• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 178,101 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !

சென்னைக் கேளம்பாக்கம் அருகிலுள்ள தையூர் எஸ்.எம்.கே. போம்ரா கல்லூரி மாணவி அனித்ரா விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இம்மாணவியை சக மாணவர் ஒருவருடன் பேசியதற்காக அபராதம் விதித்தும் மிக இழிவான வசைமொழிகளால் திட்டியும் தற்கொலைக்குத் தூண்டியது கல்லூரி நிர்வாகமே. மாணவர்களின் புகாரை அடுத்து கல்லூரி சேர்மன் தலைமறைவாகியிருக்கிறார். இதற்கு மேல் அனித்ராவின் மரணத்தைக் குறித்து விரிவாக எழுத நான் புலனாய்வுப் பத்திரிகையாளனும் இல்லை, சம்பவம் நடந்த தமிழகத்திலும் வசிக்கவில்லை. இது குறித்த எனது சிந்தனைகளை மட்டும் இப்பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மாணவர்களும் மாணவிகளும் பேசிக் கொள்ளக் கூடாது என்கிற தலிபானியச் சட்டம் இந்த ஒரு கல்லூரியில் மட்டும் இருப்பதில்லை. சுயநிதி இருபாலர் கல்லூரிகள் அனைத்திலும் இது எழுதப்படாத விதியாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொடூரத்தின் உச்சமாக அனித்ரா படித்த கல்லூரி சிசி டிவி கேமெராக்களை நிறுவி மாணவர்களைக் கண்காணித்திருக்கிறது. எதற்காக இப்படி ஒரு விதி என்று கேட்டால் “பெற்றவர்கள் பிள்ளைகளைப் படிக்கத்தான் அனுப்புகிறார்கள். அவர்களுடைய கல்வி சிறப்பாக அமைய நாங்கள் சில விஷயங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான்” என்று பெற்றோர்கள் மீது மிகுந்த அக்கறையுள்ளது போலப் பேசுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

புரையோடிப் போன சாதியக் கண்ணோட்டம் இன்னமும் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது. இதைக் கொண்டே இவர்களது கல்லூரிகளைப் பெற்றோரிடையெ சந்தைப் படுத்துவதுதான் சுயநிதி இருபாலர் கல்லூரிகளின் நோக்கம். இந்தக் கல்லூரியில் சேர்ந்தாலே உங்கள் மகன் அல்லது மகள் அதிக மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றுவிடுவார்கள் என்பதான மாயையையும் இவர்கள் உருவாக்கத் தவறுவதில்லை. இது ஒன்றும் இவர்கள் உழைத்து உருவாக்குகிற நற்பெயர் அல்ல.

தத்தமது கல்லூரிகளில் நூறு சதவிகிதத் தேர்ச்சியைக் காட்டுவதற்காக தேர்வில் தோல்வியடையும் சாத்தியமுள்ள மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் செய்கிற அக்கிரமமும் இது போன்ற பல சுயநிதிக் கல்லூரிகளில் நடைபெறுகிறது. தோல்வியடைய வாய்ப்பில்லாத அல்லது தோல்வியடையும் சாத்தியம் குறைவாக உள்ள மாணவர்களை மட்டும் தேர்வெழுத அனுமதிப்பதன் வாயிலாக நூறு விழுக்காடுகளோ அல்லது இவர்கள் எதிர்பார்க்கிற தேர்ச்சி விழுக்காடுகளோ எவ்வித முயற்சியுமில்லாமல் தானாகவே வந்துவிடும். இதனால் ஆசிரியர்கள் செய்கிற முயற்சிகளை நான் குறை சொல்லுகிறேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆசிரியர்கள் அளிக்கிற மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் நிர்வாகம் செய்கிற இழிவான செயல் இது.

சுயநிதிக் கல்லூரிகள் பலவற்றிலும் ஒரு அம்சம் தவாறாமல் இடம்பெற்றிருக்கும். வாராந்திரத் தேர்வுகள். மாணவர் சேர்க்கையின் போது மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் சிரமப் படாமல் இருப்பதற்காக ஒரு பயிற்சிக்காக நடத்தப்படும் தேர்வுகளே இவை என்று சொல்லப்பட்டாலும், இத்தேர்வுகளுக்கான அசல் நோக்கம் என்பது வேறு. மாணவர்களில் தேர்ச்சியடையக் கூடிய மாணவன் யார் தோல்வியடையும் சாத்தியமுள்ள மாணவன் யார் என்பதைக் கண்டறியவே இந்த வாராந்திரத் தேர்வுகள்.

பல்கலைக்கழகத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகளைப் (ஹால் டிக்கெட்) பிணையாக வைத்துக் கொண்டு பணம் பறிக்கிற கயமையையும் பல சுயநிதிக் கல்லூரிகள் செய்து வருகின்றன. ப்ரேக்கேஜ் கட்டணம் என்று ஒரு வசூலிப்பார்கள். ஆய்வகங்களைப் பயன்படுத்துகிற வேதியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவு மாணவர்களிடம் இக்கட்டணத்தை வசூலிப்பதிலாவது ஓரளவு நியாயம் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆய்வகங்களை எட்டிக் கூடப் பார்க்காத வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் மாணவர்களிடமும் இதே கட்டணத்தை அடாவடியாக வசூலித்தது நான் படித்த கல்லூரி (பொன்னையா ராமஜெயம் கல்லூரி. இப்போது PRIST (நிகர்நிலை) பல்கலைக் கழகமாக இருந்து தனது நிகர்நிலைத் தகுதிப்பாட்டை இழந்திருக்கிறது).

இவையல்லாமல் மாணவர் சேர்க்கையின் போதே பெற்றோர்களிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். என் மகனோ மகளோ அரசியல் செயல்பாடுகல் எதிலும் பங்கெடுக்க மாட்டார்கள், கல்லூரியைக் குறித்து ஊடகங்களுக்கு எவ்விதத் தகவல்களையும் கொடுக்க மாட்டார்கள் என்பவை உள்ளிட்ட கூறுகளைக் கொண்ட ஒப்பந்தம் அது. இது போன்ற ஒப்பந்தங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து தெரியாவில்லை. ஆனால் உளவியல் ரீதியாக மாணவர்களை, நம் பெற்றோரின் குடுமியை அவர்கள் கையில் கொடுத்திருக்கிறோம் என்ற அச்சுறுத்தலிலேயே வைத்திருக்கும் ஏற்பாடுதான் இது.

சுயநிதிக் கல்லூரிகள் எதிலும் மாணவர் தலைவர்களுக்கான தேர்தல்கள் எதுவும் நடைபெறுவதில்லை. எப்படித் தனியார் தொழிற்சாலைகள் தொழிற் சங்கம் அமைப்பதை எதிர்க்கின்றனவோ அவ்வாறே சுயநிதிக் கல்லூரிகளும் மாணவர் பேரவை அமைப்பதை அனுமதிப்பதில்லை. பேருக்கு ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் வாங்கக் கூடிய மாணவர்களாகப் பார்த்து வகுப்புத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் நியமனம் செய்து கல்லூரி மாணவர் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொள்வார்கள். நானும் அப்படி ஒரு செமஸ்டருக்குத் தலைவனாக இருந்து தொலைத்திருக்கிறேன். அந்தப் பதவியிலிருப்பவர்கள் நிர்வாகத்திற்குக் கங்காணிகளாக இருக்க வேண்டும் என்பது வாய்மொழியாகக் கூடச் சொல்லப் படாத விதி. படித்த காலத்தில் பாவம் புண்ணியம் என்பன போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்ததால் சக மாணவர்கள் எவரையும் நான் காட்டிக் கொடுத்ததில்லை.

என்ன விதிமீறல் நடக்கும் எதைக் கொண்டு அபராதம் விதிக்கலாம் என்று காத்திருந்து அபராதம் விதிப்பார்களோ என்ற அச்சத்துடனேயே மாணவர்கள் இருக்க வேண்டியிருக்கும். கல்லூரி விதிகளை ஒரு புத்தகமாக அச்சடித்துத் தருவார்கள். அதில் இருப்பவை அனைத்தும் எல்லா கல்லூரிகளிலும் பின்பற்றப் படுகிற பொதுவான மற்றும் பார்வைக்கு நியாயமாகப் படுகிற விதிகள்தான். ஆனால் அபராதம் போடுவது, பெற்றோரை வரவழைப்பது போன்ற விஷயங்கள் பெரும்பாலான சமயங்களில் அந்தப் புத்தகத்தில் சொல்லப் படாத ஒரு செயலுக்காகவே நடைபெறும். இந்த புத்தகத்தில் இல்லாத சட்ட விதிகளைக் காட்டித்தான் மாணவர்களின் நியாயமான தேவைகள் அல்லது விருப்பங்கள் கூட மறுக்கப்படும். உதாரணமாக நான் படித்த கல்லூரியில் நடந்த இரு சம்பவங்களையும் அதை எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக எப்படி முறியடித்தோம் என்பதைக் குறித்து சொல்லுகிறேன்.

