தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.
தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்து முதல் பதிவுவாக “சோவியத் வீரன் டிட்டாயெவ்” வை வெளியிடுகிறோம்.
**************************
நவம்பர் மாதம், அதிகமாக விழுகின்ற பனி.
இராணுவ செய்திப் பிரிவைச் சேர்ந்த சமிக்கையாளரின் வாழ்க்கை மற்றவர்கள் பார்த்துப் பொறாமப்படக் கூடியதல்ல. பனி, மோசமான பருவநிலை, மண் சகதி, வானத்திலிருந்து திடீரென்று வருகுன்ற தாக்குதல்கள், தரயில் பள்ளம் பறிக்கும் வெடிகுண்டுகள், மரணத்தை வாரியிறைக்கும் தோட்டாக்கள்-எனினும் ஒரு சமிக்கையாளர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். தகவல் அனுப்புகின்ற கம்பி குண்டினால் பாதிக்கப்பட்டுவிட்டால் அல்லது வெடிகுண்டினால் பிய்த்தெறியப்பட்டால் அல்லது நாஜி வேவுப் படையினரால் சீர்குலைக்கப்பட்டால் அதைக் கண்டுபிடித்து செய்திப் போக்குவரத்தை மறுபடியும் ஏற்படுத்துவது சமிக்கையாளரின் கடமையாகும்.
நவம்பர் மாதத்தில் மமாயெவ் குர்கானில் மறுபடியும் சண்டைகள் தொடங்கின. அவை உச்ச கட்டத்திலிருக்கும் பொழுது டிவிஷன் தலமைக்குச் செய்தி அனுப்புகின்ற கம்பி தொடர்பை துண்டிக்கப்பட்டது. அந்த நேரத்தில் டிவிஷன் தலமை பீரங்கி படை தாக்க வேண்டிய இலக்குகளை தெரிவித்துக் கொண்டிருந்தது. செய்தித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன; பீரங்கிகள் அமைதியாக இருந்தன.
டிட்டாயெவ் என்ற சமிக்கையாளர் அதைப் பழுது பார்த்துச் சரி செய்வதற்காக அனுப்பப்ட்டார்.
அவர் கம்பிகளைப் பார்த்துக் கொண்டே ஊர்ந்து சென்றார். எங்கே பழுது ஏற்பட்டிர்க்கிறதென்று தேடியவாரு சென்றார். அப்பொழுது மேகங்கள் தணிவாக மிதந்து கொண்டிருந்தன; காற்று வேகமாக வீச ஆரம்பித்துருந்தது. அவருடைய இடது பக்கத்தில் எதிரிகள் மறைந்திருக்கும் குழிகள் இருந்தன. பீரங்கி குண்டுகள் தலைக்கு மேலே பறந்தன. இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தன. அவரைப் பாதையிலிருந்து விரட்டுவதைப் போல காற்று வேகமாக வீசியது.
”என்னை விரட்ட உன்னால் முடியாது” என்று அந்தப் போர்வீரர் பனிப்புயலிடம் சொன்னார்.
“என்னைப் பிடிக்க உன்னால் முடியாது” என்று அவர் பறந்து வந்த தோட்டாக்களிடம் சொன்னார்.
அவர் ஊர்ந்து சென்றார். அதோ, தெரியும் மலையில் சண்டை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நம் துருப்புகளுக்கு பீரங்கிப் படையின் உதவி அவசியம். டிட்டாயெவ் அதை உணர்ந்து கொண்டு வேகமாக இயங்கினார். அவருக்கு முப்பது மீட்டர்களுக்கு முன்னால் குண்டு வெடித்துப் பள்ளம் பறித்திருப்பதைப் பார்த்தார். அங்கு தான் கம்பித் தொடர்பு அறுந்திருக்க வேண்டும். இன்னும் பத்து மீட்டர் தூரம் தான். ஐந்து மீட்டர் தான் அந்தப் பள்ளத்தை நோக்கி அவர் ஊர்ந்து சென்றார். இப்பொழுது அந்தப் பள்ளத்தின் விளிம்புக்கு வந்துவிட்டார். அங்கே குண்டு சிதறல்களினால் அறுந்து போன கம்பி கிடந்தது. டிட்டாயெவ் ஒரு கம்பியை கையிலெடுத்தார். உடனே அடுத்த கம்பி முனையும் தேடி எடுத்தார்….
தலமையகத்தில் தொலைபேசி நீண்ட நேரமாக இயங்காமல் மெளனமாக இருந்தது. இப்பொழுது அது இயங்க ஆரம்பித்தது. தளகர்த்தர் நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டார்.
“முதல் தரமான நபர்கள்” என்று சமிக்கையாளர்களைப் பாராட்டினர்.
