• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,594 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!

விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!

கருணாநிதியெல்லாம் ஒரு தேர்ந்த பிழைப்புவாதியாக மாறுவதற்கு ஒரு ஐம்பதாண்டுகள் ஆனதென்றால், திருமாவளவனுக்கோ இந்தப் “பரிணாமம்” எல்லாம் ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டது.

திருமாவின் பிறந்தநாளான ஆகஸ்டு 17, சமீபகாலமாக பாசிச ஜெயாவின் கட்-அவுட் களேபரங்களுக்குப் போட்டியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சொன்னை முழுவதும் பிளெக்ஸ் பேனர்கள் மயம்.  1990-களில் பிளக்ஸ் தொழில்நுட்பம் வளராததால் ஜெயாவின் கட்-அவுட்டுகள் இருந்தன. திருமாவின் காலத்தில் புற்றீசல் போல பிளெக்ஸ் அச்சகங்கள் தோன்றிவிட்ட நிலையில், சிறுத்தைகள் திருமாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக எல்லா அச்சகங்களையும் குத்தகைக்கு எடுத்து விட்டார்களா என எண்ணுமளவுக்கு, பிளெக்ஸ் போர்டுகளின் எண்ணிக்கை சென்னைவாசிகளை மலைக்க வைத்தது.

சொன்னையில் திரும்பிய பக்கமெல்லாம், திருமாவை ‘மாசறு பொன்னே போற்றி, கடாரம் வென்ற மன்னா’ என்றபடி எல்லா உயர் தமிழ் சொற்களாலும் போற்றும் துதிபாடும் பிளெக்ஸ் போர்டுகள் மொய்த்தன. சேகுவேரா, பிரபாகரன் உள்ளிட்டு இன்னும் பல வரலாற்று மாந்தர்களின் கெட்டப்பில் தோன்றும் திருமாவின் அவதாரங்களோடு, அண்ணனின் அல்லக்கைகளின் படங்களும் எல்லா பேணர்களிலும் தவறாமல் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக அல்லக்கைகள் எல்லோரும் தங்கள் பெயருக்கு கீழே ஏதோ ஒரு பதவியையும் குறிப்பிட்டிருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இப்போது எல்லோருக்கும் உறுப்பினர் தகுதி மட்டும் கிடையாது; ஏதாவது ஒரு பதவியும் போனசாக உண்டு.

அண்ணனின் ஒவ்வொரு பிறந்தநாளையும் ஏதாவது ஒரு கொள்கை முழக்கத்தை வைத்து நடத்துவதை சிறுத்தைகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இம்முறை ஈழம் சீசனாக இருப்பதால், “எழும் தமிழ் ஈழம்” என பேனர்களின் ஓரத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். ஈழம் எரிந்து கொண்டிருந்தபோது, அதை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திய கருணாநிதி அரசு, இப்போது ஈழப் போராட்டம் புதையுண்ட நேரத்தில், தனது தேர்தல் வெற்றியை அது பாதிக்கவில்லை என்பதைப் பார்த்துவிட்டவருக்கு, சிறுத்தைகளின் பேனரில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், பிரபாகரன் படம் இடம் பெற்றிருப்பதாக தினமலர் நாளேடு போட்டுக் கொடுத்தது.

உடனே முத்தமிழ் முதல்வரின் காவலரணி சிறுத்தைகளின் பேனர்களை நோக்கிப் பாந்தது. போலீசுக்கு தொல்லை கொடுக்க விரும்பாத சிறுத்தைகளும் எல்லா பேனர்களிலும் ‘எழும் ஈழத்தை’ அழித்து உதவி செய்தனர். கடைசில் ‘எழும் ஈழத்’திற்கு இடையில் இருந்த ‘தமிழ்’ மட்டும் பரிதாபமாக காட்சியளித்தது. கடந்த ஆறு மாதங்களாக ஈழத்திற்காக அமர்க்களப்படுத்திய சிறுத்தைகளின் ‘வீரம்’ இறுதியில் தாரை வைத்து, ஈழம் என்ற பெயரையே அழிக்கும் வண்ணம் அஞ்சி நடுங்கிப் போனது.

ஆனாலும் பிறந்த நாள் கூட்டத்தில் முழங்கிய திருமா, இனி புலிகளின் கோரிக்கைக்காக ஆயுதம் தாங்காத வழியில் சிறுத்தைகள் போராடுவார்கள் என வாக்குறுதி அளித்தார். அதே சமயம், தி.மு.க அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க மாட்டோம் எனவும் முன்னெச்சரிக்கையாக, “கண்டிஷன்ஸ் அப்ளை”யும் போட்டார். ஒரு எம்.பி. சீட்டு நன்றிக்காக தமிழ்நாட்டு மேடையில் இப்படி பேசியவர், சமீபத்தில் ஜெர்மனியில் புலி ஆதரவாளர்கள் நடத்திய மாநாட்டில் பிரபாகரன் தலைமையில் விரைவில் ஐந்தாவது ஈழப்போர் துவங்கும் என அறிவித்தார். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே திருமாவளவனுக்கு ஒரு இமேஜ் இருப்பதால், அதைத் தக்கவைப்பதற்கு அங்கே அப்படி; பிழைப்பை ஓட்ட இங்கே இப்படி…

திருமாவின் ஓட்டுக்கட்சி பிழைப்புவாதம் இப்போது தமிழக மக்களுக்கு புதிரான ஒன்றல்ல. எனினும், அயல்வாழ் தமிழ் மக்கள், அதுவும் ஈழம் தொடர்பாக மட்டும் அவரைத் தெரிந்து வைத்திருக்கும் மக்களுக்கு, அவரது சரணாகதிப் படலம் தெரியாது.

‘90-கள் முழுவதும் “அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி” என்று ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் இயங்கிய போது தேர்தலைப் புறக்கணித்தார்கள். ஆனால், இந்த முழக்கங்கள், அதாவது அவர்கள் விரும்பிய தீண்டாமை ஒழிப்பு ஆகியவை – சாதி ஒழிப்பிற்கான திட்டமோ, நடைமுறையோ, அதற்கேற்ற அமைப்பு – அணிகள் பலமோ இல்லாததால் வெற்றுச் சவடாலாகிப் போயின. திருமாவளவன் ஒரு பிரிவு தலித் மக்களிடம் பிரபலமான தலைவரானார். அவர் பேசிய கூட்டங்களுக்கு கணிசமாக மக்கள் வந்தார்கள்.

இப்படி திசைவழியறியாத கூட்டத்தை வைத்துப் பல பிரச்சினைகளை சந்தித்து, கருணாநிதி அரசால் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொள்ள அமைப்பின் – அணிகளின் பலமுமின்றி, இறுதியில் இதையே காரணமாகக் கூறி தேர்தல் அரசியலில் நுழைந்தார். அத்துடன் அவரது தலித் அரசியல் முடிவுக்கு வந்து, பிழைப்புவாத அரசியல் அத்தியாயம் ஆரம்பித்தது.

’98 தேர்தலில் அயா மூப்பனாரோடு கூட்டணிக் கட்டிக் கொண்டு சிதம்பரம் தொகுதியில் நின்றார். இதற்கு நன்றிக் கடன் செலுத்தும் விதத்தில் தஞ்சை மாவட்டத்தில் கூலி விவசாயிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒடுக்கி வரும் குடும்பத்தைச் சேர்ந்த மூப்பனாரை புரட்சித் தலைவர் என்றார். அதன்பின் போயஸ் தோட்டம், கோபாலபுரம் என மாறி மாறி தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை அடகு வைத்து, ஓரிரண்டு தொகுதிகளை வென்றார். இக்காலத்திற்குச் சற்று முன்னர்தான் கொடியங்குளம் ஆதிக்கசாதி கலவரம், மாஞ்சோலைப் படுகொலை எல்லாம் இரு கழக அரசுகளால் நடத்தப்பட்டிருந்தன.

அப்புறம் பாப்பாப்பட்டி, மேலவளவு, திண்ணியம் முதலான வன்கொடுமைகள் நடந்த போது, சிறுத்தைகள் அதை வைத்துத் தமது சொல்வாக்கை வளர்த்துக் கொள்ளத்தான் முனைந்தனர். மேலவளவு முருகேசன் கொலை வழக்குகூடத் தன்னார்வ வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு, தண்டனை வாங்கித் தரப்பட்டது. இதற்குள் அண்ணன் எல்லா ஆதிக்க சாதி பிரமுகர்களுடனும் ஐக்கியமாகிவிட்டார். சேதுராமனுடன் கை தூக்கி போஸ் கொடுத்ததென்ன, ராமதாசுடன் சேர்ந்து தமிழ் இயக்கம் கண்டதென்ன, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு விடுமுறை கோரியதென்ன என்று பலவற்றைப் பட்டியிடலாம்.

முத்தாப்பாக, விருத்தாசலம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனும், வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகியும் காதல் திருமணம் செய்ததற்காக கட்டி வைத்து நஞ்சூற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் கூட,  வன்னிய சாதி வெறியர்களைத் தண்டிக்கக்கோரிப் போராடுவதற்குப் பதிலாக, அவர்களுடன் பஞ்சாயத்து செய்து சுமூகமாகப் போகுமாறு முருகேசனின் சொந்தங்களுக்கு சிறுத்தைகள் நெருக்குதல் கொடுத்தனர். இந்த விவரங்களெல்லாம்  புதிய ஜனநாயகம் இதழில் விரிவாகவே பதிவாகியிருக்கின்றன. இப்போது அடுத்த கட்டமாக, சிறுத்தைகள் எந்தப் பாதையில் சொல்கின்றனர் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்ட மடிப்பாக்கம் வேலாயுதம் என்ற வேட்பாளரைக் கண்டு பலரும் அதிர்ந்து போனார்கள். காரணம், அந்தப் பிரமுகர் ஒரு ரியல் எஸ்டேட் மாஃபியா;  சி.பி.ஐ வழக்குகளைச் சந்தித்து வருபவர். அவ்விவகாரம் சந்தி சிரித்ததும், ஏதோ ஒரு முன்னாள் நீதிபதியை கொண்டுவந்து நிறுத்தினர். அவருக்கும் கட்சிக்கும் அதற்கு முன்னர் கொள்வினையோ, கொடுப்பினையோ கிடையாது.

இதற்குமுன் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேறிய சொல்வப்பெருந்தகை உலகறிந்த கட்டப் பஞ்சாயத்து ரவுடி. அதிலேயே பல கோடிகளைச் சேர்த்தவர். கூடுதலாக, ஜெயாவின் வளர்ப்பு மகனது கருப்புப் பணத்தையும் சில பெண் தொடர்புகள் மூலமாக இவர் லவட்டிக் கொண்டார் என்றும் கூறப்படுவதுண்டு. சொல்வப்பெருந்தகை இப்போது பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போனாலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறுத்தைகளும் இதை பெரியபிரச்சினையாக்கவில்லை. ஆக்கினால், சேர்ந்த வண்டவாளங்கள் அம்பலாமாகும் என்ற பயம்தான் போலும்.

சொல்வப்பெருந்தகை காலத்தில்தான், சிறுத்தைகளின் கட்சி தற்போதைய திருத்தமான வடிவைப் பெற்றது. இதன்படி, உள்ளூர் அளவில் உள்ள பிழைப்புவாத தலித் பிரமுகர்கள், கட்டப் பஞ்சாயத்து சேபவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் சேயும் மாஃபியாக்கள், ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அந்தந்தப் பகுதி வர்த்தகர்களிடம் மாமூல் வசூலிப்பவர்கள், கட்சியின் பொதுக்கூட்டச் சொலவுகளுக்கு அப்பகுதியிலிருக்கும் பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் வசூலித்தல், சுயநிதிக் கல்லூரிகளின் முதலாளிகள் சிறுத்தைகளுக்கென்று ஒதுக்கும் சீட்டுகளை பல இலட்சங்களில் விற்பனை செய்தல், சினிமா கட்டப் பஞ்சாயத்து செய்தல் – இப்படி பல்தொழில் வல்லுநர்கள்தான் இப்போது சிறுத்தைகளின் வெளிமுகங்கள்.

