• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

சிவப்பு என்றால் பயம்…பயம் !

சென்னை புறநகர் மின்சார ரயிலில் தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் நிறுத்தத்தில் ஏறுவதற்காக உள்ளே நுழைந்து கொண்டிருந்த போது தான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது. இருபது வயது மதிக்கத் தக்க இரண்டு வடமாநில இளைஞர்கள் கையில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொண்டு ரயில் நிலையத்தின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை சுரண்டிச் சுரண்டி அழித்துக் கொண்டிருந்தனர்.

ஆர்வம் மேலிட அது என்ன போஸ்டர் என்பதை கவனித்தோம். அது, ஐ.ஐ.டி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தை ஒட்டி பு.ம.இ.மு தோழர்கள் ஒட்டியிருந்த கண்டன போஸ்டர். சுற்றிலும் வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் இதை மட்டும் ஏன் இவர்கள் மெனக்கெட்டு அழிக்க வேண்டும் என்பது ஆச்சர்யம் ஏற்படுத்தவே அருகில் சென்று பேச்சுக் கொடுத்தோம்.

தடுமாற்றமான மழழைத் தமிழில் கொஞ்சம் இந்தி கலந்து தான் அவர்களால் பேச முடிந்தது. அவர்களுக்கு அது என்ன போஸ்டர் என்றோ, அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்றோ தெரிந்திருக்கவில்லை. ரயில் நிலைய நிர்வாகம் போஸ்டரில் உள்ள சின்னத்தையும், சிவப்பு நிற வடிவத்தையும் சுட்டிக் காட்டி இது போன்ற போஸ்டர்களை அழித்து ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள இவர்களை பணிக்கமர்த்தியுள்ளது. இருவருக்கும் நாளொன்றுக்கு தலா இருநூறு ரூபாய்கள் வீதம் மாதத்திற்கு ஆறாயிரம் சம்பளமாம்.

வேறு விளம்பர போஸ்டர்களை விட ‘இந்த மாதிரி’ போஸ்டர்களுக்கு சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. அனேகமாக மாதத்தின் எல்லா நாட்களிலும் வேலை இருக்கும் என்று சொன்னார்கள். பு.ம.இ.மு தோழர்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டே ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்தோம்.

உள்ளே நுழைந்ததும் முதலில் கண்ட காட்சி தேங்கி நின்ற தண்ணீர். அதிலும் பலர் பான்பராக் எச்சிலைத் துப்பி தண்ணீரின் நிறமே லேசாகக் காவி படிந்திருந்தது. சிவப்பைக் கண்டு பயப்படும் தென்னக ரயில்வேவுக்கு காவி பிடித்திருக்கிறது போலும். சற்று மேலே சுற்றிலும் பார்த்தால் ஒரே விளம்பர பேனர்கள். அதிலும், சில துணிக்கடைகளின் விளம்பரத் தட்டிகளில் ஆபாசமான உடல்மொழியோடு பல்லிளித்துக் கொண்டு சினிமா நடிகைகள். எங்கெங்கு காணினும் “ஆள் தேவை” என்று உப்புமா கம்பெனிகளின் விளம்பரங்கள்.

சிவப்புடிக்கெட் கவுண்டரின் சுவர் நெடுகிலும் வெற்றிலைச் சாறைத் துப்பி அந்த வெள்ளைச் சுவற்றின் நிறத்தையே காவி நிறத்துக்கு மாற்றியிருந்தார்கள். தெருநாய் ஒன்று களைத்துப் போய் உறங்கிக் கொண்டிருந்தது. நிலையத்தின் சுத்தம் என்பதில் இதெல்லாம் கணக்கில் வராதோ என்று நினைத்துக் கொண்டோம்.

பெரிய முதலாளிகளின் விளம்பரங்களோ, மக்களை நுகரும் இயந்திரங்களாக்கும் பதாகைகளோ, மிரட்டியோ ஆசை காட்டியோ வாங்கச் சொல்லும் நுகர்விய வாசகங்களோ இவர்களுக்குப் பிரச்சினையில்லை. மக்களின் உடல் நலத்துக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் அசுத்தங்களும் பிரச்சினையில்லை. ஆனால், மக்கள் அரசியல் ரீதியில் விழிப்புணர்வடைவது தான் தலையாய பிரச்சினையாய் இருக்கிறது. நாட்டை சுத்தமாக்கும் நக்சல்பாரிகள் விளம்பரங்கள் அசுத்தமாகவும், பயங்கரவாதமாகவும் தென்னக ரயில்வேயிற்கு தெரிகிறது. சுவரொட்டி சுத்தத்தின் பின்னே உள்ள இந்த அசுத்த அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழைத்தவும்

மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!

மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் நேற்று (25.8.12) ஒருவர்  கொலை செய்து வீசப்பட்டுயிருந்தார்.விசாரணைக்காக போலீசு வந்தது. கொலை சம்பவம் என்பதால் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் வேடிக்கை பார்த்த பகுதி இளைஞர்களை குறிவைத்த போலீசு அவர்களைத் தூக்க முடிவு செய்தது. வழக்கமாக குற்றவாளிகள் கிடைக்காமல் இப்படி அப்பாவிகள் மீது வழக்கு போடுவது போலீசின் உத்தி. அருகில் நின்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி தோழர்கள் திவாகரும், குமரேசனும் மாணவர்களுக்கே உரிய துணிவோடு கொலையில் சம்பந்தமற்ற அப்பாவி இளைஞர்களை எதற்காக கைது செய்கிறீர்கள் என்று போலீசு கும்பலை எதிர்த்துக் கேட்டனர். உடனே தோழர்களை தாக்கிய காக்கிச்சட்டை ரவுடிகள் அவர்களையும் வண்டிக்குள் திணித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு பறந்தனர்.

போலீசு அந்த இளைஞர்களையும், தோழர்களையும் கைது செய்யவில்லை மாறாக கடத்தியிருக்கிறது. போலீசு ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களும் தோழர்களும் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருக்கின்றனர்.