“டிட்டாயெவ் அனுப்பினோம். அவர் ஒரு முதல் தரமான போர்வீரர்” என்று அங்கே யாரோ சொன்னார்கள்.
அந்த டிவிஷனில் டிட்டாயெவை எல்லோருக்கும் தெரியும்; எல்லோருக்கும் தெரியும்; எல்லாரும் அவர் மீது அதிகமான பிரியம் வைத்திருந்தார்கள். டிட்டாயெவ் திரும்பவருவார் என்று தலைமையகத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன காரணமோ அவர் திரும்பவில்லை.
அவரைத் தேடுவதற்காக இரண்டு போர்வீரர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அதே பாதையில் ஊர்ந்து சென்றார்கள். மேகங்கள் தணிவாக மிதந்து கொண்டிருந்தன. அவர்களுடைய முகத்தில் காற்று பலமாக அடித்தது. இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தது. போர் ஓய்வில்லாது நடைபெற்றுக் கொண்டிருந்தது. சோவியத் பீரங்கிப்படை இப்பொழுது சுட்டுக் கொண்டிருந்த்து. பீரங்கி வேட்டுகள் போர்களத்தின் மற்ற சத்தங்களை மூழ்கடித்தன. போர்வீரர்களின் காதுகளுக்கு அது சங்கீதத்தைப் போல இனிமையாக இருந்தது.
போர்வீரர்கள் தங்களுக்கு முன்னால் உற்றுப்பார்த்துக் கொண்டு ஊர்ந்து சென்றார்கள். அந்தப் பள்ளத்தை பார்த்தாகள். அதன் விளிம்பில் டிட்டாயெவை அடையாளம் கண்டு கொண்டார்கள். அவர் பூமியின் மீது கிடந்தார்.
“டிட்டாயெவ்!”
“டிட்டாயெவ்!”
டிட்டாயெவ் பதில் பேசவில்லை.
போர்வீரர்கள் இன்னும் அருகே ஊர்ந்து சென்றார்கள்.
அவர் செத்துப்போய் விறைத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.
யுத்தத்தில்பல விதமான காட்சிகளை பார்த்து அனுபவப்பட்டவர்கள் தான் அந்தப் போர்வீரர்கள். ஆனால் இந்தக் காட்சி….
டிட்டாயெவ் அறுந்துபோன கம்பிகளை எடுத்து, அந்தக் கம்பி முனைகளை ஒன்று சேர்க்க முயற்சி செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு தோட்டா அவர் மீது பாய்ந்தது. அந்தக் கம்பிகளை ஒன்று சேர்த்து கட்டத்தேவையான பலம் அவரிடமில்லை.
அவர் வேகமாக சுய உணர்வை இழந்து கொண்டிருந்தார்; உயிர் பிரிந்து கொண்டிருந்தது. அந்தக் கடைசி வினாடியில் அந்தப் போர்வீரர் இரண்டு கம்பிகளின் முனைகளையும் மிகுந்த சிரந்தோடு தன்னுடைய பற்களுக்கிடையே வைத்தார். கம்பி முனைகளை தன்னுடைய பற்களால் ஒரு கிடுக்கியைப் போலக் கடித்துக் கொண்டார். கம்பித் தொடர்புகள் மறுபடியும் ஏற்பட்டன.
“சுடுங்கள்! சுடுங்கள்!” கம்பிகளின் வழியாக உத்தரவுகள் பிறந்தன.
உடனே பதில் கிடைத்தது.
“சுட ஆரம்பித்துவிட்டோம். கம்பித் தொடர்பு நன்றாக இயங்குகிறதா?”
”ஆம்! தொடர்பு சிறப்பாக வேலை செய்கிறது.”
மறுபடியும் உத்தரவுகள்.
”சுடுங்கள்! சுடுங்கள்!”
சோவியத் துருப்புகள் எதிரியை நசுக்கின. ஆனால் அந்தப் பள்ளத்தின் விளிம்பில் ஒரு போர்வீரர் கிடக்கிறார். இல்லை, அவர் தரையில் கிடக்கவில்லை. தன்னுடைய காவலிடத்தில் அவர் நிற்கிறார்.
ஆம். அந்தப் போர்வீரர் தம்முடைய காவலிடத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
Filed under: தோழர் ஸ்டாலின் | Tagged: அக்டோபர், அரசியல், இரண்டாம் உலகப்போர், உழைப்பாளிகள் தினம், கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிசம், சோவியத், டிசம்பர் 21, நிகழ்வுகள், பாட்டாளி வர்க்கம், பிறந்த தினம், பூவுலகில் சொர்க்கம், மார்க்சியம், ரஷியப்புரட்சி, ரஷியா, லெனின், ஸ்டாலின் |
Leave a Reply