இந்த ரவுடிகளை வைத்துப் பிழைக்கும் பிரமுகர்களைச் சுற்றி பெருங்கூட்டமா இருக்கும் தொண்டர்கள் எலும்புகளைக் கவ்வியவாறு சுற்றி வருகின்றனர். இப்படி வசூலிப்பதற்கென்றே ஒரு கட்சியும், கூட்டமும் உருவாகிவிட்டது. பல இடங்களில் வர்த்தகர்களும், முதலாளிகளும் எதற்கு வம்பு என்று பணம் தருவதோடு, சிலர் கட்சியிலும் சேர்ந்து வருகின்றனர். தற்போது திருச்சொந்தூரில் உள்ள சொந்திலாண்டவன் கோவிலில் பூசை சேயும் பார்ப்பனர்களும் சேர்ந்திருக்கிறார்கள். பலருக்கு இது அதியமாகப்படலாம். உண்மை என்னவென்றால், எல்லா பிரபலமான கோவில்களிலும் உள்ள பூசாரிகள் பக்காவான லும்பன்களாக இருப்பார்கள். கை நிறைய காசு, அதை அனுபவிப்பதற்கு வசதிகள் – இப்படி உழைக்காமலேயே தொந்தி வளர்க்கும் கூட்டம், தனது பாதுகாப்பிற்காக சிறுத்தைகளிடம் சேர்ந்ததில் வியப்பில்லை. மேலும், பார்ப்பனர்கள் – தலித் கூட்டணி என்ற மாயாவதிக் கட்சியின் தமிழக கிளைக்கு போட்டியாகக்கூட இதைக் கருதலாம்.

ஆக, வசூலிப்பதற்கு இவ்வளவு பெரிய இயந்திரத்தை உருவாக்கிவிட்டபடியால், இந்தக் கட்டமைப்பைத் தக்க வைப்பது எப்படி? அதற்குத்தான் மூன்று மாதங்களுக்கொரு முறை ஏதாவது ஒரு பிரச்சினையைச் சாக்காக வைத்து மாநாடு என்று பிளெக்ஸ் பேனர்களில் அமர்க்களம் சேகிறார்கள். இதைப் பார்க்கும் மக்களெல்லாம் சிறுத்தைகள் பெரும் வளர்ச்சி பெற்றதாக நம்ப, முதலாளிகள் இனிமேல் அரசியல் கட்சிகளுக்குக் காசு கொடுக்கும் பட்டியலில் சிறுத்தைகளையும் சேர்க்க, மாற்றுக் கட்சிகளுக்கோ சிறுத்தைகளின் ‘பலத்தை’ அறிந்து அவர்களுக்கு சீட்டுக்கள் அதிகம் கொடுக்க வேண்டுமோ என யோசிக்க – இப்படி பல விதங்களில் திருமாவின் ‘கொள்கை’ மாநாடுகள் பயன்படுகின்றன.

இப்படிப்பட்ட கூட்டத்தை வைத்துத்தான் திருமாவளவன் கட்சி நடத்துகிறார். அவரது கட்சித் தலைமையகம் கூட அவரது தாயாரின் பெயரில் பதிவாகி, தற்போது அது ஒரு ஆக்கிரமிப்பு என வழக்கே நடந்து வருகிறது. வழக்கிற்கு வராத சுருட்டல்கள் எவ்வளவென்று தெரியவில்லை. ஏற்கெனவே உலகமயத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைகள் குறைந்துவரும் நேரத்தில், சேரியில் இருக்கும் உதிரியான இளைஞர்களுக்கு இப்படி ஒரு வாழ்வு சிறுத்தைக் கட்சியில் சேர்ந்தால் கிடைக்கிறது. ஓரிரு ஆண்டுகளிலேயே அடுக்குமாடி, ஸ்கார்பியோ கார், பரிவாரங்கள் என இதில் பலர் முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகளின் எம்.எல்.ஏ. ரவிக்குமார் நடுத்தர வர்க்க தலித் மக்களின் கோரிக்கைகளைச் சட்டசபையில் பேசுவார். வெள்ளை அறிக்கை, பணியிடங்களைப் பூர்த்தி செய்தல், ஆதி திராவிடருக்குக் கூடுதல் நிதி ஒதுக்குதல், அரசுப்பணி மாற்றம் – இப்படியான அரசு கட்டப் பஞ்சாயத்துகளை அவர் சேகிறார். இதனால் கணிசமான அரசு, நடுத்தர வர்க்க தலித் மக்கள் தமது சுயநலத்திற்காகச் சிறுத்தைகளை ஆதரிக்கின்றனர்.

இப்படி லும்பன்களும், நடுத்தர வர்க்கமும் இணைந்த கலவையாக காட்சியளிக்கும் சிறுத்தைகளின் அரசியல் முகத்தை அடிக்கடி புதுப்பிப்பதற்குத்தான் ஈழம் பயன்பட்டிருக்கிறது. இந்த அரசியல் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு திருமாவளவன் தலைமை தாங்குகிறார். அடிக்கடி அறிக்கை விடுவார். மாநாடு நடத்துவார். பேட்டிகள் கொடுப்பார். மற்றபடி, முன்பெல்லாம் சிறுத்தை அணிகள் தலித் அரசியல், தலித் தலைமை, தலித் புரட்சி என்றெல்லாம் ஆவேசமாக பேசுவார்கள். இப்போது எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அசைந்து கொடுப்பதில்லை என அக்கட்சித் தோழர்களே வருத்தப்படுகின்றனர்.

இருப்பினும், விடுதலைச் சிறுத்தைகள் இந்தத் தொழிலை ஒரு அளவுக்குதான் செய்ய முடியும். அ.தி.மு.க; தி.மு.க. அளவுக்கெல்லாம் பிரம்மாண்டமாகச் செய்ய முடியாது. கருணாநிதி கூட சிறுத்தைகளை ஓரளவுக்கு அனுமதித்து விட்டு, தேவையான நேரத்தில் ஆப்படிப்பார். இதை திருமாவும் உணர்ந்துள்ளதால், இப்போதைக்கு இந்த விளையாட்டு விதிமுறைக்குட்பட்டு  ஆடப்பட்டு வருகிறது. பிளெக்ஸ் பேனரில் எவ்வளவு ஆவேசமாக மீசையை திருமா முறுக்குகிறாரோ, அந்த அளவுக்கு அரசியல் பிழைப்புவாதம் மறைந்திருக்கிறது என்று பொருள்.

ஐரோப்பாவிலும், கனடாவிலும் இருக்கும் அப்பாவி ஈழத்தமிழன் மட்டும் திருமாவை ஈழத்திற்கான ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பிக்கொண்டிருப்பார். என்ன இருந்தாலும் தமிழகத்திற்கும் அமெரிக்காவிற்கும் தூரம் அதிகம்தானே?

நன்றி: புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

தொடர்புடைய பதிவுகள்:

மூஞ்சப் பாரு!

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!

கழிசடைத் தளபதி விஜயகாந்தும், புரட்சிக்காரன் ரமணாவும்

ரமணா படத்தில் வரும் ஒரு காட்சி:
ரமணா சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அவரைப் பற்றி கேள்விப்படும் மக்கள் அவரைப் புகழ்ந்து பேசுவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் ஆட்டோ க்காரர் ஒருவர் பின்வருமாறு கூறுவார், ” நான் நாத்திகன்தான் ஆனால் ரமணா சாரோட படம் கிடைத்தால் அவரை கடவுளாக வைத்து கும்பிடுவேன்“, என்று.
இதை குறிப்பிட்டு ரமணாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், மக்களுக்காக பல சேவைகள் செய்த நீங்கள் உங்களது படத்தையும் வெளியிடலாமே என்று கேட்பார். அதற்க்கு புரட்சிக்காரர்(??) ரமணா சொல்வார், “அய்யா, இந்த சட்டையை நெய்த நெசவாளி யார் என்று தெரியுமா உங்களுக்கு?, நாம் சாப்பிடுகிறோமே அந்த அரிசியை விளைவித்த விவசாயி யார் என்று தெரியுமா?” இப்படி சில எடுத்துக்காட்டுகளைக்(வழக்கம் போல புள்ளிவிவர பாணியில்) கூறிவிட்டு கடைசியில் இவர்கள் எல்லாம் தங்களது கடமையை செய்துவிட்டு எதுவும் விளம்பரம் தேடாதபோது நான் மட்டும் என் கடமையை செய்ததற்க்கு ஏன் விளம்பரம் தேட வேண்டும் என்று கேட்டிருப்பார்.
மிக மிக நியயாமான நேர்மையான ஒரு புரட்சிக்காரனுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை சொல்லுவதற்க்கு விஜயகாந்திற்க்கோ அல்லது ரமணாவிற்க்கோ அருகதை துளிக்கூட கிடையாது.
ரமணாவைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அது முடிந்துபோன கதை. ஆனால் விஜயகாந்த்? அது நமது மக்களைப் பிடித்த சனி. அது எதிர்கால தலைவலி.
சரி நடைமுறைக்கு வருவோம், ரமணா வெற்றியடைந்தது அந்த படத்தின் டிக்கெட் விற்பனையிலும் கூட ஊழல், முறைக்கேடு புகுந்து விளையாடியிருக்கலாம். விஜயகாந்தின் பாக்கெட் நிரம்பியது. தேர்தல் வந்தது. இப்பொழுது நிழல் ரமணா ஒரு M.L.A.
சமீபத்தில் வட மாவட்டங்களிலொன்றில் ஒரு இடத்திற்க்கு ஏதோ பிரச்சனைக்காக ஆறுதல் சொல்லவோ அல்லது நிவாரணம் கொடுப்பதற்க்கோ நமது கழிசடைத் தளபதி/இன்னாள் M.L.A செல்கிறார். அவரைக் காண பெரும் மக்கள் கூட்டம் கூடுகிறது.
தேர்தல் சமயமாவது மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் வோட்டு சீட்டுக்கள் முண்டியடிப்பதாக ஒரு மயக்கம் தோன்றும். தேர்தலோ கண்ணுக்கெட்டிய தொலைவில் எங்கும் இல்லை. ஆக, மக்கள் கூட்டத்தை பார்த்து மயங்க தற்பொழுது ஒரு முகாந்திரமும் இல்லாத நிலை. இந்த கழிசடைத் தளபதியோ மக்கள் மத்தியில் நெருக்கமாக சிக்குண்டு எரிச்சலுற்றிருந்த வேலை. அப்பொழுது அவரது அருகிலிருந்த ஒரு பாதிக்கப்பட்டவர் தனது பிரச்சனைகளை கூறி திரும்ப திரும்ப விண்ணப்பமிட்டுக் கொண்டே இருந்திருக்கிறர். கடுப்பான நமது தளபதி “போலேர்” என்று விட்டார் ஒரு அறை.
பொறிபறக்க வெடித்து கிளம்பினார் அடிவாங்கியர். விஜயகாந்தை அடிக்க அல்ல, மாறாக திருப்பி அடிக்கும் திரணியற்ற முடியாத மற்ற தொண்டரடி பொடிகளை அடித்து தனது கோபத்தை தீர்த்துக் கொள்ள. அவர் சுற்றியிருந்தவர்களை சும்மா சுழற்றி சுழற்றி அடித்தார். சினிமாக்களில் கதாநாயகன் அடிவாங்கினாலும், வில்லன் அடிவாங்கினாலும் வேடிக்கைப் பார்த்துப் பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டம் அங்கு தானே அடிவாங்கியும்கூட திருப்பி அடிக்காமல் வேடிக்கை பார்த்தது. அந்த இடமே சிறிது நேரத்திற்க்கு அமளி துமளியாகிவிட்டது. காமெராக்கள் ‘க்ளிக்கின’, விடியோக்கள் படம் பிடித்தன. அன்றைய செய்திகளில் இந்த சம்பவம் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்டது.
அடித்த தளபதி ஒரு கீறலும் இன்றி வீட்டுக்கு திரும்பினார். அடிவாங்கிய பாதிக்கப்பட்டவரும் திரும்பினார், அடிவாங்கியவரிடம் அடிவாங்கியவர்களும் திரும்பிச் சென்றனர், கெமாரக்கள் மட்டும் திரும்பவில்லை. அவை அந்த காட்சியை சளைக்காமல் ஒளிபரப்பின. அது தொலைக்காட்சி சேனல்களுக்கு மற்றொருமொரு ரேட்டிங்கை உயர்த்தும் சம்பவம். மக்களுக்கோ ஒரு மாலை வேளை காபி, மிச்சருக்குள் அடங்கும் அளவே கிசுகிசுக்கப்பட வேண்டிய ஒரு பரபரப்பு சம்பவம். சுயமரியாதை பற்றி இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும் பேசப்படவில்லை.
கும்பகோணம் 94 குழந்தைகளின் சாவுக்கும், சுனாமி, வெள்ள நிவாரண படுகொலைக்களுக்குமே கூட வெறுமனே துக்க அஞ்சலி சுவரொட்டிகள் அடித்து தனது சமூக உணர்வு அரிப்பை சொறிந்து விட்டுக் கொண்ட சாலச்சிறந்த பண்ப்பாட்டு பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ்ச் சமூகம் இந்த அல்ப சம்பவத்துக்கு சலசலத்துக் கிளம்பும் என்ற எதிர்பார்ப்பின் விளைவு அல்ல இந்த கட்டுரை.
மாறாக இப்படி ஒரு சமூகம் சீரழிந்து வெறுமனே ‘அமைதிப் பூங்கா’ சர்டிபிகேட்டுக்கு சுயமரியாதையை அடகுவைத்துள்ளதே அந்த நிலையை நாமும் ஒரு சினிமா பார்வையாளனைப் போல் பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது இந்த சமூகத்தின் முகத்தில் அறைந்து அதன் மயக்கத்தைப் போக்குவதா என்று கேள்வி எழுப்பும் உத்வேகமே இந்த கட்டுரையின் நோக்கம்.
இந்த தளபதி தனது கட்சி ஆரம்பித்த புதிதிலேயே இப்படி மேடையில் வைத்து ஒருவரை அடித்த பெருமை உண்டு. இவ்வளவுதான் மக்கள் மீதான இவர்களின் அன்பு, சகிப்புத்தன்மை. இவ்வளவுதான் இவர்களின் அரசியல்.
கடமையை செய்தவனுக்கே விளம்பரம் தேவையில்லை என்று வியாக்கியானம் பேசியது ரமணா என்ற நிழல். அந்த நிழலின் நிழல் கடமையை செய்ததை அல்ல மாறாக களாவானித்தனம் செய்ததையே விளம்பரப்படுத்தி ஒரு மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இந்த கருப்பு எம்ஜிஆர் சாதி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு சொல்லுகிறார். அதாவது யாரும் தன்னை தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தாகாதவர் என்று எண்ணிக் கொள்ள வேண்டாமாம். அவர்கள்(தலித்துகள்) தங்களை உயர்ந்தவர்களாக நினைத்தாலே போதுமாம், சாதிப் பிரச்சனை தீர்ந்துவிடுமாம். இவரை திண்ணியத்துக்கு கூட்டிச் சென்று சிறிது மலம் திங்கச் சொல்லி பிறகு அவரது தீர்வு பலன் கொடுக்கிறதா என்று கேட்டுப் பார்க்கலாம்.
லஞ்சம் கொடுப்பதற்க்கு எதிராக இவர் சமீபத்தில் ரமணா படத்தில் வருவது போலவே ஒரு குரூப்பை உருவாக்கியிருக்கிறார் என்று சமீபத்தில் சிலர் வலைப்பதிவில் எழுதி ஏதோ சமுக மாற்றத்துக்கான ஆரம்பம் அதுதான் என்பது போல் பரஸ்பரம் சிலாகித்துக் கொண்டனர். ஆனால் இவர்கள் மிக வசதியாக மறந்த விசயம் இந்த கழிசடைத் தளபதியே வரியேய்ப்புகள்(கருப்புப் பணம்) செய்து வருமானத்தை பெருக்குபவர்தான். ஒரு வேளை ‘கருப்பு’ என்பதால் விஜயகாந்திற்க்கு பிடிக்கிறதோ என்னவோ.
கடந்த ஜெயலலிதா ஆட்சி, கருணாநிதி ஆட்சிகளில் மக்கள் மேலே ஏவிவிடப்பட்ட பல்வேறு அடக்குமுறைகளின் போது எந்த ஒரு கண்டனத்தையும் அவர் தெரிவித்ததில்லை. மக்களை விடுங்கள் அவரது சொந்த துறையில் சில காலம் முன்பு தொடர் தற்கொலைகள் நிகழ்ந்த பொழுது இந்த கழிசடையின் தார்மீக ஆவேசம் எங்கே சென்றது என்று தெரியவில்லை.
மாஞ்சோலை தேயிலை தோட்டப் பிரச்சனை, பல சாதி வெறி தாக்குதல்களுக்கு இவர் எந்த கருத்தையும் இது வரை வெளியிட்டதில்லை, இதுவரை. இவர் ஒரு காவி வெறியர் என்பதும் இவரது படங்களை பார்த்தால் தெரியவரும்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டோர் தன்னிச்சையாக பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனுகூட தாக்கல் செய்ய முடியவில்லை. இதைப் பற்றி பேச வக்கில்லாத இந்த கழிசடை-இந்து மத வேறியன், தனது படங்களில் “இந்தியாவில் ஒரு முஸ்லீம் ஜனநாதிபதியாக முடிகிறது, கவர்னராக முடிகிறது, etc etc..பாகிஸ்தானில் ஓரு இந்து, வார்டு பிரதி நிதியாக முடிவதில்லையே ஏன்? ஏன்?” என்று R.S.S குரலில் பேசுகிறான்.
குஜராத படுகொலைகளை உலகமே கண்டித்தது ஆனால் இந்த கழிசடை, அந்த படுகொலை பற்றி அப்பொழுது தனக்கு சரிவர தகவல் கிடைக்கவில்லை அதனால்தான் குரல் எழுப்பவில்லை என்று இப்பொழுது பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து R.S.S-யை பற்றி கருத்து சொல்லுவதில் இருந்து நழுவுகிறது.
அவர் சொன்னதிலேயே சாலச் சிறந்த கருத்து பின்வருமாறு:”ஆட்சியை பிடிக்கிறதுக்காகத்தான் இந்த அரசியல்வாதிங்க (காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள்) பா.ஜ.காவை மதவாதக் கட்சிங்கறாங்க. தங்களை மதவாத கட்சின்னு அவங்க சொல்லியிருக்காங்களானு எனக்கு தெரியாது”. இப்படிக் கூறி மதவெறிக் கட்சிக்கு மதசார்பற்ற நல்லிணக்க முத்திரை குத்தினார் தளபதி. இவர் இந்தி திணிப்பை ஆதரிப்பவரும் கூட. ஆனால் சொல்லிக் கொள்வது என்னவோ தமில், தமிலன் என்றுதான். சத்யராஜ் தனது படத்தில் இதை சரியாகத்தான் கிண்டலடித்துள்ளார்(மகாநடிகன் படம்) .
விஜயகாந்த் என்ற கழிசடை ஒரு சக்தியாக உருவாகியிருப்பதற்க்கான அடிப்படை இந்த சமூகத்தில் உள்ளது. இந்த சமூகத்தின் சினிமா கவர்ச்சியும், மறுகாலனியாதிக்க பொருளாதார சீர்திருத்தங்களால் அவதியுறும் மக்களின் – மாற்று அரசியல் அமைப்புக்கான ஏக்கமும் சேர்ந்து அவரை ஒரு மாற்று சக்தியாக மக்கள் நம்புவதற்க்கு ஒரு காரணம் என்றால். ஏகாதிபத்திய தாக்குதலுக்காலான இந்தியாவின் அரைக்காலனிய, அரை நிலபிரபுத்துவ சமூக அமைப்பின் இயல்பு அதன் தீர்மானகரமான சக்தியாக உதிரிப்பாட்டாளி வர்க்கத்தை/அதற்குரிய பண்பாட்டையே அதிகப்படியாக உருவாக்குகிறது. அந்த வர்க்கத்தின் வாழ் நிலை விஜயகாந்தின் கவர்ச்சி, வாய்சவடால் அரசியலுக்கு அவர்களை(உதிரிபாட்டாளி) மயக்க்கி பழியாக்குகிறது. பழியாடுகளின் எண்ணிக்கை விஜயகாந்துக்கு அங்கீகராத்தை வழங்குகிறது.
இந்த உலகத்தின் எந்த ஒரு வளர்ச்சிப் போக்குக்கும் மூலாதாரமாக எதிர்மறை கூறுகளின் முரன்பாடுகளிடையேயான இயக்கம் காரணமாக இருக்கிறது என்ற இயங்கியல் தத்துவம் உண்மையெனில். ஒரு கழிசடை பிரதிநிதி சமூக சக்தியாக வளர ஏதுவான அதே சமூக பொருளாதார அடித்தளம் அதன் எதிர்மறை கூறான புரட்சிகர சக்திகள் வளரவும் காரணமாகிறது.
ஆக, இங்கு எதிர்காலம் சமூக மாற்றத்திற்க்கா அல்லது கழிசடை தளபதிக்கா என்பதை சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்டவர்கள், ஜனநாயக சக்திகள்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்கள் யாருடன் அணி சேர்கிறார்கள் என்பதை பொறுத்து உள்ளது. இந்த சமூகத்தில் கழிசடைத்தனத்திற்க்கும் மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கும் எதிர்மறைக்கூறான புரட்சிகர சக்தி எது என்பதை அடையாளம் கண்டு அதனுடன் ஐக்கியப்பட்டு அதை வலுப்படுத்த வேண்டியது அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளின் (குறிப்பாக நடுத்தர வர்க்க அறிவு ஜீவிக்கள்) வரலாற்று கடமையாக உள்ளது.
முதல் பதிவு: அசுரன்

அண்ணாதுரை : பிழைப்புவாதத்தின் பிதாமகன் !

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?

நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது “தம்பிமார்கள்’ பதவி சுகம் கண்டு பொறுக்கித்தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி “கண்ணீர்த்துளி’களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.

தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று பித்தலாட்டமாடினார். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்” என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலோ, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழித்தது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் “திராவிட நாடு” என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு” என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே “திராவிட நாடு’ என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.

தேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன் என்றார். “ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்” என்றும் பிதற்றினார். “தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்கவிட்டால், அடைவோம் திராவிடநாடு” என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.

சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார்.

இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963ஆம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 “குடியரசு’ நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

ஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.

மொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25ஆம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9ஆம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமõகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.

இத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் “மன்னிப்பு’ எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் “இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது” என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.

ஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957இல் நடந்த தேர்தல் மாநாட்டில் “தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா?’ என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே “புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்’ என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.

தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957இல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.

கட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான “மூதறிஞர்’ ராஜாஜியை “குல்லுகப் பட்டர்’ எனச் சாடியவர், 1962 தேர்தலிலே “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை” எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை “அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். “சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது” என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.

1967இல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. “எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு” எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.

நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே “நேருவின் மகளே வருக” என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை “அன்புச் சகோதரி’யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.

“தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ எனும் தத்துவம்(!)தான்.

அரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் எம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக “ஆளைக்காட்டினால் ஐம்பாதியிரம் கூடும். முகத்தைக்காட்டினால் முப்பதாயிரம் கூடும்” எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.

கோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக “காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்” எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.

அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது” என்று அண்ணா சொன்னார்.

வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் “மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்” என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ “பேரறிஞர்’ எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த “உண்மையான’ கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.

கற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை “நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல” என கூச்சநாச்சமின்றி இப்”பேரறிஞர்’ விளக்கம் வேறு தந்தார்.

எல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க “எதையும் தாங்கும் இதயம்’ பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது? ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!” இவ்வாறு 70களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி “கலைஞர்’, “தளபதி’ என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.

பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.

கொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்ணப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.

· கதிர்

நன்றி: புதிய ஜனநாயகம்

கூரையே இல்லாத பள்ளிகளில் கூட சமச்சீர் கல்வி கிடைக்கும் – மு க-வின் சாதனைகள் தொடர்கிறது …

அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சமின்றி ஒரே விதமான தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டு வருவதாக மு. க கூறியுள்ளார். அதாவது, கோடிஸ்வர வீட்டு பிள்ளைக்கும், கூலி வேலை செய்பவரின் பிள்ளைக்கும் ஒரே தரத்திலான கல்வி கிடைக்கும்.

இந்த திட்டம் 1 ரூபா அரிசியை விட மிகப்பெரிய சாதனையாக மக்களுக்கு உதவும் என்று ஆலமரத்து ஆண்டி கணித்துள்ளார்.

சமச்சீர் கல்வி கிடைக்கும் பள்ளிகளின் கட்டங்களை கீழே பார்க்கலாம்…

வேலம்மாள் மெட்ரிக் பள்ளி – சென்னை

பத்மா சேஷாத்ரி பாலா பவன் பள்ளி – சென்னை

இந்த பள்ளிகளில் மட்டுமல்ல கீழ்க்கண்ட பள்ளிக் கட்டிடங்களிலும் ஒரே தரத்திலான சமச்சீர் கல்வி கிடைக்கும். நம்புங்கள்…

ஆதிதிராவிட மற்றும் பழங்குடி இன நல நடுநிலைப்பள்ளி, மேல்ஒட்டிவாக்கம், காஞ்சிபுரம் (தினமலர், 29/07/09)

மு க – வின் சாதனையை என்னவென்று சொல்வது?

மாணவர்களே!
ஒட்டு பொறுக்கிகளின் திட்டங்கள் மாணவர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் ஆக்கிகொண்டிருகின்றன. உங்களின் அடுத்த நடவடிக்கை என்ன?

தகுதியில்லாத 40 பல்கலைகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து நீடிப்பு

தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இயங்கும் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிலை படுமோசமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 40 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன.

பொறியியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறை படிப்புகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, நிகர் நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய கமிஷன் சட்டவிதிகளின் படி, இந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு உரிய அம்சங்களுடன் இவை இயங்குகின்றனவா என்பதை, கமிஷன் அவ்வப்போது கண்காணித்து வருகிறது.

சில பல்கலைக்கழகங்கள், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. ஆனால், மாணவர்களிடம் பலவகையில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. சமீபத்தில் எடுத்த ஆய்வில், இந்தியாவில் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 40 பல்கலைக்கழகங்கள் தனது நிகர் நிலை அந்தஸ்தை தக்கவைக்க முடியாத சூழ்நிலையில் இயங்குகின்றன என்று, ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 பல்கலைகள், தனது அந்தஸ்தை திரும்ப பெறமுடியாத நிலையில் உள்ளன.

இந்த 40ல் அரியானாவில் மூன்றும், உத்தரகாண்ட், உ.பி.,யில் தலா இரண்டும் இயங்கி வருகின்றன. பெரும்பாலானவை தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் இயங்குகின்றன.

இவற்றில் சில பல்கலைக்கழகங்களில் அரசியல் பிரபலங்கள் தொடர்பு உள்ளது அதனால், இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.எனினும், மூன்றாண்டு வரை இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கெடுவிதிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது (தினமலர், 2/11/2009)

———————————————————————————————– நடுநிலைமையாக பார்த்தால், கல்லாப் பெட்டியை நிரப்புவதில் மட்டுமே வேகமாக இருக்கும் அனைத்துத் தனியார் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கமிட்டி பரிந்துரைத்திருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?

இன்று இந்த தனியாரின் பகற்கொள்ளை குறித்து எழுதாத பத்திரிகைகளில்லை.  இதனை கவரேஜ் பண்ணாத தொலைக்காட்சிகளில்லை என்று கூறுமளவுக்கு எல்லாம் பட்டவர்த்தனமான பின்பும், “புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்” என வசனம் பேசுகிறது, அரசு! “கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்” என்கிறார், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல்.

தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக கல்வி வியாபாரிகள் சாராய வியாபாரி ஜேப்பியார், சாராய உடையார் மட்டும் அல்ல, ‘மக்களின் பிரதிநிதிகளான தி.மு.க.வின் ஜெகத் ரட்சகன், ரகுபதி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை, நீதிக்கட்சி ஏ.சி.எஸ். தே.மு.தி.க. விசயகாந்த், காங்கிரசு தங்கபாலு போன்றோர்களும் இந்த பிசினஸில் கால் நனைத்துள்ளனர். இவர்கள்தானே மத்திய மாநில அமைச்சர்களாக வலம் வருகின்றனர்.

இந்த கொள்ளைக்கார கும்பல்களெல்லாம் கூடிக் குலாவி, கும்மாளமிடும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலிருந்து, இத்தனியார் கொள்ளைக்கு எதிரான “நடவடிக்கை’யை எதிர்பார்க்க முடியுமா என்ன?

தொடர்புடைய பதிவு: கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

தனியார் நிகர்நிலை பல்கழைகழகங்கள் – நவீன குறுநில மன்னர்களின் ஆட்சி பீடங்கள்

மன்னர்களின் ஆட்சியின் போது, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். குறுநில மன்னனுக்கு வயது ஆகிவிட்டால், அவனுடைய வாரிசுகள் அந்த நிலப்பகுதியை ஆளவார்கள். அதேபோல் தான் இப்போது ஒவ்வொறு தனியார் நிகர்நிலை பல்கழைகழகமும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தால் ஆளப்படுகிறது. இவை கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் நடைபெறுகிறது. இதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மறு ஆய்வு கமிட்டியின் அறிக்கை தான் தெரிவிக்கிறது (Times of India, 19/102009).

ஒவ்வொறு தனியார் நிகர்நிலை பல்கழைகழத்திற்கு கீழ் பொது மருத்துவக் கல்லூரி(கள்), பல் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பால்டெக்னிக் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்த நவீன குறுநில மன்னர்களின் சமூக அந்தஸ்த்து அவர்கள் வைத்திருக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை, மொத்த மாணவர்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. அதுவும் பணம் காய்க்கும் மரம் போல் கொள்ளையடிக்க முடியும் கல்லூரிகளான பொது மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த கல்வி அறக்கட்டளையை நிர்வகிக்கும் நவீன குறுநில மன்னனின் சமூக அந்தஸ்த்து அதிகம்.

நீங்கள் நினைக்கலாம், தனியார் கல்வி நிறுவனங்களும், நிகர்நிலை பல்கழைகழகங்களும் தரமான கல்வியை அளிக்கிறது. ஆனால் அது உண்மையில்லை என்றும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மறு ஆய்வு கமிட்டியின் அறிக்கை தெரிவிக்கிறது (Times of India, 19/102009). அந்த அறிக்கையின் சாரம் பின்வருமாறு:

— தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகம் ஒரு தனிப்பட்ட குடும்பத்தால் இயக்கப்படும் தனியார் கம்பெனி போல் நடைபெறுகிறது.

— தென்னிந்தியாவில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகங்கள் டெல்லி மற்றும் உத்திரபிரதேசத்தில் கல்வி மையங்களை இயக்குகின்றன. ஆனால் இங்கு தகுதியில்லாத பேராசிரியர்களால் மாணவர்கள் பயிற்றுவிகப்படுகின்றனர்.

— தொலைதூர கல்வி பணம் பிடுங்கத்தான் நடத்தப்படுகின்றன.

— ஆண்டு கட்டணம் எந்த வரைமுறையும் இல்லாமல் வசூலிக்கப்படுகின்றன.

— குடும்ப உறுப்பினர்கள் (B.A, B.Sc, +2 மட்டும் படித்தவர்கள்) தான் துணைவேந்தராக உள்ளனர். கமிட்டி ஆய்வுக்கு செல்லும் போது மட்டும் வெளியே இருந்து ஆட்களை கொண்டு வருகின்றனர்.

— தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகங்கள் அனுமதி பெறுவது புதிய துறையில் “ஆராய்ச்சி” என்ற காரணத்தை காட்டி. ஆனால், இந்த தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகங்களின் ஆராய்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. சொல்லப்போனால், அவைகள் அதை பற்றி கண்டுகொள்வதே இல்லை.

நியாயமாகப் பார்த்தால், கல்லாப் பெட்டியை நிரப்புவதில் மட்டுமே வேகமாக இருக்கும் அனைத்துத் தனியார் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கமிட்டி பரிந்துரைத்திருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?

இந்த கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கற்றறிந்த அறிஞர்கள் அல்லவா? அதனால்தான் தனியார் கல்வி வியாபாரிகளுக்கு “கல்லாப் பெட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேசமயம், தரத்தையும் புறக்கணித்து விடாதீர்கள்” என அறிவுரை கூற விரும்புகின்றனரோ? நாய் வாலை நிமித்திவிட முடியும் என்று நம்மையும் நம்பச் சொல்கிறார்கலோ?


கமிட்டி, மறு ஆய்வு என்பதெல்லாம் கபட நாடகமே.

கல்வி தனியார்மயமாவதை தடுக்காமல் கட்டணக் கொள்ளயை ஒழிக்க முடியாது; ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு “தரமான” உயர்கல்வியை அழிக்க முடியாது!


தொடர்புடைய பதிவுகள்: கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம், சூட்கேசுக்கு தனியார் பல்கலைக்கழகம்

மன்மோகனின் இரட்டை வேடம் – விசுவாசம் & விஷவேசம்

IMG_3408

IMG_3417

1 ரூபா அரிசி வரமா? சாபமா?

New Microsoft PowerPoint Presentation

“மாநில வேளாண் சட்டம்” நிறுத்தி வைப்பு – கருணாநிதியின் கபட நாடகம் ஆரம்பம்

மருத்துவ பணிகள் செய்வதற்கு மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தல், வக்கீல்களாக பணியாற்ற “பார் அசோசியேஷனில்’ பதிவு செய்தல் என உள்ளது போல, வேளாண்மை பணிகள் செய்வோர் பதிவு செய்வதற்காக “வேளாண் மன்றத்தை’ ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கான சட்ட மசோதா சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப் பட்டது.இதன்படி, தமிழகத்தில் வேளாண் சேவை அல்லது ஆலோசனை போன்ற பணிகளை யாராவது செய்ய வேண்டுமென்றால், இந்த மன்றத்தில் கட்டாயம் உறுப்பினராகி இருக்க வேண்டும்.மேலும், இதில் உறுப்பினராக குறிப்பிட்ட கல்வி மையங்களில் வேளாண் பட்டப்படிப்பு முடித் திருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இந்த சட்டத்தில் இடம்பெற்றன.

இந்நிலையில், இந்த வேளாண்மை மன்றத்தால் பாரம்பரிய விவசாயத் தொழில் பாதிக்கப்படுமென சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப் பாக, இந்த மன்றத்தை ரத்து செய்ய வேண்டுமென ஓட்டுபொறுக்கி ராமதாஸ் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட் டிருந்தார்.இந்நிலையில், இந்த மன்றத்தை அமல்படுத்தும் சட்டத்தை நிறுத்தி வைப்பதாக கருணாநிதி நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு: தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான வேளாண் மை திட்டங்களை தயாரித்தல் மற்றும் சான்றளித்தல், பயிர் வளர்ப்பு, அறுவடைக்கு முன்னதான தொழில் நுட்பம், விதைத் தொழில்நுட்பம், மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, உரம், செடி வளர்ச்சியை முறைப்படுத்துதல் மற்றும் களைக்கொல்லிகள், பயிர்களைக் காக்கும் பொருள் களை முறைப்படுத்த முடிவு செய்யப் பட்டது.

இந்த நோக்கில் வேளாண்மை அறிவியல் வல்லுனர்களின் பரிந்துரைகளை ஏற்று “தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டம்’ தமிழக சட்டசபையில் நிறைவேற்றப் பட்டது.சட்டசபையில் இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப் பட்ட போதும், விவாதிக்கப் பட்ட போதும் எதிர்க்கட்சிகள் சார்பிலும், தோழமைக் கட்சிகளின் சார்பிலும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததால், இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாரம்பரிய விவசாயம் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக விவசாய மக்களின் எண்ணங்களுக் கும், பத்திரிகையாளர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்திடும் வகையில் “தமிழ்நாடு வேளாண்மை மன்ற சட்டம்’ அறிவிக்கை செய்யப்படாமல் மேல் நடவடிக்கை நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார் (தினமலர், 11/09/2009).

———————————————————————————————–

தமிழக சட்டசபையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட போது ஓட்டுபொறுக்கி ராமதாஸ் மவுனமாக இருந்த மர்மம் என்ன?

இந்த சட்டம் கொண்டு வரும் போது “பாரம்பரிய விவசாயம் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும்” என்று தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் முதல்வர் என்ற பதவிக்கு தகுதி கிடையாது.

எந்த முறையில் விவசாயம் செய்வது? எனத் தீர்மானிக்கும் உரிமையை விவசாயிகளிடமிருந்து தட்டிப் பறிக்கும் இந்த சட்டம் ” தமிழக விவசாயிகளின் பாரம்பரிய வேளாண் அறிவையும், தற்சார்பையும் முற்றிலுமாக அழிப்பதே நோக்கம்”.

“மாநில வேளாண் சட்டம்” நிறுத்தி வைப்பு என்பது கருணாநிதியின் கபட நாடகத்தின் ஆரம்பமே.

தொடர்புடைய பதிவு: தமிழ்நாடு வேளாண் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம்: யாருக்கு இலாபம்?

மகாரஷ்டிராவில் 2 நாளில் 7 விவசாயிகள் தற்கொலை

மகாரஷ்டிராவில் ஓட்டு பொறுக்கிகள் மும்மரமாக ஓட்டு பொறுக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2 நாளில் 7 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த வருடம், இதுவரை மகாரஷ்டிராவில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 638 (டைம்ஸ் ஆப் இந்தியா, 6/09/2009).

விவசாயிகள், கொத்து கொத்தாக தற்கொலை செய்கின்றனர் என்றால், அது தான் கொடும் பஞ்சத்தின் முதல் அறிகுறி. அது ஓட்டுமொத்த சமூகமும் உணவின்றி வாடப்போவதற்கான எச்சரிக்கை.