இதனை அறிந்த புமாஇமு தோழர்கள்  இன்று(26.8.12) பிற்பகல் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு சென்று பொய் வழக்கில்  கைது செய்த தோழர்களை விடுவிக்க கோரியும், அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சொல்லுமாறும்  கேட்டபோது போலீசார் எங்கள் தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலைவெறியோடு அடித்து விரட்டினர்.

மேலும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து ரிமாண்ட் செய்து உள்ளனர்.

 

தொடர்புடைய பதிவுகள்:

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!

சச்சின், யுவராஜ், சேவாக், சஹாரா: யாருக்கு பாடை கட்டுகிறார்கள்?

ந்திய கிரிக்கெட் அணிக்கு புரவலராக நீண்ட காலமிருக்கும் சுப்ரதோ ராய் தலைமையிலான சஹாரா குழுமம் சில்லறை வர்த்தகத்தில் இறங்கி உள்ளது. உத்தர பிரதேசம், உத்தர்காண்ட், பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களில் 60 நகரங்களில் Q SHOP என்ற பெயரில் கடைகளை விரிக்கப்போகிறது சஹாரா.

சச்சின்-டென்டுல்கர்அதற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம் ஒன்று இப்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சஹாரா “கலப்படம் இல்லாத மளிகை சாமான் மற்றும் உணவுப் பொருட்களை விற்கிறது” என்பதை காட்டுவதற்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக் ஆகியோர் சஹாராவின் தரமான பொருட்களை வாங்காதவர்களுக்கு ஈமச் சடங்குகள் செய்வதாக நடித்திருந்தனர்.

இந்த விளம்பரம் வெளியாகி ஒரு வாரத்துக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) விளம்பரத்தில் நடித்த சச்சின் டெண்டுல்கரும் ‘கடும் எதிர்ப்பு’ தெரிவித்துள்ளனர். விளம்பரத்தில் நடிக்கும் போது என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் விளம்பரம் வெளியான ஒரு வாரத்திற்கு பிறகு விழித்துக் கொண்ட அதி புத்திசாலிதான் ‘நாடே போற்றும்’ கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

பெரு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் இறங்கும் போது சிறு வியாபாரிகளும் விவசாயிகளும் சிறு தொழில்களும் அழிந்து போகின்றனர் என்பது உலகளாவிய அனுபவம்  அமெரிக்காவின் வால்மார்ட் கால் வைத்த நகரங்களில் சிறு வணிகர்கள் தொழிலிலிருந்து துரத்தப்பட்டு கடைத்தெருக்கள் சுடுகாடுகளாக ஆகி விடுவதை சித்தரிக்கும் ஆவணப்படங்கள்வெளியாகியிருக்கின்றன

இந்தியாவிலும் ரிலையன்ஸ் பிரெஷ் போன்ற பெரு நிறுவனங்களின் கடைகள் மூலம் பல சிறு வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதும் பெரு நிறுவனங்களன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் கடுமையாக சுரண்டப்படுவதும் நடந்து கொண்டிருக்க  இப்போது சஹாரா நிறுவனமும் களத்தில் குதித்திருக்கிறது.

இலங்கையில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது கொழும்புக்குப் போய் கிரிக்கெட் ஆட போன போதோ, கொலைகார பால்தாக்கரேவை தனது திருமணத்திற்கு அழைக்கும் போதோ சச்சின் டெண்டுல்கர் தனது இமேஜ் பற்றிக் கவலை கொள்ளவில்லை.

சஹாராவின் கலப்படமற்ற பொருட்களை வாங்கவில்லை என்றால் வாடிக்கையாளருக்கு மரணம் நிச்சயம் என்ற எகத்தாளம் இருக்கட்டும்; சஹாராவின் சில்லறை கடைகள் புற்றீசல் போல பெருகினாலே எத்தனை சிறு வணிகர்கள், சிறு தொழில்கள், விவசாயிகள் அழியப்போகின்றனர்? இவர்கள் பாடை கட்டப்படுவதெல்லாம் இந்த கிரிக்கெட் நட்சத்திரங்களுக்குத் தெரியாது. தெரிந்தாலும் கவலைப்படப் போவது கிடையாது. அவர்களின் கவலை தம்மை ஆராதிக்கும் நடுத்தர வர்க்கத்தை கேலி செய்யக்கூடாது என்பது மட்டுமே.

உண்மையில் சஹாராவுக்கும், கிரிக்கெட் மோகத்திற்கும் நாம்தான் பாடை கட்ட வேண்டும். இல்லையேல் சுடுகாட்டில் கூட நமக்கு இடமிருக்காது.

இதையும் படிக்கலாம்

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

________________________________________________

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

ஐஐடி மாணவர்களின் தொடர் தற்கொலைகள்

உயர்கல்வி தனியார்மயமாக்கலின் விளைவும், கடோட்கர் குழு அறிக்கையும் !

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார் மயத்தின் கோரமுகம்!!தொடர்ச்சியாக​ கடந்த​ சில​ மாதங்களில் ஐஐடிக்களில், குறிப்பாக​ பார்ப்பன​ மேலாண்மை தலைவிரித்தாடும் ஐஐடி கான்பூரிலும் சென்னையிலும் நடக்கும் மாணவர் தற்கொலைகள், செய்தி ஊடகங்களையும், பொதுமக்களையும், ஏன் விட்டேத்தியான இந்த​ அரசையும் கூட மாணவர் தற்கொலைக்கான​ காரணங்களை நோக்கி சற்று தலை திருப்ப​​ வைத்துள்ளது. 2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதும், அதன்பின் இதுகுறித்து நடந்த​ போராட்டங்களும், விவாதங்களும் அனைத்து முதலாளித்துவ​ ஊடகங்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இரண்டாமாண்டின் இறுதியில் முடிக்கப்படவேண்டிய​ பிராஜெக்ட்டை அடுத்த​ ஆறு மாதங்களுக்கு நீட்டித்ததால் ஏற்பட்ட​ மன​ உளைச்சலே இந்த​ தற்கொலைக்கு காரணமாக​ ஊடகங்களால் பேசப்பட்டது.  கடந்த​ ஒருவருடத்தில் இதே காரணத்தால் 2010 மே மாதம் சந்தீபும், 2011 பிப்ரவரியில் அனூப் வலப்பாரியாவும் தற்கொலை செய்தபோதும், நிதின் குமாரின் தற்கொலைக்கு மட்டும் இவ்வளவு ஊடகக் கவனஈர்ப்பு கிடைத்தது யதேச்சையாக​ நடந்துவிடவில்லை. ஏழை மாணவனான சந்தீபின் தற்கொலையை  காவல்துறையின் உதவியுடன் ஒரு பத்தி செய்தியாக​ மறைத்தது போல், DRDO இயக்குனரின் மகனான​ நிதினின் தற்கொலையை மூடிமறைக்க​ ஐஐடி நிர்வாகத்தால் முடியவில்லை.

2008-ல் சிஃபி வெளியிட்ட​ செய்தியில் 2005-2008 ஆம் ஆண்டிற்குள் ‘கல்விசார் நிர்பந்தத்தால்’ ஐஐடி கான்பூரில் மட்டுமே ஏழு தற்கொலைகள் நடந்ததாகக் கூறுகிறது.  2008-ல்  நடந்த​ ரித்திகா தோய​ சாட்டர்ஜி என்ற எம்டெக் மாணவியின் தற்கொலையின் போதே ஐஐடி நிர்வாகத்தின் ரகசியத் தன்மை வாய்ந்த​ மாணவர் தர​ மதிப்பீட்டு முறை (grading system) மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பின் (grievance forum) கேவலமான​ நிலை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.

கல்விசார் நிர்பந்தங்களினால் நடக்கும் தற்கொலைகளுக்கு இணையாக ஐஐடிக்களில் நடக்கும் சாதிய​ ஒடுக்குமுறையாலும் ஏழை தலித் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.  பிப்ரவரி 2011-ல் நடந்த​ ஐஐடி ரூர்க்கி மாணவன் மனீஷ் குமாரின் தற்கொலை இதற்கு மிக​ சமீபத்திய​ உதாரணம். ஐஐடி நிர்வாகம் மாணவர்களின் உணர்ச்சிவயப்படும் தன்மையும் மன​ அழுத்தமுமே தற்கொலைக்கான​ காரணமாகக் கூறுகிறது.  ஐஐடி சென்னையின் மாணவர்களுக்கான​ நிர்வாக​ முதல்வர் (Dean of Students) கோவர்த்தன், தற்கொலை செய்த​ நிதினைப்பற்றிக் கூறும்போது, அவர் பள்ளிப்பருவத்திலிருந்தே மன அழுத்ததால் பாதிக்கப்பட்டவர் என​ சேறடித்தார்.

இதற்கு முன்னும் 2010-ல் ஐஐடி கான்பூரில் ஸ்நேஹல் என்ற​ பிடெக் மாணவி தற்கொலை முயற்சி செய்ததற்கு அம்மாணவியின் மனநிலையை காரணங்காட்டினார் அதன் பதிவாளர் கஷேல்கர்.  டெக்கான் குரோனிக்கிளில் வந்த​ நிதின் குமாரின் தற்கொலை செய்திக்கு பின்னூட்டமிட்டிருந்த​ நிதின் குப்தா என்பவன் இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், ஒரு நடைபாதைப் பயணி மேல்  கார் ஏற்றிச் சென்றால் அதெப்படி டிரைவரின் குற்றமாகாதோ அது போலவே நிதின் குமாரின் தற்கொலைக்கும் ஐஐடி நிர்வாகம் பொறுப்பல்ல​ என்கிறான். இதற்கு டார்வினின் “தக்கன பிழைத்து வாழ்தலை” (survival of the fittest) உதாரணம் காட்டுகிறான்.

இன்னொரு பக்கம் ஐஐடி நிர்வாகமோ மாணவர்களை குஷிப்படுத்தி தற்கொலை எண்ணத்தைப் போக்க​ ஒரு தலைமை மகிழ்ச்சி அதிகாரியை (Chief Happiness Officer!?!?!?) முழுநேரமாக​ நியமித்துள்ளது. இச்சூழலில், கடந்த​ ஐந்து வருடங்களில் மட்டும் ஐஐடிகளில் நடந்த​ மொத்த​ மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை 15-ஐத் தாண்டும் போது, இதன் பின்னணியை தனிநபர் பிரச்சினையாகவன்றி சமூகப்பொருளாதார​ நோக்கில் ஆராய​ வேண்டியுள்ளது.

தற்கொலைக்கு தூண்டும் சமூகப் பொருளாதாரக் காரணிகள்

காட்ஸ் (GATT) மற்றும் டப்ளியூடிஓ (WTO)-ன் பரிந்துரைப்படி, உயர்கல்வியை பண்டமயமாக்கும் முகமாகவும் உலகசந்தையின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்யவும், இந்திய​ அரசு உயர்கல்வியில் உட்கட்டுமான​ சீர்த்திருத்தங்களை கொண்டுவருகிறது. இச்சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தி சோதனை செய்வதன் முதற்கட்டமாக​,   ஐஐடிக்களை அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) கல்வி நிறுவன​ மாதிரிகளாகவும் அதேநேரம் NIT, ISER, பல்கலைக்கழகங்கள் போன்ற​ உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் வட்டார​ அளவில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாகவும் ஆக்கும் பொருட்டு, கடந்த​ பத்தாண்டுகளில் மனிதவள​ மேம்பாட்டுத்துறையின் கீழியங்கும் 15 ஐஐடிகளிலும், நிதிசார்  (financial autonomy) தன்னாட்சியை பகுதியளவிலும், கல்விசார் தன்னாட்சியை (academic autonomy) முழுவதுமாகவும் அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

