• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,038 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

தகுதியில்லாத 40 பல்கலைகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து நீடிப்பு

தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இயங்கும் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிலை படுமோசமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 40 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன.

பொறியியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறை படிப்புகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, நிகர் நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய கமிஷன் சட்டவிதிகளின் படி, இந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு உரிய அம்சங்களுடன் இவை இயங்குகின்றனவா என்பதை, கமிஷன் அவ்வப்போது கண்காணித்து வருகிறது.

சில பல்கலைக்கழகங்கள், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. ஆனால், மாணவர்களிடம் பலவகையில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. சமீபத்தில் எடுத்த ஆய்வில், இந்தியாவில் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 40 பல்கலைக்கழகங்கள் தனது நிகர் நிலை அந்தஸ்தை தக்கவைக்க முடியாத சூழ்நிலையில் இயங்குகின்றன என்று, ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 பல்கலைகள், தனது அந்தஸ்தை திரும்ப பெறமுடியாத நிலையில் உள்ளன.

இந்த 40ல் அரியானாவில் மூன்றும், உத்தரகாண்ட், உ.பி.,யில் தலா இரண்டும் இயங்கி வருகின்றன. பெரும்பாலானவை தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் இயங்குகின்றன.

இவற்றில் சில பல்கலைக்கழகங்களில் அரசியல் பிரபலங்கள் தொடர்பு உள்ளது அதனால், இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.எனினும், மூன்றாண்டு வரை இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கெடுவிதிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது (தினமலர், 2/11/2009)

———————————————————————————————– நடுநிலைமையாக பார்த்தால், கல்லாப் பெட்டியை நிரப்புவதில் மட்டுமே வேகமாக இருக்கும் அனைத்துத் தனியார் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கமிட்டி பரிந்துரைத்திருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?

இன்று இந்த தனியாரின் பகற்கொள்ளை குறித்து எழுதாத பத்திரிகைகளில்லை.  இதனை கவரேஜ் பண்ணாத தொலைக்காட்சிகளில்லை என்று கூறுமளவுக்கு எல்லாம் பட்டவர்த்தனமான பின்பும், “புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்” என வசனம் பேசுகிறது, அரசு! “கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்” என்கிறார், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல்.

தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக கல்வி வியாபாரிகள் சாராய வியாபாரி ஜேப்பியார், சாராய உடையார் மட்டும் அல்ல, ‘மக்களின் பிரதிநிதிகளான தி.மு.க.வின் ஜெகத் ரட்சகன், ரகுபதி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை, நீதிக்கட்சி ஏ.சி.எஸ். தே.மு.தி.க. விசயகாந்த், காங்கிரசு தங்கபாலு போன்றோர்களும் இந்த பிசினஸில் கால் நனைத்துள்ளனர். இவர்கள்தானே மத்திய மாநில அமைச்சர்களாக வலம் வருகின்றனர்.

இந்த கொள்ளைக்கார கும்பல்களெல்லாம் கூடிக் குலாவி, கும்மாளமிடும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலிருந்து, இத்தனியார் கொள்ளைக்கு எதிரான “நடவடிக்கை’யை எதிர்பார்க்க முடியுமா என்ன?

தொடர்புடைய பதிவு: கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

வாதாடி மட்டுமல்ல – போராடிப் பெறுவதே வெற்றி!

பு. மா. இ. மு தலைமையில் போராடிய செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு முதல்கட்ட வெற்றி!


page-1

page 2

IMG139-01

IMG140-01ஆயிரம் தலை வாங்கி

IMG_3402

அடக்குமுறை – வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பள்ளி மாணவர்கள்

திருச்சி, புத்தூர் திரு.வி.க.நகர் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது சி.இ. மேல்நிலைப்பள்ளி. கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கான சலுகையோடு அரசின் நிதியுதவி பெறும் இப்பள்ளியில், தனியாருக்கு நிகராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சாதிரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வன்கொடுமைகளுக்குள்ளாகிறார்கள்.

பள்ளி நிர்வாகி ஜேம்ஸ் ஆபிரஹாம் தனது மகள்கள் மற்றும் மருமகன்களையே ஆசிரியர்களாக நியமித்துக்கொண்டு, வரைமுறையற்ற முறைகேடுகளையும் வன்கொடுமைகளையும் இழைத்து வந்திருக்கிறார்.

