”அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! இதோ, உங்கள் இல்லங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் உங்கள் வீட்டுப்பிள்ளை, நேர்மையின் சிகரம், வாரிவழங்கும் வள்ளல், ஏழைகளின் தங்கம், மாசில்லா மாணிக்கம் நமது அண்ணனுக்கு…… சின்னத்தில் வாக்களித்தால்; சாலையின் பள்ளங்கள், பளிங்கு சாலைகளாகும். வீடுகளிலேயே குடிநீர் குழாய்களை பொருத்தி மக்களின் கஷ்டங்களை போக்குவார், சீரழிந்த தெருக்களை சிங்கப்பூராக்க அண்ணனுக்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள்”
இந்தக்காட்சியை நினைவில் ஓட்டுப்பாருங்கள் சுமார் 50 பேர் புடை சூழ, முன்னே தாரை தப்பட்டைகள் முழங்க, வலது இடப்புறங்களில் அல்லக்கைகள் “அண்ணே கூட்டத்தை பாருங்க எல்லா ஓட்டும் உங்களுக்குத்தான்” என சொறிந்து கொண்டிருக்கும் போது நம்ம அண்ணன் முகம் புன்னகையில் பூக்கும், மகிழ்ச்சி வெள்ளத்தில் வாக்காளப் பெருமக்களிடம் கைகூப்பி வணங்கிக்கொண்டிருக்கும் போது……
“கொள்ளையடிக்க வர்றான் பாரு, ஓட்டு கேட்டு வர்றான் பாரு, அக்கா! சொம்பை எடுத்து உள்ள வை!! நிலம் தண்ணீர் சாலை வேண்டும், கல்வி மருத்துவம் வேலை வேண்டும்!, போராட்டம் வேண்டும், புரட்சி வேண்டும்!, பிச்சைக்காசும் ஓட்டும் வேண்டாம்” என்று தாரை தப்பட்டையுடன், விண்ணதிரும் முழக்கங்களுடன் பைரவனுக்கு (நாய்) மாலையிட்டு, துண்டு போட்டு அழைத்து வந்தால் என்ன நடந்திருக்கும்? கைக்கூப்பி வணங்கிய அந்த புன்னகை முகம் வெம்பிப்போய் தெருவை விட்டு ஓடியிருக்கும். இவைதான் அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தாங்கள் செயல்படும் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தின் காட்சிகள்.
13.10.11 அன்று நொளம்பூர், பிள்ளையார் கோயில் ஆகிய பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் தொடங்கியது. தாரை தப்பட்டைகள் முழங்க, தள்ளு வண்டியில் நாயை அமர வைத்து மாலையிட்டு, பூத்தூவி “அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! உங்கள் அன்புத்தம்பி பைரவன் வாக்கு சேகரிக்க வந்து கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு நாயாக வேலை செய்வார், தெருவில் யாரையும் நடக்க விடமாட்டார். உங்க சின்னம் எலும்பு சின்னம்” என்று ஆரம்பித்தது. பகுதி மக்களோ, ஓட்டுப்பொறுக்கிகளை பற்றி தாங்க என்ன நினைத்தார்களோ அதே வடிவில் கொண்டு வந்தவுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். தானாகவே முன்வந்து தேங்காய் கற்பூரம் சுற்றுவது, ஆரத்தி எடுப்பது என இப்பிரசுரத்தில் மக்கள் பங்கேற்றார்கள்.
ஓட்டுப்பொறுக்கிகள் கூட 50 பேருடன் பிரச்சாரம் செய்யும் போது, தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரமோ நூற்றுக்கணக்கானோருடன் நடைபெற்றது. பிரச்சாரம் செய்த தோழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது, “ஏன் நாயைக் கூட்டி வந்தீர்கள்” என கேட்டு தெளிவு பெற்று மற்றவர்களையும் அழைத்து வந்த்து என நிகழ்வுகள் நடைபெற்றன. தனியார்மய- தாராளமய-உலகமய சூழலில் அனைத்து இயற்கை வளங்களையும் சூறையாடிவரும் சூழலில், ஒரு வட்டத்திற்கு 30, 40 பேர் வரை போட்டியிட்டு பொறுக்கி தின்ன எத்தணிக்கும் சூழலில் பு.மா.இ.மு வின் தேர்தல் பிரச்சாரம் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தியதுடன், தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை அது புரட்சிப்பாதை என்பதை பதியவைக்கும் விதமாக அமைந்த்து.
14.10.11 அன்று டாக்டர் சந்தோஷ் நகர் மற்றும் குரோம்பேட்டையில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. டாக்டர் சந்தோஷ் நகரில், தீப்பந்தங்கள் சுற்றி, பூ தூவி வேட்பாளர் பைரவன் கிளம்பியதை அனைத்து பகுதி வாழ் உழைக்கும் மக்களும் வரவேற்றனர். எந்த ஓட்டுக்கட்சிக்கும் வராத அளவுக்கு இளைஞர்களின் கூட்டத்தோடு, மக்களின் ஆரவாரத்தோடும் நடைபெற்றது. ஓட்டுக் கேட்க வந்த அதிமுக பாலகங்காவோ, தனக்கு வந்த கூட்டத்தை விட புமாஇமு வின் கூட்டத்தை பார்த்து விசனதோடு கிளம்பிச்சென்றார். நம்ம பைரவனின் பிரச்சாரத்திற்கு பின் சென்ற ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் அவமானத்தோடு திரும்பிச் சென்றார்கள். குரோம்ப்பேட்டையில் வேட்பாளர்கள் எதிரில் வரும் போது யோக்கியன் வர்றான் பாரு சொம்ப எடுத்து உள்ளவை என முழுங்கும் போது ஓட்டுப்பொறுக்கி கட்சியினரால் கோப்ப்பட மட்டும் முடிந்தது.
64 ஆண்டுகளாக ஓட்டுப்போட்டு வேறு வழியின்றி ஏமாந்து இருப்பதே வழி என்று நினைத்த உழைக்கும் மக்களுக்கு, புரட்சிகர நக்சல்பாரி பாதையை மக்களிடம் ஆழமாக பதியவைப்பதாய் இந்த தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரங்கள் அமைந்தது.
தொடர்புடைய பதிவுகள்:
உள்ளாட்சி ”உள்ளே – வெளியே” கார்டூன்ஸ் !!
பொறுக்கித் தின்ன போட்டி போடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!
Filed under: தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் | Tagged: உள்ளாட்சி தேர்தல், ஓட்டுப்பொறுக்கி அரசியல், தமிழகம், நிகழ்வுகள், பிரச்சாரம், மறுகாலனியாக்கம் | Leave a comment »