• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

சிவகாசி: வெடி விபத்தல்ல பச்சைப் படுகொலை!

விருதநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் நேற்று {5.9.12} பிற்பகலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுயிருக்கின்றன. வழக்கம் போல இதற்கான காரணங்களாக விதிமுறை மீறல்கள் -பாதுகாப்பு குறைபாடுகள் என ஊடகங்கள் விவாதிக்க தொடங்கி விட்டனர். ஆனால் உண்மையான காரணம் விவசாயத்திலிருந்து அம்மக்களை விரட்டியடித்த தனியார்மய-தாராளமய கொள்கைகளே. இது குறித்து யாரும் விவாதிப்பதில்லை.

இதுபோன்ற ஒரு சம்பவம் 2009-ல் உசிலம்பட்டி அருகில் நடந்தபோது புதிய ஜனநாயகத்தில் வந்த கட்டுரையினை அவசியம் கருதி மறுபிரசுரம் செய்கிறோம்.

*********************************

வெடி விபத்தல்ல பச்சைப் படுகொலை!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் அருகே வடக்குப்பட்டியிலுள்ள வி.பி.எம். பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 7-ஆம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 பேர் கொல்லப்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதைக் கண்டு, அந்த வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஒன்றரை வயது குழந்தையோடு பெண்களும் பள்ளிச் சிறுவர்களும் கோரமாகக் கொல்லப்பட்ட துயரம் தாளாமல் மரண ஓலத்தில் துவண்டு கிடக்கிறது வடக்குப்பட்டி.

இறந்தவர்களில் 4 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. மற்றவர்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு வெந்து கரிக்கட்டையாகி கிடந்தனர். மாண்டவர்களைக் கட்டிப்பிடித்து அழுவதற்குக் கூட முடியாமல், உறவினர்கள் கதறியழுத காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையும் செங்கற்சுவரும் வெடித்துச் சிதறி தப்பியோடிவர்களைத் தாக்கியதால் தலை, கை-கால்கள் என பித்தெறியப்பட்டு பலர் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

துரைப்பாண்டியன் என்பவருக்குச் சோந்தமான இந்த வி.பி.எம். பட்டாசுத் தொழிற்சாலை, சிவகாசி பட்டாசுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பிரபலம் அடைந்துள்ளது. சாதாரண திருவிழா பட்டாசு மருந்துகளுக்குப் பதிலாக, வீரியமிக்க அதிக ஒலியெழுப்பும் மருந்துகளைக் கொண்ட பட்டாசுகள் விதிமுறைகளை மீறி இங்கு தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி நெருங்குவதால், குறுகிய இடத்தில் இரவு-பகலாக இங்கு பெருமளவுக்குப் பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாமல், குடிசைத் தொழில் போல பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், விவசாயிகள் வறுமை-வேலையின்மையால் தத்தளிப்பதாலும் வடக்குப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வாழ்வளிப்பது இந்தப் பட்டாசு ஆலைதான். மக்களின் வறுமையைச் சாதகமாக்கிக் கொண்டு, எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி, இலாபவெறியோடு பட்டாசுகளை உற்பத்தி செய்து வந்துள்ளார், இந்த ஆலை முதலாளி. இதற்கு அதிகார வர்க்கமும் போலீசும் உரிய கப்பம் பெற்றுக் கொண்டு உடந்தையாக இருந்துள்ளன. எட்டு பெண்கள் மட்டுமின்றி, கொல்லப்பட்டவர்களில் 4 பேர் பள்ளிக்கூட மாணவர்கள் என்பதும், படுகாயமடைந்தவர்களில் கணிசமானோர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், சட்டமும் விதிகளும் எந்த அளவிற்கு இங்கே அப்பட்டமான மீறப்பட்டுள்ளன என்பதற்குச் சாட்சியங்கள்.

வடக்குப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த கோரமான விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நடந்துள்ளது. சிவகாசி அருகே நமஸ்கரித்தான் பட்டியிலுள்ள கிருஷ்ணா பட்டாசு தொழிற்சாலையில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் கொல்லப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சிவகாசியில் அடுத்தடுத்து நடந்த பட்டாசு ஆலை விபத்துகளில் 22 பேர் கொல்லப்பட்டு, 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வடக்குப்பட்டி போலவே இங்கேயும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பரபரப்புச் செய்திகளும் விசாரணை நாடகங்களும் குறையவுமில்லை.

இப்பகுதிகளில், பாடுபட்டுப் பயிரிட்டாலும் உரியவிலை கிடைக்காமல் விவசாயிகள் போண்டியாவதால், வறுமையிலுள்ள விவசாயிகள், குழந்தைகள் உள்ளிட்டு தமது குடும்பத்தோடு வேறுவழியின்றி உயிருக்கே ஆபத்தான இத்தகைய தொழில்களில் ஈடுபடுகின்றனர். விபத்தும் உயிரிழப்புகளும் நடந்த பிறகும்கூட, ஊருக்கே சோறுபோடும் பட்டாசு ஆலையை மூடிவிடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர். விவசாயம் செய்ய வாய்ப்பு-வசதிகளும் அரசாங்கத்தின் ஆதரவும் இருந்தால், இத்தகைய ஆபத்தான தொழில்களில் எவரும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் அரசோ, ஏற்கெனவே விவசாயத்தைப் புறக்கணித்து வருவது போதாதென்று, விவசாயத்தை விட்டே விவசாயிகளை விரட்டியடிக்கும் தனியார்மயம் – தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, பிழைக்க வழியின்றி விவசாயிகள் நாடோடிகளாக அலைவதும், பட்டாசு தயாரிப்பு, கல்குவாரி, பாதாள சாக்கடையில் மூழ்கி அடைப்புகளை நீக்குதல் முதலான பல ஆபத்தான வேலைகளை எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி செய்யுமாறு தள்ளப்படுவதும், விபத்துகளும் மரணங்களும் பெருகுவதும் கேள்வி முறையின்றித் தொடர்கின்றன.

இந்த அடிப்படையான உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, தொடரும் இத்தகைய விபத்துக்களைப் பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பதும், விதிமுறைகள் – பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கூப்பாடு போடுவதும், விசாரணை நாடகமாடுவதும் கடைந்தெடுத்த பித்தலாட்டமேயாகும். பிழைக்க வழியின்றி விவசாயிகளை வறுமைக்கும், ஆபத்தான தொழில்களுக்கும் தள்ளி உயிர்ப்பலி கேட்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதுதான், இத்தகைய கொடுமைகளுக்கு முடிவுகட்டக் கூடிய உண்மையான அரசியல் பணியாக, உண்மையான நிவாரணப் பணியாக இருக்க முடியும்.

நன்றிபுதியஜனநாயகம், ஆகஸ்டு -2009

இது ‘கின்லே’, என்னமோ ஈஸியா கேக்குற! -கவிதை

விரிந்து கிடக்கும்

தண்டவாள உதடுகளுக்கிடையே

ரயில் பெட்டிகள் பேசிக் கொள்ளும் மொழியின்

அர்த்தம் தேடி அழைந்தது மனது.

 

திசுக்களால் ஆன

பாராளுமன்ற வாதிகளின்  இதழ்களில் இருந்து

வெளிவரும் பட்ஜெட் உரையை விட

இரும்பு இதழ்களிலிருந்து பெறப்படும்

ரயில் பயணத்தின் ஓசைகள்

மனதுக்கு இதமானவை.

கூடவே ரயிலில்

பயணம் செய்தவர்களின் குரல்கள்

கொஞ்சம் கொஞ்சமாய்த் திசைதிருப்பியது

என்னை.

 

கொடுத்த காசுக்கு இடம்பிடிக்கத் தெரியாது

குத்துக்காலிட்டு வழியில் கிடந்த பெரியவர்

தயங்கித் தயங்கி

இருக்கையிலிருந்தவரிடம் இறைஞ்சினா.

 

“கொஞ்சம் குடிக்க தண்ணி தாங்க”

இரட்டுற மொழிதலில் பதில்வந்தது….

 

“இது பாட்டில் தண்ணிய்யா”

 

உள்ளுறை உவமம் அறியாப் பெரியவர்

“பாட்டில் தண்ணியா பரவாயில்லை

கொடுங்க”

என ஆவலாய்க் கை நீட்ட

 

“பனிரெண்டு ரூபாய் கொடுத்து வாங்கின

பாட்டில் தண்ணிய்யா

என்னமோ ஈசியா கேக்குற!”

 

ஈரப்பசையற்ற வார்த்தைகள் எதிர்பாய

பீறிட்டு வந்த பெரியவரின் தாகம்

தன்மானத்தோடு தொண்டைக் குழியிலேயே

தற்கொலையானது.

 

தண்ணீரால் ஒரு மனிதனின் இதயத்தை

இரும்பாக்க முடியும் என்ற நசவாதத்தைக்

கண்ட எனக்கு

சில இரும்பு இதயங்களை

அவலம் தாங்காது அலறும் பெட்டியின்

அர்த்தம் புரிந்தது அப்போது.

-துரை.சண்முகம்

நன்றி புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2001

தொடர்புடைய பதிவுகள்:

தண்ணீர் திருடர்கள்!

மழையைப் பார்ப்பது போன்றதல்ல மழையில் நனைந்து கிடப்பது!

நிலக்கரி திருடன் – டாஸ்மாக் – மறுகாலனியாக்கம்! கருத்துப்படங்கள்

மாருதி குறித்த “எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?” என்ற தலைப்பில் நேற்று (25.8.12) நடந்த பு.ஜா.தொ.மு-வின் கருத்தரங்கத்தில் வைக்கப்பட்டுயிருந்த கருத்துப்படங்கள் இதோ..!

தொடர்புடைய பதிவுகள்:

நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்!

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

மாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

பொதுக்கூட்டங்கள்
தெருமுனைக்கூட்டங்கள்
கலை நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார வர்க்கம் போல் பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளிகள்.  ஒரு நிமிடத் தாமதத்திற்குக் கூட அதை வேலை நீக்கத்திற்கான குற்றமாக்குவது, இயந்திரங்களின் வேகத்தைக் காட்டி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிவது, இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க தவறினால் சம்பள வெட்டு, கழிப்பறைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அற்பக்காரணங்களுக்கும் அசிங்கமாய் திட்டி அவமானப்படுத்துவது என அடுக்கடுக்கான அடக்குமுறைகள். பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்ற பெயரில் குண்டர்களையும் போலீசையும் வைத்து தொழிலாளர்களைத் தாக்க முற்பட்ட போது தொழிலாளிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத்திய போராட்டத்தில் தான் அந்த அதிகாரி பலியானான்.  வன்முறைக்கு வித்திட்டது ஆலை நிர்வாகம், தொழிலாளிகளல்ல.

நாட்டில் 90 சதம் பேர் தொழிலாளிகள், உழைப்பாளிகள்.  அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேச்சுவார்த்தை என அமைதியான வழிகளில் தான் போராடுகிறார்கள்.ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான முதலாளிகள் தான் அதிகார வர்க்கம், போலீசின் துணையோடு ஒடுக்கின்றனர்.  மிக மிக அரிதாகத் தான் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  எங்கோ, எப்போதோ ஒரு அதிகாரி பலியானால் ஊளையிடும் ஓட்டுக்கட்சிகளும், ஒப்பாரி வைக்கும் ஊடங்கங்களும் முதலாளிகள் நடத்தும் படுகொலைகள், வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை.

தனியார்மயத்தின் பெயரால் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளிகளின் வன்முறை மிகப்பெருமளவில் அதிகரித்துவருகிறாது.  நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் கிடைத்த எட்டு மணிநேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை ஒழித்துவிட்டு முதலாளிகள் தங்கள் விருப்பப்படி 12 மணி, 14 மணி, 16 மணி என உழைப்பை உறிஞ்சுகிறார்களே இது வன்முறையில்லையா?  எட்டு மணி நேரம் என்ற சட்டத்தை முதலாளிகள் அமுல்படுத்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம்.  வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முதலாளிகளின் லாப வெறியால் உருவாக்கப்படும் கொடுமை.  இது சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில்லையா?

240 நாட்கள் ஓராண்டில் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை எந்த முதலாளியும் மதிப்பதில்லை.  பத்தாண்டு, இருபதாண்டு பணியாற்றியவர்களைக் கூட திடீரெனத் தூக்கியெறிந்து குடும்பங்களை வீதியில் நிறுத்துகின்றனர் முதலாளிகள்.  பயிற்சியாளர்கள் (ட்ரெய்னி) தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) என்ற பெயரில் சம்பளமே இல்லாமல் அல்லது அற்பச் சம்பளத்தில் இளவயது ஆற்றலை உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து விடுகின்றனர்.  இந்த மோசடியும், துரோகமும் வன்முறையில்லையா?  தமிழகத்தின் பெருந்தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளிகளில் முக்கால்வாசிப்பேர் ஒப்பந்த தொழிலாளிகள்  பெரும்பாலான் ஒப்பந்தத் தொழிலாளிகளை முதலாளிகள் கணக்கில் காட்டுவதேயில்லை.  சென்னையைச் சுற்றி ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், இருங்காட்டுகோட்டை, மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நோக்கியா, ஹூண்டாய், சிமென்ஸ், செயிண்ட் கோபெய்ன் என பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.  அன்றாடம் நடக்கும் ஏராளமான விபத்துகளிலும் ‘மர்ம’மான முறையிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.  இவ்வளவு பெரிய தொழில்பகுதியில் தீவிர, அவசர சிகிச்சைக்க்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை.  அண்மையில் ஹவாசின் என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய 7 பேர் சாலை விபத்தில் இறந்தனர்.  இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அடையாளம் தெரியாதவர்கள் என்றே பதிவு செய்யப்பட்டனர்.  புகழ்பெற்ற டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் கை நசுங்கிய தொழிலாளிக்கு பஞ்சை வைத்துக் கட்டி பேருந்து செலவுக்கு ரூ. 25/- கொடுத்து அனுப்பி விட்டது நிர்வாகம்.  முதலாளிகளின் கொடிய மனதுக்கு சிறு எடுத்துக்காட்டு இது.  ‘சுமங்கலித் திட்டம்’ எனும் பெயரில் கிராமப்புறத்தில் ஏழை இளம்பெண்களைத் திரட்டி கொட்டடிகளில் அடைத்து வரைமுறையின்றி வேலை வாங்குவது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என சொல்லொணாக் கொடுமைகளை கோவை திருப்பூர் பஞ்சாலை முதலாளிகள் நடத்துகின்றனர்.   முதலாளிகள் நடத்தும் வரம்பற்ற வன்முறைகளைப் பற்றி ஊடகங்களோ, ஓட்டுக்கட்சிகளோ பேசுவதில்லை.

கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி, சாலை வசதி என அரசு வழங்கவேண்டிய சேவைகள் அனைத்தையும் தனியார்மயத்தின் பெயரில் முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.  மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்வி வரை ஆக்கிரமித்து ‘தரமான கல்வி’  என்ற போர்வையில் விதவிதமான வழிகளில் – கல்விக் கட்டணம், சிறப்பு வகுப்பு, செருப்பு, சீருடை பேனா, பென்சில், பேருந்து என பெற்றோர்களைக் கசக்கிப் பிழிகின்றனர். எந்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர்.  அரியானா மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் இருநூறு ரூபாய் பணம் கட்டவில்லை என்பதால், இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு சிகிச்சையை நிறுத்தியதால் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்துவிட்டது.    அரசு மருத்துவமனையே இப்படியென்றால் தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.  அப்பல்லோ போன்ற கார்ப்பரேட், தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் முன்பணம் கட்டாவிட்டால் தொட்டுக்கூட பார்க்கமாட்டார்கள்.  இவையெல்லாம் அரசின் துணையோடு முதலாளிகள் நடத்தும் வன்முறையில்லையா?

போலி மருந்து தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள், பத்து மடங்கு, இருபது மடங்கு லாபம் வைத்து மருந்து விற்பனையில் கொள்ளையடிக்க்கும் கொலை பாதகத்தைச் செய்பவர்கள் யார்?  தொழிலாளிகளா, முதலாளிகளா?  மாசுப்பட்ட குடிநீரால் சென்னையில் காலரா நோய்க்கு 30 பேர் பலியாகிவிட்டனர்.  அசுத்தமான குடிநீரில் அன்றாடம் வாந்தி பேதிக்கு இரையாகும் மக்கள் ஏராளம்.  ஆனால் கொக்கோ கோலா, பெப்சி, டாடா, உள்ளூர் மாபியாக்கள் அனைவரும் நீர்வளத்தை உறிஞ்சி விற்று பல்லாயிரம் கோடிகளை சுருட்டுகின்றனர்.  தண்ணீர் சமூகத்தின் பொதுச்சொத்து, அதை முதலாளிகள் கைப்பற்றி உரிமை கொண்டாடுவது வன்முறையில்லையா?  கட்டுப்படியாகாமல் கடன்பட்டு இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்?  விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அநியாய விலைக்கு விற்று, அடிமாட்டு விலைக்கு விளைச்சலை அபகரித்த முதலாளிகள் தானே!  இது வன்முறையில்லையா?

பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பது, கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குவது, பொருள்களைப் பதுக்கி விலையேற்றுவது, கலப்படம் செய்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொதுச்சொத்துக்கள், கனிவளங்கள், கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இப்படி அனைத்துக் கிரிமினல் குற்றங்களையும் செய்வது யார் தொழிலாளியா?  முதலாளியா? இக்குற்றங்கள் வன்முறையில்லையா?  பயங்கரவாதவில்லையா?  சாராயம் காய்ச்சும் ரெளடி மீது பாயும் குண்டர் சட்டம் ஒரு குற்றத்தைக் கூட விட்டு வைக்காமல் செய்யும் முதலாளிகள் மீது பாய்வதில்லை.  காரணம் இக்குற்றங்கள் தனியார்மயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் துணையோடு நடத்தப்படுவதால் தான்!

உழைப்பைச் சுரண்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பண்பாட்டுத்துறையிலும் தங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் முதலாளிகள்.  விற்பனையை அதிகரிக்கவும், சந்தையை விரிவுப்படுத்தவும் பெரு விளம்பர யுத்தத்தை நடத்தி மொத்த சமூகத்திலும் நுகர்வு வெறியை, பாலூணர்வைத் தூண்டுகின்றனர்.  எல்லாவற்றையும் அனுபவிப்பது, எந்த வழியிலும் பணம் சேர்ப்பது, சுயநலம், ஆடம்பரமோகம் என்ற சித்தாந்தத்தைப் பரப்புவதன் மூலம் ஒழுக்கக் கேட்டையே புதிய சமூக ஒழுங்காக மாற்றுகின்றனர்.  இதன் விளைவு தான் நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ரெளடித்தனம் ஆகியவை.  சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவரக்காரணம் முதலாளிகளின் லாபவெறித்தானே!  இது வன்முறை இல்லையா?

முதலாளிகளின் அனைத்தும் தழுவிய இந்த வன்முறையை, பயங்கரவாதத்தை ஓட்டுக் கட்சிகளோ ஊடகங்களோ அம்பலப்படுத்துவதில்லை.  ஏனெனில் இவர்கள் தனியார்மயத்தின் பங்காளிகளாகிவிட்டனர்.  ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பது, அதற்குப் போட்டி போடுவதே அவர்களின் ஜனநாயகம்.  உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை அம்பலப்படுத்த்வதால் தான் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் யார் வன்முறையாளர்கள்?  எது வன்முறை?

சூழ்ச்சி, வஞ்சகம், பித்தலாட்டம், மோசடி, லாபம் இவைதான் முதலாளிகளின் சிந்தனை. வரைமுறையின்றி இயற்கை வளங்கைச் சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழலை அழித்து பூமியின் இருத்தலுக்கே எதிராக இருப்பவர்கள் முதலாளிகள்.

உழைப்பாளி மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறோம்.  வன்முறையை நாம் சிந்திப்பதேயில்லை.  அதனால் தான் அணு உலை வேண்டாம் என்கிறோம்.  ஆபத்து எனத் தெரிந்தும் தங்கள் சுயநலத்திற்கு அணு உலை வேண்டும் என்கின்றனர் முதலாளிகள்.

உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா?  மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

முதலாளித்துவ சுரண்டல், பயங்கரவாத ஒடுக்குமுறை இவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ், பா.ஜ.க. பிற ஓட்டுக் கட்சிகள் அமுல்படுத்தும் தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டவேண்டும்.  இதற்கு மார்க்சிய – லெனினிய மாவோ சிந்த்னை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தலைமையில்  அணிதிரள்வது ஒன்றே வழி!

  • நாடு மீண்டும் காலனியாவதைத்
    தடுத்து நிறுத்துவோம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை
    அடித்து வீழ்த்துவோம்!
  • போலி ஜனநாயக தேர்தல் பாதையைத்
    தூக்கியெறிவோம்!
  • நக்சல்பாரி புரட்சிப் பாதையில்
    ஒன்றிணைவோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு:

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 24
பேச : 94448 34519

தொடர்புடைய பதிவுகள்:

மாட்டுத்தாவணி-கோயம்பேடு….! தோழர் துரை.சண்முகம்

தன் வயிற்றில் பிள்ளைகளைக் சுமந்த மாதிரி

தாய்ச்சுமையொடு பக்குவமாக

மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து

தேசிய நெடுஞ்சாலையை

பிடித்தது பேருந்து.

இயங்குவது எந்திரம் மட்டுமா?

அதனொரு பாகமாய்

ஓட்டுநரின் கையும், காலும்

தசையும், நரம்பும் அசையும்.

வேகமெடுக்கும் சக்கரத்தின் சுழற்சியொடு

வெகுதூரம் சரிபார்த்து

விழிகள் சுழன்று இசையும்.

அவியும் எஞ்சின் சூடும்

இரையும் அரசுப் பேருந்தின் ஒலியினூடே

பேருந்தின் ஒரு தகடின் ஓசையும் வேறுபட்டால்

உடனே அறியும் ஓட்டுநரின் செவிப்புலம்

கும்மிருட்டில்

விரியும் அவர் பார்வை நரம்புகள் மேல்

பத்திரமாய் நம் பயணங்கள்.

எத்தனை பேர் அறிவோம்

அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும் தருணங்கள்.

….

போரும் நள்ளிரவில்… எதிரே தனியார் பேருந்துகளின்

தகிக்கும் விளக்கொளிகள்

இரவையும் பகலாக்கும்.

அதை.. தனியே எதிர்கொண்டு

வேகம் குறையாமல்

லாவகமாய் கைடு வாங்கி

தாய்மடி தூங்காத குழந்தையையும்

தனது ஸ்டியரிங்க் இடவலது தாலாட்டில் உறங்க வைத்து,

துடிக்கும் கண்களுக்குள்

டீசலொடு ஒட்டுநரின் தூக்கமு

எரிந்து விசையாகி எஞ்சின் துடிதுடிக்கும்.

….

அண்ணா சமாதி விளக்கு போல

ஏதோ வெளிச்சம் காட்டும்

முன்விளக்கைப் பற்றிக் கொண்டு

பாதை விரியும் தூரம் முழுக்க

தன் கண் விளக்கால் கடந்து க்டந்து

பயணிகளாஇச் சுமந்து செல்லும்

ஓட்டுநரின் விழி இருக்கை.

….

கொட்டாம்பட்டி தாண்டும் போதோ

கொட்டும் மழை…

பேருந்து நிர்வாகம் போல் இயங்காத வைப்பர்

தினந்தந்தி நாளிதழோ, தான் போடும் புகையிலையோ

பேருந்து கண்ணாடிக்கும் போட்டு

விழி மறைக்கும் மழை விலக்குவார்.

எதிர்ப்படும் மின்னலை கருவிழி துடைத்து

திருச்சி தாண்டி

ஒரு தேநீர் குவளைக்குள்

…..

இரவைக் கலக்கி ஓட்டுநரின் கையில்

பயணிகள் அனுபத்த தூக்கம்

தோலுரிந்து கிடக்கும்.

….

இருள் அப்பிக் கிடக்கும் சாலைகள்…

எதிர்ப்படும் தடைகள், குண்டு குழிகள்

பராமரிப்பில்லாத பேருந்தின் தொல்லைகள்

அத்தனைக்கும் முனகும் குரல்களை

வலிகளாய் தான் வாங்கி….

எரிபொருள் சிக்கனமாய் வண்டியை ஓட்டி

….

தன் இரத்தம் தாராளமாய் விடிய விடிய

கண்களில் கொப்பளித்து

அத்தனை பயணிகளையும்

பத்திரமாய் கோயம்பேட்டில் இறங்கி விட

வானம் வெளுத்து வரும்

ஓட்டுநரின் கண்களோ செக்கச் சிவந்திருக்கும்.

….

தனியார்மயதால் தறிகெட்டு ஓட்டி

நாட்டையே விபத்துக்குள்ளாக்கும்

மன்மோகனையும், ப.சிதம்பரத்தையும்

‘மினிஸ்டர்’ என் மரியாதையாகப் பேசும் வாய்கள்

…..

பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல்

“ஊம். வந்துட்டேன்,

ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.

–         துரை.சண்முகம்

நன்றி புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012

தொடர்புடைய பதிவுகள்:

இளந்தமிழகத்தின் எழுச்சியே வருக…வருக…! துரை.சண்முகம்

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

பெட்ரோல்: 29.5.12 காலை நுங்கம்பாக்கம் IOC அலுவலகம் முற்றுகை! அனைவரும் வருக!!

வி்ஷம் போல் ஏறிவிட்டது பெட்ரோல் விலை! விண்ணைத் தாண்டிப் போகிறது விலைவாசி!

வி்ஷம் போல் ஏறிவிட்டது பெட்ரோல் விலை! விண்ணைத் தாண்டிப் போகிறது விலைவாசி!

பெட்ரோலிய பெருட்களுக்கு மானியம் 26,000 கோடி! லாபம் ரூ 4,73,000 கோடி!

பெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து!

பெட்ரோல்‍ லிட்டருக்கு ரூ 3 விலை உயர்வு! 23 ரூபாய் பெட்ரோலுக்கு 47 ரூபாய் வரி!

 

பெட்ரோலிய பெருட்களுக்கு மானியம் 26,000 கோடி! லாபம் ரூ 4,73,000 கோடி!

 எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.

 இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும் எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற உண்மையை எந்தப் போர்வைக்குள்ளும் மூடிவிட முடியாது.

 – தினமணியில் வந்த அரசின் தந்திரக் கணக்கு கட்டுரையிலிருந்து..

பெட்ரோலிய பொருட்களில் தொடர்ந்து நஷடம் என்று புருடா விடும்

மத்திய அரசின் முகத்திரையினை கிழிக்கிறது இக்கட்டுரை.

தொடர்புடைய பதிவுகள்:

பெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து!

பெட்ரோல்‍ லிட்டருக்கு ரூ 3 விலை உயர்வு! 23 ரூபாய் பெட்ரோலுக்கு 47 ரூபாய் வரி!

நேற்று போபால்… நாளை கூடங்குளமா? – தோழர் முகிலனின் ஓவியம்!

இன்று (மார்ச் 11,2-12) காலை லயோலா கல்லூரியில் “அணு உலைக்கு எதிரான ஓவியர்கள் முகாம்” சார்பில் நடைபெற்ற ஓவியகண்காட்சியில் காலை முதலே ஓவியர்கள் பலர், நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் இறையாண்மைக்கும் எதிரான அணு உலை குறித்த தங்களது ஓவியங்களை வரைய தொடங்கினர். பிற்பகலில் இந்த கூட்டு நிகழ்வு நிறைவு பெற்று அனைத்து ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழரும் ஓவியருமான முகிலன் அவர்கள் வரைந்த ஓவியத்தை இங்கு பதிவு செய்கிறோம்.

 

தோழர் முகிலனின் ஓவியத்தை பார்த்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர், வைக்கப்பட்டுள்ள ஓவியங்களிலேயே உங்கள் ஓவியத்தில் மட்டும் தான் ஒரு கோபம் தெரிகிறது என்றார்.

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

“இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்”

 கூடங்குளம் அணு உலையை திறக்க வேண்டும், அப்பத்தான் நமது மின்வெட்டு பிரச்சனை தீரும் என திருவாளர் மன்மோகனிலிருந்து கருணாநிதி, ஜி.ராமகிருஷ்ணன் வரை தினந்தோறும் அணு’வெறி’ கொண்டு பேசி வருகின்றனர்.  இவர்களையும், கூடங்குளம் குறித்த மாயையும் அம்பலப்பட்டு வரும் நிலையில் புகுசிமா அணு உலை கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு ஊரின் இன்றைய நிலையினை  மேலும் ஒரு சாட்சியாக – கண்முன் நிறுத்துகிறது இந்த கட்டுரை.
***************************************

கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர்-

ஜூலியன் ரெயால்

நடைபாதைகளின் ஊடாகச் செடிகள் வளர்கின்றன. தொலைபேசிக் கம்பங்கள் ஒரு தினுசான கோணத்தில் சாய்ந்து கிடக்கின்றன. புகுஷிமா நிர்வாகப்பகுதியின் கடலோரத்தில், தெற்கே சில மைல்களுக்கு அப்பால், மற்ற சமூகத்தினர் புது குடியிருப்புகளைக் கட்டியெழுப்பும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தோமியோகா இருப்பது புகுஷிமா டாய்-ச்சி அணுஉலைக் கூடத்திலிருந்து எட்டு மைல்களுக்கு உள்ளாக – தடை செய்யப்பட்டுள்ள 13 மைல்கள் ஆரம்கொண்ட மண்டலத்துக்குள்ளாக! இங்கு வசித்தவர்கள் வெளியேறி ரொம்ப நாளாகிவிட்டது.

 நெüடோ மட்சுமுரா மட்டுமே தோமியோகாவில் எஞ்சி நிற்பவர். மின்சாரம் இல்லாமலும், குடிநீர் விநியோகம் இல்லாமலும், தனிமையை எதிர்கொண்டபடியும், உயரளவு கதிர்வீச்சின் நிரந்தர அச்சத்துடனும் அங்கேயே இருக்கிறார்-ஒரு நெருப்புக்கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீனி போடுவதற்காக!  ஓராண்டு கழிந்த நிலையில், மட்சுமுரா (வயது 52) மனிதர்களைவிடவும் பிராணிகளுக்கு முக்கியத்துவம் தருவதாகத் தோன்றுகிறது. சாலை போடும் இயந்திரங்களை இயக்குபவரான மட்சுமுரா, “”நிலநடுக்கம் தாக்கியபோது நான் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆழிப்பேரலை வந்து கொண்டிருப்பதாக வானொலியில் சொல்லக் கேட்டோம்”. என்கிறார். “”அடுத்தநாள் அணுஉலைக் கூடம் வெடித்ததைக் கேட்டேன். என்ன நடந்தது என்பதை எனக்கு யாரும் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை. ஏனென்றால், அவ்வளவு பெரிய “டமால்’ சத்தம்”.  வீட்டில் தாய், தந்தை மற்றும் உள்ளூர் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் மேலும் பல வெடியோசைகளைக் கேட்டனர்.

இறுதியாக, தெற்குநோக்கிச் செல்வதென தீர்மானித்தனர். “”ஐவாகி ஊருக்குப் போய் என் அத்தை வீட்டுக் கதவைத் தட்டினேன். அவள் எங்களில் ஒருவரைக்கூட வீட்டுக்குள் விடவில்லை. ஏனென்றால், நாங்கள் கதிர்வீச்சால் கெட்டுப்போய்க் கிடப்பதாக அவள் சொன்னாள். ஆகவே, அருகில் இருந்த அடைக்கலமையத்துக்குச் சென்றோம். ஆனால், அங்கேயும்கூட எங்களை அவர்கள் தங்கவிடவில்லை. ஆகவே, வீடு திரும்பினோம் என்கிறார்.  ஏப்ரல் மாதம் மட்சுமுராவின் தாய்க்கு உடல்நலம் குன்றியது. ஆகவே, குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும், ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருந்த 18 மைல் தூரத்துக்கு அப்பால் சென்று உறவினர்களுடன் தங்கினர். “”எங்களால் கால்நடைகளைக் கொண்டு செல்ல இயலவில்லை. ஆகவே, நான் இங்கேயே தங்கிவிட்டேன்” என்கிறார்.

தொடக்கத்தில், வளர்த்தவர்களால் கைவிடப்பட்ட 60 நாய்கள், 100 பூனைகளை இவர் பார்த்துக் கொண்டார். தவிர, நூற்றுக்கணக்கான வாத்துகளும், இன்னமும் பூட்டப்பட்டுக் கிடக்கும் தொழுவத்தில் கால்நடைகளும் இருந்தன. வீட்டுப் பிராணிகள் பலவும் கூட்டுச் சேர்ந்து கிளம்பிச் சென்றபோது – இவரிடம் 7 நாய்களும், 14 குட்டிகளையும் விட்டுவிட்டுச் சென்றன. மட்சுமுராவின் நோவா பாதுகாப்புப் பெட்டகத்தில் 60 ஆடுகளும், அதில் பாதி அளவுக்கு பன்றிகளும், ஒரு பண்ணையின் முப்பது பறவைகளில் பிழைத்திருக்கும் ஒரேயொரு பறவையாகிய நெருப்புக்கோழியும் இருக்கின்றன.

தடைசெய்யப்பட்ட பகுதியில் ரோந்து வந்த போலீஸôர் நெருப்புக்கோழியின் முதலாளியை அழைத்தனர். அவர்களைச் சமாதானம் செய்ய மட்சுமுராவுக்கு ஒரு முற்பகல் முழுதும் தேவைப்பட்டது. திரும்பிவந்தபோது நெருப்புக்கோழியைக் காணவில்லை. ஐந்து மைல்களுக்கு அப்பால் இரை தேடிக்கொண்டிருந்த வான்கோழியைத் தேடிப்பிடித்து கொண்டு வந்தார்.  ஆளரவமற்ற அந்த நிலப்பரப்பில் மட்சுமுரா தனது வாகனத்தை ஓட்டிப்போய் மற்ற பிராணிகளைத் தேடிச் சென்று உதவி செய்கிறார்.

இவர் எந்த இடத்தில் தங்களுக்கான தீனியை வைக்கின்றார் என்பதை கால்நடைகள் அறிந்துள்ளன. அவருக்காக அங்கே அவை காத்திருக்கின்றன.  “”நான் வெளியேற வேண்டும் என்று போலீஸôர் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் இந்த பிராணிகளைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்றாகிவிடும்” என்கிறார் மட்சுமுரா.  அக்டோபர் மாதம் இவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதில், இவர் உடலில் கதிர்வீச்சு அளவு 134 முதல் 137 வரை இருந்தது. “”இதற்குக் காரணம் நான் இந்த மண்ணிலேயே விளையும் காய்கறிகளைத்தான் சாப்பிடுகின்றேன்” என்கிறார் மட்சுமுரா.

மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். “”இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்” என்கிறார் மட்சுமுரா.   

(மார்ச் 6, 2012-ல் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்பட்ட, டெய்லி டெலிகிராப் செய்திக்கட்டுரையின் தமிழாக்கம்.)

 நன்றி தினமணி

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!