• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

கடந்த  25.8.2012  அன்று இரவு மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் ஒரு இளைஞரை யாரோ கொலை செய்து விட்டுள்ளனர். இது தெரிந்தவுடன் அப்பகுதி மக்கள் கும்பலாக கூடி நின்றிருந்துள்ளனர். அங்கு வந்த மதுரவாயல் போலீசு நிலைய துணை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் விசாரணை எதுவும் இன்றி அங்கு நின்றிருந்த மக்களை விரட்டியுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் சிலரை கைது செய்து போலீஸ் வண்டியில் ஏற்றியுள்ளனர். அதில் பு.மா.இ.மு உறுப்பினரின் தம்பியும் ஒருவர். அப்போது அங்கு வந்த பு.மா.இ.முவின் அப்பகுதி இளைஞர் கிளையைச் சார்ந்த தோழர்கள் திவாகர், குமரேசன் இருவரும் போலீஸ் துணை ஆய்வாளரிடம் தங்களை அமைப்புத் தோழர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு எதுவும் தெரியாத அப்பாவி மாணவர்களை கைது செய்ய வேண்டாம் என்று அவர்களை விடுவிக்கக் கோரியுள்ளனர்.

இதை எதையுமே காதில் வாங்காத துணை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் எதற்கெடுத்தாலும் அமைப்புனு வந்திடுறீங்க என்று கத்திக்கொண்டே தோழர்கள் இருவரையும் அடித்து இழுத்து கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மதுரவாயல் போலீஸ் ஆய்வாளர் தோழர்களை போலீசு வேனில் வைத்து கடுமையாகத் தாக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

இத்தகவல் தெரிந்ததும் சென்னைப் பகுதி பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்ட தோழர்களைப் பார்த்து விசாரிக்க மதுரவாயல் போலீஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு தோழர்கள் இல்லை. போலீசாரிடம் விசாரித்தற்கு எவ்விதபதிலும் இல்லை.

ஆய்வாளரிடம் போனில் பேசும்போது உங்கஆளுங்க எங்கஎஸ்.ஐயை அடித்திருக்காங்க அதனால கைது செய்திருக்கிறோம் என்றுள்ளார். அவர்களை பார்க்க வேண்டும் என்றதற்கு பதில் இல்லை. அன்று இரவு முழுவதும் முயன்றும் தோழர்களை காட்டவில்லை.

சிறையிலடைத்ததாகவும் தெரியவில்லை. காலையில்  போலீசு உதவி ஆணையர் சீனிவாசனிடம் பேசும்போது முதலில் 30 நிமிடம் கழித்துகாட்டுவதாக சொன்னார். பின்னரும் தோழர்களை எங்குவைத்திருக்கிறோம் என்று சொல்லவும் இல்லை,  காட்டவும் இல்லை.

இப்படி முதல் நாள் இரவிலிருந்து அடுத்த  நாள் வரை அலைகழிக்கப்பட்டும் தோழர்களை பார்க்க முடியவில்லை, அவர்களிடம் நடந்தது பற்றிவிசாரிக்கவும் முடியவில்லை. அவர்களை சிறையில டைத்தாகவும் தெரியவில்லை.

தோழர்கள்கைதும்,அதைப்பற்றியானதகவல்களும் மறைக்கப்படுவதால்  இதைப் பற்றியான உண்மைத் தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் 26.8.2012 அன்று மதியம் சுமார் 1மணியளவில் பு.மா.இ. முதோழர்கள் பகுதிமக்களுடன்  இணைந்து மதுரவாயல்போலீசுநிலையம் சென்றுவிசாரிக்கமுயன்றனர்.

போலீசு ஏ.சி தோழர்கள்கைது பற்றி பேசமறுத்துவிட்டுஉங்கள் அனைவரையும் கைதுசெய்வேன் என்றுமிரட்டியுள்ளார். தோழர்கள் இதைஎதிர்த்து  முழக்கமிட்டுள்ளனர். தயாராக  நிறுத்திவைக் கப்பட்டிருந்த போலீசுகும்பல்ஏ.சிசீனிவாசன் தலைமையில் தோழர்கள்,பகுதிமக்கள்  அனைவரையும்கொலைவெறியுடன்தாக்கியது.

தலைவர்களை 10,15சேர்ந்துபோலீசார்குறிவைத்துதாக்கினார்கள்.பெண்தோழர்களை அடித்து ரோட்டில் கீழேதள்ளிபூட்ஸ்காலால்மிதித்துள்ளனர். சிலபெண் தோழர்கள் உடையைவக்கிரமாகபிடித்து இழுத்து கிழித்து தாக்கியுள்ளனர்.

சில மாணவித்தலைவர்களையும், இளைஞர் தலைவர்களையும் தனியாக போலீசுநிலையத்திற்குள் இழுத்துச்சென்று காட்டுமிராண்டித்தனமாகதாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

நாகூசத்தக்க வார்த்தைகளால் அவமானப்படுத்தியுள்ளனர். சிலசிறுவர்களை  தூக்கி கீழே  எறிந்துள்ளனர். இப்படி போலீசு கும்பல்கொலைவெறியுடன் தாக்கியதில்அனைத்துத்தோழர்களும் கடுமையாகபாதிக்கப்பட்டனர்.8 தோழர்கள் ( மணிகண்டன், கிருஷ்ணகுமார்,விவேக் , பிரேம், வெங்கடேஷ்,ராஜா, பாபு, வீரா,  ) படுகாயம்அடைந்தனர். இதில்கிருஷ்ணகுமார், விவேக்இருவருக்கும்கை, கால்களில் பலத்த அடிபட்டதால் இன்றுவரை அவர்களுக்கு மருத்துவமனையில் மருத்துவம்பார்க்கப் படுகின்றது.

மற்றவர்களில் பெண்தோழர்கள் 14 பேர்உள்படமொத்தம் 64 பேர்கள் மீது பொய்வழக்குப் போட்டு கைது போலீசார் செய்தனர். இவர்களில் பெண்தோழர்கள் 14 பேரை மட்டும் அன்று இரவே (26.8.12 இரவுசுமார் 2 மணிக்கு)   பிணையில் விடுவித்தனர்.  ஆண்தோழர்கள் 50 பேரைஅடுத்தநாள் (27.8.12) வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்களை சிறையிலடைக்க நீதிமன்றம் அழைத்து வந்த நேரத்தில்தான் , முதலில்  25 ந்தேதி இரவு அடித்து இழுத்துச் சென்று மறைத்து வைத்திருந்த தோழர்கள்திவாகர், குமரேசன் இருவரையும் சிறையிலடைக்க நீதிமன்றம் அழைத்துவந்தனர். அதுவரை அவர்கள் இருவரையும் வேவ்வேறு இடங்களில் அடைத்து வைத்துதாக்கியுள்ளனர்.

உழைக்கும் மக்கள் பகுதியில் இளைஞர் அமைப்பைக் கட்டி செயல்படும் புமாஇமு இளைஞர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் இளைஞர்களை , மக்களைத் திரட்டி போர்க்குணமாக போராடிவருகின்றது.

அந்தவகையில் மதுரவாயல் பகுதியிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் உழைக்கும் மக்கள்கோரிக்கைகளுக்காவும் , அப்பகுதியில் போலீசின் அராஜகங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றோம்.

இதனால் போலீசின் கட்டப்பஞ்சாயத்துக்கள் பலதடைபட்டுள்ளன. இதற்கு முன்னர் மதுரவாயலில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மாணவர்கள், இளைஞர்களை கேள்வி கேட்பாரின்றிதாக்கும், பொய்வழக்குகள் போட்டு கைதுசெய்து இழுத்துச்செல்லும் போலீசு தற்போது பு.மா.இ.மு இளைஞர் அமைப்புக் கட்டி வேளை செய்யத் தொடங்கிய பின்னர் அத்தைகைய அராஜக நடவடிக்கைகளை அனாவசியமாக செய்ய முடியவில்லை.

சமீபத்தில் அதே ஏறிக்கரைப் பகுதியில் சென்னை பேக்கர் என்ற நிறுவனத்தின் தெர்மால் ரசாயன தொட்டி பாதுகாப்பு இன்றி திறந்து கிடந்ததால் அதில் அப்பகுதி சிறுவன் ஒருவன் விழுந்து இறந்து விட்டான் .

