப்பது
தற்செயலல்ல, வர்க்கப் பகைதான்!

தெற்கிருந்து தினந்தோறும்
போராடுபவர்களைப் பார்த்து,

நயன்தாரா இடுப்பைக் கிள்ளவும்,
நாடார்கள் ஓட்டை பொறுக்கவுமே
தெற்கு பக்கம் ‘செட்டு’ போடும் சரத்குமார்
“தலைவர்கள் தலைமறைவானதிலிருந்தே
அவர்கள் சரியானவர்கள் இல்லை” என
வாய் கொழுப்பும், வர்க்கக் கொழுப்பும்!

வாய் சும்மா இருந்தாலும்
உங்கள் வர்க்கம் சும்மா இருக்காது
வாய்திறந்து பேசுங்கள் வரவேற்கிறோம்…
உங்கள் வர்க்கம் தெரியவருவதால்!

புடைசூழ வாருங்கள் பொய்யர்களே…
உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது…
பணம் உள்ளது…. படை உள்ளது….
ஆனால் உண்மையும், நீதியும்
எங்களிடம் மட்டுமே!

உரிமையின் உணர்ச்சிகளை
அறியாத உங்கள் தோல்களை
உரித்துக் காட்டும் மக்களின் போராட்டம்.

போராட்டத்தின் நியாயம் அறிய
கொஞ்சம் கூடங்குளத்திற்கு  செவி கொடுங்கள்…
போராட்டத்தின் உண்மை அறிய
கொஞ்சம் இடிந்தகரையை உற்றுப் பாருங்கள்…
போராட்டத்தின் சுவை அறிய
துப்பாக்கிகளுக்கு முன்னே
தங்கள் மழலையை போராட்டத்திற்கு ஒப்படைத்திருக்கும்
எம் பிள்ளைகளின் கரம் சேருங்கள்…

அதோ… தடிகொண்டு தாக்கும் போலீசை
நெய்தல் செடிகொண்டு
வர்க்க குறியோடு எறியும் – எங்கள்
பரதவர் மகனின் போர்க்குணம் பார்த்து
பொங்குது கடல்!

மண்ணைக் காக்கும் போராட்டத்தில்
மண்ணும் ஒரு ஆயுதமாய்
வெறுங்கையோடு எம் பெண்களும்
பிள்ளைகளும் தூற்றும் மணலில்…
அடக்குமுறை தூர்ந்து போவது திண்ணம்!

______________________________________________

– துரை. சண்முகம்.

_______________________________________________

முதல் பதிவு: வினவு

 

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!


கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டம்-14

கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் மீதான பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

போராடும் மக்களுக்குத் தோள் கொடுப்போம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இடிந்தகரையிலிருந்து கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கடற்கரை வழியாக நேற்று சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நயவஞ்சகமான சட்ட மொழியில் பேசி முயன்றனர். இதற்கு தோதாக நீண்ட நாட்களாக 144 தடையுத்திரவையும் பிறப்பித்திருந்தனர். 5000த்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்றிரவு முழுவதும் கடற்கரையில் வெட்டவெளியில் தங்கிய மக்கள் இன்றும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களை போக்கு காட்டிவிட்டு அலையவிடும் தந்திரத்தை போலீசு தொடர்ந்து மேற்கொண்டது. இறுதியில் கண்ணீர் குண்டுகளை வீசி தடியடி நடத்தியிருக்கிறது தமிழக போலீசு. கையில் கிடைத்தவர்களை கொடூரமாக தாக்கி கைதும் செய்திருக்கிறது. கடலுக்குள் ஓடிய மக்களை மீண்டும் கரை திரும்பாத வண்ணம் அரண் அமைத்து வேட்டை நாயைப் போல காத்திருக்கிறது போலீசு.

இடிந்தகரைக்கு உள்ளேயும் போலீசு படை நுழைந்து, போராட்டக்காரர்களின் பந்தலைக் கைப்பற்றியிருக்கிறது. தேவாலயத்துக்கு உள்ளேயும் நுழைந்திருக்கிறது. ஊரைக் கைப்பற்றிய ஆக்கிரமிப்பு படை போல ஊர் முழுவதையும் போலீசு ஆக்கிரமித்திருக்கிறது. பலர் படகுகளில் கடலுக்குள் செல்கிறார்கள். பெண்கள் குழந்தைகள் திசைக்கொருவராக சிதறியிருக்கின்றனர். யாருக்கு என்ன நேர்ந்த்தென்று தெரியவில்லை.

அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் இந்த நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இத்தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எமது அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும் அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்ப பெறவேண்டும்.

அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்தவேண்டும்.

மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரு நாசம் விளைவிக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவேண்டும். என்று கோருகிறோம்.

ஒரு பட்டாசு தொழிற்சாலையில் கூட மக்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்க வக்கில்லாத அரசுக்கு, அணு உலையின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் தருவதாகப் பேசுவதற்கே அருகதை கிடையாது. காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட மாற்று மின் தயாரிப்பு முறைகள் உலகமெங்கும் பரவிவரும் இக்காலத்தில் இந்தியாவின் மீது அணு உலைகள் திணிக்கப்படுவதற்கு காரணம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாப நோக்கமும், இந்திய அரசின் இராணுவ நோக்கமுமே தவிர வேறில்லை.

அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

அ.முகுந்தன்,

ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு.

ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.

_______________________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் அணு உலையினால் மின்சாரம் கிடைத்து அதனால் மின்வெட்டு போய் விடும் என்ற அரசு மற்றும் தினமலர்(ம்) போன்ற ஊடகங்களின் நச்சுப் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்ட பாடல்.

*******************************

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கூடங்குளம் இயங்கினாக்க மறைந்திடுமா பவரு கட்டு…!

இதுக்குமுன்னே ஏண்டா இல்ல இத்தன நேரம் பவரு கட்டு…!

அந்த அணு உலையை இயக்குறதுக்கு அரசு போடும் சாட்டுக்கட்டு!

அந்த ஆய்வு குழு நாலுபேரும் அம்மாவோட நாடக செட்டு!

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 

சிறுதொழில் விவசாயம் பாதி நாலு மின்வெட்டு

பென்சருக்கும் ஹுண்டாய்க்கும் பல்லாயிரம் மெகாவாட்டு

அந்த அணு உலையை இயைக்கி புட்டா நிக்காதாம் பம்புசெட்டு

சொல்லுற ஆர்-எஸ்-எஸ்ஸும் காங்கிரசும் பன்னாட்டுக்கு மைக்கு செட்டு….

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 

உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…!

சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

அட மாப்பிள்ளைகு எய்ட்ஸ்ன்னு மனவரையில தெரிஞ்சுட்டு

நீ மாலபோட சொல்லுவியா… நீ பெத்த மகளுக்கு….!

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

****************

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!

அணு உலையை விரட்டனும்னா போராட்டத்தை மாத்தனும்! கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராமா மாறனும்!!

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: சென்னை எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தின் ஒளி & ஒலி குறுந்தகடுகள் வெளியீடு!

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

எது தீவிரவாதம் ? யார் தீவிரவாதிகள்?

த்திரிகை – சினிமா – ஓட்டுக்கட்சிகள் என்ற சிமெண்ட் – மணல் – ஜல்லிக் கலவை இடையறாது உருண்டு கொண்டே இருக்கிறது. எது தீவிரவாதம், யார் தீவிரவாதிகள் என்பவை குறித்த பாசிசத்தன்மை கொண்ட தேசவெறிக் கருத்தை, கான்கிரீட்டுக்குரிய உறுதியுடன் மக்கள் மனதில் உருவாக்கிருக்கிறது. இந்தப் பொய்மையை அம்பலப்படுத்தும் விதமாக  புதிய கலாச்சாரம் இதழில் வந்த “எது  தீவரவாதம்?” என்ற கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
.
கட்டுரையை கிழே க்ளிக் செய்து படிக்கவும்
******************************************************************
.
.
.
.
.
.
நன்றி ஜீலை 2000 புதிய கலாச்சாரம்
நன்றி: போர்முரசு

காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !

 

மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும்

உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !

விலை: ரூ. 5

இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு!

பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!

அணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்!

42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை!
சிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு!
நாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது
டாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே!
அணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா?

அணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்
அப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்?

தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்!

பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!

‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்-
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

அக்னி ஏவுகனைப் பரிசோதனை : சாதனையா? வேதனையா?

அக்னி 5 ஏவுகனை வெற்றி குறித்து பிரதமர் முதல் ஊடகங்கள் வரை பாராட்டு தெரிவித்து பேசுகின்றன. ஆனால் அதே ஊடகங்களில் ஒன்றான தினமணி தனது தலையங்கத்தில் ‘தமிழகத்தில் 90% பேருந்து நிலையங்களில் கட்டணக் கழிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்தும் அநியாய கட்டணக்கொள்ளையும், முறையான பராமரிப்பும் இன்றி சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறிவருகிறது’ என கவலை தெரிவிக்கிறது.  ‘விமான நிலையங்களில் கக்கூஸை தூய்மையாக பராமரிக்கமுடியும் அரசால் ஏன் பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையங்களில் கக்கூஸை தூய்மையாக பராமரிக்க முடியாது?’ என கேள்வி எழுப்புகிறது. இது தான் இந்தியா. ஒரு கக்கூஸைக்கூட பராமரிக்க முடியாத இவர்கள் தான் ஆபத்தான அணு உலைகளை கட்டப்போகிறோம் என்கிறார்கள்.

இந்தியா ராணுவத்தின் கோவணம் கிழிந்து தொங்கும் நிலையில் அதனை மூடிமறைக்கும் விதமாக அக்னி5 வெற்றி குறித்து பேசப்படுகிறது. இந்நிலையில் நாட்டையே அடகு வைத்துவிட்டு எவனை பாதுகாக்க ஏவுகனைகள் விடப்படுகின்றன என்ற உண்மையினை உணர்த்தும்விதமாக இதற்கு முன்னர் அக்னி ஏவுகனைப் பரிசோதனை செய்யப்பட்டபோது புதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரையினை மறுபிரசுரம் செய்கிறோம்.

**************************

இந்திய பாதுகாப்புத் துறை, கடந்த மே7ஆம் தேதியன்று அக்னி3 என்ற ஏவுகணையை விண்ணில் ஏவிப் பரிசோதனை நடத்திய முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, அக்னி3 ஏவுகணை அடுத்த ஆண்டிற்குள் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியாவிடம் ஏற்கெனவே உள்ள அக்னி1 மற்றும் அக்னி2 ஏவுகணைகளைவிட, அக்னி3 ஏவுகணை அதிகத் தொலைவு ஏறத்தாழ 3,500 கி.மீ.சுற்றளவில் உள்ள இலக்குகளைச் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த மூன்று வகையான ஏவுகணைகளுமே அணுகுண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. முதலிரண்டு ஏவுகணைகளைக் கொண்டு பாகிஸ்தானின் உள்பகுதிகளைக் கூடத் தாக்க முடியுமென்றால், அக்னி3 ஏவுகணையோ சீனாவைக் குறி வைக்கிறது.

இந்தியப் பாதுகாப்புத்துறை இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஊடாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய அக்னி5 என்ற ஏவுகணையையும்; ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய “”ஹைபர் சோனிக்” ஏவுகணையையும்; விண்ணில் இருந்து செலுத்தக்கூடிய “”அஸ்த்ரா” ஏவுகணையையும் பரிசோதனை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இத்தகைய ஏவுகணைகள், ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகளைச் சுமந்து கொண்டு சென்று, ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கக்கூடிய திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.

இதுவொருபுறமிருக்க, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஹைபர்சானிக் ஏவுகணை; பூமியில் இருந்து விண்ணுக்குச் சென்று, அங்குள்ள இலக்கைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை; நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே15 சாகரிகா ஏவுகணை எனப் பல்வேறு விதமான பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை கடந்த ஒரு ஆண்டுக்குள் இந்தியப் பாதுகாப்புத் துறை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது.

இந்தியா இப்படி முண்டா தட்டிக் கொண்டு நிற்பதற்கு எதிர்வினைகள் இல்லாமல் போகுமா? இந்தியா அக்னி3 ஏவுகணையைப் பரிசோதனை செய்த அதே சமயத்தில், பாகிஸ்தான், இந்தியாவின் உட்பகுதிகளைக் கூடத் தாக்கக் கூடிய திறன் கொண்ட “”ஷஹீன்2” என்ற ஏவுகணையை, இரண்டு முறை ஏவிப் பரிசோதனை நடத்தியது. சீனாவோ, ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுண்டுகளை ஏந்திக் கொண்டு, 8,000 கி.மீ சுற்றளவில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும்; ஒரேயொரு அணுகுண்டை ஏந்திக் கொண்டு 12,000 கி.மீ முதல் 14,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் தனது இராணுவத்தில் சேர்க்கப் போவதாக அறிவித்த்திருக்கிறது.

இந்தியாவும்பாகிஸ்தானும்; இந்தியாவும்சீனாவும் அமைதிப் பேச்சுவார்த்தை, பொருளாதார ஒத்துழைப்பு என ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இந்த ஆயுதப் போட்டியும், ஆயுதக் குவிப்பும் அந்த நல்லுறவுகளைச் சிதைத்துவிடாதா எனச் சிலர் கேட்கலாம்; ஆனால், இந்த நாடுகளோ, “”அணு ஆயுதம் இருந்தால்தான் அமைதியை ஏற்படுத்த முடியும்” எனக்கூறி,இந்த ஆயுதக் குவிப்பை நியாயப்படுத்துகின்றன.

இந்தியா அணுகுண்டுப் பரிசோதனைகளை நடத்திய பொழுது, அதனை நியாயப்படுத்த “”இதன் மூலம் இந்தியாபாக். இடையே போர் மூளும் அபாயத்தைக் குறைத்துவிட முடியும்; அணு ஆயுதம் கையிலிருந்தால், மரபு வழி ஆயுதங்களை பெருமளவு வாங்க வேண்டிய அவசியம் எழாது; இதன் மூலம், இராணுவச் செலவைக் குறைத்துவிட முடியும்” என வாதிட்டது. ஆனால், இந்தியாபாக். இடையே கனன்று கொண்டேயிருக்கும் முறுகல்மோதல் நிலை, இந்த வாதங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டது.

1998ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்து அணுகுண்டுப் பரிசோதனைகளை நடத்திய பிறகுதான், அவற்றுக்கிடையே இரண்டு முறை முழு அளவிலான போர் வெடிப்பதற்கான அபாயம் எழுந்தது. 1999இல் நடந்த கார்கில் சண்டையின் பொழுது, இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவர் மீது மற்றொருவர் அணுகுண்டைப் போடப்போவதாக, 13 முறை மிரட்டிக் கொண்டதாக அமெரிக்க உளவு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2001இல் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து, இரு நாடுகளும் போர் தொடுப்பதற்காக எல்லைப் புறத்தில் எதிரும் புதிருமாக படைகளையும், ஆயுதங்களையும் நிறுத்தின. எந்த நேரமும் போர் வெடித்து விடலாம் என்ற நிலையில், அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயி, பாக்.மீது அணு ஆயுதங்களைப் போடவும் இந்தியா தயங்காது எனச் சூசகமாக அறிக்கை விடுத்தார். அப்பொழுது பாக். இராணுவத்தின் தளபதியாக இருந்த மிர்ஸா அஸ்லம் பேக், நாங்கள் ஒரு முறையல்ல, இரண்டு முறையல்ல, மூன்று முறை கூட அணு ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவைத் தாக்குவோம் என்றார். இந்தப் போர்வெறி பிடித்த பேச்சுகள் வெற்று மிரட்டலாகவே முடிந்து போனாலும், அவை, இந்தியபாக். மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை. இந்தச் சம்பவங்கள் அணு ஆயுதம் மட்டுமே ஒரு நாட்டின் தற்காப்பை உத்தரவாதப்படுத்தி விடாது என்பதையும் நிரூபித்தன.

இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில், இந்திய இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. துணை இராணுவப் படைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளையும் சேர்த்ததால் இராணுவத்திற்கு  ஒதுக்கப்பட்டுள்ள தொகை ஏறத்தாழ ரூ.1,40,000 கோடி. இது பத்தாண்டுகளுக்கு முன்பு, போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பொழுது, இராணுவத்திற்கு செலவிடப்பட்ட தொகையை விட, மூன்று மடங்கு அதிகம்; மைய அரசு, இந்திய நாட்டு மக்களின் கல்விக்காக ஒதுக்கும் தொகையைவிட இராணுவச் செலவு 3.6 மடங்கு அதிகம்; 100 கோடி மக்களின் நலவாழ்வுக்காக ஒதுக்கப்படும் தொகையைவிட 5.6 மடங்கு அதிகம்.

இராணுவத்திற்குச் செலவு செய்வதைக் கணக்குப் பார்த்தால், உள்நாட்டுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாது என்ற வாதம் மூலம், இராணுவ ஒதுக்கீடு நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், இராணுவச் செலவை ஆராய நியமிக்கப்பட்ட அருண்சிங் கமிட்டியால் கூட, இப்பூதாகரமான செலவை நியாயப்படுத்த முடியவில்லை. இராணுவச் செலவில் 15 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் என அக்கமிட்டி அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

காயலாங்கடைக்குப் போக வேண்டிய அமெரிக்காவின் ட்ரென்டன் என்ற போர்க் கப்பலை, பல நூறு கோடி ரூபாய் செலவில் இறக்குமதி செய்யும் அளவிற்கு இராணுவத்தில் ஊதாரித்தனம் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகளும்ஆயுதத் தரகர்களும் சேர்ந்து கொண்டு கமிசன் அடிப்பதற்காகவே தரம் குறைந்த போர்த் தளவாடங்கள் போஃபர்ஸ் பீரங்கி, இசுரேலின் பாராக் ஏவுகணை போன்றவை வாங்கப்படுகின்றன. இந்த ஊதாரித்தனமும், ஊழலும் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது.

இந்திய அரசு பிப்ரவரி 1994இல் அக்னி ஏவுகணையைப் பரிசோதிக்கத் தொடங்கிய பொழுது, இந்தியா, தனது அனைத்து ஏவுகணைப் பரிசோதனைகளையும் உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கண்டித்தது. அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவ், அமெரிக்காவைச் சமாதானப்படுத்த அந்நாட்டுக்கு ஓடினார். ஆனால் இப்பொழுதோ, அக்னி3 ஏவுகணைப் பரிசோதனை பற்றி அமெரிக்கா வாய் திறக்க மறுக்கிறது.

அமெரிக்காவின் இந்த மாற்றம், இந்தியா “”வல்லரசாகி<<<<” விட்டதைக் குறிக்கவில்லை. மாறாக அமெரிக்கா, ஆசிய கண்டத்தில் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஜப்பான், இசுரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகளோடு இந்தியாவையும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம் போட்டு வருகிறது. 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய உலக ஒழுங்கமைவு என்ற அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டம், ஆசியாவில், சீனாவை அமெரிக்காவின் போட்டியாளராகக் குறிப்பிடுகிறது. சீனாவைக் கண்காணிக்க, உருட்டி மிரட்ட இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அமெரிக்காவின் கணக்கு.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான், இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்; இந்திய  அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் ஆகியவை போடப்பட்டுள்ளன. 3,500 கி.மீ., 5,000 கி.மீ தாண்டிச் செல்லும் ஏவுகணைகளை இந்தியா தயாரிப்பதை, அமெரிக்கா கண்டுகொள்ளõமல் இருப்பதை இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.

தனது தற்காப்புக்கு அணு குண்டுகளையும் ஏவுகணைகளையும் தயாரித்துக் கொள்ளும் உரிமை இந்தியாவிற்கு உண்டென்றால், மற்ற ஏழை நாடுகளுக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால், இந்தியாவோ, அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு, ஏழை நாடுகள் அணுசக்தி என வாயைத் திறப்பதற்குக் கூடத் தடை போடுகிறது. சர்வதேச அணுசக்தி முகமையில், ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்த நாட்டாமைக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அமெரிக்காவுக்கு அடியாள் வேலை செய்வதன் மூலம், தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள முயலுகிறது, இந்தியா. இந்த அமெரிக்க அடிமைத்தனத்தையும், பேட்டை ரௌடித்தனத்தையும் மூடி மறைப்பதற்காகவே, இந்திய அரசு, உள்நாட்டுப் பாதுகாப்பு, பாக்சீன அச்சுறுத்தல்கள், வல்லரசுக் கனவு போன்றவற்றை ஊதிப்பெருக்கி வருகிறது.

விவசாய உற்பத்தி வீழ்ச்சியாலும், விலைவாசி உயர்வாலும் இந்திய நாட்டின் உணவுப் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிட்டது. கல்வி தனியார்மயமானதால், அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை கல்வி கிடைப்பது கூட உத்தரவாதம் இல்லாமல் போய்விட்டது; கடன் வாங்கி படித்து முடித்தாலும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பெரும்பாலான இந்திய மக்களுக்கு உணவு, உடை, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதுவுமே கிடைக்காமல், அவர்கள் உத்தரவாதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும்பொழுது, தேச பாதுகாப்பு என்பதன் பொருள் என்ன? நாடு என்பது நான்கு புறமும் உள்ள எல்லைக் கோடுகள்தானா? அந்த எல்லைக்குள் வாழும் மக்களின் நலன் இல்லையா? பெரும்பாலான மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவது எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தலா? இல்லை, இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளா?

· பாலன்

நன்றி: புதிய ஜனநாயகம்

தொடர்புடைய பதிவுகள்

இந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1

பாசிச ஜெயா அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் போராட்டங்கள்

தமிழகத்தில் தனியார் மின் நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக மின்கட்டணம் மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாசிச ஜெயா அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு என்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காகவே என்று மாற்றப்பட்டதன் தொடர்ச்சியாகவே மின்சாரமும் பன்னாட்டு மற்றும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. இந்த மின்கட்டண உயர்வுக்கு காரணமான தனியார்மயத்தை ஒழிப்பது ஒன்றே தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர்முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் 04.04.12 அன்று மாலை 4 மணியளவில் பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த பு.ஜ.தொ.முவின் மாநில இணைச்செயலர் தோழர். ஜெயராமன் ” இன்று மின்கட்டண உயர்வு என்பது இடி போல உழைக்கும் மக்களைத்தாக்கி நிலைகுலைய வைத்துள்ளதையும் பால், பேருந்து கட்டணத்தை தொடர்ந்து  மின்கட்டண உயர்வை  அறிவித்து தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் பாசிச ஜெயா அரசை கண்டித்தும் இந்த விலை உயர்வுக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்க போலீசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த சூழலில் உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புக்களுடன் கரம் கோர்த்து நிற்க வேண்டிய அவசியத்தையும் ” வலியுறுத்தினார்.
அடுத்ததாக கண்டன உரை பேசிய பு.ஜ.தொ.முவின் மாநில அமைப்புச் செயலர் தோழர்.வெற்றிவேல் செழியன் ” பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டிய மின்சாரம் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக விற்பனை பொருளாக ஒரு பண்டமாக மாற்றப்பட்டிருப்பதுதான் இந்த மின்கட்டன உயர்விற்கு காரணம் . பொது மக்களின் சொத்தான மின்சாரத்தை தனியாருக்கு கொடுப்பதற்காகவே மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டதை அம்பலப்படுத்தியும் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் அனைத்து அரசாங்கங்களும் தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளதையும் விளக்கினார்.
அந்த வகையில் தமிழகத்தில் பாசிச ஜெய அரசு இந்த தனியார் மயக் கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி மக்களை கொன்று வருவதையும், மின்வாரியம் நட்டம் என்பதே திட்டமிட்ட சதி என்றூம் 5 தனியார் மின் முதலாளிகளின் லாபத்திற்காக கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வு பறிக்கப்படுவதையும், இந்த தனியார்மய தாராளமய உலகமய கொடுமையை எந்த ஒரு ஓட்டுக்கட்சியும் எதிர்க்காமல் உள்ளனர் என்றும் இந்த தனியார்மய தாராளமய கொள்கைகளை ஒழிக்க புரட்சிகர அமைப்புக்களின் தலைமையில் மக்கள் அணி திரண்டு போராட வேண்டியதையும் வலியுறுத்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் , மாணவர்கள், தொழிலாளிகள் என 250 பேர்கள் வரை கலந்து கொண்டனர்.

கரூரில் புமாஇமு சார்பில் மின்கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த பொதுக்கூட்டம் குறித்த பத்திரிக்கை செய்தி, புகைப்படங்கள்…

மின் கட்டண உயர்வு:இன்று(4.4.12) சைதை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயா அரசே!பிணந்திண்ணிக் கழுகே! 

 • மின் நிறுவன முதலாளிகளின் பையை நிரப்ப….
 • மின்சார ஒழுங்குமுறை ஆனையம் மக்கள் தலையில் திணித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெறு!

உழைக்கும் மக்களே!

 • மின்சாரம் வணிகப்பொருளல்ல – அது மக்களின் அடிப்படை தேவை!நம் அனைவரின் சொத்து!!
 • மின்சாரத்தை சரக்காக்கி கொள்ளையடிக்கும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை அரசுடையாக்கப் போராடுவோம்!
 • தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!

 ஆர்ப்பாட்டம்

4.4.12 புதன் கிழமை மாலை 5 மணி , சைதை பனகல் மாளிகை

ம.க.இ.க – பு.ஜா.தொ.மு – பு.மா.இ.மு – பெ.வி.மு

தொடர்புக்கு –

அ.முகுந்தன் – 95518 69588

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

அணு உலை பாதுகாப்பானதுனா அதை உங்க பாராளுமன்றத்துல போய் வைங்கடா!

பிப் 25, 2012 அன்று “ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! ” என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் புமாஇமு சென்னை கிளை தோழர்கள் நிகழ்த்திய நாடகம்….

தொடர்புடைய பதிவுகள்:

அணு உலையை விரட்டனும்னா போராட்டத்தை மாத்தனும்! கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராமா மாறனும்!!

கூடங்குளம்: சென்னை எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தின் ஒளி & ஒலி குறுந்தகடுகள் வெளியீடு!

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!