• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 215,829 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!

விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!

கருணாநிதியெல்லாம் ஒரு தேர்ந்த பிழைப்புவாதியாக மாறுவதற்கு ஒரு ஐம்பதாண்டுகள் ஆனதென்றால், திருமாவளவனுக்கோ இந்தப் “பரிணாமம்” எல்லாம் ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டது.

திருமாவின் பிறந்தநாளான ஆகஸ்டு 17, சமீபகாலமாக பாசிச ஜெயாவின் கட்-அவுட் களேபரங்களுக்குப் போட்டியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சொன்னை முழுவதும் பிளெக்ஸ் பேனர்கள் மயம்.  1990-களில் பிளக்ஸ் தொழில்நுட்பம் வளராததால் ஜெயாவின் கட்-அவுட்டுகள் இருந்தன. திருமாவின் காலத்தில் புற்றீசல் போல பிளெக்ஸ் அச்சகங்கள் தோன்றிவிட்ட நிலையில், சிறுத்தைகள் திருமாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக எல்லா அச்சகங்களையும் குத்தகைக்கு எடுத்து விட்டார்களா என எண்ணுமளவுக்கு, பிளெக்ஸ் போர்டுகளின் எண்ணிக்கை சென்னைவாசிகளை மலைக்க வைத்தது.

சொன்னையில் திரும்பிய பக்கமெல்லாம், திருமாவை ‘மாசறு பொன்னே போற்றி, கடாரம் வென்ற மன்னா’ என்றபடி எல்லா உயர் தமிழ் சொற்களாலும் போற்றும் துதிபாடும் பிளெக்ஸ் போர்டுகள் மொய்த்தன. சேகுவேரா, பிரபாகரன் உள்ளிட்டு இன்னும் பல வரலாற்று மாந்தர்களின் கெட்டப்பில் தோன்றும் திருமாவின் அவதாரங்களோடு, அண்ணனின் அல்லக்கைகளின் படங்களும் எல்லா பேணர்களிலும் தவறாமல் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக அல்லக்கைகள் எல்லோரும் தங்கள் பெயருக்கு கீழே ஏதோ ஒரு பதவியையும் குறிப்பிட்டிருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இப்போது எல்லோருக்கும் உறுப்பினர் தகுதி மட்டும் கிடையாது; ஏதாவது ஒரு பதவியும் போனசாக உண்டு.

அண்ணனின் ஒவ்வொரு பிறந்தநாளையும் ஏதாவது ஒரு கொள்கை முழக்கத்தை வைத்து நடத்துவதை சிறுத்தைகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இம்முறை ஈழம் சீசனாக இருப்பதால், “எழும் தமிழ் ஈழம்” என பேனர்களின் ஓரத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். ஈழம் எரிந்து கொண்டிருந்தபோது, அதை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திய கருணாநிதி அரசு, இப்போது ஈழப் போராட்டம் புதையுண்ட நேரத்தில், தனது தேர்தல் வெற்றியை அது பாதிக்கவில்லை என்பதைப் பார்த்துவிட்டவருக்கு, சிறுத்தைகளின் பேனரில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், பிரபாகரன் படம் இடம் பெற்றிருப்பதாக தினமலர் நாளேடு போட்டுக் கொடுத்தது.

உடனே முத்தமிழ் முதல்வரின் காவலரணி சிறுத்தைகளின் பேனர்களை நோக்கிப் பாந்தது. போலீசுக்கு தொல்லை கொடுக்க விரும்பாத சிறுத்தைகளும் எல்லா பேனர்களிலும் ‘எழும் ஈழத்தை’ அழித்து உதவி செய்தனர். கடைசில் ‘எழும் ஈழத்’திற்கு இடையில் இருந்த ‘தமிழ்’ மட்டும் பரிதாபமாக காட்சியளித்தது. கடந்த ஆறு மாதங்களாக ஈழத்திற்காக அமர்க்களப்படுத்திய சிறுத்தைகளின் ‘வீரம்’ இறுதியில் தாரை வைத்து, ஈழம் என்ற பெயரையே அழிக்கும் வண்ணம் அஞ்சி நடுங்கிப் போனது.

ஆனாலும் பிறந்த நாள் கூட்டத்தில் முழங்கிய திருமா, இனி புலிகளின் கோரிக்கைக்காக ஆயுதம் தாங்காத வழியில் சிறுத்தைகள் போராடுவார்கள் என வாக்குறுதி அளித்தார். அதே சமயம், தி.மு.க அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க மாட்டோம் எனவும் முன்னெச்சரிக்கையாக, “கண்டிஷன்ஸ் அப்ளை”யும் போட்டார். ஒரு எம்.பி. சீட்டு நன்றிக்காக தமிழ்நாட்டு மேடையில் இப்படி பேசியவர், சமீபத்தில் ஜெர்மனியில் புலி ஆதரவாளர்கள் நடத்திய மாநாட்டில் பிரபாகரன் தலைமையில் விரைவில் ஐந்தாவது ஈழப்போர் துவங்கும் என அறிவித்தார். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே திருமாவளவனுக்கு ஒரு இமேஜ் இருப்பதால், அதைத் தக்கவைப்பதற்கு அங்கே அப்படி; பிழைப்பை ஓட்ட இங்கே இப்படி…

திருமாவின் ஓட்டுக்கட்சி பிழைப்புவாதம் இப்போது தமிழக மக்களுக்கு புதிரான ஒன்றல்ல. எனினும், அயல்வாழ் தமிழ் மக்கள், அதுவும் ஈழம் தொடர்பாக மட்டும் அவரைத் தெரிந்து வைத்திருக்கும் மக்களுக்கு, அவரது சரணாகதிப் படலம் தெரியாது.

‘90-கள் முழுவதும் “அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி” என்று ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் இயங்கிய போது தேர்தலைப் புறக்கணித்தார்கள். ஆனால், இந்த முழக்கங்கள், அதாவது அவர்கள் விரும்பிய தீண்டாமை ஒழிப்பு ஆகியவை – சாதி ஒழிப்பிற்கான திட்டமோ, நடைமுறையோ, அதற்கேற்ற அமைப்பு – அணிகள் பலமோ இல்லாததால் வெற்றுச் சவடாலாகிப் போயின. திருமாவளவன் ஒரு பிரிவு தலித் மக்களிடம் பிரபலமான தலைவரானார். அவர் பேசிய கூட்டங்களுக்கு கணிசமாக மக்கள் வந்தார்கள்.

இப்படி திசைவழியறியாத கூட்டத்தை வைத்துப் பல பிரச்சினைகளை சந்தித்து, கருணாநிதி அரசால் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொள்ள அமைப்பின் – அணிகளின் பலமுமின்றி, இறுதியில் இதையே காரணமாகக் கூறி தேர்தல் அரசியலில் நுழைந்தார். அத்துடன் அவரது தலித் அரசியல் முடிவுக்கு வந்து, பிழைப்புவாத அரசியல் அத்தியாயம் ஆரம்பித்தது.

’98 தேர்தலில் அயா மூப்பனாரோடு கூட்டணிக் கட்டிக் கொண்டு சிதம்பரம் தொகுதியில் நின்றார். இதற்கு நன்றிக் கடன் செலுத்தும் விதத்தில் தஞ்சை மாவட்டத்தில் கூலி விவசாயிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒடுக்கி வரும் குடும்பத்தைச் சேர்ந்த மூப்பனாரை புரட்சித் தலைவர் என்றார். அதன்பின் போயஸ் தோட்டம், கோபாலபுரம் என மாறி மாறி தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை அடகு வைத்து, ஓரிரண்டு தொகுதிகளை வென்றார். இக்காலத்திற்குச் சற்று முன்னர்தான் கொடியங்குளம் ஆதிக்கசாதி கலவரம், மாஞ்சோலைப் படுகொலை எல்லாம் இரு கழக அரசுகளால் நடத்தப்பட்டிருந்தன.

அப்புறம் பாப்பாப்பட்டி, மேலவளவு, திண்ணியம் முதலான வன்கொடுமைகள் நடந்த போது, சிறுத்தைகள் அதை வைத்துத் தமது சொல்வாக்கை வளர்த்துக் கொள்ளத்தான் முனைந்தனர். மேலவளவு முருகேசன் கொலை வழக்குகூடத் தன்னார்வ வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு, தண்டனை வாங்கித் தரப்பட்டது. இதற்குள் அண்ணன் எல்லா ஆதிக்க சாதி பிரமுகர்களுடனும் ஐக்கியமாகிவிட்டார். சேதுராமனுடன் கை தூக்கி போஸ் கொடுத்ததென்ன, ராமதாசுடன் சேர்ந்து தமிழ் இயக்கம் கண்டதென்ன, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு விடுமுறை கோரியதென்ன என்று பலவற்றைப் பட்டியிடலாம்.

முத்தாப்பாக, விருத்தாசலம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனும், வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகியும் காதல் திருமணம் செய்ததற்காக கட்டி வைத்து நஞ்சூற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் கூட,  வன்னிய சாதி வெறியர்களைத் தண்டிக்கக்கோரிப் போராடுவதற்குப் பதிலாக, அவர்களுடன் பஞ்சாயத்து செய்து சுமூகமாகப் போகுமாறு முருகேசனின் சொந்தங்களுக்கு சிறுத்தைகள் நெருக்குதல் கொடுத்தனர். இந்த விவரங்களெல்லாம்  புதிய ஜனநாயகம் இதழில் விரிவாகவே பதிவாகியிருக்கின்றன. இப்போது அடுத்த கட்டமாக, சிறுத்தைகள் எந்தப் பாதையில் சொல்கின்றனர் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்ட மடிப்பாக்கம் வேலாயுதம் என்ற வேட்பாளரைக் கண்டு பலரும் அதிர்ந்து போனார்கள். காரணம், அந்தப் பிரமுகர் ஒரு ரியல் எஸ்டேட் மாஃபியா;  சி.பி.ஐ வழக்குகளைச் சந்தித்து வருபவர். அவ்விவகாரம் சந்தி சிரித்ததும், ஏதோ ஒரு முன்னாள் நீதிபதியை கொண்டுவந்து நிறுத்தினர். அவருக்கும் கட்சிக்கும் அதற்கு முன்னர் கொள்வினையோ, கொடுப்பினையோ கிடையாது.

இதற்குமுன் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேறிய சொல்வப்பெருந்தகை உலகறிந்த கட்டப் பஞ்சாயத்து ரவுடி. அதிலேயே பல கோடிகளைச் சேர்த்தவர். கூடுதலாக, ஜெயாவின் வளர்ப்பு மகனது கருப்புப் பணத்தையும் சில பெண் தொடர்புகள் மூலமாக இவர் லவட்டிக் கொண்டார் என்றும் கூறப்படுவதுண்டு. சொல்வப்பெருந்தகை இப்போது பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போனாலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறுத்தைகளும் இதை பெரியபிரச்சினையாக்கவில்லை. ஆக்கினால், சேர்ந்த வண்டவாளங்கள் அம்பலாமாகும் என்ற பயம்தான் போலும்.

சொல்வப்பெருந்தகை காலத்தில்தான், சிறுத்தைகளின் கட்சி தற்போதைய திருத்தமான வடிவைப் பெற்றது. இதன்படி, உள்ளூர் அளவில் உள்ள பிழைப்புவாத தலித் பிரமுகர்கள், கட்டப் பஞ்சாயத்து சேபவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் சேயும் மாஃபியாக்கள், ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அந்தந்தப் பகுதி வர்த்தகர்களிடம் மாமூல் வசூலிப்பவர்கள், கட்சியின் பொதுக்கூட்டச் சொலவுகளுக்கு அப்பகுதியிலிருக்கும் பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் வசூலித்தல், சுயநிதிக் கல்லூரிகளின் முதலாளிகள் சிறுத்தைகளுக்கென்று ஒதுக்கும் சீட்டுகளை பல இலட்சங்களில் விற்பனை செய்தல், சினிமா கட்டப் பஞ்சாயத்து செய்தல் – இப்படி பல்தொழில் வல்லுநர்கள்தான் இப்போது சிறுத்தைகளின் வெளிமுகங்கள்.

இந்த ரவுடிகளை வைத்துப் பிழைக்கும் பிரமுகர்களைச் சுற்றி பெருங்கூட்டமா இருக்கும் தொண்டர்கள் எலும்புகளைக் கவ்வியவாறு சுற்றி வருகின்றனர். இப்படி வசூலிப்பதற்கென்றே ஒரு கட்சியும், கூட்டமும் உருவாகிவிட்டது. பல இடங்களில் வர்த்தகர்களும், முதலாளிகளும் எதற்கு வம்பு என்று பணம் தருவதோடு, சிலர் கட்சியிலும் சேர்ந்து வருகின்றனர். தற்போது திருச்சொந்தூரில் உள்ள சொந்திலாண்டவன் கோவிலில் பூசை சேயும் பார்ப்பனர்களும் சேர்ந்திருக்கிறார்கள். பலருக்கு இது அதியமாகப்படலாம். உண்மை என்னவென்றால், எல்லா பிரபலமான கோவில்களிலும் உள்ள பூசாரிகள் பக்காவான லும்பன்களாக இருப்பார்கள். கை நிறைய காசு, அதை அனுபவிப்பதற்கு வசதிகள் – இப்படி உழைக்காமலேயே தொந்தி வளர்க்கும் கூட்டம், தனது பாதுகாப்பிற்காக சிறுத்தைகளிடம் சேர்ந்ததில் வியப்பில்லை. மேலும், பார்ப்பனர்கள் – தலித் கூட்டணி என்ற மாயாவதிக் கட்சியின் தமிழக கிளைக்கு போட்டியாகக்கூட இதைக் கருதலாம்.

ஆக, வசூலிப்பதற்கு இவ்வளவு பெரிய இயந்திரத்தை உருவாக்கிவிட்டபடியால், இந்தக் கட்டமைப்பைத் தக்க வைப்பது எப்படி? அதற்குத்தான் மூன்று மாதங்களுக்கொரு முறை ஏதாவது ஒரு பிரச்சினையைச் சாக்காக வைத்து மாநாடு என்று பிளெக்ஸ் பேனர்களில் அமர்க்களம் சேகிறார்கள். இதைப் பார்க்கும் மக்களெல்லாம் சிறுத்தைகள் பெரும் வளர்ச்சி பெற்றதாக நம்ப, முதலாளிகள் இனிமேல் அரசியல் கட்சிகளுக்குக் காசு கொடுக்கும் பட்டியலில் சிறுத்தைகளையும் சேர்க்க, மாற்றுக் கட்சிகளுக்கோ சிறுத்தைகளின் ‘பலத்தை’ அறிந்து அவர்களுக்கு சீட்டுக்கள் அதிகம் கொடுக்க வேண்டுமோ என யோசிக்க – இப்படி பல விதங்களில் திருமாவின் ‘கொள்கை’ மாநாடுகள் பயன்படுகின்றன.

இப்படிப்பட்ட கூட்டத்தை வைத்துத்தான் திருமாவளவன் கட்சி நடத்துகிறார். அவரது கட்சித் தலைமையகம் கூட அவரது தாயாரின் பெயரில் பதிவாகி, தற்போது அது ஒரு ஆக்கிரமிப்பு என வழக்கே நடந்து வருகிறது. வழக்கிற்கு வராத சுருட்டல்கள் எவ்வளவென்று தெரியவில்லை. ஏற்கெனவே உலகமயத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைகள் குறைந்துவரும் நேரத்தில், சேரியில் இருக்கும் உதிரியான இளைஞர்களுக்கு இப்படி ஒரு வாழ்வு சிறுத்தைக் கட்சியில் சேர்ந்தால் கிடைக்கிறது. ஓரிரு ஆண்டுகளிலேயே அடுக்குமாடி, ஸ்கார்பியோ கார், பரிவாரங்கள் என இதில் பலர் முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகளின் எம்.எல்.ஏ. ரவிக்குமார் நடுத்தர வர்க்க தலித் மக்களின் கோரிக்கைகளைச் சட்டசபையில் பேசுவார். வெள்ளை அறிக்கை, பணியிடங்களைப் பூர்த்தி செய்தல், ஆதி திராவிடருக்குக் கூடுதல் நிதி ஒதுக்குதல், அரசுப்பணி மாற்றம் – இப்படியான அரசு கட்டப் பஞ்சாயத்துகளை அவர் சேகிறார். இதனால் கணிசமான அரசு, நடுத்தர வர்க்க தலித் மக்கள் தமது சுயநலத்திற்காகச் சிறுத்தைகளை ஆதரிக்கின்றனர்.

இப்படி லும்பன்களும், நடுத்தர வர்க்கமும் இணைந்த கலவையாக காட்சியளிக்கும் சிறுத்தைகளின் அரசியல் முகத்தை அடிக்கடி புதுப்பிப்பதற்குத்தான் ஈழம் பயன்பட்டிருக்கிறது. இந்த அரசியல் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு திருமாவளவன் தலைமை தாங்குகிறார். அடிக்கடி அறிக்கை விடுவார். மாநாடு நடத்துவார். பேட்டிகள் கொடுப்பார். மற்றபடி, முன்பெல்லாம் சிறுத்தை அணிகள் தலித் அரசியல், தலித் தலைமை, தலித் புரட்சி என்றெல்லாம் ஆவேசமாக பேசுவார்கள். இப்போது எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அசைந்து கொடுப்பதில்லை என அக்கட்சித் தோழர்களே வருத்தப்படுகின்றனர்.

இருப்பினும், விடுதலைச் சிறுத்தைகள் இந்தத் தொழிலை ஒரு அளவுக்குதான் செய்ய முடியும். அ.தி.மு.க; தி.மு.க. அளவுக்கெல்லாம் பிரம்மாண்டமாகச் செய்ய முடியாது. கருணாநிதி கூட சிறுத்தைகளை ஓரளவுக்கு அனுமதித்து விட்டு, தேவையான நேரத்தில் ஆப்படிப்பார். இதை திருமாவும் உணர்ந்துள்ளதால், இப்போதைக்கு இந்த விளையாட்டு விதிமுறைக்குட்பட்டு  ஆடப்பட்டு வருகிறது. பிளெக்ஸ் பேனரில் எவ்வளவு ஆவேசமாக மீசையை திருமா முறுக்குகிறாரோ, அந்த அளவுக்கு அரசியல் பிழைப்புவாதம் மறைந்திருக்கிறது என்று பொருள்.

ஐரோப்பாவிலும், கனடாவிலும் இருக்கும் அப்பாவி ஈழத்தமிழன் மட்டும் திருமாவை ஈழத்திற்கான ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பிக்கொண்டிருப்பார். என்ன இருந்தாலும் தமிழகத்திற்கும் அமெரிக்காவிற்கும் தூரம் அதிகம்தானே?

நன்றி: புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

தொடர்புடைய பதிவுகள்:

மூஞ்சப் பாரு!

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!

முள்ளிவாய்க்கால் – போபால்

1983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும்  நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது.

போபால் நச்சுவாயுவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும், ஊனமடைந்த மக்களும் நிவாரணம் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாமல் அவசரமாக தலையிட்டு சட்டம் இயற்றித் தடுத்த இந்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்கும் கொடுத்தது. தற்போது போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றதைப் போல நடிப்பவர்கள் அனைவரும் இப்படியொரு தீர்ப்பை வரவழைப்பதற்காகத்தான் எல்லா முனைகளிலிருந்தும் காய் நகர்த்தினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ, உச்சநீதி மன்றம் ஆகிய அனைவரும் இணைந்து நடத்திய நாடகத்தின் முடிவுதான் 26 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்திருக்கும் இந்தத் தீர்ப்பு.

1983 ஜூலையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய ஈழத்தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளித்தபோது, பல போராளிக் குழுக்கள் ஈழ மண்ணில் தோன்றியபோது. போபாலைப் போலவே இதிலும் தலையிட்ட இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. போராளிக் குழுக்களை இந்திய உளவுத்துறையின் கைப்பாவைகளாகச் சீரழித்து, பின்னர் ஈழத்தை ஆக்கிரமித்து, முடிவில் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்துக்கு களத்தில் உடன் நின்று வழிநடத்தியது இந்திய அரசு. ஜூலை படுகொலை நடந்த 26 ஆண்டுகளுக்குப் பின், அம்மக்களின் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையும், முட்கம்பி வேலிக்குப் பின்னால் 3 இலட்சம் ஈழத்தமிழ் அகதிகளும் என்று போபாலைப் போலவே ஒரு துயரமாக முடிந்தது

ஆண்டர்சனை அன்று சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைத்தது முதல் வழக்கைச் சீர்குலைத்தது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பின்புலமாக இருந்த காரணமும், இன்று கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட வேண்டிய டக்ளஸ் தேவானந்தாவுடனும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேயுடனும் மன்மோகன்சிங் கை குலுக்குவதற்கான காரணமும் வேறு வேறல்ல. அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாகவும், தெற்காசியப் பிராந்திய வல்லரசாகவும் நிலைபெறத் துடிக்கும் இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவத்தினுடைய வெறியின் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கைகள். 1983 இலிருந்து தில்லியில் 9 அரசுகள் மாறிமாறி வந்திருந்த போதும், ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கைதான் எல்லா அரசுகளையும் வழிநடத்தி வருகிறதென்று ப.சிதம்பரம் சமீபத்தில் கூறியிருப்பதை, போபால் படுகொலைக்கும் பொருத்தலாம். யூனியன் கார்பைடு நிறுவனத்தை விடுவிப்பதிலும் கூட 9 அரசுகளும் ஒத்த கருத்துடன்தான் செயல்பட்டிருக்கின்றன. இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகளின் பிணங்கள் இந்திய அரசின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியது போலவே, யூனியன் கார்பைடுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் முடித்துக் கொள்வதன் மூலம் அமெரிக்க முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கலாமென்று ஆலோசனை அளித்த ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோரின் குற்றமும் இப்போது அம்பலமாகியிருக்கின்றது.

தமது சுரண்டல் ஆதிக்க நலனுக்காக சொந்த நாட்டு மக்களில் சுமார் 25,000 பேரின் உயிரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் காணிக்கையாகச் செலுத்துவதற்கும் தயங்காத இந்திய ஆளும் வர்க்கத்தின் இரக்கமின்மைக்கும்,  இலங்கையின் மீது தனது விரிவாதிக்கக் கால்களைப் பதிப்பதற்காக முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்நின்று நடத்திய அதன் கொலைவெறிக்கும் நேரடித் தொடர்பு இல்லையா என்ன? போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வெவ்வேறு பொருட்கள் என்பது உண்மைதான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான்.

நன்றி:  புதிய கலாச்சாரம், ஜூலை – 2010

தொடர்புடைய பதிவுகள்

போர்க்குற்றத்தில் இருந்து ராஜபக்சேவை பாதுகாப்பதே அமெரிக்காவின் கண்துடைப்புத் தீர்மானம்!

தொடர்புடைய பதிவுகள்:

ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

ராஜீவ் காந்தி: மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?

1984 நச்சு வாயுப் படுகொலைகள் வழக்கில் போபால் வழக்குமன்றத் தீர்ப்பு வந்தவுடன் நாடே கொந்தளித்துப் போனது. அக்கோரச் சம்பவம் நடந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. அன்று போபாலில் என்ன நடந்தது; எப்படி நடந்தது; எவ்வளவு பேரழிவும் துயரமும் நிகழ்ந்தது என்று இன்று கேள்விப்படும் புதிய தலைமுறையினரின் நெஞ்சிலே எழும் முதற்கேள்விகள் இவைதாம்: இத்தனைக்கும் காரணமான குற்றவாளி யார்? அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?

இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னரும் எந்தவிதத் தண்டனையும் விதிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் மீதான வழக்கில் விசாரணையே இதுவரை நடைபெறவில்லை. போபால் ஆட்கொல்லி ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறியவன்; செய்யப்பட்டிருந்த சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் லாபவெறி காரணமாக முடக்கிப் போட்டவன்; நேரம் குறித்து வெடிக்கும் குண்டு வைப்பதைப் போல பழைய – காலாவதியான தொழில் நுட்பத்தையும் கருவிகளையும் கொண்டு வந்து நிறுவியவன். அவனா இதற்குக் காரணம் என்று கேட்கலாம்.

 

ராஜீவ் காந்தி

ஆம்! ஆலை லாபகரமாக ஓடினால் மட்டும் எல்லாம் என் அறிவுத் திறமையினால்தான் என்று சம்பளத்தை வாரிக் கொள்பவன்தானே அதன் பேரழிவுச் செயலுக்கும் பொறுப்பேற்க வேண்டும்!

அப்பேரழிவு நிகழ்ந்த ஓரிரு நாட்களில் போபால் வந்திறங்கிய வாரன் ஆண்டர்சனை மக்களின் ஆத்திரத்தில் இருந்து பாதுகாப்பதற்காக, கைது என்ற பெயரில் அரசு சொகுசு மாளிகையில் காவலில் வைத்தார்கள். உடனடியாகவே பிணையில் விடுவித்து, அரசு விமானத்திலேயே புதுதில்லி அழைத்துப் போ, அரசு அதிகாரிகளுடன் விருந்தளித்து அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தார்கள்.

இதைச் செய்தது யார்? இதற்கு யார் பொறுப்பு? கட்டபொம்மனின் வாரிசுகள் தமது மூதாதையரின் செயலுக்கு உரிமை பாராட்டிக் கொள்ள முடியும்! எட்டப்பனின் சந்ததியினர் அவனது காரியத்துக்கு பரம்பரை உரிமை பாராட்டிக் கொள்ள முடியுமா? அப்படித்தான் நடக்கிறது.

ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு தாம் காரணமில்லை என்று கை விரிக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரசு ஆட்சி. புதுதில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி. போபாலில் முதல்வர் அர்ஜுன் சிங். ஆண்டர்சனை அரசு சொகுசு மாளிகை காவலில் வைத்து, தனது அரசு விமானத்தில் வழியனுப்பி வைத்தவர் அர்ஜுன் சிங். அதை அவர் இன்றும் பெருமையுடன் ஒப்புக் கொள்கிறார். ஆனால், அவரை விடுதலை செய்யுமளவுக்குத் தமக்கு அதிகாரம் இல்லை; மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தொடர்ந்து தொலைபேசி மூலம் வலியுறுத்தப்படுவதாக தலைமைச் செயலர் சொன்னார்; அதனால்தான் புதுதில்லிக்கு ஆண்டர்சனை அனுப்பி வைத்தேன் என்றார், அர்ஜுன் சிங்.

புதுதில்லியிலிருந்து வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக அர்ஜுன் சிங் அனுப்பி வைத்திருக்கவும் முடியாது. அப்படி யாரும் இன்று வரை கூறவும் இல்லை. அப்படிச் செய்ய அவருக்கு அதிகாரமும் இல்லை. ஆனால், “ஆண்டர்சன் கைது, விடுதலை மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது – இவை எதிலும், எவ்விதப் பங்கும் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கிடையாது. நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்காக பிரச்சாரப் பயணத்தில் இருந்த அவருக்கு நடந்தவை எதுவும் தெரியாது” என்று காங்கிரசுக்காரர்கள் எல்லாம் முதலில் ஒருசேர அடியோடு மறுத்து வந்தார்கள்.

நாட்டில் இவ்வளவு பெரிய பேரழிவு நிகழ்ந்திருக்கிறது! இதற்குக் காரணமான முதன்மைக் குற்றவாளியைக் கைது செய்து, பின்னர் விடுதலை செய்து, பாதுகாப்பாக நாட்டைவிட்டுத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இவை எதுவும் பிரதமர் ராஜீவுக்குத் தெரியாது என்றால், இவை எதுவும் தெரியாத ஒருவருக்கு இந்த நாட்டை ஆளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? பிரதமராக இருப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவ்வளவுதான் மக்கள் மீதும், நாட்டின் மீதும் அவருக்கிருந்த அக்கறையா? அல்லது இவையெதுவும் ராஜீவுக்கு தெரியாது என்பது பச்சைப் பொய்யா?
 

வாரன் ஆண்டர்சன்

வாரன் ஆண்டர்சனின் விவகாரத்தை அன்று புதுதில்லியில் கையாண்டவர்கள் இரண்டு அதிகாரிகள்: ஒருவர் ராஜீவ்காந்தி அரசில் பொறுப்பேற்றிருந்த வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ரஸ்கோத்ரா. மற்றவர் ராஜீவ்காந்தியின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். “ஆண்டர்சன் இந்தியா வரலாம், வந்தால் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமெரிக்கத் துணைத் தூதர் மூலம் உறுதியளிக்கப்பட்டது. அவ்வாறே நடந்தது. நடப்பவை பற்றி ராஜீவ்காந்திக்கு சொல்லப்பட்டது. அவர் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை” என்கிறார் ரஸ்கோத்ரா.

“(இந்திய) அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துப் பேசித்தான் எல்லாம் முடிவு செய்யப்பட்டன. அக்கூட்டத்தில் ராஜீவும் கலந்து கொண்டார்” என்கிறார், அவரின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். ரஸ்கோத்ராவின் கூற்றுக்கு மறுப்புச் சொல்லாத காங்கிரசார், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக நின்ற அலெக்சாண்டர் கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.

மன்மோகன், சோனியா, ராகுல் ஆகிய அதிகார பீடாதிபதிகள் போபால் விவகாரம் குறித்து இன்றும் வாயை இறுக மூடிக் கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளும், செய்தி ஊடகங்களும் திரும்பத் திரும்ப வலியுறுத்திய பிறகு, அர்ஜுன் சிங்கிற்கு அரசியல் மறுவாழ்வளிப்பது என்ற ஒப்பந்தத்தின் பேரில் திடீரென்று ஒருநாள் நாடாளுமன்றத்தில் அவர் வாய் திறந்தார்.

“போபால் நச்சு வாயு துயரம் நடந்த கொஞ்ச நேரத்தில் ராஜீவ் காந்தி தங்கியிருந்த ஹர்தாவுக்கு போ நான் அவரிடம் அதுபற்றி விளக்கிச் சொன்னேன். அவர் எந்தப் பதிலும் பேசாது நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். ஆண்டர்சனுக்கு ஆதரவாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவரது பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முயலவில்லை. ராஜீவைப் போன்று உயர்நிலையிலும் உயர் தரத்திலும் உள்ள ஒருவரைக் குறை கூறுவது வெறும் கற்பனையாகும்… ஆண்டர்சனை விடுவிக்கும்படி உள்துறை அமைச்சகத்திலிருந்து இடைவிடாமல் தொலைபேசியில் வலியுறுத்தப்பட்டது” என்றார், அர்ஜுன்சிங்.

அர்ஜுன் சிங்கின் இந்தக் கூற்றை காங்கிரசார் மறுக்கவில்லை. என்றாலும் அவர்கள் விரும்புவதைப் போல இந்த பிரச்சினைக்கு அது முடிவு கட்டவில்லை. ஆனால், தவிர்க்கவே முடியாத சில கேள்விகள் மனிதச் சிந்தனை உள்ளவர்களிடையே எழும்புகிறது. ஒரு அந்நியக் கம்பெனியின் நாசகாரச் செயலால் சொந்த நாட்டு மக்கள் – குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அப்பாவி மக்கள் – ஆயிரக்கணக்கானோர் சில நிமிடங்களில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர் ஊனமுற்று மருத்துவமனைகளில் கிடக்கிறார்கள். இவற்றைக் கேள்விப்படும் எந்த மனிதரும் எப்படி வெறுமனே கேட்டுக் கொண்டிருக்க முடியும்? ஏதோ நடந்துவிட்டுப் போகட்டும் என்று தன் வேலையைப் பார்க்கப் போவிட மாட்டார்கள். உணர்ச்சியுள்ள எந்த மனிதருக்கும் நெஞ்சம் பதைபதைக்கும். ஆனால், நடந்த சம்பவங்களை முதன் மந்திரி பிரதமரிடம் விளக்குகிறார். இவரோ எவ்வித எதிர்வினையும் தெரிவிக்காமல் கேட்டுக் கொள்கிறார். இக்கோர நிகழ்வுகளுக்காகத் துயரப்படவில்லை, மனம் இரங்கவும் இல்லை. காரணமானவர்கள் மீது ஆத்திரமும் வரவில்லை. இவர் மனிதப் பிறவிதானா? இல்லை, உணர்ச்சியே இல்லாத மனிதப் பிண்டமா?

இந்தக் கேள்விகள் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் உட்பட எந்த ஓட்டுக்கட்சிக்கும் எழவில்லை. செய்தி ஊடகங்களுக்கோ, அரசியல் விமர்சகர்களுக்கோ எழவில்லை. ஏன்? அதற்குமேல் அவர்கள் போக விரும்பவில்லை. இறந்து போனவர்களை விமர்சிக்கக் கூடாது; ஒரு வரம்புக்கு மேல் எந்த ஒரு அரசியல் கட்சியையும், அதன் தலைவர்களையும் அரசியல் அமைப்பையும், சட்டத்தையும் கேள்வி கேட்கக் கூடாது என்று இவர்களாகவே வரம்பிட்டுக் கொள்கிறார்கள். “தேசியத் தலைவர்கள்” என்ற பிம்பத்தை உருவாக்கி, கேள்விக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்ட தலைவர்கள், நிறுவனங்கள் என்று சிலரையும், சிலதையும் வைத்து பாதுகாப்பு அரண்களை எழுப்பிக் கொண்டார்கள். அதனால்தான் போபால் விவகாரத்திலேயே துரோகத்தனமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தை யாருமே தட்டிக் கேட்க வில்லை. இதை அடிப்படையாகக் கொண்டுதான் ராஜீவ் ஒரு உயர்ந்த தலைவர்; அவரைக் களங்கப்படுத்தும் வகையில் எதுவும் பேசக் கூடாது என்று காங்கிரசு வாதிடுகிறது.

அர்ஜுன் சிங் நாடாளுமன்றத்தில் பேசிய அடுத்த நாளே, போபால் – ராஜீவ் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக எண்ணிப் பாசிச பயங்கரவாதி சிதம்பரம் பேசினார். ஆனால், அதுவே அவரது அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. “போபால் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஆட்சி புரிந்த எல்லா அரசாங்கங்களும் கைவிட்டு விட்டன; அதற்காக வருந்துகிறேன்” என்று முதலைக் கண்ணீர் வடித்தார், சிதம்பரம். எல்லோரும்தான் தவறு செய்தோம் என்று முதலாம் துரோகி மற்ற துரோகிகளைச் சேர்த்துச் சொல்வதன் மூலம் இதற்கு மேல் யாரும் யாரையும் குற்றஞ் சாட்டாதீர்கள் என்று எச்சரிக்கிறாரா? சமரசம் பேசுகிறாரா? எல்லோரும்தான் தவறு செய்திருக்கிறோம் என்று தவறை ஒப்புக் கொள்வதுபோல பாசாங்கு செய்து தம் மீதான குற்றச்சாட்டின் கூர்முனையை மழுங்கடிக்க எத்தணிக்கிறாரா?

“போபால் சம்பந்தமாக அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்கள் எதுவும் அரசிடம் இல்லை. ஆண்டர்சன் வந்து போனதாகக் கூட அரசு ஆவணங்களில் ஆதாரம் இல்லை. அக்காலத்திய பத்திரிக்கைச் செய்திகளை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்போதைய இந்து நாளேட்டின் செய்திப்படி, ஆண்டர்சன் நாட்டை விட்டுப் போன பிறகுதான் நடந்தவை ராஜீவுக்குத் தெரிந்தன” என்றார், பாசிச புளுகுணி சிதம்பரம். ஆண்டர்சன் வெளியேறுவதற்கு முன்பாக ராஜீவுக்கு சொல்லப்பட்டது என்றுதான் அக்காலத்திய இந்து நாளேடு செய்தி கூறியது. இதை இந்து நாளேடு செய்தியாளரே ஆதாரத்துடன் கேட்டபோது, அது இந்து நாளேட்டின் கருத்து என்று மீண்டும் புளுவிவிட்டு ஓடிப்போனார் சிதம்பரம்.

ஆக, ஆண்டர்சன் வருகை முதல் பாதுகாப்பாக நாடு திரும்பியவரை எல்லாம் ராஜீவுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. இதற்கு இந்து நாளேடு செய்தி, ரஸ்கோத்ரா, அலெக்ஸாண்டர், அர்ஜுன் சிங் ஆகிய சாட்சியங்கள் உள்ளன.  ஆண்டர்சன் திருப்பி அனுப்பப்பட்டதில் ராஜீவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று காங்கிரசார் வாதிட்டாலும், அதுபற்றி அவருக்குச் சொல்லப்பட்டபோது ராஜீவ் மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள். இதற்கும் மேலாக, ராஜீவ் அரசாங்கம்தான் ஆண்டர்சனை அனுப்பி வைக்கும் முடிவு செய்ததாக சி.ஐ.ஏ. ஆவணமும் ஆண்டர்சனைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ராஜீவிடம் தொலைபேசியில் வலியுறுத்தினார் என்ற ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.

மன்னர் ஆட்சிக் காலத்தில் நீண்டநெடிய மதிற்சுவர்களுக்குப் பின்னே அரசியல் சதிகள் தீட்டப்பட்டன, இரகசியமாக நிறைவேற்றப்பட்டன. வெளியே தெரிந்தாலும், அரசின் இரகசியங்களை அறிந்தவர்கள் அனைவரும் அரசருக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியதாகச் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். இந்தக் காலத்தில் கருப்புப் பூனைப் படைகளின் பாதுகாப்போடு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு, அடாவடியாக நிறைவேற்றப்படுகின்றன. பிற விவகாரங்களில் கேள்வி கேட்பவர்களைத் தேசவிரோத சக்திகள் என்று குற்றஞ்சாட்டி ஒடுக்குவதைப் போல, ஆண்டர்சன் விடுதலை போன்ற விவகாரங்களில் அப்படிச் செய்ய முடியாது. எனவே, நடந்தவை பற்றிய ஆதாரங்கள், ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன; அல்லது காணாமல் போகும்படி செய்யப்படுகின்றன.

ஆனால், நடந்தவை எல்லாம் ராஜீவ் தலைமையிலான அரசின் திட்டமிட்ட முன்னேற்பாடுகள், சதிச் செயல்கள் தாம். தன் பங்கு பற்றி வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அர்ஜுன் சிங் போன்ற அல்லக்கைகள் – எடுபிடிகளை வைத்து நிறைவேற்றப்பட்டவைதாம்.

மக்களுடைய கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளாவோம் என்று அஞ்சும் விவகாரங்களில் எல்லாம் ஆட்சியாளர்கள் தமது அல்லக்கைகளை வைத்து காரியங்களைச் செய்வதும், தாம் ஏதும் அறியாதவர்களைப் போல வாய்மூடிக் கொண்டிருப்பதும் புதிதல்ல. ஈழ விவகாரத்தில் கூட பிரணாப் முகர்ஜி, சிவசங்கர மேனன், நாராயணன் போன்றவர்களே முன்நிறுத்தப்பட்டார்கள். மன்மோகனும் சோனியாவும் வாயே திறக்கவில்லை.

அதைப் போல ஆண்டர்சன் தப்புவிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜீவ் அரசால் முன்னிறுத்தப்பட்டவர்களைத் தான் கை காட்டுகிறார்கள். ராஜீவ்காந்தியின் பங்கு பற்றிய உண்மை தெரியக்கூடாது என்பதற்காக அரசு ஆவணங்கள், ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. அப்போது நடந்தவை பற்றிய ஆதாரம் எதுவுமில்லை என்கிறார் சிதம்பரம். அக்காலத்திய பிரதமர் அலுவலகத் தொலைபேசி உரையாடல் பற்றிய விவகாரங்களை தரும்படி தகவல் அறியும் சட்டப்படி கேட்டவருக்கு, அதுபற்றிய விவரம் எதுவும் தம்மிடம் இல்லை என்று அடியோடு மறுக்கிறது அரசு. ராஜீவின் தாய் நடத்திய அவசர கால ஆட்சி (1975-76) பற்றிய தகவல் – விவரம் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் இந்த அரசு கூறுகிறது என்பது வேறொரு விசயம்சி.

ராஜீவ் காந்தியின் ஆட்சியே இப்படிப்பட்டதுதான். அர்ஜுன்சிங் முன்னின்று போடப்பட்ட ராஜீவ் – லோங்கோவால் பஞ்சாப் ஒப்பந்தம், ராஜீவ் – அசாம் கன பரிசத் ஒப்பந்தம், ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போன்ற இரகசிய ஒப்பந்தங்களும், சதித்தனமான வேலைகளும் நிறைந்ததுதாம். ராஜீவ் அரசியல் வாழ்வே போபார்ஸ் ஊழல், டில்லி சீக்கியர் படுகொலை, ஏன், ராஜீவ் கொலையே கூட தீர்வு காணப்படாத மர்மங்கள் நிறைந்தவைதாம்!

 

நன்றி: புதிய ஜனநாயகம்

விழித்தெழு என் தமிழகமே!

ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது எழுதிய கவிதை. இன்று அதே ஈழப்போராட்டத்தின் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்! என போராட அறைகூவி அழைக்கிறது.

மருத்துவ மனைகள்
மயான பூமிகளாய்
கல்வி நிலையங்கள்
கொலை களங்களாய்
மழலைகளின் பிஞ்சு
உடல்கள் ஊனங்களாய்
மக்களின் வாழ்வு மரண
போராட்டங்களாய்
பற்றி எரியும் ஈழம்
பதறி எழு என் தமிழகமே!

அறுக்கப்பட்ட எம்
பெண்களின் மார்பகங்கள்

வெடிகுண்டிகளால்
சிதைக்கப்பட்ட எம்
பெண்களின் யோனிகள்

மின்சாரம் பாய்ச்சப்பட்டு
மரித்துபோன ஆண்குறிகள்

விடாது துரத்தும்
சிங்களகொலைவெறிக் கூட்டம்

வேடிக்கை பார்க்கும்
சர்வதேச சமூகம்
அநாதைகள் அல்ல
எம்மக்கள்
ஆர்ப்பரித்து எழு
என் தமிழகமே!

இராஜபக்சேவுக்கு
நன்றி சொல்லும் ஜெயலலிதா

புலி பூச்சாண்டி காட்டும்
சுப்ரமணிய சுவாமி

சந்திரிகாவிடம் விருது
பெற்ற இந்து ராம்

ஷோபாசக்தியின்
கட்டுரை வரையும்
சி.பி.எம்

தமிழன ஒழிப்பில்
சிங்களத்துடன்
கூட்டு சேரும்
பார்ப்பன கும்பல்

பகைமுறிக்க
படை கொண்டு
எழு என் தமிழகமே!

மகிழ்ச்சியை மறந்த மனம்
உடமைகள் இழந்த அவலம்

உறவுகளை துளைத்த வலி
உணர்வுகள் மரித்துபோன இதயம்

கேட்பாரில்லாத மக்கள் கூட்டம்
கூடவே அகதி என்ற பட்டம்

கார் இருளாய்
கவ்விருக்கும்
சிங்கள இனவெறி கூட்டம்
பற்றி எரிகிறது தமிழீழம்

அதில் பெட்ரோல்
ஊற்றுவது இந்தியம்

எம்மக்கள் கொலுத்த
படுவது தெரிந்தும்
மவுனம் சாதிக்கிறான்
கருணாநிதி

பதவி சுகத்துக்காக
இனத்தை விற்கும்
விபச்சார பன்றிகளை
கரிசமைக்க
ஓங்கி எழு என் தமிழ்கமே!

சித்திரவதை முகாம்களில்
எம் இளைஞர்கள்

பாலியல் வன்புணர்ச்சியில்
சிக்கும் எம் பெண்கள்

செம்மணி புதைகுழிகளில்
ஈழத்தின் கிராமங்கள்
சிங்கள தாக்குதலால்
சிதைக்கப்படும் வன்னிகாடுகள்

வாழவிரும்பும்
மக்களை குருரத்தில்
வதைக்கும் பேய்களை
ஓட்டிட விழித்தெழு
என் தமிழகமே!

கிழந்தது கிளிநொச்சி
முரிந்தது முல்லைத்தீவு
அழிந்தது ஆணையிறவு
படுத்தது பரந்தன்

இனி வன்னி
மண்டலம்
எங்களின் மண்டலம்
என்கிறான்
மகிந்தா

அவன் புன்சிரிப்பின்
பின் எம்மக்களின்
அழுகை ஓலம்

அவன் மீசை திருகளின் பின்
கற்பழிக்கப்பட்ட
எம் தேசம் கதறும் சத்தம்
கேட்கவில்லையா?
கருணை கொண்டு எழு
என் தமிழகமே!

வாழ்வதற்கு உத்ரவாதமற்ற
வன்னிகாடு

கொட்டும் பேய்
மழையின் பெருவெள்ளம்

கொடும் மிருகங்களின்
மாமிச பசி

ஏர் வரிசையில்
பட்டினி சாவுகள்
உதவி என்ற பெயரில்
ஏகாதிபத்தியங்களின்
ஊடுறுவல்

எம்மக்கள் கேட்பது
உதவியல்ல
சுயநிர்ணய உரிமை என்ற வாழ்வை

பெற்றுதர புறப்படு
என் தமிழகமே!

முத்துக்குமார், ரவி
தியாகத்தின் வரிசை
நீள்கிறது
தமிழகம் பொங்கி
எழுகிறது.

போராட்டங்களின்
வலிமை கூடுகிறது.

தீ பரவட்டும். தீ பரவட்டும்
தியாகங்கள் பெருகட்டும்

அரை நூற்றாண்டு கால
சிங்கள மேலாதிக்க
சிறையை விட்டு
எம் ஈழம் விடுதலை பெறட்டும்!

-நக்சல்பாரியன்

மூவர் தூக்குத் தண்டனையை உடனே ரத்து செய்!புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டக் காட்சிகள்!

    
      பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தியும், அனைவரையும் உடனே விடுதலை செய்யக் கோரி

27.08.2011 பனகல்மாளிகை அருகில்

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.
      சரியாக “4.30 மணிக்கு விடுதலை செய்! விடுதலை செய்! முருகன், சாந்தன், பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்!” என்ற விண்ணதிரும் முழுக்கங்களுடனும் செங்கொடிகள். பதாகைகள்.  முழக்கத்தட்டிகள் என ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது.
      தலைமை வகித்து உரையாற்றிய ம.க.இ.க-வின் சென்னைக் கிளைச் செயலாளர் தோழர் வெங்கடேசன் பேரறிவாளன், முருகன், சாந்தன்,  நளினி ஆகியோர் ராஜீவ் கொலையாளிகள் என்றே அரசு
முதல் ஊடங்கள் வரை பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. தடா என்ற கொடுஞ் சட்டத்தின் கீழ் கடுமையான சித்திரவதைகளுக்குப்பின்தான் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதையும்,  தவறே செய்யவிலலை எனினும் அரசுக்காக, முதலாளிகளுக்காக வேலைசெய்யும் சிபிஐ‍ யின் யோக்கியதையும் விவரித்தார்.
       மேலும் அவா, தனது உரையில் “அப்பாவிகளான மூவறின் தூக்கை ரத்து செய்து, அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை. இந்தக் ‘கருத்திற்காக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடவேண்டும். இந்த அரசை எதிர்த்து யார் செயல்பட்டாலும் அவர்களுக்குத் தூக்கு தண்டனை என்பதுதான் இவ்வரசின் நீதி. ஆக உழைக்கும்
மக்கள் இந்த பாசிச கொடுங் கோன்மைக்கு எதிராக போராட வேண்டும்” என்று கூறினார்.
       அடுத்ததாக, சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு-வின் மாநில இணைச் செயலர் தோழர்.சுதேஷ்குமார் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் போராடிவருகின்றன.
அவைகள் இதற்குத்தீர்வாக இரண்டு வழியை முன் வைக்கின்றன. 1.கருணை வழி 2.சட்டப்பூர்வ வழி.
       கருணை வழியில் செல்பவர்களின் தலைவிதியோ ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும்,  2007 வரை மூவரை உடனே தூக்கில் போட வேண்டும் என்று குரல் கொடுத்த ஜெயாவிடமே கருணையை கேட்கும் அளவுக்கு உள்ளது.

    சட்டத்தை பின்பற்றுபவர்களோ ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலான “இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கருணைமனுவை நிறுத்தி வைத்தால் தூக்கினை இரத்து செய்யலாம்” என்ற கருத்தின் அடிப்படையில் வாதாடுகிறார்கள்.
 
    ஆனால் கருணையின்படியோ அல்லது சட்டத்தின் படியோ அல்ல இது ஒரு அரசியல் உரிமை.
மூவருக்குத்தூக்கு என்பது அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் தவறு. இராஜீவ் கொலை என்பது அரசியல் நடவடிக்கை தன்னுடைய சுயநிர்ணய, தேச விடுதலைக்காக போராடிய மக்களை
ஒடுக்குவதற்காக இந்திய இராணுவத்தை அனுப்பி கொன்று குவித்த இராஜீவை கொலை செய்தார்கள்.

இதை உச்சநீதிமன்றமே பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டிப்பேசினார்.
    மேலும்”தடா என்ற பயங்கரவாதச்சட்டத்தின் படி போலீஸ் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தி வாக்கு மூலத்தை வாங்கிய சிபிஐ அதற்காக 60 நாட்கள் அரைநிர்வாணமாக சித்திரவதை செய்ததை
பேரறிவாளன் பத்திரிக்கைகளில் கூறியுள்ளதையும், இந்த தடா என்ற சட்டம் இல்லை எனில் இவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கவே முடியாது என சிபிஐ-ன் முன்னாள் இயக்குனர்
கார்த்திகேயன் கூறியதையும்” விளக்கிப்பேசினார். 
    20 ஆண்டுகளாக சிறையில் வாடிய படி என்ன குற்றம் செய்ததோம் என்பதை அறியாத அவர்களுக்கு தூக்கு செப்.9 என உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் தமிழர்களை
ராஜபக்சேவுடன் கூட்டு சேர்ந்து தெற்காசிய ரவுடியாகிய இந்தியா மே 18-ல் கொலை செய்ததற்கும், இந்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் தூக்கு என்பதை நிருபிக்கத்தான் செப்.9. ஆக இந்த
இருதினங்களுக்கும் வேறுபாடில்லை.

 

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ஆண்டர்சன்-க்கு தண்டனை வழங்காத, 5000 சீக்கியர்களைக் கொன்ற காங்கிரசு கொலை காரர்களுக்கு தண்டனை வழங்காத இந்த அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவைபுரிந்து தற்போது தான் முதலாளிகளுக்காகவே உழைக்கும் மக்களுக்காக அல்ல என்பதை பட்டவர்த்தனமாக நிரூபித்திருக்கிறது.

     இந்த நால்வரை விடுதலை செய்யக் கோருவது அரசியில் உரிமை என்ற அடிப்படையில்,உழைக்கும் மக்கள் அனைவரும் இந்தக் கருத்துக்களை எங்கும் கொண்டு சென்று அரசுக்கு எதிரான
போராட்டத்தை தொடுத்து மீட்கப்பட வேண்டிய “மூவர் உயிர் மடுமல்ல ஈழப் போராட்டத்திற்கான நியாமும் தான்” என்று எழுச்சியுரையாற்றினார்.

     1 மணிநேரம் 30நிமிடம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்த்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். கருணையினால் அல்ல, அரசியல்
நியாயத்திற்காக, அரசியல் உரிமைக்காக போராட வேண்டும் என்ற நம்பிக்கையை இந்த ஆர்ப்பாட்டம் விதைத்துள்ளது.

மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்! விழுப்புரத்தில் விவிமு, புமாஇமு -தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்!!

 பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்!

அனைவரையும் விடுதலை செய்!

என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (27.8.11) விழுப்புரத்தில் வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்  சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தோழர் மனோகர் (விவிமு இணைசெயலர்) தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் ஏழுமலை (விவிமு) மற்றும் தோழர் செல்வகுமார்(புமாஇமு) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! ஆகஸ்ட் 27,ஆர்ப்பாட்டம்!!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்!

அனைவரையும் விடுதலை செய்!

ஆர்ப்பாட்டம்

27.8.2011

பனகல் மாளிகை, சைதாப்பேட்டை

மாலை 4.30 மணி

தலைமை

தோழர் வே.வெங்கடேசன்,

சென்னைக் கிளை செயலாளர்,

ம.க.இ.க, சென்னை.

சிறப்புரை

தோழர் மா.சி. சுதேஷ் குமார்

மாநில இணைச் செயலாளர்,

பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

 • தடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்து  பெற்ற வாக்குமூலத்தை வைத்து தூக்கு தண்டனையா?

 • 21 ஆண்டுகள் சிறை தண்டனை, அதுவும் போதாதென்று மரண தண்டனையா?

 • அமைதிப்படை முதல் முள்ளிவாய்க்கால் வரை  பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்துள்ள காங்கிரசு பரம்பரையின் போர் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?