• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

 

சம்பவம்:1

திருச்சி அருகிலுள்ள ஒரே ஊரைச் சேர்ந்த லோகேஷ்வரியும், கார்த்திக்ராஜாவும் வெவ்வேறு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நீண்டநாள் காதலர்கள். காதல் முற்றியபோது லோகேஷ்வரி கர்ப்பமானார்.

  முதல் கர்ப்பத்தை கலைத்தது போல இரண்டாவது கர்ப்பம் ஐந்து மாதங்களை தாண்டிவிட்டதால் கலைக்க முடியாதென மருத்துவர்கள் மறுத்தனர். இதனால் தன்னை மணம் செய்யுமாறு ராஜாவை கர்ப்பமான காதலி வற்புறுத்தினாள். முதலில் தன் பெற்றோர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என தட்டிக் கழித்த ராஜா பிறகு நச்சரிப்பினால்ஒத்துக்கொண்டான். காதலியுடன் ஒரு காட்டிற்கு பைக் சவாரி செய்து அங்கே இருவரும் தற்கொலை செய்யலாம் என கூற அந்த பேதைப் பெண்ணும் சம்மதித்தாள். எங்கே விஷம் என்று காதலி கேட்க அவளது துப்பட்டாவை எடுத்து கழுத்தை நெறித்து கொன்று சென்றுவிட்டான் ராஜா. பின்னர் போலீசால் கைது செய்யப்பட்ட பின் இந்தத் தகவல்கள் வெளியுலகிற்கு வந்தன.

 சம்பவம்:2

டெல்லியில் சாக்ஷி என்னும் 26 வயது ஆசிரியை, தனது காதலனுடன் நெருக்கமாக இருந்ததைப் பார்த்து, அவளது தாய் கிரண் பலமுறை கண்டிக்கவே, தாய் கிரண் மீது கோபம் கொள்கிறாள். காதலர்கள் இருவரும் கிரணை படுக்கையறையில் கிடத்தி கையில் கிடைக்கும் ஆயுதங்களால் குத்திக் கொல்கிறார்கள். சாக்ஷி ஆத்திரம் தீர பலமுறை குத்துகிறாள். இறுதியில் அந்தத்தாய் மரணமடைகிறாள். ஆரம்பத்தில் கொள்ளையர்கள் வந்து கொன்றதாக சொன்ன சாக்ஷியின் வாக்கை நம்பிய போலீசார்கள் பின்னர் உண்மையை கண்டுபிடிக்கிறார்கள்.

 

000000

நடனத்திற்குப் பிறகு” எனும் டால்ஸ்டாயின் சிறுகதையில் முந்தைய நாளின் இரவு விருந்தில் அழகான பெண்ணை சந்தித்து நடனமாடும் பணக்கார இளைஞன் ஒருவன் அதிகாலையில் வீடு திரும்புகிறான். ஏதோ ஒரு புதிய உற்சாகமும், தன்னம்பிக்கையும், நல்லெண்ணமும் கொண்ட உணர்வுக்கு ஆட்படுகிறான். நெடுநேரம் விழித்திருந்தாலும் அவனால் துயில் கொள்ளமுடியவில்லை. படுக்கையை விட்டு அகன்று அதிகாலை எழுப்பியிருக்கும் வீதியில் இதுவரை இல்லாத நல்லவனாக நடக்கிறான். சந்திக்கும் எல்லா மக்களையும் நேசிக்கிறான். முன்னை விட இப்போது ஏதோ அவன் மிகவும் நல்லவனாக ஆகிவிட்டதாக ஒரு உணர்ச்சி. அவனது கெட்ட எண்ணெங்களெல்லாம் முந்தைய இரவோடு அகன்றுவிட்டதாக ஒரு தோற்றம். இப்படி காதல் ஒருவனிடன் ஏற்படுத்தும் நல்ல ‘ரசாயன’ மாற்றங்களையெல்லாம் டால்ஸ்டாய் அற்புதமாக சித்தரித்திருப்பார்.

இந்த அனுபவம் டால்ஸ்டாய்க்கு மட்டுமல்ல இளவயதில் காதல் வயப்பட்ட எல்லோரும் இந்த அனுபவத்தில் மூழ்கி எழுந்திருப்பார்கள். தனது காதல் ஜோடிக்கு முன் தனது தீமைகளை மறைப்பதாக இருக்கட்டும், தனது நல்லெண்ணங்களை காட்டுவதாக இருக்கட்டும், குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பு காட்டுவதாக இருக்கட்டும், சமூக உறவுகளில் உதவும் பண்பு திடீரென்று உருவவாதாக இருக்கட்டும், இவையெல்லாம் ஒருகாதல் வயப்பட்ட ஆண், பெண்ணின் மனதில்இயல்பாகத் தோன்றும். மனமே பரிசுத்தமாக மாறியது போலும், பண்பே அடியோடுமாறிப்போனது போலும், இதற்கு முன் இருந்த நானும் இப்போது இருக்கும் நானும் அடியோடு வேறுபடுவதும் போல இருந்தாலும் கொஞ்ச காலத்தில் அந்த காதல் வழக்கமானதும், அல்லது திருமணம் முடிந்ததும் இருவரதும் உண்மைப்பண்புகளை ஒருவரோருவர் தெரிந்து கொண்டு அவமானமும், சினமும் அடைவதும் அப்புறம் சில ஆண்டுகளில் இந்தப் பகை நிதானமடைந்து பிரிவதற்கு வழியில்லாத பார்ப்பனிய சமூகத்தின் தடையில் மற்றவர்களின் குறைகளை சகித்துக்கொண்டு வாழப்பழகுவதும் ஏற்பட்டு வாழ்க்கை வண்டி ஓடுகிறது.

இருப்பினும் காதல் வயப்பட்ட தருணத்தில் ஏற்படும் அந்த நேச உணர்வுக்கு காரணம் என்ன?ஒருவர் மனித குலத்தை நேசிப்பதாக இருந்தால் அது கருத்து ரீதியாகவும், உயிரியல் ரீதீயாக நாம் எல்லோரும் ஒரே இனமென்பதாலும் ஏற்படுகிறது. சகமனிதனை நாம் நேசிப்பதற்கான உயிரியல் அடிப்படை ஆண் பெண் உறவிலும், குழந்தைக்கான பெற்றோராக இருப்பதிலும் ஏற்படுகிறது. இங்கே உடலும் உள்ளமும் சங்கமிக்கின்றன. ஒருவகையில் காதல் என்பது மனிதன் தன் இனத்தின் மீது கொண்டுள்ள நேசத்தின் தன்னுணர்வற்ற வெளிப்பாடு.

தான் நேசித்த பெண்ணுடலுடன் முதலில் ஆசையுடனும், பின்னர் வெறியுடனும் உறவு கொண்டு தனது காமத்தை தீர்த்துக் கொண்ட கார்த்திக் ராஜா, பின்னர் ஈவிரக்கமில்லாமல் அவளது துப்பட்டாவையே சுருக்கு கயிறாக மாற்றி இறுக்கி கொன்றிருக்கிறான். ஒரு காலத்தில் தான் நேசித்த உள்ளத்தையும் உடலையும் இப்படி துணி துவைப்பதுபோல பதட்டமின்றி கொன்றிருப்பது எதைக் காட்டுகிறது?

சாக்ஷி தனது காதலுடன் நெருக்கமாக பலமுறை இருந்ததை பார்த்து கண்டித்திருக்கும் தனது தாயை, வயிற்றில் வலியுடன் சுமந்து பெற்று ஆளாக்கி வளர்த்து தனது வாழ்வின்பெரும் பகுதியை மகளுக்காக தியாகம் செய்திருக்கும் அந்த பெண்மணியை, சமையல் கத்திகளால் ஆத்திரம் தீரக் குத்திக் கொன்றிருப்பது சாக்ஷியின் காதல் குறித்து நம்மை பரீசீலிக்கக் கோருகிறது.

இப்படி குற்றம் செய்யாத காதலர்களெல்லாம் கூட காதலின் தன்மையில் இப்படியான மதிப்பீடுகளைத்தான் கொண்டிருப்பார்களோ என ஐயம் ஏற்படுகிறது. இன்றைய காதலின் கவர்ச்சி எது? தான் இதுவரை அனுபவித்திராத காமம் என்பதுதான் அந்த கவர்ச்சியைத் தரும் வல்லமையைக் கொண்டிருக்கிறதோ?

இன்றைய பாதுகாப்பற்ற பொருளாதாரச் சூழலில் நல்ல வேலையும், பணமும் கொண்டிருக்கும் இளைஞர்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். இன்று பாலியல் வேட்கையை ஊரெங்கும் இரைத்திருக்கின்றன பண்பாட்டுக் கருவிகள். நேற்றுவரை வீட்க்குள் முடங்கியிருந்த பெண்கள் இன்று வேலை, கல்வி காரணமாக வெளியே நடமாடுவதால் புதிய மதிப்பீடுகளுக்கு அறிமுகமாகிறார்கள். திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைப்பெதெல்லாம் தவறல்ல என்றுநினைக்குமளவுக்கு பார்வை மாறியிருக்கிறது. மேலும் காதலிக்கும் ஆண்களெல்லாம் காதலிகள் தங்கள் உடலைத் தருவதன் மூலம்தான் காதலை உறுதி செய்ய முடியுமென நிர்ப்பந்திக்கிறார்கள். எப்படியும் இவரை திருமணம் செய்யத் தானே போகிறோம் என பெண்கள் குழிக்குள் விழுகிறார்கள்.

பழத்தை புசித்துவிட்டு தோலை எறிந்து விடுவது என்பதே இன்று காதலைப் பற்றி பல இளைஞர்களின் வக்கிரமான கருத்தாக இருக்கிறது. ஜாலிக்கு காதலிப்பது, செட்டிலாவதற்கு வீட்டில் பார்க்கும் பெண்ணை மணம் செய்வது என்பதே அவர்களது தந்திரமாக உள்ளது. லோகேஷ்வரியைக் ’காதலித்த’ ராஜா மணம் செய்வதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியதன் காரணம் என்ன? ஒன்று அவள் ஏழையாகவோ, தாழ்த்தப்பட்ட அல்லது ராஜாவின் சாதியை விட பிற்பட்ட சாதியாக இருந்திருக்கவேண்டும். உடலுறவின் இன்பத்திற்காவே காதலித்தாக நடித்த இந்த கயவன் முதலில் கருவைக் கலைத்து விட்டு இரண்டாவது கரு ஐந்துமாதம் கடந்துவிட்ட படியால் கலைக்கமுடியாது என்ற பிறகே கருவைச் சுமந்த தாயைகொல்வதற்கு முடிவு செய்திருக்கிறான்.

காதலின் மூலம் மற்ற மனிதர்களை தனது இனமாக உணரும் இயல்பை உணரும் அதேநேரத்தில் அது தனிப்பட்ட இரு மனிதர்களின் உறவாகவும் உள்ளது. இந்த தனி இயல்பின் ஊற்று மூலம் இன்னார் இன்னாரைத்தான் காதலிக்கிறார் என்பதிலிருந்து பிறக்கிறது. பொதுவில் இந்த இரு நபர்களின் காதலை பெற்றோர், உற்றோர், சாதியினர் ஊரார் அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதிலிருந்தே இந்த தனிமைத் தன்மை அழுத்தமாக காதலர்களின் மனதில் பதிந்து விடுகிறது. சமயத்தில் எதிர்ப்பு பலமாக வரும்பட்சத்தில் காதல் கைவிடப்படுவதும், இல்லையேல் பல இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியும் வருகிறது. தனி மனிதனது காதலுக்கும், சமூக கட்டுப்பாடுகளுக்கும் உள்ள முரண்பாடு இப்படி பல்வேறு அளவுகளில் ஏற்படுகிறது.

வயதுவந்த பிறகு, படிப்பு, தொழில் நிலையான பிறகே ஒருவர் காதலிப்பதற்கு உண்மையில் தனது சொந்தத் தகுதியில் தயாராகிறார். ஆனால் தமிழ் சினிமாவும், ஊடகங்களும் அதை வெறும் கவர்ச்சியாகவும், மற்ற கடமைகளை மறந்து இந்த உலகத்திலேயே காதல்தான் உன்னதமானது என்றும் தவறாக கற்பிக்கின்றன. இதனால் விடலைப்பருவத்தில் கற்றுத்தேர வேண்டிய வயதில் காதலித்து, காதலிக்க முடியாமல் போனதை எண்ணி எண்ணிச் சோர்ந்தோ, பலரது ஆளுமை சமூகத்திற்கு பலனளிக்காமல் வெம்பி வாடிப்போகிறது.

பிறப்பிலிருந்து, மரணம் வரை எல்லோரையும் சார்ந்து வாழவேண்டிய பெண் இத்தகைய விடலைக்காதலால் கணநேர மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபுறம் வாழ்க்கை முழுவதும் ஆயுள் கைதியாகவே காலம் தள்ளுகிறாள். விடலைப்பருவத்தில் காதலிக்கும் ஆண்களில் பெரும்பாலானோர் பாலுறவு என்ற அவர்கள் இதுவரை அனுபவித்திராத புதிரை ருசிப்பதிலேயே ஆர்வம் கொள்கின்றனர். இதை அனுபவித்துவிட்டு அப்புறம் வளர்ந்து ஆளான பிறகு பெற்றோர் பார்க்கும் பெண்ணை வரதட்சணையுடன் மணம் செய்து வாழ்க்கையில் நிலைபெறுகின்றனர்.

பெண்ணுக்கோ தனது விடலைக்காதலையும் அதன் விளைவையும் மறைக்க முடியாமல்அவளது வாழ்வே கேள்விக்குறியாக மாறுகிறது. இதனால் தனக்கு விருப்பமில்லையென்றாலும் வீட்டில் பார்க்கும் ஏதோ ஒருவரை அவர் வயதானாவராக இருந்தாலும் கூட கட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இன்றைய நுகர்வு கலாச்சார சூழலில் அழகும், காமமுமே காதலைத் தீர்மானிப்பதில் பாரிய பங்குவகிக்கின்றன. ரசனை, சமூக நோக்கு, தனிப்பட்ட பண்புகள், பொதுப் பண்புகள், அறிவு, பழகும் இயல்பு, எதிர்காலம் குறித்த கண்ணோட்டம், இவையெல்லாம் சேர்ந்துதான் காதல் துளிர்ப்பதற்கும், தளிர்ப்பதற்கும் தேவைப்படும் விசயங்கள். ஆனால் இவையெல்லாம் தெளிவில்லாத மாயமானைப்போல ஓடிக்கொண்டிருக்க, கைக்கெட்டும் காமமே காதலின் தகுதியாக மாறிவிடுகிறது.

நமது காதல் தகுதியானதா என்று பரிசீலிப்பதற்கு கவலைப்படாத காதலர்கள் காமத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மட்டும் அவசரப்படுகிறார்கள். இந்த அவசரப்படுதலில் ஆணை விடபெண்ணுக்கு அபாயங்கள் அதிகமென்றாலும் அவள் அதைப்பற்றையும் கவலைப்படுவதில்லை. ஆணுக்கோ தனது ஆண்மையை நிலைநாட்டி வெற்றிக்கொடி காட்டுவதற்கு, தனத நண்பர்களிடம் வெற்றிச்செய்தியை பகிர்வதற்கு ஒரு வாய்ப்பு. ஒரு பெண் அப்படி பகிர முடியாமல் இரகசியம்காக்கவே விரும்பினாலும் வயிற்றில் உருவாகும் கரு அதை உடைத்து விடுகிறது.

கார்த்திக்ராஜா காமத்திற்காக மட்டும் லோகேஷ்வரியை பயன்படுத்த விரும்பினான். லோகேஷ்வரியோ அவனை மணம்செய்து கொள்ளவே விரும்பினாள். இதுசுதந்திரத்தெரிவிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை, கறைபட்ட பெண்ணை யாரும் ஏற்கத்தயாராக இருக்கமாட்டார்கள் என்ற சமூக நிலைமையிலிருந்தே வந்திருக்கவேண்டும். அவன் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாக சப்பைகட்டு கட்டும் போது அவளோ அவனது போலித்தனத்தை,துரோகத்தை உணர மறுத்து வயிற்றில் இருக்கும் கருவை மட்டும் வைத்து தனது அவல நிலையை விளக்கியிருக்கிறாள். முறிந்திருக்கவேண்டிய காதல் ஒரு பெண்ணின் பாதுகாப்பற்ற அவலநிலையினால் அந்த அடிமை வாழ்வை பின்தொடர்ந்து ஓடவேண்டியிருக்கிறது. ஆனால் கார்த்திக்ராஜாவோ இந்த தொல்லையை ஓரேயடியாக முடித்து விட்டு தனது வாழ்க்கையை தொடரவிரும்பினான். இரக்கமின்றி முடித்து விட்டான். எந்த முகத்தையும், கன்னத்தையும்,கழுத்தையும் காமத்துடன் முத்தமிட்டானோ அந்தக் கழுத்தை கதறக் கதற இறுக்கி துடிப்பை அடக்கினான்.

மாநகரத்தில் வாழும் மேட்டுக்குடி பெண்களும், மேட்டுக்குடி பெண்களின் மதிப்பீடுகளை கொண்டு வாழநினைக்கும் நடுத்தர வர்க்க பெண்ணான சாக்ஷியின் கதைவேறு. தனது அழகு, உடை,ஆண்நண்பர்கள், பணக்காரர்களின் தொடர்பு, அதன்மூலம் உயர நினைக்கும் காரியவாதம் இவையெல்லாம் இவர்களது ஆளுமையில் ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த காரியவாத உயர்வுக்காக இவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களுக்கெல்லாம் காதல் என்பதுபணவசதியுடன் செட்டிலாவதற்கான ஒரு பெரிய படிக்கட்டு.

இவர்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களெல்லாம் பழைய மதிப்பீடுகளில் வந்தவர்கள். இதனால் இருதரப்பினருக்கம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் வகையிலேயே உறவு இருக்கும். இந்த தலைமுறையின் வேறுபாட்டில் வரும் பிரச்சினைகளை பெற்றோரே சுமக்க நேரிடும். புதிய தலைமுறைப் பெண்களுக்கு வெளியில் எந்த அளவுக்க ‘வெளிச்சம்’ கிடைக்கிறதோ அந்த அளவுக்கு வீட்டில் இருள் சூழ்கிறது. பெற்றோரோடு சண்டை, எதிர்ப்பு, ஆவேசம்!

தனது ஆண்நண்பர்களில் ஒருவனுடன் வீட்டிலேயே உறவு வைத்துக் கொள்வதைசகிக்கமுடியாமல் சாக்ஷியின் தாய் சண்டை போடுகிறாள். சாக்ஷியோ இந்த தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கத்தியால் 24 குத்து குத்தி தாயை கொல்கிறாள். ஏதோ ஆத்திரத்தில் நடந்த சண்டையல்ல இது. ஆழ வேர்விட்டிருக்கும் வெறுப்பு, பகையுணர்ச்சி.

எல்லாக் காதலர்களும் கொலை செய்வதில்லை என்றாலும் வன்முறை பல்வேறு அளவுகளில் வெளிப்படத்தான் செய்கிறது. காதலினால் கருவுற்ற பெண்கள் தனது காதலன் தன்னை மணம் செய்ய மறுக்கிறான் என்று சொல்லி அன்றாடம் காவல் நிலையத்தில் அழுதபடி கொடுக்கும் புகார்கள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன.
‘காதலி’யின் உடலை செல்பேசியில் படம்பிடித்து நண்பர்களுக்கு படைக்கும் வக்கிரங்களும் ஊடகங்களை நிறைக்கின்றன. தனது இளவல்கள் செய்யும் மைனர் பொறுக்கித்தனங்களுக்கு பணம் கொடுத்து செட்டில் செய்வதற்கு பல பணக்காரர்கள் தயாராகத்தான் இருக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக தனது உடலை படுக்கையாக விரிக்கும் பெண்களை வைத்துத்தான் கதாநாயகர்கள் தமது ஓய்வை போக்குகின்றனர். அலுவலகத்தில் மேலதிகாரிகளும் தமது பெண் பணியாளர்களை காமத்திற்காக சின்னவீடாகவோ, இரண்டாம்தாரமாகவோ பயன்படுத்தவேசெய்கின்றனர். மாநகர மேட்டுக்குடிபெண்களோ பணம், ஆடம்பரத்திற்காக இதை விரும்பியே செய்கின்றனர்.

காதல் என்பது உணர்ச்சியில் ஒன்றேயானாலும், சமூகப்பிரிவுகளுக்கேற்ப வேறுபடவே செய்கிறது. ஆனால் எல்லாப் பிரிவுகளையும் தாண்டி அவசர அவசரமாக காமத்தை அனுபவிப்பது என்பது மட்டும் எல்லாக் காதலர்களின் தேசிய நடவடிக்கையாக மாறிவருகிறது. இதில் ஏழைகளாக இருக்கும்பெண்களின் அவலம் இருக்கும் வறிய நிலையிலிருந்து தேறுவதற்கு வழியில்லாமல் முடக்கிவிடுகிறது. சிலருக்கு வாழ்க்கையே முடிந்துவிடுகிறது. மேட்டுக்குடி பெண்களுக்கோ இந்தஅவசரக் காமல் வளமான வாழ்க்கைக்கான வாசலை திறந்து விடுவதாக உள்ளது. உள்ளேநுழைந்து பட்டுத்தெரிந்த பின்னரே அதன் கொடூரம் உரைக்க ஆரம்பிக்கிறது. அதற்குள் வாழ்க்கை வெகுதொலைவு கடந்து விடுகிறது. ஆனால் எல்லா ஆண்களும் இப்படி வலிந்து வரும் காமத்தை அனுபவிப்பதை இளமையின் இலட்சியமாக விரும்புகின்றனர். காமம் முடிந்த பின் உறவை தூக்கி எறிய நினைக்கும் இவர்களெல்லாம் எதிர்கால மனைவிகளை எப்படி நடத்துவார்கள் என்பதும் இத்தகையோர்தான் நாட்டின் எல்லா மட்டங்களிலும் வேலை செய்கிறார்கள் என்பதும் இந்த நாட்டின் சமூகத் தரத்தை காட்டுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஆகவே காதலை சட்டென ஏற்றுக்கொள்ளாதீர்கள். வாழ்க்கையையும், சமூகத்தையும் பொறுப்புடன் கற்றுத்தேர்ந்து சமூகத்தில் உங்களுக்குரிய இடத்தை உறுதி செய்த பிறகே ஒரு முறைக்கு நூறு முறை ஆலோசித்து உங்கள் வாழ்க்கை துணையை தெரிவு செய்யுங்கள். இதே விதி பெண்களுக்கு இன்னும் பல மடங்கு அதிகம். இந்தக் காலத்தில் காதல் ஏற்படுவது ஒன்றும் முற்போக்கல்ல, அதன் சமூகத்தரமே நம் கவலைக்குரியது. அன்றாடம் கொல்லப்படும்காதல்பெண்களின் கதைகள் நமது தரம் மிகவும் இழிவாக இருப்பதையே எடுத்துச் சொல்கிறது.

–  நன்றி : புதிய கலாச்சாரம், ஆகஸ்ட்டு‘ 2009

கும்பகோணமும் வேதாரண்யமும்…. (கவிதை)

விடைபெறும் போது
அம்மா இட்டு அனுப்பும்
முத்தங்களை தவிர,
வலிக்கத்தான் செய்கிறது
நீங்கள் ஏற்றிடும்
எல்லா சுமைகளும்.

எந்த சுமையை நான்
குறிப்பாய் கூறுவது,
என் முதுகில் கட்டிய
புத்தகச்சுமை முதல்,
அப்பா தலையில் கட்டும்
ஆண்டுக் கட்டணம் வரை
நெடிதாய்  நீள்கிறது
உங்கள் சுமைகளின் பட்டியல்

எங்கள் வீட்டு
மாதச் சம்பளம் முழுவதும்
உங்கள் மடியில் கொட்டினாலும்,
வருடம் தொடங்கிவிட்டால்
வழிப்பறி திருடர்களைப்போல்
நன்கொடை என்று
நச்சரிப்புகள் வேறு.

கேட்காமல் நுழைந்திடும்
என் குட்டி நாயினை போல்,
ஜன்னலுக்குள் காற்று
எப்பொழுதும் நுழைந்தால்
எவ்வளவு சுகமாய் இருக்கும்.
அப்படியா உள்ளது – உங்கள்
அடுக்குமாடி வகுப்பறைகள்,
காற்றே கஷ்டப்பட்டு
நுழைந்திடும் ஜன்னல்களில்,
மூச்சுகாற்று வாங்கவே
சிறப்பு கட்டணம்
செலுத்த வேண்டும் போல் உள்ளது.

உங்கள்
வீட்டு கழிப்பறைக்கு
ஒதுக்கிய இடத்தைவிட,
நீங்கள்- எங்களுக்கு
விளையாட தந்த
மைதானத்தின் அளவு
நிச்சயம் சிறியது !
இதில்,
‘வீடியோ கேம்ஸ்’
விளையாடுவதே மிகவும் சிரமம்,
பிறகெப்படி முடியும்
ஆசிரியர் கற்பித்தபடி
ஓடி விளையாட?

பிராய்லர் கோழிகளை
ஏற்றிச் செல்லும்
வாகனங்களில் கூட
கொஞ்சம் ‘பிரைவசி’ இருக்கும்,
எங்களை ஏற்றிச் செல்லும்
உங்களது வாகனங்களில்
ஊசி நுழைந்திடவும்
இடைவெளிகள் இல்லை.
இதில்
பதினெட்டுபட்டிக்கு
ஒரு நாட்டாமை போல,
எல்லோரையும் ஏற்றி இறக்க
குப்பை தொட்டிகளாய்
ஓரிரு வாகனங்கள்.

பயணிக்கும் வழியெல்லாம்
எங்கள் ரத்தம் கேட்டு துரத்தும்
உங்களின் லாப வெறி…,

கேட்டால்  எப்படி
கொடுக்காமல் இருப்பது?
இறுதியாக நாங்கள் – உங்களிடமே
இறக்கி வைத்துவிட்டோம்.
கனவையும், உயிரையும் சேர்த்து.

கல்வி வள்ளலாய்
வாழும் நீங்கள்
காவு வாங்கியதை மறைத்துவிட்டு
விபத்து என்றே
விளம்பரம் செய்யுங்கள்.

ம்….
எங்கள் முகத்தருகே
மொய்க்கும் ஈக்கள் கூட
சத்தம் செய்கிறது.
உங்களின்
கல்விக் கொள்ளையை அறிந்த
காலம் மட்டும் ஏனோ?
மௌனித்து நிற்கிறது.

முகிலன்

குறிப்பு : வேதாரண்யம் அருகே ஒரு ஆசிரியர் உட்பட 9 பேர் வேனில் சென்ற போது குளத்தில் விழுந்து பலி. அம்மாணவர்களின் நினைவாக…

நன்றி: வினவு


நண்பனுக்கு ஓர் கடிதம்

 

nov_2 copy

என் அன்பு நண்பனே,
ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு
முன் அதிகாலை மூன்றுமணிக்கு
நான் புரட்சிநாள்
கவிதை வாசித்தேனே
ஓடிவிட்டன நாட்கள்
நீ எங்கிருக்கிறாய்
தெரியவில்லை எப்போதாவது
நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….

 

ஒரு எல்லை வரைப்
உன்னிடத்தில் போராடினேன்
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள், விவாதங்கள்
சண்டைகள், சமாதானங்கள்
எல்லாம் முடிந்து விட்டன
நான் திரும்பிப்பார்க்கின்றேன்
உன்னிடத்தில் எத்தனைப்
போராட்டங்கள்
ஆனாலும்
உன் அடிமைத்தனத்தையுடைக்க
நீ தயாராக இல்லையே….

 

இப்போது உணர்கிறேன்
தவறாக பேசிவிட்டோமோ
அப்படி பேசியிருந்தால்
இப்போது உன்னிடம் நான் பேசியிருந்தால்
நீ உன்னை மாற்றிக்கொண்டிருப்பாயோ
ஆனால் எப்போதும் காலச்சக்கரம் பின்னோக்கி
சுழல்வதில்லையே

 

என் அன்பு நண்பா,
நீ  அடிக்கடி சொல்வாயே
சுயநலம் இல்லாது யாருமில்லையென்று
உனக்குத்தெரியுமா?
நானும் உன்னைப்போலத்தானிருந்தேன்
சில ஆண்டுகளுக்கு முன்
ஒருவர் வந்தார்
தோளில் ஜோல்னா பையினை மாட்டிக்கொண்டு
தன்னை தோழர் என்றார்
கருப்பாக
அதுவும் என்னைவிட கருப்பாக

 

அவரின் கேள்விகள் என்னை நிலைகுலையச்செய்தன
“உன் வாழ்வில் முதலாளித்துவம்
தலையிடுகிறதா இல்லையா?
நீ உண்ணும் அளவை எவனோ கட்டுப்படுத்துவது
தெரிகிறதா இல்லையா?
எல்லாவற்றையும் குறை கூறுகிறாயே
நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?”

 

என்னால் பேச முடியவில்லை
என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்
என் முகத்தை மறைத்துக்கொண்டு
ஓடினேன் பயமெனக்கு
போய்விடுவோமோ நம்மை அறியாமல் போய்விடுவோமோ
ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்
இப்போது நான் பறப்பதற்கு சிறகுமில்லை

 

பேருந்துகளில், தெருக்களில்
பிரச்சாரம் செய்யும் தோழர்களை
கண்டு அவமானத்தில் தலையைக்
குனிந்தேன்., அவர்களின்
சொற்கள் என் இதயத்தை
கிழித்தன அங்கிருந்தும் ஓடினேன்

 

ஒருவரா இருவரா கருப்பாக,
சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
ஆனால அவர்கள் எல்லாம்
எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கவனித்தாயா நண்பா
உனக்காக எனக்காக எல்லோரும்
போராடும் போது உனக்காக
நீயும் எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
அடிக்கடி சொல்வேனே
நினைவிருக்கிறதா
“நாட்கள் இப்படியே இருக்காது
நாளை என் சாவு செய்தி கேட்டு
நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
புரட்சிகர வாழ்த்துக்களுடன்

உன் அன்பு நண்பன்

 

நன்றி: கலகம்


‘கத்தரி’ காலம்!

கோடை கடந்த பின்னும்
சற்றும் குறையவில்லை
வெயிலின் தாக்கம்!

போதிய கடற்காற்று
வீசுவதில்லையாம்-
வானிலை தகவல்!

அதிரடி ‘ரெய்டு’கள்
நடந்த பின்னும்
அமைச்சர்களின்
அறிக்கைகள்
குவிந்தபின்னும்
குறையவில்லை
கல்வி கட்டணம்!

கல்லா
நிரம்பவில்லையாம்
‘கட்டாய நன்கொடை’
தந்தாக வேண்டுமாம்!
‘கல்வி தந்தை’கள்
மிரட்டல்!

பருவ காலங்களில்
பெரும் மாற்றம்- இனி,
ஜூன், ஜூலை
‘கத்தரி’காலம்!

-தமிழினி

பு.மா.இ.மு “புரட்சிகர கவிதைகள்”

 

  1. “நம்முடைய விழாக்கள்”

  2. என்னை உறங்கவிடவில்லை!

  3. கொத்துக் கொத்தாய்குண்டுமழை பொழியுதம்மா… என் ஈழத் தமிழினமே சரம்சரமாய் செத்து மடியுதம்மா…

  4. சென்னை மாவட்ட மாணவர் வரலாறு எமது தோழர்கள் பெயரின்றி எழுதிட இயலாது!

  5. தியாகி முத்துக்குமரனுக்கு

  6. யார் இந்த மகாத்மா?

  7. ரணமாகும் கணங்கள்

  8. விழித்தெழு என் தமிழகமே!

  9. “இரு வகை கவிதைகள்”
  10. “மானங்கெட்ட மன்மோகன் சிங் பேசுகிறேன்”

என்னை உறங்கவிடவில்லை!

“ஈழம் என்னடா
மயிரு ஈழம்…
அங்கு என்ன-உங்க
அக்காளையா…”

என்னை
செவிடாக்கி-எழுந்த
உயிர்வலி
இன்னும்-ஓயவில்லை!

வழக்குரைஞர்களின்
குருதி குடித்த
ஈரம் காயுமுன்னே
அடுத்த குறி
கல்லூரி மாணவர்களை!

“ஈழத்திற்கு ஆதரவா?
கோர்ட்டுக்குள்ளே
புகுந்து விளையாடிய
எமக்கு
கல்லூரியெல்லாம்
கால் தூசு..”

கேட்டுப்பார்
நீதித் தேவதையை
சிறீ கிருஷ்ணாவை!

கொக்கரிக்கிறது
கருணாநிதியின்
காலாட்படை!

பிடறியைப் பிடித்து
குரல்வளை நெறித்து
உள்ளாடையோடு நிறுத்தி
நிராயுதபாணிகளை
லத்திக்களும்-பூட்ஸ்
கால்களும் பதம் பார்க்க…
வருவோர் போவோரும்
இதில் சேர… அட
வழமையான
சித்திரவதைகள்
பழகிப்போன-ஒன்றுதான்
எமது தோழர்களுக்கு!

“ஈழம் என்னடா
மயிரு ஈழம்…
அங்கு என்ன-உங்க
அக்காளையா…”

அப்பப்பா
எப்படித்தான்
எதிர் கொண்டனரோ
இக்கொடிய
தாக்குதலை!

அநியாயப் போரை
எதிர்க்கும்-சிங்கள
ஜனநாயகவாதிகளை
கொல்லும் இராஜபக்சே!

ஈழத் தமிழனின்
சுய-நிர்ணய உரிமைக்கு
குரல் கொடுக்கும்
சகத் தமிழனையே
குதறும் கருணாநிதி!

சொந்த மண்ணில்
அநாதைப்
பிணங்களாய்
ஈழத்தமிழன்
விரவிக்கிடக்க…
அம்பானி, டாடாவின்
‘வாழ்வுரிமை’க்காய்
வரிந்து பேசச்சென்ற
பிரணாப்!

இது
இனவெறிப் போர்
மட்டும் தான்- என்று
யார் சொன்னது?

அவிழ்த்து விடப்பட்ட
வெறிநாய்க் கூட்டங்களென
கையில்
கிடைத்ததைக் கொண்டு
கண்ணில்
எதிர்பட்டதையெல்லாம்
பாய்ந்து குதறி்யபோது
இதன் பிறப்பே
இப்படித்தான்
என்றிருந்தேன்!

“ஈழம் என்னடா
மயிரு ஈழம்…
அங்கு என்ன-உங்க
அக்காளையா…”

இதை
சிங்களனல்லாத
இங்குள்ளவனே
கேட்டதனால்
குடைந்தெடுக்கிறது…
சந்தேகம்
வலுக்கிறது…
“சிங்களனுக்கு
பொறந்ததுவோ-இந்த
போலீசு கூட்டங்களென்று!”
எது
எப்படியோ?

நாளை
சிறையிலிருந்து
மீண்டுவரும்
தோழர்களை
நான்
எப்படி எதிர்கொள்வேன்!

“ஈழம் என்னடா
மயிரு ஈழம்…
அங்கு என்ன-உங்க
அக்காளையா…”

என்னை
செவிடாக்கி-எழுந்த
உயிர்வலி
என்னை
உறங்கவிடவில்லை!

-இளங்கதிர்

தியாகி முத்துக்குமரனுக்கு

நாடார் குல சிங்கம் என்ற
சுவரொட்டிகள் இரங்கல்
தெரிவிக்கின்றன உனக்கு
முத்துக்குமரா
சாதிபெருமையில் நீ
வாழவில்லை
சாதிபெருமை சொல்லி
நீ சாகவில்லை
தெளிவாய் கூறிவிட்டாய்
தானொரு
தமிழ் சாதியென்று
அதன் மூலம்
உன் தியாக சூரியனை
மறைக்க முயன்ற சாதி
மேகத்தை
உன் மரணசாசன சூறைக்
காற்றால் கலைத்துவிட்டாய்!

பிணம் திண்ணும் கழுகுகளை
போல, ஓட்டுபொறுக்கிகள்
உன் தியாகத்தை சுற்றி சுற்றி
வருகின்றனர்.
முத்துக்குமரா
“விடமாட்டோம்
புரட்சிகர போராட்டம் என்ற
கத்தியை கொண்டு
அக்கழுகுகளை வெட்டி
கூறுபோடுவோம்”!

பற்றி எரியும் ஈழத்தை
அணைக்க நீ பற்றி எரிந்தாய்
முத்துக்குமரா
உன் தியாக சுடர் பற்றிய
மாணவர் போராட்டத்தால்
இனி தமிழகமே பற்றி எரியும்!

ஈடுயிணையற்ற
உன் இழப்புக்கு
இழப்பீட்டு தொகை
2 இலட்சமாம்
அறிக்கை மலம் அள்ளி
வீசுகிறான் அய்யோக்கியன்
கருணாநிதி
முத்துக்குமரா,
கந்தல் துணியால் கஞ்சி
பானையை மூடலாம்
பந்தல் துணியால் பசிபிக்
கடலை மூட முடியாது!

வறுமையும் வருமானமின்மையும்
அல்ல
ஈழத்தமிழரின் அவலமே
உன்னை வாட்டியது
முத்துக்குமரா,
அதுதான் உன் தியாகத்தை
உலகிற்கு அடையாலம்
காட்டியது
மூங்கில் காடாய் கிடந்த
மாணவர் வர்க்கத்திடம்
போராட்ட தீயை மூட்டியது
உணர்வற்று கிடந்த
நடமாடும் பிணங்களுக்கு
தமிழ் உணர்வை ஊட்டியது!

பற்றி எரியும் போது
அய்யோ அம்ம
என்று கதறுவார்கள்
முத்துக்குமரா,
நீயும் கத்தினாய்
அய்யோ அம்மா
எறிகிறதே எறிகிறதே
ஈழம் பற்றி எறிகிறதே என்று
தன் வலி பொறுத்து
தாயக குமுறலை உன்
வாய் பிளிர்ந்தது.
மாவீரனே உன் தியாகம்
ஈழத்தின் விடுதலை தாகம்!

கோழைத்தனத்தில்
துணிச்சல் மிக்க வடிவமே
தற்கொலையாம்
முத்துக்குமரா,
நீ செய்தது தற்கொலை அல்ல
ஈழததமிழ் மக்களின்
சுயநிர்ணய உரிமைக்கான
தற்கொடை
உன் கொடையால்
வெகுண்டெழும் உணர்வு
படை
அது இந்திய மேலாதிக்கத்தை
முறியடிக்கும் வெற்றிபடை!

ஒரு நாள் கூத்தல்ல
உன் தியாகம்
முத்துக்குமரா,
மெச்சுவிட்டு பின்
மறந்துபோவதற்கு
தமிழரின் வரலாற்று மூளையில்
அது நீங்காத நினைவலைகள்!

உயிரோடு இருந்தபோது
ஈழவுணர்வில் எரிந்தாய்
உயிர்விடுபோது
தீ பற்றி எரிந்தாய்
எரிந்து முடித்த பின்
தமிழகத்தின் போராட்டமாய் நீ
பற்றி எரிகிறாய்
முத்துக்குமரா
அரசின் அடக்கு
முறையாலும்
ஊடக மறைப்பு முறையாலும்
அணைக்க முடியாத
அணையா தீபம் நீ!

கொக்கரித்த பார்ப்பன
கும்பலின் கொட்டம்
சத்தம் கேட்கவில்லை
முத்துக்குமரா,
அவையின் குரல்வளையை
அறுத்து எரிந்துவிட்டது
உன் உயிராயுதம்!

உன் அறை தோட்டத்தில்
பல புத்தக மலர்கள்
முத்துக்குமரா,
அனைத்தும் மார்க்சிய
மலர்களாய் இருந்திருந்தால்
21ம் நூற்றாண்டின்
பகத்சிங்காய் எங்கள்
மனங்களில் வாசம்
வீசியிருப்பாய்

ஆனாலும் என்ன?
ஒப்பற்ற தியாகியாய்
உன்னை நாங்கள்
முகர்ந்து கொள்கிறோம்!

40 மலம் திண்ணும்
பன்றிகள்
234 இரத்தம் குடிக்கும்
ஓநாய்கள்
102 நகராட்சி பேய்கள்
12500 கிராமத்து
தருதலைகள்
இவைகளின் அடியாட்கள்
அல்லக்கைகள் யென
யாராலும் யெழவைக்க
முடியாத மரணித்து
கிடந்த மாணவர் பேரெழுச்சியை
தனியொரு மனிதாய்
எழவைத்தாய்
முத்துக்குமரா,
இனி
ஈழத்தை மூடியுள்ள
இருள் விலகிவிடும்!

– நக்சல்பாரியன்

“நம்முடைய விழாக்கள்”

ஏகாதிபத்தியங்களுக்கு
பிரம்மாஸ்திரமாய்
விளங்கும் இயேசுவின்
கிறிஸ்துமசா
நமக்கான விழா?
இல்லை
ஏகாதிபத்தியம் விழுந்தே
தீரும்
அதன் சிதிலங்களில் கம்யூனிசம்
மிளிர்ந்து எழும்
அதற்கான பாட்டாளிகளின்
ஆயுதமே மார்க்ஸியம்
என்று சூளுரைத்த
மாமேதை மார்க்சின்
பிறந்தநாளே நம்முடைய விழா..!

பெற்ற தகப்பனை
கணவனாய் கொண்டு
படுக்கையை பகிர்ந்து
கொண்ட சரஸ்வதியை
கல்வி கடவுளாய்
உயர்த்தும் சரஸ்வதி
பூஜையா நமக்கான விழா?
இல்லை
அறிவு கூர்மையிலும்
பண்பின் கருணையிலும்
தன் வாழ்நாள் தியாகத்தாலும்
படிப்பவர் மனதில்
தாய்மையின் பாடங்களாய்
பதிந்துபோகும்
ஜென்னிமார்க்சின் பிறந்தநாளே
நம்முடைய விழா..!

காட்டை கழனியாக்கி
வியர்வை துளிகளை
நெற்கதிர்களாக்கி
உலகின் பசியாற்றிய
உழுபவனை,
எருதுகளோடு எருதுகளாய்
ஏர்முனையில் பூட்டி
ஏழ்மையிலும், துயரத்தாலும்
அவனை வாட்டி
அவன் ஈட்டிய அனைத்தையும்
தனதாக்கி கொண்ட
நிலப்பிரபுக்களின்
பொங்கல் விழாவா
நமக்கான விழா?
இல்லை
உழுபவனை அடித்து
தன் தொந்தியை பெருக்கிய
நிலப்பிரபுக்களை
ஈவிரக்கம் பாராமல்
அழித்தொழித்த
ரஷ்யாவின் நவம்பர் புரட்சியே
நம்முடைய விழா..!

ஆபாசத்திலும்
அழுக்கு உருண்டையிலும்
உயிர் பெற்றதாய் விளங்கும்
பானை வயிறு
பிள்ளையாரின் விநாயகர்
சதுர்த்தியா நமக்கான விழா?
இல்லை
மனிதநேயத்தாலும்
மேதாவிலாசத்தாலும்
நம் மனங்களை
கொள்ளை கொண்ட
மாமேதை
மாவோவின் பிறந்தநாளே
நம்முடைய விழா!

சி.பி.எம் என்னும்
பூணுலிஸ்ட்களுக்கு
அஹிம்சையை போதித்த
யானை காது காந்தியின்
காந்தி ஜெயந்தியா
நமக்கான விழா?
இல்லை
காந்தியின் துரோகமும்
வெள்ளையரின் கோபமும்
23 வயது இளைஞனின்
கழுத்தை
தூக்குகயிறால் முறிக்க,
உயிர் இழந்த அவ்விளைஞன்
தன் ஒப்பற்ற தியாகத்தால்
இந்திய வரலாற்றில்
பகத்சிங்காய் எழுந்து நின்றானே
அம்மாவிரனின்
பிறந்தநாளே
நம்முடைய விழா!

நயன்தாரா, நமீதாவின்
குலுக்கல் ஆட்டம்
பில்லாவை இரவு
முழுக்க கண்விழித்து
பார்க்கும்
சிவராத்தியா நமக்கான விழா?
இல்லை
பயங்கரவாத அமெரிக்காவின்
ஆக்கிரமிப்புக்கு பாடை
கட்டிய வியட்நாமிய
போராளிகளின்
போர்கால இரவுகளே
நம்முடைய விழா!

எம் பாட்டன் நரகாசூரனின்
வீரத்தை கண்டஞ்சி
நடுங்கிய
பார்ப்பன பரதேசிகள்
கோழைத்தனத்தால்
செடிமறைவில் நின்று
அம்மெய்தி வீழ்த்திய
தீபாவளி நாளா
நமக்கான விழா?
இல்லை
இரண்டாயிரமாண்டு
கால பார்ப்பன பண்பாட்டு
படையெடுப்பிற் கெதிராய்
அரைநூற்றாண்டு கால
சுயமரியாதை யுத்தம் நடத்திய
பெரியாரின் பிறந்தநாளே
நம்முடைய விழா..!

வெள்ளியில் வீழ்ந்து
ஞாயிரின் உயிர்
பெற்றதாய் பொய்யுரைக்கும்
இயேசுவின்
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுதலான புனித
வெள்ளியா நமக்கான விழா?
இல்லை
50 களில் சோவியத்திலும்,
70 ன் இறுதியில் சீனத்திலும்
துரோகத்தால்
வீழ்த்தப்பட்டு
இன்று இமயத்தின் சிகரத்தில்
கத்திமுனையில் கருக்கொண்டிருக்கும்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே
அதன் பிறப்பே
நம்முடைய விழா..!

பசியால் வாரங்களை
கடந்து, பிரியாணியின்
ருசிய\யால் வயிறு முட்ட
உண்டு
மந்தநிலையில் மதிமயங்கி
கிடக்கும் ரம்சான் பண்டிகையா
நமக்கான விழா?
இல்லை
ஈராக் மண்ணை ஆக்ரமித்தற்க்காக
வெள்ளை மாளிகையின்
வெள்ளை பன்றியை
செருப்பால் அடித்து
அமெரிக்காவின் காலனி
ஆதிக்கத்திற்கு
தன் காலனியால்
பதிலடி தந்தானே
மாவீரன்
முண்டாசர் அல்ஜெய்தி
அவ்விரனின் தியாகம்
வெளிப்பட்ட நாளே
நம்முடைய விழா..!

புதிய ஜனநாயக புரட்சி
நடந்தேறி விடுமோ
யென்றஞ்சி
வெள்ளை ஏகாதிபத்தியம்
இந்திய நிலப்பிரபுத்துவத்துடன்
செய்து கொண்ட
துரோக ஒப்பந்தமான
ஆகஸ்ட் 15ன்
போலி சுதந்திரமா
நமக்கான விழா?
இல்லை
ஏகாதிபத்தியத்தையும்
அதன் அல்லக்கை
தரகு முதலாளியத்தையும் அதன்
கூட்டாளி நிலப்பிரபுத்துவத்தையும்
பூண்டோடு ஒழிக்கும்
புதிய ஜனநாயக புரட்சியின்
பிறப்பே
நம்முடைய விழா..!

– நக்சல்பாரியன்

விழித்தெழு என் தமிழகமே!

மருத்துவ மனைகள்
மயான பூமிகளாய்
கல்வி நிலையங்கள்
கொலை களங்களாய்
மழலைகளின் பிஞ்சு
உடல்கள் ஊனங்களாய்
மக்களின் வாழ்வு மரண
போராட்டங்களாய்
பற்றி எரியும் ஈழம்
பதறி எழு என் தமிழகமே!

அறுக்கப்பட்ட எம்
பெண்களின் மார்பகங்கள்

வெடிகுண்டிகளால்
சிதைக்கப்பட்ட எம்
பெண்களின் யோனிகள்

மின்சாரம் பாய்ச்சப்பட்டு
மரித்துபோன ஆண்குறிகள்

விடாது துரத்தும்
சிங்களகொலைவெறிக் கூட்டம்

வேடிக்கை பார்க்கும்
சர்வதேச சமூகம்
அநாதைகள் அல்ல
எம்மக்கள்
ஆர்ப்பரித்து எழு
என் தமிழகமே!

இராஜபக்சேவுக்கு
நன்றி சொல்லும் ஜெயலலிதா

புலி பூச்சாண்டி காட்டும்
சுப்ரமணிய சுவாமி

சந்திரிகாவிடம் விருது
பெற்ற இந்து ராம்

ஷோபாசக்தியின்
கட்டுரை வரையும்
சி.பி.எம்

தமிழன ஒழிப்பில்
சிங்களத்துடன்
கூட்டு சேரும்
பார்ப்பன கும்பல்

பகைமுறிக்க
படை கொண்டு
எழு என் தமிழகமே!

மகிழ்ச்சியை மறந்த மனம்
உடமைகள் இழந்த அவலம்

உறவுகளை துளைத்த வலி
உணர்வுகள் மரித்துபோன இதயம்

கேட்பாரில்லாத மக்கள் கூட்டம்
கூடவே அகதி என்ற பட்டம்

கார் இருளாய்
கவ்விருக்கும்
சிங்கள இனவெறி கூட்டம்
பற்றி எரிகிறது தமிழீழம்

அதில் பெட்ரோல்
ஊற்றுவது இந்தியம்

எம்மக்கள் கொலுத்த
படுவது தெரிந்தும்
மவுனம் சாதிக்கிறான்
கருணாநிதி

பதவி சுகத்துக்காக
இனத்தை விற்கும்
விபச்சார பன்றிகளை
கரிசமைக்க
ஓங்கி எழு என் தமிழ்கமே!

சித்திரவதை முகாம்களில்
எம் இளைஞர்கள்

பாலியல் வன்புணர்ச்சியில்
சிக்கும் எம் பெண்கள்

செம்மணி புதைகுழிகளில்
ஈழத்தின் கிராமங்கள்
சிங்கள தாக்குதலால்
சிதைக்கப்படும் வன்னிகாடுகள்

வாழவிரும்பும்
மக்களை குருரத்தில்
வதைக்கும் பேய்களை
ஓட்டிட விழித்தெழு
என் தமிழகமே!

கிழந்தது கிளிநொச்சி
முரிந்தது முல்லைத்தீவு
அழிந்தது ஆணையிறவு
படுத்தது பரந்தன்

இனி வன்னி
மண்டலம்
எங்களின் மண்டலம்
என்கிறான்
மகிந்தா

அவன் புன்சிரிப்பின்
பின் எம்மக்களின்
அழுகை ஓலம்

அவன் மீசை திருகளின் பின்
கற்பழிக்கப்பட்ட
எம் தேசம் கதறும் சத்தம்
கேட்கவில்லையா?
கருணை கொண்டு எழு
என் தமிழகமே!

வாழ்வதற்கு உத்ரவாதமற்ற
வன்னிகாடு

கொட்டும் பேய்
மழையின் பெருவெள்ளம்

கொடும் மிருகங்களின்
மாமிச பசி

ஏர் வரிசையில்
பட்டினி சாவுகள்
உதவி என்ற பெயரில்
ஏகாதிபத்தியங்களின்
ஊடுறுவல்

எம்மக்கள் கேட்பது
உதவியல்ல
சுயநிர்ணய உரிமை என்ற வாழ்வை

பெற்றுதர புறப்படு
என் தமிழகமே!

முத்துக்குமார், ரவி
தியாகத்தின் வரிசை
நீள்கிறது
தமிழகம் பொங்கி
எழுகிறது.

போராட்டங்களின்
வலிமை கூடுகிறது.

தீ பரவட்டும். தீ பரவட்டும்
தியாகங்கள் பெருகட்டும்

அரை நூற்றாண்டு கால
சிங்கள மேலாதிக்க
சிறையை விட்டு
எம் ஈழம் விடுதலை பெறட்டும்!

-நக்சல்பாரியன்

ரணமாகும் கணங்கள்

கல்லூரிப் பாலைவனத்தில்
கற்பகத் தருக்களைத்
தேடியலையும்
கலாமின் கனவு வாரிசுகள்
நாங்கள்

எங்களின் புனித வரலாறு
வெளியாகும் போதெல்லாம்
‘கூவம்’ கூட
முகம் சுளிக்கும்

முடிந்தால்
மூக்கைப் பொத்தியவாறே
கேளுங்கள் நீங்களும்!

எங்களின்
அலாரச்சத்தத்தில்
எல்லோரும் எழுந்த பின்பே
எட்டுமணி சுமாருக்கு,
எட்டிப் பார்ப்போம்,
போர்வைக்குள்ளிருந்து!

மிருகங்களைக்
காரணம் காட்டி
மிச்சம் செய்வோம்,
பேஸ்ட்டையும் சோப்பையும்!

முகம் கழுவி,
தலை கலைத்து
அப்பாவிடம் திட்டுவாங்கி
புறப்படுவோம் கல்லூரிக்கு!

ஜீவ நதியில்
ஓடைகள் கலப்பது போல
வரும் வழியில்
தறுதலையில் ஒன்று சேரும்!

தடுமாறி வரும்
மாநகரப் பேருந்துகளில்,
தாண்டவமாடி
தாவணியிழுத்து
தந்திரமாய் பார்வைகள் வீசி
பார்வையாலே
செருப்படி வாங்கி
பத்திரமாய்
மனதில் சேகரிப்போம்!

முதல் நாளிலிருந்தே
பழகிவிட்டதால்
மூன்றாம் மணி நேரம்தான்
நுழைவோம் வகுப்பில்!

வந்த வேகத்தில்
வருகைப் பதிவு
நடத்திவிட்டு,
வெளிநடப்புகளும்
நிகழ்த்துவோம்!

மொட்டை மரத்தடியில்
வெட்டி அரட்டையில் தொடங்கி
வெட்டு குத்துகளில் முடியும்!
வார்த்தைகள் முற்றி
கைகள் அரிக்கும் போது
அங்கங்கே
அரிவாள்கள் முளைக்கும்!

மைதானங்கள்
போரக்களமாகும்
தருணங்களில்
ரணகளாகும்
எம் பெற்றோர் மனங்கள்!

அவ்வப்போது
பெருமையைக் கட்டிக்காக்க
கட்டாய ஸ்டிரைக்குகள்
அவசிய மாகும் போது!

காவலர்கள் நாய்களாவார்கள்
கையில் கல்லிருக்கும் வரை
நாங்கள் குரைப்போம்,
பதிலுக்குக் கடித்தால்
பதறி சிதறுவோம்!

உயிரையும் கொடுப்பதாய்க்
கூறிக்கொண்டே
ஒவ்வொருத்தியையும்
ஒரங்கட்டும்
எங்கள்
காதலின் புனிதத்தை
கடற்கரை மணலும்
கைப்பேசிகளும் அறியும்!

தேர்வுகள் எல்லாம்
தேள்களைப்போலவே தெரியும்!
அவற்றின் நஞ்சைவிடவும்
கொடியவை
‘அரியர்கள்’

மூன்று வருட முடிவில்
எங்களின் கல்லூரி வாழ்வு
முடிவிற்கு வரும்போது
அரியர்கள்
மலைகளாய் மாறி
மலைக்க வைக்கும்!

கவலையில் மயங்கிக்
கண் விழிக்கும் போது
காலில் இடறும்
கவர்மெண்ட் பாட்டில்கள்!

தினந்தோறும்,
எங்களின் புனிதயாத்திரைகள் யாவும்
‘டாஸ்மாக்’
நோக்கியே நிகழும்.

சொர்க்கத்திலிருந்து
தூக்கியெறியப்பட்டவர்களாய்,
கல்லூரியை முடித்தவுடன்
கண்கள் கலங்கும்
பிரிந்து போன
நண்பர்களுக்காக அல்ல
பிடரியை பிடிக்கும்
பிரச்சினைகளுக்காக!

இப்போதுதான்
வந்து தொலைக்கும்
எம் மூத்தோரின்
நினைவுகள்!

எத்தனையோ முறை
எகத்தாளமாய்
எக்காளமிட்டோம்
அவர்களைப் பார்த்து!

வீடு வீடாய்
ஏறியிறங்கி
எச்சிலை நாய்போல
துரத்தியடிக்கப்படும்
மார்க்கெட்டிங் வேலையும்
பாதி வயிற்றை நிரப்பும்
பகுதி நேர வேலையுமாய்
காலச்சக்கரத்தை உருட்ட
அவர்கள் படும் கஷ்டமெல்லாம்
கண்ணெதிரே தோன்றும் போது
கண்ணை மூடிக்கொண்ட
கடவுளும்
கவர்மெண்டும்
எங்களின் விரோதியானார்கள்
எத்தனையோ பேர்
எதிர்த்துப் போராடினர்
பிரச்சினைகளின் ஆணிவேரை
பிடுங்கியெறிய!

எள்ளி நகையாடினோம்
எல்லாம் இழந்தபிறகு
ஏங்குகிறோம்
எவனாவது வரமாட்டானா?
பகல்நேர சூரியனாய்!
பகத்சிங்கின் பேரனாய்!!