• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

கடந்த 25ம் தேதி சென்னை சேலையூர் ஜீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்த சுருதி என்ற சிறுமி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சாலையில் தவறி விழுந்து, பயணித்த பேருந்தின் சக்கரத்திலேயே மாட்டிக் கொண்டு துடிக்கத் துடிக்க உயிரிழந்தாள். காட்சி ஊடகங்கள் இதை தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் விதத்தில் பரபரபரப்பான செய்தியாக மாற்ற, தமிழகம் பற்றிக் கொண்டது. பார்த்த கணத்திலேயே பதற வைக்கும் செய்தி என்பதால் சலை மறியல், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள், கடைசி ஊர்வலம் என பொது மக்கள் தன்னுந்துதலில் தாங்களாகவே தங்களின் அனுதாபத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். நேரில் கண்ணுற்ற மக்கள் தங்களின் கோபத்தை பேருந்தை எரித்து தீர்த்துக் கொண்டனர். தொடர்ந்து, மக்களிடையே நிகழ்வு குறித்து யார் பொறுப்பு எனும் கேள்விகள் எழுந்தன. பள்ளி நிர்வாகிகளே காரணம் என்றனர் சிலர். பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியமே காரணம் என்றனர் சிலர். குழந்தைகளின் பாதுகாப்பில் கவனமற்று இருந்த பெற்றோர்களும் காரணம் என்றனர் சிலர். சரியாக சோதனை செய்யாமல் சான்றிதழ் அளித்த மண்டல போக்குவரத்து அலுவலரும் காரணம் என்றனர் சிலர். இன்னும் சிலரோ இரக்கமற்று குழந்தையும் காரணம் என்றனர். நீதி மன்றம் தன் பங்குக்கு ஏன் இதை கொலை வழக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டு வைத்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீயில் சற்றேறக் குறைய நூறு மொட்டுகள் கருகிச் சாம்பலாயின. அப்போதும் இப்படித்தான் மக்கள் கொதித்தார்கள், கேள்வி எழுப்பினார்கள். பம்மாத்து செய்தது அரசு. ஆண்டுகள் கடந்தன, மறந்தும் போயிற்று. ஆனால் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளிகளில் தீப்பற்றும் அபாயம் முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது என்று கூறமுடியுமா? இந்த நிகழ்வுக்குப் பிறகும் பள்ளிப் பேருந்துகள் இது போன்ற விபத்துகள் மீண்டும் நேராவண்ணம் நெறிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்க முடியுமா? முடியாதென்றால் ஏன்? ஏன் இதை கொலை வழக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது? என நீதி மன்றம் எழுப்பும் கேள்வி உட்பட மக்கள் எழுப்பும் கேள்விகள் அடிப்படையான விசயத்தை தொட மறுக்கின்றன. மறக்கப்படும் அல்லது மறைக்கப்படும் அந்தக் கேள்விகள் எவை?

இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை, ஏழு வயது சிறுமி ஏன் பேரூந்தில் பயணம் செய்து படிக்க வேண்டும்? வீட்டின் அருகே பள்ளிகளே இல்லையா? அல்லது தூரம் சென்று படித்தாக வேண்டிய நிர்பந்தம் குழந்தைக் கல்வி முறையில் இருக்கிறதா? பெற்றோர்களின் தனியார் கல்வி மோகத்திற்கு பல காரணங்களைக் கூறலாம். அவற்றில் முதன்மையானது தனியார் கல்வியை நோக்கி அரசு பெற்றோர்களை தள்லுகிறது என்பது தான். தெருவுக்கு ஒரு சாராயக் கடையை நடத்த முடியும் அரசால் ஊருக்கு நான்கு பள்ளிகளை நடத்த முடியாதா? நடத்தப்படும் பள்ளியிலும், ஆசிரியரின்றி, பயிற்றுவிக்கும் முறைகளின்றி, வசதிகளின்றி, ஏன் சில வேளைகளில் பள்ளிக் கட்டிடங்களே இன்றி அரசு தனியார் போதையேறிக் கிடப்பதால் தானே பெற்றோர்கள் தனியார் கல்வியை நாடுகிறார்கள். அதிக சம்பளத்தில் கிடைக்கப் போகும் வேலை வாய்ப்பு ஒன்றுதான் வாழ்க்கைக் கடலைக் கடக்க உதவும் ஒரே துடுப்பு என்று மக்கள் முடிவு செய்யும் வண்ணம் எதிர்காலம் குறித்த பயத்தை வேலையில்லா திண்டாட்டம் மூலம் ஏற்படுத்தி; என்ன விலை கொடுத்தேனும், எவ்வளவு சிரமப் பட்டேனும் ஆங்கிலக் கல்வியை, தனியார்கல்வியை குழந்தைகளின் மூளையில் திணித்தே ஆக வேண்டும் எனும் மனோநிலையை பெற்றோர் மனதில் ஏற்படுத்தியது அரசல்லவா?

பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை கவனிக்கவிடாமல், உறுதிப்படுத்தாமல் பள்ளியின் நிர்வாகத்தை அலட்சியம் கொள்ள வைத்தது எது? பேரூந்தில் அழைத்து வரும் தூரத்திலிருந்து குழந்தைகள் வருகின்றன என்றால் கல்வியை விட அவர்களின் பாதுகாப்பில் அல்லவா அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பள்ளியின் தாளாளர் அது ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பேரூந்து பள்ளியின் சொந்தப் பேரூந்தல்ல என்று தட்டிக் கழிக்க முயன்றிருக்கிறார். இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். தேர்வு காலத்தில் தம் பள்ளியில் பயின்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு ‘பிட்’ கொடுத்து அதிக மதிப்பெண் எடுக்க தூண்டும், அனுமதிக்கும் தாளளர் போன்றவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை அலட்சியப் படுத்துகிறார்கள் என்றால், பணம் ஒன்றைத் தவிர வேறெதிலும் அவர்களுக்கு கவனம் இல்லை என்பதே பொருள். குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேரூந்து என்பதை அறிந்திருந்தும் அதன் உரிமையாளர், குழந்தை விழும் அளவுக்கு ஓட்டையோடு பேருந்தை இயக்க அனுமதிக்கிறார் என்றால், பராமரிப்புச் செலவைக் குறைத்து லாபமீட்டும் நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் அந்த உரிமையாளருக்கு இருந்திருக்க முடியுமா? என்றால் கல்வியை கடைச் சரக்காக்கியதல்லவா முதல் குற்றம்.

இந்த நிகழ்வு நேர்வதற்கு இரண்டு வாரத்துக்கு முன்பு தான் அந்தப் பேருந்துக்கு இயக்கத் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தை விழும் அளவுக்கு பெரிய ஓட்டை பேரூந்தின் தளத்தில் இருக்கும் போது எப்படி ஒரு மண்டல போக்குவரத்து அலுவலரால் இயக்கச் சான்றிதழ் வழங்க முடிந்தது? யார் எப்படிப் போனால் எனக்கென்ன? எந்தச் சோதனையும் செய்யாமல் ‘தகுந்த முறையில் கவனித்தல்’ மிதி வண்டிகளுக்குக் கூட பேரூந்துக்கான சான்றிதழ் வழங்கத் தயாராக இருக்கும் அதிகாரிகள் எந்த அடிப்படையில் அப்படி ஆனார்கள்? பிற உயிர்களைவிட கையூட்டாக கிடைக்கும் அற்பப் பணம் சிறந்தது எனும் எண்ணம் அவர்களுள் ஏற்பட வழி வகுத்தது எது? உடனிருக்கும் சமூகத்தைவிட தான் மட்டும் எந்த விததிலேனும் முன்னேறி விட வேண்டும் எனும் துடிப்பை அவர்களுக்குள் வழங்கிய ஒன்றல்லவா தண்டிக்கப்பட வேண்டியது.

 

இப்போது அரசு துரித நடைவடிக்கை எடுத்திருக்கிறதாம். தாளாளர், அதிகாரி, ஓட்டுனர் உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டிருக்கிறார்களாம். முதல்வர் நிவாரண நிதியிலிருந்து லட்ச ரூபாய் வழங்கப்படவிருக்கிறது. இது தான் அரசின் நடவடிக்கைகள். இது போதுமா? போதாதா? என்பதல்ல பிரச்சனை. இந்த கோரத்தில் யார் சாராம்சமான குற்றவாளியோ அவர்களே நீதியும் வழங்க முடியுமா? மேலே கேட்கப்பட்டிருக்கும் மூன்று கேள்விகளிலும் யார் குற்றவாளியாய் நிற்பது? தனியார் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பள்ளிகளை சீர்குலைத்தது யார்? லாபமீட்டுவதைத் தவிர  முதலாளிகளுக்கு வேறெதுவும் அவசியமில்லை என்று தெரிந்தும் அவர்களின் லாபத்திற்கு உத்திரவாதம் செய்து கொடுத்து வசதிகளும் சலுகைகளும் தந்தது யார்? தன்னோடு உண்டு தன்னோடு உறங்கும் சக மனிதனை பற்றி கவலைப் படாமல் நீ மட்டும் முன்னேறிச் செல் என்று சமூக மனிதர்களை தனித்தீவாய் உருமாற்றியது யார்? முன்னேறுவது என்றால் எந்த வழியிலாவது பணம் சேர்ப்பது என்று அருஞ்சொற்பொருள் வழங்கியது யார்?

அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாய் நிற்பது அரசும் அதன் கொள்கைகளும் தாம். அரசுகள் கடைப்பிடித்து வரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளினால் அனைத்துப் பிரிவு மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் அந்தக் கொள்கைகளை அமல்படுத்துவனின்று பின்வாங்கப் போவதில்லை என்று அரசுத் தலைவர்கள் அவ்வப்போது வெளிப்படையாக அறிவித்தும் வருகிறார்கள். அடுப்பில் விறகைத் திணித்துக்கொண்டே கொதிப்பதை அடக்க வேண்டும் என்றால் முடியுமா? சுருதிகளின் கொலைகளை மட்டுமல்ல, சுருதிகளின் பெற்றோர்களுக்கு இருக்கும் தனியார் மோகம் எனும் நோயை அகற்றிடவும் வேண்டுமென்றால் அதற்கு அரசு அருகாமைப் பள்ளி என்பதைத் தவிர வேறு மாற்று உண்டா? சிறுமி சுருதி நமக்கு கற்றுத்தந்திருக்கும் பாடத்தை படிக்க விரும்புபவர்களே! ஒன்று சேருங்கள். பெற்றோர் சங்கங்களாக திரளுங்கள். போராட்டங்களைத் தவிர வேறெதும் நம் வாழ்வைத் தீர்மானிக்கப் போவதில்லை.

முதல் பதிவு: செங்கொடி

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: