• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

லெனின் தேர்வு செய்த பாதை போராட்டமே வாழ்க்கையாக…!

துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன் 

லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி புரிந்தார். நேர்மையான மனிதர். தாயார் மரியா உல்யானவ் அன்பே வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதிரிகள் லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும், பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார்.சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.

அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள். நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான விசயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும் அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காக கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார்.

இப்படி மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்வில் முதல் இடி விழுந்தது. திடீரென ஒருநாள் தந்தை இறந்து போனார். அந்த அடியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த இடி தாக்கியது. ரசியாவில் கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனைக் கொல்ல முயற்சி செய்ததற்காக அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த செய்தியால் குடும்பம் நிலைகுலைந்து போனது.

அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.

வக்கீல் உருவில் ஒரு போராளி!

லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். ஜார் தேசத்தின் வளங்களை சூறையாடி ஆடம்பரமாக செலவு செய்தான். மக்களையோ வறுமையில் தள்ளினான். அவர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தான். மன்னன் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.மாணவர்களின் போராட்டத்தை வன்முறையால் ஒடுக்கினான் ஜார். மாணவர்கள் குற்றவாளிகளைப் போல கண்காணிக்கப்பட்டனர். கசான் பல்கலைக்கழகம் சிறைச்சாலை போல மாற்றப்பட்டது. மாணவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. தன்மானமுள்ள மாணவர்கள் இதை எதிர்க்கத் தீர்மானித்தனர். ஒட்டு மொத்தமாக பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறினர். லெனினும் வெளியேறினார்.

பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய லெனின், ஜார் ஆட்சியின் கொடுமைகளை அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். வழக்கறிஞர் தொழிலின் மூலம் அதை செய்யத் திட்டமிட்டார். எனினும் சட்டக்கல்லூரியில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தனர். லெனின் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். வீட்டில் இருந்தே படித்தார். நான்கு வருட சட்டக்கல்வியை ஒன்றரை ஆண்டில் படித்து முடித்துப் பட்டம் பெற்றார். அதிலும் மாநிலத்தில் முதலாவதாக.

அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார். லெனின் பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார். அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது.

லெனின் தேர்வு செய்த பாதை

 லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே நடத்தினரர். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில் தொழிலாளர்கள் மிக வறியச் சூழலில் வாழ்ந்தனர். ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார் லெனின். அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். ஏராளமாகப் படித்தார். அப்படித் தான் அவர் காரல்மார்க்ஸ் என்பவர் எழுதிய மூலதனம் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. லெனினை அந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்தது.
மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம். மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர். உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம், சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர். இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது. வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.உழைக்கும் மக்கள் ஒரு புரட்சியின் மூலம் பழைய அரசையும், அநீதியான சட்டங்களையும் வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான புதிய அரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்.

இதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தக் கருத்துக்கள் கம்யூனிச தத்துவம் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக காரல் மார்க்கம் அவருடைய நண்பர் எங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து முடித்தார். அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட தொழிலாளர்களின் புரட்சி ஒன்றுதான் வழி என்று தீர்மானித்தார். அந்தப் புரட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதிலிருந்து கம்யூனிஸ்டாக மாறினார்.

போராட்டமே வாழ்க்கையாக…!

லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம் மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார். இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாக கூட்டம் நடத்தினால் ஜாரின் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.

லெனினுடைய பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய கருத்துக்கள் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்கள் அனைவரையும் சென்று அடைந்தன. தொழிலாளர்கள் மெதுவாக விழிப்புணர்வு பெற்றனர். தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்ட வேண்டியிருந்தது. கூலியோ மிகமிகக் குறைவு. இதற்கெதிராகப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.

இந்த போராட்டங்களை வழிநடத்தும் தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள இயலாமல் ஜார் அரசு மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது. லெனின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை கையும் களவுமாகப் பிடிக்க ஏராளமான உளவாளிகள் அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.

லெனின் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார். வலிமையான உடற்கட்டும் புத்திக் கூர்மையும் இதற்கு உதவின. ரயிலில் செல்லும்போது அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும். ரயில் நிற்கும். ஆனால் அவர் இறங்கமாட்டார். கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்து படிப்பது போல் இருப்பார். ரயில் கிளம்பி வேகமெடுக்கும். அப்போது அவர் மிக விரைவாக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிப்பார். ஒரு கணநேரத்தில் மாயாஜால வித்தை போல தங்கள் கண்ணெதிரே லெனின் தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். இதுபோல் பலமுறை உளவாளிகள் ஏமாந்து போனதுண்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: