• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சில்வர் பாத்திர வியாபாரியும், 27 வயது மட்டுமே நிரம்பிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இளம் தோழர் செந்தில் கடந்த அக்_26 அன்று ரவுடியாக வளர்ந்து வர விரும்பும் இளம் கிரிமினல் கும்பலால் (வயது 17,18,19,) கொல்லப்பட்டார் .

அக்டோபர்_26, அன்று கார்த்திக், நாகேந்திரன் என்ற இளம் கிரிமினல்கள் இருவரும் மது அருந்திவிட்டு தோழர் செந்தில் வசித்து வரும் குறுகலான தெருவில் இரு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக போவது, சாகசம் செய்வது என பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தார்கள். உடனே தோழரும், வேறு சிலரும் கண்டித்தும், எச்சரித்தும் அனுப்பி உள்ளனர். தோழரின் எச்சரிக்கையை தங்களுக்கு விடப்பட்ட சவாலாக கருதிய அந்த‌ கும்பல். அன்று இரவே தங்கள் கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு தோழரை கொல்ல வந்துள்ளனர். அன்று இரவு 10.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த தோழரை கிரிமினல் கும்பல் வயிற்றில் கத்தியால் குத்தி சாய்த்து ஒடிவிட்டனர்

குத்துப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த தோழரை மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் முன் உயிர் அடங்கி விட்டது. பின்பு உடலைப் பிரேதப் பரிச்சோதனை முடித்து அக்டோபர் 27ம் தேதி அன்று மதியம் பெறப்பட்டு, யா.ஒத்தக்கடையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்களும், சில்வர் பட்டறைத் தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு சுடுகாடு வரை ஊர்வலமாக விண்ணதிர முழக்கமிட்டனர்.

தோழரைக் கொன்ற குற்றவாளிகளில் இருவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.  மற்றவர்களை சாட்சியங்கள் இல்லை என பூசி மெழுகி வருகிறது. மறுநாள் பிற குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராடினார்கள். இந்த படுகொலையினால் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யா.ஒத்தக்கடையில் அமைந்துள்ள யானை மலையை சிற்ப நகரம் உருவாக்கப் போகிறோம் என்று கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு திட்டம் போடப்பட்டது.  இத்திட்டத்தை எதிர்த்து “யானை மலை பல்லாயிரம் கோடி மதிப்புடைய கிரானைட் கற்களால் ஆனது”,   “அதை கொள்ளையடிப்பதற்கான சதி தான் சிற்ப நகரம்” என்றும் , ” இத்திட்டம் எவ்வாறு மக்கள் விரோதமானது” என்றும் அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு மக்களிடையே இயக்கம் எடுத்தது. அந்த இயக்கத்தில் பு.ஜ.தொ.முவின் சரியான அரசியல் நிலைப்பாடும், செயல்பாடு கண்டு ஈர்க்கப்பட்டு அமைப்போடு அறிமுகமாகி நெருக்கமானார் தோழர் செந்தில்.

அமைப்பில் இணைந்த பின் அவர் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு அமைப்பு, அரசியல் வேலையும், அது புதிய ஜனநாயகம் பத்திரிகையை மக்களிடம் அறிமுகபடுத்துவதிலாகட்டும், நிதி வசூலாகட்டும், சுவரொட்டிகள் ஒட்டுவதிலாகட்டும், அனைத்திலும் அவர் இல்லாமல் நடந்ததில்லை என்கிற அளவிற்கு தோழர் உற்சாகத்தோடும், முனைப்போடும், முன்னணியாகவும் செயல்ப்பட்டார்.

சம‌ச்சீர் கல்வியை அமுல்படுத்தக் கோரி நடந்த போராட்டங்களில் தனி ஆளாக நின்று மக்களிடையே பிரசுரம் வினியோகிப்பது, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களிடம் இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கியும் பேசி அப்போராட்டங்களுக்கு ஆதரவை திரட்டினார். அரசு பள்ளி மாணவர்களை திரட்டி போராட முயற்சி எடுத்தார்.

ஒரு முறை வியாபார விசயமாக வெளியூர் சென்று திரும்பும் போது, சாலையில் விபத்தில் சிக்கி அடிப்பட்டு கிடந்தவரை பார்த்தவுடன், தான் வந்த பேருந்தை நிறுத்தி இறங்கி கொண்டு ஆம்புலன்ஸை வரச் செய்து விபத்துக்குள்ளானவரை மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பி பின் தான் வீடு வந்து சேர்ந்தார். முகம் தெரியாத நபர்களை கூட நேசிக்கும் பண்பாளர்.

ஒரு விசயம் தவறு என்று கருதினால் அதற்கு எதிராக விடாப்பிடியாக போராடக் கூடியவர், அதில் நண்பர்கள் என்றாலும் சமரசம் செய்துக் கொள்ளாத நேர்மையாளர். ஒரு முறை தனியார் பள்ளியின் வேனை தோழரின் நண்பர் ஒருவர் மது அருந்திவிட்டு மாணவர்களை வீட்டிற்கு விட டிரிப் அடிக்க போனார், அதை கண்டித்து, “மது அடித்து விட்டு டிரிப் அடிக்க கூடாது பல குழந்தைகள் உன்னை நம்பி வருகிறது” என்று வேனை எடுக்கவிடவில்லை. பள்ளி நிர்வாகத்திடமும் போராடி வேனை எடுக்கவிடவில்லை, பின்பு வேறு ஒரு ஒட்டுநரை வைத்து வேன் எடுக்கப்பட்டது.தோழரின் நடவடிக்கையை பார்த்த பொதுமக்களில் பலரும் பாராட்டினர்.

அதே போல மற்றொரு நண்பர் ஒரு பெண்னை காதலித்து ஏமாற்றி விட்டார். இதை பொறுத்துக்கொள்ள முடியமால் அந்த நபருக்கு எதிராக காவல்துறை வரை சென்று போராடினார்.

தோழர் அமைப்பில் இணைந்த பிறகு சாதி சங்கத்தினர் ஒரு நிகழ்ச்சியில் தனது புகைப்படத்தை பேனரில் போட்டதற்கு எதிராக சாதி சங்கத்தினரை அம்பலப்படுத்தி, சண்டையிட்டு தனது புகைப்படத்தை பேப்பர் வைத்து அவர்களை வைத்தே ஒட்டி மறைக்க‌ வைத்தார்.

யார் எப்போது உதவி கேட்டாலும் செய்வது, அவசர தேவைக்கு இரத்ததானம் செய்வது, இரத்த கொடையாளர்களை ஏற்பாடு செய்து தருவது என மனிதாபிமான இதயத்தொடும்  இருந்தார்.

தனது வியாபாரத்தில் எப்போதும் நேர்மையையும், மக்களின் மீது அக்கறையும் கொண்டிருந்தார். டிமாண்ட் அதிகம் உள்ள சரக்குகளுக்கு கூட எப்பொதும் வைக்கும் லாபத்திலேயே விற்பனை செய்வார், கூடுதலாக லாபம் வைக்க மாட்டார், கேட்டால் இதனால் பாதிக்கப்படப் போவது மக்கள் தானே என்று ஈரம் சொட்ட பேசுவார்.

டீ கடைகளில் பிளாஸ்டிக் கப்பிற்கு பதில் பேப்பர் கப்பை பயன்படுத்த தொடர்ந்து வலியுறித்தி சுற்று சூழலை நேசித்தார்.

காவ‌ல்துறையினரையும், அதிகாரவ‌ர்க்க‌ங்களையும் எதிர்க்கொள்வதில்  துணிச்ச‌லும், போர்க் குணமும் கொண்ட‌வ‌ர். ஒரு முறை உய‌ர்நீதிம‌ன்ற சுவ‌ரில் அமைப்பு சுவ‌ரொட்டியை ஒட்ட சென்றபோது இங்கே சுவ‌ரொட்டி ஒட்ட‌ கூடாது என காவ‌ல்துறையின‌ர் எச்ச‌ரித்த‌ன‌ர். நீதிப‌திக‌ளை பாராட்டி சுவ‌ரொட்டி ஏன் இங்கே ஒட்ட‌ப்ப‌ட்டுள்ளது என காவ‌ல‌ரை கேள்வி கேட்டு திணறடித்தார். பின் நாங்க‌ள் மக்களுக்கு க‌ருத்துக்க‌ளை பிர‌ச்சார‌ம் செய்ய‌தான் சுவ‌ரொட்டி ஒட்டுகிறோம் ஆகையால் இங்கே தான் ஒட்டுவோம் என்று போராடி சுவ‌ரொட்டியை அங்கேயே ஒட்டி விட்டுவ‌ந்தார்.

தோழர் அமைப்பிற்க்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தனது பழைய   வர்க்க பண்புகளை துச்சமாக தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்க பண்புகளுக்கு வெகுவிரைவில் தன்னை போர்க்குணமாகவும், எளிமையாகவும் மாற்றிக் கொண்டார். தோழர் எந்த இடத்திற்கு போனாலும் அங்கே யாராவது அவருக்கு அறிமுகமானவர் இருப்பார்கள், அந்த அளவிற்கு மிகவும் சரளமாக பழகக் கூடியவர். எந்த ஒரு சூழலிலும் ஒரு விசயத்தை முடியாது என்று கைவிடமாட்டார்.

சோர்வுற்றிருக்கும் தோழர்களையும் உற்சாகப்படுத்தி அமைப்பு வேலைகளுக்கு அழைத்து செல்வார். வியாபார‌ விச‌ய‌மாக‌ செல்கிற‌ ஊர்க‌ளில் கூட‌ புர‌ட்சிக‌ர‌ அர‌சிய‌லை பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடிய‌வ‌ர். விரைவில் மிக‌ச்சிற‌ந்த‌, த‌குதிவாய்ந்த‌ தோழ‌ராக‌ வளர்வார் என்று அமைப்பின் முழு நம்பிக்கையை பெற்றிருந்தார்.

த‌ன‌து குடும்ப‌த்தையும் கூட‌ அர‌சிய‌ல்ப‌டுத்தினார், காத‌ல் ம‌னைவி க‌லைவாணியையும் அமைப்பு , அர‌சிய‌லை ஏற்க‌ச் செய்து வேலைக‌ளில் ஈடுப‌ட‌ச்  செய்தார். அமைப்பு போராட்ட‌ங்க‌ளுக்கு, கூட்ட‌ங்க‌ளுக்கு குடும்ப‌த்தோடு ப‌ங்கேற்று ம‌ற்ற தோழ‌ர்க‌ளுக்கு எல்லாம் முன் உதார‌ணமாக‌ திக‌ழ்ந்தார். தோழ‌ருக்கு 3 வயதேயான ஒரு குழந்தையும், பிறந்த‌ ஏழு நாள்க‌ளே ஆன ஒரு குழ‌ந்தையும், என‌ இர‌ண்டு ஆண் குழ‌ந்தைக‌ள் உள்ளன‌.

தோழ‌ர் கொல்ல‌ப்படுவதற்கு சற்று முன் கூட‌ அத்வானியின் ர‌த‌ யாத்திரையை அம்பலப‌டுத்தி அச்ச‌டிக்க‌ப்ப‌ட்ட‌ சுவ‌ரொட்டிகளை மறுநாள் அதிகாலை ஒட்டுவ‌த‌ற்கு தேவையான‌ ப‌சையை க‌ரைத்தும், சுரொட்டிக‌ளை த‌யாராக‌ வைத்து விட்டும் சென்றார். இறுதியில் அவ‌ர் க‌ரைத்த‌ ப‌சையிலேயே அவ‌ரின் அஞ்ச‌லி சுவ‌ரொட்டி ஒட்ட‌ப்ப‌டும் துய‌ர‌ம் தோழ‌ர்க‌ளின் நெஞ்சை பிழிந்த‌து.

” துரோகிக‌ளின் ம‌ர‌ண‌ம் இற‌கை விட‌ இலேசானது, ம‌க்க‌ளின் ந‌லன்க‌ளுக்காக வாழ்ந்த‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ணம் மலையை விட‌ க‌ன‌மான‌து”
என்றார் மாவோ. அதேபோல‌ ந‌ம்மை எல்லாம் யானை ம‌லையை விட‌ க‌ன‌மான‌ துய‌ர‌த்தில் ஆழ்த்தி விட்ட‌து தோழ‌ரின் ம‌ர‌ணம்.

தோழ‌ரின்  உயிரைப் ப‌றித்த‌து நான்கு இள‌ம் கிரிமின‌ல்க‌ள் என்றாலும், அவ‌ர்க‌ள் ஒரு க‌ருவி ம‌ட்டுமே. க‌ருவி த‌யாரான‌ இட‌ம் இந்த‌ செல்ல‌ரித்த‌ சமூக‌ம் தான். வாழ்க்கையைப் ப‌ற்றி எந்த‌ ம‌திப்பிடுக‌ளும் இல்லாம‌ல், எப்ப‌டி வேண்டுமானாலும் வாழ‌லாம் என்ற க‌ண்ணேட்ட‌மும், ர‌வுடியிச‌த்தை கொண்டாடுகிற சினிமாக்க‌ள், ம‌னித‌ பண்புக‌ளை இழ‌க்க‌ச் செய்யும் சாராய வியாபார‌மும் தான் க‌ருவி த‌யாராகும் க‌ளம்.

இந்த‌ கொலைக்க‌ளங்க‌ளை ஒழிக்காத‌ வ‌ரை நாம் இன்னும் இத்த‌கைய‌ இழ‌ப்புக‌ளை ச‌ந்திக்க‌ வேண்டியிருக்கும் என்ற எச்ச‌ரிக்கையோடும், இந்த‌ அழுகி நாறும் ச‌மூக‌த்தை வெட்டி வீசும் வ‌ரை தோழ‌ர் செந்திலின் புர‌ட்சிக‌ர‌ உணர்வையும், போர்க்குணத்தையும், இல‌ட்சிய‌க்க‌ன‌வுக‌ளையும், நற்ப‌ண்புக‌ளையும் நெஞ்சில் ஏந்தி போராட‌ உறுதியேற்போம்.

____________________________________________________________

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மதுரை

முதல் பதிவு: வினவு

குரோம்பேட்டை M.I.T மாணவ – மாணவிகளை கொடுமைப்படுத்தும் முதல்வர் தாமரைச் செல்வியின் வக்கிரத்தை முறியடிப்போம்!

தமிழக அரசே!

  • சோதனை என்ற பெயரில் இழிவுபடுத்துதல், தண்டனை என்ற பெயரில் பணம் பறிப்பு!

  • அன்றாடம் மாணவர்களை சித்திரவதை செய்து வரும் தாமரைச் செல்வியை உடனே பணி நீக்கம் செய்!

மாணவர்களே!

  • மாணவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதை தடுத்து நிறுத்துவோம்!

  • ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தவும் போராடுவோம்!

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!

  

மெட்ரோ ரயில் என்ற பெயரில், பச்சையப்பன் கல்லூரி நிலம் அபகரிக்கப்படுவதை எதிர்த்து மாணவர்களும், பேராசிரியர்களும் தொடர்ந்து போராடிவரும் நிலையில் இதனை ஒட்டி எழுதிய கட்டுரை தேவை கருதி மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.

” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸீல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு “

23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு (preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.

கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது, ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.

அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.

இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.

இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.

ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் “

எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?

ஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.

உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள். அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.

இது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.

NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.

மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.
நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.

மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.

இதோ !!!!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் ?

_________________________________________________________

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு) , சென்னை
_________________________________________________________

சமச்சீர் பாடத்திட்டத்தை வழங்க கோரி புமாஇமு தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களில் 63 தோழர்கள் சிறையில் அடைப்பு!

நேற்று (1.8.2011) காலை பூவிருந்தவல்லி நெடுச்சாலை தாசப்பிரகாஷ் ஹோட்டல் அருகே புமாஇமு தலைமையில் சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே வழங்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளீட்ட 600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் தவிர்த்து 63 தோழர்களை போலீசு பல்வேறு வழக்கின் கீழ் சிறையில் அடைத்து உள்ளது.

கைது செய்வதன் மூலம் புமாஇமு போராட்டத்தை முடக்க முடியாது, அதிகப்படுத்தவே முடியும். இதோ புமாஇமு தோழர்கள் தனது போக்குணமிக்க போராட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.

சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமல்படுத்து! பு.மா.இ.மு தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 600 பேர் கைது!

சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமல்படுத்து! பு.மா.இ.மு தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 600 பேர் கைது!

சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் அதற்கு எதிரான அத்தனை சதிவேலைகளையும், நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மும்முரமாகச் செய்து வரும் பாசிச ஜெயா அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் பு.மா.இ.மு. சென்னை, தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே, மாணவர்கள், பெற்றோரை அணிதிரட்டி போர்க்குணமிக்க மறியலை இன்று  நடத்தியது.

காலை 10.30 மணிக்கு தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே சிக்னலில் மறியல் நடத்துவதென முடிவு செய்து, அப்பகுதியைச் சுற்றிலும் நேற்றே வீச்சான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதால் நூற்றுக்கணக்கான பெற்றோர் திரண்டு வந்தனர். சரியாக 10.30 மணிக்கு பள்ளி, கல்லூரியை சேர்ந்த தோழர்களும், மாணவர்களும் பேருந்திலிருந்து இறங்கி, முழக்கமிட்டபடியே  சாலையை மறித்து நின்றனர். இதே சமயத்தில் சந்தோஷ் நகர் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பெற்றோர், போலீசின் தடையை உடைத்து கொண்டு, சாலைக்கு வந்து, மாணவர்களுடன் கரம் கோர்த்தனர்.

பு.மா.இ.மு சென்னைக்கிளை செயற்குழுத் தோழர்கள் கார்த்திக்கேயன், நெடுஞ்செழியன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சரவணன் ஆகியோர் தலைமையில் தொடங்கிய இம்மறியலால் நாற்புரமும் போக்குவரத்து ஸ்தம்பித்ததைக் கண்ட போலீஸ் உடனடியாக செய்வதறியாது திகைத்தது. 10 நிமிடத்திற்குள் போக்குவரத்து மேலும் தேங்குவதுடன் போராட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்ததால், உடனடியாக முன்னணியாளர்களைக் குறிவைத்துக், களத்தில் இறங்கியது போலீஸ். சிவப்பு சட்டை அணிந்தவர்களை எல்லாம் தரதரவென இழுத்து வந்து வேனில் ஏற்ற முயல, தோழர்கள் வர மறுத்தபோது லத்தியால் அடித்தும், வேனில் படியில் நின்று முழக்கமிட்டவர்களை தாக்கியும் கட்டுப்படுத்த முயன்று தோற்றனர். தோழர்கள் ஏற்றப்பட்ட வேனை, மற்றவர்கள் முற்றுகையிட்டு மறித்ததும், அங்கிருந்த பள்ளி மாணவர்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளியும், சங்கிலிபோல் நிற்பனை உடைக்கவும் முயன்றது போலீசு.

ஆனால் பள்ளி மாணவர்களோ, “முதல்ல எங்களுக்கு புத்தகம் கொடு” , “எங்கள எதுக்கு இழுக்கற, ரோட்டுக்கு வரவச்ச கவர்மெண்ட போய் கேளு” என வாக்குவாதம் செய்து வாயடைத்தனர். ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டு, ஒவ்வொரு தோழரையும் மிருகத்தனமாக இழுத்துச் சென்றும், சிலரை 5,6 பேர் சேர்ந்தும் இழுத்துச் சென்றும் வேனில் ஏற்றினர். நாலாபுறமும் வாகன நெரிசல், பொதுமக்கள் மத்தியில் மேலும் போலீசும், வேனும் கொண்டுவரப்பட்டு பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் மூன்றாகப் பிரித்து வைத்ததோடு, தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரிமாண்டு செய்யவும் முயன்று வருகிறது, பாசிச ஜெயா அரசு. மீண்டும் ஒரு முறை புழல் சிறையைப் பிரச்சார மேடையாக்க தயாராகிவிட்டனர் பு.மா.இ.மு தோழர்கள்.

சமச்சீர் கல்விக்காக போராடிய பு.மா.இ.மு , ம.க.இக ஆகிய புரட்சிகர அமைப்புகளுக்கு வெற்றி!

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடப்பாண்டிலும் தொடர வேண்டும். வருகிற 22ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை முடக்க நினைத்த பாசிச ஜெயாவின் திட்டத்திற்கு எதிராக போராடிய பு.மா.இ.மு , ம.க.இக ஆகிய புரட்சிகர அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி!

Related:

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – அரங்கக் கூட்டம் ! அனைவரும் வருக !

பஸ்டே’வை கொண்டாடுவோம்!

பஸ்டே’வை கொண்டாடுவோம்!

“பஸ்டே” கொண்டாடுவதால் டிராபிக் ஜாம் ஆகிறது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் தடைசெய்கிறோம்” , இது ஐகோர்ட் நாட்டாமைகளின் உத்தரவு. மாணவர்கள் ரவுடித்தனம், பொறுக்கித்தனம் செய்கிறார்கள் “ஆமா அந்த மாணவர்களுக்கு கடுமையான தண்டனை” வழங்க வேண்டுமென்று குரைக்கின்றன பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும். இதையே சாக்காக வைத்துக்கொண்டுகல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்கள் பேராசிரியர்களின் மண்டையை உடைக்கிறது போலீசு.

எதை வைத்து பஸ்டே’ வை தடை செய்தது நீதிமன்றம்?. ஒருநாள் ஏ.சி. காரில் செல்லும் போது நீதிபதி ஏன் டிராபிக் ஜாம் ஆகிறது என்று விசாரித்து பஸ்டே என்றவுடன் கொதித்துப்போனாராம். ஒருநாள் தானே பஸ்டே கொண்டாடப்படுகின்றது. மீதம் 364 நாட்களும் டிராபிக் ஜாம் ஆகிறதே அதற்கு யார் காரணம் ? காருக்குள்ளேயிருந்தே விசாரித்த நீதிபதி டிராபிக் ஜாம் எப்படி ஆகிறதென்பதை கண்டறிய காலை 7 மணிக்கு கோயம்பேடுக்கும், காலை 10 மணிக்கு அண்ணா மேம்பாலத்திற்கும் வந்திருக்கிறாரா? ஐடி கம்பெனி பஸ்களும்,கார்களும் குவிந்திருப்பது காரை விட்டு வெளியே வந்தால் தானே தெரியும். 100 பேர் செல்லக்கூடிய இடத்தை ஒன்று அல்லது இருவர் மட்டும் செல்லக்கூடிய கார்கள் ஆக்கிரமித்திருக்கின்றன.

கருணாநிதி,ஜெயா,விஜயகாந்த் என தினமும் பிறந்தநாள், வேட்புமனுத்தாக்கல் எனக்கூறிக்கொண்டு டிராபிக் ஜாம் நெருக்கடிக்குள் மக்களை தத்தளிக்க வைக்கின்றனர். முதல்வர் செல்கிறார் என்று வேகாத வெயிலிலும் கொட்டும் மழையிலும் மக்களை பல இடங்களில் நிறுத்தி வைத்து டிராபிக் ஜாமை உருவாக்குகிறார்களே இதெல்லாம் தெரியாதா? இதற்கெல்லாம்தடைவிதிப்பாரா? மெத்தப்படித்தவர்களாககாட்டிக்கொள்ளும் நீதிபதிகளும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் அறிவு நாணயம் இருந்தால் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

“மாணவர்கள் பஸ்ஸிலே ரூட் அடிக்கிறார்கள் என்று பேருந்தில் தொங்கும் மாணவர்களை அடித்து நொறுக்குகிறது போலீசு. கோடிக்கணக்கான மக்கள் குவிந்திருக்கும் இந்தச் சென்னையில், அவர்களுக்கு ஏற்றாற் போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா? மாணவன் மட்டும்தான் படியில் தொங்குகிறானா? வேலைக்குப் போகும் ஆண்கள், பெண்கள், வயதான தாய்மார்கள் என் அனைவரும் தான் உயிரைப் பணயம் வைத்து தொங்கிக் கொண்டு செல்கிறார்கள். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்குவதாலேயே ரவுடிகள் என்கிறது, அலகாபாத் நீதிமன்றத்தால் ” காக்கிச்சட்டை அணிந்த ரவுடிகள்” என்று பட்டம் பெற்ற போலீசு. இவர்களின் யோக்கியதை நமக்கு தெரியாததா என்ன ? காவல்நிலைத்திற்கு புகார் கொடுக்க யாராவது நிம்மதியாக சென்று வர முடியுமா? “ங்கோத்தா, ங்கொம்மா ” என்று வார்த்ததைகள் வராத வாய்கள்தான் உண்டா? எத்தனை எத்தனை பெண்கள் மீதான காவல் நிலைய வன்புணர்ச்சிகள், கொலை, கொள்ளை, விபச்சாரம், ஆள்கடத்தல்கள் என அனைத்து கிரிமினல் வேலைகளையும் முன்நின்று நடத்துவது போலீசு தானே. இவர்களால் எப்படி மாணவர்களை திருத்த முடியும்?

மாணவர்கள் பேருந்துகளில் பாட்டுப்பாட வேண்டும், டாப் அடிக்க வேண்டும் எனக் கற்றுக்கொடுத்த சினிமாக்களும் டிவிக்களும் தான் பெண்களை கிண்டல் செய்வதையும் தம் அடிப்பதையும், சரக்கடிப்பதையும் ஊக்குவித்தன. காதலன் படத்திற்கு பிறகு தான் பஸ்ஸிலே டாப் அடிப்பது அதிகமாயிருக்கின்றது. பாய்ஸ் படத்தின் மூலம் பெண்களுக்கு எப்படியயல்லாம் மார்க் போடலாம் என்று கற்றுக்கொடுத்த இயக்குனர் சங்கர், எழுத்தாளன் சுஜாதாவையும் கைது செய்யவில்லை போலீசு, சீரழிவையே பரப்பும் சினிமாக்களுக்கு சென்சார் போர்டு தடை விதிக்கவில்லை, தடைவிதிக்க வேண்டிய தமிழக முதல்வர் மானாட மயிலாட நிகழச்சியில் சிறுவர் சிறுமிகளை ஆபாசமாக ஆடவிட்டு ரசிக்கிறா,வரிவிலக்கு அளித்து ஊக்குவிக்கிறார். இந்த கருணாநிதி அரசுதான் மாணவர்கள் பேருந்தில் பாடுகிறார்கள், பெண்களை கிண்டல் செய்கிறார்கள் என சீரழிந்தவர்களாக காட்டுகிறது .

“பஸ்டே கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது, கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்” துணை வேந்தர். ஆகா என்ன ஒரு கடமை உணர்வு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் 67 கல்லூரிகளில் பெரும்பாலும் ” பிரின்ஸ்பால்” இல்லை. கல்வி அரசிடமிருந்து தனியாருக்கும், தனியாரிடமிருந்த டாஸ்மாக் அரசுக்கும் கை’ மாறி தெருக்களெல்லாம் சாராயக்கடைகளாக நாறுகின்றன, மாணவர்கள் தங்கள் உரிமைகளை முன்வைக்க ஒரே வாய்ப்பாக இருந்த ” மாணவர் பேரவை தேர்தல்” நடத்தப்படுவதில்லை. கல்லூரிகளில் முறையான விளையாட்டு மைதானங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் சாமியார்கள் கும்மியடிக்கிறார்கள்.மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்த கலாச்சார விழாக்கள் நடத்தப்படுவதிலலை, கலை மற்றும் இலக்கியங்களில் சிறந்து விளங்கும் மாணவர்களின் திறமை மேம்படுத்தப்படாமல் அஸ்தமனமாகிப்போகின்றது.நூலகம், கேண்டீன், குடிநீர், கழிவறை எனஅடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. இதையயல்லாம் செய்து தர வக்கில்லாத துணைவேந்தர் மாணவர்களை கண்டிப்பது, “”ஊதாரி அப்பன் மகனுக்கு கூறும் உபதேசமல்லவா””.

ஏழை மாணவர்கள் படிப்பதற்கான சூழல் இல்லாததைப்பற்றியோ, அவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டதைப் பற்றியோ, விலைவாசி உயர்வால் மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்படுவது பற்றியோ, மாணவர்கள், தொழிலாளர்கள்,விவசாயிகள், வழக்குரைஞர்கள் என அனைவரையும் போலீசு கடித்துக்குதறுவதைப் பற்றியோ தினமலர், தினமணி போன்ற பார்ப்பன பத்திரிக்கைள் வாய்திறப்பதேயில்லை. “அம்மணமாயிருக்கும் போது எந்த நடிகை அழகு” என்று கருத்துக்கணிப்புச்செய்திகள், சினிமா விளம்பரங்கள், கள்ளக்காதல் விவகாரங்கள் என அருவருப்பையும் ஆபாசத்தையுமே வெளியிட்டு சமுதாயத்தையே சீரழித்த இவர்களுக்கு மாணவர்களை ரவுடிகளாகவும் பெறுக்கிகளாகவும் சித்தரிக்க யோக்கியதை இருக்கிறதா?

இப்படி உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கும் போலீசு, நீதிமன்றம், பத்திரிக்கைள் போன்றவை ஏன் மாணவர்கள் மீது கடித்துக் குதறுகின்றன? மாணவன் என்ற ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பின்னால் பல வினைச்சொற்கள் இருக்கின்றன. உலகம் முழுக்க நடந்த அனைத்து சமூக மாற்றங்களிலும் மாணவர்களின் பங்கு முக்கியமானது. வேறெங்கும் இல்லாத போர்க்குணம், உறுதி, ஒற்றுமைஆகியவைகளைப்பார்த்துதான் இந்த போலீசு, நீதிமன்றம், பத்திரிக்கைள் எனப்பலரும் ஆந்தையைப் போல அலறுகின்றனர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மாணவர்களின் வீரம் உலகறிந்தது. இராணி மேரிக்கல்லூரியைக் காத்த மாணவிகளின் போர்க்குணம் அரசின் குலையை நடுங்க வைத்தது. ஈழப்போராட்டத்தில் இறுதிவரை உறுதியாக நின்று இந்திய அரசை கதிகலங்கச் செய்தவர்கள் மாணவர்கள். உழைக்கும் மக்களை சென்னையை விட்டே விரட்டும் மெட்ரோ இரயில் திட்டத்திற்கு எதிராக மாபெரும் உள்ளிருப்புப் போராட்டத்தை நிகழ்த்தி பச்சையப்பன் கல்லூரியின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட மாட்டோம் என போர் முழக்கம் செய்தவர்களும் மாணவர்கள் தான்.

இந்த ஒற்றுமையும் போர்க்குணமும் கல்வி வியாபாரமாவதற்கு எதிராகவும், ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் பகற் கொள்ளைகளுக்கு எதிராகவும் மாறக்கூடாதென்பதில் குறியாய் இருக்கிறது அரசு. அதனால் தான் பத்திரிக்கைகள், சினிமா, டிவிக்கள் போன்ற அரசின் கைக்கூலிகள் திட்டமிட்டே மாணவர்களை சீரழிக்கின்றன. கொலைசெய்வதையும், ரவுடித்தனத்தையம் மட்டுமே தொழிலாகக் கொண்ட காடுவெட்டி குருவை ஒரு தலைவனாகக் கொண்ட பா.ம.கவின் மக்கள் டிவி மாணவர்களை ரவுடிகளாக சித்தரிக்கிறது. இப்படி மாணவர்கள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவது பற்றி பேசாமல் ” மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென்கிறா “டிராபிக் ராமசாமி , “துக்ளக் சோ” ராமசாமி போன்ற பார்ப்பன நாய்களை என்ன செய்வது ? அடித்து விரட்ட வேண்டாமா?

உழைக்கும் மக்களே இதைப்பற்றி சற்று சிந்தியுங்கள். பஸ்டே ஆரம்பத்தில் எப்படி இருந்தது. மாணவர்கள் அமைதியான முறையில் பேருந்தை எடுத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, வருடம் முழுவதும் தங்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் நன்றி செலுத்தினார்கள். தங்களுக்காக உழைத்து உழைத்து ஓடாய்த்தேய்ந்து போன அந்த தொழிலாளி வர்க்கத்திற்கு ஏழை எளிய மாணவர்களால் செலுத்தப்படும் நன்றியறிவிப்பு விழா தான் பஸ்டே. அன்று ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் மாணவர்களை தங்களுக்கு அடியாட்களாக மாற்றுவதற்காக திட்டமிட்டே பஸ்டேவை சீரழித்தனர். இன்று அவர்களோடு போலீசு,பத்திரிக்கை, டி.வி, ஆகியவைகளும் இணைந்து மக்களுக்கெதிராக நிறுத்திவருகின்றனர்.அரசு , அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் எல்லா சனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்ட சூழலில், அவர்களுக்கு இருக்கும் ஒரே மகிழ்ச்சி பஸ்டே மட்டும் தான்.

இந்த பஸ்டே விழாவையும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கயிறுகட்டி தங்களைத் தாங்களே முறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் மாணவர்கள். அவர்களே முற்றிலும் சீரழிவுகளை நீக்கி புதியதொரு வரலாற்றை படைப்பார்கள். போர்க்குணத்தோடு, ஒற்றுமையோடு, விளங்கும் மாணவர்களை பொறுப்புள்ளவர்களாக, மக்களின் உரிமைகளை ஓங்கி ஒலிப்பவர்களாக மாற்ற வேண்டியது தான் மாணவர் நலனில், சமூக நலனில் அக்கறை கொண்ட நமது கடமையாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் ஒரே மகிழ்ச்சியான பஸ்டேவை பறிப்பதாக இருக்கக்கூடாது. எனவே நமது பிள்ளைகளான, சகோதரர்களான , நண்பர்களான மாணவர்களின் பஸ்டே விழாவை அங்கீகரித்து ஆதரிப்போம் !

மாணவர்களே ! ரூட் தலைகளே !

கல்லூரி, ரூட், ஏரியா என பிரிந்து கிடந்தது போதும், பஸ்டே நமது உரிமை மட்டுமல்ல. ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் செய்ய வேண்டிய நன்றிக்கடன். பல்லாயிரக்கணக்கான மாணவர்களோடு, பேராசிரியர்கள், உழைக்கும் மக்களின் ஆதரவோடு, பொது மக்களுக்கு இடையூறில்லாமல் பஸ்டேவை கொண்டாடுவோம். பஸ்டே நமது உரிமை என ஆர்ப்பரித்து முழங்குவோம்.

கல்லூரி,ரூட் பேதங்களை மறந்து மாணவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்றிணைவாம் !

பஸ்டே நமது உரிமை என நிலை நாட்டுவோம் !

மாணவர்-தொழிலாளர் ஒற்றுமையை கட்டியமைப்போம் !

தொழிலாளர் உரிமைகளுக்கு மாணவர்களையும், மாணவர்களின் உரிமைக்கு தொழிலாளர்களையும் அணிதிரட்டிப் போராடுவோம்!

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்!

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு

பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு !

பு .மா. இ .மு தலைமையில்

மாபெரும் மறியல் போராட்டம்!


ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

தொழிற் பாடப்பிரிவை அரசுப் பள்ளிகளில் ரத்து செய்யாதே !

ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில்

குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

போராட்ட புகைப்படக்காட்சிகள் !

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும் பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தும் விதமாக

பு .மா. இ. மு திருச்சி மாநகரத்தில் வரைந்துள்ள கேலிச்சித்திரம் .

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடரும்

பு. மா.இ மு வின் பிரச்சாரம் …,