இக்கும்பலின் கொடுமைகளை காணச்சகிக்காது, மாவட்டகல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்த குற்றத்திற்காக லாமெக் என்ற ஆசிரியரை, பள்ளிமாணவர்களின் முன்னிலையிலேயே கொலைமிரட்டல் விடுத்துக் கன்னத்தில் அறைந்திருக்கிறார், ஜேம்ஸின் மகளான ஸ்டெல்லா மேரி. தமக்காக வாதாடிய ஆசிரியர் தம் கண் எதிரிலே அவமானப்படுத்தப்படுவதைக் கண்டுகொதித்த மாணவர்கள் உடனே, சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். மனுகொடுத்தும் மறியல் நடத்தியும் கூட நடவடிக்கை எதுவுமில்லை!

இந்நிலையில், இப்பகுதியில் செயல்படும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இதில் தலையிட்டு, இத்தனியார் கல்விக்கொள்ளைக் கும்பலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களோடு, இப்பகுதியெங்கும் தெருமுனைப்பிரச்சார இயக்கங்களை நடத்தி, மாணவர்களையும் பெற்றோர்களையும் அணிதிரட்டினர்.

கடந்த 17.08.09 அன்று இவ்வமைப்பினரின் தலைமையில் திரண்டு, தனியார் கல்விகொள்ளைக் கும்பலுக்கு எதிராக விண்ணதிர முழங்கியபடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றது, அரைக்கால் சட்டை போட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் கூட்டம்.

ஆயிரம்பேர் வந்தாலும் அதிலிருந்து ஐந்து பேரை மட்டும்அழைத்து சமரசம் பேசும் ஆட்சியரின் நைச்சியம் பலிக்கவில்லை இம்மாணவர்களிடம். இவர்கள் எழுப்பிய கண்டன முழக்கமும் கம்பீரமாய் தூக்கிப்பிடித்திருந்த செங்கொடியும்ஆட்சியரையே வெளியே இழுத்து வந்தது. கேள்விமேல் கேள்வி கேட்டு ஆட்சியரையே திணறடித்தனர், இவ்விளம் மாணவர்கள்.

இதனை தொடர்ந்து, ஸ்டெல்லா மேரி தற்காலிகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இப்போராட்டத்தில் கிடைத்த முதற்கட்ட வெற்றி, இப்பள்ளி மாணவர்கள் மற்றும் பகுதிவாழ் மக்களிடம் பு.மா.இ.மு.வின் மீது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.— தகவல்:பு.மா.இ.மு., திருச்சி

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009


கையில காசு, வாயில தோச… ( கருத்துப்படம்)

IMG_3412

ஊழல் குற்றச்சாட்டுக்கு பேர் போன திருமதி. ரமாராணியை மீண்டும் செல்லம்மாள் கல்லூரியின் முதல்வராக நியமித்ததற்கு எதிராக மாணவிகளின் போராட்டம்!

ஊழல் குற்றச்சாட்டுக்கு பேர் போன திருமதி. ரமாராணியை மீண்டும் செல்லம்மாள் கல்லூரியின் முதல்வராக நியமித்ததற்கு எதிராக மாணவிகள், பதவி நீக்க செய்யக் கோரி கல்லூரிக் கல்வி இயக்குனரிடம் 08/09/2009 அன்று கொடுத்த மனுவின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

sellamman college page 1sellamman college page 2

கல்வியை வியாபாரம் ஆவதை எதிர்த்து பு. மா. இ. மு ஆர்ப்பாட்டம் – வீடியோ!!!

ஜுன் 18, 2009 அன்று பு. மா. இ. மு௦-ன் தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மெமோரியல் ஹால் (GH எதிரில், சென்னை) நடைபெற்றது. சென்னை மாவட்ட செயக்குழு உறுப்பினர் தோழர் சேகர் தலைமை தாங்கினார். தனியார் கட்டண கொள்ளைக்கு எதிராக சென்னை மாவட்ட இணைசெயலாளர் கணேசன் கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்பாட்டத்தின் வீடியோ பதிவு.

கல்வியை வியாபாரம் ஆவதை எதிர்த்து பு. மா. இ. மு ஆர்ப்பாட்டம் – வீடியோ!

தனியார்மயம் என்றாலே தரம் தான், ஆனால் 135 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50% சீட்கள் கூட நிரம்பவில்லை?

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங், ஜூலை 10ம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 749 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப் பட்டனர் (தினமலர் 11/08/2009).

 

இதில், 39 ஆயிரத்து 657 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் 421 பேர் “இடம் வேண்டாம்’ என தெரிவித்தனர்.

 

பொதுப்பிரிவு மாணவர்களுக் கான பொறியியல் கவுன்சிலிங் முடிவில், 31 ஆயிரத்து 210 இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு 92 புதிய கல்லூரிகள் உட்பட,மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பி.ஆர்க்., படிப்பு வழங்கும் ஆறு கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 446 கல்லூரிகள் உள்ளன.

 

32 கல்லூரிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் நிரம்பியுள்ளன. ஆறு கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்க ளே நிரம்பியுள்ளன.

 

தனியார்மயம் என்றாலே தரம் தான் என்று சொல்லும் ஏன் கவுன்சிலிங் முடிவில் 31 ஆயிரத்து 210 இடங்கள் காலியாக உள்ளன?

 

இந்த ஆண்டு மட்டும் 92 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் தரமான கல்வி கொடுக்கவேண்டும் என்று தொடங்கப்பட்டதா? அல்லது கல்வி கட்டணக்கொள்ளை மூலம் சம்பாதிக்க ஆரம்பிக்கப்பட்டதா?


விநாயகா மிஷன் பல்கலைக்கழக சேர்மன் சண்முகசுந்தரம் கல்வி வள்ளலா? அல்லது குறுநில மன்னனா?

 

 

hi  

சேலம் விநாயகா மிஷன் பல்கலை சேர்மன் மற்றும் வேந்தருமான சண்முகசுந்தரம் – அன்னபூரணி, 70வது பிறந்த தினம் மற்றும் திருமண வைபோக ஆடம்பர விழா நடத்தியதற்கான செலவு மற்றும் யானை, குதிரை சகிதமாக குறுநில மன்னர் போல வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இரண்டு நாள் நடத்திய சோதனை மூலம், பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து விவரம், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் அரியானூரில் மிகப் பிரம்மாண்ட முறையில், விநாயகா மிஷன் சேர்மன் சண்முகசுந்தரத்துக்கு சொந்தமான மாளிகை மற்றும் விநாயகா மிஷன் பல்கலை அலுவலகம் அமைந்துள்ளன. பல ஏக்கர் பரப்பிலான நிலத்தை வாங்கி, வீட்டையே அரண்மனை போல கட்டி சண்முகசுந்தரம் குடியிருந்து வருகிறார்.

விநாயகா மிஷன் பல்கலை அலுவலகம் அமைந்துள்ள அந்த பகுதி முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், பல் மருத்துவக் கல்லூரி, ஏற்காடு அடிவாரத்தில் பார்மசி கல்லூரி, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் மருத்துவமனை என, விநாயகா மிஷன் பெயரில் சொத்துக்குள் வாங்கி குவிக்கப் பட்டுள்ளன. ஆரம்பத்தில் சண்முகசுந்தரம் லேப்-டெக்னீஷியனாக வாழ்க்கையை ஆரம்பித்து, இரண்டாவது அக்ரஹாரத்தில் விநாயகா மருத்துவமனை கட்டி, அதில் குடியிருந்து வந்தார்.

பின், விநாயகா மிஷன்ஸ் சார்பில் பல் வேறு கல்லூரிகளை திறந்து, குறுகிய காலத்தில் சொத்துக் களை வாங்கி குவித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. சண்முகசுந்தரத்தின் விஸ்வரூப வளர்ச்சியின் பின்னணி குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சண்முகசுந்தரம் ஒவ்வொரு பிறந்த நாளையும் யானை, குதிரைகள் சகிதம் கல்லூரி மாணவ, மாணவியருடன் பிரம்மாண்ட விழா, பேரணி என பல லட்சம் ரூபாய் செலவு செய்து நடத்துவது வழக்கம்.

