• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

விடுதலைப் போரின் வீர மரபு உங்களுக்கு தெரியுமா?

காலனிய எதிர்ப்பு விடுதலைப் போர் என்றாலே காந்தி, நேரு, காங்கிரசு என்று ஆரம்பப் பள்ளி முதல் அனைத்து வகை கல்வி நிறுவனங்களாலும் கூறப்படும் பொய்யான வரலாறே இங்கே உண்மையென நம்பப்படுகிறது. ஆயினும் வரலாற்றின் வீரஞ்செறிந்த அந்த பக்கங்கள் இதை மறுக்கின்றன. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்து மறைந்த்து போயிருக்கும் அந்த வரலாற்று மாந்தர்களையும், காலகட்டத்தையும் புதிய கலாச்சாரத்தின் இந்த சிறப்பிதழ் மீட்டு கொண்டு வருகிறது.

ஊழலும், காரியவாதமும், நம்பிக்கையின்மையும் கோலேச்சும் இந்தச் சூழலில் இந்த வரலாற்றை நினைவு கூர்வது என்பது மீண்டும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போரை நாம் நடத்த வேண்டிய கடமையை கற்றுத் தேர்வதோடு அதில் பங்கேற்பதும் ஆகும். புத்தகக் கண்காட்சியை  முன்னிட்டு கீழைக்காற்றின் வெளியீடாக வரும் இந்த கட்டுரைகளை இங்கே அறிமுகம் செய்கிறோம்.

– வினவு

_______________________________________________________

விடுதலைப் போரின் வீர மரபு

1800 – 1801 இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர், 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.

சத்தியாக்கிரகம் எனும் போராட்ட வடிவத்தை தென் ஆப்பிரிக்காவில் காந்தி அறிமுகப்படுத்தியதற்கும், ‘வந்தே மாதரம்…’ என்ற இந்து தேசியப்பாடல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் கூட இது நூற்றாண்டுதான். தேதிகள் பொருந்தி வருவதனால் தியாகமும் துரோகமும் ஒன்றாகி விடுவதில்லை. எனினும் நம் விடுதலைப் போராட்டத்தின் ஒளிவீசும் மரபுகள் அனைத்தையும் இந்து தேசியவாத, அகிம்சாவாத ஜோதிக்குள் அமிழ்த்துகின்றன ஆளும்வர்க்கங்கள். நம் விடுதலைப் போராட்ட மரபு, காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் திசையறிந்த ஒரு மக்கள்திரள் இயக்கமாக உருப்பெற்றதைப் போன்றதொரு தோற்றத்தை அதிகாரபூர்வ வரலாறு நம் சிந்தனையில் பதித்து வைத்திருக்கிறது.

பெருமிதம் கொள்ளத்தக்க விடுதலைப் போராட்டத்தின் வீர மரபை நம் வரலாற்றுப் பிரக்ஞையிலிருந்தே துடைத்தொழிப்பதற்கான இந்தச் சதி மிகவும் தந்திரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. வன்முறைக்குப் பதிலாக அகிம்சை என்ற வாதத்திற்குள் காந்திகாங்கிரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் துரோகமும் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ஒரு தபால் தலை வெளியீடு மற்றும் அரசு விழாவின் மூலம் கட்டபொம்மன் முதல் பகத்சிங் வரையிலான போராளிகள் அனைவரும் துக்கடாக்களாக நிறுவனமயமாக்கப்படுகிறார்கள்.

இந்த வரலாற்றுப் புரட்டிற்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. 1857 எழுச்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்கிறது வரலாறு. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக திப்பு நடத்திய போர்களும் இந்துஸ்தானத்திலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட திப்பு மேற்கொண்ட முயற்சிகளும் விடுதலைப் போராட்டத்தின் துவக்கப்புள்ளியாகக் கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணிறந்த முன்னணியாளர்கள் இணைந்து தீபகற்பக் கூட்டணி என்றொரு கூட்டணியை அமைத்திருந்ததையும், அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு முன்னணி மகாராட்டிரத்தின் தென்பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஊடுருவிச் சென்றதையும், பல்லாயிரம் விவசாயிகளின் பங்கேற்புடன் நடந்த அந்த மக்கள் போர் 1799 முதல் 1806 வேலூர் புரட்சி வரை தொடர்ந்ததையும் அதிகாரபூர்வ வரலாறு பதிவு செய்வதில்லை. இந்த மாபெரும் மக்கள் போரை முதல் சுதந்திரப் போராகவும் அங்கீகரிப்பதில்லை. தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களைப் புறக்கணிப்பது என்ற இந்து தேசியவாதக் கண்ணோட்டமே இந்த இருட்டடிப்புக்குக் காரணம். இந்த உண்மையைக் கூறுவது, 1857 சுதந்திரப் போரின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.

இந்தச் சிறப்பிதழில் தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அதன் நாயகர்களின் வழியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எனினும் இது பத்திரிக்கை எனும் வடிவ வரம்புக்குட்பட்ட ஒரு பறவைப் பார்வை மட்டுமே. திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.

துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர.

______________________________________________

நன்றி: புதிய கலாச்சாரம் – தலையங்கம் – நவம்பர் 2006

முதல் பதிவு: வினவு

 

வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!

********************************

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி !

கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!

One Response

  1. தூரோகிகளின் வரலாறு வருடத்துக்கு ஒரு முறை வருகிறது.தியாகத்தின் வீரப்புதல்வரகள் நிணைவுகளோ, சொல்லிலும் செயலிலும் நிமிடத்துக்கொருமுறை………….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: