• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!”

கூடங்குளம்…வேண்டுவது அனுதாப அலையல்ல..

அடக்குமுறைக்கெதிரான போராட்டம்!

நிராயுதபாணியாய் மக்கள்,
நிரம்பிய ஆயுதம் தரித்து போலீசு படை,
கைக்குழந்தையோடு போராடுபவர்கள்
வன்முறையைத் தூண்டுபவர்களாம்!

கைத்தடியும் துப்பாக்கிகளோடும் சூழ்ந்தவர்கள்
அமைதியை நிலைநாட்ட அவதரித்தவர்களாம்?!

மூலதனமும், பேரழிவும் உயிர்வாழ
சட்டத்தைக் காட்டி கலைந்து போகச் சொல்லும்
உத்திரவு ஆளும் வர்க்கத்துக்கு உண்டெனில்,

எங்கள் இயற்கையும், சந்ததியும் உயிர்வாழ
அணு உலையைத் திரும்பிப் போகச் சொல்லும்
உரிமை மக்களுக்கும் உண்டுதானே!

ஜனநாயக நெறிப்படி எதிர்ப்பைக் காட்ட
கடலோரம் சுடுமணலில் கலந்தனர் மக்கள்.
ஒரு நாள் வெயில் தாங்கி
உழைத்து பழக்கமில்லாத அதிகார வர்க்கமே,
உனக்கும் ‘ஜனநாயகத்’ தெம்பிருந்தால்
உன் ‘கொள்கைக்காக’ சுடுமணலில்
நீயும் அமர்ந்து கொள்ளடா எதிரில்
ஏன் ஜனநாயகம் தாங்காமல் அலறுகிறாய்
எங்கள் இருப்பைப் பார்த்து!

கடலோரம்… மண்ணை பிளந்து
கூடங்குளத்தை தன்னில் பார்க்கும்
எங்கள் மழலையரின் தாய்மண் உணர்ச்சிக்கு
நேர் நிற்க முடியுமா?
கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!

அலைகளின் முழக்கில்
இரண்டறக் கலந்த அணுஉலை எதிர்ப்பில்…
மெகா போனை வைத்துக் கொண்டு
மெகா சீரியல் ஓட்டிய அதிகாரி குரல்கள்
அடிபட்டுப் போயின…
போராட்டத்தின் அலை பொங்கி வரும்போது
செத்த மீனுக்குள்ள மரியாதை கூட
மொத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் க்கு கிடையாதென்பதை
கடல் புறம் காட்டி நின்றது.

உளவுப்படை, இழவுப் படை எதுவாயினும்
கடலுக்குப் போகாமலேயே மணற்பரப்பில்
போலீசை கருவாடாய் காயவைத்தனர் மக்கள்.

ஜனநாயக அவஸ்தைகளை தாங்கிக்கொள்ளும்
சகிப்புத்தன்மை மக்களுக்கிருக்கலாம்,
ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும்
அது ஒரு போதும் இல்லையென…
மீண்டும் உறுதி செய்தது போலீசு…
நிராயுதபாணியாய் நின்ற மக்கள்மீது
தடியடி, தாக்குதல், கண்ணீர்புகை, துப்பாக்கிச் சூடு!

முற்றுகைப் போராட்டம் சட்டவிரோதமென
அறிவித்த அரசு… இப்போது ஆயுதங்களுடன்
கன்னியாகுமரி தொடங்கி… கடலோரப் பகுதிகள்
இடிந்தகரை வரை முற்றுகை.

சம்மணம் போட்டு அமர்வது கூட
சட்டவிரோதமென,
இடிந்தகரை உண்ணாநிலை போராட்ட
பந்தலையும் ஆக்கிரமித்து
சொந்த நாட்டு மக்கள் மீது
அரசுப்படையின் அட்டூழியங்கள்

தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்களை
தடை செய்து,
இடிந்தகரையை முள்ளிவாய்க்காலாக்கும்
பாசிச காட்டாட்சி!

இத்தனைக்கும் மத்தியில்..
போராடும் மக்கள் நம்மிடம் வேண்டுவது
அனுதாப அலையல்ல…
உண்மைகளை கண்டுணரும் நேர்மை!

அணு உலைக்கெதிரான போராட்டத்தின் வழியே
கதிரியக்க பயங்கரத்தை மட்டுமல்ல,
உழைக்கும் மக்களுக்கு உதவாத
இந்த போலி ஜனநாயக அமைப்பையும்
இதில் புழுத்து திரியும்
அரசியல் பயங்கரங்களையும்
நமக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் கூடங்குளம் மக்கள்.

பயங்கரவாதிகள் பலரகம்… பலவிதம்…

ரத்தக் களறியில் மக்கள்.
‘ரத்தத்தின் ரத்தமான’ தா.பாண்டியனோ
தாக்குதல் நடத்திய கைக்கு
தங்கக் காப்பாய் அறிக்கை;

“பொறுமையாகவும், நிதானமாகவும்
பிரச்சினைகளை கையாண்டு
சுமூகமாக தீர்க்க வேண்டும்…”

போராடி… துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட
மீனவர் அந்தோணியின்
போஸ்ட்மார்டம் அறிக்கைக்கு
கட்டாயம் தா.பா. ‘டெக்னிக்’ உதவும்.

அடித்தவனுக்கே போய் ஆறுதலும்
தேறுதலும் சொல்லும்
இப்படியொரு பயங்கரவாதியை
எங்காவது பார்த்ததுண்டா?

இன்னொருபடி முன்னேறி…
மார்க்சிஸ்டு ஜி.ராமகிருஷ்ணனோ
“மக்கள் போராட்டத்தை கைவிட்டு
சுமூகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்”
என ஜெயாவின் ஆவியாகி ஜீவிக்கிறார்.
சொந்தநாட்டு மக்களையும்,
சொன்ன பேச்சை கேட்காத கட்சிக்காரனையும்
நந்திகிராமிலும், கேரளாவிலும்
வேட்டையாடுவதில்
ஜெயலலிதாவுக்கே ராஜகுரு
சி.பி.எம். பயங்கரவாதிகள் என்பதை
கூடங்குளமும் குறித்துக் கொள்கிறது.

போராட்டக் களத்தில்
அப்பாவி மக்களை விட்டுவிட்டு
தலைவர்கள் தப்பியோடிவிட்டதாய்
ஊடக பயங்கரவாதிகள் ஊளை!
பாவம்! தவிக்கும் மக்களை
சன்.டி.வி. கலாநிதிமாறன் போய்
காப்பாற்றி வரவேண்டியதுதானே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில்
தப்பியோடும் பயங்கரவாதிகள்
வாழ்வுரிமைக்குப் போராடுபவர்கள் மீது
வன்மம் கொப்பளிப்பது
தற்செயலல்ல, வர்க்கப் பகைதான்!

தெற்கிருந்து தினந்தோறும்
போராடுபவர்களைப் பார்த்து,

நயன்தாரா இடுப்பைக் கிள்ளவும்,
நாடார்கள் ஓட்டை பொறுக்கவுமே
தெற்கு பக்கம் ‘செட்டு’ போடும் சரத்குமார்
“தலைவர்கள் தலைமறைவானதிலிருந்தே
அவர்கள் சரியானவர்கள் இல்லை” என
வாய் கொழுப்பும், வர்க்கக் கொழுப்பும்!

வாய் சும்மா இருந்தாலும்
உங்கள் வர்க்கம் சும்மா இருக்காது
வாய்திறந்து பேசுங்கள் வரவேற்கிறோம்…
உங்கள் வர்க்கம் தெரியவருவதால்!

புடைசூழ வாருங்கள் பொய்யர்களே…
உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது…
பணம் உள்ளது…. படை உள்ளது….
ஆனால் உண்மையும், நீதியும்
எங்களிடம் மட்டுமே!

உரிமையின் உணர்ச்சிகளை
அறியாத உங்கள் தோல்களை
உரித்துக் காட்டும் மக்களின் போராட்டம்.

போராட்டத்தின் நியாயம் அறிய
கொஞ்சம் கூடங்குளத்திற்கு  செவி கொடுங்கள்…
போராட்டத்தின் உண்மை அறிய
கொஞ்சம் இடிந்தகரையை உற்றுப் பாருங்கள்…
போராட்டத்தின் சுவை அறிய
துப்பாக்கிகளுக்கு முன்னே
தங்கள் மழலையை போராட்டத்திற்கு ஒப்படைத்திருக்கும்
எம் பிள்ளைகளின் கரம் சேருங்கள்…

அதோ… தடிகொண்டு தாக்கும் போலீசை
நெய்தல் செடிகொண்டு
வர்க்க குறியோடு எறியும் – எங்கள்
பரதவர் மகனின் போர்க்குணம் பார்த்து
பொங்குது கடல்!

மண்ணைக் காக்கும் போராட்டத்தில்
மண்ணும் ஒரு ஆயுதமாய்
வெறுங்கையோடு எம் பெண்களும்
பிள்ளைகளும் தூற்றும் மணலில்…
அடக்குமுறை தூர்ந்து போவது திண்ணம்!

______________________________________________

– துரை. சண்முகம்.

_______________________________________________

முதல் பதிவு: வினவு

 

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!


கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டம்-14

கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் மீதான பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

போராடும் மக்களுக்குத் தோள் கொடுப்போம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இடிந்தகரையிலிருந்து கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கடற்கரை வழியாக நேற்று சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நயவஞ்சகமான சட்ட மொழியில் பேசி முயன்றனர். இதற்கு தோதாக நீண்ட நாட்களாக 144 தடையுத்திரவையும் பிறப்பித்திருந்தனர். 5000த்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்றிரவு முழுவதும் கடற்கரையில் வெட்டவெளியில் தங்கிய மக்கள் இன்றும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களை போக்கு காட்டிவிட்டு அலையவிடும் தந்திரத்தை போலீசு தொடர்ந்து மேற்கொண்டது. இறுதியில் கண்ணீர் குண்டுகளை வீசி தடியடி நடத்தியிருக்கிறது தமிழக போலீசு. கையில் கிடைத்தவர்களை கொடூரமாக தாக்கி கைதும் செய்திருக்கிறது. கடலுக்குள் ஓடிய மக்களை மீண்டும் கரை திரும்பாத வண்ணம் அரண் அமைத்து வேட்டை நாயைப் போல காத்திருக்கிறது போலீசு.

இடிந்தகரைக்கு உள்ளேயும் போலீசு படை நுழைந்து, போராட்டக்காரர்களின் பந்தலைக் கைப்பற்றியிருக்கிறது. தேவாலயத்துக்கு உள்ளேயும் நுழைந்திருக்கிறது. ஊரைக் கைப்பற்றிய ஆக்கிரமிப்பு படை போல ஊர் முழுவதையும் போலீசு ஆக்கிரமித்திருக்கிறது. பலர் படகுகளில் கடலுக்குள் செல்கிறார்கள். பெண்கள் குழந்தைகள் திசைக்கொருவராக சிதறியிருக்கின்றனர். யாருக்கு என்ன நேர்ந்த்தென்று தெரியவில்லை.

அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் இந்த நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இத்தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எமது அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும் அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்ப பெறவேண்டும்.

அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்தவேண்டும்.

மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரு நாசம் விளைவிக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவேண்டும். என்று கோருகிறோம்.

ஒரு பட்டாசு தொழிற்சாலையில் கூட மக்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்க வக்கில்லாத அரசுக்கு, அணு உலையின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் தருவதாகப் பேசுவதற்கே அருகதை கிடையாது. காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட மாற்று மின் தயாரிப்பு முறைகள் உலகமெங்கும் பரவிவரும் இக்காலத்தில் இந்தியாவின் மீது அணு உலைகள் திணிக்கப்படுவதற்கு காரணம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாப நோக்கமும், இந்திய அரசின் இராணுவ நோக்கமுமே தவிர வேறில்லை.

அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

அ.முகுந்தன்,

ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு.

ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.

_______________________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கடந்த 25 வருடங்களாக கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை எதிர்த்து போராடி வருகின்றார்கள். கடந்த பல மாதங்களாக தொடர்ந்து பலவகைப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் போராட்டக்குழுத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரை தமிழக அரசு கைது செய்தும், அம்மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக காவல் துறையை குவிப்பது மற்றும் அம்மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.    அப்பகுதியில் 144 தடை உத்திரவை அமல்படுத்தி அப்பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்தையும் தடை செய்து விட்டது. குழந்தைகளுக்கு பால் இல்லை என்றாலும் அம்மக்கள் அச்சுக்கு பணிய மறுத்து வீரஞ்செறிந்த போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.  அரசின் இந்த செயலை கண்டித்தும், கூடங்குளம் அணு உலையை உடனே மூட வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் 22.03.12 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலை சரியாக 11 மணிக்கு திடீரென ஆங்காங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் செஞ்சட்டையுடன்  சீறிப்பாய்ந்த படி உயர் நீதிமன்றத்தின் அருகில் உள்ள குறளகத்தின் முன்னர் முள்ளிவாய்க்காலாக கூடங்குளத்தை மாற்ற எத்தணிக்கும் அரசிற்கு எதிராக முழங்கினார்கள்.  குறளகம் செங்கொடிகளால் சூழப்பட்டிருக்க ஓடிவந்த காவல் துறையோ என்னசெய்வதென்று தெரியாமல் முழிந்துக்கொண்டிருக்கும் போதே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

தடையை நீக்கு ! தடையை நீக்கு !
அணு உலையை எதிர்த்து போராடும்
கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மீது
விதிக்கப்பட்ட தடை உத்தரவை
உடனே நீக்கு ! உடனே நீக்கு !

முள்ளிவாய்க்கால் முற்றுகை போல
   இடிந்தகரை மக்கள் மீது
உள் நாட்டுப் போரை
தொடங்கி இருக்குது ஜெயா அரசு !
பாசிச ஜெயா அரசு !

இடிந்த கரை மக்களுக்கு
பால் தண்ணீர் மின்சாரம் வெட்டு !
போராடும் மக்களை
பட்டினிப் போட்டு கொல்லத்துடிக்குது
ஜெயா அரசின் போலீசு !

முறியடிப்போம் !   முறியடிப்போம் !
வாழ்வாதார பிரச்சினைக்காக
போராடும் மக்கள் மீதான
கொலைகார ஜெ அரசின்
போலீசு அடக்கு முறையை
முறியடிப்போம் !   முறியடிப்போம் !

மின்சாரத் தேவைக்கு
அணு உலை வரவில்லை
ரசிய –  அமெரிக்க நிர்பந்தத்தால்
வந்த வினைதான் வேறில்லை !

மின் தேவைக்கு வந்ததல்ல
கூடங்குளத்தில் அணு உலை
அது அணு குண்டு மூலப்பொருளை
உற்பத்தி செய்யும் தொழிற்சாலை !

நீங்கிடுமா ! நீங்கிடுமா !
கூடங்குளத்தை திறந்தாலும்
மின்வெட்டு நீங்கிடுமா !
பல லட்சம் உயிரை பணயம் வைத்து
பல்லாயிரம் கோடி செலவழித்து
அணு உலை தருகின்ற மின்சாரம்
வெறும் மூன்றே மூன்று சதவிகிதமே !
நீங்கிடுமா ! நீங்கிடுமா !
மின்வெட்டு நீங்கிடுமா !

நாட்டு மக்களின் உயிருக்கும்
நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும்
உலை வைக்கும் அணு உலையை
இயக்கத்துடிக்கும் பன்னாட்டு முதலாளிகள்
காங்கிரசு பிஜேபி அதிமுக திமுக
துரோகிகள் அனைவரும் ஓரணி !
உறுதியாக போராடும்
உழைக்கும் மக்களே எதிர் அணி !

இது இடிந்த கரை மக்களின்
பிரச்சினை அல்ல
இந்த நாடு மக்களின் பிரச்சினையே !
போராடும் மக்களுக்கு துணை நிற்போம் !
போராட்டத்தை வளர்த்தெடுப்போம் !

அணையவிடோம் ! அணையவிடோம் !
கூடங்குளம் இடிந்த கரையில்
அணு உலைக்கு எதிராக
பற்றி எரியும் போராட்டத் தீயை
அணையவிடோம் ! அணையவிடோம் !

சுமார் இருபது நிமிட முழக்கங்களுக்கு பின்னர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த ம.க.இ.க, மாவட்டச்செயலாளர் தோழர்.வே.வெங்கடேசன் ”மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல அணு உலை என்பதையும் , கடந்த பத்து ஆண்டுகளில் ஆட்சியமைத்த கருணாவும் ஜெயாவும் ஒரு மின் உற்பத்தி நிலையங்களைக்கூட திறக்காமல் பன்னாட்டு முதலாளிகளுக்கு இலவசமாகவும் சலுகை விலையிலும் மின்சாரத்தை தாரை வார்க்கும் அயோக்கியத்தனத்தையும் விளக்கிப்பேசினார்.”

பின்னர் கண்டன உரை ஆற்றிய பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலர் தோழர் ஜெயராமன் ” சங்கரன் கோவில் தேர்தலுக்காக கூடங்குளம் மக்களின் கழுத்தை நம்ப வைத்து அறுத்த பாசிச ஜெயாவை முறியடிக்க வேண்டிய அவசியத்தையும்,  அம்மக்கள் தற்போது பால், தண்ணீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் அரசால் தடை செய்யப்பட்ட போதும் போராட்டத்தை தொடர்வதையும், அம்மக்களின் போராட்டத்தை , அந்த போராட்டத்தீயை வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமை என்றும் விளக்கினார். இதில் பெண்கள், மாணவர்கள் – மாணவிகள், இளைஞர்கள் தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 இடிந்தகரை கிராமத்தை இன்னொரு முள்ளி வாய்க்காலாக மாற்றி பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்காக போராடுகின்ற மக்களை பலியெடுக்க சதி செய்து வரும் அரசு எதிர்பார்க்கத்து தான் திருச்சி, கடலூர், தருமபுரி , சென்னை என புரட்சிகர அமைப்புக்கள் அம்மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டு வரும் போராட்டங்கள்.  நூற்றுக்கணக்கான  போராளிகளை கைது செய்தபின்னும் தமிழகம் அமைதியாகத் தான் இருக்கிறது, ஊடகங்களோ கூடங்குளம் அழிக்கப்பட்டால் கூட வாய்திறக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கின்றன.

ஆனால் கூடங்குளம் மக்களின் உண்மையான அந்தப்போராட்டத்தை நக்சல்பாரி புரட்சியாளர்கள் வளர்த்தெடுப்பார்கள். போராடுகின்ற மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் மக்கள் விரோத, ஜனநாயக விரோத அரசையும் பன்னாட்டு முதலாளிகளையும் முறியடிப்பதே தீர்வாகும் .அப்படி ஒரு மாற்றத்திற்கு வழி கோலுவதாய் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களும் கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். எமது தோழர்கள் மாலையில் விடுதலையாகலாம் அல்லது பல நாட்கள் சிறையில் கூட இருக்க நேரலாம். இது எங்களது கடமை, அனைத்தையும் தனியார்மயமாக்கிய மறுகாலனிய கொடூரத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம் வென்றே தீரும் என்பது மட்டும் உறுதி.

இதோ இன்று வாழ்வாதாரப் பிரச்சினைக்காக போராடிய கூடங்குளம் மக்கள் சிறையிலிருக்கிறார்கள். அவர்கள் மீது அரசு தொடங்கிய உள்நாட்டுப்போர் அடுத்து உழைக்கும் மக்கள் மீது திரும்புவதற்கு அதிக நேரம் ஆகப்போவதில்லை.

கூடங்குளம் மக்களை , அவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேருந்துகளில் தொடர்வண்டிகளில், கல்லூரிகளில், திரும்பிய பக்கமெல்லாம் எமது தோழர்கள் அழைக்கிறார்கள் .  ”அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற
குரல் உங்களுக்கு கேட்கிறதா?” நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளைத் திரும்பப் பெறு! ம.க.இ.க கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டம் குறித்து தினமணியில் வந்த செய்தி:

ஆர்ப்பாட்டம் குறித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி:

கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!