இதை அந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மூடிமறைக்கப் பார்த்தது போலீசு. இதணை அம்பலப்படுத்தியும், நீதிகேட்டும் ஏறிக்கரை பகுதிமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்திய போது அதற்கு தலைமை தாங்கியது பு.மா.இ.முதான்.

 இப்படிப்பட்ட போர்க்குணமான செயல்பாடுகளை பார்ர்த்து வந்த போலீசார் தற்போதைய சம்பவத்திலும் தங்கள் அராஜக செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பியதும் அதைப்பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

இதனால் எல்லாம் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது, போர்க்குணத்தை மழுங்கடிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் போலீசின் இந்த அராஜகங்களையும், பொய்வழக்குகளை எதிர்த்தும்,தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு  ரவுடி கும்பலை கைது செய்து சிறையிலடைக்கவும் பு.மா.இ.மு தோழர்கள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து மக்கள் பலத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நன்றி: நக்கீரன் வார இதழ்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=81606

தொடர்புடைய பதிவுகள்:

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

புமாஇமு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் , இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!

புதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

ரிரு மாதங்களாகவே தலைப்பில் உள்ள கம்பெனிகளின் முதலாளியும் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வார, வாரமிருமுறை, மாத இதழ்களில் விளம்பரங்களாக படையெடுத்தன. சேலம், திருப்பூர், நெல்லை, திருச்சி என்று பல்வேறு மாவட்ட தலைகள் கொடுத்த விளம்பரங்கள் அனைத்தும் ஒரே டிசைனில் இருந்ததைப் பார்த்தால் எல்லாம் தலையே செய்த செட்டப் என்று புரிந்து கொள்ள ரொம்ப அறிவு தேவையில்லை.

இன்று ஆகஸ்ட்டு 24 அவரது பிறந்த நாளை ஒட்டி எல்லா தினசரிகளிலும் வண்ண விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி கைக்காசு போட்டு தன்னையே வாழ்த்திக் கொள்ளும் தலைவருக்கு வினவு தனது சொந்த செலவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறது. வாழ்த்துக்குரிய கவியாடல் செய்யும் கவித்திறன் நமக்கில்லை என்பதால் இன்று அனைத்து மாவட்ட ஐ.ஜே.கே நிர்வாகிகள் அளித்திருக்கும் விளம்பர வாசகங்களின் உதவியுடன் வினவு வாழ்த்தை வடித்திருக்கிறோம்.

குறிப்பு: தடித்த நீல நிற வரிகள் அவர்களுடையவை; மெல்லிய வரிகள் நம்முடையவை!

______________________________

* ஆகஸ்ட் 24 டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்த நாள்! இளைஞர் எழுச்சி நாள்!

எஸ்.ஆர்.எம் குரூப்பில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்தான் அமுதசுரபி போல அய்யாவுக்கு பணத்தை அள்ளித் தருபவர்கள். அதனால்தான் இன்றைய தினத்தை இளைஞர் எழுச்சியாக கொண்டாடுகிறோம்.

* இந்திய அளவில் குடும்ப ஆட்சியை அகற்றுதல்.

அரசியலில் இருக்கும் மற்ற குடும்பங்களை அகற்றினால்தான் புதிய தலைமுறை பத்திரிகை, டி.வி, எஸ்.ஆர்.எம் குழும கல்லூரிகளில் இருக்கும் எங்களது குடும்பம் அரியணை ஏறும். கல்லூரியிலும் குடும்பம். கோட்டையிலும் குடும்பம்! தொலைக்காட்சியிலும் குடும்பம். அரசியல் கட்சியிலும் குடும்பம்!

* சோம்பேறியாக்கி, சுயமரியாதையை இழக்கும் இலவசம் தவிர்த்தல்!

அதனால்தான் எங்கள் கல்லூரி கட்டணத்தை சில பல இலட்சங்களில் வைத்திருக்கிறோம். துட்டை லீகலாக வாங்குவதால் எங்களது சுயமரியாதை கெடாது. துட்டை கொடுத்தவன் கொடுத்துட்டமே என்று படிக்க வேண்டியிருப்பதால் சோம்பேறித்தனம் கிடையாது. ஒரு கல் மூன்று மாங்காய்!

* உடலைக் கெடுத்து, உயிரைக் குடிக்கும் மதுவை ஒழித்தல்

மல்லையா, மிடாஸ் போன்று நாங்களும் ஆரம்பத்தில் மது ஆலைகள் தொடங்க நினைத்து ஜஸ்ட் மிஸ்ஸாகி கல்வி ஆலைகள் பக்கம் திரும்பி விட்டோம். எதிர்காலத்தில் சரக்கு ஆலை துவங்கும் போது இந்த இலட்சியத்தை திரும்பப் பெறுவோம். இது உறுதி!

* லஞ்சம் – ஊழல் அற்ற நேர்மை அரசியலை நிலைநாட்டல்.

கேப்டன், அண்ணா ஹசாரே, சரத்குமார், கார்த்திக்ன்னு டெல்லிக் காக்காய் முதல் உசிலம்பட்டி குரங்கு வரை  இதை சொல்லும் போது நாங்க மட்டும் சொல்லலேன்னா எப்படி? இது டெம்ப்ளேட் ரூல் பாஸ்!

* இரண்டு முறைக்கு மேல் எவரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை தவிர்த்தல்.

நல்லாப் பாருங்க, தவிர்க்கணும்ணுதான் சொல்லிருக்கோம். சட்டமெல்லாம் கிடையாது. எங்கள் டி.வி, பத்திரிகை, கல்லூரிகளுக்கெல்லாம் எங்க (பாரிவேந்தரது) குடும்பத்தினர்தான் ஆயுட்கால நிர்வாகிகள்ன்னு நாங்களாவே வைக்கல. இதெல்லாம் மாணவர்களும், டிவி பார்க்கிற தமிழக மக்களும் இட்ட அன்புக் கட்டளை. இது வேற, அது வேற!

* தடையில்லா மின்சாரம், தனியார் துறை மூலமும் கிடைக்க வழி செய்தல் ( குஜராத், மும்பை போல).

தமிழ்நாட்டு அரசாங்கம் தனியாரிடம் யூனிட் ஒன்றுக்கு 18 ரூபாய் கொடுத்து வாங்குகிறது. இதனால் தமிழக மின்சார வாரியம் திவாலாகினாலும், பல முதலாளிகள் பில்லியனராகியிருக்கிறார்கள். நாங்க ஆட்சிக்கு வந்தா யூனிட் ஒன்றுக்கு நூறு ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஏன்னா விக்கிறதும் நாங்க தானே! அதனால் உலக பணக்காரர்களின் முதலிடம் எங்களுக்கு உறுதி.

* விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு படித்த இளைஞரை முதல்வர் ஆக்குதல்.

தமிழகத்திலேயே கட்சி போஸ்டருக்கு மண்வெட்டி தூக்கி, ஏரோட்டி, களை பறித்து விவசாயி போஸ் கொடுத்த ஒரே ஆளு நாந்தாங்கிறதை நினைவுபடுத்தினீங்கன்னா இந்த இலட்சியத்திற்கு அர்த்தம் புரியும். என் புள்ளைங்க, இல்லேன்னா பேரங்க, இல்லேன்னா கொள்ளுன்னு யாராவது இந்த முழக்கத்தை நிறைவேற்றுவது உறுதி. இதற்காகவே தமிழ்நாடு முழுக்க பல விவசாய நிலங்களை வாங்கி வைத்துள்ளோம்.

இக்கொள்கைள் நிறைவேற்ற அயராது பாடுபடும் டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்!

– வினவு

பின் குறிப்பு: ஊரறிய முதலாளியா ஆன பிறகு அவனவன் கட்சி கிட்சின்னு நன்கொடை கேட்டு தாளிச்ச தாளிப்பை நிறுத்துவதற்காகவே ஐயா இந்தக் கட்சியை ஆரம்பித்தார். ஆனாலும் கட்சியின் வளர்ச்சியை பார்த்த பிறகுதான் நெஜமாகவே ஆட்சியை பிடித்துத்தான் பார்ப்போமே என்று தோன்றியது. ஆகவே இது காமடி விளம்பரமல்ல சீரியஸ் விளம்பரம்ணு சொல்ல வைக்கிற நிலைமைக்கு வாசகர்கள் வினவை ஆக்கிவிடக்கூடாது. ஆக்கிட்டீங்கன்னா அழுதுருவோம்!

இதையும் படிக்கலாம்:

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!

ளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார்.

”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…”
அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார்.

“ஒரு நிமிசம், இதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க, சந்தோஷ்?”

”அம்மாவுக்கு, சார்” – போட்டியாளர்

“உன் அம்மா எங்க?” – விட்டால் அழுது விடுவது போன்ற உருக்கமான குரலில் நடுவர்.

”அம்மா வரலை, அம்மாவுக்கு உடம்பு முடியாததால, வந்து உட்கார முடியாது. .அதனால வரலை.” – போட்டியாளர்.

“அப்டியா? நிஜம்மா?” – போலித்தனமான இரக்க வார்த்தைகளில் நடுவர்.

”ஆமா, நிஜமாத்தான் சார்” – பாடலை பாதியில் நிறுத்தச் சொன்ன கலக்கத்துடன் பதிலளிக்கிறார் போட்டியாளர்

“இங்கே பாருங்க, ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு” என்று நடுவர்  சொன்னதும், அரங்கமே திரையில் பார்க்கிறது. அங்கு, வாசலுக்கு வெளியே ஸ்ட்ரெச்சரிலிருந்து ஒரு அம்மாவை இறக்குகிறார்கள். அவரால் நடக்க முடியவில்லை. அப்படியும் விடாமல், கைத்தாங்கலாக அழைத்து வருகிறார்கள். காமிரா போட்டியாளரிடம் திரும்புகிறது. அவரோ, இதைக் காணச் சகியாமல் திரும்பிக் கொள்கிறார். அழுகிறார். உருகுகிறார். அரங்கமே எழுந்து நிற்கிறது. இதற்கேற்ப, ஒரு சோகப் பின்னணி இசை வாசிக்கப்படுகின்றது. பலரும் கைக்கொடுத்து தூக்கிவிட, அந்த அம்மா சிரமப்பட்டு படியேறுகிறார். இதைக் காண்பவர்கள், இன்னும் நெகிழ்ந்து விடுகிறார்கள். வாய் பொத்தி, ”அய்யோ” என்று பதறுகிறார்கள். கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள்.

மேடையில் அவர் நாற்காலியில் அமர்ந்ததும் கரவொலி. இதோடு அந்த போட்டியாளரை விட்டு விடவில்லை. ”சரி, சந்தோஷ், ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க என்ன ஃபீல் பண்ணீங்க, இப்போ என்ன ஃபீல் பண்றீங்க? எப்படியாவது வார்த்தையில அதை கொண்டு வாங்க?” என்று அந்த போட்டியாளரை விடாமல் தோண்டித் துருவி செண்டிமெண்டைப் பிழிந்து எடுக்கிறார்கள்.

நடுவர்கள் கண்களை துடைத்துக் கொள்கிறார்கள். அரங்கத்திலிருப்பவர்கள், இந்தக் காட்சியை காணத் திராணியற்றவர்களாய் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார்கள். அப்படியும் போட்டியாளரை நிகழ்ச்சி நடத்துபவர் விடவில்லை. விக்கித்துப் போய் இருப்பவரிடமிருந்து உணர்ச்சியை வார்த்தைகளாகக் கறந்துவிடத் துடிக்கிறார். “எங்க அம்மாவால நடந்து வர முடியாது, வந்தாலும் நாள் முழுக்க நாற்காலியில உட்கார்ந்து இருக்க முடியாது” என்று போட்டியாளர் சந்தோஷ் தடுமாறுகிறார்.

போட்டியாளரின் தாயையும், நிகழ்ச்சி நடத்துபவர் விடவில்லை. அவரும் தடுமாற்றமான குரலில் பதிலளிக்கிறார். தனக்கு இந்த ஏற்பாடு முன்பே தெரிந்திருந்தாலும், ஆச்சரியமாக இருக்கட்டுமே என்பதற்காக மகனிடம் இது குறித்துச் சொல்லவில்லை என்கிறார். இதற்கும் அரங்கம் கண்கலங்குகிறது. நெகிழ்ந்து கரவொலி எழுப்புகிறது. சிறிது நேரத்தில் விட்ட இடத்திலிருந்து திரும்ப பாடல் தொடங்குகிறது.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !

ர்டெல் சூப்பர் சிங்கர் – தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல் மற்றும்  தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்ற இந்த நிகழ்ச்சி தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பிரசித்தம்.

முதலில் இந்த நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல் அல்லாமல், உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோ வகையைச் சார்ந்தது. அதாவது, பணத்துக்காக நடிக்கும் நடிகர்களை கொண்டதல்ல. நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களைக் கொண்டு, அவர்களின் உணர்ச்சிகளை, வாழ்க்கையை மையமாகக் கொண்டு பணத்துக்காகவும், படோடபமான பரிசுகளுக்காகவும் முக்கியமா டி ஆர் பி ரேட்டிங்குக்காக நடத்தப்படுபவை. முன்னரே திட்டமிட்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைப் பார்த்து சலித்த ரசிகர்களுக்கு உண்மையான விறுவிறுப்பு, ஆவல், த்ரில் முதலான உணர்ச்சிகளை ஊட்டி கல்லா கட்டுவதுதான் இந்த ரியாலிட்டி ஷோக்களின் நோக்கம்.

இவ்வகை நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் 1970களில் அமெரிக்காவில் பிரபலமாக இருந்தது. அமெரிக்காவில் ஓபரா வின் ஃப்ரே என்ற பெண்மணியின் இவ்வகை நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. எல்ல வணிக ஊடகங்களும் அமெரிக்க மாதிரியை வைத்து வளர்ந்தது போல தற்போது இந்த நிகழ்ச்சிகள் இந்தியாவுக்கும் இறக்குமதியாகி இருக்கின்றன.

கோன் பனேகா குரோர்பதி, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, காபி வித் அனு, சச் கா சாம்னா, மானாட மயிலாட, சரிகமபதநி என்று இதில் அநேக ரகங்களுண்டு.  இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் விளையாட்டு, காமெடி, பிரபலங்களை வைத்து, திறமைக்கான தேடல் என்றும் பல வகைகள் உண்டு.  ஏ எக்ஸ் போன்ற சேனல்களில் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களே தனிச்சிறப்பாக நடக்கின்றன. அதில் போட்டி நிகழ்ச்சிக்காக அருவெறுப்பான உணவுகளை உண்பது, சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் செய்யாதவற்றை காமிரா முன்பு செய்வது, சமயங்களில் உயிரைக் காவு கொள்ளக்கூடிய சாகசங்கள், முன்பின் தெரியாதவர்களுடன் சில நாட்களை ஒரே வீட்டில் கழிப்பது  முதலியன.

வகைவகையாக நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றின் நோக்கம் ஒன்றுதான் – காண்பவரின் உணர்ச்சிகளைக் கொண்டு விளம்பரங்களின் மூலம் காசு பார்ப்பது. அதாவது ரியாலிட்டி என்று சொல்லிக் கொண்டாலும் அதில் இயல்பு தன்மை என்பது பேச்சுக்குக் கூட இருக்காது. எல்லாம் ஒரு செயற்கைத்தனம் கலந்து இருக்கும். அதே நேரம் உண்மையில் நடப்பது போல தொகுத்து வழங்குவார்கள்.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !ரியாலிட்டி நிகழ்ச்சிகள், பார்ப்பவரை அடுத்தது என்ன என்பதை இதயத்துடிப்பை எகிறவைத்து, எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி ஈர்த்துப் பிடிக்கின்றன.  எவ்வளவுக்கெவ்வளவு மக்களை ஈர்த்துப் பார்க்க வைக்கின்றன என்பதைப் பொறுத்து அந்த நிகழ்ச்சியின் டி ஆர் பி ரேட்டிங் எகிறும். அதைப் பொறுத்து பணமும் கொழிக்கும். இதைக் கண்டுக்கொண்ட, டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காமதேனுவாக பார்க்கின்றனர். பொழுதுபோக்கு அம்சத்துக்காக நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டது போக,  நிஜத்தைப் போலவே காண்பிக்க வேண்டும், பார்ப்பவர்களின் உணர்ச்சிகளை கட்டிப்போட வேண்டும் என்ற உந்துதலில் நிகழ்ச்சிகளை செயற்கையாக இட்டுக்கட்டி நடத்துகின்றன. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன, தொலைக்காட்சி நிறுவனங்கள். ஆட்டை இழுத்து வந்து, வளர்த்து, பூஜை செய்து வெட்டுவது போலத்தான், ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டிருந்த காட்சி.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் உணர்ச்சிகளின் சுரண்டல் என்றால் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுப்பதும் மற்றொரு வகைச் சுரண்டல்தான். யார் அதிக வாக்குகளை செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் பெறுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அனுப்பப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் காசு. விளம்பரங்கள் மட்டுமல்லாமல் மக்களின் குறுஞ்செய்திகளிலும்  காசு வேட்டைதான், விஜய் டீவிக்கு. இப்படிக் கொள்ளையடிப்பதற்காக, மக்களின் கவனத்தைப் பெறுவதற்கு அவர்களுக்குத் தெரியாமலே வக்கிரமான ரசனைக்குக் கொண்டு சென்று செண்டிமெண்டால் தாக்குவார்கள். இதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுடன், மேல்தட்டு நடுத்தர வர்க்கப் பெற்றோர்களும் அடக்கம்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் பல சுற்றுகளுண்டு. ஒவ்வொரு சுற்றிலும் சிலரைக் கழித்துக்கட்டி கொண்டே வந்து, இறுதியில் மூன்று பேரை நிறுத்துவார்கள். அதுவும் கூட இயல்பானதாக இல்லாமல்,  நிகழ்ச்சியின் காரசாரத்தைக் கூட்ட வேண்டி நடத்தப்பட்ட நாடகமாகவே இருக்கும். மேலும், இந்தச் சுற்றுகளில் தோல்வியடைந்தவர்கள், இறுதியாக  வைல்ட் கார்ட் சுற்றில் போட்டியிடலாம். அதன்பிறகு, செல்போன்கள் மூலம் வாக்கெடுப்பு, இணையம் மூலம் வாக்கெடுப்பு என்று அவர்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. ஆனால், தேர்வு முறைகள் என்று சொல்லப்பட்டாலும், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது விஜய் டிவிக்கே வெளிச்சம். கடந்த முறை சாய் சரண் என்பவரை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தார்கள். அந்த சாய் சரண் தொடர்ந்து மூன்று முறை சூப்பர் சிங்கரில்  விடாமல் கலந்துக் கொண்டார்.

ஒருமுறை ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் இறுதிச்சுற்றுக்கு வந்து விட்டான். அடுத்ததாக, பொது மக்களின் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவனுக்கு வாக்கு சேகரிக்க சென்னை நகரெங்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவனுடைய எஸ் எம் எஸ் எண், எந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும், எந்த நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பன போன்ற விவரங்களுடன். ஒரு செல்போனுக்கு எத்தனை வாக்கு வேண்டுமானாலும் அளிக்கலாமாம். அதில் , அந்த சிறுவன், 10 வயது கூட நிரம்பியிராத அந்த சிறுவன் கூழை கும்பிடு போட்டுக்கொண்டு, ”என்னை வாக்களித்து ஜெயிக்க வைத்து, ஜூனியர் 2 டைட்டிலை வின் பண்ணிக் கொடுங்க, ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சிகள் எந்த அளவுக்கு பெற்றோரின் மனநிலையை, குழந்தைகளின் மனநிலையைச் சீரழித்து வைத்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

இது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று  சொல்லிக் கொண்டாலும் பெரும்பாலான தமிழக மக்கள் இன்னும் இதன் உள்ளே வரவில்லை. அவர்களெல்லாம் ஆரம்ப கட்டத்திலேயே கழித்துக் கட்டப்படுகிறார்கள். பெரும்பான்மை மக்கள் இங்கும் மேடைக்கே வர முடியாது. அப்படியே உள்ளே வரும் ஒன்றிரண்டு பேரும், காமெடிக்காக அல்லது ஒரு உப்புக்கு சப்பாணியாகப் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே வருவது அதிகமும் பார்ப்பன – ஆதிக்க சாதிக் குழந்தைகள்தான். அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் பார்ப்பன மாமிகளும், மாமாக்களும்தான். இந்தப் போட்டிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கு உள்ளும் பொதிந்திருக்கும் திறமைகளை மிளிர வைப்பதல்ல. யாரால், குழந்தைகளுக்காக செலவழிக்க முடியுமோ, அவர்களது நடை, உடை , பாவனைகளுக்காக  மெனக்கெட முடியுமோ அவர்களது குழந்தைகள்தான் உள்ளே வருகிறார்கள். போட்டியாளர்களாகிறார்கள்.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !

சந்தோஷ்: நோயுற்ற இவரது தாயை வைத்து விஜய் டி.வி.யின் ஆபாச சென்டிமென்ட்!

பிறக்கும் போதே குழந்தை என்ன பொறியியல் படிப்பு முடிக்க வேண்டும், எத்தனை இலட்சம் சம்பளத்தில் பணியாற்ற வேண்டும், என்ன ஆய கலைகள் கற்க வேண்டும் என்பதை ஒரு பந்தயக் குதிரையை வளர்ப்பது போல ’தீனி’ போட்டு வளர்க்கிறார்கள், நடுத்தர வர்க்க பெற்றோர்கள். அதுவும் அவர்கள் பார்ப்பனர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே கர்நாடக சங்கீதமும், பரதமும், கணினிக் கல்வியும் கண்டிப்பாக இருக்கும். ஊடக, கலை, சினிமாத்துறைகளில் வாய்ப்பு கிடைத்தால் ஜாக்பாட்தான் என்பது நிதர்சனமாயிருப்பதால் இந்த மாயை பெருக்கெடுத்து ஒடுகின்றது. ஆயினும் ஆயிரத்தில் ஒருவர்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியுமென்றாலும் பெற்றோர்கள் அயர்ந்து விடுவதில்லை.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெறும் குழந்தைகளுக்கு 25 லட்சத்தில் வீடு, கார் என்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. தங்கள் குழந்தைகள் முதலிடத்துக்கு வந்து வீட்டைப் பரிசாகத் தட்டிச் செல்ல வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரும் துடியாய்த் துடிக்கிறார்கள். அதற்காக எந்த அளவுக்கும் மெனக்கெடத் துணிகிறார்கள். லாட்டரி சீட்டு வாங்கினால் லட்சாதிபதி என்று கனவு கண்டு ஒவ்வொரு நாளும் லாட்டரி சீட்டு வாங்கி பாமரர்கள் ஏமாறுகிறார்கள், இல்லையா? அது போல, தங்கள் குழந்தையை ரேஸ் குதிரைகளாக நினைக்கும் பெற்றோரின் இந்த  மனநிலையை விஜய் டிவி நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விஜய் டிவி ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கிறது என்றால் பெற்றோர்கள் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகிக்கிறார்கள்.

அந்தச் சிறுவனைப் பார்த்தால் பத்து வயதுதான் இருக்கும். மாலையில் ஐந்து மணி வாக்கில் தனது தந்தையுடன் அந்த ஸ்டூடியோ வாசலில் நின்றுக் கொண்டிருக்கிறான். ஜிகினாக்களுடன் பளபளக்கும் உடை அணிந்திருக்கிறான். முகத்தில் மேக்கப். இருந்தும், முகம் சோர்ந்திருக்கிறது. மதியம் அவன் சாப்பிட்டிருக்கவில்லை. பசிக்கிறதென்றும், ஜூரம் வருவது போலிருக்கிறது என்றும் தந்தையிடம் முணுமுணுக்கிறான். ஆனால், அவனது தந்தையோ பதைப்பதைப்புடன் இருக்கிறார். ஏனெனில், இந்த ஆண்டை விட்டால், தனது மகன் அதற்கான வயது வரம்பைத் தாண்டி விடுவான் என்கிறார்.

சூப்பர் சிங்கர் பாடல் போட்டிக்கான சுற்றுதான், அது.  அதில் அவன் ஜெயித்துவிட்டால், அடுத்த சுற்றில் பாடத் தயாராக வேண்டும். திரும்ப இதே போல ஏழு அல்லது எட்டு மணி நேரங்கள். அந்தச் சுற்றில் நடுவர்களுக்கு முன்பு தோன்றுவதற்கேற்ப  உடை அணிந்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, அவன் இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் அவனது வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிடும் என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இதன் மூலம் சினிமாவில் பாட சான்ஸ் கிடைக்கும் என்று பரப்பப்பட்டு வருகிறது.

அதற்கேற்றாற் போல்,  நடுவராக வரும் ஏதாவது ஒரு இசையமைப்பாளரும் ஆசை காட்டுகிறார். ஆனால், அப்படி சினிமாவில் பாடும் வாய்ப்பு பெற்றவர்கள் மிகவும் சொற்பமே. இன்று தனித்த குரலிசை என்று ஒன்று திரையிசையில் இல்லாமல் போய்விட்ட பின்னரும் இத்தகைய ஆசைகளை அந்தப் பெற்றோர்கள் விடுவதாக இல்லை.

குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், ”நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.

ஏனெனில், அது தற்போது பரிசை நோக்கிய ஓட்டமாக மாறி விட்டது. கலந்து கொள்ளும் தங்கள் குழந்தைகள் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென்று அனைவரும் நினைக்கிறார்கள். எப்படியாவது பரிசுப்பொருளைக் கைப்பற்ற எண்ணுகிறார்கள். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் விற்கத் தயாராக இருப்பவர்கள் தங்கள் குழந்தையை விற்கத் தயாராகிவிடுகிறார்கள். அதற்காக, விஜய் டிவியிடம் முற்றுமுழுவதுமாகச் சரணடைந்து விடுகிறார்கள். தன் குழந்தை மேடையில் பாடினால், அரங்கில் அமர்ந்தபடி தந்தை நடனமாடுகிறார். பாட்டி எழுந்து குத்தாட்டம் போடுகிறார்.

ஆட்டமும், பாட்டமும் உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருப்பது போன்ற யதார்த்தம் நடுத்தர வர்க்கத்திடம் இல்லை. ஆனாலும் அவர்கள் ஆடுவதும், பாடுவதும் மனித உணர்ச்சிகளை இயல்பாக பண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை. அது செயற்கையாக தன்னை பிறர் பார்க்க வேண்டும், அப்படி ஆடினால்தான் காமரா தன்னைப் பார்க்கும், தான் அதிகம் பார்க்கப்பட்டால்தான் தனது குழந்தையின் பிராண்ட் இமேஜ் உயரும் என்ற பச்சையான சுயநலமே இத்தகைய ஜோடனைகளைத் தோற்றுவிக்கின்றது.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.

இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.

ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.

விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.

சமூகச் சூழலைப் பற்றி கவனிக்காமல் அல்லது கவலைப்படாமல், சாயப்பட்டறைளிலும், பட்டாசுத் தொழிற்சாலையிலும், டீக்கடைகளிலும் பணிபுரியும் குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தைத் தொலைத்து விடுவதாகவும், குழந்தை தொழிலாளிகளை ஒழிக்க வேண்டுமென்றும் கூச்சல் இடும் நடுத்தர வர்க்கத்தின் கண்களுக்கு, விஜய் டிவி குழந்தைகளின் உண்மையான திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தெரிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்த நிகழ்ச்சிக்கு வெளியே, சமூக அரசியல் காரணங்களால் வஞ்சிக்கப்பட்ட எண்ணற்ற குழந்தைகளின் நிலை பற்றி எண்ணுவதற்குக் கூட இவர்களுக்கு நேரமிருப்பதில்லை.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – விஜய் டி.வி.யின் அடுத்த சுரண்டல் ரெடி

குரங்காட்டியிடம் மாட்டிய குரங்குகளுக்குக் கூட சுதந்திரமிருக்கும். ஏர்டெல் சூப்பர் சிங்கருக்காக விஜய் டிவியிடம் மாட்டிய குழந்தைகள் நிலை அதைவிடப் பரிதாபம்.  போட்டியாளராகிவிட்டால், பள்ளிக்கூடத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் மட்டம்தான். ஏதோ வானத்திலிருந்து குதித்தது போல, பள்ளிக்கூடங்களும் குழந்தைகளுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி விடுகின்றன. போட்டி முடிந்து விட்டாலோ, அடுத்த சீசன் தொடங்கி விடுகிறது. அடுத்த பலியாடு மாட்டும் வரை, விஜய் டிவி எங்கெல்லாம் நிகழ்ச்சி நடத்துகிறதோ அல்லது ஆட்டம் பாட்டம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த வெற்றியாளர்கள் சென்று நிகழ்ச்சி நடத்த வேண்டும். கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போலவே விஜய் டிவி இந்த வெற்றியாளர்களைத் தமது பிரச்சாரப் பீரங்கிகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. இலவசமாகக் கிடைத்த விளம்பரத்தை மனதில் கொண்டோ அல்லது விஜய் டிவிக்கு காட்ட வேண்டிய நன்றி விசுவாசத்தை நினைத்தோ, வெற்றியாளர்கள் இதனை மறுத்துப் பேசவும் முடியாது.

முதலாளித்துவ சமூகத்தில், பண்டங்களை சந்தைப்படுத்துவதற்கே ஊடகங்கள் தேவை. சந்தையில் பலியிட தங்கள் குழந்தைகள்  பண்டங்களா என்பதை பெற்றோர்கள் சிந்திக்கட்டும்.
_____________________________________________

– நன்றி: புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

தொலைக்காட்சிகள் எவ்வாறு நமது சிந்தனையை ஆதிக்கம் செய்கின்றன?

தொலைக்காட்சிகள் எவ்வாறு நமது சிந்தனையை ஆதிக்கம் செய்கின்றன?

தொலைக்காட்சி : பார்வையை தீர்மானிக்கும் கார்பரேட் ஆதிக்கம்

“அப்பாடா… ஒருவழியா கேபிள் டிவியை அரசே எடுத்து நடத்தப் போகுதாம். இனிமே நூறு ரூபா, நூற்றி இருபது ரூபா, நூற்றி ஐம்பது ரூபானு கேபிளுக்கு தண்டமா அழ வேண்டாம். அம்பது ரூபாக்குள்ள கட்டினா போதும்…’ என மக்கள் மகிழ்கிறார்கள்.

‘இனி கேபிள் டிவியில் ஏகபோக ஆட்சி நடைபெறாது. இதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டம் அடக்கப்பட்டு விட்டது…’  என மகிழ்கின்றன ஊடகங்கள்.

ஊடகங்களின் மகிழ்ச்சியும், கட்சித் தொண்டர்களின் கொண்டாட்டமும் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்களுக்கு உரிய, அவர்களுக்கு வேண்டிய பணம், அவர்களுக்குக் கிடைத்து விடும். கட்சித் தலைமையும், அரசாங்கத்தின் விளம்பரங்களும் அவர்கள் தேவையை நிறைவேற்றி விடும்.

ஆனால், மாதந்தோறும் ரூபாய் நூறு மீதமானதை நினைத்து பரவசப்படுகிறார்களே மக்கள்… அவர்கள் ஒரு போதும் அறிவதில்லை, தங்களையும் அறியாமல் மாதந்தோறும் பல கோடி ரூபாய்களை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ‘நன்கொடை’யாக வழங்குகிறோம் என்று.

ஆம், அது பசியினால் நிலைகுத்திய பார்வையாக இருக்கலாம்; அல்லது வேலை பறிபோன துக்கத்தில் வெறித்த பார்வையாக இருக்கலாம்; அல்லது திருமணமாகாத முதிர்கன்னியின் வறண்ட பார்வையாக இருக்கலாம்; அல்லது கல்வி கற்க முடியாத துக்கப்பார்வையாக இருக்கலாம்; அல்லது கந்துவட்டிக்காரனின் மிரட்டலுக்குப் பயந்து ஒடுங்கிய பார்வையாக இருக்கலாம்; அல்லது மருத்துவம் பார்க்க வழியில்லாத நோயாளியின் மரணப் பார்வையாக இருக்கலாம்; அல்லது அடுத்த வேளை உணவைக் குறித்த கவலையில்லாத மேல்தட்டு மக்களின் இன்பமான பார்வையாகவும் இருக்கலாம்.

யாருடைய பார்வை என்பதும் முக்கியமில்லை. பொருளாதார படிக்கட்டில் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் அவசியமில்லை. பார்வை அல்லது பார்வைகள்தான் முக்கியம். பார்வை படும் இடத்தில் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பதுதான் அவசியம். அந்தப் பெட்டி இருந்துவிட்டால் போதும். அதன் வழியே நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தால் போதும். அனைத்து வர்க்கங்களைச் சேர்ந்த பார்வைகளின் மதிப்பும் ஒன்றுதான். என்ன, பார்க்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியைப் பொறுத்து அந்த மதிப்பு பத்து விநாடிகளுக்கு ரூபாய் ஐயாயிரம் முதல் ரூபாய் இருபதாயிரம் வரை வேறுபடும் என்பது மட்டுமே வித்தியாசம்.

•••

எத்தனை குடும்பங்களில் இன்று தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது என்ற கேள்வி அவசியமேயில்லை. காரணம், அமெரிக்க மக்கள் தொகைக்குச் சமமாக இன்று இந்திய நடுத்தர மக்களின் தொகை இருக்கிறது என்ற புள்ளிவிபரமே பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. கிராமங்களால் நிரம்பிய இந்தியாவில் ஒப்பீட்டளவில் இந்த நடுத்தர வர்க்கம் சிறுபான்மையினர்தான். ஆனால் நகரமயமாகி வரும் இந்தியாவில், வாழ்க்கைத் தரத்தில் ஏழை எளியவர்களாகவும், சிந்தனையில் மேட்டுக்குடியினராகவும் இருக்கும் இந்த நடுத்தர வர்க்கமே பெரும்பான்மையினர். எனவே இந்த வர்க்கத்தைத் தங்கள் சந்தைக்கான சரக்காக மாற்றுவதன் மூலம் கிராமங்கள் நிறைந்த இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டத் துடிக்கிறார்கள். அதாவது, சின்ன மீனைக் காண்பித்து பெரிய மீனைப் பிடிப்பது போல. இதற்காகவே இன்று இந்தக் காட்சி ஊடகத்தை இரண்டாக தரகு முதலாளிகள் பிரித்திருக்கிறார்கள். ஒன்று இருபத்து நான்கு மணிநேர செய்தி ஊடகம். இன்னொன்று இருபத்து நான்கு மணி நேர பொழுதுபோக்கு ஊடகம். ஊடகத்தின் இந்த இரு பிரிவுகளும் எந்தத் தரகு முதலாளியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பது முக்கியமில்லை. அனைத்து ஊடக நிறுவனங்களிலும் சட்டப்பூர்வமாக பன்னாட்டு நிறுவனங்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டியவிஷயம்.

தனிப்பட்ட வாடிக்கையாளர் ஒப்பந்தங்கள் இதன் பொருட்டுத்தான் போடப்படுகின்றன. ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரங்கள் என்ற அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விளம்பரங்களை எத்தனை காட்சி ஊடகங்கள் இருக்கிறதோ அத்தனையிலும் ஒளிபரப்புகின்றன. அந்தந்த காட்சி ஊடகத்துக்கு இருக்கும் ‘பார்வை’யாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு தொகையைத் தருகின்றன. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்கள் ஒவ்வொரு காட்சி ஊடக நிறுவனங்களுக்கும் வருவாயாகக் கிடைக்கின்றன.

இந்தக் கொள்ளை தொடர வேண்டுமானால், மக்களுக்கு தொடர்ந்து கிளுகிளுப்பும் கிச்சு கிச்சுவும் மூட்ட வேண்டும். விழிப்புணர்வுக்கு என்று நடத்தப்படும் அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம், நீயா நானா… போன்ற டாக் ஷோக்களில் கூட கவனமாக பிரச்சினைகளின் வேரைத் தவிர்த்துவிட்டு மேம்போக்கான பொது நியாயங்கள் விவாதிக்கப்படும். பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்கவேண்டும், ஆசிரியர்களின் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும், கலப்பு மணத் திருமணத்தை பெற்றோர் ஒப்புதலுடன்செய்து கொள்ள வேண்டும். அவர்கள் மறுத்தால் காத்திருக்க வேண்டும், முதலாளிக்கு துரோகம் நினைக்கக் கூடாது போன்ற விழுமியங்கள், புதிய கீதைகளாக தொலைக்காட்சியில் ஒலிக்கின்றன.

இப்படி எல்லோருக்கும் பொருந்துகிற, குறிப்பிட்ட எந்தவொரு மக்கள் பிரிவினரையும் இலக்காகக் கொள்ளாமல், ஒரேவிதமான நிகழ்ச்சிகளையே ஒட்டுமொத்தப் ‘பார்வை’யாளர்களுக்கும் வழங்குவதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அடிநாதம். இதன் மூலம் மறுகாலனியாதிக்கத்துக்கு உகந்த முதலாளித்துவ ஆன்மாவை  முதலாளித்துவ மனித மாதிரியை  உருவாக்குகின்றன.

அதனால்தான் ஹாலிவுட் பண்பாடு, தமிழர்களின் அடையாளமாகிறது. பீட்சாவும், சாண்ட் விச்சும், பர்க்கரும் உணவுப் பொருட்களாகின்றன. கோக்கும், பெப்சியும் குடிநீராகக் கருதப்படுகின்றன. இது உலகச் சந்தை; உலகக் கலாச்சாரம். அமெரிக்கா இதில் மேல்நிலை வகிப்பதால், அமெரிக்க சுவர்க்கத்தின் சுவடுகளை தமிழகப் புறநகரங்களிலும் காணலாம். இருபத்தோரு இன்ச் பெட்டிக்குள் உலகம் சுருங்கி விட்டதால், இவ்வுலகில் ஏழைகளுக்கு வாழ இடமில்லை. ஒவ்வொரு நாடும் தனது மரபு, தனது பண்பாடு மற்றும் விழுமியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய அனைத்தையும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு தகர்த்துவிட்டது.

இதனால்தான் இரு வேறு கலாச்சார, பண்பாடுகள் கொண்ட இரு சீரியல்களை ஒரே நேரத்தில் மாற்றி மாறி பார்வையாளர்களால் ரசிக்க முடிகிறது. இரவு ஏழரை மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாதஸ்வரம்’ சீரியலையும், ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் வெளிவரும் ‘சின்ன மருமகள்’ தொடரையும் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் பார்க்கிறார்கள். இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியலின் இந்தத் தமிழாக்கத்தை பார்க்கும்போது எவ்வித பண்பாட்டு வேறுபாடுகளையும் அவர்கள் உணர்வதில்லை. இரண்டையும் ஒன்றுபோலவே ரசிக்கிறார்கள். ‘நாதஸ்வரம்’ கோபிக்காகவும் உருகுகிறார்கள், ‘சின்ன மருமகள்’ ராதிகாவுக்காகவும் உள்ளம் கசிகிறார்கள்.

அதேபோல் சட்டப்படி தடை செய்யப்பட்ட சூதாட்டங்கள், ‘தங்க மழை’, ‘டீலா நோ டீலா’ போன்ற நிகழ்ச்சிகளின் வழியே வீட்டுக்குள் நுழைகின்றன. ‘பார்வை’யாளர்களையும் கலந்து கொள்ளத் தூண்டுகின்றன. ஒரேநாளில், ஒரே விளையாட்டின் மூலம் கோடீஸ்வரனாகலாம் என்ற குறுக்கு வழியைக் கற்றுத் தருகின்றன. இவையனைத்தும் அமெரிக்க, ஐரோப்பியநாடுகளில் வெற்றி பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். அதை அப்படியே ‘தமிழ்க் கலாச்சாரத்துக்கு’த் தகுந்தபடி இறக்குமதி செய்கிறார்கள். சூதாட்டம் தவறு என்று இன்று யாரும் சொல்வதில்லை. சூதாட்டமே வாழ்க்கைக்கான உழைப்பாக அங்கீகாரம் பெற்று விட்டது. பங்குச்சந்தையும் ஒரு தொழிலாக உயர்வு பெற்றிருக்கிறது.

உழைப்பு மட்டுமல்ல, பார்வையும் சரக்காகி விட்ட நிலையில், திரும்பியபக்கமெல்லாம் விளம்பரங்கள் கண்சிமிட்டும் ஜாலத்தில் கட்டியிருக்கும் கோவணத்தை விற்று, மாதம்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் சம்பாதிக்க தங்கள் ‘பார்வை’யை அர்ப்பணிக்கும் பார்வையாளர்களே…

இப்போது சொல்லுங்கள், கேபிள் டிவியில் ஏகபோகமாக ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செலுத்துவதும், பகல் கொள்ளைக்கு சமமாக மக்களிடமிருந்து மாதந்தோறும் நூற்றி ஐம்பது ரூபாய் வரை வசூலிப்பதும் மட்டும்தான் பிரசனைனையா?

•••

பார்வையாளர்களுக்குரிய ‘தெரிந்து கொள்ளும் உரிமையை’ தங்கள் வசதிக்கு ஏற்ப  தங்களுக்குச் சாதகமாக தரகு முதலாளிகளால் எப்படி மாற்றிக்கொள்ள முடிகிறது என்ற உண்மையை இரண்டாம் கட்ட அலைகற்றையில் நடந்த ஊழல்களை செய்தி ஊடகங்கள் எப்படி வெளியிட்டன, வெளியிடுகின்றன என்பதை வைத்தே புரிந்து கொள்ளலாம். ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன்… எனத் தனி மனிதர்களை ஊழலின் ஊற்றுக்கண்ணாக முன்னிலைப்படுத்தும் செய்தி ஊடகங்கள் ஒரு போதும் இவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய தரகு முதலாளிகளைக் குற்றம்சாட்டவும் இல்லை; அம்பலப்படுத்தவுமில்லை. கனிமொழி கைது செய்யப்பட்டபோதும், ஆ.ராசாதிகார் சிறையில் அடைக்கப்பட்ட போதும் அந்தச் செய்திகளை ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். அப்போது அந்தச் செய்தி நேரத்தைப் பார்வையாளர்களுக்கு பெரும்பாலும் வழங்கியது, டாடாவின் டோக்கோமோவும், அம்பானியின் ரிலையன்சும்தான்.

உண்மையில் இரண்டாம் கட்ட அலைக்கற்றையால் கொழுத்த லாபமடைந்தவர்கள், இந்த இரு தரகு முதலாளிகளும்தான். ஆனால் எந்த ஊடகமும் இதை மக்களுக்கு தெரிவிக்கவில்லை. காரணம், ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரங்கள் என்ற அடிப்படையில் இந்தத் தரகு முதலாளிகள் அளிக்கும் விளம்பரங்கள்.

நம் நாட்டில் அரை மணி @நரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்கிறார். இது குறித்து எந்தச் செய்தி ஊடகமும் பதிவும் செய்யவில்லை; காட்சிப்படுத்தவும் இல்லை. காரணம், பெரும்பான்மையினர் விவசாயிகளாக வாழும் நம் நாட்டில் விவசாய செய்தியாளர்கள் என்ற பிரிவே எந்த ஊடகத்திலும் கிடையாது. க்ரைம், அரசியல், வணிகம், மருத்துவம், அழகு

சாதனப் பொருட்கள்… என அனைத்துப் பிரிவுக்கும் செய்தியாளர்கள் உண்டு. ஆனால், வேளாண்மைக்கு? ஒருவரும் இல்லை. ஏனெனில் எந்தப் பன்னாட்டு நிறுவனங்களும் விவசாயிகள் குறித்து அக்கறை காட்டுவதில்லை. எனவே அவர்களைச் சார்ந்து இருக்கும் செய்தி ஊடகங்களும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

அதனால்தான் விதர்பாவில் கொத்துக் கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டபோது செய்தி ஊடகங்கள் அந்நிகழ்வைக் கண்டுகொள்ளவில்லை. பதிலாக நீரா ராடியா டேப் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் அது டாடாவின் தனி மனித இறையாண்மைக்கு ஊறு விளைப்பதாகக் கூறி செய்திகளை ஒளிபரப்பின. மத்திய அமைச்சரும், இனி எந்த நிறுவன முதலாளிகளின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படாது எனச் செய்தியாளர்களை அழைத்து உறுதியளித்தார். அதேபோல் பங்குச்சந்தை விழும்போதெல்லாம் கழிவறைகளில் இருந்தாலும் அப்படியே கழுவாமல் ஓடோடி வந்து, ஊடகங்களில் நடைபெறும் மாபெரும் விவாதங்களில் பங்கேற்று ‘எல்லாம் சரியாகிவிடும்’ என அபயம் அளிக்கிறார்கள் மத்திய அமைச்சர்களும், பொருளாதாரவல்லுநர்களும்.

இந்த விவாதங்களில் பங்கேற்கும் கருத்து கந்தசாமிகள், அரை நொடியைக் கூட வீணாக்காமல் கருத்துச் சொல்லும் வல்லமைப் படைத்தவர்கள். யோசித்து பேச காட்சி ஊடகங்களில் வாய்ப்பில்லை. ஒவ்வொரு நொடியும் ரூபாய் நோட்டுக்களால் அளக்கப்படும்போது பட, பட என்று கருத்துக்கள் விழ வேண்டும். அவை சரியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. தவறாக இருந்தாலும் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. சொல்பவருக்கும், கேட்பவருக்கும் நடக்கும் விவாதம் குறித்து எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. உளறலும் கூட சிந்தனையின் வடிவங்கள்தான். பிரதமரை முட்டாள் என்று சொல்லலாம். ஆனால், அம்பானியை அப்படி அழைக்கக் கூடாது. நீதிபதியை தயக்கத்துடன் விமர்சிக்கலாம். ஆனால், நீதித்துறையை முணுமுணுப்பாகக் கூட கேள்வி கேட்கக் கூடாது.

ஹாலிவுட் பாணியில் ஒரு ஹீரோ,ஒரு ஹீரோயின், ஒரு வில்லன்; ஒரு ஆரம்பம், ஒரு நடுப்பகுதி, ஒரு முடிவு… என செய்திகளை வழங்கினால், அந்த நிகழ்ச்சி சக்சஸ். எப்பொழுதுமே அரசியல்வாதிகள்தான் வில்லன். தனியார் நிறுவன முதலாளிகள்தான் ஹீரோ. இந்த விதிக்கு கட்டுப்பட்டு நிகழ்ச்சிகளை நடத்துபவர்களையும், விவாதங்களில் பங்கேற்பவர்களையும் ஒரே இரவில் அறிவுஜீவிகளாகச் செய்தி ஊடகங்கள் மாற்றி விடும். பிறகு அவர்கள் சிறுநீர் கழித்தாலும் அது ஸ்கூப் நியூஸ்.

காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவத்தினரும், துணை இராணுவத்தினரும் நடத்தும் பாலியல் வன்முறைகள் இயல்பானது. பொங்கி எழுந்து மக்கள் அவர்களை நோக்கிக் கற்களை வீசினால் அது பயங்கரவாதம். செய்தியை எப்படி வழங்க வேண்டும் என்பதை இப்படித்தான் இருபத்து நான்கு மணிநேர செய்தி ஊடகங்கள் கற்றுத் தருகின்றன.

காலையில் தெய்வ வழிபாட்டுடன் தான் பெரும்பாலான பொழுதுபோக்குக் காட்சி ஊடகங்கள் கண் விழிக்கின்றன. சுப்ரபாதமும், கந்த சஷ்டி கவசமும், தேவாரமும் தினமும் ஒ(லி)ளிபரப்பப்படுகின்றன. அதன்பிறகு உடற்பயிற்சி, யோகா, நாள்பலன். பின்னர் செய்திகள். தொடர்ந்து ஏதேனும் ஒரு துறை வல்லுநருடன் நேர்காணல். இதனையடுத்து நகைச்சுவை நேரம் என்கிற பெயரில் திரைப்படத் துணுக்குகள் அல்லது திரைப்படப் பாடல். பின்னர் முப்பது முப்பது நிமிடங்களாக இரவு பத்து மணிவரை சின்னத்திரை நாடகங்கள். நடுவில் ஒரு திரைப்படம். இதுதான் வார நாட்களில் தொலைக்காட்சியின் ‘மெனு’. அதுவேவார இறுதி என்றால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள்.

ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் கூட, ‘உருப்படாத மாணவர்களும்’, ‘குடும்பப் பொறுப்பில்லாத பெண்களும்’ வாரம் இரண்டு, மூன்று திரைப்படங்களைத் தாண்டி பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்கள் வரை அனைவரது வீட்டிலும் ஊடுருவிவிட்ட தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் இன்று ஒட்டுமொத்தக் குடும்பமும் அமர்ந்து தினமும் திரைப்படங்களைப் பார்க்கிறது; ரசிக்கிறது. அதா

வது இன்று வாழ்க்கையில் உருப்பட, ஒருநாளைக்கு மூன்று திரைப்படங்கள்வரை பார்க்க வேண்டும் என்பதான புரிதலுக்கு மக்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தெய்வ வழிபாட்டுடன் தொடங்கும் அன்றைய பொழுது, “குற்றம் நடந்தது என்ன’ என்பதை அறிந்து கொள்வதுடன் முற்றுப்பெறும். இதன் ஊடாகத்தான் பார்ப்பனக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ‘தெய்வ தரிசனம்’ பார்ப்பன கடவுள்களின் அருமை பெருமைகளைப் பட்டியலிடுகிறது என்றால், ‘நிஜம்’ நிகழ்ச்சி சிறுதெய்வ வழிபாடுகளை ஏதோ காட்டுமிராண்டித்தனமான செயல் என்பது போல் சித்தரிக்கிறது.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு அனைத்துச் சேனல்களுமாகச் சேர்த்து சுமாராக முப்பது சீரியல்கள் வெளியாகின்றன. அதாவது முப்பது அரைமணி நேரங்கள். இவையனைத்தின் கதைகளும் ஏறக்குறைய ஒரு ஆணுக்கு இரு மனைவிகள், மாற்றாந்தாய் கொடுமை, திருமணத்துக்கு ஜாதகம் தடை, தம்பி அல்லது அண்ணன் ஊதாரி; உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் அக்கா, அண்ணியின் கொடுமை, ஏமாற்றிக்கைவிடும் காதலன்… போன்ற பீம்சிங் காலத்து ‘ப’ வரிசைப் படங்களின் கதைகளை ஒற்றித்தான் இருக்கின்றன.

‘தங்கம்’ சீரியலில் மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் கங்கா (ரம்யா கிருஷ்ணன்), தனது கணவர் உடல்நலம் குன்றி சுயநினைவு இல்லாமல் இருந்த போது, மண்சோறு சாப்பிட்டாள்; தீ மிதித்தாள்; நூற்றியெட்டு குடங்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தாள். மருத்துவம் குணப்படுத்த வேண்டிய நோயை அம்மன் குணப்படுத்தியதாக கதை பின்னப்பட்டது, மூட நம்பிக்கைகள் நிறைந்த சென்ற நூற்றாண்டில் அல்ல. அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இன்றைய பொழுதில்தான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமல்லவா?

அலுவலகமோ, ஏற்றுமதி நிறுவனமோ சக்கையாகப் பிழியப்பட்டு துப்பப்படும் பெண் தொழிலாளர்கள் வீடு திரும்பியதும் அக்கடாவென ஓய்வெடுக்கத் தொலைக்காட்சித் தொடர்கள்

விடுவதில்லை. வீட்டு வேலைகள் ஒருபுறம் என்றால், ‘திருமதி செல்வத்தில்’ அர்ச்சனா வாழ்க்கையில் முன்னேறுவாளா… ‘தங்கத்தில்’ கங்காவின் தங்கை ரமாவுக்கு சுகப்பிரசவம் நிகழுமா அல்லது அவளது மாமனாரே அவள் கருவைக் கலைத்து விடுவாரா… ‘தென்றலில்’ தமிழ்  துளசி வாழ்க்கையை சாரு எப்படி அழிக்கப் போகிறாள், இந்தச் சூழ்ச்சிக்கு இந்தத் தம்பதிகள் பலியாவார்களா… ‘செல்லமே’ தொடரில் தன் மாமியாரிடமிருந்து அமுதாவுக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும், செல்லம்மா பிரிந்த சகோதரர்களை எப்படி சேர்க்கப் போகிறாள்… என்பதை யெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

பெண்களின் ஓய்வுநேரங்கள் இப்படியாக கொள்ளையடிக்கப்படுகிறது என்றால், ஆண்களின் கழுத்து விளையாட்டை நோக்கித் திருப்பப்படுகிறது. இலங்கை அணியின் ஸ்கோரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் எட்டுவார்களா? என மனம் துடிக்கத் துடிக்க, நகத்தை கடித்தபடி கொட்டக் கொட்ட விழித்திருந்து பதற வேண்டும்.

இப்படிப் பாலினம் சார்ந்து பொழுது போக்கைப் பிரித்துக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்தியங்கள், குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. சுட்டி டிவியும், போகோவும், ஜெட்டிக்ஸ{ம் அவர்களது ஓய்வுநேரத்தைப் பந்தாடுகின்றன. இதெல்லாம் எங்களுக்கு நன்றாகத்தெரியும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ‘வெறும் டைம்பாஸ்’க்குத் தான் என்று சொல்ல முடியாது. பன்னாட்டு முதலாளிகளுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம். ஆனால், உழைக்கும் மக்களுக்கு பொருந்தாது. ஏனெனில் உழைப்பைத் திருடுவது நிகழ்காலத்தைத் திருடுவது என்றால், ஓய்வுநேரத்தை கொள்ளையடிப்பது எதிர்காலத்தைத் திருடுவதற்கு சமமானது.

நாற்பதுக்கும் மேற்பட்ட சருமசோப்புகளுக்கும், முப்பதுக்கும் மேற்பட்ட துணிக்கடை விளம்பரங்களுக்கும், இருபதுக்கும் மேற்பட்ட வாஷிங் சோப்புகளுக்கும், பத்துக்கும் மேற்பட்ட ஷாம்புகளுக்கும், ஐந்துக்கும் மேற்பட்ட பற்பசைகளுக்கும் இடையில் உங்கள் ஓய்வுநேர பொழுதுபோக்கை இன்பமாக அனுபவிக்கும் மதிப்புக்குரிய நடுத்தர மக்களே…

உங்கள் சரும பளபளப்புக்கும், பற்கள் மின்னவும், தலைமுடி காற்றில் பறக்காமல் இருக்கவும் எந்த நிறுவனத் தயாரிப்பை பயன்படுத்துகிறீர்கள்? எது சட்டென்று உங்கள் நினைவுக்கு வருகிறது? மாதாந்திர மளிகைப் பொருட்கள் லிஸ்டில் நுகர்வுப் பொருட்களுக்காக எவ்வளவு ஒதுக்குகிறீர்கள்..? மற்றவர்கள் ‘பார்வை’யில் அழகாகத் தென்படவேண்டும் என்று மெனக்கெடும் நீங்கள், உங்கள் ‘பார்வை’யால் துணிக்கடை முதலாளிகள் அடுத்தடுத்த ஊர்களில் கிளைகள் திறக்க மாதந்தோறும் எத்தனை கோடி ரூபாய்களை ‘நன்கொடை’ வழங்குகிறீர்கள் என்பதைப் பத்து விநாடிகள் யோசித்து விட்டுச் சொல்லுங்கள்.

கேபிள் டிவியில் ஏகபோகமாக ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செலுத்துவதும், பகல் கொள்ளைக்கு சமமாக மக்களிடமிருந்து மாதந்தோறும் நூற்றி ஐம்பது ரூபாய் வரை வசூலிப்பதும் மட்டும்தான் பிரச்சனையா?

– அறிவுச் செல்வன்

நன்றி: புதிய கலாச்சாரம்