• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

வறுமையைப் பெருக்கி வாழ்வைப் பறிக்கும் குடியரசுக்கு விழா ஒரு கேடா?

“63 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை” – 

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.
வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.
1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.
விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 – -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.
விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.
உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.
உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?
இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.
ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.
110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
மூலம்:
டிசம்பர் “புதிய ஜனநாயகம்”
“உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்” கட்டுரை

சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்

பாட்டாளி வர்க்கம் ரஷியாவில் சோசலிச சமூகத்தை கட்டியெழுப்பி கொண்டு இருந்த போது ,அதனை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்ட  முதலாளித்துவ நாடுகளின் கைக்கூலிகளை கண்டிபிடித்து அவர்களை விசாரித்து, தண்டனை வழங்கிய முறை குறித்து தந்தை பெரியார் பெருமை பொங்க குடியரசு இதழில் எழுதியது தான் “ரசிய நீதி” என்ற பின்வரும் கட்டுரை.

ரஷியாவில் நீதிமன்றம் குறித்து அவதூறு செய்யும் முதலாளித்துவ அறிஞர்பெருமக்களின் முகத்தில் அறைகிறது இந்த கட்டுரை. 

***************************

ரஷ்ய தேச ஆட்சியின் கொள்கையை உலகம் முழுவதுமே வெருக் கப்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு பிரசாரம் செய்து வருவதாய் காணப்பட்டு வருகின்றது. எது போலவென்றால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பெரிதும் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் இருந்ததால் பார்ப்பனர்களின் செல்வாக்கால் அது ஒரு காலத்தில் எப்படி எல்லா மக்களா லும் வெறுக்கப்பட வேண்டுமென்று பிரசாரம் செய்வதாய் காணப்பட்டதோ அதுபோல்.

ரஷியா ஆட்சிக் கொள்கையானது சுருக்கமாகச் சொல்லப்பட வேண்டுமானால் அது உலக பணக்காரர்களுக்கு விஷம் போன்றதும் ஏழை மக்களுக்கு “சஞ்சீவி” போன்றதுமாகும். இன்றைய உலகம் பணக்காரர்கள் கையில் சிக்குண்டு, பணக்காரர்களுக்கு அடிமைப்பட்டு, பணக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் பணக்காரர்கள் 100க்கு 10- பெயர்களே யாயினும், அவர்களே உலக மக்களாகக் காணப்படுவதும், ஏழை மக்கள் 100க்கு 90-பேர்களாயினும் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாக உலகுக்கு ஞாபகத்துக்கே வரமுடியாமலும் இருந்து வருகின்றது.

ஆனால் ரஷ்யாவிலோ அப்படிக்கில்லாமல் பணக்கார ஆதிக்கம் ஒழிந்து ஏழைமக்கள் பணக்காரர்கள் கையினின்று விடுபட்டு சுதந்திரம் பெற்று ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி என்கின்ற வேற்றுமை இல்லாமல் எல்லோரும் ஒரே இனம் (அதாவது மனித இனம்) என்கின்ற தலைப்பில் எல்லோரும் ஓர் குடும்ப மக்களாய் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலை பணக்காரர்கள் புரோகிதர்கள் ஆதிக்கமுள்ள நாடுகளுக்கு எதிரான நிலையானதினால் பணக்கார உலகம் ரஷியாவை தூற்றவும், பழிக்கவும், வெறுக்கவும், விஷமப் பிரசாரம் செய்யவும் ஆன காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதில் அதிசயமொன்றுமில்லை. இந்த நான்கைந்து வருடகாலமாக ரஷியாவைப் பற்றி பலவாறு அதாவது ரஷிய மக்களுக்கு போதிய ஆகாரமில்லை யென்றும், கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடி மடிகின்றார்கள் என்றும், கொடுங்கோன்மை முறையால் ஆளப்பட்டு வருகின்றதென்றும், அந்நாட்டு ஆட்சியில் நீதி என்பதே கிடையாது என்றும், மற்றும் பலவிதமாக அதைத் தூற்றிப் பழித்து, இழித்து பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்தன. அங்குள்ள நன்மைகள், மேன்மைகள் எதுவாயினும் அவற்றை பரிசுத்தமாய் வடிகட்டினாற்போல மறைத்தும் வந்தன. எப்படி இருந்தும், எவ்வளவு விஷமப் பிரசாரம் செய்தும், சூரிய வெளிச்சத்தை உள்ளங்கையால் மறைக்க முடியாதுபோல ரஷியா நிலைமை இப்போது உலக மக்களுக்கு வெளியாகின்றது. வரவர ரஷிய சேதிகளின் உண்மையை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஜனங்களுக்குள்ள பயம் நீங்கியும் வருகின்றது. அது மாத்திரமல்லாமல் இந்த 4, 5 மாத காலமாய் ரஷிய சேதிகளை வெளிப் படுத்துவது ஒரு நாகரீகமாயும், ரஷிய சேதிகளைப் பற்றிப் பேசுவது ஒரு சத்கால nக்ஷபமாகவும் ஏற்பட்டுவிட்டது. இதன் பயனாய் இப்போது ரஷிய சேதிகள் இல்லாத பத்திரிகைகளும், ரஷியா பிரஸ்தாபமில்லாத பிரசங்கங் களும் மிகமிக அருமையாகப் போய்விட்டது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே ரஷிய பூச்சாண்டி திரை நீங்கப்பட்டு வெட்ட வெளிச்சத்தில் வெள்ளைக் கண்ணாடி மூலம் பார்க்கக்கூடியதாக இருந்து வருகின்றது.

சமீப காலத்தில் ரஷியாவைப் பற்றி ஒரு பரபரப்பு இருந்து வந்தது நேயர்களுக்கு தெரிந்திருக்குமென்றே எண்ணுகின்றோம்.

அதாவது ரஷிய ஆட்சியானது சில பிரிட்டிஷ் பிரஜைகளின் மீது குற்றம் சாட்டி சிறை பிடித்து வைத்திருப்பதாயும், அதுபழிவாங்கும் எண்ணத் துடன் கற்பனையாய் செய்யப்பட்டிருப்பதாயும், ஆனதினால் ரஷ்யாவுடன் பிரிட்டிஷ் எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாதென்றும், வியாபாரத் துறையில் ரஷிய வியாபாரத்தை நிறுத்தி அந்தச் சரக்கு பிரிட் டிஷுக்குள் வராமல் தடுத்துவிட வேண்டுமென்று பல புதிய சட்டங்களையும் செய்தும் அதன் மூலம் ரஷிய வியாபாரத்தை பகிஷ்கரிக்கவும் முயற்சித்து வந்தது யாவருமறிவார்கள்.

விஷயம் என்னவென்றால் ரஷியாவில் இயந்திரத் தொழில் முறை விருத்திக்கு அனுகூலமான மின்சார விசை நிலையங்கள் கொஞ்சகாலமாக ஒன்றன்பின் ஒன்றாய் பழுது ஆய்க்கொண்டு வந்ததுடன் அதனால் ரஷியத் தொழில் முறை கெட்டு பெரிய நஷ்டம் ஏற்பட்டும் வந்தது. ரஷ்ய ஆட்சி நிர்வாகிகள் இதைப்பற்றி சந்தேகப்பட்டு அதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றதில் சில பிரிட்டிஷ் கம்பெனிக்காரர்களின் நன்மைக்காக ரஷ்யா விலுள்ள சில பிரிட்டிஷ் இஞ்சினீர்கள் சில ரஷ்யர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களைக் கைவசப்படுத்தி அதன்மூலம் அங்குள்ள மின்சார நிலையங் களுக்குக் கெடுதியை விளைவித்து வந்தார்கள் என்பதாகக் கண்டு பிடிக்கப் பட்டு அந்த பிரிட்டிஷ் இஞ்சினீயர்களையும் அதற்கு உளவாயிருந்த ரஷ்ய சதிகாரர்களையும் கண்டுபிடித்துச் சிறை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விஷயத்தை பிரிட்டிஷ் முதலாளி வர்க்கம் அறிந்து இதனால் தங்களுக்குப் பெரிய உலகப்பழியும் அவமானமும் வந்து விட்டதே என்று கருதி இச்செய்கைகளை மறைக்க ஆசைப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூலம் ரஷ்யரை மிரட்டிப் பார்த்த தல்லாமல் ரஷ்யாவின் மீது பழியும் சுமத்தினார்கள்.

ஆனால் ரஷ்யர்கள் இவை எதற்கும் பயப்படாமல் தைரியமாய் அது விஷயத்தில் தாங்கள் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து உலகத்தின் முன்பு தங்களுடைய திறனையும், தைரியத்தையும் நியாயம் வழங்கும் முறையையும் காட்டிக்கொண்டார்கள். எப்படி என்றால் இந்த சதிக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட 18-குற்றவாளிகளில் பிரிட்டிஷ் குற்றவாளிகள் 6-பெயர்கள் (இவர்கள் ஆறு பேர்களும் பிரிட்டிஷ் இஞ்சினீயர்களாவார்கள். மீதி ரஷிய குற்றவாளிகள் 12 பேர்கள். இந்த பதினெட்டு பெயர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தி வெளிப்படையாய் எதிரிகளுக்கு தகுந்த வக்கீல்களை வைத்து வாதாட சந்தர்ப்பம் கொடுத்து அந்த வக்கீல்களுக்கு யோசனை சொல்லவும் விசார ணையின் யோக்கியதையை கவனிக்கவும் தக்க வண்ணம் பிரிட்டிஷ் பிரதி நிதிகள் வந்து கோர்ட்டில் ஆஜராக சம்மதித்தும் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த விசாரணையால் பிரிட்டிஷ் இஞ்சினீயர்களான குற்றவாளி கள் சிலர் தங்கள் குற்றங்களை தங்கள் வாய் மூலமாக ஒப்புக்கொள்ளவும் நேர்ந்து விட்டதுடன் சாக்ஷிகள் மூலம் குற்றங்கள் தாராளமாய் ருஜுவும் ஆகிவிட்டன.

இதன் மீது ரஷ்ய நீதிபதியானவர் பிரிட்டிஷ் குற்றவாளிகள் 6 பேர்களில் ஒருவருக்கு விடுதலையும் இருவருக்கு முறையே 3 வருஷம் 2 வருஷம் வீதம் தண்டனையும், மூவருக்கு தேசப் பிரஷ்டமும் செய்துவிட்டு, ரஷ்யக் குற்றவாளிகள் பன்னிருவர்களில் ஒருவரை விடுதலை செய்து விட்டு பாக்கி பேர்களை 10 வருஷம் 8வருஷம் 2 வருஷம் 3வருஷம் வீதமும் இதில் ஒரு பெண்ணும் இருந்ததால் அவருக்கு 11/2 வருஷமும் தண்டனை விதித்தார்கள். அப்பீலுக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள்.

இதிலிருந்து ரஷ்ய ஆட்சி நீதி வழங்கும் முறையை ஒருவாறு உணரலாம். இந்தக் குற்றங்களை சாதாரண குற்றம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. இதன் உள் எண்ணமும் இதனால் ஏற்படக்கூடிய நஷ்டமும் எவ்வளவு கடுமையானது என்பதை நாம் விவரிக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட குற்றம் ரஷ்யர்கள் பிரிட்டிஷுக்குள் வந்து செய்திருந்தால் அது எப்படிப் பாவிக்கப்பட்டு எவ்வித தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவரவர்கள் சொந்த முறையில் யோசித்துப் பார்த்தால் தெரிய வரும். அப்படிப்பட்ட இந்த கடுமையான சதிக்குற்றத்திற்கு இருவருக்கு 2-வருஷம் 3-வருஷம் தண்டனையும் மற்ற மூவருக்கு தங்கள் நாட்டை விட்டு அவர்களது சொந்த நாட்டுக்குப் போய் விடும்படியும் தீர்ப்புச் செய்தி ருக்கிறார்கள் என்றால் இதற்கு மேலான காருண்யமும், அருளும் உள்ள நீதி இந்த உலகத்தில் எங்காவது கிடைக்கமுடியுமா? என்பதை யோசித்தால் ரஷ்ய நீதியின் பெருமை விளங்கும். இந்த நீதி “ராம“ ராஜ்யத்திலோ அல்லது சுயாட்சி தேசத்திலோ கூட எதிர்பார்க்க முடியுமா என்பதும் யோசிக்கத் தக்கதாகும்.

இது இப்படியிருக்க இதன் உண்மையையும் யோக்கியதையும் பார்த்து பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்கின்ற யோசனை சிறிதுமின்றி வேண்டு மென்றே அவசரப்பட்டு ரஷியர்கள் மீது உலக மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் படி தூற்றப் பழித்து சில பகிஷ்கார முறைகளை கையாடினதும் பிரிட்டிஷாரின் புத்திசாலித்தனத்தையோ, ராஜ தந்திர முறையையோ நல்ல எண்ணத்தையோ காட்டுவதாக இல்லாமல் போனது குறித்து யாரும் வருந்தாமல் இருக்க முடியாது.

எப்படியிருந்த போதிலும் இந்த தடபுடல் விஷமப் பிரசாரத்தின் பயனாய் ரஷியாவுக்கு நன்மையே ஏற்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். எப்படியெனில் ரஷியாவின் நீதியை உலகம் அறிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது என்பதேயாகும்.

நிற்க ரஷியாவின் மீது எப்படியாவது ஒரு சமயத்தில் ஏதாவது ஒரு சாக்கை வைத்து (“ நீ இல்லாவிட்டாலும் உன் தந்தையாவது செய்திருப்பான்” என்கின்ற ஆட்டுக்குட்டி-ஓநாய்க் கதையைப் போல்) ஒரு குற்றம் சுமத்தி அதனிடம் வம்புச் சண்டைக்குப் போயாவது ரஷியாவில் இன்று நடைபெறும் பொதுவுடமை ஆட்சியை ஏழை மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் அனு கூலமான ஆட்சியை ஒழித்து மற்ற நாடுகளில் நடைபெறுவது போன்ற பணக் கார ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்கின்ற எண்ணம் இந்த உலகில் இன்று பிரிட்டிஷாருக்கு மாத்திரமல்லாமல் எல்லா தேசத்து ஆட்சிக்காரர் களிடமும் இருந்து வருகின்றது. அதற்கு ஆங்காங்குள்ள முதலாளிகளாலும், பாதிரி, புரோகிதர்களாலும் தண்ணீர்விட்டு பாதுகாத்தும் வரப்படுகின்றது. ஆனாலும் ஏழைமக்கள் சரீரத்தில் பாடுபட்டு தொழில் செய்து வாழும் மக்கள் கண்விழித்து சுயமரியாதை உணர்ச்சி பெற்று விட்டதால் முதலாளி ஆட்சி யின் எண்ணங்கள் கருகி வாடி வருகின்றன.

அன்றியும் ரஷிய ஆட்சி “முதலாளித்துவ ஆட்சிகளின் தயவி னாலோ அல்லது கருணையினாலோ நாம் வாழலாம்” என்கின்ற எண்ணத் தின்மீது ஒரு சிடுக்கை நேரம்கூட இல்லை. ஆனால் அதற்கு பதிலாக இந்த உலக முதலாளிகள் மாத்திரமல்லாமல் இன்னும் “செவ்வாய் மண்டல” முதலாளிகளின் எதிர்ப்பையும், அவர்களது சக்தியையும், சூழ்ச்சிகளையும், நன்றாய் அறிந்து எந்த நேரமும் எதிர்பார்த்து நின்று கொண்டு இருக்கின்றது. அது எப்படிப்பட்ட யுத்தத்தையும் வரவேற்று ஒரு கை பார்த்து விட துணிந்து இருப்பதுடன் உலக முழுமைக்கும் தன்னுடைய ஆட்சிக் கொள்கையை உகந்தளித்து உதவி புரியக் காத்தும் இருக்கின்றது.

ஆனால் ஏழை மக்களுக்கும் கஷ்டப்பட்டு பாடுபடும் தொழிலாளி மக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உண்மையான சுயமரியாதை உணர்ச்சி உண்டாக்க வேண்டியதுதான் இப்பொழுது பாக்கியிருக்கின்றது.

– தந்தை பெரியார்

குடி அரசு -–தலையங்கம் – 23.04.1933

தொடர்புடைய பதிவுகள்:

ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்

ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்

நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு, ”குடியரசு இதழில்”  பெரியார் எழுதிய ”ருஷ்யாவின் வெற்றி ”என்ற கட்டுரையினை வெளியீடுகிறோம்.

78 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்த எழுத்துக்களின் தேவை எப்போதையும் விட இப்போது அதிகமாயிருக்கிறது.  பாட்டாளிகளால் படைக்கப்பட்ட பொன்னுலகை  தனக்கேயுரிய பாணியில் விளக்குகிறார் தந்தை பெரியார்.

******************************

 ருஷியாவின் வெற்றி 

ஐந்து வருட திட்டத்தின் பலன்

ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர் அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப் படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன் குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரசாஞ் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச் செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர் களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப்பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந் திருக்கின்றனவென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வரு கின்றனர். ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடை முறை யில் சாத்தியமாகாது என்று புகன்ற ராஜ தந்திரிகளும், ருஷியாவில் தனியு டைமை யொழிந்து பொதுவுடைமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சி யும், அறிவும் குன்றி உற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்க ரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்றுத் தவரொன்று தானே இன்று ஒத்துக்கொள்ளும்படி செய்து விட்டதோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரஷியாவை அலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.

ரஷிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக மெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங் காலத்திலே சமதர்ம ஆட்சியின் திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பொழுது ரஷியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக் கொண்டிருக்கிறதென்றே கூறவேண்டும். அப்போரில் தமது எதிரிகளை நிர்த்தாக்ஷண்யமாகத் தண்டித்து வருவதை நியாய புத்தியுள்ள எவரும் தவறென்று கூறத் துணியார். ரஷியாவில் மனிதனுக்கு சுதந்தரம் அதிகமில்லையென்று கூறப்படுகிறது. தனிமனிதனு டைய சுதந்திரத்திற்குப் போதிய இடமிருப்பதாகக் கூறப்படும் நாட்டிலுள்ள மக்களைவிட ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டில் அதிக சுதந்திரமும் உரிமையு மிருப்பதோடு ஜார் சக்கரவர்த்தியின் கொடிய ஆட்சியில் உண்ண உணவும், உடுக்க உடையும், ஒண்ட நிழலும், படுக்கப் பாயுமின்றி கோடானுகோடி மக்கள் தவித்து ஆயிரக்கணக்காய்-இல்லை-லட்சக்கணக்காய் பட்டினி யாலும் நோயாலும் மடிந்த ரஷியா நாட்டிலே பட்டினியென்றால் இன்ன தென்பதை எவருமறியாதபடி, நோய் என்றால் இன்னதென்பதை உணராத படியும் நாளைக்கு உணவிற்கு என்செய்வது, வியாதியால் இரண்டு நாள் படுத்துக்கொண்டால் நமது நிலையென்ன? நமது குடும்பத்தின் கதியென்ன? என்றகவலையே அறியாத மக்களாய் வாழும்படி செய்து நாடெங்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்திருக்கும்படி இச் சுருங்கிய காலத்திற்குள் சோவியத் ஆட்சி செய்து உலகத்திலுள்ள எல்லா முதலாளித்துவ அரசாங்கங் களும் திடுக்கிடச் செய்து விட்டதென்பதை நன்கு அறியலாம்.

ஐந்து ஆண்டு திட்டம்

பஞ்சத்தாலும் கொடுங்கோன்மையினாலும் பொருளாதார நிலையிற் மிக மிகக் கேவலமாயிருந்த ரஷியாவை உன்னத நிலைக்குக் கொண்டுவர சோவியத் ஆட்சியினர் 5 வருடத்திட்டமொன்று தயாரித்து ஐந்து ஆண்டு களுக்குள் இன்னின்ன வேலைகளைப் பூர்த்தி செய்துவிட வேண்டுமென்று திட்டம்போட்டுக் கொண்டு வேலை ஆரம்பித்தனர். வேலையற்று, கொள்ளையும் விபசாரமும் புரிந்து வந்த மக்களெல்லாம் தொழில் முறையில் ஈடுபட்டு தங்களின் துற்செயலை ஒழித்து நாட்டின் நலனைக் கோரி உழைக்க ஆரம் பித்து விட்டனர். பொருள் உற்பத்தி ஐந்து வருடத் திட்டத்தில் எதிர் பார்த்ததை விட அதிக வெற்றிபெற்று விட்டது. தங்கள் ஆட்சி முறையைப் பற்றி பெருமைபேசிக்கொண்டு கர்வம்கொண்ட ஐரோப்பாவும், அமெரிக்கா வும் உலக வர்த்தகத்தில் ரஷியப் போட்டியை எதிர்த்து போராட முடிய வில்லை. உலகத்து மார்க்கட்டிலெல்லாம் ரஷியக் கோதுமை போய் மோதி உலக பொருளாதார உற்பத்தி ஸ்தானங்களையெல்லாம் திடுகிடுக்கும்படி செய்து விட்டது.

‘பசி வந்திடப் பத்தும் பரந்துபோம்’ என்னும் பழமொழியைப் போல் பசியால் வாடும் மக்களிடம் சுதந்திரம், உரிமை முதலியவைகளைப் பற்றி கதை கூறுவதில் பயனென்ன? பட்டினியால் வாழும் மக்களுக்கு முதலில் கொடுக்க வேண்டியது வயிறு நிறம்பும்படி ஆகாரந் தான் கொடுக்க வேண்டுமென்ற உண்மையை சோவியத் அரசாட்சி அறிந்து கொண்டதோடு தனி சொத்துரிமையை ஒழித்து பொது உடமையை மேற்கொண்ட தங்கள் ஆட்சிக்கு பிற தேசம் உணவுப் பொருளைக் கொடுத்து ஒரு பொழுதும் உதவி செய்யாது என்பதையும் நன்கறிந்து 5 வருடத் திட்டத்தில் உணவுப் பொருள்களைப் பெருக்குவதைப் பிரதானமாகக் கொண்டனர். ஐந்து வருடத் திற்குள் இத்தனை டன் கோதுமை, இத்தனை டன் பாரம் பருத்தி, இவ்வளவு யந்திரங்கள், இவ்வளவு ஆடுமாடுகள், இவ்வளவு தொழிற்சாலைகள் உற்பத்தியாக வேண்டும், இத்தனை மாணவர்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டு மென்று திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தார்கள். நான்கு வருடத்திலே ஐந்து வருடத் திட்டத்திற் கண்ட பெரும்பாலானவை கள் பூர்த்தியாகி விட்ட தால் திட்டத்தை அதிகப்படுத்தி வேலை செய்தனர். இதன் விபரமெல்லாம் அரசாட்சியாரால் வெளியிடப்பட்டிருக்கும் சோவியத் ஆட்சியின் பொருளாதார நிலை என்னும் நூலில் விரிவாய்க் காணலாம். இத்திட்டத்தின் வெற்றியைக் கண்டு இத்தகைய திட்டங்களை ஏற்படுத்தி தாங்களும் வேலை செய்யலாம் என்பது பற்றி பற்பல அரசாங்கங்களும் யோசித்து வருகின்றன.

ஒவ்வொரு நாடும் இத்தகைய திட்டம் போட்டு வேலை ஆரம் பித்தால் உலகிலே தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தியாகி, உற்பத்தி யான பொருள்கள் விலையாகாமல் பலவிதத் தொல்லைகள் ஏற்படுவது நிட்சயம். இதையே ரஷியாவும் எதிர்பார்க்கின்றது. தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தி செய்ய மனிதனுக்கு சக்தி இருக்குமானால் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளி அரை வயிற்றிற்கும் சோறு கிடையாது தவிப்பதன் காரண மென்ன என்பதை ஏழைமக்கள் நினைக்க முற்படுவர். அப்பொழுது தான் முதலாளிகளும், முதலாளித்துவ அரசாங்கங்களும் தங்களை எப்படி வஞ்சித்து ஏழைகள் பட்டினியினால் தியங்கும்படி செய்கிறார்கள் என்பதின் உண்மை வெள்ளிடை மலையெனத் துலங்கும்.

ருஷிய சமுதாய அமைப்பு.

உலகத்திலே இன்று நிகழ்ந்து வரும் முறைகளென்ன? கோடிக்கணக் கான மக்கள் தினசரி 8 மணிநேரம், 10 மணிநேரம் வேலைசெய்து வருகின் றார்கள். இதன் பலனை முதலாளி வர்க்கத்தினர் அனுபவித்து வருகின்றனர். இதனால் பெறும் பொருளை என்ன செய்வதென்று முதலாளிகள் அறியாது மனிதனுக்கு அவசியமில்லாத பல தேவைகளை உண்டாக்கிக்கொண்டு வருகின்றார்கள். உதாரணமாக ஒரு மனிதன் ஏறிச் செல்ல ஒரு குதிரை பூட்டிய வண்டி போதுமானது. தன்னிடத்தில் ஏராளமான பணமிருக்கிறது என்ற திமிறினால் அதே வண்டியில் 2 குதிரை, 4 குதிரை, 6 குதிரை பூட்டி யோடும் படியான வண்டியைச் செய்து அதற்கென்று பல மனிதர்களை குறைந்த சம்பளத்தில் வேலையாளாக வைத்துக் கொள்கிறான். உண்மை யான உணவுப் பொருளை உண்டாக்கவேண்டிய பல மனிதர்களை தனக்காக உபயோகித்துக் கொள்கிறான். இவன் தன் அவசியத்திற்கு மேற்பட்ட குதிரை களை உபயோகித்துக் கொள்வதால் குதிரை விலை அதிகமாய் விடுகிறது. இவன் பணக்காரனாவதற்கு உழைத்து உழைத்து தன் உடலைக் கெடுத்து, ஒண்ட இடமின்றி தெருவில் கூடுதலால் கஷ்டப்பட்டுக்கொண்டு படுத் துறங்கும் தொழிலாளி குதிரை வாங்கப் பணமில்லாது மாடு போல் தனது வேலைகளுக்கு தனது வண்டியைத் தானே இழுக்கவேண்டியதிருக்கிறது. பணக்காரன் வண்டியில் பூட்டிய தேவைக்கு அதிகமான குதிரை ஒன்றை இந்த வண்டியில் பூட்டினால் தொழிலாளிக்கு எவ்வளவு உதவியாயிருக்கும். இதன் நுண் பொருளை ஆய்ந்துதான் ரஷ்ய சமதர்மம் ஆட்சி அமைக்கப் பட்டிருக்கிறது.

பொதுவுடமைத் தத்துவம்

உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்துவரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலே இன்று காணக்கிடக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத் திண்டாட்ட மும் உண்டாயிராதென்பதே பொது உடமை இயக்கத்தினரின் எண்ணம்.

ரஷிய பொது உடமை முறை உலகிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றி தொழில் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தொழிலாளியினுடைய உண்மையாண நிலை வெளிப்பட்டுவிடும். உழைப்பதற்கென்று ஒரு வகுப்பும் அதன் பலனை அனுபவிப்பவர் என்றே மற்றொரு வகுப்புமின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்று எல்லா அரசாட்சியாரும் சட்டம் செய்து விட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் உழைத்து விட்டு உலகிலே தன் உணவிற்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொண்டு இன்பமாய் அமைதியோடு வாழமுடியும்.

பொதுவுடமை என்றால் என்ன?

“எல்லா உயிர்ப் பிராணிகளுக்கும் பொதுவாக வுள்ள இந்த உணவுப் பிரச்சினை தீர்ந்து விட்டால் மக்கள் தங்களிடமுள்ள மனிஷீகத் தன்மையை விருத்தி செய்து கொள்ளமுடியும். பொதுவுடமையின் நோக்கமும் இதுவே யாகும். வருமானத்தை உழைப்பாளிகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வ தென்பதே இதன் பொருள். வயிற்றுப் பசிக்கு உணவுதேடுங் காலமும் தூங்கும் நேரமும் தவிர மீதமுள்ள நேரம் தன் வயிற்றுக்கும் பிறருக்கும் கட்டுப்படாது சுதந்திரமாய் வாழுங்காலம். அது மக்களெல்லோருக்கும் சம மாக இருக்க வேண்டுமென்பதே பொதுவுடமையின் உண்மையான தத்து வம்” என்று ஓரிடத்தில் பேராசிரியர் பெர்னாட்ஷா பெரிதும் வியாக்கியானம் செய் துள்ளார்.

இந்நிலை அடைய உலகிலுள்ள எல்லா தேசத்தினரும் பொது வுடமைக் கொள்கையை ஒப்புக்கொண்டு நடந்தால் தான் முடியும். இந்தக் கருத்துடன் தான் இன்றைய ரஷிய ஆட்சி நடந்து வருகிறது. இந் நன்னோக் கம் வெற்றி பெற ஒவ்வொரு நாட்டிலும் எதேச்சாதிகாரமுள்ள தொழிலாளி யின் பிரதி நிதிகளிருக்க வேண்டுமென்பதே சோவியத் நிபுணர்களின் கருத்தாதலின் ரஷியாவில் அவர்களுக்குத் தகுந்த தற்போதைய அரசியல் முறையை நிறுவியுள்ளார்கள்.

முதலாளிகளென்போர் யார்?

ஐந்து வருடத்தில் தொழிலாளிகளின் உடல் நலம், அறிவு விருத்தி முதலான நலனைப் பெருக்க பெரிதும் திட்டங்கள் ஏற்படுத்தினர். அங்குள்ள உற்பத்திப் பொருள்களை எவ்விதத் தடங்கலுமின்றி சர்க்காரே பிற நாடுகளில் கொண்டு விற்பனை செய்தனர். சில தொழிலில் லாபமும், சில தொழிலில் நஷ்டமும் ஏற்பட்டாலும் சர்க்காரே முதலாளியாக இருப்ப தால் நஷ்டத்தை லாபம் வரக்கூடிய பொருளிலிருந்து ஈடு செய்து கொள்ள முடிகிறது. உற்பத்தி செலவுகளை யெல்லாம் கழித்து 100க்கு 10 அல்லது 20 பாகம் தொழிலாளி களின் அபிவிருத்திக்காகச் செலவழித்து வருகிறார்கள். ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களுக்கு விளையாடுமிடம், வாசகசாலை, குழந்தைகளுக்குப்பால் கொடுக்கவும், தாலாட்ட அறைகளும், தொட்டிலும், இன்னும் பல வசதிகளும் செய்யப்பட்டிருப்பதோடு, ஆகாய வசனி (ரேடியோ) மூலம் சோவியத் ஆட்சி முறையைப் பற்றி பிரசங்கங்கள் மூலம் அறிவு விருத்தி செய்யப்பட்டு வருகிறது.

சோவியத் ஆட்சியினர் எதையும் ஆராய்ந்தே செய்வர். ஆய்ந்து நலமென்று கண்டால் இன்னதை இவ்வளவு காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொள்ளுகிறார்கள். உடனே அமலுக்குக் கொண்டு வருகிறார்கள். உற்பத்தி அதிகப்படுத்துவதென்றால் அதன் நோக்கத்தை தொழிலாளர்க்கு விளக்கிக் கூறி அவர்களுக்கு உற்சாக மூட்டி எளிதில் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைந்து கொள்கிறார்கள்.

விவசாயம்

ரஷியாவில் எல்லா நிலையங்களையும் சர்க்கார் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு மக்களை ஓர் இயந்திரம் போல் பாவித்து வருகிறார்கள் என்பது தவறு. விவசாயத்திற்கு லாயக்கான பூமிகளில் சில பாகம் சர்க்கார் பண்ணைகள்; சில பாகம் பல குடியானவர்கள் கூட்டுறவாகப் பயிரிடும் பண்ணைகள்; மற்றொரு பாகம் தனி விவசாயிகள் தனியாகப் பயிரிடும் நிலம் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இயந்திரக்கலப்பைகளை உபயோகித் தால் தான் அதிகமான விளைவை எதிர்பார்க்க முடியும். சிறு சிறு நிலங்களாக இருந்தால் இயந்திரக் கலப்பையால் உழ முடியாது. எனவே தான் சர்க்கார் பொருளா தாரத்திற்கு அவசியமான இயற்கை மூலங்களும் மூலதனமும் பொதுவாக இருக்கவேண்டுமென்று விதி ஏற்படுத்தியுள்ளார்கள். ஆகவே தான் ஐந்து ஆண்டுத் திட்டம் (1928-1933) ஏற்படுத்தி அதற்குள் நிலத்தில் 100க்கு 20 பாகத்தை கூட்டுறவு விவசாயமாக்கி சிறுசிறு வயல்களாக ஏற்படுத்தியிருந்த வரப்புகளையெல்லாம் வெட்டி ஒரே சமமான பாகமாக்கி இயந்திர விவசாயத்திற்கு ஏற்ற விதமாக்கி விடவேண்டுமென்று திட்டம் போட்டனர். 4 ஆண்டுகளுக்குள் 100க்கு 60 பாகம் கூட்டுறவு விவசாயத் துக்கு முன் வந்துவிட்டது. விவசாயம் விருத்தியாக வேண்டும், விருத்தி யாகவேண்டும் எனக் கூவும் வீண் வெற்றுரைகளை அங்கு காணமுடியாது. இன்ன ஜில்லாவில் இவ்வளவு கோதுமைகளை விளைவிக்க வேண்டும் என்று சர்க்கார் திட்டம் போடுவார்கள். உடனே அதை அமுலுக்கு கொண்டு வர ஸ்தல சோவியத்துக்கு உத்தரவு கொடுக்கப்படும். அதை உடனே அவர்கள் நடத்த முனைந்து விடுவார்கள். இதன் பயனாக இன்று அங்கு 100க்கு 80பங்கு விவசாயம் சர்க்கார் பண்ணை யாக இயந்திரங்களின் மூலம் நடைபெருகிறது. 40,000 இயந்திர விவசாய கலப்பைகள் அங்கு வேலை செய்து வருகின்றன.

ரஷியா, விவசாயத்தைப் போல் கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்ய முனைந்து வேலைசெய்து விருத்தி செய்துவருகிறது. அதன் கைத் தொழில் அபிவிருத்தியை கீழ்கண்ட புள்ளிவிபரங்களால் நன்கறியலாம்.

தண்டவாளத்தில ஓடும் கார்கள் 12,000 என்று திட்டம் போட்டார்கள். 1931 க்குள்ளாக 20,000 தயாராகி விட்டன. 1933 க்குள் 825 ரயில் வண்டிகள் செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டார்கள். 1932 க்குள் 812 வண்டிகள் செய்யப்பட்டு விட்டன. 1913 ம் வருடத்தில் 170 லட்சம் ஜோடுகள் தயாராயின. 1931 ல் 768 லட்சம். இது திட்டத்திலிருந்து 167 லட்சம் அதிகம். 1913ல் 94,000 டன் சோப் உற்பத்தி செய்து விட்டனர். 1931ல் 1,89,000 டன் உற்பத்தி செய்து விட்டனர்.

முன்னேற்றம்

உலகத்திலுள்ள பெரிய இரும்புத் தொழிற்சாலைகளில் ஒன்று ரஷியா விலிருக்கிறது. அதன் பிரதம அதிகாரியாய் ஒரு இந்தியரே இருந்து வருகிறார். இங்கிலாந்தில் இரும்பு உற்பத்தி 40 லட்சம் டன்னிலிருந்து 95 லட்சம் டன் ஆக 35 வருடமாயிற்று. அமெரிக்காவில் இத்தகைய முன்னேற்றம் அடைய 8 வருடமாயிற்று. ஜெர்மனியில் 10 வருடம் சென்றது. ஆனால் ரஷியா 1 வருடத்தில் இந்த முன்னேற்றத்தை யடைந்து விட்டது. நிலக்கரியில் 530 லட்சம் டன் உற்பத்தியை செய்யத் திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தது. வெற்றியும் கண்டுவிட்டது. ரஷியாவில் 1930ம் ஆண்டில் புகை ரதங்கள் (மோட்டார்கள்) செய்யப்படவில்லை. 8550 கார்களுக்குத் தனி பாகங்கள் பொருத்தி வண்டியாகச் செய்யப்பட்டன. இப்பொழுது நாள் ஒன்றிற்கு 65 மோட்டார்கள் ரஷியாவிலே உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயத்திலே 100க்கு 20 பாகம் தவிர மற்றவைகள் சர்க்காருக்கே உரியது. சர்க்காரைத் தவிர தனி மனிதர்கள் ஒருவருக்கொருவர் கடன் கொடுத்து வாங்கினாலும், வியாபாரஞ் செய்தாலும் கிரிமினல் குற்றமாக ரஷியாவில் கருதப்படுகிறது.

எண்ணெய் உற்பத்தி செய்யும் தேசங்களில் ரஷியா இரண்டாவது ஸ்தானத்தையும் இயந்திர உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும் விவசாய இயந்திரக் கருவிகளில் முதலாவதாகவும் இடம்பெற்று விளங்குகின்றது.

தங்க உற்பத்தியின் மதிப்பு அவர்கள் திட்டத்திற்கு ஒன்றரை மடங்கு அதிகமாகக் கிடைத்து விட்டது.

கல்வி

1914 ல் 70,00,000 குழந்தைகள் கல்வி பயின்றனர்; 1928 ல் 1,50,00,000 படிக்க வேண்டுமென்றும் 1933ல் 1,70,00,000 படிக்க வேண்டுமென்று திட்டம் போட்டு வேலை செய்து வெற்றிபெற்று விட்டனர்.

ரஷியாவில் முதியோர்களுக்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1928 ல் வாசக சாலை 22,000 இருந்தன. 1933 ல் 34,000 ஆக்கி விட்டார்கள். ஊர் ஊராய்க் கொண்டுபோகும் லைபரெரிகள் 40,000-ஏற்படுத்தி விட்டனர். ரேடியோவின் மூலம் பலவிடங்களில் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1928 ல் 3,50,000 ஆகாயவசனிகள் (ரேடியோக்கள்) இருந்தன. 8,250 சினிமா நிலையங் களிருந்ததை இப்பொழுது 50,000 மாக அதிகப்படுத்தப் போகின்றார்கள்.

ரஷியாவின் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம் தாங்கள் செய்யப் போகும் காரியத்தை முதலில் திட்டமிட்டுக் கொண்டு அதில் தொழிலாளருக்கு போதிய ஊக்கமும் கொடுக்கும்படி தங்கள் நோக்கத்தைக் கூறி அவர்களுக்கு உற்சாகமாய் விடுவதால் தொழிலாளிகட்கு என்ன கஷ்ட நஷ்டம் போதிலும் ஊக்கங் குன்றாது வேலையையே கருத்தாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.

இந்திய நாடு

பிற நாடுகள் இத்தகைய நோக்கங்களை கையாண்டு திட்டத்தைக் கண்டு வெற்றியடைந்து கொண்டு போகும்பொழுது இந்தியா வாளா விருக்கு மேயானால் சீக்கிரத்தில் பொருளாதார நெருக்கடி யென்னும் சூழலில் பட்டு அதோ கதியாய் விடுமென்பது நிட்சயம்.

சில மாதங்களுக்கு முன் ரஷியா தோழர் ஒருவர் கவி. ரவிந்தரநாத் தாகூருக்கு நிருபம் ஒன்று எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடையக் காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசம் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாயிருப் பவை எவைகள்? என்று வினாவியிருந்தார். அதற்கு கவி-தாகூர் “தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லாப் பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பதுதான் உங்கள் ரஷிய நாட்டின் வெற்றிக்கு காரணம் சமுதாய விசயங்களில் முயர்ச்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதே எங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறது” என்று பதில் எழுதியிருந்தார்

குடி அரசு – கட்டுரை – 23.07.1933

‘தீபாவளி எனும் கொள்ளை நோய்’ – தந்தை பெரியார்

ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயினால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத்தத்தையும், செல்வத்தையும், அறிவையும் உறிஞ்சி விடும் கொள்ளை நோய்களுக்கே அதிகமாக அஞ்ச வேண்டும். அத்தகைய கொள்ளை நோய்கள் இந்து மதத்தில் ஏராளமாக இருக்கின்றன. இவைகளில் எல்லாம் மிகவும் பெரியதாகிய கொள்ளை நோய் தான் இவ்வாரத்தில் வருகிறது. அக் கொள்ளை நோய் தீபாவளிப் பண்டிகை யேயாகும். ஆகையால் எல்லா மக்களையும் ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அக்கொள்ளை நோயின் கொடுமைகளை எடுத்துக் காட்ட முன்வந்தோம்.

இந்தியர்கள் அவர்களுக்குள்ளும், இந்துக்கள் என்பவர்கள் மற்ற சமூகத்தாரைக் காட்டிலும் செல்வத்திலும், அறிவிலும், வீரத்திலும் தாழ்ந்து அடிமை மனப்பான்மை மிகுந்தவர்களாயிருப்பதற்குக் காரணம், இந்து மதமும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள பண்டிகைகளுமே என்பதை நமது இயக்கம் நன்றாய் விளக்கிக் காட்டியிருக்கின்றது. இந்து மதமும் இந்து மதத்தின் பேரால் ஏற்பட்டு வழங்கிவரும் பண்டிகைகளும் இல்லாதிருக்கு மானால் நமது மக்கள் எவ்வளவோ உயர்ந்த நிலையிலும், சுதந்திர முடைய வர்களாகவும் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இன்று மதத்தையும், மதப்பண்டிகைகளையும், லட்சியம் பண்ணாமல் தங்கள் சொந்த புத்தியின் வழியே நடந்து, இவ்வுலகத்தில், சுகமாக வாழ்வதற்கு வழியைக் கண்டு பிடிப்பதில் முனைந்து நிற்கும் மக்களே பகுத்தறிவு உடைய வர்களாகவும், அடிமைத் தன்மை இல்லாதவர்களாகவும், தரித்திரமில்லாத வர்களாகவும், வாழ்வதை நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிலைமையிலிருக் கிறோம். இருந்தும் நமது நாட்டு முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதாக ஆர்ப் பாட்டம் புரிந்து கொண்டிருக்கும் எவரும், மற்ற நாட்டு மக்கள் சுதந்திரமடை வதற்குக் கைக்கொண்ட உண்மையான வழிகளைப் பற்றிச் சிந்திக்கவோ அது பற்றி நமது மக்களிடையே பிரசாரம் பண்ணவோ முன் வராமலிருக்கின்றனர். ஆனால் நாம் மாத்திரம் ஆதிமுதல், இந்துமதமும், இந்துமதப் பண்டிகை களும் ஒழிந்தாலொழிய நமது மக்கள், செல்வத்திலோ, அறிவிலோ, சமத்துவத் திலோ ஒரு நாளும் முன்னேற முடியாது என்று சொல்லி வருகிறோம்.

இப்பொழுது நமது கண்முன் நிற்கும் தீபாவளிப் பண்டிகையை எடுத்துக் கொள்ளுவோம். இப்பண்டிகையினால் நமது நாட்டு மக்களுக்கு உண்டாகும் பொருள் நஷ்டம் சரீரத் துன்பம் எவ்வளவு? அன்றியும் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையுள்ள எல்லோர் மனத்திலும் பதியும் மூட நம்பிக்கை எவ்வளவு? இவற்றை எல்லாம் ஜன சமூகத்திற்கு எடுத்துக் காட்டி அவர்களைச் சீர்திருத்த எந்த தேசாபிமானியாவது முயற்சி எடுத்துக்கொள்கின்றானா?

முதலில் இப்பண்டிகையினால் மக்களுடைய அறிவு எவ்வாறு மழுங்க வைக்கப்படுகிறது என்பதைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். இதை அறிய வேண்டுமானால் இதன் பொருட்டு – அதாவது இப்பண்டிகையை ‘தெய்வீக’மானது என்று மக்கள் நம்பவைக்கும் பொருட்டு ஏற்பட்டிருக்கும் புராணக் கதையை ஆராய்ந்தாலே இதன் உண்மை விளங்கும். ஆதலால் அக்கதையைக் கீழே குறித்துக் காட்டுகிறோம்.

“பூமி தேவி” என்னும் இந்த மண்ணுக்கும், “மகா விஷ்ணு” என்று சொல்லப்படும் ஒரு தெய்வத்திற்கும் “நரகா சூரன்” என்னும் ஒரு மகன் பிறந்தானாம். அவன் அதிக பலசாலியாக இருந்து கொண்டு பார்ப்பனர் களுக்கு துணைவராகிய “தேவர்கள்” என்பவர்களை யெல்லாம் மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தானாம். ஆதலால், தேவர்களெல்லாம், தமிழர் குலமாகிய அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாகச் சொல்லப்பட்ட “நரகாசுர” னுடைய கொடுமையை சகிக்க முடியாமல் “மகாவிஷ்ணு” என்னும் அந்த தெய்வத்தினிடம் சென்று முறையிட்டார்களாம். மகா விஷ்ணு என்பவரும், அந்த நரகாசுரனைக் கொன்று தேவர்களுடைய கஷ்டத்தை நீக்குவதாகக் கூறினாராம். அப்பொழுது பூமிதேவி, நரகாசுரனைக் கொல்லும் போது தன்னையும் உடன் வைத்துக் கொண்டே தன் மகனைக் கொல்லும்படி வேண்டிக் கொண்டாளாம். அதற்கு மகா விஷ்ணுவும் சம்மதித்தாராம்.

அதன் பிறகு மகா விஷ்ணு கிருஷ்ணனாகப் பிறந்து, சத்திய பாமையாகப் பிறந்திருந்த பூமி தேவியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் ஒரு தீவில் வசித்து வந்த நரகாசுரனைக் கொன்றானாம். கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறந்த நாளை பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டுமென்று “வரம்” கேட்டானாம் கிருஷ்ணனும் அவ்வாறே “வரம்” கொடுத்தானாம்.

இது தான் தீபாவளிப் பண்டிகைக்காகக் கற்பிக்கப்பட்டிருக்கும் கதை. இக்கதையை நம்பி தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் மக்களை சிறிதாவது புத்தியுள்ளவர்களென்று கூறமுடியுமா என்பதை நன்றாய் யோசனை செய்துப் பாருங்கள்!

முதலில் நமது கண்ணுக்கு முன் காணப்படும் இந்த மண் ஒரு பெண்ணாக இருக்க முடியுமா? இரண்டாவது ‘மகாவிஷ்ணு’ என ஒரு தெய்வம் கடைகளில் விற்கும் பண்டங்களில் இருப்பது போல, பல பெண்ஜாதிகளுடன், ஒரு குருவியின் மேல் உட்கார்ந்து கொண்டோ, அல்லது பாம்பின் மேல் படுத்துக்கொண்டோ, சமுத்திரத்தில் மிதந்துகொண்டோ இன்றும் இருப்பதாகக் கூறப்படுவதும், இதற்குமுன் இருந்ததாகச் சொல்லப்படுவதும் அறிவுக்குப் பொருத்தமான செய்தியா?

இப்படிப்பட்ட ஒரு தெய்வத்திற்கும் மண்ணுக்கும் ஒரு பிள்ளை பிறந்தது என்று சொல்லுவது எவ்வளவு புரட்டு? ஆரம்பமே புரட்டாயிருக்கும் போது மற்றவைகளெல்லாம் எப்படியிருக்குமென்பதை இன்னும் நாம் விரித்துக் காட்ட வேண்டியதில்லை. ஆகவே, இத்தகைய அர்த்தமற்ற கதையைத் “தெய்வீக”முள்ளதாக நம்பிக்கொண்டு, இதன் பொருட்டு ஒரு தேசம் கோடிக்கணக்கான பொருளை ஒரே நாளில் செலவு செய்யுமானால், அதை அறிவுடைய தேசமென்று சொல்ல முடியுமா?

இந்தக் கதையை நம்பியே “நரகசதுர்த்தி” என ஒரு நாளைக் குறிப்பிட்டுக் கொண்டு அன்று விடியற் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து முழுகுவதும், எண்ணெய்ப் பலகாரங்களை வயிறு புடைக்கத் தின்பதும் பட்டாசுக் கட்டுகளைக் கொளுத்துவதுமான செயல்களை செய்து பண்டிகை கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு செய்வதனால், மக்களுக்கு மதப் புரட்டிலும், பண்டிகை புரட்டிலும், புராணப் புரட்டிலும், அவதாரப் புரட்டிலும் பார்ப்பன வம்சத்தைச் சேர்ந்ததேவர்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள், உயர்ந்தவர்கள், தமிழர் வம்சத்தை சேர்ந்தவர்களாகிய அசுரர்கள் அனைவரும் அயோக்கியர்கள், தாழ்ந்தவர்கள் என்னும் புரட்டிலும் நம்பிக்கையுண்டாகி, அவர்கள் அறிவு குன்றிப் போகின்றது. அன்றியும், மக்கள், பண்டிதர்கள், புரோகிதர்கள், மதவாதிகள் என்னும் புரட்டர்களுக்கு இன்னும் அடிமையாகவே இருக்கக் கூடிய நிலையையும் அடைகிறார்கள் என்பதை யார் மறுக்க முடியும்?

இனி இப்பண்டிகையினால் உண்டாகும் பொருள் நஷ்டத்தையும், சுகாதாரக் குறைவையும் கவனிப்போம். ஏழை முதல் பணக்காரன் வரையுள்ள எல்லா இந்துக்களும் இதையொரு “தெய்வீக” மான பண்டிகையென்று கருதுவதால், எப்பாடுபட்டாவது எவ்வளவு பணத்தை செலவழித்தாவது, பணமில்லாவிட்டால் கடன் வாங்கியாவது, இதைக் கொண்டாட வேண்டுமென்று தமது அறியாமையால் நினைக்கிறார்கள்.. இவர்களில் பணக்காரர்கள், இப்பண்டிகையின் பொருட்டு எக்கேடு கெட்டாலும், எந்தச் சந்தியில் நின்றாலும் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் ஏழைமக்களும், பணக்காரர்களைப் பார்த்தும், அர்த்தமற்ற தெய்வீகத்தையும் புராணக் கதைகளையும் நம்பியும், வீணாக அறிவின்றிக் கஷ்டப்படு கின்றார்களே என்றுதான் நாம் பரிதாபப் படுகின்றோம். ஏழை மக்கள், தீபாவளிப் பண்டிகை வர ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, பண்டிகை கொண்டாடுவதற்காக பலகாரம் தயார் செய்வதற்கு கடைச் சாமான்கள் வாங்குவதற்கும், புது வேட்டிகள் புடவைகள் வாங்குவதற்கும், பட்டாசுக் கட்டுகள் வாங்குவதற்கும், பட்டினி கிடந்து பொருள் சேர்க்கின்றார்கள். அவ்வாறு சேர்த்து வைத்த பொருளும் போதாமல் கடன் வாங்குகிறார்கள். இவ்வாறு வாங்கிய கடனை கொடுப்பதற்கு வேறு வழியில்லாமல் இவர்கள் தேடி வைத்திருக்கும் நகைகளோ பாத்திரங்களோ விற்கப்படுகின்றன. இவ்வாறு ஏழைமக்கள் பொருள் வீண் நஷ்டமாகிறது.

இதற்கு மாறாக முதலாளிகளாக இருக்கும் ஜவுளி வியாபாரிகளும் மளிகைக் கடைக்காரர்களும், இத் தீபாவளியில் நல்ல லாபம் அடைகிறார்கள். அவர்கள் அடையும் லாபம் ஏழைமக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பொருள் என்பதை யார் மறுக்க முடியும். ஆகவே இப்பண்டிகை ஏழைமக்களை இன்னும் பரம ஏழைகளாக்கவும், பணக்காரர்களை இன்னும் கொழுத்த பணக் காரர்களாக்கவும், ஒருவகையில் உதவி செய்கிறதென்பதையும் அறியலாம்.

அன்றியும் வீணாகக் கொளுத்திச் சுட்டு பொசுக்கப்படும், பட்டாசு களும், வாணங்களும், எங்கிருந்து வருகின்றன. இவைகள் பெரும்பாலும் அயல் நாடுகளிலிருந்தே தீபாவளிக்கென்று நமது நாட்டிற்கு வியாபாரத் திற்காகக் கொண்டு வரப்படுகின்றன. சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமான முள்ள பட்டாசுக் கட்டுகளும், வாணங்களுமாவது இந்தத் தீபாவளியில் பொசுக்கப்படுமென்பதில் ஐயமில்லை. இந்த இரண்டு கோடியும் கரியும் புகையுமாக போவதைத் தவிர இதனால் வேறு யாருக்கு என்ன பலன்? நமது தேசப் பணமாகிய இந்த இரண்டு கோடி ரூபாயும் அந்நிய நாட்டுக்குத் தானே போய்ச் சேருகிறது? இன்னும் அன்னிய நாட்டுத் துணிகள் வியாபாரத்தின் மூலம் அயல் நாடுகளுக்குச் செல்லும் பொருள் நாலைந்து கோடி ரூபாய்க்குக் குறையாது என்பது நிச்சயம். இந்த நாலைந்து கோடியும் நமது தேசத்திற்கு நஷ்டம் தானே.

இன்னும் அடை மழை பெய்து கொண்டிருக்கும் இந்த ஐப்பசி மாதத்தில் விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து முழுகிவிட்டு எண்ணெய் பலகாரங்களைப் போட்டு வயிற்றை நிறப்புவது சரீரசுகத்துக்கு ஏற்றதா என்று தீபாவளியை நம்பும் எந்த முட்டாளாவது யோசித்துப் பார்க்கிறானா? சாதாரணமாக நமது நாட்டில் “காலரா” என்னும் விஷப் பேதி நோய் பரவுவது இந்த தீபாவளி முதல் தான் என்பதை எவரும் அறிவார்கள். எதனால் இந்த விஷப் பேதி உண்டாகின்றது என்பதை அறிந்தவர்கள் இந்தத் தீபாவளிப் பண்டிகையினால் நமது ஜன சமூகத்திற்கு உண்டாகும் தீமையை மறுக்க மாட்டார்கள். சாதாரணமான அஜீரணமே இந்த விஷ பேதிக்கு முதற் காரணமாகும். விடியற்காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி எளிதில் ஜீரண மாகாத மாவு பண்டங்களைப் போட்டு வயிற்றை நிரப்பினால் வயிற்றில் உள்ள ஜீரணக் கருவிகள் என்ன நிலையடையும்? இதனால் பலவிடங்களில் நமது நாட்டில் விஷ பேதி உண்டாகி விடுகின்றது. இன்னும் பல வகையான நோய்களும் உண்டாகி விடுகின்றன. நாம் கூறுவதில் நம்பிக்கையில்லை யானால் தீபாவளியன்று மறுநாள் நமது நாட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று பாருங்கள்! எத்தனை அஜீரண நோயாளிகள் வருகிறார்களென் பதைத் தெரிந்து கொள்ளலாம். இன்னும் சமாச்சாரப் பத்திரிகைகளைக் கவனித்துக் கொண்டிருப்பீர்களானால் எங்கெங்கே விஷ பேதி உண்டாகி யிருக்கிற தென்பதையும் அறியலாம்.

இதுவுமல்லாமல் பட்டாசுகளிலிருந்து எழும் விஷப் புகையினால் வரும் வியாதிகள் பல. இவ்வாறு தீபாவளி பண்டிகையானது மக்களுடைய மனத்திலும் மூட நம்பிக்கையை உண்டாக்குவதோடு அவர்களுடைய பொருளுக்கும் நஷ்டத்தை உண்டாக்கி சரீர சுகத்தையும் கெடுத்து உயிருக்குக் கூட உலை வைத்துவிடுகிற தென்பதையும் அறியலாம்.

ஆனால் இந்தப் பண்டிகையைப் பற்றியும் இது போன்ற மற்றப் பண்டிகைகளைப் பற்றியும், நமது நாட்டு தேசீயப் பத்திரிகைகளாவது, தேசீய வாதிகளாவது கண்டித்துக் கூறி அவைகளில் உள்ள சூழ்ச்சிகளையும் புரட்டுகளையும் எடுத்துக் காட்டி, மக்களுடைய செல்வத்தை நஷ்டமாகாமற் செய்யவாவது, அவர்களுடைய மூட நம்பிக்கைகளைப் போக்கவாவது முயற்சி செய்கின்றார்களா என்று பார்த்தால் ஒரு சிறிதும் இவ்வாறு செய்வ தாகக் காணோம். இதற்கு மாறாக, இது போன்ற பண்டிகைகளைப் பற்றி யெல்லாம் விளம்பரப்படுத்துவதும், அவைகளின் “பரிசுத்தத் தன்மை”களை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதும் அவைகளைக் கொண்டாடும்படி செய் வதும் ஆகிய காரியங்களையே செய்து வருகின்றார்கள். உதாரணமாக, இந்தத் தீபாவளியைப் பற்றிச் சென்ற இரண்டு மாதங்களாகவே பிரசாரஞ் செய்யப் பட்டு வருவதை அறியலாம். அதாவது தீபாவளி பண்டிகை நமது தேசீய பண்டிகையென்றும் தேவர்களுக்கு விரோதியாயிருந்த நரகாசுரனைக் கொன்று அவர்கள் சுகமடையும்படி விடுதலையுண்டாக்கிய விடுதலை நாள் என்றும், ஆகையால் அன்று எல்லோரும் தேசீய விடுதலையைக் கருதி கதர்வாங்கிக் கட்ட வேண்டும் என்றும், கதர் பக்தர்களும், காங்கிரஸ் பக்தர் களும், தேசீய பக்தர்களும், கதரின் பேராலும், காங்கிரசின் பேராலும், தேசீயத் தின் பேராலும் தீபாவளிப் பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் செய்யும் இந்த பிரசாரம், மக்களை இன்னும் மூட நம்பிக்கையுடையவர்களாக்கவும், குருட்டுப் பழக்க வழக்கங்களை யுடையவர்களாக்கவும், செய்யப்படும் மதப் பிரசாரமா அல்லவா? என்றுதான் நாம் கேட்கின்றோம்.

நமது நாட்டுத் தேசீயவாதிகளுக்கு, இது போன்ற பண்டிகைகளின் பேரில் உள்ள பக்திதான் இன்று எடுத்தவைகளெல்லாம் அதாவது, தேசீய ராஜீய காரியங்களைக் கூடப் பண்டிகைகளாக்கி அவைகளைத், “தேசீய மதம்” என்னும் ஒரு புதிய மதத்தின் பேரால் கொண்டாடச் செய்ய வேண்டும் என்னும் எண்ணமுண்டாகி அவ்வாறே செய்தும் வருகிறார்கள். இதற்கு உதாரணமாக, காந்தி ஜெயந்தி, நேரு ஜெயந்தி, திலகர் ஜெயந்தி, தாஸ் ஜெயந்தி, லஜபதி நாள், சத்தியாக்கிரக நாள், டண்டி நாள், புனா ஒப்பந்த நாள், உண்ணா விரத நாள் என்பவை போன்ற பல நாட்களைக் குறிப்பிட்ட அவைகளைப் பண்டிகைகள் போலக் கொண்டாடும்படி செய்து வருவதைக் கூறலாம். ஆகவே இத்தகையவர்கள், புராதனமானதென்று சொல்லப்படும் தீபாவளி போன்ற பண்டிகைகளைப் பற்றி பிரசாரம் பண்ணாமல் விட்டு விடுவார்களா?

இன்று தீபாவாளிப் பண்டிகையின் விசேஷத்தைக் கூறிக் கதர்ப் பிரசாரம் பண்ணும் தேசீயவாதிகள் உண்மையில், பகுத்தறிவுடைவர்களா யிருந்தால், நமது நாட்டுச் செல்வம் அன்னிய நாட்டுக்குச் செல்லக் கூடாது என்ற எண்ணமுடையவர்களாயிருந்தால், நமது மக்கள் அனைவரும் அறிவுடையவர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் நோக்கமு டையவர்களாயிருந்தால் தீபாவளிப் பண்டிகையையும் இது போன்ற மற்றப் பண்டிகைகளையும் ஒழிப்பதற்கே முயற்சி செய்ய வேண்டும். தீபாவளிப் பண்டிகையை ஒழிப்பதன் மூலம், அன்னிய நாட்டிற்குப் பட்டாசுகளின் மூலம் செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்களையும், துணிகளின் மூலம் செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்களையும் செல்லாமல் தடுப்பதனால் நமது நாட் டிற்கு லாபமுண்டா? அல்லது தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குக் கதர் விற்பனை புரிவதனால் லாபமுண்டாவென்று கேட்கிறோம்.

ஆகவே உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் நமது நாட்டில் உள்ள தேசீயவாதிகளோ, சமயவாதிகளோ, புரோகிதர்களோ, பண்டிதர்களோ, காங்கிரஸ்வாதிகளோ அனைவரும் மக்களை இந்து மதத்தின் பேராலும் பண்டிகைகளின் பேராலும், ஏமாற்றி இன்னும் அடிமைகளாகவே வைத் திருந்து தங்கள் சுயநலத்தைச் சாதித்துக் கொள்ளவே முயற்சி செய்கிறார்கள் என்பதை அறியலாம்.

ஆதலால், உண்மையில் விடுதலை பெற நினைக்கின்றவர், மூட நம்பிக்கையினின்று நீங்க நினைக்கின்றவர்கள், மதமும் பண்டிகைகளும் ஒழிந்து மக்களைப் பிடித்த பீடை நீங்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அனைவரும், தீபாவளிப் பண்டிகையை அடியோடு ஒழிக்க வேண்டுகிறோம். தீபாவளிப் பண்டிகைக்கென்று, பணத்தையும் செலவு செய்து புத்தியையும் கெடுத்துக் கொள்ளாமல் அந்த நாளையும் மற்றச் சாதாரணமான நாளைப் போலவே கழிக்கும் படி வேண்டுகின்றோம். ஆகவே இக்கொள்ளை நோய்க்கு இடங்கொடாமல், அதைத் தடுக்குமாறு எல்லோருக்கும் எச்சரிக்கை செய்கின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 23.10.1932

நன்றி : பெரியார் திராவிட கழகம்