• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

அரசு பள்ளிகளில் கண்கானிப்பு கேமரா: மாணவர்களா? குற்றவாளிகளா?

இதுவரை தனியார் பள்ளிகளில் மட்டுமே கண்கானிப்புக் கேமரா பொருத்தப்பட்டு மாணவர்களை கண்கானிப்பது என்ற பெயரில் டார்ச்சர் செய்வது, தண்டனை கொடுப்பது என்பது இருந்து வந்தது. தற்போது திருவான்மியூர் அரசு பள்ளியில் கண்கானிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாணவர்கள் கண்கானிக்க தொடங்கிவிட்டனர். இது குறித்த தி இந்து பத்திரிக்கையில் வந்த செய்தி இதோ: Big Brother or benign eye? CCTV debate rages on

எதுக்கு கேமரா என்று கேட்டால்   ‘குற்றத்தை தடுக்கிறோம்’ என்ற வழக்கமான பல்லவியை பாடத்தொடங்கி விடுகின்றனர். மனிதனை பண்படுத்துவது தான் கல்வி. அந்த கல்வியை மாணவனுக்கு அளிக்கவேண்டிய கல்வி நிலையங்கள் எப்படி குற்றம் நடக்கும் இடமாக மாறமுடியும்?

 மேலும் ஹிந்து பத்திரிக்கை செய்தியில் ஒரு ஆசிரியர் கூறியிருப்பது போல தவறு செய்யும் மாணவனை கேமரா எப்படி தடுக்கும்? அம்மாணவனின் பெற்றோரை வரவழைத்து அவர்கள் மகன் செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க நிரூபிக்கும் சாட்சியாகத்தான் பயன்படுத்த முடியும்.

 வீட்டுவாடகைக்கு குடியிருப்போர்கள் அனைவரையும் ‘தகவல் திரட்டுவது’ என்ற பெயரில் குற்றவாளிகள் போல சித்தரிக்க காவல்துறை முற்பட்டதைப் போல மாணவ்ர்கள் என்றாலே தவறு செய்பவர்கள் என சித்தரிக்கவே இந்த கண்கானிப்பு கேமரா. இதுவரை தனியார் கல்வி முதலாளிகள் தங்கள் தரமான கல்விக்கு’ உதாரணமாக காட்டிய கேமராவை அதே வழியில் பயன்படுத்தி மாணவர் சமூகத்தை குற்றாவாளி கூண்டில் ஏற்றும் அரசின் முயற்சியை தொடக்கத்திலேயே கிள்ளி எறிய போகிறோமா? இல்லை குற்றவாளி கூண்டில் நிற்கப்போகிறோமா? என்பது தான் மாணவர்களாகிய நமது முன் உள்ள கேள்வி.

தொடர்புடைய பதிவுகள்

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்சினையை கல்வி நிறுவனங்களின், பாடத்திட்டத்தின் பிரச்சினை என்று மட்டும் பார்ப்பதை விட ஒரு மாணவன் வளரும் சமூக சூழ்நிலையை ஆய்வு செய்வது தேவையாக இருக்கிறது. அந்தச் சூழல் எப்படி ஒரு வன்முறை மனோபாவத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது என்பதை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது. பொருத்தம் கருதி அதை மீள் பிரசுரம் செய்கிறோம்.
– வினவு

ஜெர்மனியில் திம் கிரெட்ஷ்மெர் என்ற 17 வயது மாணவன் தனது முன்னாள் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்து பதினைந்து பேரைக் கொன்றுவிட்டு பின்னர் போலீசுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறான். விடலைப் பருவத்து பள்ளி மாணவர்கள் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு சக மாணவர்களை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடப்பதைக் கேள்விப் பட்டிருப்போம். அமெரிக்கா அளவுக்கு இந்தியாவில் துப்பாக்கிகள் இன்னமும் மலிவாகிவிடவில்லை என்றாலும் தனிநபரை முன்னிறுத்தும் அமெரிக்க பாணி வாழ்க்கைமுறை இங்கேயும் வளர்ந்து வருகிறது.

அப்படி மாறிய மாணவர்கள் சிலர் துப்பாக்கியுடன் செய்த வன்முறைகளை இந்தக் கட்டுரை ஆய்வு செய்கிறது. இன்றைய கல்வி, மொழி,  வாழ்க்கை, நுகர்வு பொருட்கள் அத்தனையும் மாணவர்களிடன் பொறுமையற்ற மனநிலையை உருவாக்குவதோடு, சமூக உணர்வை குன்றச் செய்வதையும் பார்க்கிறோம். ஆடம்பர வாழ்க்கை குறித்த நாட்டம், எப்படியும் முன்னேற வேண்டுமென்ற வெறி, சமூக மதிப்பீடுகளை மாற்றச் செய்யும் சுற்றுச்சூழல், எல்லாம் சேர்ந்து விடலைப்பருவத்தினரை சமூகத்திற்கு எதிரான பதட்டமுடைய தனிநபர்களாக மாற்றுகின்றது.

இந்தக் கட்டுரை நோயை மட்டும் ஆராயவில்லை. இந்த நோய்க்கு என்ன மருந்து அத்தியாவசியம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது. விடலைப் பருவத்தினரை எந்த அளவு சமூகமனிதர்களாக மாற்றுகிறோமோ அந்த அளவு அவர்களது வன்முறையை தணித்து நல்ல குடிமக்களாக உருவாக்க முடியும்.

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்

சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள்.

சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்துவர். இம்மாணவனை கன்னட வழி வகுப்பில் படிக்கும் இரு மாணவர்கள் கேலி செய்தார்களாம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவன், வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பள்ளி முடிந்து வரும் அந்த இரு மாணவர்களையும் துப்பாக்கியால் சுடுகிறான். இருவரும் சாகவில்லை என்றாலும், காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

சம்பவம் 3. உத்திரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம் மெத்னாரா கிராமத்தைச் சேர்ந்த அதர் சிங் +2 படிக்கும் மாணவன். உடன் படிக்கும் விபன் எனும் மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். “தங்கையை கேலி செய்யாதே எனப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் விபனைச் சுட்டுக் கொன்றேன் ” என அதர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் 4. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு நகரம். அங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் +2 படிக்கிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஞ்சித், புது மட்டை வாங்குவதற்கு பெற்றோர்களை நச்சரித்துப் பணம் வாங்குகிறான். லோகநாயகி என்ற வயதான பெண்மணி நடத்தும் விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்துக்கு செல்லும் ரஞ்சித், அங்கு பல மட்டைகளைப் பார்த்தும் திருப்தியடையவில்லை. தனது நேரத்தை வீணடிப்பதாக அவனிடம் லோகநாயகி நொந்து கொள்கிறார். இதை ஒரு பெரிய அவமானமாக எடுத்துக்கொண்ட ரஞ்சித், அந்தப் பெண்மணியைப் பழிவாங்க நினைக்கிறான். அவனது தாத்தா கந்தசாமி, தி.மு.க.வில் இரு முறை சட்டமன்றப் பதவிக்குப் போட்டியிட்டவர். வீட்டில் ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்ட ரஞ்சித், இருநாட்கள் கழித்து லோகநாயகி அம்மாளைச் சுட்டுப் படுகாயப்படுத்துகிறான். அந்தப் பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

இந்நான்கு சம்பவங்களும், கடந்த சில மாதங்களில் நடந்து பத்திரிக்கைகளில் பதிவானவை. மாணவர் மத்தியில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற நாடு அமெரிக்காதான். கடந்த பிப்ரவரி மாதத்தில் இல்லினாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் சுட்டு, 5 மாணவர்கள் இறந்திருக்கின்றனர். இந்த அமெரிக்கப் பாணி வன்முறை இந்தியாவிலும் வந்து விட்டதா என்று சிலர் அதிர்ச்சியடையலாம். வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அத்தனையும் அமெரிக்கமயமாகி வரும் போது, வன்முறை மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்கா அளவுக்கு இங்கே துப்பாக்கிகள் மலிவாகப் பரவவில்லையே தவிர, வன்முறை அதன் தன்மையளவில் மாணவர்களிடையே சமீப காலமாகப் பரவித் தான் வருகிறது.

இது சமூக அநீதிக்கு எதிராகக் கலகம் செய்யும் மாணவப் பருவத்திற்கேயுரிய போராட்ட வன்முறையல்ல; ஆடம்பரத்திற்காகவும், அற்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் துப்பாக்கி எடுக்கும் தனிநபர் வன்முறை. மேற்கண்ட சம்பவங்களில் வன்முறையின் கருவி துப்பாக்கியாக இருப்பதினாலேயே போலீசும், பத்திரிக்கைகளும் விசேடமாகப் பார்க்கின்றன. உண்மையில் துப்பாக்கியல்ல பிரச்சினை. விடலைப் பருவத்தின் வன்முறை மனோபாவம்தான் பிரச்சினை.

2006 டிசம்பர் மாதத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொல்லப்படுகிறான். புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பணமில்லாததால், அரவிந்தை  பணையக் கைதியாகக் கடத்தி, அவனுடைய அப்பாவிடமிருந்து தேவைப்பட்ட பணத்தைக் கறந்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். திட்டம் குளறுபடியாகி, அம்மாணவன் கோரமாகக் கொல்லப்படுகிறான். இதே காலத்தில் ஆடம்பர, கேளிக்கை வாழ்விற்காகப் பணம் திரட்ட நினைத்த மூன்று ஏழை மாணவர்கள், ஒரு நகைக் கடையைக் கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்டார்கள்.

இப்படிப் பரபரப்பிற்காகப் பத்திரிகைகளில் வெளிச்சமிடப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இவை எங்கோ ஒரு வீட்டில் நடப்பதாகவும், நம் வீட்டில் பிரச்சினையில்லை என்று பல பெற்றோர்கள் சுயதிருப்தி கொள்ளலாம்.  வன்முறையின் கடும் தருணங்கள் இங்குதான் வெடிக்கவேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்வதில்லை. அவை எங்கும் எப்போதும் நடக்கலாம். அதற்குத் தோதாக விடலைப் பருவ மாணவ வாழ்க்கை தயாராகி வருகிறது. அதில் நம் வீட்டுப் பையனும் இருக்கிறான் என்பதைப்  பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.

ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்ததை விட, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. முன்பு ஆடம்பரமாகக் கருதப்பட்டவை, இன்று அத்தியாவசியமானவையாக மாறிவிட்டன. எல்லா வேலைகளுக்கும் நவீனக் கருவிகள்; அது போக வேலையாட்கள், குளிர்பதனக் கருவி, கார், இருசக்கர வாகனங்கள், செல்பேசிகள், பீட்ஸா, பர்கர் என்று மாறிவிட்ட உணவுப் பழக்கம், குடும்ப உறுப்பினராக மாறிவிட்ட தொலைக்காட்சி, வார இறுதியில் எல்லையில்லா கேளிக்கைகள் …

இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவரும் புதிய பொருளாதாரக் கொள்கைதான், நடுத்தர வர்க்கத்தை இப்படியொரு ‘மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள்’ பிடித்துத் தள்ளியிருக்கிறது. மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக  மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து செய்துவிட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?

வன்முறை கற்றுத்தரும் கார்ட்டூன் தொடர்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்குழந்தைகளுக்கு விருப்பமான கார்ட்டூன் சேனல்கள் இன்று தமிழிலேயே வந்து விட்டன. பள்ளிக் கல்விக்கு ஆங்கிலமும், பொழுது போக்குவதற்கு மட்டும் தமிழ் என்பது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். குழந்தைகள் மனதை தாய்மொழியில்தான் கொள்ளை கொள்ள முடியும் என்பது அந்தச் சேனல்களைச் சந்தைப்படுத்தும் முதலாளிகளுக்குத் தெரியும்; சுட்டி டி.வி.யையும், தமிழ் ஜெட்டிக்ஸையும் சிறார்கள் நீண்ட நேரம் வெறித்துப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்ப்பதற்காகவே விரும்பிக் காத்திருக்கிறார்கள். அதற்காகவே வீட்டுப் பாடத்தை விரைந்து முடிக்கிறார்கள். அவர்களது கற்பனை உலகை கார்ட்டூன்களும், யதார்த்த உலகை கார்ட்டூன்களுக்கு இடையில் வரும் விளம்பரங்களும் கட்டியமைக்கின்றன. ஆசை தோற்றுவிக்கும் ஏக்கத்திற்கும், அது நிறைவேற தடையாக இருக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த மாய உலகின் முரண்பாட்டில்தான் இளம்பருவத்து மாணவர்கள் உலவுகிறார்கள்.

பவர் ரேன்ஜர்ஸ் அவர்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு தொடர். கிராபிக்ஸ் உதவியோடு வண்ணச் சிதறலாகத் தெறிக்கும் இத்தொடரில் அடிப்பது, வெட்டுவது, சுடுவது, வெடிப்பது எல்லாம் நொடிக்கொரு தடவை நடக்கிறது. நமக்கு ஓரிரு நிமிடங்களில் சலித்துப் போகும் இத்தொடர், அவர்களுக்குச் சலிப்பதில்லை. கிராஃபிக்ஸ் இல்லாமல், நிஜத்தில் மாமிச மலைகள் மோதும் டபிள்யூ.டபிள்யூ. எஃப் மல்யுத்தச்  சண்டைகளும் ஜெட்டிக்சில் காண்பிக்கப்படுகின்றன. வகை தொகையில்லாமல் மனிதர்கள் அடித்துக் கொள்ளும் இந்த வன்முறைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

சக மனிதன் அடிபட்டாலோ, இரத்தம் சிந்தினாலோ, இறந்து போனாலோ அதிர்ச்சியடைவது மனித இயல்பு. சிறார்களின் உலகில், இந்த உள்ளார்ந்த மனித மதிப்பீடுகள் நமத்துப் போகின்றன. வன்முறை குறித்த இரக்கமோ, பயமோ இல்லாதது மட்டுமல்ல, அவர்களே அதைச் செயல்படுத்துபவர்களாகவும் மெல்ல மெல்ல மாறுகிறார்கள். அற்பப் பிரச்சினைகளாக இருந்தால் கூட, அதை வன்முறை மூலம் தீர்த்துக்கொண்டு இறுதி வெற்றி அடையவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். விளைவறியாத இளங்கன்றுகளாக இருப்பதால், இத்தகைய வன்முறை அவர்களது ஆளுமையின் அங்கமாகிறது.

விலங்குகளையும் இயற்கையையும் நேரில் கண்டு கற்கவேண்டிய வயதில், மிக்கி மவுசின் பொருளற்ற வேடிக்கைகளில் காலந்தள்ளுகிறார்கள் சிறார்கள். அதிலும் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்படும் கார்ட்டூன் தொடர்கள், இப்போது அருகி வருகின்றன. சண்டைக் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் அதிதீவிர வீரர்களின் தொடர்களே இன்று பெருகி வருகின்றன. இவற்றின் வன்முறைக்கு ஒத்திசைவான விதத்தில் இடையில் வரும் விளம்பரங்களும் குழந்தைகளைப் போட்டுத் தாக்குகின்றன. பெரியவர்களுக்கு வேண்டுமானால் விளம்பரங்கள் மீது சலிப்பு வரலாம். சிறியவர்களுக்கு அவைதான் பாலபாடம்.

விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத் தவறுவதில்லை. விளம்பரங்கள் செதுக்கித்தரும் ‘மகிழ்ச்சியான குடும்பம்’ உண்மையில் ஒரு கற்பனைதான் என்றாலும், அந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகச் சிறுவர்கள் ஏங்குகிறார்கள். இயற்கையின் இயக்கத்தையும், சமூகத்தின் போராட்டத்தையும் அறிய வேண்டிய இளம் பருவம், இத்தகைய செயற்கையான, சுயநலம் மிகுந்த, ஆடம்பரமான கற்பனை உலகத்தில் வெம்பி வாடுகிறது. பஞ்சில் பழுத்த மனம், தான் காணும் தொலைக்காட்சி வாழ்க்கை கிடைக்காத போது வன்முறையின் பக்கம் எளிதாக நகருகிறது.

சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது, எது வாங்கினால் எது இலவசம், எதற்குத் தள்ளுபடி, எந்தக் கடையில் என்ன கிடைக்கும் முதலான நுகர்வுக் கலாச்சார பொது அறிவில், குழந்தைகள் பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள். அவ்வகையில் முதலாளிகளின் விளம்பரங்களுக்கு பிரச்சார பீரங்கிகளாக சிறுவர்களே விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு புதிய பொருளை வாங்க வேண்டுமென்ற போராட்டம், அநேகமாக சிறியவர்களிடமிருந்துதான் துவங்குகிறது.

வானவேடிக்கை போல விளம்பரங்களை வாரி இறைக்கும் இன்றைய முதலாளித்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான நுகர்வுக் கலாச்சாரம், தன்னளவிலேயே ஒரு வன்முறையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதிய செல்பேசி, கார், தொலைக்காட்சி முதலானவை அறிமுகமாகும் போதும் அவற்றின் பழைய மாடல்களை வைத்திருப்பவர்களிடம், ஒரு பதட்டம் பற்றிக் கொண்டு விடுகிறது. புதியதை வாங்கும் வரை, மனம் அமைதியடைவதில்லை. பங்குச் சந்தை குறியீட்டெண் போல, ஒவ்வொரு புதிய விளம்பரமும் இந்த மெல்லிய வன்முறையின் அளவைக் கூட்டுகிறது. இதில் சிக்கியிருக்கும் பெரியவர்களின் கதியே இதுவென்றால், சிறியவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

விளம்பரங்களின் வழியாக மனதில் பதியும் புதிய பொருளை வாங்க வேண்டுமென்று சிறார்கள் அடம் பிடிக்கிறார்கள்; சண்டை போடுகிறார்கள். வகுப்புத் தோழர்களிடம் அற்பவிசயங்களுக்காக எழும் பொறுமையின்மைக்கான அரிச்சுவடி, இதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவ்வகையில் சகிப்புத் தன்மையற்ற மனநிலையை நுகர்வுக் கலாச்சாரம் கற்றுத் தருகிறது. நச்சரிப்பு தாங்காத பெற்றோர்களும், கேட்டதை வாங்கித் தருகிறார்கள். பிடிவாதம் பிடித்தால் நினைத்ததை வாங்கிக் கொள்ளலாம் என்பதைக் குழந்தைகள் தமது சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள். இந்தப் பிடிவாதம்தான் வன்முறையின் துவக்கப்புள்ளி என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.

“இந்த உலகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்” என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை  ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய “சரியான அணுகுமுறை. மாறாக “இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம், உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி”, என்று குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். இப்படிச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் சிறுவர்களிடம்தான் பொறுமையின்மையும், கோபமும், பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்கின்றது. இந்த எதிர்மறைப் பண்புகளின் விளைவு குறித்து இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் இவர்கள் யாருக்கும் அடங்குவதில்லை.

ஆனால் இவர்களின் பல தவறுகள் பெற்றோரால் மன்னிக்கப்படுகின்றன. நிகழ்காலத்தில் கண்டிக்கப்படாத தவறுகள், எதிர்காலத் தவறுகளுக்கான ஊக்கசக்தியாக மாறிவிடுகின்றன. துப்பாக்கியால் சக மாணவனைச் சுடுவதென்பது, நிச்சயம் அவர்களது முதல் தவறாக இருந்திருக்க முடியாது. துப்பாக்கி வெடிப்பதற்கு முன்பே வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள் அவர்களிடம் வெடித்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இன்னொன்று என்று, அந்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டைப் பற்றி அலட்சியமாகக் கருதியிருக்க வேண்டும். அல்லது,  அப்பொதெல்லாம் தங்களைக் காப்பாற்றியிருக்கும் பெற்றோர்கள் இப்போதும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களை இந்த எல்லைக்கு கொண்டு வந்திருக்கக்கூடும்.

செல்பேசி,  இணையத்தில் சீரழியும் மாணவர்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் அளவிற்குக் கூட, இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்ப்பதில்லை. அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தால் பிரச்சினை முடிந்து விடும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி சென்றால்தான் அதிகபட்சமாக சைக்கிளோ, கைக்கடிகாரமோ கிடைத்தது. இன்றோ பள்ளியிறுதியாண்டுகளிலேயே இருசக்கர வாகனம் மாணவர்களின் கனவாகி விட்டது. முக்கியமாக செல்பேசி வைத்திருப்பது, மாணவ நாகரீகத்தின் அளவு கோலாகப் பரவி வருகிறது.

ஆளும்வர்க்கத்தின் கலாச்சாரத் தாக்குதலுக்கு முக்கியமான படைக்கலனாக இருக்கும் செல்பேசி, மாணவ சமுதாயத்தை சீர்குலைப்பதற்கு கச்சிதமான கையடக்கக் கருவியாகும். ஒரு புதிய செல்பேசியிலிருக்கும் தொழில்நுட்ப சாத்தியங்கள், பெரியவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை. சிறியவர்களே அதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள். செல்பேசி நிறுவனங்களும், மாணவர்களுக்கென்றே சிறப்புத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றன. அதில் தவறாமல் இலவசக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி நூற்றுக்கணக்கில் இருக்கும். நாட்டு நடப்பு குறித்து செய்தித்தாள்களின் பக்கம் தலையெடுத்தும் பார்க்காத மாணவர்கள், குறுஞ்செய்தி அரட்டைகளில் மூழ்குகின்றனர். கடி ஜோக்ஸ், காதலர் தினம் என்று ஆரம்பித்து, இறுதியில் பாலுறவு விரசங்களில் மூழ்குகின்றனர்.

சென்ற ஆண்டு, டெல்லியில் தன் வகுப்பு மாணவியுடன் உறவு கொண்டு, அதை காமரா செல்பேசியில் படம்பிடித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான், ஒரு மாணவன். இத்தகைய வக்கிரக் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகுவேகமாகப் பரவி வருகிறது. பார்க்கும் பெண்களை ஆபாசக் கோணத்தில் படம்பிடிப்பதும், பரப்புவதும் ஒரு பொழுது போக்காக நிலை பெற்று விட்டது.  இத்தகைய படங்களை கட்டணம் வாங்கிக் கொண்டு பதிவுசெய்து தருவதற்கென்றே பல இணையத்தள தரகர்கள் இருக்கின்றனர். மேலும் இன்று இணையத்தள மையங்கள் அனைத்தும் மாணவர்களை நம்பியே நடத்தப் படுகின்றன. இணையத்தில் உலாவுவதற்கு வீட்டில் கணினி இருக்க வேண்டிய அவசியமில்லை. பத்து ரூபாயில், பலான விசயங்களை டன் கணக்கில் மேய்ந்து விடலாம். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடற்று, இந்த நச்சுப் பண்பாடு கைக்கெட்டிய தூரத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கிறது, என்பதுதான் முக்கியமானது.

விடலைப் பருவத்தில், பாலியல் உறுப்புகள் முதிர்ச்சி அடையும் வயதில், செக்ஸ் என்பது ஒரு புகைமூட்டம் போல மர்மமாய்க் கவிந்திருக்கும் சூழல் இன்று இல்லை. பாலியல் உணர்வில் கட்டுப்பெட்டித்தனம் கொண்டிருந்த இந்திய மனநிலையின் மடையை, இணையத்தின் வெள்ளம் உடைத்திருக்கிறது. திருமணத்துக்கு முந்தைய உறவு மாணவர்களிடம் வேகமாக வளர்ந்து வருவதாக, பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டிகின்றன. இதற்குத் தீர்வாக, மாணவர்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று பல கல்வியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு ஆணுறை போடுங்கள் என்பது போலத்தான் இதுவும். இதனால் பாலியல் கல்வி வேண்டாம் என்பதல்ல. ஆனால் பிரச்சினைக்கு அது தீர்வல்ல. சொல்லப் போனால் மாணவப்பருவத்தில்தான் கட்டுப்பாடுகள் மிக அவசியம். அறியாக் குழந்தை கண்டதையும் வாயில் போடும்போது, சிறிது அடித்துத் திருத்துவதில் என்ன தவறு இருக்கிறது?

வளரும் பருவத்தை வலிமையாக்கும் கட்டுப்பாடு!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்அப்படி ஒரு கட்டுப்பாட்டை, அதாவது கல்லூரி வளாகத்தில் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்று அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்திய போது, பத்திரிக்கைகளும், முற்போக்கு முகாமும் ஆவேசத்துடன் அதனைக் கண்டித்தன. இது சுதந்திரத்துக்கும், தனிநபர் உரிமைக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று  வாதிட்டார்கள். அமெரிக்க மாணவர்களிடையே வன்முறையை நிறுத்துவதற்கு துப்பாக்கி வியாபாரத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது,  ஜனநாயக உரிமையின் பெயரால்தான் அது அங்கே நிராகரிக்கப்பட்டது.

இந்த வாதங்களில் ஒரு வெங்காய ‘உரிமை’யும் உண்மையில் இல்லையென்பது ஒருபுறமிருக்க, இந்த உலகமே கட்டுப்பாட்டில்தானே இயங்கி வருகிறது? ஒரு தொழிலாளிக்கு சீருடை அணிய வேண்டும், குறித்த நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும், குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில்தான் மதிய உணவு அருந்த வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இல்லையா? பல அலுவலகங்களிலும் செல்பேசியில் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களே, இதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? விதியின் பெயராலும், நடைமுறை ரீதியிலும் உழைக்கும் வர்க்கத்தின் மீது ஆயிரம் கட்டுப்பாடுகள் வைத்திருக்கும் முதலாளித்துவம், சமூகத்தில் சீரழிவுக் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கு மட்டும் தனக்கு சுதந்திரத்தைக் கோருகிறது.

வீட்டிலும், பள்ளியிலும் கட்டுப்பாடு இல்லாத மாணவர்கள்தான், வன்முறை எண்ணம் கொண்டவர்களாகத் தலையெடுக்கின்றனர். விடலைப்பருவ உளவியலின் காரணமாகப் பெற்றோருடனும், சூழலோடும் முரண்படுகிறார்கள். மாணவர்களின் உடல் மாற்றத்திற்கேற்ப நடக்கும் இந்த உளவியல் வெளிப்பாடுகளை, மேற்கண்ட நச்சுக்கலாச்சாரம் ஊதிப் பெருக்குகிறது. இதனால் தனிமைப்படும் மாணவர்களைத்தான் வன்முறை எண்ணம் தின்று சீரணிக்கிறது. மாணவர்களை உடலுழைப்பிலும், விளையாட்டிலும் ஈடுபடுத்துவதுதான் இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்குரிய வழி. ஆனால் அந்தச் சூழல் நமது கல்வி முறையிலோ, பண்பாட்டிலோ இல்லை.

வளரும் சிறுவருக்கு உடலுழைப்பு அவசியம்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இளம் மாணவர்களின் வயதினையொத்த சிறார்கள், நாடெங்கிலும் இலட்சக்கணக்கில் உதிரித் தொழில்களில் ஈடுபடுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் உழைப்பைத் தடை செய்ய வேண்டும் என இவர்களது வாழ்க்கை குறித்து கவலைப்படுவது தொண்டு நிறுவனங்களின் நாகரீகப் பணியாக இருக்கிறது. படிக்கவேண்டிய வயதில் இவர்களை இவ்வேலைகளுக்கு அனுப்பியது பெற்றோர்களின் குற்றமெனத் தொண்டு நிறுவனங்கள் சாதிக்கின்றன. உண்மையில் பணமில்லாதவனுக்கு எதுவுமில்லை என இந்தச் சமூக அமைப்பை மாற்றியஅரசும், ஆளும் வர்க்கங்களும்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, இக்குழந்தைகள் விடலைப் பருவச் சேட்டைகளையோ, வன்முறைகளையோ செய்வதில்லை. தேநீர்க்கடைகளில் குவளை கழுவும் சிறுவனோ, ஓட்டலில் மேசை துடைக்கும் சிறுவனோ இத்தகைய வன்முறை வெறிக்குப் பலியாவதில்லை. சமூகத்துடன் யதார்த்தமான உறவில் இருக்கும் இச்சிறுவர்கள், பண்பையும் முதிர்ச்சியையும்தான் பழகிக் கொள்கின்றனர்.  வயதுக்கு மீறிய அதீத உழைப்புதான், இவர்களைப் பின்னாளில் உதிரிக் குணம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. அப்போதும்கூட இவர்கள், சமூகத்தின் மீது வன்முறை செலுத்தும் மேட்டுக்குடிப் பொறுக்கிகளைப் போல மாறுவதில்லை.

ஆம். மாணவர்களை குறிப்பிட்ட அளவில் உடலுழைப்பில் ஈடுபடுத்துவதன் மூலமே, அவர்களது பருவப் பிரச்சினைகளைக் கடந்து ஒரு சமூக மனிதனாக வளர்க்க முடியும். கோடை விடுமுறையில் சிறுவர்களை சிறு பட்டறைகளுக்கோ, இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கோ,  கட்டிட வேலைக்கோ, விவசாய வேலைக்கோ அனுப்பினால், பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்களாகப் புடம் போடப்பட்டு வருவார்கள். உடலுழைப்புடன் கூடிய சுயமதிப்புடன் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டுடன் பணியாற்றுவதன் மூலமே இச்சமூகத்தின் அங்கத்தினன் என்ற தகுதியைப் பெறமுடியும் என்பதைத் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து புரிந்து கொள்வார்கள்.

ஆனால் நடுத்தர வர்க்கமோ தங்களது செல்வங்களை டென்னிசுக்கும், கணினிப் பயிற்சிக்கும், பாட்டு வகுப்பிற்கும் அனுப்பி நம்பர் 1 ஆக்குவதற்கு மட்டுமே மனப்பால் குடிக்கிறது. இது மாணவர்களுக்கு தனிநபர் வாதத்தையும், சுயநலத்தையும், காரியவாதத்தையும் கற்றுத் தருகின்றதே ஒழிய, நல்ல குடிமகனாக்குவதில்லை. மேலும் கடுமையான போட்டிகள் நிறைந்த இக்காலட்டத்தில், தோல்வி குழந்தைகள் மனதை ரணமாக்குகிறது. விஜய் டி.வி.யின் பாட்டுப் போட்டியில் தோல்வியுற்றதால் வெளியேற்றப்பட்ட குழந்தைகள் அழுவதைப் படம்பிடித்துக் காண்பிப்பதை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.

வளரும் குழந்தைகளுக்கு கலைத்திறமைகளை கற்றுத்தருவதை விட, அவர்களை மக்களின் பால் பற்று கொண்ட நன்மக்களாக மாற்றுவதே அத்தியாவசியமானது. உண்மையில் அவர்களது வன்முறை எண்ணத்தை மடைமாற்றும் சூட்சுமம், இதில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால் நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்கு, உடலுழைப்பு அறவே கிடையாது. எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. இது போக வேலையாட்கள்! பெற்றோர்கள் பணியாட்களை மிரட்டுவது போல பிள்ளைகளும் செய்கிறார்கள். குறைந்த பட்சம் தன்னைப் பராமரித்துக் கொள்வதைக் கூட இக்குழந்தைகள் செய்வதில்லை. பெற்றோரும் விரும்புவதில்லை. தான் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்கோ, உடுத்தும் உடையைத் துவைப்பதற்கோ பழகிக் கொள்ளாத ஒரு சிறுவன்தான், இந்த உலகம் தனக்காகப் பணிசெய்ய படைக்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறான். இந்த அணுகுமுறையில் நெருடல் வரும்போது, தவிர்க்கவியலாமல் வன்முறையின் பக்கம் நகர்கின்றான்.

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்

அருகும் விளையாட்டு அரிக்கும் வீடியோ விளையாட்டு!

உடலுழைப்புக்கு அடுத்த படியாக குழந்தைகளுக்குத் தேவைப்படுவது, வியர்க்க விறுவிறுக்க விளையாடப்படும் விளையாட்டு. மனம் விரும்பிச் செய்யப்படும் இவ்வுழைப்பில்தான் அவர்கள் வளருவதற்கேற்ற வலிமை உடலுக்கும், உள்ளத்திற்கும் கிடைக்கிறது. குழுரீதியான உணர்வு பெறுவதற்கும், சண்டையுடன் கூடிய நட்பு அரும்புவதற்கும், வெற்றி தோல்விகளையெல்லாம் சகஜமாக எடுத்துக் கொள்வதற்கும், பாடங்கள் கற்பதற்கேற்ற உற்சாகத்தைப் பெறுவதற்கும், விளையாட்டு அவசியமாகிறது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் துருத்தி நிற்கும் நகரங்களில், மைதானங்கள் காணக் கிடைப்பதில்லை. பல்லாயிரம் ரூபாய்களைக் கட்டணங்களாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும், விளையாட்டுத் திடல்கள் போதுமானதாக இல்லை. மாணவர்களும் இந்திய அணி ஆடும் சமயங்களில் மட்டும் கிரிக்கெட் ஆடுவதைத் தவிர, விளையாட்டில் விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை.

இந்த இடத்தை மாணவர்களால் பரவலாக விளையாடப்படும் வீடியோ விளையாட்டு எடுத்துக் கொள்கிறது. இணையத் தள மையங்களில் பாலுறவு விசயங்களுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் விரும்புவது இந்த எந்திர விளையாட்டைத்தான். வியர்வைத் துளிகளுக்கு வேலை கொடுக்காமல், மூளையை அரிக்கும் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடும்போது மாணவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள்.

இந்தப் போதையிலிருந்து மீள்வது சிரமம் என்பதோடு, இது ஏற்படுத்தும் உளவியல் கோளாறுகள் அதிகம். கற்பனையான உலகில் கற்பனையான வெற்றிக்காக மணிக்கணக்கில் ஆடும் மாணவர்கள், அதீத உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இந்த உணர்ச்சிச் சமநிலைச் சீர்குலைவு வன்முறைக்குப் பொருத்தமான சமன்பாட்டைக் கொண்டிருக்கிறது.

விளையாடி முடித்ததும் ஏற்படும் சோர்வு நிஜ உலகோடு கொண்டுள்ள உறவைச் சோர்வுக்குள்ளாக்குகிறது. இந்தச் சோர்விலிருந்து வாழ்வின் பிற அம்சங்கள் மீது அளவு கடந்த சோம்பல் உருப்பெறும். கணிப்பொறி விளையாட்டின் மீது ஒன்றி பரவசம் அதிகரிப்பதற்கேற்ப மனித உறவுகளின் மீது நெருடல் அதிகரிக்கிறது. பிரச்சினை வரும்போது அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டிய மூளையின் தன்மை, நேரெதிராக மாற்றப்படுகிறது. வீடியோ விளையாட்டின் வேகம் விரிவடைதற்கேற்ப, நிஜவாழ்வின் பிரச்சினைகளை பரிசீலிக்கும் பொறுமை சுருங்குகிறது.

விதவிதமான உணவு வகை எல்லைமீறும் உணர்ச்சிகள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இப்படி உடலுழைப்பிலும், விளையாட்டிலும் அன்னியப்பட்டுள்ள மாணவர்கள் விரும்பும் மற்றுமொரு விசயம் நவீன உணவு வகைகள். பீட்ஸா, பர்கர், விதவிதமான சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம் வகைகள், பெட்டிக் கடைதொட்டு சரம்சரமாகப் பல வண்ணங்களில் தொங்கும் நொறுக்குத்தீனி பாக்கட்டுகள், உணவகங்களில் கிடைக்கும் பலநாட்டுத் துரித உணவு வகைகள்…. இவையெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்கள் போல, குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்து விட்டன.

குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது சிறார்கள் அடம்பிடித்துச் சண்டையிடுவது இவ்வுணவு வகைகளுக்காகத்தான். வீட்டுச்சமையல் என்பதே இப்படி டப்பா வகை உணவுப் பிரிவுக்கு வேகமாக மாறி வருகிறது. இது பற்றி பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், மருத்துவர்களும் கவலைப்படாமல் இல்லை. ஆனால் அந்தக் கவலை, குழந்தைகள் குண்டாவது குறித்த பிரச்சினையாக மட்டுமே நின்று விடுகிறது.

உண்மையில் இந்த ‘குண்டு’ பிரச்சினை இரண்டாம் பட்சமானதுதான். நவீன உணவு வகைகளில் சர்க்கரையும், உப்பும், கொழுப்பும் மிக அதிகம். ஒரு சிறுவனது உடலில் இம்மூன்றும் திடீரென்று அதிகரிக்கும் போது அது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இப்படி தொடர்ந்து தின்று தீர்க்கும் சிறுவர்கள், அவற்றைச் செலவழிக்கும் உடலுழைப்பு ஏதும் இல்லாததால் எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களாக மாறுகிறார்கள். எல்லா வகை உணர்ச்சிகளும் எல்லை மீறும்போது, அதன் இறுதி நிலை வன்முறையில் தான் முடியும். இதுபோக உடல் பருமனாவதால் சோம்பேறிகளாகவும், மந்தகதிக் குழந்தைகளாகவும் நாட்களைத் தள்ளுகிறார்கள். ஏற்öகனவே அவர்களது வாழ்க்கைச் சூழல் இப்படித்தான் உள்ளது எனும்போது, டப்பா வகை உணவுகள் அந்தச் சூழலை வீரியமாக்குகின்றன. பெற்றோர்களே இந்த நவீன உணவு வகைகளுக்கு அடிமையாகும் போது, குழந்தைகளைக் கடைத்தேற்றுவதற்கு வழியேதுமில்லை.

அரசு பள்ளி நன்மைகள் தனியார் பள்ளி தீமைகள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இந்த நொறுக்குத் தீனிகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், சத்துணவிற்காகவே குழந்தைகள் கோடிக்கணக்கில் அரசுப் பள்ளிகளுக்கு வருவதும் இந்நாட்டில்தான். இன்று அரசுப் பள்ளிகள் முற்றிலும் ஏழைகளுக்கு மட்டுமானவையாக மாறி விட்டன. நகரங்களைப் பொறுத்தவரை, சென்ற தலைமுறைப் பெற்றோர்களில் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளிஅரசுக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அப்போது தனியார் பள்ளிகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருந்தன.

ஏழையும், பணக்காரனும், குறிப்பிட்ட அளவில் சாதிய வேறுபாடுகள் இல்லாமலும், சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் அரசுப் பள்ளிகளில் சங்கமித்தனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களின் வழியாக கிராம வாழ்க்கையைப் பற்றியும், விவசாயத்தின் நிலை குறித்தும் தெரிந்து வைத்திருந்தனர். தனது வர்க்கம் தவிர, ஏனைய வர்க்கங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை அறியக்கூடிய வாய்ப்பை அன்றைய அரசுப் பள்ளிகள் வழங்கின. அதனால்தான் இன்றைய மாணவர்களை விட, சென்றதலைமுறை மாணவர்கள் பொது அறிவிலும், வாழ்க்கை குறித்த யதார்த்தமான கண்ணோட்டத்திலும் மேம்பட்டு விளங்குகின்றனர்.  திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் இந்தப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்தான் தமது அடிப்படையைக் கட்டியமைத்தன.

இன்று வர்க்க முரண்பாடு துல்லியமாகப் பிரிந்து விட்டது. காசு உள்ளவனுக்கு தனியார் பள்ளி மற்றும் சுயநிதிக் கல்லூரி; இல்லாதவனுக்கு அரசுப்பள்ளி. தனியார் மயம் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேட்டைக்காடாக மாற்றிவருகிறது என்ற அநீதிக்கு, குறைவில்லாத பங்கை தனியார் பள்ளிகளும் செய்து வருகின்றன. மேற்கண்ட துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பலரும், இத்தகைய தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள்தான். அரசுப் பள்ளிகள் என்னென்ன நன்மைகளைச் செய்கிறதோ, அவற்றின் நேரெதிர் தீமைகளைத் தனியார் பள்ளிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் செய்து வருகின்றன. இங்கு மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தோரே படிக்க வருகின்றனர். உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கடன் வாங்கியாவது இப்பள்ளிகளுக்கு வந்தாலும், இவர்கள் இங்கே சிறுபான்மையினர்தான். ஆகவே இப்பள்ளிகள் சமூகத்தைப் பிரதிபலிப்பதில்லை. வண்ணமயமான வாழ்க்கையின் வகைகள் இங்கே பரிமாறப்படுவதில்லை. நடுத்தர வர்க்கத்தின் காரியவாத வாழ்க்கை மட்டுமே இங்கு பேசுபொருளாக இருக்கிறது.

சமீபத்தில் சந்தைக்கு வந்த செல்பேசிகள், வாகனங்கள், டி.வி.க்கள், கணினிகள் எவை என்பதுதான் இங்கே மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கல்வி! எதிர்காலத்தில் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ, அமெரிக்கா முதலான இலட்சியங்களை அடையவேண்டும் என்பதை இப்பள்ளிகள் ஊட்டி வளர்க்கின்றன. அவ்வகையில் சுயநலமும், பிழைப்பு வாதமும் மாணவர்களின் நற்பண்புகளாக ஏற்றப் படுகின்றன.

இதனால் போட்டி, பொறாமை, இரக்கமின்மை, முதலிய சொத்துக்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது இலட்சியத்தை அடைவதற்குத் தேவைப்படுகின்றன. எல்லா மாணவர்களும் இக்காரியவாதப் போட்டியில் வெல்லமுடியாது என்பதால் சோர்வும், விரக்தியும், தனிமைப்படுவதும் நடக்கிறது. சில சமயங்களில் அது சமூகத்தின் மீதான கோபமாகவும் வெடிக்கிறது. தன்னிலும் ஆடம்பர வாழ்வைப் பார்த்து ஏங்குவதும், அதை அடைய குறுக்கு வழிகளை நாடுவதும் இயல்பான விசயங்களாக ஏற்கப்படுகின்றன.

முன்னர் கண்ட செல்பேசிஇணையக் கலாச்சாரம், திருமணத்திற்கு முந்தைய உறவு, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பீர் கலாச்சாரம், வீடியோ விளையாட்டு முதலியவற்றிலும், தனியார் பள்ளி மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர். பள்ளி திறக்கும் பருவத்தில் எல்லாத் தனியார் பள்ளிகளும் தங்களது தேர்ச்சி விகிதத்தை விளம்பரமாக வெளியிட்டு பெற்றோர்களை ஈர்க்கின்றன.

அந்த விளம்பரங்களில் கூறப்படாத செய்தி என்னவென்றால், வன்முறை விகிதத்திலும் இப்பள்ளிகள்தான் முதலிடம் வகிக்கின்றன என்பதுதான். சுருங்கக்கூறின் அரசுப் பள்ளிகள் ஒரு மாணவனை நல்ல குடிமகனாக மாற்றும் போது, தனியார் பள்ளிகளோ ஒரு மாணவனை சமூகத்திற்கு விரோதமான தனிநபராய் வளர்க்கின்றன. கல்வியில் தனியார்மயம் நுழைந்ததற்கு, நாம் பெற்றுள்ள சாபக்கேடு இதுதான்.

நடுத்தர வர்க்கத்தின் தனியார் பள்ளி மோகத்திற்கு இணையான மற்றொரு மோகம், ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்விக்கும் மாணவர் வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். முதலில் கண்ட துப்பாக்கி வன்முறை மாணவர்களெல்லாம், ஆங்கில வழிக் கல்வியில் படிப்பவர்கள்தான். இதை வைத்து மட்டுமே, ஆங்கில மோகம் வன்முறையை வளர்க்கிறது என்று சொல்லவில்லை. சிறார்களின் கல்வியறிவுக்காக பயன்படுத்தப்படும் ஆங்கிலம், அவர்களுடைய வாழ்க்கையை ரத்து செய்கிறது. ஐ.டி துறையின் எழுச்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பிற்காக ஆங்கிலம் மட்டுமே உதவும் என்ற சூழ்நிலையில், தமிழ் வழிக் கல்வியின் மீது பலருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலத்தை தேர்ச்சியுடன் கற்றுக்கொள்வதும், அதை ஒரு பயிற்று மொழியாகவே பயன்படுத்துவதும் ஒன்றல்ல.

அன்னியப்படுத்தும் ஆங்கில மோகம்

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்1947க்குப் பின்னர் உயர் கல்விக்காகப் படித்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் என்பதோடு ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்களாக இருப்பதையும் காண்கிறோம். இவர்களது பெற்றோர்கள் எவரும் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்தவர்கள் அல்லர். இருப்பினும் வறியவாழ்க்கையோடு, பலமைல் தூரம் நடந்துச் சென்று, கல்விக்காகக் கடும் உழைப்பு செலுத்தி, போராடிக் கற்றார்கள். அந்தக் கால ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்விப் பணி செய்தார்கள்.

அதற்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், வசதியான வாழ்க்கையுடன் பள்ளிக்குச் சென்றாலும், அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமல்ல தமிழும் தெரியாமல் இருப்பதைக் காண்கிறோம். இது போக, இன்றைய மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் பொழுது போக்குகளும் ஏராளம். மேலும் அன்று உயர்கல்வி முடித்தால் ஏதோ ஒரு அரசுப் பணி கிடைக்கும் என்ற நிலைமையும் இன்று இல்லை. இந்தப் பிரச்சினையை ஆங்கிலவழிக் கல்வி தீர்த்து விடாது என்பதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேலும் ஆங்கிலவழிக் கல்வி ஒரு மாணவனை யதார்த்தமான சமூக வாழ்க்கையிலிருந்து அன்னியப்படுத்துவதோடு, அவனது அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து வளரும் சிறார்கள் தாயுடனும், தமிழுடனும் சேர்ந்தே உலகை அறியத் துவங்குகிறார்கள். பெற்றோர், சுற்றம், உற்றம், நட்பு, தெரு, பெட்டிக்கடைக்காரர், மளிகைக் கடைக்காரர், வணிகர்கள், ஆட்டோக்காரர், பேருந்து ஓட்டுநர் என தமிழால் சூழப்பட்ட உலகில்தான், சிறார்களின் வாழ்க்கைக் கல்வி துளிர் விடத் துவங்குகிறது. இந்தச் சூழலை ஆங்கில வழிக் கல்வி செயற்கையாக துண்டிப்பதோடு, அந்த உறவு மேற்கொண்டு வளர விடாமலும் செய்கிறது.

இதனால் ஆங்கில வழிக் கல்வியின் உலகம் பள்ளி வகுப்பறையுடன் சுருங்கி விடுகிறது. அதனால்தான் ஆங்கில வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பொதுவில் தனிமை விரும்பிகளாகவும், சிறுசிறு பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு இலாயக்கில்லாதவர்களாகவும், சமகாலப் பொதுஅறிவில் பின்தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். பொது வாழ்க்கைக்கு ஆங்கிலம் விதித்திருக்கும் இத்தடைகள்தான், அவர்களை பொறுமையிழந்தவர்களாகவும், வன்முறை சுபாவம் கொண்டவர்களாகவும் மெல்ல மெல்ல மாற்றுகிறது. தமிழை விட ஆங்கிலம்தான் நுகர்வுக் கலாச்சாரத்தின் எல்லா வகைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால், எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றி தீப்பிடிக்க வைக்கிறது.

தேம்ஸ் நதிக்கரையையும், வாஷிங்டன் அதிபர்களையும், அமெரிக்க மல்யுத்த வீரர்களையும், வால்ட் டிஸ்னியின் முயலையும் அறிந்து வைத்திருக்கும் ஆங்கில மாணவன், தாமிரபரணி நதி பற்றியோ, காவிரியின் கீழத்தஞ்சை விவசாயப் பிரச்சினை பற்றியோ, காஞ்சிபுரத்தின் பட்டுத்தறி பற்றியோ, ஏன் கபடி விளையாட்டைக்கூட தெரியாதவனாக இருக்கிறான். இப்படி தமிழக வாழ்க்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, தனக்குத் தொடர்பற்ற மேற்கத்திய விசயங்களுக்கு அறிமுகமாகும் மாணவன்தான் இந்த மண், மக்கள், வாழ்க்கை குறித்து வெறுப்போடும், நம்பிக்கையில்லாமலும் வாழப் பணிக்கப்படுகிறான்.

விவசாயப் பிண்ணனியிலிருந்து வரும் ஒரு மாணவனுக்கு, நூற்றுக்கணக்கான தாவர வகைகளும், கிராம வாழ்க்கை மூலம் விவசாய அனுபவமும் தமிழ் வழியாகத்தான் தெரிந்திருக்கும். இம்மாணவன் ஆங்கிலத்தின் மூலம் தாவரவியலைக் கற்பதால் என்ன நடக்கும்?  அவன் சேகரித்து வைத்திருந்த அறிவுக்குப் பயனில்லாமல் போவதோடு,  ஆயிரக்கணக்கான ஆண்டு விவசாய அறிவைத் தாங்கி வரும் தமிழக விவசாயிகளுடன் பேசுவதற்குக் கூட வழியில்லாமலும் போகிறது. இந்த அவலம் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

இதனால்தான் ஆங்கில வழிக் கல்வி அறிவுத் திறனை மட்டுப்படுத்துவதோடு, சமூகத் தொடர்பையும் இல்லாமல் செய்து விடுகிறது என்கிறோம். ஆங்கிலவழிக் கல்வியினால் வேலை கிடைத்துவிடும் என்ற மூடநம்பிக்கையின் விளைவாக, சிறார்களை தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அனைவரும், உண்மையில் தமது வாரிசுகளை வாழ்க்கையை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாக மாற்றுகிறார்கள். இது போக இன்றைய பாடத்திட்டமும் மேலும் மேலும் தொழில்முறைத் தேர்ச்சியை நோக்கி மாற்றப்படுவதால் அதில் பொது அறிவும், சமூகக் கண்ணோட்டமும் அருகி வருகிறது.

இந்த நோய்களோடு வட இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு சாதிவர்க்கத் திமிரும் சேர்ந்து கொள்கிறது. தமிழகத்தில் இவை இல்லாமலில்லை என்றாலும், இந்தி பேசும் மாநிலங்களில் இவை அதிகம். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மேல் சாதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.

வட இந்தியாவில் அநேக பிரபலங்கள் துப்பாக்கியோடும் பாதுகாவலர்களோடும்தான் உலா வருகிறார்கள். அப்பனே கிரிமினலாக இருக்கும் போது, மகன் அப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஜெசிகா லாலைக் கொன்ற மனுசர்மாதான் வடக்கின் மேட்டுக்குடி மாணவர்களுக்கு வகை மாதிரி. ஏழைகள் மற்றும் தலித்துகள் மீது வன்மம் கொண்டவர்களாகத்தான், வட இந்திய மாணவர்கள் வளர்க்கப் படுகிறார்கள். கூடவே இந்துமதவெறிப் பாசிசத்தின் செல்வாக்கும் இவர்களிடத்தில் அதிகம்.

இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். பொதுவில் இன்றைய மாணவத் தலைமுறையினர் இளமைக்குரிய துடிப்புடனோ, உற்சாகத்துடனோ, கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனோ இல்லை. முக்கியமாக, அவர்களது மனவலிமை மேலும் மேலும் குறைந்து வருகிறது. பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண்கள் வந்தவுடனேயே, தேர்ச்சி பெறாத மாணவர்களிடத்தில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். வீட்டு நிலைமைக்குப் பொறுப்பேற்கும் சென்ற தலைமுறையின் பண்பு கூட, இத்தலைமுறை மாணவர்களிடத்தில் இல்லை. காலச்சூழலில் அடித்துச் செல்லப்படும் இன்றைய நிலையில், நாம் என்ன செய்ய முடியும் என்று சிலர் விரக்தி அடையலாம். அப்படி இல்லை.

இக்கட்டுரை மாணவரைச் சீர்குலைக்கும் விசயங்களைப் பரிசீலிப்பதோடு நின்று விடவில்லை. நேர்மறையில் ஒரு மாணவனை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தீர்வுகளையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறது. அதைப் புரிந்து கொள்வதோடு, நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அற்பப் பிரச்சினைகளுக்காக ஆத்திரங்கொண்டு வெடிப்பதற்குத் துப்பாக்கிதான் வேண்டுமென்பதில்லை, கிடைக்கும் எதுவும் பயன்படும். அதுவும் கண்காணாத ஒரு வீட்டில்தான் நடக்கவேண்டும் என்பதில்லை, அந்த வீடு உங்களுடையதாகவும் இருக்கலாம்.

_________________________________________________________

புதிய கலாச்சாரம், மார்ச்’08

முதல் பதிவு வினவு

மாணவர்கள் ரவுடிகளா ? – பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் தினகரன் வசந்தம் இதழில் பேட்டி

மாணவர்கள் ரவுடிகளா ?

– பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன்

தினகரன் வசந்தம் இதழில் பேட்டி

பிள்ளை வளர்ப்பு: ஒரு குடும்ப வன்முறை

 “பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா. அவர் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர். அவரது மனைவியும் ஒரு அரசு ஊழியர்.

 இப்படிப்பட்ட பின்னணியில் இருப்பவர்கள் ஒரே செல்ல மகனை சாதாரண லெவலுக்கு வளர்க்க விரும்புவார்களா? பையனுக்கு காலையில் கராத்தே வகுப்பு, பிறகு கான்வென்ட் பள்ளிக்கூடம். மாலை ஸ்பெசல் டியூசன், பிறகு கம்யூட்டர் கிளாஸ் இப்படி 24 மணிநேரமும் பையனை கடிகார முன்னாய் நகர்த்திக் கொண்டிருப்பவர் அந்த அரசு ஊழியர். ஒரு நாள் மாலை நேரம் பையன் தெருவில் இறங்கி விளையாடப் போய்விட்டான்.

பையனைத் தேடிப்பார்த்த தந்தைக்கு தலைக்கேறியது கோபம். “வீட்லதான் விளையாட கம்யூட்டர் கேம்ஸ் வாங்கித் தந்துருக்கேன்ல. டியூசன் போய்விட்டு வந்து அதுல விளையாடறது. காச கொட்டி சேர்த்துவிட்டா கம்யூட்டர் கிளாஸ் போகாம, கண்ட கண்ட பசங்களோட சேர்ந்துகிட்டு தட்டான் புடிக்கவா போற? போடா கிளாசுக்கு” என்று அவர் கைய ஓங்கி அதட்டியதுதான் தாமதம் இறுகிய முகத்துடன் வீடு திரும்பிய பையன் ஓங்கி ஒரு அறைவிட்டான் அப்பாவை. அதுவும் வாசல்படியிலேயே பதிலுக்கு விளாசித் தள்ளிவிட்டாலும் அந்த அதிர்ச்சியிலிர்ந்து அவரால் இன்னும் மீள முடியவில்லை. இது சேருவார் தோஷமா இல்லை செய்வினையா என்று குழம்பித் தவித்தார்.

ஆம்! உண்மையில் இது செய்வினைதான் அதாவது ”உன்னைப்பார் உலகத்தை பார்க்காதே.போட்டி போட்டு முன்னேறு” என்று முதலாளித்துவ வாழ்க்கை முறையின் ஒரு வித செய்வினைதான் என்பதை கொஞ்சம் குழந்தைகள் வளர்ப்பு சமாச்சாரத்தின் உள்ளேபோய் பார்த்தால் ஒத்துக்கொள்ளத் தோன்றும்.

 உலகத்தை நெருங்கி, நெருங்கி – அது என்ன? இது என்ன? ஏன் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன, இயங்குகின்றன என்று – அறியத்துடிக்கும் ஆர்வம் ததும்பும் பிள்ளைப் பருவத்திற்கும், ஒண்ணாந் தேதி சம்பளத்தையும் ஒவ்வொரு நுகர்பொருளும் வாங்குவதற்குவொரு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் மட்டும் மனதில் வைத்துக் கொண்டு  “அந்த உலகத்தை அறியத் துடிக்கும்” அரசு ஊழியர்க்கும் உள்ள இயல்பான முரண்பாட்டின் விளைவே மேற்சொன்ன சம்பவம்.

கொம்பு சீவுவனையே குத்திப்பதம் பார்த்துவிடும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காளையைப்போல போட்டி உலகின் கட்டுக் காளையைப்போல போட்டி உலகின் அவஸ்தை தாங்காமல் குழந்தை வடிவத்தில் இருக்கும் மனிதன். முதலாளிய வாழ்க்கை முறையின் செய்வினைக்குப் பதிலை அப்பாவின் முகத்தில் திருப்பித்தரும் அதியமும் சில நேரங்களில் நடக்கத் தான் செய்யும்.

ஒரு ஈடுக்கு எத்தனைக் குஞ்சு பொறிக்கும், அதற்கு என்ன தீவனத்தை போடலாம் என்ற முதலாளியின் கணக்கைப்போல போட்டி மயமான இந்த உலகில் தமது பிள்ளைகள் போணியாக வேண்டுமென்றால் கம்யூட்டர், கேம்ஸ், கராத்தே, வாய்ப்பாட்டு, கருவி இசை என்று எல்லாத் துறைகளிலும் ஒண்ணாம் நம்பரா இருந்தால்தான் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது உயர் நடுத்தர வர்க்கத்தின் கருத்து.

இப்படி குழந்தைகளுக்கு வகை வகையான தீவனம் போட வசதி இல்லாவிட்டாலும் அவரவர் நிலைமைக்கு ஏற்றவாறு பிள்ளைகளை அடைகாக்க முயற்ச்சிக்கும் பண்பாடு கோழி செல்லைப் போல பெற்றோர்களின் மனதில் அரித்துக் கொண்டிருக்கிறது.

கோழி வியாபாரிக்காவது ஒரு ஈடுபொய்த்து விட்டாலும் அடுத்த ஈடுவரைக்கும் காத்திருக்கும் பொறுமையு நிதானமும் இருக்கிறது. இப்படி குறி வைத்து வளர்க்கும் பெற்றோர்களுக்கோ தன்னுடைய குஞ்சுகள் ஒரே ஈடில் கோழிகளாக சிறகடிக்க வேண்டும் என்ற அவசரமும் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் பிள்ளைகள் மேல் ஆத்திரமும் வருகிறது.

ஆனால் குழந்தைகள் உலகமோ இதற்கு நேர்மாறானது. இந்த உலகத்தை உற்று பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற தேவையிலிருந்து அவர்கள் பார்வை தொடங்கவில்லை. இந்த உலகில் என்ன இருக்கிறது என்ற தேடலிலிருந்து அவர்கள் பார்க்கத் தொடங்குகின்றார்கள்.

 

முடியவில்லாத மலைத் தொடர்கள், ஓய்வில்லாத அலைகளின் ஓட்டகம், இலைகளின் பின்னணியை ஆராயத் தொடங்குகிறது அவர்கள் மனம். மேகத்திற்குள் மறைந்த  நிலவு வெளிவரும் சோற்றையும் தட்டிவிட்டுவிட்டு நிலவை ஆராய்கிறது பிள்ளைமனம். இப்படி இயற்கையை மட்டுமல்ல மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், அவற்றின் இயக்கம். சிலர் கையில் அவைகள் இருப்பதும், பலரிடம் இல்லாததும், கட்டிடங்கள் பக்கத்திலேயே குடிசைகள் இருப்பதும் ஏன்,ஏன் என்ற கேள்விகள் பிள்ளைப்பருவத்தின் ஆர்வத்தை அள்ளி வருகின்றன.

தனித்தனியாக காணக் கிடக்கும் இந்த காட்சிகள் குறித்த புரிதலை ஒருங்கிணைந்த முறையில் பெறுவதுதான் குழந்தைகளின் முதல் தேவை. ஆனால் அனைத்தையும் அழித்து தான்மட்டும் வாழத்துடிக்கும் முதலாளித்துவமோ பல சிறு தொழில்களை அழித்தால்தான் பெரிய பன்னாட்டுக் கம்பெனி வாழ முடியும் என்ற தனது பொருளாதார கொள்கையையே, குடும்பத்தின் இலக்கணமாகக் கொண்டுவந்து “ உன்னைப்பார் உலகைப் பார்க்காதே” “போட்டி போட்டு முன்னேறு! சகமனிதர்கள் மீதான போட்டியில் வெற்றி பெறு. அதுவே உனது வாழ்க்கை லட்சியம். கனவு” என குட்டி இளவரசர்களுக்கு முடிசூட்டி விடுகிறது.

உயிர்களின் தோற்றத்தையும், பரிணாமத்தையும் இடையறாது ஆராய்ந்து உழைப்பைச் செலுத்தி டார்வின் பரிணாமக் கொள்கை, தனிமனித முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சி அல்ல.

ஆனால் (முதலாளித்துவம்) சுயநலமனம் கொண்ட குடும்பங்களோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று கண்டுபிடித்துவிட்டால் குடும்பம் நடத்த முடியுமா? எங்களுக்கு டார்வினைப் போல ஆராய்ச்சி மனம் படைத்த ஒரு மனிதன் தேவையில்லை. கோடீஸ்வரன் முத்திரையைச் சரியாகப் பயன்படுத்தி கட்டங்கட்டமாகத் தாவி வெற்றி பெறும் ஒரு குரங்கு போதும் என்கின்றனர். அதாவது சமுதாயத்தை ஒண்ணாம் நம்பராக்கும் அறிவு தேவையில்லை. இந்த சமுதாயத்தில் நான் ஒண்ணாம் நம்பராகும் வழியைச் சொல் என்கிறது நடுத்தர வர்க்கம்.

குழந்தைகளின் ஆர்வத்தைத் தட்டி எழுப்புவது, அவர்கள் மனம் விரும்பிய விளையாட்டை பழக அனுமதிப்பது, முக்கியமாக சமுதாய உறுப்பினர்களான சக மனிதர்களுடன் கூடி இயங்க விடுவது என்ற கருத்தெல்லாம் இல்லாமல், 2500 மைல்களுக்கு அப்பால் குறி வைத்து ஏவக்கூடிய ஒரு ஏவுகனையைப் போல பெற்றோர்கள் அந்தஸ்தான வாழ்க்கைதரக் கூடிய ஒரு கனவுப் பிரதேசத்துக்கு பிள்ளைகளை ஏவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நடக்கிறது.

இதனால்தான் பிள்ளைகள் கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றை நோக்கில் பயன்படுத்தும்போது “இது உருப்படறதுக்கு வழியா!” என்று அலறித் துடிக்கிறார்கள். இது குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தனத்தைப் பறித்தெடுக்கும் பலாத்தார நடவடிக்கையாக மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும். கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்த்தால் குழந்தைகளாய் இருக்கும் மனிதர்களிடம் முதலாளித்துவத்திற்கு தேவையான வளர்ப்பும், சுரண்டலும் ஆரம்பமாகி விட்டது என்ற அபாயம் புரியும்.

”சரக்கு உற்பத்தியின் போட்டா போட்டியில் கல்வி,பண்பாடு, மனிதர்களையும் கூட முதலாளித்துவம் ஒரு சரக்காக மாற்றி விடுகிறது” என்று கார்ல் மார்க்ஸ் இந்த அபாயத்தைக் கோடிட்டுக் காண்பித்தார். இரண்டு வழிகளில் இந்த அபாயத்தை முதலாளித்துவம் அரங்கேற்றி வருகிறது. ஒன்று சாதாரண உழைக்கும் மக்களின் கைகளிலிருந்து கைத்தொழில் சிறு தொழில்களைப் பிடுங்கி எறித்துவிட்டு அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் பிள்ளைப் பருவக் கனவுகளை அழித்து அவர்களையும் தனது சுரண்டலுக்கு குழந்தைப் பணியாளர்களாய் மாற்றிவிடுகிறது.

ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் உணவு விடுதிகளில் மேசை துடைக்கும் சிறுவனின் உள்ளத்திலிருந்து அவனுக்கு விருப்பமான படைப்புணர்ச்சியை பிள்ளைப் பருவத்திலேயே துடைத்தெறிந்து விடுகிறது முதலாளித்துத்துவச் சமுதாயம் இன்னொருபுறம் மேட்டிக்குடி, நடுத்தர வர்க்க குழந்தைகளிடம் இந்தா பிடி சாப்ட்வேர், மேல்படி ஜாவா, ஈகாம் இப்பொழுதே, நல்ல எதிர் காலத்துக்கான திறமையை வளர்த்துக் கொள் என்று அவர்களுடைய பிள்ளைப் பருவத்தையும் தங்கள் சுரண்டலுக்கான அச்சாரமாக மாற்றிக் கொள்கிறது. இதை கோட்பாடாகக் கேட்பதற்கு மிகையாகத் தோன்றலாம். குடும்பங்களின் நடைமுறையைக் கவனித்தால் பெற்றோர்கள் தமது

பிள்ளைகளை ஒரு நல்ல ‘பொசிசனுக்கு’க் கொண்டுவர அவர்களை வளரும் சரக்காக வளர்த்தெடுக்கும் முறைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

பிள்ளைகளிடம் குழந்தைத்தனம் பறிக்கப்படுகிறது. கல்விச் சுமை ஏற்றப்படுகிறது, குழந்தை  உழைப்பு தடுக்கப்பட வேண்டும் என்று கண்டிக்கும் அறிவாளிகள் கூட இவற்றுக்குக் காரணமான முதலாளித்துவச் சுரண்டல் சமூக அமைப்பைத் தூக்கியெறியந்தாலொழிய இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை ஊருக்குச் சொல்வதில்லை. குழந்தைப் பருவத்தின் தேடல்களைத் தொலைத்துவிட்டு குழந்தையும் சேர்ந்து உழைத்தால் தான் குடும்பத்தில் சோறாக்க முடியும் என்ற சமூக நிலைமையைப் பாதுகாக்கும் அரசை எதிர்த்துப் போராடாமல் ஒரு வேளைச் சோற்றுக்கு வயிற்றுப் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு தீச்குச்சி அடுக்கப் போகும் பெண்களிடம் போய் உங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள் குழந்தைகளை குழந்தைகளாய் வாழ விடுங்கள் என்று அறிவொளி இயக்கம் நடத்துகிறார்கள் இந்த அறிவாளிகள்.

மாற்றாக மக்கள் சீனத்திலும், சோசலிச சோவியத் ரசியாவிலும் தனியுடைமைச் சுரண்டலை ஒழித்துக் கட்டியதன் மூலம் பிள்ளைகளுடைய கல்வி வளர்ப்பு அனைத்தையும் அரசின் கடமையென உறுதி செய்யப்பட்டதுடன் பிள்ளைகளின் தனிப்பட்ட திறமைகள் இந்தச் சமுதாயத்தையே முன்னேற்றிக் காட்டின. சகமனிதர்களைத் தோற்கடித்து அவனை அழித்தாவது தான் முன்னேற வேண்டும் என்ற முதலாளித்துவ வளர்ப்பு முறையினால் தனது இச்சைக்கு எதிராக இருக்கும் பெற்றோரைக் கூடத் தீர்த்துவிடும் குழந்தைகளை முதலாளித்துவம் உருவாக்குகிறது.

ஆனால் நாட்டு மக்களின் நலனுக்காக இட்லரை எதிர்த்த போரில் ரசியச் சிறுவர்கள் தன்னிகரில்லாமல் உதவிய ‘த இவான்’ நாவலில் பார்க்க முடிகிறது. இப்படி சமூக நோக்கில் குழந்தை வளர்க்கப்பட  வேண்டும் என்று சொன்னால் “எங்கள் பிள்ளைகளை எங்கள் விருப்பப்படி வளர்க்கும் உரிமைகூட எங்களுக்குக் கிடையாதா? என்று அறிக்கையில் பெற்றோர்களைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இப்படிப் பேசுகிறது.

“குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான். ஒப்புக்கொள்கிறோம்…. உங்களுடைய கல்வி இருக்கிறதே, அதுமட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே?….. கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்…”

 “குடும்பம், கல்வி என்றும், பெற்றோருகும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவெறுக்கத் தக்கனவாகி வருகின்றன. ஏனெனில் நவீனத் தொழில்துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.”

இப்பொழுது இந்தக் கட்டுரைகயின் துவக்கத்தில் சொன்ன சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். தனது குழந்தைப் பருவத்தைச் சுரண்டுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஆளாக்கிய அப்பாவின் கன்னத்திலேயே அறைந்து விட்டான் அந்தச் சிறுவன். சமுதாயத்தையே இந்த சுரண்டல் நிலைமைக்கு ஆளாக்கிய அப்பனான முதலாளித்துவத்தின் கன்னத்தில் நீங்கள் அறையப் போவது எப்போது?

-துரை. சண்முகம்

நன்றி : புதிய கலாச்சாரம் மே,2001

நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்! மாணவர் ஒற்றுமையை கட்டியமைப்போம்!

அன்பார்ந்த மாணவர்களே,

‘‘மாணவர்களா இவர்கள் ? ரவுடிகள் ,பொறுக்கிகள்’’ என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர் ஓட்டுக் கட்சிகள், மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பத்திரிக்கை -தொலைக்காட்சி ஊடகங்களும் அலறுகின்றன. அரசோ, கல்லூரிகளில் போலீசை நிறுத்தி மாணவர்களை பீதியூட்டுகிறது.கல்லூரியை கலவரப் பகுதியாகக் காட்டுகிறது.

கல்லூரி மாணவர்களிடையே எப்போதாவது நடைபெறும் மோதல்களை வைத்துத்தான்  மாணவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இம்மோதல்களை போலீசும் – செய்தி ஊடகங்களும்  ஊதிப் பெருக்கி வருகின்றன.

    கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் இந்த மோதல்களால், சில மாணவர்கள் பாதிக்கப்படுவதையும்,  இதைத் தொடர்ந்து சில மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கல்லூரி வாழ்வை இழப்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பவையே.இவைகள் சமூக அநீதிகளுக்கு எதிராக வீரம் செரிந்த பல போராட்டங்களை நடத்திய கடந்த கால மாணவர் வரலாற்றை கறைபடுத்துகின்ற செயல்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து பள்ளிப் படிப்பை முடிக்கவே கடன்பட்டு பல கனவுகளுடன் கல்லூரிக்குள்  காலெடுத்து வைத்த  நாம், 3 வருட டிகிரி முடிக்கும் முன்பே ’ ரவுடிகள் ,பொறுக்கிகள்’ என்று அவதூறு பட்டங்களை சுமப்பது கேவலமில்லையா? நண்பர்களாகப் பழக வேண்டிய நாம் ரூட்டுகள் – கல்லூரிகள் எனறு எதிரிகளைப்போல் அடித்துக் கொள்வது  எந்த வகையில் நியாயம்?. எனவே இதை உடனே கைவிடுவோம்.நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்போம்.

           சூழ்நிலைதான் ஒரு மனிதனின் நடவடிக்கையை தீர்மானிக்கிறது என்பது உண்மையென்றால், சீரழிந்த இந்த சமூக சூழலில் ஒரு சிறந்த சமூகப் பற்றுள்ள மாணவன் எப்படி உருவாக முடியும் ? அரசுக் கல்லூரிகளின் சூழ்  நிலையும் இப்படித்தான் உள்ளது. ஏழை மாணவர்கள் என்பதற்காகவே, அரசுக் கல்லூரிகளில் குடி நீரும் இல்லை ,கழிவறை வசதியும் இல்லை , கேண்டீனும் இல்லை ,போதிய ஆசிரியர்களும் இல்லை ,ஆசிரியர் திறனை வளர்க்க அரசு முயலுவதும் இல்லை. மாணவர்களுடைய தனித்திறனை வெளிப்படுத்த விளையாட்டோ, கலாச்சார விழாவோ ,கவிதை, கட்டுரைப் போட்டிகளோ அறவே இல்லை. இந்த ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட மாணவர் சங்கத்திற்கும், அதற்கான தேர்தலுக்கும் தடை.  மாணவனுக்கு இருந்த ஓரே ஒரு மகிழ்ச்சி பஸ் டே, அதற்கும்  நீதிமன்றத் தடை  . இந்த ஆரோக்கியமற்ற சூழ் நிலைக்கு மாணவர்களை தள்ளிவிட்ட இந்த அரசுக்கு அவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று கூறுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?

போதாக்குறைக்கு சினிமா கூத்தாடிகளும் சீரழிந்த ஊடங்களும் மஞ்சள் பத்திரிக்கைகளும் ’நோட்டு – புத்தகங்கள் வாங்கவே திண்டாடும் அரசுக் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா-வைப் போல் சிக்ஸ் பேக் காட்டவும் ,அதற்கேற்ற புதிய ,புதிய ஜீன்ஸ் ,டி –சர்ட் ,ஷூ போட்டுக் கொண்டு,அந்த நாயகனைப் போன்று பல மாணவிகளை வளைத்துப் போட பந்தா பண்ணும் ஆசையை வளர்க்கின்றன. ’தான் ஆசைப்பட்ட மாணவியிடம்’ பிறர் பேசுவது பொறுக்காமல் அடித்துக் கொள்வதும், , மங்காத்தா அஜித், வானம் சிம்பு போன்று குறுக்குவழியில் பணம் சம்பாதித்து ஜாலியாக வாழ பணம் பறிப்பதையும்(கட்டிங் போடுவது), பல பெண்களோடு சுற்றித்திரியும் ’டேட்டிங் ‘எனும் பொறுக்கிப் பண்பாட்டையும் பரப்பி வருகின்றன. நண்பனுக்கு துரோகம் செய்து அவன் காதலியை தன்வசப்படுத்திக் கொள்வது,அடுத்தவன் மனைவியை எப்படியாவது அடைய முயற்சிப்பது என்ற நச்சுப் பண்பாட்டை – இதை நியாயப்படுத்தும் ஒரு ’ கொலைவெறிப்  பண்பாட்டை ’ – உருவாக்கி விட்டிருக்கும் தனுசை மானசீக ஹீரோவாக எற்றுக் கொண்டு வலம்வர கற்றுத்தருகின்றன.

        மேலும் ,புதுப் புது செல்போன்களையும் பைக்குகளையும் காட்டி ஏங்க வைத்து நுகர்வு வெறியை ஊட்டிவருகின்றன. அதோடு,  நடிகர் நடிகைகளின் ஆபாச வக்கிர கூத்துக்களையும் இலவச இணைப்பாக கொடுத்து மயக்குகின்றன. போதாக்குறைக்கு அரசும் டாஸ்மாக் ,கிரிக்கெட் என மலிவான விலையில் தரமான போதையை மாணவர்களுக்கு கொடுத்து சீரழிவுப் பண்பாட்டிற்கு நிரந்தர அடிமைகளாக்கி வருகிறது, போராடும் குணத்தையும் மழுங்கச்செய்கிறது.

ஓட்டுப் பொறுக்கிகளும் தங்களுக்கான அடியாட்களை உருவாக்குவதற்காக சாராயம், பிரியாணி, தலைக்கு இவ்வளவு ரூபாய் என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை விலை பேசுகிறார்கள். இந்த சீரழிவுகளில் சிக்கும் மாணவர்கள்தான் யாருடைய கல்லூரி பெரியது யாருடைய ரூட் பெரியது,மாப் காட்டுவது,வெயிட் காட்டுவது,கெத்துக் காட்டுவது என்று தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த  மாநிலக்கல்லூரி மாணவர்களின் மோதல் இதற்கு ஒரு உதாரணம்

மாணவர்களோ செயல் துடிப்புள்ளவர்கள்,பயமறியாதவர்கள், அநியாயத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் என்பது உலக வரலாறு. நம் நாட்டிலும் அன்று இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி வென்றது; ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைக்கு இந்திய அரசு துணைபோவதை கண்டித்து தமிழக அரசை முடக்கியது; தலைமைச் செயலகத்திற்காக ராணிமேரிக் கல்லூரி இடிக்கப்படவிருந்ததை தடுத்து நிறுத்தியது;இன்று மெட்ரோ ரயிலுக்காக பறிக்கப்படவிருந்த பச்சையப்பன் கல்லூரி இடத்தை மீட்டது போன்ற வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள். இத்தகையப் போர்குணத்தை இந்த அரசும், போலீசும் ,அரசியல்வாதிகளும்,சினிமா-பத்திரிக்கை –தொலைக்காட்சி ஊடகங்களும் வளரவிடுமா ? விடாது.

  நம்முடைய போர்குணத்தை மழுங்கடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளையும் வகுப்புகளுக்குள் புகுந்து சுற்றிவளைத்து தாக்கும் போலீசையும் , நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும் ,ஊடகங்களையும் நம்மை நெருங்கவிடாமல் அடித்து விரட்டுவோம்.இதற்கு மாணவர்களாகிய நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வோம். ரூட் என்று, கல்லூரி என்று ,ஏரியா என்று மோதிக் கொள்வதை நிறுத்துவோம். நமக்கு எதிரிகள் மாணவர்கள் இல்லை  இந்த அரசும் – ஓட்டுப்பொறுக்கிகளும்-ஊடகங்களும் தான் என்பதைப் பிரகடனப்படுத்துவோம்.இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டக் களத்தை அமைப்போம்.இதில் பெற்றோர்- ஆசிரியர்களை இணைப்போம் மாணவர்களாகிய நம்மீது திணித்துவரும் ரவுடிகள் பொறுக்கிகள் என்ற அசிங்கத்தை அப்புறப்படுத்துவோம். நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்விகற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.

அனைத்துக் கல்லூரி மாணவர்களே!

  • கல்லூரி என்றும் ரூட் என்றும் நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்!

மாணவர்  ஒற்றுமையை கட்டியமைப்போம்!

  • போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள் ,

மாணவர்கள்  இல்லை என்பதை உணர்வோம்!

  • மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் ,கல்வியை வணிகமயமாக்கும் ,

நச்சுப் பண்பாட்டைப் பரப்பும் மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!

 புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி 

சென்னை

******

புமாஇமு வெளியிட்ட பிரசுரத்திலிருந்து

******

தொடர்புடைய பதிவுகள்:

மாணவர்களிடம் வன்முறை ஏன்? – புதிய தலைமுறை பத்திரிக்கையில் தோழர் கணேசன் கொடுத்த பேட்டி!

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

பள்ளி மாணவர் வன்முறை – நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி!

சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

மாணவர்களிடம் வன்முறை ஏன்? – புதிய தலைமுறை பத்திரிக்கையில் தோழர் கணேசன் கொடுத்த பேட்டி!

தொடர்புடைய பதிவுகள்:

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

பள்ளி மாணவர் வன்முறை – நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி!

சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

“விளம்பரங்களில் ஆங்கிலம்”, “அரசியலில் மாணவர்கள்” – கேள்வி பதில்!

கேள்வி 1:
தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில்விளம்பரங்களே அதிக நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளையும் பின் தள்ளிவிட்டு ஆங்கிலமே முதன்மையாக விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.விளம்பரங்களில் தமிழோ அல்லது வேறு இந்திய மொழி மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என இந்த விளம்பர கம்பெனிகளுக்கு நெருக்கடி கொடுத்து போராட யாரும் முன்வருவதில்லையே ஏன்??

கேள்வி 2:
70 
களில் மாணவர் போராட்டங்களினால் ஆட்சியை பிடித்தவர்கள், இன்று மாணவர் உரிமைக்காக போராடுவதற்கு மாணவர்களை அணி திரட்டி போராட களத்திற்கு வருவதில்லையே ஏன்??

– புதுநிலா

அன்புள்ள புதுநிலா,

விஷத்தை ஆழகான வண்ண பாட்டிலில் வைத்து பாய்சன் என்று ஆங்கிலத்தில் காட்டுவதற்கு பதில் நஞ்சு என்று தமிழில் காட்டவைத்து நாம் சாதிக்கப் போவது என்ன? உங்கள் கேள்வியிலேயே விளம்பரங்கள் அதிக நேரம் ஆக்கிரமித்துக் கொள்வதாக கவலைப்படுகிறீர்கள். அப்படி இருக்கும்போது அதில் ஆங்கிலம் இருந்தால் என்ன, தமிழில் வந்தால் என்ன?

சாதாரண மக்களையும் உள்ளிட்ட அன்றாட வாழ்வில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்தக் கலப்பு ஒரு இயல்பான மொழிக் கலப்பில் உருவானதல்ல. முதலாளித்துவத்தின் உலகமயத்தால் திணிக்கப்பட்ட ஒன்று. சமூவியல், பண்பாட்டு துறைகளில் உலகம் முழுக்க ஒன்றாக இருந்தால் மட்டுமே அவர்கள் விரும்பும் நுகர்வுக் கலாச்சார சந்தையை விரிக்க முடியும். அதற்கு தேசிய இனங்களின் பண்பாடுகளை திட்டமிட்டு அழிப்பதை அவர்கள் செய்கிறார்கள். அந்த வரிசையில் தேசிய இனங்களின் தாய் மொழிகளும் சிதைக்கப்படுகின்றது.

கார்ட்டூன் நெட்ஒர்க்கோ, இல்லை டபிள்யு.டபிள்யு.இ.வோ, இல்லை அமெரிக்க அடையாளங்களோடு வரும் வீடியோ கேமோ இவை போன்ற அமெரிக்க வார்ப்புகளோடுதான் நமது குழந்தைகள் வளர்கிறார்கள். பெற்றது நாமென்றாலும் வளர்ப்பது அவர்கள்தான். அமெரிக்க நகரங்கள், நதிகள், நட்சத்திரங்கள் தெரிந்த அளவுக்கு நமது மண் சார்ந்த, மக்கள் சார்ந்த வாழ்க்கைகள் குழந்தைகளுக்கு தெரிவதில்லை.

ஒரு நண்பரது மகனை சமீபத்தில் சந்தித்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும் அவன் சாலையில் செல்லும் எந்தக் கார்களையும் பார்த்த மாத்திரத்திலேயே அது முன்புறமோ, பின்புறமோ எப்படி இருந்தாலும் கம்பெனி, மாடல் முதலியவற்றை சரியாக சொல்லுவானென்று அவனது தந்தை பெருமையாகக் கூறினார். அதை சோதித்துப் பார்த்த போது உண்மைதான் எனத் தெரிந்தது. பிறகு அவன் வாழும் நகரில் ஓடும் நதியின் பெயரைக் கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை!

இது எப்படி நடந்திருக்கும்? தொலைக்காட்சியில் பார்ப்பது ஒன்று, பின்னர் உணவகங்கள், சுற்றுலா மையங்கள், ஷாப்பிங் மால்கள் என்று நடுத்தர வர்க்கம் பொழுதைக் கழிக்கும் வர்த்தக இடங்களிலெல்லாம் புதுக் கார்களை பார்க்க முடியும். இதிலிருந்து அவன் சுயமாகவே தனக்கு காட்டப்பட்டதை மனப்பாடம் செய்து தேறிவிட்டான். மேலும் கார் என்பது அந்தஸ்தான வாழ்வின் அடையாளம் காட்டும் பொருளென்ற வகையிலும் அவனுக்கு நெருக்கமாக இருக்கிறது. இப்படித்தான் நமது சிறார்களை முதலாளித்துவத்தின் நுகர்வுக்கலாச்சாரம் வளர்க்கிறது. ஆனால் சிறுவர்களை விட பெரியவர்கள்தான் இதில் வேகமாக வென்றெடுக்கப்பட்டு வருகிறார்கள்.

செல்பேசி, இணையம், திரைப்படங்கள், தொலைக்காட்சி, பல்பொருள் சூப்பர் அங்காடி, மல்டி கசின் உணவகங்கள் என்று நவீன வாழ்க்கையின் மைல்கற்கள் அனைத்திலும் உலகமய பண்பாடுதான் ஆட்சி செலுத்துகிறது. புதிய புதிய உடைகள், அணிகலன்கள், வாகனங்கள், வீட்டுப் பொருட்கள், வீடுகள் என்று இந்த முடிவுறா ஆட்டத்தில்தான் நடுத்தர வர்க்கம் தனது நேரத்தையும், பொருளையும் இழந்து வருகிறது. இப்படித்தான் தொலைக்காட்சிகளின் விளம்பரங்களில் ஆங்கிலம் இயல்பாக வருவதாக நினைக்கப்படுகிறது. அதை யாரும் உறுத்தலாகக் கருதுவதில்லை.

ஆகவே உள்ளூர் சமூக விசயங்கள், மனிதர்கள், வாழ்க்கைகள் எல்லாம் காலம் செல்லச் செல்ல அந்நியமாகிப் போகிறார்கள். அதன்படிப் பார்த்தால் இது மொழிப் பிரச்சினை என்பதை விட ஒரு மனிதனின் சமூக உணர்வு குறித்த பிரச்சினையாகிறது. படித்த நடுத்தர வர்க்கத்தினர் பலர் மேலாட்டமாக அரசியல் பேசுவதும், பாசிசத்தை ஆதரிப்பதும், ஊழலை ‘எதிர்ப்பது’, அநாதைகளை ஆதரிப்பது போன்ற அவர்களது தர்ம சிந்தனைகளுக்கும் இதுவே அடிப்படை எனலாம்.

ஆகவே இந்த திணிக்கப்படும் ஆங்கிலத்தை எதிர்க்கும் நமது போராட்டம் நமது மக்களுக்கு சமூக உணர்வையும், அரசியலையும் கற்றுத் தருவதிலேயே வெல்ல முடியும். என்னதான் நுகர்வுக் கலாச்சாரம் ஒரு மேகமூட்டமாக கவிந்து வந்தாலும், வாழ்க்கை எனும் சூரியன் உண்மையினை எடுத்துச் சொல்வதை மறைக்க முடியாதே? அதனால்தான் நுகர்வு மோகம் கொண்டிருக்கும் மக்கள் கூட ஒரு கட்டத்தில் “செலவுக்காக வாழ்க்கை, பொருளுக்காக வாழ்க்கை” என்பதின் சிரமங்களை புரிந்து கொண்டு, தாம் சுரண்டப்படுவதை உணர்கிறார்கள். இன்று ஆங்கிலப் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதை பார்க்கலாம். அந்த வகையில் “வாழ்க்கைதான் மிகப்பெரிய உண்மை”.

___________________________________________________

70களில் மாணவர்களை அணிதிரட்டிப் போராடியவர்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? தி.மு.கவையா?

1960களில் தமிழக மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தி.மு.க அறுவடை செய்து கொண்டது வரலாறு. மற்றபடி அவர்கள் என்றுமே மாணவர்களை அணிதிரட்டி அரசியல் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியவர்கள் இல்லை. 60களுக்குப் பிறகு கூட தி.மு.க தனது அரசியல் மேலாண்மை கருதி மாணவர் அணி வைத்துக் கொண்டு, கல்லூரி தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தாலும் அதை மாணவரிடையேயான அரசியல் பணியாக கருத முடியாது. இன்றும் கூட இத்தகைய வழிமுறைகளை காங்கிரசு, அ.தி.மு.க கட்சிகள் பின்பற்றுகின்றன.

அதாவது இவர்களது ஆதிக்கம் இருக்கும் ஊர்களின் கல்லூரிகளில், பகுதிகளில், அரசியல், பண செல்வாக்கு காரணமாக ஏரியா பிரமுகரின் வாரிசுகள் தேர்தலில் நிற்பதும், அதற்கென்று எம்.எல்.ஏ தேர்தல் போன்று செலவழிப்பதும் யதார்த்தம். மற்றபடி மாணவருக்கென்று இருக்கும் பிரச்சினைகளில் இவர்கள் போராடியது கிடையாது. ஒவ்வொரு கல்லூரிகளிலும்  இருக்கும் ஒரு சில மாணவர்களை வைத்தே இவர்கள் தமது செல்வாக்கை காட்டிக் கொள்கிறார்கள்.

தி.மு.கவின் ஆரம்ப அரசியல் காலங்கள் எல்லாம் கல்லூரிகளிலும், விடுதிகளிலும், ஏன் முடி திருத்தும் நிலையங்களிலும் வளர்ந்து வந்தன. இன்றைக்கு பழம்பெருச்சாளிகளாக இருக்கும் பல்வேறு தி.மு.க தலைவர்களெல்லாம் அப்படி மாணவப் பருவத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். அந்தக் காலம் ஒருவகையான மறுமலர்ச்சிக் காலம் போன்றது. படிப்பது, பத்திரிகை நடத்துவது, கூட்டங்களில் பேசுவது என்று அறிவுசார் இயக்கம் கொடிக்கட்டிப் பறந்த காலம்.

ஆனால் அண்ணாத்துரை காலத்திலிருந்தே இத்தகைய அறிவுசார் முனைப்புகள் எல்லாம் தொண்டர்களிடையே தத்தமது தனித்திறமையை காட்டிக் கொள்ளும் காரியவாதமாக மாறத் துவங்கியிருந்தது. மேலும் தி.மு.கவின் சமரசங்களும், காரியவாதமும் கூட அதன் தோற்றத்திலேயே வேர்விட்டிருந்தது. இருப்பினும் எளிய மக்களின் அரசியலை பேசும் இயக்கமாக அது தமிழகத்தில் குறிப்பிட்ட காலம் செல்வாக்குடன் இருந்ததையும் நாம் ஏற்க வேண்டும்.

இதைத்தாண்டி மாணவரிடையே ஒரு நீண்ட அரசியல் இயக்கமாக அது வளரவில்லை, வளர்ந்திருக்கவும் முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தேசவிடுதலைப் போராட்டக் காலத்தில் சாதிரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஆண்ட பரம்பரைகளின் பிரதிநிதியாக விளங்கிய காங்கிரசு கட்சியில் அத்தகைய பின்னணியிலிருந்து மாணவர்களும் வந்தார்கள். காந்தியின் கோரிக்கையை ஏற்று படிப்பையும், பதவியையும் துறந்த சாதாரணமானவர்களும் உண்டு. ஆனால் காங்கிரசு, காந்தியின் சமரசப்பாதையினால் அது ஒரு வலுவாக மாணவர் இயக்கமாக வளரவில்லை. எதிர்மாறாக பகத்சிங் கொல்லப்படும் போது இந்திய மாணவர்களிடையே முதன்மையான நட்சத்திரமாக மிளிர்ந்தார்.

இதன் பாதிப்பை ஆரம்ப கால பொதுவுடைமை இயக்கங்களில் காணலாம். எனினும் காங்கிரசின் வாலாக செயல்பட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி காந்தியின் செல்வாக்கைத் தாண்டி மாணவரிடையே ஒரு சக்தியாக எழமுடியவில்லை. இருந்தபோதும் இன்றைக்கு போலிக்கம்யூனிஸ்டுக் கட்சியில் இருக்கும் தலைவர்கள் பலர் மாணவர் இயக்கங்களிலிருந்து வந்தவர்கள்தான்.

மேற்கு வங்கம், கேராளவில் சி.பி.எம்மின் அமைப்பு பலம் காரணமாக பரவலான கல்லூரிகளில் எஸ்.எஃப்.ஃஐ இருந்தாலும் அது மாணவரை அரசியல் ரீதியாக திரட்டும் அளவு உறுதியாக இல்லை. மற்ற மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா, தமிழகம் போன்றவற்றில் போலிக் கம்யூனிஸ்டுகள் இதர ஓட்டுக் கட்சிகளைப் போல கல்லூரிக்கு ஓரிருவரை வைத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள். மாணவர்களின் தனிச்சிறப்பான கோரிக்கைகளுக்காக அவர்களை அணிதிரட்டி போராடுமளவு அவர்களுக்கு பலமும் இல்லை, நோக்கமும் இல்லை.

இன்றும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொதுவுடமை இயக்கம் சார்ந்த மாணவர்களே தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள். வட இந்தியாவில் குறிப்பாக இந்தி பெல்ட்டில் தமது அரசியல் பலத்தைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அகில பாரத வித்யார்தி பரிஷத் எனும் மாணவர் பிரிவை நடத்தி வருகிறது. நாட்டில் இருக்கும் மாணவர் அமைப்பிலேயே மிகவும் பிற்போக்கான இயக்கம் இதுதான். ஆசிரியர்களுக்கு குரு பூஜை, காதலுக்கு எதிர்ப்பு, முசுலீம் எதிர்ப்பு, ஹூசைன் எதிர்ப்பு என்று இவர்களது ‘போராட்டங்கள்’ அனைத்தும் அதன் திசைவழியைச் சொல்லும்.

மேலும் இவர்கள் ஆளும் வர்க்கங்களின் நோக்கத்திற்கேற்ற அரசியலைக் கொண்டிருப்பதனால் பல கல்லூரி நிர்வாகங்கள் ஏ.பி.வி.பியை வைத்திருக்கவே விரும்புகின்றன. அந்த வகையில் கல்வி முதலாளிகள் ஆசிபெற்ற சங்கமென்றும் இதனைச் சொல்லலாம்.

70களில் நெருக்கடி காலத்தின் போது ஜெயப்பிரகாஷ் நாராயணனது காங்கிரசு எதிர்ப்பு இயக்கத்தை ஏ.பி.வி.பி ஓரளவுக்கு அறுவடை செய்தது. பின்னர் ஜனதா ஆட்சி அமைப்பதற்கு காரணமான ஜெ.பியின் இயக்கத்திற்கு அம்பலப்பட்டு போன இந்திராவின் சர்வாதிகாரமும் ஒரு காரணம். மேலும் ரசிய சார்பு முதலாளிகள் இந்திராவையும், அமெரிக்க ஆதரவு முதலாளிகள் ஜனதாவையும் ஆதரித்தமையும் ஒரு முக்கியக் காரணமாகும்.

பிறகு அனைத்து ஒட்டுக்கட்சிகளும் பணத்தை இறைத்து தமக்கு மாணவர் அணி இருப்பதாக பிரமையை தோற்றுவிக்கின்றன. அ.தி.மு.க – காங்கிரசு – தி.மு.க முதலான கட்சிகளின் மாணவர் அணி போராட்டங்கள் என்று ஒரு செய்தியையோ, படத்தையோ நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம். ஆனால் அதில் இருக்கும் கூட்டம் அனைத்தும் காசுக்கு அழைத்து வரப்பட்ட கூட்டம்தான். பல ஏழை மாணவர்களுக்கு இந்த முறையில் வருமானம் வருவதால் ஓட்டுக் கட்சிகளின் மாணவர் அணிகள் இன்றும் செவ்வனே ‘இயங்கி’ வருகின்றன.

60களின் பிற்பகுதியிலும், 70களின் முற்பகுதியிலும் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் தோன்றிய நக்சல்பாரி இயக்கம் மாணவர்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. பல நூறு மாணவர்கள் படிப்பு, கல்லூரி, வாழ்க்கையை விடுத்து இயக்கத்தின் முழுநேர ஊழியர்களாக கிராமங்களுக்கு சென்றார்கள். மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா என்று பல்வேறு மாநிலங்களில் மாணவர் இயக்கம் காட்டாற்று வெள்ளமாய் திரண்டது.

ஆயினும் மார்க்சிய லெனினிய இயக்கம் செய்த தவறு மற்றும் ஆளும் வர்க்கத்தின் கொடூரமான அடக்குமுறை காரணமாக இயக்கம் பின்னடைந்தது. கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தோழர்களில் மாணவர்களும் கணிசமாக இருந்தார்கள். இக்காலமே இந்திய மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்ட காலமாக இருந்தது. இதன் பின்னர் நக்சல்பாரி இயக்கம் சிதறுண்ட போதும் பல்வேறு மாநிலங்களில் இருந்த பல்வேறு மா.லெ குழுக்களின் சமூக அடித்தளமாக மாணவர் இயக்கங்களே இருந்தன, இருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகள் தடை செய்யப்படுவதற்கு முன்னர் ஆந்திராவில் வலுவான மாணவர் இயக்கத்தை வைத்திருந்தார்கள். இன்றைய அதன் முழுநேர ஊழியர்கள் பலர் மாணவர் இயக்கங்களிலிருந்து வந்தவர்கள்தான்.

தமிழகத்தைப் பொறுத்த வரை இன்று மாணவரிடையே அமைப்பு ரீதியான பலமும், அரசியல் ரீதியான தலைமையும் கொண்ட நக்சல்பாரி இயக்கமாக ம.க.இ.கவின் தோழமை அமைப்பானபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திகழ்கிறது. ஈழம், சமச்சீர் கல்வி, மூவர் தூக்கு, தனியார் மயம், கட்டணக் கொள்ளை என்று பல்வேறு பிரச்சினைகளுக்காக பரவலான கல்லூரிகளில் இவ்வியக்கம் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கின்றது.

இன்று மாணவரிடையே சுயநிதிக் கல்லூரி முதலாளிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக அரசியல் பணிகள் பொதுவில் மந்தமடைந்துள்ளன. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் முன்பை விட அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளதையும் பார்க்கலாம். இவர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும்தான் சமீபத்திய மூவர் தூக்கிற்கு எதிரான போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தினார்கள்.

தனியார் மயம், காசு இருப்பவனுக்குத்தான் கல்வி – வேலை என்ற சூழலில் மாணவர்கள் முன்பை விட அதிகம் அரசியல் ரீதியாக அணிதிரள்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் நுகர்வுக் கலாச்சார மோகம், சீரழிவு காரணமாக பண்பாட்டு சீர்கேடுகளும் அவர்களிடையே பரவி வருகிறது. எனினும் முந்தையக் கேள்விக்கு சொன்னது போல “வாழ்க்கைதான் மிகப்பெரிய உண்மை” என்ற அடிப்படையில் அந்த மயக்கங்களிலிருந்து மாணவர்கள் விடுபட்டு போராடுவார்கள், தமிழகத்தின் அரசியல் போக்கை நேர்மறையில் திசை திருப்புவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

_________________________________________

முதல் பதிவு: வினவு

அன்பார்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்களே!

 

 அரசு கல்விக் கட்டணம் இல்லங்குது
அப்பறம் பி.டி.ஏ மூலமா கொள்ளையடிக்குது!  

 கல்வி கொடுத்த கவர்மெண்டு
டாஸ்மாக் சாராயத்தை விற்குது!
கள்ளச்சாராய ரவுடிகளெல்லாம் கல்வியை விற்குறான்!
இனியும் ஒதுங்கிச் செல்வது அவமானம்!
ஓங்கி குரலெழுப்புவதே தன்மானம்!

 படிக்க வகுப்பு இல்ல
பாடம் நடத்த வாத்தியார் இல்ல
குடிக்கக் கூட தண்ணி இல்ல
அடிப்படை பிரச்சனையை
தீர்த்து வைக்க வக்கில்லாமல்
‘அனைவருக்கும் கல்வி’ என்று
ஆளுகிறவங்க பேசுவது அத்தனையும் ஏமாற்று!
பு.மா,இ.மு தலைமையிலான போராட்டமே ஒரே மாற்று!

 செமஸ்டர் வந்தது! தேர்வு இரண்டு முறையானது!
பாக்கெட் பணமோ பறிபோகுது!

 சிப்டு முறை வந்தது! நேரம் மட்டுமே மாறுது!
புதுசா வாத்தியாரும் போடல! அடிப்படை பிரச்சனைளும் தீரல!

 ஜனநாயகம் என்று சொல்லி கவுன்சிலிங் நடக்குது!
ஜனநாயகத்தை கொடுக்கின்ற
கல்லூரித் தேர்தல் எங்கே போனது!

 கல்லூரியைக் கை கழுவது
கல்வி வியாபாரத்தை கொழுக்க வைக்க
அரசு பல்கலைக்கழகமா மாற்றுது!
இதுவரை நீ.படித்து வந்த
பி.ஏ.,பி.எஸ்.சியும் பறிபோகுது!

 எப்படியும் எதிர்காலம் உண்டென்பது பகற்கனவு!
இதற்கெதிராக போராட வேண்டுமென்பதே
பகத்சிங் கண்ட கனவு
இன்றே பு.மா.இ.மு-வில் இணைந்திடு!
உரிமைக்கான போராட்டத்தை தொடங்கிடு!!

பஸ்டே’வை கொண்டாடுவோம்!

பஸ்டே’வை கொண்டாடுவோம்!

“பஸ்டே” கொண்டாடுவதால் டிராபிக் ஜாம் ஆகிறது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் தடைசெய்கிறோம்” , இது ஐகோர்ட் நாட்டாமைகளின் உத்தரவு. மாணவர்கள் ரவுடித்தனம், பொறுக்கித்தனம் செய்கிறார்கள் “ஆமா அந்த மாணவர்களுக்கு கடுமையான தண்டனை” வழங்க வேண்டுமென்று குரைக்கின்றன பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும். இதையே சாக்காக வைத்துக்கொண்டுகல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்கள் பேராசிரியர்களின் மண்டையை உடைக்கிறது போலீசு.

எதை வைத்து பஸ்டே’ வை தடை செய்தது நீதிமன்றம்?. ஒருநாள் ஏ.சி. காரில் செல்லும் போது நீதிபதி ஏன் டிராபிக் ஜாம் ஆகிறது என்று விசாரித்து பஸ்டே என்றவுடன் கொதித்துப்போனாராம். ஒருநாள் தானே பஸ்டே கொண்டாடப்படுகின்றது. மீதம் 364 நாட்களும் டிராபிக் ஜாம் ஆகிறதே அதற்கு யார் காரணம் ? காருக்குள்ளேயிருந்தே விசாரித்த நீதிபதி டிராபிக் ஜாம் எப்படி ஆகிறதென்பதை கண்டறிய காலை 7 மணிக்கு கோயம்பேடுக்கும், காலை 10 மணிக்கு அண்ணா மேம்பாலத்திற்கும் வந்திருக்கிறாரா? ஐடி கம்பெனி பஸ்களும்,கார்களும் குவிந்திருப்பது காரை விட்டு வெளியே வந்தால் தானே தெரியும். 100 பேர் செல்லக்கூடிய இடத்தை ஒன்று அல்லது இருவர் மட்டும் செல்லக்கூடிய கார்கள் ஆக்கிரமித்திருக்கின்றன.

கருணாநிதி,ஜெயா,விஜயகாந்த் என தினமும் பிறந்தநாள், வேட்புமனுத்தாக்கல் எனக்கூறிக்கொண்டு டிராபிக் ஜாம் நெருக்கடிக்குள் மக்களை தத்தளிக்க வைக்கின்றனர். முதல்வர் செல்கிறார் என்று வேகாத வெயிலிலும் கொட்டும் மழையிலும் மக்களை பல இடங்களில் நிறுத்தி வைத்து டிராபிக் ஜாமை உருவாக்குகிறார்களே இதெல்லாம் தெரியாதா? இதற்கெல்லாம்தடைவிதிப்பாரா? மெத்தப்படித்தவர்களாககாட்டிக்கொள்ளும் நீதிபதிகளும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் அறிவு நாணயம் இருந்தால் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

“மாணவர்கள் பஸ்ஸிலே ரூட் அடிக்கிறார்கள் என்று பேருந்தில் தொங்கும் மாணவர்களை அடித்து நொறுக்குகிறது போலீசு. கோடிக்கணக்கான மக்கள் குவிந்திருக்கும் இந்தச் சென்னையில், அவர்களுக்கு ஏற்றாற் போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா? மாணவன் மட்டும்தான் படியில் தொங்குகிறானா? வேலைக்குப் போகும் ஆண்கள், பெண்கள், வயதான தாய்மார்கள் என் அனைவரும் தான் உயிரைப் பணயம் வைத்து தொங்கிக் கொண்டு செல்கிறார்கள். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்குவதாலேயே ரவுடிகள் என்கிறது, அலகாபாத் நீதிமன்றத்தால் ” காக்கிச்சட்டை அணிந்த ரவுடிகள்” என்று பட்டம் பெற்ற போலீசு. இவர்களின் யோக்கியதை நமக்கு தெரியாததா என்ன ? காவல்நிலைத்திற்கு புகார் கொடுக்க யாராவது நிம்மதியாக சென்று வர முடியுமா? “ங்கோத்தா, ங்கொம்மா ” என்று வார்த்ததைகள் வராத வாய்கள்தான் உண்டா? எத்தனை எத்தனை பெண்கள் மீதான காவல் நிலைய வன்புணர்ச்சிகள், கொலை, கொள்ளை, விபச்சாரம், ஆள்கடத்தல்கள் என அனைத்து கிரிமினல் வேலைகளையும் முன்நின்று நடத்துவது போலீசு தானே. இவர்களால் எப்படி மாணவர்களை திருத்த முடியும்?

மாணவர்கள் பேருந்துகளில் பாட்டுப்பாட வேண்டும், டாப் அடிக்க வேண்டும் எனக் கற்றுக்கொடுத்த சினிமாக்களும் டிவிக்களும் தான் பெண்களை கிண்டல் செய்வதையும் தம் அடிப்பதையும், சரக்கடிப்பதையும் ஊக்குவித்தன. காதலன் படத்திற்கு பிறகு தான் பஸ்ஸிலே டாப் அடிப்பது அதிகமாயிருக்கின்றது. பாய்ஸ் படத்தின் மூலம் பெண்களுக்கு எப்படியயல்லாம் மார்க் போடலாம் என்று கற்றுக்கொடுத்த இயக்குனர் சங்கர், எழுத்தாளன் சுஜாதாவையும் கைது செய்யவில்லை போலீசு, சீரழிவையே பரப்பும் சினிமாக்களுக்கு சென்சார் போர்டு தடை விதிக்கவில்லை, தடைவிதிக்க வேண்டிய தமிழக முதல்வர் மானாட மயிலாட நிகழச்சியில் சிறுவர் சிறுமிகளை ஆபாசமாக ஆடவிட்டு ரசிக்கிறா,வரிவிலக்கு அளித்து ஊக்குவிக்கிறார். இந்த கருணாநிதி அரசுதான் மாணவர்கள் பேருந்தில் பாடுகிறார்கள், பெண்களை கிண்டல் செய்கிறார்கள் என சீரழிந்தவர்களாக காட்டுகிறது .

“பஸ்டே கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது, கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்” துணை வேந்தர். ஆகா என்ன ஒரு கடமை உணர்வு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் 67 கல்லூரிகளில் பெரும்பாலும் ” பிரின்ஸ்பால்” இல்லை. கல்வி அரசிடமிருந்து தனியாருக்கும், தனியாரிடமிருந்த டாஸ்மாக் அரசுக்கும் கை’ மாறி தெருக்களெல்லாம் சாராயக்கடைகளாக நாறுகின்றன, மாணவர்கள் தங்கள் உரிமைகளை முன்வைக்க ஒரே வாய்ப்பாக இருந்த ” மாணவர் பேரவை தேர்தல்” நடத்தப்படுவதில்லை. கல்லூரிகளில் முறையான விளையாட்டு மைதானங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் சாமியார்கள் கும்மியடிக்கிறார்கள்.மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்த கலாச்சார விழாக்கள் நடத்தப்படுவதிலலை, கலை மற்றும் இலக்கியங்களில் சிறந்து விளங்கும் மாணவர்களின் திறமை மேம்படுத்தப்படாமல் அஸ்தமனமாகிப்போகின்றது.நூலகம், கேண்டீன், குடிநீர், கழிவறை எனஅடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. இதையயல்லாம் செய்து தர வக்கில்லாத துணைவேந்தர் மாணவர்களை கண்டிப்பது, “”ஊதாரி அப்பன் மகனுக்கு கூறும் உபதேசமல்லவா””.

ஏழை மாணவர்கள் படிப்பதற்கான சூழல் இல்லாததைப்பற்றியோ, அவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டதைப் பற்றியோ, விலைவாசி உயர்வால் மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்படுவது பற்றியோ, மாணவர்கள், தொழிலாளர்கள்,விவசாயிகள், வழக்குரைஞர்கள் என அனைவரையும் போலீசு கடித்துக்குதறுவதைப் பற்றியோ தினமலர், தினமணி போன்ற பார்ப்பன பத்திரிக்கைள் வாய்திறப்பதேயில்லை. “அம்மணமாயிருக்கும் போது எந்த நடிகை அழகு” என்று கருத்துக்கணிப்புச்செய்திகள், சினிமா விளம்பரங்கள், கள்ளக்காதல் விவகாரங்கள் என அருவருப்பையும் ஆபாசத்தையுமே வெளியிட்டு சமுதாயத்தையே சீரழித்த இவர்களுக்கு மாணவர்களை ரவுடிகளாகவும் பெறுக்கிகளாகவும் சித்தரிக்க யோக்கியதை இருக்கிறதா?

இப்படி உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கும் போலீசு, நீதிமன்றம், பத்திரிக்கைள் போன்றவை ஏன் மாணவர்கள் மீது கடித்துக் குதறுகின்றன? மாணவன் என்ற ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பின்னால் பல வினைச்சொற்கள் இருக்கின்றன. உலகம் முழுக்க நடந்த அனைத்து சமூக மாற்றங்களிலும் மாணவர்களின் பங்கு முக்கியமானது. வேறெங்கும் இல்லாத போர்க்குணம், உறுதி, ஒற்றுமைஆகியவைகளைப்பார்த்துதான் இந்த போலீசு, நீதிமன்றம், பத்திரிக்கைள் எனப்பலரும் ஆந்தையைப் போல அலறுகின்றனர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மாணவர்களின் வீரம் உலகறிந்தது. இராணி மேரிக்கல்லூரியைக் காத்த மாணவிகளின் போர்க்குணம் அரசின் குலையை நடுங்க வைத்தது. ஈழப்போராட்டத்தில் இறுதிவரை உறுதியாக நின்று இந்திய அரசை கதிகலங்கச் செய்தவர்கள் மாணவர்கள். உழைக்கும் மக்களை சென்னையை விட்டே விரட்டும் மெட்ரோ இரயில் திட்டத்திற்கு எதிராக மாபெரும் உள்ளிருப்புப் போராட்டத்தை நிகழ்த்தி பச்சையப்பன் கல்லூரியின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட மாட்டோம் என போர் முழக்கம் செய்தவர்களும் மாணவர்கள் தான்.

இந்த ஒற்றுமையும் போர்க்குணமும் கல்வி வியாபாரமாவதற்கு எதிராகவும், ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் பகற் கொள்ளைகளுக்கு எதிராகவும் மாறக்கூடாதென்பதில் குறியாய் இருக்கிறது அரசு. அதனால் தான் பத்திரிக்கைகள், சினிமா, டிவிக்கள் போன்ற அரசின் கைக்கூலிகள் திட்டமிட்டே மாணவர்களை சீரழிக்கின்றன. கொலைசெய்வதையும், ரவுடித்தனத்தையம் மட்டுமே தொழிலாகக் கொண்ட காடுவெட்டி குருவை ஒரு தலைவனாகக் கொண்ட பா.ம.கவின் மக்கள் டிவி மாணவர்களை ரவுடிகளாக சித்தரிக்கிறது. இப்படி மாணவர்கள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவது பற்றி பேசாமல் ” மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென்கிறா “டிராபிக் ராமசாமி , “துக்ளக் சோ” ராமசாமி போன்ற பார்ப்பன நாய்களை என்ன செய்வது ? அடித்து விரட்ட வேண்டாமா?

உழைக்கும் மக்களே இதைப்பற்றி சற்று சிந்தியுங்கள். பஸ்டே ஆரம்பத்தில் எப்படி இருந்தது. மாணவர்கள் அமைதியான முறையில் பேருந்தை எடுத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, வருடம் முழுவதும் தங்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் நன்றி செலுத்தினார்கள். தங்களுக்காக உழைத்து உழைத்து ஓடாய்த்தேய்ந்து போன அந்த தொழிலாளி வர்க்கத்திற்கு ஏழை எளிய மாணவர்களால் செலுத்தப்படும் நன்றியறிவிப்பு விழா தான் பஸ்டே. அன்று ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் மாணவர்களை தங்களுக்கு அடியாட்களாக மாற்றுவதற்காக திட்டமிட்டே பஸ்டேவை சீரழித்தனர். இன்று அவர்களோடு போலீசு,பத்திரிக்கை, டி.வி, ஆகியவைகளும் இணைந்து மக்களுக்கெதிராக நிறுத்திவருகின்றனர்.அரசு , அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் எல்லா சனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்ட சூழலில், அவர்களுக்கு இருக்கும் ஒரே மகிழ்ச்சி பஸ்டே மட்டும் தான்.

இந்த பஸ்டே விழாவையும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கயிறுகட்டி தங்களைத் தாங்களே முறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் மாணவர்கள். அவர்களே முற்றிலும் சீரழிவுகளை நீக்கி புதியதொரு வரலாற்றை படைப்பார்கள். போர்க்குணத்தோடு, ஒற்றுமையோடு, விளங்கும் மாணவர்களை பொறுப்புள்ளவர்களாக, மக்களின் உரிமைகளை ஓங்கி ஒலிப்பவர்களாக மாற்ற வேண்டியது தான் மாணவர் நலனில், சமூக நலனில் அக்கறை கொண்ட நமது கடமையாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் ஒரே மகிழ்ச்சியான பஸ்டேவை பறிப்பதாக இருக்கக்கூடாது. எனவே நமது பிள்ளைகளான, சகோதரர்களான , நண்பர்களான மாணவர்களின் பஸ்டே விழாவை அங்கீகரித்து ஆதரிப்போம் !

மாணவர்களே ! ரூட் தலைகளே !

கல்லூரி, ரூட், ஏரியா என பிரிந்து கிடந்தது போதும், பஸ்டே நமது உரிமை மட்டுமல்ல. ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் செய்ய வேண்டிய நன்றிக்கடன். பல்லாயிரக்கணக்கான மாணவர்களோடு, பேராசிரியர்கள், உழைக்கும் மக்களின் ஆதரவோடு, பொது மக்களுக்கு இடையூறில்லாமல் பஸ்டேவை கொண்டாடுவோம். பஸ்டே நமது உரிமை என ஆர்ப்பரித்து முழங்குவோம்.

கல்லூரி,ரூட் பேதங்களை மறந்து மாணவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்றிணைவாம் !

பஸ்டே நமது உரிமை என நிலை நாட்டுவோம் !

மாணவர்-தொழிலாளர் ஒற்றுமையை கட்டியமைப்போம் !

தொழிலாளர் உரிமைகளுக்கு மாணவர்களையும், மாணவர்களின் உரிமைக்கு தொழிலாளர்களையும் அணிதிரட்டிப் போராடுவோம்!

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு

பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு !

பு .மா. இ .மு தலைமையில்

மாபெரும் மறியல் போராட்டம்!