தன் வயிற்றில் பிள்ளைகளைக் சுமந்த மாதிரி
தாய்ச்சுமையொடு பக்குவமாக
மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து
தேசிய நெடுஞ்சாலையை
பிடித்தது பேருந்து.
…
இயங்குவது எந்திரம் மட்டுமா?
அதனொரு பாகமாய்
ஓட்டுநரின் கையும், காலும்
தசையும், நரம்பும் அசையும்.
வேகமெடுக்கும் சக்கரத்தின் சுழற்சியொடு
வெகுதூரம் சரிபார்த்து
விழிகள் சுழன்று இசையும்.
…
அவியும் எஞ்சின் சூடும்
இரையும் அரசுப் பேருந்தின் ஒலியினூடே
பேருந்தின் ஒரு தகடின் ஓசையும் வேறுபட்டால்
உடனே அறியும் ஓட்டுநரின் செவிப்புலம்
கும்மிருட்டில்
விரியும் அவர் பார்வை நரம்புகள் மேல்
பத்திரமாய் நம் பயணங்கள்.
எத்தனை பேர் அறிவோம்
அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும் தருணங்கள்.
….
போரும் நள்ளிரவில்… எதிரே தனியார் பேருந்துகளின்
தகிக்கும் விளக்கொளிகள்
இரவையும் பகலாக்கும்.
அதை.. தனியே எதிர்கொண்டு
வேகம் குறையாமல்
லாவகமாய் கைடு வாங்கி
தாய்மடி தூங்காத குழந்தையையும்
தனது ஸ்டியரிங்க் இடவலது தாலாட்டில் உறங்க வைத்து,
துடிக்கும் கண்களுக்குள்
டீசலொடு ஒட்டுநரின் தூக்கமு
எரிந்து விசையாகி எஞ்சின் துடிதுடிக்கும்.
….
அண்ணா சமாதி விளக்கு போல
ஏதோ வெளிச்சம் காட்டும்
முன்விளக்கைப் பற்றிக் கொண்டு
பாதை விரியும் தூரம் முழுக்க
தன் கண் விளக்கால் கடந்து க்டந்து
பயணிகளாஇச் சுமந்து செல்லும்
ஓட்டுநரின் விழி இருக்கை.
….
கொட்டாம்பட்டி தாண்டும் போதோ
கொட்டும் மழை…
பேருந்து நிர்வாகம் போல் இயங்காத வைப்பர்
தினந்தந்தி நாளிதழோ, தான் போடும் புகையிலையோ
பேருந்து கண்ணாடிக்கும் போட்டு
விழி மறைக்கும் மழை விலக்குவார்.
எதிர்ப்படும் மின்னலை கருவிழி துடைத்து
திருச்சி தாண்டி
ஒரு தேநீர் குவளைக்குள்
…..
இரவைக் கலக்கி ஓட்டுநரின் கையில்
பயணிகள் அனுபத்த தூக்கம்
தோலுரிந்து கிடக்கும்.
….
இருள் அப்பிக் கிடக்கும் சாலைகள்…
எதிர்ப்படும் தடைகள், குண்டு குழிகள்
பராமரிப்பில்லாத பேருந்தின் தொல்லைகள்
அத்தனைக்கும் முனகும் குரல்களை
வலிகளாய் தான் வாங்கி….
எரிபொருள் சிக்கனமாய் வண்டியை ஓட்டி
….
தன் இரத்தம் தாராளமாய் விடிய விடிய
கண்களில் கொப்பளித்து
அத்தனை பயணிகளையும்
பத்திரமாய் கோயம்பேட்டில் இறங்கி விட
வானம் வெளுத்து வரும்
ஓட்டுநரின் கண்களோ செக்கச் சிவந்திருக்கும்.
….
தனியார்மயதால் தறிகெட்டு ஓட்டி
நாட்டையே விபத்துக்குள்ளாக்கும்
மன்மோகனையும், ப.சிதம்பரத்தையும்
‘மினிஸ்டர்’ என் மரியாதையாகப் பேசும் வாய்கள்
…..
பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல்
“ஊம். வந்துட்டேன்,
ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.
– துரை.சண்முகம்
நன்றி புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012
தொடர்புடைய பதிவுகள்:
இளந்தமிழகத்தின் எழுச்சியே வருக…வருக…! துரை.சண்முகம்
அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
Filed under: கவிதை, மறுகாலனியாக்கம் | Tagged: அரசியல், அரசு பேருந்து, இந்தியா, உலகமயமாக்கம், ஓட்டுநர், ஓட்டுப்பொறுக்கி அரசியல், கோயம்பேடு, சினிமா, தனியார்மயம், தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், தமிழகம், தோழர் துரை.சண்முகம், நிகழ்வுகள், ப.சிதம்ரம், புதிய கலாச்சாரம், மன்மோகன் சிங், மாட்டுத்தாவணி |
Excellent..I cried after reading this…