
ஆவடி பிராட்வே.. ஆர்.எஸ்.ஒய்.எஃப். அவர் வே..
ஆவடி பேருந்து நிலையம், ஜெயலலிதா சசிகலா முகமூடியணிந்த இருவர் திடீரென ஒரு பேருந்தில் ஏறி பயணிகளிடம் பேருந்து கட்டண உயர்வு, பால், மின்சாரம் விலைவாசி உயர்வை தெனாவெட்டாக அறிவிக்கிறார்கள். திகைப்பிலும், வெறுப்பிலும் மக்கள் பார்த்திருக்க, மக்களின் உணர்ச்சிக்கு முகம் கொடுப்பது போல பத்து பதினைந்து சிவப்புச் சட்டைகள் பேருந்தில் ஏறி முழக்கமிடுகிறார்கள். “”அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு பதிலடி கொடுப்போம், புலம்பினால் மட்டும் போதாது! போர்க்குணத்துடன் போராடுவோம்…” என அறிவிப்பு வெளியிட்டு ஜெயா சசி குமபலின் தோலுக்கு உரைக்கும்படி முதலில் வார்த்தைகளால் பந்தாடுகிறார்கள். அடுத்து ஆவேசத்துடன் கைகள் நீள்கிறது. காத்து கிடந்த மக்களோ தன் பங்குக்கு நாலு சாத்து சாத்துகிறார்கள்.. பாவம் ஜெயலலிதா வேடத்தில் நடித்ததினாலேயே தோல் மரத்ததோ என்னவோ.. தாமதமாக வலி உணர்ந்து முகமூடியை களைகிறார்கள் தோழர்கள்.. “”என்னுயிர் தோழி.. கேளடி சேதி.. இதுதானோ பெங்களூரு நீதிபதி தோழி” என ஜோடியாக ஏ.சி. காரிலேயே ஓசி பயணம் செய்யும் ஜெயாசசியை பஸ்ஸில் ஏற்றி மக்களோடு சேர்ந்து தீர்ப்பு வழங்கினார்கள் தோழர்கள். கட்டண உயர்வால் கொதித்துப் போயிருக்கும் மக்களிடம் சிக்கினால் ஜெயாசசிக்கு என்ன நடக்கும் என்பதை திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க. தோழர்கள் நிகழ்த்திக் காண்பித்தனர். சென்னையிலோ, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் “”ரூட்டே” தனி.
பஸ்சுக்கு பஸ்சு மக்கள் விரோத ஜெயாசசியை ஏற்றி மக்கள் கையாலேயே பஞ்சராக்கிப் போட்டார்கள். எதிர்க்க முடியாத மலையல்ல ஜெயலலிதா என நிகழ்த்திக் காண்பிப்பது மட்டுமல்ல. கட்டண உயர்வுக்கு எதிராக கண்டனம் புலம்பும் மக்களிடம் “”அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பேயாட்சிக்கு எதிராக வெறும் பேசி மட்டும் போதாது, பாசிச ஜெயாவின் திமிராட்சிக்கு நாம் பணிய வேண்டியதில்லை. மக்களை வாட்டி வதைக்கும் இந்தக் கட்டண உயர்வை நாம் மதிக்கவும் தேவையில்லை. ஆகவே உழைக்கும் மக்களே! இந்த அநியாய பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பயணச்சீட்டு வாங்காமல் நாம் பயணிப்போம்! யாரும் டிக்கட் எடுக்காதீர்கள். டிக்கெட் விலை அநியாயம்! அதை ஏற்பதும் அநியாயம்! கட்டணக் கொள்ளைக்கு காசு தர முடியாது! பாசிச ஜெயாவின் திமிரடிக்கு நாம் பணியவும் முடியாது. மக்களே! டிக்கட் எடுக்காதீர்கள்” என ஓடும் பேருந்தில் மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டே பு.மா.இ.மு. தோழர்கள் வந்தனர். பெருவாரி மக்கள் பு.மா.இ.மு. அறிவிப்பை உச்சி மோந்து “”இவ திமிருக்கு இதுதாங்க சரி” என்று கோயம்பேடு வரை டிக்கட் எடுக்காமலேயே வந்து இறங்கினர். நடத்துனருக்கோ வேலை மிச்சமானது. ஓட்டுனரோ உற்சாகத்துடன் கியரை மாற்றி ஜெயாவின் உத்தரவைக் காலில் போட்டு மிதித்து பஸ்சை இயக்கினார்.
இப்படி பு.மா.இ.மு. தோழர்கள் ஒரு நாள் முழுக்க சென்னையில் ஆவடி, கோயம்பேடு, என்.எஸ்.கே. நகர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, பாரிமுனை என மாறி மாறி பேருந்து ஏறி ( ஜெயா சசி வேடமிட்ட லக்கேஜ்களையும் சேர்த்துக் கொண்டுதான்) மக்களிடம் நாள் முழுக்க கட்டண உயர்வுக்கு எதிராகப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டே போயினர். பு.மா.இ.மு. ரூட் பாஸ் வாங்கிவிட்ட மக்களிடம் இன்னிக்கு ஜெயலலிதா சீட்டு செல்லாது என்று வர்க்க உணர்வுடன் புரிந்து கொண்ட பெரும்பாலான நடத்துநர்கள் தோழர்களின் அரசியலுக்கும் சேர்த்து ரைட் கொடுத்துக் கொண்டே வந்தார்கள். ஓட்டுனர்களோ பஸ்ஸில் சிக்கிய ஜெயாசசி கும்பல் டயரில் சிக்காதா? என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே பஸ்சை நகர்த்தினர். அண்ணா சாலையில் இறங்கிய பெண் பயணி ஒருவர் “”தோழர்களே! உங்களால் நான் இன்னிக்கு டிக்கெட்டே எடுக்கவில்லை என்று போதி மரத்தில் ஞானம் பெற்றதைப் போல பு.மா.இ.மு. தோழர்களை பூரிப்புடன் பார்த்து விடைபெற்றார். பஸ்சுக்காக காத்திருந்து மட்டுமே பழகிப்போன மக்கள் இப்படி ஒரு உத்தரவுக்காக காத்துக் கிடந்தது போல செயல்படுத்தியதைப் பார்க்கும்போது, புரட்சிக்காகக் காத்திருக்கும் மக்களிடம் பு.மா.இ.மு. வைக்கும் நம்பிக்கை வீண் போகாது என்பதை உணர்த்துவதாக இருந்தது.
போராட்டப் பயணம் இப்படியே இனிமையாகவே போய்விடுமா என்ன? எதிர்பார்த்தது போலவே ஒரு பேருந்தில் பிரச்சாரம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தேனாம்பேட்டைவந்ததும் அந்தப் பேருந்தின் நடத்துனர், இப்படியே ஒரு சீட்டும் கிழிக்காமல் போனால் தன் சீட்டு கிழிந்து விடுமோ என்ற பயத்தில் பேருந்தை தேனாம்பேட்டை போலீசு ஸ்டேசன் பக்கம் நிறுத்தி தோழர்களை ஜாடையாக தள்ளிவிட முயன்றார். ஆர்வத்துடன் அந்த போலீசோ சிவப்புச் சட்டைகள் தோழர்களின் பிரச்சார வார்த்தைகள், மக்களின் அடங்காத ஆர்வம் இவைகளைக் கண்ணுற்று இந்தத் தலைவலி நமக்குத் தேவையா என்பது போல, “”யோவ், இவங்கள ஸ்டேசன்ல எறக்க முடியாதுய்யா.. பேசாம டெப்போவுல போயி எறக்கிடு..” என்று வேகத்துடன் நழுவப் பார்த்தது. நடத்துனரோ லா அண்டு ஆர்டர் பிரச்சனையாகும் சார், என்று போலீசைப் போல பேச போலிசோ வேறு வழியின்றி நடத்துனரைப் போல டிக்கெட்டை எண்ண ஆரம்பித்தார். தோழர்களோ அஞ்சவில்லை. சட்டப்படி என்ன செய்ய முடியுமோ செய்ங்க என்றனர். “”நான் கைதெல்லாம் பண்ணலப்பா, பேசாம கலைஞ்சு போயிடுங்க, செய்றதுதான் செய்றீங்க எதாவது பர்மிசன் வாங்கிட்டு செய்ங்கப்பா” என்று ஸ்டேசன் எஸ்.ஐ. உலகம் புரியாமல் உளறிக் கொட்டினான். சற்றும் தாமதிக்காத இளம் தோழர்கள், “”ஜெயலலிதா எங்ககிட்ட பர்மிசன் வாங்கிகிட்டா விலை ஏத்தினுச்சு, நாங்க அடுத்த பஸ்சுல ஏறி பிரச்சாரத்த தொடருவோம். கலைய மாட்டோம்” என்று விருட்டென்று வரக்கூடிய பேருந்தில் ஏறப் போனார்கள். ஒரு இரண்டு பேருந்து வரைக்கும் தோழர்களை ஏற விடாமல் தேனாம்பேட்டை போலீசு கபடி விளையாடிப் பார்த்தது. மூன்றாவது பேருந்தில் தோழர்களின் பிரச்சாரம் கம்பீரமாய் கால்பதிக்க ஆளை விட்டால் போதுமென்று தேனாம்பேட்டை காக்கி ஒதுங்கிக் கொண்டது. பிறகென்ன..கேட்டுக் கொண்டே இருக்க… நான் என்ன கதையா சொல்ல வந்தேன். வாருங்கள் நண்பர்களே! பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்.
துரை. சண்முகம்.
தொடர்புடைய பதிவுகள்:
பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!
பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!
அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!
Filed under: ஜெயாவின் பேயாட்சி | Tagged: அ.தி.மு.க, அரசியல், அரசு போக்குவரத்து கழகம், ஆவடி, ஓட்டுநர், சசிகலா, சென்னை மாநகரப் பேருந்து, சேத்துப்பட்டு, ஜெயலலிதா, தமிழக அரசு, துரை.சண்முகம், தேனாம்பேட்டை, நடத்துநர், நிகழ்வுகள், பால் விலை உயர்வு, பு.மா.இ.மு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பேருந்து கட்டண உயர்வு, போராட்டம், போலிசு, மறுகாலனியாக்கம், மாணவர்கள், விலைவாசி | 6 Comments »