மூண்றாம் ஆண்டு இறுதியில் கடைசி வகுப்பு நாளில் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக என் நண்பன் தனது கேமெராவை எடுத்து வந்திருந்தான். வகுப்பறையில் நுழைந்து அடாவடியாகக் கேமெராவைப் பறித்துச் சென்றார் நிர்வாகப் பணியாளர் ஒருவர். கேமெரா எடுத்து வரக் கூடாது என்பது கல்லூரி விதிகளில் இருப்பதாகச் சொல்லிவிட்டு கேமெராவுடன் வகுப்பிலிருந்து வெளியேறிவிட்டார். ஹால் டிக்கெட் கைக்கு வராத நிலையிலும் அத்தனை மாணவர்களும் ஒற்றுமையாகக் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டோம். கல்லூரி விதிகளடங்கிய நூலில் கேமெரா கருவி குறித்த எந்த விதியும் இல்லாததைச் சுட்டிக்காட்டிய பிறகு எங்கள் தரப்பு நியாயத்தை முதல்வர் ஏற்றுக் கொண்டு கேமெரா திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்தார். முதல்வர் அறையிலேயே கொடுக்க முற்பட்ட அந்த சிப்பந்தியிடம் எங்கே இருந்து பறிமுதல் செய்தீர்களோ அங்கேயே வந்து கொடுங்கள் என்று கூறிவிட்டு வகுப்பிற்கு வந்துவிட்டோம். எங்கள் நிபந்தனை நிறைவேறியது.

சக மாணவன் ஒருவனின் தந்தை மறைந்த போது துக்கம் கேட்பதற்காகவும் உதவி செய்யவும் வகுப்பு மாணவர்கள் அனைவரும் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டோம். வருகைப் பதிவு குறைந்து விடக் கூடாதே என்பதற்காகவே அவர்களிடம் அனுமதி கோரினோம். சூழ்நிலையின் தீவிரத்தை உணராமல் அனுமதி மறுத்தது நிர்வாகம். மாணவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருகைப் பதிவைக் குறித்து கவலைப் படாமல் அந்த மாணவனுக்கு உதவி செய்யச் சென்றோம். மறுநாள் “எந்த சினிமாவுக்குப் போனிங்க” என்ற துறைத் தலைவரின் கேலியையும் எதிர்கொள்ள நேர்ந்த்து. மனிதாபிமானமுள்ள மற்ற பேராசிரியர்கள் அவர்களது வகுப்புகளுக்கு வருகைப் பதிவளித்தனர். இவை ஏதோ நான் தலைமை ஏற்று நடத்தியவை என்ற பெருமைக்காகச் சொல்லவில்லை. சுயநிதிக் கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் நியாயமான தேவைகளுக்குக் கூட எத்தனை போராட வேண்டியிருக்கும் என்பதை விளக்கவே இவற்றைச் சொன்னேன்.

பிள்ளைகளைச் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப் போகும் பெற்றோர்கள் முதலில் அடகு வைப்பது தங்களினதும், பிள்ளைகளினதுமான சுயமரியாதையைத்தான். ரிட்டையர்மெண்ட்டில் வரப் போகிற பிராவிடண்ட் ஃபண்டு போல கல்வியையும் ஒரு முதலீடாகப் பார்க்கத் தொடங்கிய அல்லது பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காரணத்தால் தான் சுயமரியாதையை சில ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்தால் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் பெற்றோரும் மாணவர்களும். தயை கூர்ந்து பெற்றோர்களோ, மாணவப் பருவத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழ்வதற்கான சுதந்திரத்தையாவது விட்டு வையுங்கள்.

_______________________________________________

•விஜய் கோபால்சாமி

நண்பர் விஜய் கோபால்சாமி இரண்டு ஆண்டுகளாய் பதிவு எழுதி வருகிறார் இவரது வலைப்பூக்கள் http://vijaygopalswamihyd.blogspot.com மற்றும் http://vijaygopalswami.wordpress.com

நன்றி !வினவு .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: