ஏபரல் 22 – தோழர் லெனின் பிறந்த தினத்தையொட்டி புமாஇமு வெளியீடான “இவர் தான் லெனின்” என்ற சிறுவெளியீட்டினை ஒரு சில பதிவுகளாக வெளியிட முடிவு செய்து உள்ளோம். அதன் முதல் பதிவினை பிரசுரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்
1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.
அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன.
சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?
வறுமையை ஒழித்த லெனின்
எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள். அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர் ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில் வாடிக்கிடப்பார்கள். ரசியாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான் துன்பத்தில் உழன்றனர்.
இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின். அவருடைய தலைமையில் 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற புரட்சியினால் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. உலகில் முதன்முறையாக தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அந்த தொழிலாளர்களின் ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும், வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. சமத்துவச் சமூகம் படைக்கப்பட்டது.
இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது. லெனினுடைய வழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள் நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழி காட்டினார். ஆனால் ரசிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கு முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.
இதனால்தான் அவருடைய மரணத்துக்கு உலகமே அழுதது. உலகின் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற நன்றியும், மீதி நிலப்பரப்பில் அதை நிறைவேற்றும் முன்னரே இறந்து விட்டாரே என்ற துக்கமும்தான் உலகத் தொழிலாளர்களை கண்ணீர் சிந்த வைத்தது.
தொடர்புடைய பதிவுகள்:
கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!
சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்
Filed under: இவர் தான் லெனின் | Tagged: அரசியல், சிறு வெளியீடு, சோசலிசம், சோவியத் யூனியன், சோவியத் வீரம், தொழிலாளர்கள், தோழர் லெனின் பிறந்த நாள், நிகழ்வுகள், பாட்டாளி வர்க்கம், புமாஇமு வெளியீடு, புரட்சி, பூவுலகில் சொர்க்கம், மார்க்சிய ஆசான், மாஸ்கோ நூல்கள், ரஷியத் தலைவர், ரஷியப்புரட்சி, ரஷியா, லெனின், லெனின்கிராடு, ஸ்டாலின் |
Leave a Reply