சில வாரங்களுக்கு முன், சண்முகசுந்தரத்தின் 70வது பிறந்த நாள் விழா பிரம்மாண்டமான முறையில் நடத்தப் பட்டது. விலை உயர்ந்த ஜாதிக் குதிரைகளை தேரில் பூட்டி, ஏற்காடு அடிவாரத்தில் இருந்து மன்னர்களை போல வீதி உலா சென்றார். உடன், குதிரைப்படை வீரர்கள் உடை அணிந்து ஊழியர்கள் இருபுறமும் அணி வகுத்து வந்தனர்.அரியானூரில் விநாயகா மிஷன் சார்பில், 1,008 லிங்கம் அமைந்த சிவன் கோவிலில் கோலாகல பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பிரபலமான வி.வி.ஐ.பி.,க் கள் பலர் கலந்து கொண்டனர். அஸ்வமேத யாகத்தை சண்முகசுந்தரம் நடத்தினார். சண்முகசுந்தரம் குறுநில மன்னரை போல அரண்மனை வாழ்க்கை குறித்தும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிறந்த நாள் கொண்டாட்டம், அணிவகுத்து நிற்கும் விலைமதிப்பு கூடிய கார், ஜீப், வேன் என அவரது டாம்பீகமான நடவடிக்கை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று மாதமாக ரகசியமாக கண் காணித்து, முக்கிய ஆதாரங் களை சேகரித்த பின்னரே, பல்கலையில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அரண்மனையில் இருப்பது போல தேர், குதிரை லாயம், கேரளாவில் இருந்து வாங்கப் பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானை சொந்தமாக உள்ளன. உயர் ஜாதிக் குதிரையை பராமரிக்க பணியாளர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விநாயகா மிஷன் பல்கலை இணை வேந்தராக அவரது மகன்கள் சரவணன், கணேசன், டைரக்டர்களாக அவரது மகள்கள் அருணாதேவி, சுமதி ஆகியோர் உள்ளனர்.இரண்டு நாட்களாக கோவை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு கூடுதல் இணை இயக்குனர் ஜெயராமன், சேலம் வருமான வரித்துறை உதவி இயக்குனர் கருப்புசாமி தலைமையிலான அதிகாரிகள் முக்கிய ஆவணம், பல கோடி ரூபாய்க்கான சொத்து விவரம், மாணவர் சேர்க்கை கட்டண ரசீது ஆகியவற்றை மூட்டை கட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

வருமான வரித்துறையின் தொடர் விசாரணை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதன் மூலம், மாணவர் சேர்க்கையில் கூடுதல் நன்கொடை வசூலித்து பணம் சம்பாதிக்கப்பட்டதா என்றும், வேறு வழிகளில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதா என்பது போன்ற முக்கிய விஷயங்கள் வெளிவரும் (தினமலர், ஆகஸ்ட் 15,2009).

——————————————————————————————லேப்-டெக்னீஷியனாக வாழ்க்கையை ஆரம்பித்து, நேர்மையாக உழைத்து, ஒரு மனிதன் குறுநில மன்னன் ஆக முடியுமா?

சண்முகசுந்தரம் கல்வி வள்ளலா? அல்லது குறுநில மன்னனா?

குறுநில மன்னன் வாழ்க்கை நடத்தும் ஒருவன் எப்படி தரமான கல்வி கொடுக்க முடியும்?

ஏன், குறுநில மன்னனுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும்?

நடுத்தர வர்க்க மக்களே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கட்டும் பணம் எங்கே போகிறது என்று தெரிகிறதா?

தனியார்மயம் தான் தலைசிறந்தது என்று சொல்லும் முதலாளித்துவ அறிவுஜீவிகளே இதுதான் தரமா?

 

 


கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009

தனியார் ஆற்றிவரும் “”கல்விச் சேவை” வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத வகையில் நர்சரி பள்ளிகள் தொடங்கி தனியார் சுயநிதி பொறியியல், மருத்துவக் கல்லூரி வரை கல்வி கட்டணங்களும், கட்டாய நன்கொடைகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன.

சென்னையிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ.பள்ளியில் 6ஆம் வகுப்புக்கு சென்ற ஆண்டு கட்டணம் ரூ.17,000/. அது, இந்த ஆண்டு ரூ.25,025/ஆக உயர்ந்திருக்கிறது என்பதிலிருந்தே இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். 6ஆம் வகுப்புக்கே இந்தக் கதியெனில், பொறியியல் மருத்துவக் கல்லூரிகளின் நிலையைச் சொல்லவே வேண்டாம்.

இதுவரை “தரமானக் கல்விக்காக’ தனியார் கேட்டதைக் கொட்டியழுத பெற்றோர்கள், இன்று நிலைமை கைமீறிப் போனதையடுத்து, வேறுவழியேயின்றி கட்டண உயர்வுக்கெதிராக ஆங்காங்கே பள்ளிகளுக்கு முன் கூடிக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமே நடத்தியிருக்கிறார்கள்.

இன்று இந்த தனியாரின் பகற்கொள்ளை குறித்து எழுதாத பத்திரிகைகளில்லை; இதனை கவரேஜ் பண்ணாத தொலைக்காட்சிகளில்லை என்று கூறுமளவுக்கு எல்லாம் பட்டவர்த்தனமான பின்பும், “”புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்” என வசனம் பேசுகிறது, அரசு! “”இதைப்பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது” என்கிறார், மாநில ஆரம்பக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு.”” கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்” என்கிறார், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல்.

வெற்றுச்சவடால்களையும், “திடீர் ரெய்டு’ நாடகங்களையும் அரங்கேற்றி, மக்களின் எதிர்ப்புணர்வை மடைமாற்றி நீர்த்துபோகச் செய்ய முயலுகிறது அரசு. அரசுக்கு அறிக்கை அனுப்புவதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லாத ஒரு பல்லில்லாத அமைப்பான ஆய்வு குழுவை அனுப்பி கல்வி வியாபாரிகளை “பயமுறுத்துகிறது.’

“மாநிலம் முழுவதும் உள்ள 350க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இது போன்ற சுரண்டல்களால் மூன்றாயிரம் கோடி ரூபாய் வரை கறுப்புப் பணம் கைமாறுகிறது” எனப் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கிறார், இந்த ஆய்வுக் குழுவின் தலைவர்
பேரா. இராமசாமி. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட ஆய்வுக் கமிட்டி எதற்கு?

தனியார் சுயநிதி கல்வி வியாபாரிகள் என்றாலே சாராய வியாபாரி ஜேப்பியார், சாராய உடையார் மட்டும் தானா? டாடா, அம்பானி, ஸ்பிக் முத்தையா, மஹிந்திரா உள்ளிட்ட எண்ணற்ற தரகுப் பெருமுதலாளிகளும்; தி.மு.க.வின் ஜெகத் ரட்சகன், ரகுபதி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை, நீதிக்கட்சி ஏ.சி.எஸ். தே.மு.தி.க. விசயகாந்த், காங்கிரசு தங்கபாலு போன்ற “மக்களின் பிரதிநிதிகளும்’ இந்த பிசினஸில் கால் நனைத்துள்ளனர். இவர்கள்தானே மத்திய மாநில அமைச்சர்களாக வலம் வருகின்றனர்.

இந்த கொள்ளைக்கார கும்பல்களெல்லாம் கூடிக் குலாவி, கும்மாளமிடும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலிருந்து, இத்தனியார் கொள்ளைக்கு எதிரான “நடவடிக்கை’யை எதிர்பார்க்க முடியுமா என்ன?

கடந்த 95ஆம் ஆண்டு, நாடாளுமன்ற மேலவையில், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான “தனியார் பல்கலை மசோதா’ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. அவையின் இரு பக்கங்களிலிருந்தும் எந்த எதிர்ப்புமில்லை. ஆனாலும் 14 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட அம்மசோதா இன்றும் நிறைவேறாமல் மேலவையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான், “”இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தனியார் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் வகையில் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்யப்போவதாய் பூச்சாண்டி காட்டியிருக்கிறார்”, மாநில உயர்கல்வி அமைச்சர் பொன்முடி.

இப்பொழுது “முழித்து’க் கொண்டுள்ள அமைச்சர், இதற்குமுன் கட்டணக் கொள்ளை நடந்தபோதெல்லாம், அதனைத் தடுக்காமல் எதைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்? மேலும், எத்தனைக் கடுமையான சட்டங்களைப் போட்டாலும் அதிலுள்ள ஓட்டைகள் வழியே தப்பி ஓடிவிடும் பெருச்சாளிகள் அல்லவா, கல்வி வியாபாரிகள்!

நீதித்துறையை நாடி இத்தனியாரின் கொள்ளையை தடுத்துவிடலாம் என நினைத்தால், ஏமாற்றமே மிச்சம்! “”தனியார்மயம் அரசின் பொருளாதாரக் கொள்கையாக இருக்கிறது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். இது மட்டுமா? சமூக சீர்திருத்த நோக்கத்தோடு தமிழக அரசு வழங்கிவந்த கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, தமிழ் மொழிக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு, ஆதரவற்ற மற்றும் இளம் கைம்பெண்களுக்கான இடஒதுக்கீடு
ஆகியவற்றிற்குக் குழிபறித்து, கல்வியைச் சமூக நோக்கத்தோடு பார்க்கக்கூடாது எனப்பாடம் சொல்லிக்கொடுத்ததும் இதே நீதிமன்றங்கள்தான்!

“14 வயது வரைக்கும் அனைவருக்கும் கட்டாயக்கல்வியை, இலவசக் கல்வியை வழங்க வேண்டும்” எனச் சொல்கிற இந்திய அரசியல் சாசனச் சட்டத்தை குப்பையில் போட்டுவிட்டு, “”கல்வியை பொதுச் சேவை என்பதிலிருந்து, ஹோட்டல், சுற்றுலா போன்ற சேவைத்துறையாக மாற்றி தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு இத்தகைய சமூகப் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்” என்ற “காட்’ ஒப்பந்தத்தின் கட்டளைப்படியே ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

“”எந்த தொழில் ஆனாலும் தனியார் நுழைந்தால்தான் தரமாக இருக்கும்” என அரசின் தனியார்மயக் கொள்கைக்கு ஒத்தூதி வந்த நடுத்தர வர்க்கம், இப்பொழுது தனியார் கல்வி முதலாளிகளிடம் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கி கிடக்கிறது! தனியார் மயம் என்பது எத்தகைய அபாயகரமானது, எத்தகைய சமூக விரோதமானது என்பதை இவர்களுக்கு புரிய வைத்திருக்கிறது “கட்டணக் கொள்ளை’!

எனவே, அரசிடம் சட்டம் கொண்டு வா, கண்காணி, கட்டுப்படுத்து எனக் கோரிக்கை வைப்பதற்கு எந்த அடிப்படையுமில்லை. எதைக் கொண்டு வந்தாலும் அதிலிருந்து தப்பிக்க இத்தனியார் பெருச்சாளிகளுக்கு சொல்லித்தரவும் வேண்டியதில்லை.

கல்வி தனியார்மயமாவதை தடுக்காமல் கட்டணக் கொள்ளயை ஒழிக்க முடியாது

கல்வி தனியார்மயமாக்கப்படுவதற்கெதிராக தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பிரச்சார இயக்கங்களை நடத்திவரும் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று சென்னை மெமோரியல் அரங்கம் அருகிலும் சேலத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஜூன் 15ஆம் தேதியன்று போஸ் மைதானத்திலும் “”கல்வி தனியார்மயத்தைத் தடுத்து அரசுடமையாக்க”க் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

சென்னை ஆர்ப்பாட்டத்தில், “”தனியார் கட்டணக் கொள்ளையால் நேரடியாகப் பாதிக்கப்படாத இந்த மாணவர்கள் பிறருக்காக வெயிலில் நின்று கத்திக்கொண்டிருக்கின்றனர். இத்தனியாரின் கொள்ளையால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற பெற்றோர்கள் எங்கே போனார்கள்? ” என்ற கேள்வியெழுப்பி மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து போராடவேண்டும் என வலியுறுத்திப் பேசினார், ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தை முகமது ரபீக்.

பு.மா.இ.மு. கலைக்குழுவினர் கல்வி தந்தைகளாக அவதாரமெடுத்து நிற்கும் கொள்ளைகாரர்களைத் திரைகிழித்தும், ராபின் தொடங்கி விவேக் வரை பல மாணவர்களின் உயிரைப் பறித்த இக்கொலைகாரர்களை அம்பலப்படுத்தி நடித்த வீதி நாடகமும், “”திருத்த முடியுமா, ஜேப்பியாரைத் திருத்தமுடியுமா? தனியாரின் கொள்ளையைத் தடுக்கமுடியுமா?” போன்ற பாடல்களும் தனியார்மயத்தின் கோரமுகத்தைக் கண்முன் நிறுத்தின.

சேலத்தில் பு.ஜ.தொ.மு. கலைக்குழுவினர் “”மருத்துவக்கல்வி ரூ. 75 லட்சம், பொறியியல் கல்வி ரூ. 50 லட்சம்!” எனத் தள்ளுவண்டியில் கூவிக்கூவி வியாபாரம் செய்வது போல நடத்திய “”கல்விச்சந்தை” எனும் வீதி நாடகமும், “”ஆனா ஆவன்னா, காசிருந்தா இனா ஈயன்னா” என்ற நையாண்டிப் பாடலும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

“புரட்சிகர அமைப்புகளுடனும் கல்வியாளர்களுடனும், மாணவர்களும் பெற்றோர்களும் கைகோர்த்து களமிறங்கிப் போராடுவதைத் தவிர, இதற்கு வேறு தீர்வில்லை” என்ற அறைகூவலோடும், விண்ணதிரும் முழக்கங்களோடும் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் புதிய நம்பிக்கையையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.

— பு.ஜ.செய்தியாளர்