சென்னை.
திங்கட்கிழமை ஆபீசுக்கு வந்தவுடன், வினவு தளத்தைப் பார்த்தேன். சென்னையில் செவ்வாய் காலை ஒன்பது மணியளவில் கருத்தரங்கு என்பதை அறிந்தேன். அவசரமாக ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பெங்களூரிலிருந்து சென்னை விரைந்தேன்.
தோழர் மருதையனின் கட்டுரைகளைப் படித்த எனக்கு அவர் பேச்சினை நேரில் காண மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்.
அதிகாலை சென்னையில் விடிந்தது. இறங்கியதும் செய்தித்தாள் படித்த எனக்கு அதிர்ச்சி!. ஒருபக்கம் சமச்சீர் கல்விக்கு உயர்நீதிமன்றம் ஓகே சொன்னதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் கருத்தரங்கின் அவசியம் இல்லாமல் போய் கேன்சலாகிவிட்டால்…நான் வந்த நோக்கம் வீணாகிவிடுமே என சிறு வருத்தம்.
செய்தித்தாளின் அடுத்த பக்கத்தைப் புரட்ட, மேலும் ஒரு அதிர்ச்சிச் செய்தி. வழக்கு மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் செல்வதாக இருந்தது. அப்பொழுதுதான் வினவின் செய்தி, அதாவது வழக்கு உயர்நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக வந்தாலும், ஜெ அடிபட்ட மிருகம்போல் கண்டிப்பாக உச்சநீதிமன்றம் செல்வார் என சில தினங்கள் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது.
கண்டிப்பாக கருத்தரங்கம் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்த்து, ஜிஜி மஹால் நோக்கி சென்றேன். மிகுந்த ஆர்வத்தில் எட்டு மணிக்கெல்லாம் இடத்தை அடைந்தாகிவிட்டது. மஹாலின் வெளியில் வரவேற்கும் விதமாக, தோழர்கள் செங்கொடியை நிறுவிக்கொண்டிருந்தார்கள். அருகில் உள்ள உணவகத்தில் காலை உணவை முடித்து, மெதுவாக உள்நுழைந்தேன். மிகுந்த உற்சாகத்தோடு அவர்கள் ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.
தோழர்கள் இன்முகத்துடன் அரங்கிற்கு வழிகாட்டினார்கள். அரங்கினுள் நுழைந்தேன். தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்தேன். துணைக்கு எவரும் இல்லை. ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருந்தது. மிகுந்த கூடத்தை எதிர்பார்த்த மனதில் பெரும் ஏமாற்றம்!!!!!!!!
நான்கைந்து பேர் மட்டுமே அரங்கினுள் கூடியிருந்தோம்.
ஒரு பத்து நிமிடம் இருக்கும் பின்னர் மிகுந்த உற்சாகத்தோடு ஒரு கூட்டம் நுழைந்தது.
பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என கூட்டம் நிறைந்தது.
தனித்திருந்த நான், நாமாக மாறினோம்.
தொடக்க நிகழ்ச்சியாக, கீழ் அரங்கினில் ஓவியக் கண்காட்சி. பத்து புத்தகங்கள் படித்துத் தெரிந்து விளங்கக் கூடிய விசயங்களை, பத்தே நிமிடத்தில் ஓவியத்தின் மூலம் நேர்த்தியாக விளக்கி திரு. முகிலன் அவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றார்.
கண்காட்சியைக் கண்டு, பின் சிறு தொகையை தோழர்கள் வைத்திருந்த உண்டியலில் மனமுவந்து செலுத்திவிட்டு சற்று நிமிர்ந்தேன். கீழைக்காற்று தோழர்கள் வைத்திருந்த புத்தகங்கள், பரபரப்பாக விற்றுத் தீர்ந்து கொண்டிருந்தன. நானும் முயன்று புத்தகங்களைச் சேகரித்து, காலியாக நான் கொண்டு வந்திருந்த பையை நிரப்பினேன்.
மீண்டும் அரங்கினுள் அதே இடத்தில் அமர்ந்தோம்.
அனைவரும் சிறப்பாக உரையாற்ற வேண்டும் என மனதார வாழ்த்திக்கொண்டு அரங்கு நிகழ்ச்சியில் ஆழ்ந்தேன்.
இளைஞர் அணித் தோழர் திரு. கணேசன், கனீர் குரலில் அரங்கத்தை அதிரச் செய்தார். என்ன ஒரு அழுத்தமான உச்சரிப்பு!. உண்மையாகவே அனைவருக்கும் வியப்பு. ஒவ்வொரு சொல்லும் ஒரு எழுத்து கூட சிதறாமல், அனைவரின் காதினுள் சென்று சேர்ந்தது என்பதைவிட இடிபோல் முழங்கியது என்றே சொல்ல வேண்டும். வாழ்க நீவிர் நூறாண்டு.
அடுத்து நிகழ்ச்சியின் முதல் சிறப்புரையாளராக, மூத்தகல்வியாளர் திரு. ராஜகோபாலன் அவர்கள் கல்வி என்றால் என்ன? என்பதையும், சமச்சீர் கல்வி ஏன்? என்பதையும், சமச்சீர் கல்வியின் ஒரே ஒரு அம்சமான பொதுப் பாடத் திட்டத்திற்கே ஏன் இவ்வளவு எதிர்ப்பு? என சிறப்பாக விளக்கினார்.
நான் கற்றுத் தேர்ந்த முதலாளித்துவக் கல்விக்கும், ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கற்க வேண்டிய சமூகக் கல்விக்குமுள்ள வேறுபாட்டை நிறையவே உணர முடிந்தது.
அவரின் வயது முதிர்ச்சியால், பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அவரின் பேச்சு, சிறு குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் மிக எளிதாகவும் இனிமையாகவும் இருந்தது. அவ்வளவு சிரமத்திற்குள்ளாகவும் சிறப்பாக நிறைவு செய்து, அரங்கினை கைத்தட்டலால் நிரம்பச் செய்தார்.
அடுத்ததாக, நான் எதிபார்த்து வந்த, தோழர் திரு. மருதையன் ஆரம்பித்தார். நேரம் கருதி அவருக்குக் கொடுத்த தலைப்பில் மட்டும் அவர் பேச நேர்ந்தது. தமிழகம் முதல் இந்திய பாராளு மன்றம் வரை கல்வியை எவ்வாறு கார்போரேட் கொள்ளையாக மாற்ற திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என சிறப்பாக விளக்கினார்.
இறுதியாக, மனித உரிமைப் பாதுகாப்பின் தோழர் திரு. ராஜு. “நாம் போராடுவதற்கு எந்த பயமும் தேவையில்லை. எவ்வளவோ சட்டங்கள் நம் மக்களுக்கு மிகுந்த நலம் பயப்பதாக உள்ளன. ஆனால் அதை நிறைவேற்றாமல், நம்மை ஏமாற்றும் கொள்ளைக்காரர்களை நாம் போராடித்தான் வெல்ல முடியும்” என ஆணித்தரமாக விவரித்தார்.
கூட்டத்தில் அனைவருக்கும் வியர்த்துக் கொட்டியது. இடப்பற்றாக்குறையால், வெளியிலும் மக்கள் கூடியிருந்தனர். ஆச்சர்யம், வியப்பு, உண்மை என்னவென்றால், ஆரம்பம் முதல் இறுதிவரை வியர்வையில் நாங்கள் நனைந்துகொண்டிருந்தாலும், திரு. கணேசன் இறுதி உரையில் “கூட்டம் முடிந்தது அனைவரும் செல்லலாம்” எனக் கூறும் வரை உற்சாகம் ஒருவருக்கும் சிறிது கூடக் குறையவில்லை. மொத்த நிகழ்ச்சியில், அரங்கம் கைத்தட்டலில் மிகுதியான நேரம் அதிர்ந்துகொண்டேயிருந்தது. அவ்வளவு உற்சாகம்.
சிறை சென்று வந்த மாணவர்களுக்கு சிறப்பு பாராட்டைத் தெரிவித்து மகிழ்ந்தோம். நிகழ்ச்சியின் இடையிடையே சிறுமியர்கள் பாடிய வீரம் செறிந்த நாட்டுப்புறப் பாடல்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
முக்கியமாக ஒன்றைக் கூற வேண்டும். திரு. ராஜு அவர்கள் உரையாற்றும் முன், தேநீர் இடைவேளை. தொண்டர்கள் எனக் கூறிக் கொள்ளும் தோழர்கள், அருமையாக அவற்றைப் பரிமாறினார்கள். முடித்தபின், சிறு பேப்பர் கூட சிந்தாமல் எங்கள் கைகளில் இருந்து வாங்கி பெட்டியில் போட்டு அப்புறப்படுத்தினார்கள். வியந்துபோனேன்.அவ்வளவு சுத்தமாக மீண்டும் அதே இடம். ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருந்தனர். அவர்கள் பரிமாறும் விதமும், கடைசிவரை சலசலப்பின்றி செயல்படும் ஒழுங்கும் மிகவும் வியக்க வைத்தன. அனைத்துப் பண்புகளும் அவர்களின் இயல்பிலேயே, கட்டாயமின்றி அமைந்திருந்ததை கண்கூடாகக் காண முடிந்தது. மெத்தப் படித்த எவரிமும் இதுவரை நான் காணாத ஒன்று அது!. அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
நான் எதிர்பார்த்துச் சென்றதைவிட, சிறப்புரையாளர்கள் மூவரின் அனுபவபூர்வமான உரை, தோழர் கணேசனின் இடிமுழக்கம், தோழர் முகிலன் அவர்களின் ஓவியம், மற்றும் தோழர்கள் உபசரித்த முறை இவற்றால் ஆறு மடங்கு திருப்தியுற்றுத் திரும்பினேன்.
இதற்கு முழுமுதற் காரணமான வினவு மற்றும் தோழர்களுக்கு, எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆக,
என்னைப் பொறுத்தவரை,
சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று!