நிதிசார் தன்னாட்சியென்பது மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்தல், மாணவர்களுக்கான விடுதி, ​ உணவகங்கள் மற்றும் அங்காடிகளின் நிர்வாகம், உட்கட்டுமானம், பிற​ நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்ளும் நன்கொடை போன்றவற்றில் அரசின் தலையீடின்றி நிர்வாகக் குழுமத்தின் (Board of governance) நேரடியாட்சிக்குட்பட்டிருப்பது போன்றவற்றைக் கூறலாம்.  ஆனால் ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் காப்பீடு, மாணவர்களுக்கான​ கல்வி உதவித் தொகை, உட்கட்டுமானத்திற்கான​ நிதி ஒதுக்கீடு, நிறுவன உபரிநிதியை முதலீடு செய்வது போன்றவற்றில் மைய அரசின் பங்களிப்பு மற்றும் தலையீடு, முதன்மை தணிக்கை ஆய்வாளரின் தணிக்கைக்கு உட்பட்ட​ நிறுவன​ வரவுசெலவுகள் போன்றவை நிதிசார் ஆட்சியின் ஒருபகுதியை இன்னும் மைய​ அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

கல்விசார் தன்னாட்சியென்பது, பாடத் திட்டங்களை வடிவமைப்பது, புதிய​ பாடப்பிரிவுகளை அறிகமுகப்படுத்துவது, மாணவர் சேர்க்கைக்கான​ தகுதிகளை நிர்ணயிப்பது, ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்விற்கான​ தகுதிகளை தீர்மானிப்பது போன்றவற்றில் அரசின் தலையீட்டை முழுவதுமாக​ நீக்கி, முழுக்க​ முழுக்க​ நிர்வாகக் குழுமத்தின் நேரடி ஆட்சிக்கு ஒப்படைப்பதாகும்.  இக்குழுமத்தின் உறுப்பினர்களாக​ இருந்து ஆட்சிசெய்வது, கல்வியாளர்களான ஐஐடிக்களின் ​ மூத்த​ பேராசிரியர்களே.  இந்த தன்னாட்சி அமைப்பு கல்விசார் புலத்தில் பேராசிரியர்களுக்கு வரைமுறையற்ற​ அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இதனால் ஒரு மாணவனின் எதிர்காலம் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் ஆய்வு வழிகாட்டியாக​ (project guide) இருக்கும் குறிப்பிட்ட பேராசிரியரை மட்டுமே சார்ந்துள்ளது.  அதுபோல​ ஐஐடிக்களை பொறுத்தவரை பாடத்திட்டம் பற்றிய​ மையப்படுத்தப்பட்ட​ விதிமுறைகளில்லை.  உதாரணமாக​ பல​ துறைகளிலும் கடைசி செமஸ்டரில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேட்டையும் (thesis) வாய்மொழித்தேர்வையும் (viva voce) பொறுத்தே மாணவனுக்கு கிரேடு (grade) வழங்கப்படுகிறது. ஆனால் ஒருசில​ துறைகளில் ஒரு எம்டெக் மாணவன் ஆய்வு முடிவுகளை ஏதாவது ஆய்விதழில் (journal) வெளியிட்டாலன்றி  அம்மாணவனுக்கு வாய்மொழித்தேர்வு நடத்தமாட்டார்கள். வாய்மொழித்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே எஸ் (S) அல்லது ஏ (A) கிரேடு வழங்கப்படும். மற்ற​ மாணவர்களுக்கு பி (B), சி (C) கிரேடுகள் வழங்கப்பட்டு பட்டமளிக்கப்படும்.

ஒரு மாணவன் எடுக்கும் உயர்ந்த​ கிரேடைப் பொறுத்தே கார்ப்பரேட் நிறுவனங்கள் அவனுக்கு வேலை வாய்ப்பளிக்கின்றது.  இந்த​ மாதிரி துறை சார்ந்த​ மையப்படுத்தப்படாத விதிமுறைகளினால், ஒரு மாணவனை குறிப்பிட்ட​ ஆய்வுவழிகாட்டி அறிவு சுரண்டல் செய்யும் போது அதை புரிந்து கொள்வதற்கோ, புரிந்தாலும் அச்சுரண்டலை எதிர்த்து அம்மாணவன் கேள்வி கேட்கவோ முடியாத​ சூழலே இங்கு நிலவுகிறது.  இதையெல்லாம் தாண்டி ஒரு மாணவன் தனது பாடம் சார்ந்த​ காரணங்களுக்காகவோ அன்றி மாணவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் விடுதி அல்லது நிறுவனம் சார்ந்த​ பிரச்சனைகளுக்காகவோ​ நிர்வாகத்திடம் முறையீடு செய்தால் அவனது ஆய்வுவழிகாட்டியாலே மிரட்டப்படுவான்.  இது அவனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் கிரேடில் கைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

ஐஐடி போன்ற​ உயர்கல்வி நிறுவனங்கள் இன்னும் பார்ப்பனர்களின் கோட்டையாக​ உள்ள நிலையில், ஆசிரியர் நியமனத்தில் நிகழும் பார்ப்பன​ மேலாண்மை காரணமாக,​ மெரிட்டிலோ, இட​ஒதுக்கீட்டிலோ படிக்க​ வரும் பார்ப்பனரல்லாத​ மாணவனின் கிரேடைத் தீர்மானிப்பதில் அவனது சாதியும் முக்கிய​ பங்களிக்கிறது. (டாக்டர் உதய் சந்த் என்பவர் மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலடிப்படையில் உயர்கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் மைய அரசால் எஸ்டி எஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ள​ 22.5% இடஒதுக்கீட்டில் இதுநாள்வரை வெறும் 5.03% மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக​ மானியக்குழு வலியுறுத்தும் எஸ்டி எஸ்சிக்கான பிரதிநிதித்துவம் எந்த​ ஐஐடி நிர்வாகத்திலும் வழங்கப்படவில்லை.) இதனால் ஒரு மாணவன் தான் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக​ தனது பேராசிரியர்களையோ நிர்வாகத்தையோ அணுகுவது குதிரைக் கொம்பாகிறது.

பொதுவாக​ ஐஐடியில் நுழைவதே கௌரவமாகவும் அதற்குமேல் வேலைக்கான உத்தரவாதமாகவும் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் பார்க்கப்படுகிறது.  இந்த​ பொதுப்புத்தி, பட்டப்படிப்பு முடித்ததும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை உத்தரவாதத்தைப் பற்றியும் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை பற்றியும் கனவுகளை மாணவனுக்குள் உருவாக்கிறது. ஐஐடி மாணவர்களில் 80%ற்கும் மேலானோர் வங்கிக்கடனை நம்பி படிக்கும் நடுத்தர​ வர்க்கத்தினர்.  பட்டப்படிப்பை முடித்ததும் இக்கடனை திருப்பி செலுத்த​ வேண்டிய​ நிர்பந்தமும் அம்மாணவனுடைய​ உடனடி வேலைத் தேவைக்கு காரணமாகிறது. ஒரு மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் தாமதம் ஏற்படும் போதும் அல்லது குறைந்த​ கிரேடுகளுடன் பட்டம் பெறும்போதும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை பற்றிய​ அவனது ஆகாயக்கோட்டை தகர்கிறது. வங்கிக்கடனின் சுமைவேறு அழுத்துகிறது.

இந்த​ கல்விமுறை மாணவனுக்கு சமூகம் சார்ந்த​ எந்த​ புரிதலையும் உருவாக்கிக் கொடுக்காமல் இருப்பதும், சமூக​ யதார்த்தங்களிலிருந்து அன்னியப்பட்ட​ நடுத்தர​ வர்க்கப் பின்னணியும், அம்மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்படும் போது அதை தனக்கு மட்டுமே உரிய​ பிரச்சனையாகப்பார்ப்பதும், அவனது சமூகப்பொருளாதார​ நிலைமைகளுமே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது.

ஆய்வுமாணவர்களின் பரிதாபநிலை

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார் மயத்தின் கோரமுகம்!!இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் நிலையே இப்படியென்றால் ஆய்வுமாணவர்களின் நிலை மிகப் பரிதாபத்துக்குரியதாக​ இருக்கிறது.  ஐஐடியில் பொறியியல் துறைகளில் முனைவர் பட்டம் மேற்கொள்ள​ ஐஐடி நுழைவுத் தேர்வு மற்றும் நேரடித் தேர்விலும், அடிப்படை அறிவியல் துறைகளில் சேர​ நெட் (NET), கேட் (GATE) போன்ற​ தேர்வுகளில் தகுதியடைந்திருப்பதுடன் ஐஐடித் தேர்வுகளிலும் வெற்றி பெறவேண்டும்.  இந்தியாவில் உயர்கல்வித் துறையில் இருக்கும் பலஅடுக்கான​ கல்விமுறையும், மையப்படுத்தப்படாத​ பாடத் திட்டங்களும் காரணமாக​ முதுநிலை பட்டம் பெற்ற​ மாணவன் மேலும் இரண்டு முதல் மூன்று வருடங்கள் தீவிரமாகப் பயிற்சியெடுத்தால் மட்டுமே இத்தேர்வுகளில் தகுதியடைந்து ஐஐடிக்குள் நுழையமுடியும்.

தனது வயதையொத்த​ நண்பர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் கை நிறைய​ சம்பாதிக்கும் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பாலுள்ள  அதீத​ ஈடுபாடும் தன் சுதந்திர சிந்தனைகளுக்கு ​ஆய்வுலகு ஏற்படுத்திக் கொடுக்கப்போகும் வாய்ப்புக​ளையும் பற்றியுள்ள ஏராளமான​ கற்பனைகளினாலே பொதுவாக​ மாணவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் இந்திய​ தத்துவ​ மரபில் காலங்காலமாக​ ஆதிக்கம் செலுத்திவரும் அதீதக் கருத்துமுதல்வாதத்தின் (இதற்கு மிகச் சிறிய​ உதாரணமாக​ நம்ம​ கணிதமேதை ராமானுஜத்திற்கு கணித சூத்திரங்களெல்லாம் சொந்த​ புத்தியிலிருந்தன்றி திருவுடைநாயகியம்மாளின் திருவருளால் வந்ததைக் கூறலாம்) தொடர்ச்சியாக​ பார்ப்பனர்கள் கேள்விக்கே இடமற்ற வகையில் உயர்கல்வியில் முக்கிய​ இடத்தைக் கைப்பற்றினர்.​  காலனிய​ காலத்திலிருந்து சாதி சமூகமுறையின் அடிப்படையான​ கருத்துநிலைச் சட்டத்தை உடைத்தெறிவதற்கான விருப்பமில்லாமலேயே அவர்க​ளுடன் முதலாளித்துவம் சமரசம் செய்த காரணத்தால்,  இந்திய அறிவுத்துறையில் இன்று வரை மந்தமும் தேக்கமும் நிலவிவருகிறது.

பி.சி ராய் 1902-ல் எழுதிய ‘இந்து வேதியியலின் வரலாறு’ என்ற நூலில் “இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணி சாதி சமூக முறையின் கோட்டைக் கொத்தளங்களும், அவை தொழில்நுட்ப வல்லுநர், கைவினைஞர் உள்ளிட்ட உடல் உழைப்பாளிகளின் சமூக மதிப்பை மிக மோசமான வகையில் கீழிறக்கியதுமுமே” என்கிறார். இதை நூறு சதவீதம் நிரூபிப்பது போலவே ஐஐடிக்களின் இன்றைய​ கல்வி மற்றும் ஆய்வுமுறை உள்ளது.

உதாரணமாக​ ஐஐடி சென்னையைப் பொறுத்தவரை இங்கு நிலவிவரும் ஐயர் – ஐயங்கார் மேலதிக்கத்தின் பிரதிபலிப்பாக​, கோட்பாட்டு (theoretical) மற்றும் கணிப்பிய (computational)​ ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், சோதனைவழி (experimental) மற்றும் தொழிற்நுட்ப​ (technological)  ஆய்வுகளுக்கு கொடுக்காமல் ‘மூளை உழைப்பை உடல் உழைப்பிலிருந்து பிரித்து’ அதை கேவலப்படுத்தும் போக்கு இருக்கிறது.  ஒரு சில​ துறைகளில் சோதனை வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இறக்குமதி செய்யப்பட்ட​ பல​ கோடி ரூபாய் மதிப்பிலான​ சோதனைக்கருவிகளையும், வணிக நோக்கம் மட்டுமே கொண்ட​ பன்னாட்டு பதிப்பகங்களையும்  மட்டுமே நம்பியுள்ளதால், மாணவர்கள் தங்கள் சொந்த​  மூளையை உபயோகித்து ஒரு விளக்குமாறு செய்யும் தொழில் நுட்பத்தைக்கூட​ உருவாக்க​ முடியாத​ ஒட்டுண்ணிச் சூழல் தான் இந்திய​ தொழில்நுட்பத்துறையில் நிலவுகிறது.

ஆனால் உலகளாவிய​ ரீதியில் அடிப்படை அறிவியலும் தொழில்நுட்பமும் ஒத்தியங்கும் ஆய்வு முறையே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியக் கூறாக​ இருக்கும் போது, இந்த​ சாதிய சமூக அமைப்பின் வெற்றி, இந்திய​ அறிவியலின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய​ முட்டுக்கட்டையாக​ இன்றளவும் இருந்து வருகிறது. இது ஒரு ஆய்வுமாணவனின் அறிவுத் தேடலுக்கான​ தாகத்தை முளையிலே கிள்ளிவிடுவதோடு, அம்மாணவனது கருத்தை வறளச்செய்து (brain drain) ஆய்வில் எப்போதும் பெருவளர்ச்சியற்றதொரு மந்தநிலையை உருவாக்குகிறது.

சராசரியாக​ இருபத்தைந்தாவது வயதில் முனைவர் பட்ட​ ஆய்வில் நுழையும் ஆய்வுமாணவர், தன் வாழ்க்கையின் மிக​ நல்ல​ நாட்களான​ ஐந்திலிருந்து ஏழு வருடங்களை ஆய்வுவழிகாட்டியான​ பேராசிரியருக்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்து விடுகின்றார். பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக​ நித்தம் போராடி,  சமூகரீதியான​ உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி (introvert), குடும்பத்தினரால் ‘சம்பாதிக்கத் துப்பில்லாதவன்’ என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர​ வருமானமில்லாததால் திருமணம் என்ற​ கனவே கானல் நீராகி,  எதிர்காலம் பற்றிய​ எந்த​ நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும்  உள்ளாகி, செயல் வீரியமிழந்த​ நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.

இதற்கிடையில் வழிகாட்டிக்கு செய்யும் சேவையில் ஏதேனும் குறையேற்பட்டாலோ  ஆய்வில் பெரிய முன்னேற்றமில்லாமலிருந்தாலோ, ஆய்வின் எந்த​ கட்டத்தில் வேண்டுமென்றாலும் அம்மாணவரை எவ்வித​ நட்டஈடுமின்றி, கேட்பாரும் கேள்வியுமற்ற​ கையறு நிலையில் வெளியேற்ற​ இவ்வமைப்பு வழிவகை செய்துள்ளது. இந்நிரந்திரமற்ற​ தன்மை, ஆய்வு மாணவர்களுக்கு தற்கொலையெண்ணத்தைக்கூட​ உருவாக்குவதில்லை! இப்படி இந்திய​ உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, பேராசிரியர்கள் சுரண்டுபவர்களாகவும்,மாணவர்கள் அறிவுத்தளத்திலும்பொருளாதார​ரீதியாகவும்கலாச்சாரத்தளத்திலும் ஒட்டச்சுரண்டப்படுபவர்களாகவும் எதிரெதிர் திசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஐஐடிக்களின் நிலைமை இப்படியிருக்க​, இவ்வமைப்பை அம்பலப்படுத்தி, நிதின் குமார் உட்பட​ ஐஐடி சென்னையில் நடந்த​ அனைத்து தற்கொலைகளுக்கும் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டுமென்றும், தற்கொலைகளுக்கு காரணமான​ டீன் மற்றும் ஆய்வுவழிகாட்டி ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கவேண்டுமென்றும் கோரிக்கைகளுடன் மாணவர்களை ஒருங்கிணைந்து போராட​ வலியுறுத்தி புரட்சிகர​ மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.  ஐஐடி மாணவர்கள் ஓரணியில் திரண்டு இதற்கெதிராகப் போராடவில்லையென்றால் தற்கொலைகள் வரும் காலங்களிலும் தொடரத்தான் செய்யும்.

இந்நிலையில் ஐஐடிக்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு அவற்றை தனியார் மயமாக்கப் பரிந்துரைக்கும் கடோட்கர் குழு அறிக்கையை அமுல்படுத்தப்போவதாக​ மனிதவள​ மேம்பாட்டுத்துறை கடந்த​ மாதம் அனைத்து செய்திதாள்களிலும் செய்தி வெளியிட்டு, அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்திலும் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ரிலையன்ஸின் கடல்சார் ஆய்வு நிறுவனத்துடன் கூட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை நியாயப்படுத்திப் பேசும் போது, ‘இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் உட்பட​ எந்த​ அரசுசார் கல்விநிறுவனங்களும் உலகத்தரம் வாய்ந்ததாக​ இல்லை. உயர்கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பு ஒன்றே இந்திய​ உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்தும்’ என்றார்.  இதற்கு பதிலளித்த​ மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், ‘கடோட்கர் குழுப் பரிந்துரைகளை அமுல்படுத்தினாலே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த முடியும்’ என்றார்.  உடனே அனைத்து செய்தி நாளேடுகளும் ஐஐடியின் தரத்தைச் சொல்லி மத்திய​ அமைச்சரவையே இரண்டுபட்டு குடுமிப்பிடி சண்டைபோடுகிறது என்றெல்லாம் பரபரப்பு செய்தி வெளியிட்டது.

ஆனால் மைய அமைச்சரவையும் நாளேடுகளும் அரங்கேற்றிய​ இந்த​ நாடகத்தில் மைய​ இழை ஒன்றுள்ளது. இவர்களின் கூற்றுகளை கூர்ந்து கவனிக்கும் எவருக்கும் அது புரியும். அதாவது, அரசு-தனியார் கூட்டில் மட்டுமே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த​ முடியும் என்றும் இதற்கு கடோட்கர் குழு பரிந்துரைக்கும் ஐஐடி தனியார்மயமாக்கலே ஒரேவழி என்பதை மக்களை ஏற்க​ வைப்பதே இந்நாடகத்தின் நோக்கம்.

‘அரசு-தனியார் கூட்டு’ என்ற​ வண்ணத்தாளில் பொதியப்பட்டுள்ள​ இந்த​ நஞ்சின் உண்மையான​ தன்மை நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக் கிடக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய​ உயர்கல்வித் துறையை லட்டு மாதிரி அப்படி அலேக்காக​ தூக்கி கொடுப்பதே!. இதனை முழுமையாக​ உணர்ந்தும் எந்த​ ஐஐடி பேராசிரியர்களும் இதற்கெதிராக​ வாயைத் திறக்காமல் இருப்பதன் ரகசியம் தங்களுக்கும் ‘பிராஜக்ட்’ என்ற​ பேரில் சில​ எச்சில் எலும்புகள் வீசப்படும், மாணவர்களின் உழைப்பை   ஒட்டச் சுரண்டி ரிப்போட் எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்ற​ நப்பாசை தான்.

இன்றைக்கு உயர்கல்வித்துறை தனியார்மயமாக்கலின் முதல் பலிகடாக்களாக​ மாணவர்கள் இருந்தாலும் அது தன் ஆக்டொபஸ் கரங்களால் பேராசிரியர்களையும் அழுத்தி திணறடிக்கும் காலம் வெகு தூரமில்லை.  இலவசக் கல்வியை அமல்படுத்து, தனியார் கொள்ளையை தடுத்து நிறுத்து, என்ற கோரிக்கையின் கீழ் மாணவர்கள் அணிதிரண்டு போராடாத வரை ஐஐடி மட்டுமல்ல ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் விமோச்சனமில்லை.

ஆனால் சாதாரண அரசு கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வு ஐஐடி போன்ற உயர்கல்வி மாணவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உணரும் வரை, உணர்ந்து போராடாத வரை விடிவில்லை. அந்த விடியலுக்கான விதையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விதைத்துள்ளது. அறுவடைக்கான ஆதரவை மாணவர்கள் தரவேண்டும்.

_______________________________________________________

– ஆலங்கட்டி

முதல் பதிவு: வினவு

ஐ.ஐ.டி மாணவி தற்கொலை: புமாஇமு போராட்டம்! பத்திரிக்கை செய்தி!

சென்னை ஐ.ஐ.டியில் மாணவி நெருகு மானசா தற்கொலை! இது தனியார்மயக் கல்வி கொள்கையின் கோர விளைவே!

 

 

 

ஐ.ஐ.டி மாணவி தற்கொலை: புமாஇமு போராட்டம்! பத்திரிக்கை செய்தி!

தொடர்புடைய பதிவுகள்:

சென்னை ஐ.ஐ.டியில் மாணவி நெருகு மானசா தற்கொலை! இது தனியார்மயக் கல்வி கொள்கையின் கோர விளைவே!

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

ஐ.ஐ.டி மாணவி தற்கொலை: புமாஇமு போராட்டம்!

மாணவி தற்கொலை எதிரொலி: ஐ.ஐ.டி.யில் முற்றுகை போராட்டம்

 
மாணவி தற்கொலை எதிரொலி: ஐ.ஐ.டி.யில் முற்றுகை போராட்டம்

 
சென்னை கிண்டியில் சர்தார் வல்லபாய் படேல் சாலையில் ‘ஐ.ஐ.டி.’ உள்ளது. அங்கு படித்த மாணவி மெருகு மானஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள மாணவியர் விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இங்கு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை தடுக்க வலியுறுத்தியும், ஐ.ஐ.டி. இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்யவேண்டும் என வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியினர் இன்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்துக்கு இந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் மருது தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜேஸ்வரி, மணிகண்டன், கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது ஐ.ஐ.டி. இயக்குனரை நேரில் சந்தித்து மனு கொடுக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முயன்றனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. 

அதைத் தொடர்ந்து 2 நிர்வாகிகள் இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

 
செய்தி: மாலைமலர்
 

சென்னை ஐ.ஐ.டியில் மாணவி நெருகு மானசா தற்கொலை! இது தனியார்மயக் கல்வி கொள்கையின் கோர விளைவே!

மத்திய,மாநில அரசுகளே!

ஐ.ஐ.டி மாணவர்களின் தொடர் தற்கொலைகளை மூடி மறைத்து வரும் இயக்குனர் பாஸ்கர், ராமமூர்த்தியையும் உண்மையை கண்டறிய முயன்ற பத்திரிக்கையாளரை தாக்கிய பேராசிரியர் பிரகாஷ்,எம்.மய்யாவையும் கைது செய்!

ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கு!

ஐ.ஐ.டி மாணவர்களே!

அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டுவோம்!

தொடரும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த ஐ.ஐ.டியில் திணிக்கப்பட்டு வரும் தனியார்மயக் கல்வி கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!

******************************

தொடர்புடைய பதிவுகள்:

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மாநிலக்கல்லூரி மாணவர்கள் 32பேர் விடுதலை! பு.மா.இ.மு தலைமையில் போராடிய பெற்றோர்கள்-மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு வெற்றி!

தமிழக அரசே!

  • அடிப்படை வசதிகள் கேட்டு போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெறு!

  • பொய் வழக்கு போட்ட D-1 காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடு!

  • கல்லூரிக்குள் போலீசை அத்துமீறி நிறுத்தி

         சிறைச்சாலையாக மாற்றாதே!

அனைத்து கல்லூரி மாணவ நண்பர்களே!

  • அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல்

           அரசு கல்லூரிகளை சீர்குலைக்கும்

            தனியார்மய கல்வி கொள்ளையை முறியடிப்போம்!

  • பெற்றோர்கள்-ஆசிரியர்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம்!

  • கழிவரை,குடிநீர்,கேண்டீன்,நூலகம், மாணவர் தேர்தல்,கலாச்சார விழாக்கள் போன்ற அடிப்படை வசதிகளை வென்றெடுப்போம்!

தொடர்புடைய பதிவுகள்:

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?- 25.8.12 கருத்தரங்கம் – அனைவரும் வாருங்கள்!

லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி ஒய்ஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

அரசு பள்ளிகளில் கண்கானிப்பு கேமரா: மாணவர்களா? குற்றவாளிகளா?

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?- 25.8.12 கருத்தரங்கம் – அனைவரும் வாருங்கள்!


திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

கருத்தரங்கம்

நாள் : 25.8.2012

இடம் : சனிக்கிழமை மாலை 5 மணி

பொது வர்த்தகர் சங்கம்

திருவொற்றியூர்

*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர் ம.சி.சுதேஷ் குமார்

மாநில இணைச் செயலர், பு.ஜ.தொ.மு

உரைவீச்சு:

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

தோழர் பா.விஜயகுமார்
மாநில பொருளாளர், பு.ஜ.தொ.மு

மக்களைக் கொல்லும் மறுகாலனியாக்கத்தை மாய்ப்போம்!

தோழர் காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க

**************************************

தொடர்புக்கு :

தோழர் அ.முகுந்தன், 110, 2ம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம்,  63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை – 24.

தொ.பே:  94448 34519

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி

திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டங்கள்,ஆவடி – அம்பத்தூர் பகுதி

*************************

தொடர்புடைய பதிவுகள்:

மாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

ஏழை ‘இந்து’ மாணவருக்காக பணக்கார ‘இந்து கல்வி வள்ளல்களி’டம் போராடலாமே?

ழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை மறைமலை நகரில் மூன்று நாள் உண்ணா விரதப் ‘போராட்டத்தை’ ‘வெற்றிகரமாக’ நடத்தியிருக்கிறார். இந்தக் கோரிக்கையின் உட்பொருள் என்ன?

” மத அடிப்படையில் கல்வி வழங்கக் கூடாது என்று அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களில் ஜாதி இருப்பது போல், முஸ்லீம் மற்றும் கிறித்தவ மதங்களில் ஜாதியில்லை. ஆனால், அந்த மதங்களுக்குள்ளும் ஜாதியை உருவாக்கி, இந்து மாணவர்களின் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து சிறுபான்மையினருக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். ‘ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’ என்று இந்துக்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு, சிறுபான்மையிர் ஓட்டுக்களைப் பெற, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு இது போன்ற சலுகைகளை உருவாக்கி வழங்கி வருகிறது”. குமுதம் ரிப்போர்ட்டரில் பொன். ராதாகிருஷ்ணன் அளித்திருக்கும் விளக்கம் இது.

பொன்-ராதாகிருஷ்ணன்

 

இந்துக்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடும், மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு உதவித் தொகைகளும் ஏற்கனவே வழங்கப்படும் நிலையில் காவிக் கும்பல் கோரும் ஏழை இந்து  மாணவர்கள் யார்? வெளிப்படையாக பார்ப்பன – ‘மேல்’ சாதி மாணவர்கள் என்று கேட்க வேண்டியதுதானே? அதன்படி இந்துக்கள் என்றால் பார்ப்பன – மேல்சாதியினர் மட்டும்தான் என்றாகிறது.

அடுத்து முசுலீம்கள், கிறித்தவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குரிய சலுகை கிடையாது என்பதால் உண்மையில் அம்மதங்களில் இருக்கும் பல்வேறு பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இது காவிக் கும்பலுக்கு பொறுக்கவில்லை. சிறுபான்மை இன மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக் கூடாது என்று கோருவதை இப்படி ஏழை இந்து மாணவர்களுக்கு உதவி வழங்கு என்று கோல்மால் பாசிச அரசியல் மொழியில் கேட்கிறார்கள் இந்து மதவெறியர்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை மருகள் தாலி அறுக்க வேண்டும் என்ற கொலைவெறிதான் காவிக் கும்பலின் ஒரிஜினல் வெறி.

தமிழகத்தின் அரசியல் அநாதையாக ஓரம் கட்டப்பட்டிருக்கும் பா.ஜ.க ஏதாவது செய்து செல்ஃப் எடுக்க முடியுமா என்று போராடுகிறது. கடைசியில் சென்னையில் மூன்று நாள் கூத்துக்கு அனுமதியில்லை என்று மறைமலை நகரில் டேரா போட்டு, ஊடகங்களுக்கு ஃபோட்டோ கொடுத்து இந்த காமடி ஷோ முடிந்திருக்கிறது.

போகட்டும். ஏழை இந்து மாணவர்களுக்கு உதவச் சொல்லி தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிகளை நடத்தும் இந்து கல்வி வள்ளல்களை கேட்டால் மேட்டரை சடுதியில் முடிக்கலாமே? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்காக ஏன் அலைய வேண்டும்? தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகளின் பெரும்பான்மை முதலாளிகள் இந்துக்கள்தானே? அந்த இந்துக்கள் பேர்பாதி கல்லூரி சீட்டுக்களை கட்டணமின்றி இந்து மாணவர்களுக்கு வழங்குமாறு செய்ய வேண்டியதுதானே?

குறைந்தபட்சம் நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்துக்கல்லூரியிலாவது இந்த கோரிக்கையை நிறைவேற்ற பொன் ராதாகிருஷ்ணன் முயலலாமே? முயன்றால் இந்து மதவெறியர்களை ஒழிக்கும் வேலையினை இந்து கல்வி  முதலாளிகளே பார்த்துக் கொள்வார்கள்!

**********

முதல் பதிவு: வினவு செய்திகள்